விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இது என்னுடைய இரண்டாவது விஷ்ணுபுரம் விழா. உண்மையில் கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே தீவிரமாக வாசிக்கிறேன், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கும் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெரும்மாற்றதை அடைந்துள்ளேன் என்பது இவ்விழா எனக்கு உணர்த்தியது. நான் என்னுள் ஒடுங்க நேர்ந்தவன், அதன் காரணங்களை இன்று வினவ தொடங்கியுள்ளேன். நான் நண்பர்களை அமைத்து கொண்டதும் என்னை விரித்து கொண்டதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கடந்த வருட அரங்குகளில் தான். இன்று சில வாசக நண்பர்களை பெற்றுள்ளேன், சில பயண திட்டஙகள் வகுத்துள்ளேன். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு வெகு இயல்பாக என்னால் விழாவில் பங்கெடுக்க முடிந்தது.

விஜய பாரதி, நவீன், சரவண குமார், கமலநாதன், பழனியப்பன் போன்ற நண்பர்கள் கிட்ட தட்ட ஒரு வருடமாக விஷ்ணுபுரம் அரங்குகளில தொடர்ந்து சந்திக்கிறேன். இவ்வாண்டு விழாவில் சுஷில், கவியரசு நேசன், ஷாஹுல் இன்னும் சில நண்பர்களை சேர்த்து கொண்டேன். விழாவிற்கு ஒருநாள் முன்பே வந்ததில் அரை நாள் bonus, மீனம்பிகை மற்றும் குவிஸ் செந்தில் வெகு லகுவாக விஷ்ணுபுரம் அமைப்பின் ஒரு அங்கமாக என்னை உணர வைத்தார்கள், இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிகள். தயக்கம் கொண்டு விழாவை அனுகுபவர்கள் இவர்களை சந்திக்கலாம்(டிப்ஸ்) .

இவ்வாண்டு கவிஜர்கள்  நிரம்பி இருந்ததால் நான் தொடக்கத்தில் வெகுவாக விலகி இருந்தேன், யுவன் நாவல்கள் 3 படித்திருந்தேன். அதனால் யுவனுடன் அணுக்கம் கூடியிருந்தது. நான் விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரது சில கவிதைகளையும் முட்டி பார்த்து தோற்று போய் வந்திருந்தேன். ஆனால் கவிதைக்குள் நுழைய இவ்விழா ஒரு திறப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நண்பர் விஜயபாரதியுடன் சேர்ந்து இரவு 2 மணிவரை நடத்திய கூட்டு வாசிப்பு நல்ல தொடக்கம்.

பின்பு கவிஜர் தேவதேவன் உடனான உரையாடல். கிட்டத்தட்ட கவிதை படிக்கவே தெரியாத என் எளிமையான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார், அவருடைய ஒரு கவிதையை விஜயபாரதி வாசிக்க அதன் வாசிப்பு சாத்தியங்களை கவிஞர் சொன்ன தருணம் மறக்க முடியாத அனுபவம். நான் சந்தித்திராத சில திறப்புகளை தேவதேவன் அளித்தார். இனி கவிதைகளை வாசிக்க முடியும் என்று நம்புகிறேன், முட்டி பயனில்லை கதவு திறக்கும் வரை வாசல் முன் தவம் இருப்பதே கவிதை வாசிக்க சிறந்த வழி என்று எனக்குள் உருவகித்து கொண்டேன். தேவதேவனுக்கு சிறப்பு நன்றிகள், வாழ்வின் மறக்க முடியாத தருணத்தை அளித்தமைக்கு.

கடந்த ஆண்டை ஒப்பிடும் பொது இவ்வாண்டு அனைத்து அரங்குகளும் இன்னும் அணுக்கமாக உணர்ந்தேன், வாசகனாக ஒரு படி மேலேறியதாக தோன்றியது. Quizஇல் ஒரு பரிசு வேறு கிடைத்தது. விஷால் ராஜா விடுபடல் ஏமாற்றம் அளித்தது சில கேள்விகளை அவருக்காக தயாரித்து வைத்திருந்தேன், ஸ்வேதா உரை பொறாமை படும்படி சிறப்பானதாக இருந்தது. இம்முறை என்னை ஆச்சர்ய படுத்தியது பெருந்தேவியின் அரங்கு, அவர் அரங்கை எதிர்கொண்ட விதம் மிக சிறப்பு, நான் இதுவரை அவரது சில கட்டுரைகளை வாசித்திருந்தேன் ஆனால் இங்கனம் அவர் ஆளுமை எனக்கு வெளிப்பட்டதில்லை. கடந்த ஆண்டு லீனா அவர்களிடமும் இதே போன்ற ஒரு தனி ஆளுமை வெளிப்பாட்டை முன்னிறுத்தி கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது ஏமாற்றமான பதில்களே வந்தன என்பதை நினைத்து கொண்டேன்.

அனைத்து எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகள் வாசிக்கப்பட்டு நுணுக்கமான கேள்விகள் முன்வைக்கப்பட்டதை வியந்ததில் ஆச்சர்யம் இல்லை, நான் இதற்க்கு முன் 2017இல் ஒரு இலக்கிய விழா வில் பங்கெடுத்திருந்தேன். நேர விரயம், பண விரயம் அன்றி எந்த பயனும் வாசகனாக எனக்கு கிட்டவில்லை. அது தமிழகத்தில் நிகழும் சராசரி இலக்கிய விழாக்களின் ஒரு மாதிரி என்று அறிந்து இனி இலக்கிய விழாக்களில் பங்கெடுப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். விஸ்ணுபுரம் விழா குறித்து வாசகர்கள் எழுதும் கடிதங்கள் படித்தே அம்முடிவை மாற்றி கடந்த வருடம் பங்கெடுத்தேன்.

இரண்டு வருடங்களாக மிக்க நிறைவையும், வாசிப்பிற்கான பல திறப்புகளையும் அளித்து பூமி சூரியனை சுற்ற எதற்க்காக 365 நாட்கள் எடுக்க வேண்டும் என்று இயற்கையை நொந்து கொள்ள வைக்கிறது விஷ்ணுபுரம் விழா. ஜானவி பருவா அவர்கள் தன் படைப்பு குறித்து இத்தனை நுட்பமான கேள்விகள் வேறெந்த மேடையிலும் கேட்க்கப்பட்டதில்லை என்று சொன்னது இந்திய அளவில் விஷ்ணுபுரம் விழாவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது. உங்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

நன்றி,
அருள், கொச்சி.

***

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய கடிதங்கள், நினைவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த எதிர்வினைகள் ஆச்சரியமூட்டவில்லை. ஏனென்றால் அங்கே அத்தனைபேர் வந்திருந்தார்கள். ஆனால் எப்போதுமே முகநூலில் மூழ்கிக்கிடக்கும் ஒரு கூட்டம் உண்டு. அவர்களுக்கு இதெல்லாமே ஆச்சரியம்.

என்னிடம் உங்கள் தளத்தில் வரும் கடிதங்களைப் பற்றிச் சிலர் சொல்வார்கள். இவர்கள் எல்லாம் யார், எல்லாம் ஃபேக் பெயர்கள் என்று. நான் சொல்வேன். ஒருமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்து பாருங்கள். அங்கே முந்நூறுபேர் வரை வந்து தங்கி விழாவில் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம்பேரை முகநூலில் காணமுடியாது. அவர்களெல்லாம் வாசகர்கள், நாளை எழுதப்போகிறவர்கள் சிலர். நீங்கள் எண்ணும் கும்பல் அரசியல் மட்டுமே தெரிந்தவர்கள். கும்பல்கூடி கும்மியடிப்பவர்கள்.

உண்மையில் நான் பத்துநாட்கள் கழித்து திரும்பிச்சென்று முகநூலை பார்த்தேன். விட்டுவந்த அதே இடத்தில் அதே வசைகள் கூச்சல்கள் கலாய்த்தல்களுடன் இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் ஏதோ பெரிதாக களமாடிக்கொண்டிருப்பதாகவேறு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு விஷ்ணுபுரம் விழாவில் மிகமிகச் சிறப்பானதாகப் பட்டது இப்படி இலக்கியம் ஒன்றையே முக்கியமானதாக நினைக்கும் ஒரு பெருங்கூட்டம் இருந்துகொண்டிருப்பதுதான். இரண்டு நாட்கள் இலக்கியமே நினைப்பாக அவர்கள் வாழ்வதுதான். நான் தனியாள் அல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த ஊக்கம் ஓர் ஆண்டுக்குப் போதும்

சரவணக்குமார்

***

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்

முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா

அபி -ஆவணப்படம்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

முந்தைய கட்டுரைவிழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்
அடுத்த கட்டுரைகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை