விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

விஷ்ணுபுரம் விழா, என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு வாசிப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரிய உந்துதலாக இருக்கிறது. உயர்வான (பழைய மற்றும் புதிய) எழுத்தாளர்களைக் கண்டடைந்து வாசிப்பதற்கு ஒரு திறப்பாக இருக்கின்றது. முதல் முறையாகக் கலந்து கொள்வதால், விழாவின் வடிவம் மற்றும் கலந்துரையாடல்கள் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. கலந்துரையாடல்கள் இன்னும் நெருக்கமாக அமையவும், அதன் வழியாக மேலும் நுண்மையான அனுபவங்களைப் பெறவும், சிறப்பு அழைப்பு எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

இலக்கியங்களைத் தவிர்த்து இந்த விழாவில் மற்றுமொரு நெகிழ்வூட்டிய அனுபவம் அதில் பாடப்பட்ட இசைப்பாடல்கள். திருமூலநாதன், ரவி சுப்பிரமணியம், மகிழ் மலர், ஜான் சுந்தர் ஆகிய ஒவ்வொருவரும் தங்கள் குரல் வழியே நெகிழ்வின் ஆழத்திற்கே கூட்டிச் சென்றார்கள்.

கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்தால், அது அந்தக் கவிதை வாசிப்பு அளிக்கக்கூடிய உணர்வினை அளிக்கிறதா இல்லையா என்பது பற்றிய சுவையான விவாதமும் நடந்தது. என்னைப் பொறுத்தவரையில் கவிதையின் இசைவடிவம், கவிதை தரும் அதே உணர்வினை அளிக்க வேண்டும் என்றால், கவிதையில் உள்ள அதே சொற்களையும் வரிகளையும் கொண்டு அதனை அடைய முடியாது. இசையின் மீது ஏறிப் பயணிக்கும் வகையில் அவற்றை மாற்றியமைத்தால் மட்டுமே அது சாத்தியப்படும் என நம்புகிறேன். கவிஞர் ஒரு கவிதையைப் படைப்பதன் நோக்கம், ஒரு குறிப்பிட்ட நுண்மையான உணர்வை வாசகனுக்குக் கொண்டு சேர்ப்பதுதான். அதனைச் சில சொற்கள் வரிகளின் வழியாக காகிதத்தில் பதிகிறார். ஆக, கவிஞரின் நோக்கம், தன் கவிதை தரும் உணர்வு தானே ஒழிய, தான் எழுதிய வார்த்தைகள் அல்ல. எனவே அதே வார்த்தைகளை பற்றிக் கொண்டு இசை ஏற்ற வேண்டிய அவசியமில்லை

நம் மூளையில் இசை பயணிக்கும் பாதை வேறு, மொழி பயணிக்கும் பாதை வேறு. மொழியின் பாதை, மனிதனின் குரல்வளை மாற்றம் கொண்டு ஒலியை வார்த்தைகளாக மாற்றி மொழியை உருவாக்கிய பின்னர் உருவான பாதை. ஆனால் இசையின் பாதை, மனிதன் உருவாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே செவி என்ற உணர்வு உறுப்பு ஏதோ ஒரு விலங்கில் முதன்முறையாக உருவான போதே மூளையில் உருவாகி வளர்ந்த பாதை. இசைப்பாடல், இசை மொழி இரண்டின் வழியாகவும் உள் நுழைவது. இதில் இசையின் மீது பயணிக்கத் தக்க வகையில் வரிகளை அமைத்தால் மட்டுமே, கவிஞர் விரும்பும் உணர்வினை அளிக்க முடியும் என நம்புகிறேன்.

அபி என்கிற உன்னத படைப்பாளியை அடையாளம் காண்பித்த தங்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் நன்றி.

அடுத்த ஆண்டின் விருது விழாவிற்கான எழுத்தாளர் பட்டியலை எதிர்நோக்கி ஆர்வமாக இருக்கிறேன்.

அன்புடன்,
வி. நாராயணசாமி

***

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏராளமான பெண்கள். பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள். ஆச்சரியமாக இருந்தது. இலக்கியவிழாக்களுக்குப் பெண்கள் வருவது நான் கண்டதில்லை. சில கூட்டங்களுக்கு பேசும்பொருட்டு வருவார்கள். அவர்களும் கவிதை எழுதுபவர்கள். நான் சில கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அந்தச்சூழலே கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இலக்கியக்கூட்டங்கள் பெண்களுக்கு சாதகமானவை அல்ல என்பது என் எண்ணம். பேஸ்புக் போல அது சீண்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய இடம்.

ஆனால் இங்கே இவ்வளவு பெண்கள் வந்திருக்கிறார்கள். முகாமில் தங்கியிருக்கிறார்கள். இந்தச்சூழல் மிகவும் முக்கியமானது. மெல்லமெல்ல இந்தச்சூழலை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். அடுத்த ஆண்டு நானும் கலந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன். மேடையில் சிறப்பாக பேசிய ஸ்வேதாவுக்கு பாராட்டுக்கள். அரங்கிலே அவ்வளவு நன்றாக பேசவில்லை என்றாலும் வெண்பாவுக்கும் வாழ்த்துக்கள்

மதி

***

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்

முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா

அபி -ஆவணப்படம்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41
அடுத்த கட்டுரைஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை