அன்புள்ள ஆசிரியருக்கு,
இது நான் பங்கேற்கும் இரண்டாவது விஷ்ணுபுரம் விருது விழா. இந்த ஒரு வருட காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இலக்கியப் பரிச்சயம் உள்ள நண்பர்கள் வட்டமும் வாசிப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளன என உணர்கிறேன்.
உடற்பயிற்சி வகைமைகளில் அதிதீவிர பயிற்சி (High Intensity Interval Training) என்றொன்று உண்டு. 10 நிமிடத்திற்குள், ஓய்வு இடைவெளி அதிகமில்லாமல் உடலின் மொத்த பாகங்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும் நுட்பம் கொண்டது. ஒரே இடர், திடீரென ஆரம்பிப்பவர்களுக்கு உடல்வலி குறைய 3 நாட்கள் ஆகலாம். 2019ல் புதிய வாசகர் சந்திப்பு, ஊட்டி காவிய அரங்கு, ஈரோடு சிறுகதை முகாம் மற்றும் விஷ்ணுபுரம் விருது விழா ஆகிய நான்கு நிகழ்வுகளுக்காக வாசித்தவற்றை இலக்கிய வாசிப்பில் அதிதீவிர பயிற்சி எனலாம்.
முந்தைய வருடங்களில் நான் தன்னிச்சையாக வாசித்தவற்றைவிட இந்நிகழ்வுகளுக்காக அழைக்கப்பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் பலமடங்கு விரிவும் ஆழமும் கொண்டவை. அவ்வகையில் 2019 ல் விஷ்ணுபுர இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த நிகழ்வுகள் நான் உட்பட பலருக்கும் நல்லதோர் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன எனலாம். உங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
அரங்கத்தினுள் கிடைக்கும் அறிதல்கள் ஒரு வகை என்றால் அரங்கத்திற்கு வெளியே கிடைக்கும் சில உள்ளீடுகள் பயனுள்ளவை. ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போதும் ஒரு சில முக்கியமான புத்தகங்களின் பெயர்களாவது வாசிக்க வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிடுகின்றன.
இடைவேளையில் தனி உரையாடலில் “இத்தனை பெண்கள் இலக்கிய விழாவில் கலந்துகொள்வது அபூர்வம்” என்ற யுவனின் அவதானிப்புக்கு “இங்கு யாரும் குடிப்பதில்லை என்பது முக்கிய காரணம்” என்று பதிலளித்தீர்கள். பெண்கள் மட்டுமல்ல, தனது நேரம் பயனுள்ளதாகச் செலவிடவேண்டும் என நினைக்கும் அனைவருக்குமே குடிக்க அனுமதி இல்லை என்ற நெறி ஓர் உத்தரவாதத்தைத் தருகிறது. குடிக்க அனுமதி இருந்தால் அரங்கிலும் வெளியிலும் இந்த அளவு நேர்த்தியான பயனுள்ள உரையாடல்கள் அமைய வாய்ப்பே இல்லை.
அடுத்த முறை “இரவு உணவிற்குப்பின் பேய்க்கதைகளைப் பற்றிப் பேசுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்” என்ற நெறியையும் சேர்த்துக்கொள்வது நல்லது. போகனின் கதைகளைக் கேட்ட பிறகு ராஜ நிவாஸுக்குத் தங்க வந்தவர்கள் விளக்கு வெளிச்சமில்லாமல் தூங்கவே இயலாது என்ற மனநிலைக்குச் சென்றுவிட்டனர்.
ஜானவி பருவா மீண்டும் மீண்டும் ஆச்சரியப்பட்டுப் பதிவுசெய்தது “ஆழமான வாசிப்புக்குப் பின் எழுத்தாளரைச் சந்தித்து உரையாடும் இலக்கிய நிகழ்வை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்” என்பதுதான். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சந்திப்புகளுக்குத் தொடர்ந்து வருபவர்களுக்கு முன்னரே படைப்புகளை வாசிக்கவேண்டியிருக்கும் என்பது பழகிவிட்ட ஒன்று. ஆறுமாதத்திற்கு முன்னரே விருந்தினர்களின் பட்டியலையும் அவர்களின் படைப்புகளையும் வெளியிட்டு வாசகர்களைத் தயார்படுத்திய முன்னறிவை விருந்தினர்கள் அடையாளம் கண்டு அரங்கில் பதிவுசெய்தனர்.
விழாவிற்கான முன்னேற்பாடாக சென்னையில் அபி கவிதைகள் குறித்த ஓர் அரங்கை சென்னை வட்டம் வழியே ஒருங்கிணைத்தோம். திரு வேணு வெட்ராயன் நிகழ்வில் கவிதைகள் குறித்த ஆரம்பப் பாடத்திலிருந்து அபியின் கவிதைகள் வரை எங்களை வழிநடத்தி உதவினார். விழாவின் இடைவேளையின்போது தேவதேவன் அருகமர்ந்து சில கவிதைகளை வாசித்தோம். நள்ளிரவு தூங்கும் முன், காலை உணவின்போது என நண்பர்களிடையே கூட்டு வாசிப்புக்கான தருணங்களும் வாய்த்தன.
இறுதி நிகழ்வில் ஸ்வேதா, அபி, பெருந்தேவி மற்றும் உங்களது மேடை உரைகள் அபியின் கவிதைகளை மீள்வாசிப்பு செய்ய நிச்சயம் உதவியாக அமையும். ஊட்டி காவிய அரங்கிலும், இங்கும் பொருத்தமான உவமைகளுடன் ஸ்வேதா தனது புரிதல்களைக் கடத்துவதில் வெற்றியடைந்திருக்கிறார். அபியின் உரையின் இறுதி நிமிடங்களை மீண்டும் மீண்டும் காணொளியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பொதுவாக கவிதைகளை அணுகுவது குறித்து வகுப்பே எடுத்திருக்கிறார் எனலாம்.
இவ்விழாவில் ஒருவகையில் கவனம் முழுதும் கவிதைகள் நோக்கியே இருந்தது, அது நன்றே. பெருந்தேவி அவர்களது அமர்வில் “படிமங்களும் உருவகங்களும் உவமைகளும் நிறைந்து கவிதை வாசிப்பு என்பது கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு நடப்பது போல சுமையாக ஆகிவிட்டது” என்றபோது ஆசுவாசமாகத் தலையசைத்தவர்களில் நானும் ஒருவன். கவிதைகள் மீதான இத்தகைய ஒருமித்த கவனமே கற்பனையையும் வாசிப்பு அனுபவத்தையும் விரித்துக்கொள்ள உதவியாக அமைகின்றது.
இறுதியாக, எழுத்தாளர்களை அணுகி அறிவது என்னும் வடிவம் பிடிகிடைத்திருக்கிறது.
சென்ற முறை “கவிதை தர்க்க மனதுக்கு நான்கு அறை விட்டது போல இருக்கவேண்டும்” என்ற ரீதியிலான லீனாவின் அமர்வும், இந்த முறை “எதிர்கவிதை” குறித்த பெருந்தேவியின் அமர்வும், சற்றே கூர்மையான விவாதங்களுக்குள் சென்றவை என்பது எனது மனப்பதிவு. விழா முடிந்த பின்னர் உரையாடலில் நீங்கள் இதனை “எப்போதெல்லாம் புதிய கருத்துக்களும் வடிவங்களும் முன்வைக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் வாசகர்களைவிட எழுத்தாளர்களிடமிருந்து அதிகப்படியான கேள்விகள் வரும். அவை மேடையிலிருக்கும் எழுத்தாளருக்கு எதிரானதல்ல. அவர்களது கருத்துக்களை மேலும் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் கீழே அமர்ந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு இருப்பதால் வருபவை” என்று விளக்கியது முக்கியமான ஒரு கோணத்தில் அமர்வுகளைப் புரிந்துகொள்ள உதவியது.
ஜானவி பருவா பிரம்மபுத்திரா குறித்த என்னுடைய கேள்விக்கு “பிரம்மபுத்திராவை வட கிழக்கில் இருக்கும் எவரும் தவிர்த்துவிடவே முடியாது. அது ஒரு வாழ்க்கை முறை. அந்நிலத்தின் உயிர்நாடி, ஒரு சில இடங்களில் அதன் மறு கரையைப் பார்க்க முடியாத அளவு பெரியது” என்றார். அவ்வளவு அகலம் கொண்ட ஆற்றைப் பார்த்திராததால் அது எனக்கு கடலாகவே மனக்கண்ணில் தோன்றுகிறது. இதையெல்லாம் விட மிக முக்கியமானது, “பிரம்மபுத்திரா மூடுபனி/நீராவி நிறைந்தது, மறுபக்க நிலத்தை மறைக்கும் திரை போன்றது” என்ற அவரது கூற்று பிரம்மபுத்திராவுக்கு ஒரு மர்மத்தன்மையை அளிக்கிறது.
சங்கரப்பிள்ளை அவர்களுடன் இக்கால லட்சியவாதம், கவிதைகளுக்குள் தொன்மம் மற்றும் நிகழ்காலத்தைச் சுட்டும் கூறுகள் இடம்பெறுவது குறித்த உரையாடல்கள் அவரது கவிதைகளுக்குப் பொருத்தமான பின்புலம் அமைத்துக் கொடுத்தன.
கே.என்.செந்தில் “மக்களின் கொண்டாட்டத்தை விடத் தீமையைப் பற்றி அதிகம் எழுதக் காரணம், அவர்களது கொண்டாட்டம் என்பது தீமையைப் போர்த்தியிருக்கும் ஒரு திரை” என்றார். அவரது கோணத்திலிருந்து அவரது படைப்புகளை அணுக உதவும் கூற்றாக அமைவது இது.
யுவன் சந்திரசேகர் அமர்வில் வெளிப்படையாகவும், தயங்காமலும் தான் எண்ணுவதை முன்வைத்தார். எழுதும் படைப்பூக்க நிலை என்பது பணம் எண்ணுவது போல ஒரு மனப்பழக்கம், மனப்பிறழ்வன்று என்று விளக்கினார். புதிதாக எழுத முனைபவர்களுக்குச் சற்றேனும் ஊக்கம் தரும் அமர்வு யுவனுடையது. அவரது சிறுகதைகளை வாசிக்கும் கோணம் பற்றிய தனி உரையாடலில் “அர்த்தம், தர்க்கம் தேடுவதைவிட அனுபவத்தை அவதானிப்பது உதவும்” என வழிகாட்டினார்.
சென்ற வருடம் குழும புகைப்படத்துக்கு மேடை நிரம்பி வழிய, தயங்கி நின்றிருந்த என்னைப் பெயர் சொல்லி அழைத்து மேடையில் நிற்கவைத்தார் மீனாம்பிகை. இம்முறை என்னருகில் அமர்ந்திருந்த அருள் இவ்வளவு பங்கேற்பாளர்கள் மத்தியில் குமாருக்கு என் பெயர் எப்படி நினைவிருக்கிறது என்று வியந்துகொண்டிருந்தார். அத்தனைபேரையும் அணுகியறிந்து இவ்விரண்டு நாட்களையும் இனிய நினைவாக மாற்றியிருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
மறுநாள் சென்னை திரும்பும் முன் கிடைத்த சில மணிநேரங்களை சிற்பங்கள் முன் செலவிடலாமென்று எண்ணம். நவீன் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தைப் பரிந்துரைத்தார். சென்றபின்தான் புரிந்தது, ஒரு நாள் முழுதும் கூட போதாதென்று. கனகசபை தவிர்த்துப் பார்த்தாலே ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்கள், ஒவ்வொன்றிலும் 12 சிற்பங்கள் என ஒரு சிற்பத்தொகை முன் நின்றிருந்தேன். ஒரு சரியான தருணத்தைக் கல்லில் சிறைபிடித்த சிற்பம் பெரும் புராணத்தையே கண்முன் விரிக்கும் வீரியம் கொண்டது என்று புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த வருடம் இலக்கியம் மற்றும் சிற்பங்களுடன் இனிதே நிறைவடைந்தது. ஒரு கோரிக்கை. ஈரோடு விவாத பயிற்சி பட்டறையின்போது கிருஷ்ணன் நாம் முதலில் “கவனித்து உள்வாங்குவது மற்றும் கேட்டவற்றை மீட்டெடுப்பது” குறித்துத் தனி அரங்கு நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை 2020ல் ஒருங்கிணைக்கலாம். கூடவே குற்றாலத்தில் நடந்த கவிதை முகாம் போன்ற மற்றொரு முகாமும், சிற்பங்களை உள்வாங்கிக்கொள்ள தனி முகாமும் அமையப்பெற்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.
அன்புடன்,
பா.விஜயபாரதி
சென்னை
***
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வந்த அனுபவத்தை எழுத வேண்டும் என எண்ணினேன். நான் விஷ்ணுபுரம் வட்டம் சார்ந்தவன் அல்ல. எந்த சூழலிலும் இல்லை. ஊரில் தனியாக அலைபவன். விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தாலும்கூட தனியாகவே சுற்றிக்கொண்டிருப்பேன். எனக்கு இந்த விழாவில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளித்தது எழுத்தாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி. யுவன் சந்திரசேகர், போகன், சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் பேசும்போது ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். உற்சாகமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று ஒரு முக்கியமான கருத்தை சொல்லவும் செய்தார்கள்
சுரேஷ் பிரதீப், சுனீல்கிருஷ்ணன் போன்ற இளம்தலைமுறை எழுத்தாளர்களைச் சந்தித்ததும் மிகவும் நிறைவூட்டுவதாக இருந்தது. எழுத்தாளர்களை ஏன் பார்க்கவேண்டும் என்றால் அவர்களுடன் ஒரு மானசீகமான நெருக்கம் உருவாகிறது. நமக்கு அவர்களை தெரியும் என தோன்றிவிடுகிறது. அவர்களின் படைப்புகளுக்குள் செல்ல அது மிகவும் உதவியாக இருக்கிறது. அதோடு நானெல்லாம் என்றைக்காவது நானும் எழுதிவிடுவேன் என்று நம்பிக்கொண்டிருப்பவன். அந்தக்கனவை அப்படியே வைத்துக்கொள்ள உதவுகிறது
அன்பரசன்
***