‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 38

பகுதி ஐந்து : விரிசிறகு – 2

கொம்பொலி எழுந்ததும் சம்வகை தன் சிற்றறையிலிருந்து வெளியே வந்தாள். அவளைச் சுற்றி அமர்ந்து அவள் கூறிய ஆணைகளை ஏடுகளில் எழுதிக்கொண்டிருந்த கற்றுச்சொல்லிகள் எழுந்து நின்றனர். அவர்களிடம் “முறைப்படி அனைத்தையும் அனுப்பிவிடுங்கள்” என்று ஆணையை அளித்துவிட்டு அவள் கவசங்கள் உரசி ஒலிக்க, எடைமிக்க காலடிகள் மரத்தரையில் முழக்கமிட படிகளில் இறங்கி வெளியே வந்தாள். அவளுடைய கவசமிட்ட உடலின் பெருநிழல் உடன் வந்தது, மெய்க்காவல் பூதம்போல.

அவளுக்காக புரவி காத்து நின்றிருந்தது. யவன நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட அகன்ற முதுகும் பெரிய கால்களும் குறுகிய கழுத்தும் கொண்ட புரவி. அது எடை தாங்குவது, ஆனால் விரைவு கூடுவதில்லை. ஆகவே நெடும்பொழுது களைப்படையாது ஓட அதனால் முடியும். அவள் அருகணைவதை உணர்ந்து அது தன் சிறிய செவிகளை திருப்பி மூக்கை விரித்து செருக்கடித்தது. அவள் அருகே வந்து அதன் கழுத்தை தட்டிவிட்டு கால் சுழற்றி ஏறி அமர்ந்தாள்.

அந்த எடை மிக்க கவசத்துடன் அதன் மேல் அவளால் ஏற முடியும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. முதல்நாள் முழுக்கவச உடையுடன் அந்தப் புரவியில் ஏறும்போது காலைச் சுழற்றி அப்பாலிடுவது எப்படி என்று தன்னுள் திட்டமிட்டபடியே சென்றாள். வளையத்தில் கால் நுழைத்து ஏறி அமர்ந்தபோது எதையும் எண்ணாமல் காலை தூக்கிச் சுழற்றி அமர்ந்த பின்னர்தான் இயல்பாக தன்னால் அமர இயன்றிருக்கிறது என்பதை உணர்ந்தாள். அப்பால் சூழ்ந்திருந்த வீரர்களின் விழிகளும் அவள் மேலேயே பதிந்திருந்தன. அவள் எப்படி அதில் ஏறி அமர்கிறாள் என்பதை அவர்கள் ஒருவருக்கொருவர் விழிகளால் கூறிக்கொண்டிருக்க வேண்டும். அனைவரும் விழி மலைத்திருப்பதை அவளால் நோக்காமலேயே உணர முடிந்தது.

அவள் ஏறி அமர்ந்த இயல்பிலேயே புரவி அவள் எடையை உணர்ந்துகொண்டிருந்தது. ஆகவே அது எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. ஒருகணம் முதுகை வளைத்து முன்னங்காலை தூக்கி வைத்து சற்றே ஊசலாடியது. அவள் குதிகாலால் ஆணை அளித்ததும் பெருநடையில் விரைந்து செல்லத்தொடங்கியது. அந்த நாளில் இருந்து புரவிக்கும் அவளுக்குமான இணக்கம் கூடிக்கூடி வந்தது. அவள் பெரும்பாலான பொழுதுகளில் முழுக்கவச உடையிலேயே புரவியில் ஏறினாள். அக்கவச உடை பெருவிழவுகளுக்கு மட்டுமே உரியது. போரும் பெருவிழவுதான். பிற நாட்களில் அஸ்தினபுரியில் எவரும் கவசஉடை அணிவதில்லை. ஆகவே அவள் கவசஉடையணிந்திருப்பதை எவரும் விழிகளுக்கு பழக்க முடியவில்லை.

அக்கவச உடை அவளை ஒரு பேருருவாக்கியது. ஆற்றல் கொண்டவளாக மாற்றியது. இரும்பு வடிவில் பிறர் முன் தோன்றும் அவளை அவளே பார்த்துக்கொண்டிருந்தாள். அது பிறிதொருத்தி என்று முதலில் தோன்றியது. தன்னிலிருந்து சிலவற்றை பிரித்துப் பெருக்கி அப்பிறிதொருத்திக்கு அளித்து அவளை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். என்னால் ஆட்டி வைக்கப்படும் பாவை, இதிலிருந்து நான் விலகிக்கொள்ள விரும்புகிறேன், வேறெங்கோ இயல்பான எளிய பெண்ணாக பதுங்கிக்கொள்ள என அவள் எண்ணிக்கொண்டாள். உடனே அவ்வியல்பான எளிய பெண்ணிலிருந்து முளைத்தெழுந்து இவ்வண்ணம் ஆவதற்குத்தானே எப்போதும் விழைந்துகொண்டிருந்தேன் என வியந்தாள். ஒவ்வொரு நாளும் என்னை கூர்தீட்டி இங்கு வந்தடைந்தேன். வந்தடைந்தபின் ஏன் திரும்பிச் செல்ல விழைகிறேன்? அந்த எளிய பெண்ணை முற்றுதறி இங்கு இவ்வண்ணம் நிமிர்ந்திருப்பதே நான் என்று ஆக ஏன் என்னால் இயலவில்லை?

அவள் அதை பல முறை தனக்குள் உசாவிக்கொண்டிருந்தாள். அதை எவரிடமேனும் பேச வேண்டும் என்று எண்ணினாள். ஒருவேளை சாரிகர் அங்கிருந்தால் அவள் அதை பேசியிருக்க கூடும். ஆனால் அவர் அந்நகரை உதறிச்சென்று முற்றிலும் பிறிதொருவராக துவாரகையில் இருந்தார். அவரைப் பற்றிய செய்திகள் அவள் அறியாத ஒருவரை காட்டின. அந்த பிறர் அறியா ஆழத்தை அவர் என்றும் பேணிக்கொண்டிருந்தார். காட்டிலிருக்கும் புதர்க்கூடுகள்போல. நாமறியாத பறவைகளின் முட்டைகளை அவை தங்களுக்குள் வெம்மை ஊட்டி வளர்க்கின்றன என்று சுரேசர் கூறுவதுண்டு. என்னுள் இருந்து விரிந்தெழுவது ஆற்றல் மிக்க கழுகு போலும் என்று எண்ணினாள்.

ஆனால் பிறிதொரு மென்வடிவை எதற்காக தனித்து எங்கோ சேர்க்க முயல்கிறேன்? பின்னர் ஒருநாள் அவள் உணர்ந்தாள். அவ்வண்ணம் ஒரு எளிய பெண்ணை எடுத்து எங்கோ பிறர் அறியாமல் சேர்த்து வைக்கவில்லையெனில் அவள் அவ்வடிவில் முற்றழிந்து போவாள். உருவாக்கப்படும் வடிவுகள் அனைத்தும் செயற்கையானவை. அவை வளர்வதில்லை. கைவிடுபடைகள்போல் ஆற்றல் மிக்கவை, நேர்த்தியானவை. ஆனால் தங்கள் முடிவை தாங்களே எடுக்கும் ஆற்றல் அற்றவை. அந்த எளிய பெண் தன்னுள் உயிருடன், உணர்வுடன் தனித்திருக்கையிலேயே தான் மானுட உயிராக அறிவும் நுண்மையும் கொண்டு திகழ முடியும். அதற்கு ஒரே வழி தன்னை இரண்டாக பகுத்துக்கொள்வது. இரண்டாக பகுத்துக்கொள்வதற்கான வழி என்பது இந்த இரும்பு உருவை இவ்வண்ணம் பெருக்கிக்கொள்வது.

இதை எந்த அளவு பெருக்கிக்கொள்கிறேனோ அந்த அளவு நான் இதிலிருந்து அகல்கிறேன். இது பேருருக் கொள்கிறது, நிகரற்ற ஆற்றல் கொள்கிறது, அச்சமும் திகைப்பும் உருவாக்குவதாக ஆகிறது. இதற்குள் மிக ஆழத்தில் மென்மையான சிறிய முயல்போல் செவி விடைத்து உடல் விதிர்த்தபடி நான் பதுங்கியிருக்கிறேன். இவ்வாற்றலும் அந்நுண்ணுணர்வும் கலந்ததே நான். அந்நுண்ணுணர்வு என்னுள் இருக்கையில், நான் எவர் என நானே அறிந்திருக்கையில் மேலும் ஆற்றல் கொண்டவளாகிறேன். என் முன் வந்து இவ்விரும்புப் பேருருவை பார்ப்பவர்கள் எண்ணுவதற்கு அப்பால் ஒரு நுண்மை, ஒரு கூர் படைக்கலம் என்னுள் இருக்கிறது என்னும் உணர்வே என்னை வெல்லற்கரியவளாக்குகிறது.

அதன் பிறகு அவளுக்கு அக்குழப்பம் வந்ததில்லை. அவள் தன்னை மேலும் மேலும் இரண்டென பகுத்துக்கொண்டாள். தன் தனியறையில் மட்டுமே இயல்பான ஆடைகளுடன் இருந்தாள். எளிய உடல்மொழியை அங்கு மட்டுமே பயின்றாள். அப்பொழுது அவள் குரலும் பிறிதொன்றாக இருந்தது. இற்செறிப்பில் வாழும் கன்னியொருத்தியின் மொழியின் நாணம் அவளில் கூடியது. அவளை அங்கு எவரும் பார்க்கவில்லை. அவள் அணுக்கச் சேடியர் மட்டுமே அறிந்திருந்தனர். ஆடியில் அங்கு தன்னை பார்க்கையில் அவள் மிக அணுக்கமான தோழியொருத்தியிடமென நாணி புன்னகைத்துக் கொண்டாள். கவசஉடை அணிந்து அவள் தன்னை ஆடியில் பார்த்துக்கொள்வதில்லை. அஸ்தினபுரியே ஒரு மாபெரும் ஆடியென அவளை காட்டியது.

அஸ்தினபுரியின் தெருக்களினூடாகச் செல்கையில் அப்பெருநகர் எத்தனை விரைவில் உருமாறிக்கொண்டிருக்கிறது என்பதை அவள் பார்த்தாள். பெரும்பாலான மாளிகைகள் ஆடிச்சாளரங்கள் கொண்டுவிட்டிருந்தன. முகடுகள் வெண்சுண்ணம் பூசப்பட்டு முகில்கள் ஒழுகிய ஒளி குவிந்து உருவானவைபோல் மெருகு கொண்டிருந்தன. சாலைகளின் ஓரங்கள் அனைத்தும் புதிய செந்நிற கற்பலகைகள் பதிக்கப்பட்டு அவற்றில் தூண்கள் நாட்டப்பட்டு அவை அனைத்திலும் உலோகப்பட்டைகள் பொறிக்கப்பட்டிருந்தன. மாளிகைகளின் சாளரவிளிம்புகளில் பித்தளைச் சட்டங்கள் அமைந்திருந்தன. பல்லாயிரம் பித்தளைக்குமிழ்கள் விழிமுனைகள்போல் தெருவைச் சுழற்றி அள்ளிக்கொண்டிருந்தன. அனைத்துக் காவல்மாடங்களும் மாந்தளிர் வண்ண அரக்கு பூசப்பட்டு புது மரத்தாலானவைபோல் மெருகு கொண்டிருந்தன.

அவள் அஸ்தினபுரியின் கோட்டையை மிகத் தொலைவிலேயே பார்த்தாள். அது புதிதாக வெண்சுண்ணம் பூசப்பட்டிருந்தது. அஸ்தினபுரியின் தொல்கோட்டை நேரடியாக கற்களை அடுக்கிக் கட்டப்பட்டது. முதல் அடுக்கின் மீது சுடுமண் கற்களால் ஆன இரண்டாம் அடுக்கு அமைந்திருந்தது. நெடுங்காலம் மழையும் வெயிலும் பட்டு செங்கற்கள் கருகி ஒன்றாகிவிட்டிருந்தன. இருள் செறிந்ததுபோல் தெரிந்தது அக்கோட்டை. அதை களிற்றுயானை நிரை என்று சூதர்கள் பாடுவதுண்டு. அதற்கு சுண்ணம் பூச முடியுமென்ற கற்பனை எவரிடமும் எழுந்ததில்ல. அதன் மேலிருக்கும் பாசிப் படர்வு சுண்ணத்தை ஏற்காது.

எப்போதோ ஓரிரு முறை சில பகுதிகளில் சுண்ணம் பூச முயன்றிருக்கிறார்கள். கோட்டை முகப்பில் சுண்ணம் பூசுவதற்கு ஒருமுறை முயன்றதாக அவள் தந்தை சொல்லியிருக்கிறார். மரம் பட்டை உதிர்ப்பதுபோல் சில நாட்களிலேயே சுண்ணம் பொருக்குகள் எழுந்து வளைந்து உதிரத் தொடங்கிவிடும். பின்னர் அவற்றை செதுக்கிச் செதுக்கி எடுக்க வேண்டியிருக்கும். சுண்ணம் பூசும் முயற்சி முற்றிலும் கைவிடப்பட்டதற்கு அஸ்தினபுரியின் கோட்டையின் நீண்ட அளவும் வழிவகுத்தது. அத்தனை பெரிய வடிவை சுரண்டி தூய்மைப்படுத்த பல்லாயிரம் பேர் பலமாத காலம் உழைக்க வேண்டியிருக்கும். ஆகவே அக்கருமை அதன் அழகென்று தங்கள் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டிருந்தார்கள். நூறுநூறாண்டுகளாக அது அவ்வாறே நீடித்தது. பாடல் பெற்றது. கனவில் ஊறி நிறைந்தது.

புதிதாக வந்த பீதர்நாட்டுச் சிற்பி அக்கோட்டைசுவரில் சுண்ணம் பூச முடியுமென கூறியபோது யுதிஷ்டிரனின் அவையிலேயே நகைப்பொலி எழுந்தது. கலிங்கச் சிற்பி சாரதர் “சுண்ணம் பூசலாம், அது ஈரம் காயும் வரை நன்றாக இருக்கும்” என்றார். யுதிஷ்டிரனே புன்னகைத்தார். பீதர்நாட்டுச் சிற்பி “சுண்ணம் பூசும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். உரிய பொன் மட்டும் ஒதுக்கினால் போதும். எனக்கான பணியாளர்களை நான் கொண்டு வருகிறேன்” என்றார்.

சுண்ணம் பூசப்பட்டபோது அது இளநீல நிறத்தில் இருந்தது. கரிய பரப்பின் மீது அந்த இளநீலப் படிவு ஊறி மறைந்து கற்சுவர் மேலும் கருமை கொள்வதுபோல் தோன்றியது. முழுக் கோட்டையும் அவ்விளநீலப் பூச்சு பெற்றபின் நான்கு நாட்களில் காய்ந்து சுவர் முற்றாக வண்ணம் மாறியது. அது செம்மண் வண்ணத்தை அடைந்து பொருக்கோடியது. உலர்ந்த மரப்பட்டைகள் என அதன் மேற்பரப்பில் விரிசல்கள் பரவின. அதன் மேல் தேன்மெழுகும் அரக்கும் களிமண்ணுடன் கலந்த கலவையை பூசினார்கள். அக்கலவை உலர்ந்து தடித்த பொருக்குகளாக ஆகி ஏரிப்படுகை என ஒரு நோக்கில் தன்னை காட்டியது. நீண்ட செதுக்கிகளைக் கொண்டு மிக விரைவாக செதுக்கி அதை எடுத்தார்கள்.

முதலில் பூசப்பட்டது கடும் நஞ்சு என்று அதன் பின்னரே அனைவரும் உணர்ந்தனர். அக்கற்பரப்பின் மீதிருந்த பாசி உயிரிழந்து களிமண்ணில் பற்றிக்கொண்டு உதிர்ந்து விழுந்தபோது அன்று கட்டப்பட்டதுபோல் புதுக்கல் மினுக்குடன் கோட்டை எழுந்து வந்தது. செங்கல் கட்டமைப்பு சூளையிலிருந்து கொண்டு வந்ததுபோல் செவ்வண்ணம் பெற்றது. செதுக்கி எடுக்கப்பட்ட களிமண் பொருக்குகளைப் பெயர்த்து கொண்டு சென்று காட்டிற்குள் நான்கு ஆள் ஆழத்தில் எடுக்கப்பட்ட குழிகளில் இட்டு புதைத்தனர்.

அந்தச் செங்கல் பரப்பின் மீதும் கற்பரப்பின் மீதும் நீரூற்றிக் கழுவி அதன் பின்னர் சுண்ணம் பூசப்பட்டது. பாரதவர்ஷத்தின் வழக்கப்படி சுண்ணமும் அரக்கும் மெழுகும் கலந்த கலவை அல்ல அது. முற்றிலும் புதிய ஒரு கலவை. சுண்ணத்துடன் எண்ணை கலக்கப்பட்டதுபோல் தோன்றியது.  சுண்ணம் பூசப்பட்டதும் உடனடியாக உலர்ந்து மூக்கை அரிக்கும் ஆவியை கிளப்பியது. பகலில் சுண்ணம் பூசப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இரவில் பூசப்பட்டு புலர்காலையில் நன்கு உலர்ந்து ஒளியெழுந்தபோது கண்நிறைத்து நிரம்பியிருந்தது அஸ்தினபுரியின் கோட்டை. மாபெரும் வெண்துணி தொங்கவிடப்பட்டதுபோல் அது தோன்றியது. முன்பு அஸ்தினபுரியில் விழும் வெயிலொளியில் பாதியை கோட்டையே உறிஞ்சிக்கொண்டிருந்தது என்பதை அப்போதே உணர்ந்தனர்.

வெண்சுண்ணம் பூசப்பட்டபோது நகர் புத்தொளி கொண்டது. பல தெருக்களில் நிழல்கள் விழுவதே இல்லாமலாயிற்று என்று கூறினார்கள். முதல் கதிரிலேயே கோட்டை ஒளிகொள்ளத் தொடங்கியது. அந்தி இறங்குவது மிகப் பிந்தியது. இருண்ட பின்னரும் கோட்டை மிளிர்வுகொண்டிருந்தது. அங்கிருந்த பழைய கோட்டை நினைவிலும் சொல்லிலும் முற்றாக மறைந்து பிறிதொன்று அங்கே நிலைகொண்டது. சில நாட்களில் அது என்றும் அவ்வாறு இருந்தது என்று விழி உள்ளத்தை பழக்கியது.

அந்தச் சுண்ணப்பரப்பு உதிரக்கூடும் என்றும், வண்ணம் மாறக்கூடும் என்றும் சிலர் எதிர்பார்த்தார்கள். அஸ்தினபுரியின் குடிகள் ஒவ்வொரு நாளும் வந்து அக்கோட்டைப் பரப்பை பார்த்துச் சென்றார்கள். ஆனால் சில நாட்களில் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள், அது இன்னும் நெடுங்காலத்துக்கு அவ்வாறுதான் இருக்கும் என்று. எனினும் நகரில் எஞ்சிய முதியவர்களில் சிலர் அக்கரிய வண்ணமே அதன் இயல்பு என்று சொன்னார்கள். “இவ்வெண்மை நீடிக்காது. இது மெல்ல மெல்ல தன் இயல்பான கருமையை நோக்கி சென்றாகவேண்டும்… தெய்வங்களுக்குரியது வெண்மை. கருமையே மானுடர்களுக்குரியது.”

ஒவ்வொரு நாளும் யுதிஷ்டிரன் வந்து கோட்டையின் அருகிலூடாக புரவியில் சுற்றி நோக்கிவிட்டு திரும்பிச்சென்றார். “இக்கோட்டைபோல் வெண்ணிறமான பிறிதொன்று பாரதவர்ஷத்தில் இல்லை” என்று அவர் கூறினார். “வெண்மை அமைதியின் நிறம். அறத்தின் நிறம். ஊழ்கத்தின் வண்ணம் அது என்று முனிவர்கள் கூறுவார்கள். இனி இந்நகரின் வண்ணம் இதுவே ஆகுக! இது களிற்றுயானை நிரைதான், ஆனால் இந்திரனின் வெண்களிற்றுயானை நிரை” என்றார்.

 

சம்வகை கோட்டைவாயிலை அடைந்தபோது அனைத்து ஒருக்கங்களும் ஏற்கெனவே முடிந்திருந்தன. துணைப்படைத்தலைவியான உக்ரை தொலைவிலேயே அவளுடைய புரவி அணுகுவதைக் கண்டு படிகளில் இறங்கி வந்து அணிவகுத்து நின்ற படைகளின் முன்னால் நின்றாள். அவள் புரவியிலிருந்து இறங்கி அணுகியதும் உக்ரை தலை தாழ்த்தி வணங்கி மூன்று அடி வைத்து அருகணைந்து “ஒருக்கங்கள் முழுமை அடைந்துவிட்டன, தலைவி” என்றாள். சம்வகை விழிகளை ஒருமுறை சுழற்றி படைகளை நோக்கிவிட்டு “நன்று, பிழையற அமையட்டும்” என்றாள்.

இடைவிடாத ஆட்சிப்பணிகளால் அவள் முகத்தில் ஆர்வமின்மை ஒரு தசையமைப்பாகவே திரண்டுவிட்டிருந்தது. கண்களுக்குச் சுற்றும் சுருக்கங்கள் செறிந்திருந்தன. ஆனால் விழிகளின் அசைவில் அவளுடைய கூர்நோக்கு எப்போதும் வெளிப்பட்டது. உக்ரை “முரசுச்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிந்துநாட்டின் படைகள் தொலைவில் அணைகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவை முதல் காவல்மாடத்தை வந்து சேரும்” என்றாள். சம்வகை தலையசைத்து “முறைமைகள் அனைத்தும் ஒருங்கிவிட்டன அல்லவா?” என்றபடி நடந்தாள்.  அது ஒரு வெறும்வினா என உணர்ந்தும் உக்ரை அவளுக்குப் பின்னால் நடந்தபடி “சூதர்களும் அணிப்பெண்டிரும் வந்துவிட்டனர்” என்றாள்.

அந்த இடைவெளியை சம்வகை உணர்ந்து சற்றே நடை தளர உக்ரை “இங்கு முதிய சூதர் ஸ்ருதர் ஒரு சிறு ஐயத்தை எழுப்பினார்” என்றாள். சம்வகை கூறுக என்பதுபோல் முனகினாள். “வருபவர் கணவனை இழந்த கைம்பெண். அவருக்கு மங்கல வரவேற்பும் கொடி வாழ்த்தும் உரியதாகுமா என்றார். முன்பு இங்கே அவ்வழக்கம் இருக்கவில்லை என்றார். நான் அதை எண்ணியிருக்கவில்லை. சிந்துநாட்டின் வழக்கமென்ன என்று நமக்குத் தெரியாதே என்று சொன்னேன். அஸ்தினபுரியில் அஸ்தினபுரியின் வழக்கங்கள்தான் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். அது சற்று குழப்பமாக உள்ளது” என்றாள்.

“இளவரசி துச்சளை அஸ்தினபுரியின் மகளாக அன்றி சிந்துநாட்டின் அரசியாகவா இங்கு வருகிறார்?” என்றாள் சம்வகை. தயக்கமில்லாமல் அவள் விழிகளை நோக்கி “இரண்டும்தான் அவர்கள் என்று அறிவேன். எனினும் இங்கு நாம் கொள்ளும் நிலைப்பாடென்ன என்பது இங்குள்ள பிற அனைத்தையும் வகுப்பதற்கு உதவும்” என்றாள் உக்ரை. சம்வகை திரும்பி புதியவள் என அவளை பார்த்தாள். அந்தக் கோணத்தில் அவள் அதுவரைக்கும் எண்ணியிருக்கவே இல்லை. ஒருகணம் உக்ரையின் முகத்தை பார்த்த பிறகு “உனக்கென்ன தோன்றுகிறது, கைம்பெண் ஒழுக்கம் இங்கே கடைக்கொள்ளப்பட வேண்டுமா?” என்றாள்.

“இது புதிய வேதம் எழுந்த நாடு. அவ்வேதத்தை உரைத்த ஆசிரியன் யாதவர். அவர்கள் குடியில் கைம்பெண் ஒழுக்கமும் உடன்கட்டை ஏறுதலும் இல்லை” என்றாள் உக்ரை. சம்வகை நகைத்து “நன்று… நீ முன்னரே எண்ணியிருக்கிறாய் அனைத்தையும்” என்றாள். அவள் தோளில் கைவைத்து “நாம் முறைப்படி அரசியருக்குள்ள வரவேற்பையே அவருக்கு அளிப்போம். சிந்துநாடு இளவரசியை அகற்றியிருக்கலாம். இங்கு இப்போது அவருடைய நேர்க்குருதியினர் எவரும் இல்லாமலிருக்கலாம். ஆனால் இந்நகரம் அவருக்குரியது. இதில் அரசிக்குள்ள இடம் என்றும் அவருக்கு இருக்கும். அந்நிலையிலேயே அவர் இங்கு வருகிறார். இந்நகரம் மங்கல இசையும் மங்கலப் பொருட்களும் கொண்டு அவரை எதிர்கொள்ளட்டும்” என்றாள் சம்வகை.

உக்ரை “அம்முடிவை நாம் எடுக்கலாகுமா?” என்றாள். சம்வகை “இங்கு கோட்டையில் இப்போது முடிவை நானே எடுக்கிறேன். என் முடிவில் எனக்கு உறுதியிருக்கிறது. அதை அரசரிடமோ பிறரிடமோ என்னால் கூற இயலும்” என்றாள். உக்ரை புன்னகைத்தாள். காவல் அறைக்குள் சென்று அமர்ந்து தன் கால் குறடுகளைக் கழற்றி நெஞ்சக் கவசத்தையும் இயல்பாக்கிய பிறகு சம்வகை “நாளை முதல் அஸ்தினபுரியின் கோட்டைத்தலைவியாக நீயே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்றாள். உக்ரை திகைத்து “தலைவி?” என்றாள். “ஆம், சற்று முன்னர் அரசர் என்னிடம் பேசினார். அஸ்தினபுரியின் உருவாகிவரும் படைகளுக்கான தலைமையை என்னை ஏற்கும்படி கூறினார்” என்றாள் சம்வகை. “படைத்தலைவியாகவா?” என்றாள் உக்ரை. “ஆம், நாற்படைக்கும் தலைவியாக” என்று சம்வகை புன்னகைத்தாள்.

உக்ரை “இன்றுவரை நான்காம் குலத்து உதித்த ஒருவர் அப்பதவியை ஏற்றதில்லை” என்றாள். “நான்காம் குலத்தவர் இங்கு அரசியாகவே முன்னர் அமர்ந்திருக்கிறார். என் குலத்தவர்” என்று சம்வகை சொன்னாள். உக்ரை முகம் மலர்ந்து “நன்று, இதைப்போல் நிறைவளிக்கும் செய்தி பிறிதொன்றில்லை” என்றாள். சம்வகை “பெரும் பொறுப்பு இது. இன்று நம்மிடம் படையென ஒன்றில்லை” என்றாள். “நம் படை நாள்தோறும் என பெருகிக்கொண்டிருக்கிறது” என்றாள் உக்ரை. “ஆம், இன்று அஸ்தினபுரி வலுவான படையொன்றை உருவாக்கிகொண்டிருக்கிறது. ஆனால் அது இன்னும் பயிலாத படை. ஒவ்வொருவரும் பயின்றவர்கள், ஆனால் ஒரு படையென ஒத்திசைவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும்” என்றாள் சம்வகை.

“படையென ஒன்றுபடுவதிலுள்ள இடர் என்ன என்று இப்போதுதான் தெரிகிறது” என அவள் தொடர்ந்தாள். “தனியாணவம் இல்லாதவன் வீரன் அல்ல, தனியாணவத்தை அகற்றாமல் அவனால் படையின் ஒரு பகுதியாக செயல்படவும் இயலாது. பல தருணங்களில் பெருஞ்செயல்களை செய்பவர்கள் படையுடன் ஒன்றாகாமல் பிறழ்பவர்களாகவும், படைகளால் தொடர்ந்து தண்டிக்கப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இங்கு ஒவ்வொருவருக்கும் எங்கு அவர்களது தனி ஆணவம் தலைநிற்கவேண்டும் என்றும் எங்கு அது அகற்றப்பட்டு ஆணைக்கு அடிபணியவேண்டும் என்றும் கற்பிக்கப்படவேண்டும். அதன் பின்னரே இங்கே ஒரு படையென ஒன்று உருவாகும்.”

“ஆனால் அதை ஆணை மூலம் கற்பிக்கலாகாது. தொடர்ந்து படையென அவர்களை பழக்குவதினூடாகவே கற்பிக்க இயலும். ஒரு போர் நிகழ்ந்தால் இவையனைத்தும் இயல்பாக அவர்கள் அனைவருக்கும் தெரிந்துவிடும். போரைப்போல் சிறந்த போர்ப்பயிற்சி வேறில்லை” என்றாள் சம்வகை. உக்ரை “போரெனில்…” என்றபின் நகைத்து “உடனே மீண்டும் ஒரு போரெனில் இங்கிருக்கும் அத்தனை குடிகளும் கிளம்பிச் சென்றுவிடுவார்கள்” என்றாள். சம்வகை “அவ்வாறு தோன்றும். ஆனால் அது உண்மையல்ல” என்றாள். “இங்கு வந்து சேர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் நம் படைகள் ஆற்றல் திரட்டிக்கொண்டு சென்று யவனத்தையோ பீதர்நாடுகளையோ வெல்ல வேண்டுமென்ற எண்ணத்தையே கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஓராண்டில் அஸ்தினபுரியிலிருந்து யுதிஷ்டிரன் பெரும்படையுடன் கிளம்பி உலகை வெல்ல முனைவார் என்றுதான் அவர்களிடையே பேச்சு உலவிக்கொண்டிருக்கிறது” என்றாள்.

உக்ரை “ஒருவேளை அது நிகழக்கூடும். அன்று படைமுகப்பில் தாங்கள் செல்லவும் கூடும்” என்றாள். சம்வகை கைகளை கட்டிக்கொண்டு பீடத்தில் சாய்ந்து “மெய்யாக நான் போரிட விரும்பவில்லை. போர் என்பது ஆற்றலை பயன்படுத்துவது அல்ல, சிதறடிப்பது. குவிக்கப்பட்ட ஆற்றல் ஒன்றை படைத்தாகவேண்டும். ஒரு பெரும்போரைவிட படைகளால் ஓர் ஏரி வெட்டப்படும் என்றால் அதுவே மெய்யான ஆற்றல்வெளிப்பாடு என்று தோன்றுகிறது” என்றாள். “வீசப்படும் வாளைவிட உறையிலிருக்கும் வாள் ஆற்றல் மிக்கது என பெண்களாகிய நாம் அறிவோம். அதுவே நமது வெற்றி.”

உக்ரை அவளுடைய சொற்களால் உளமெழுந்து விழிமின் கொண்டாள். “நிறைந்து நிலைகொண்ட ஆற்றல் நம்மை அனைவருக்கும் மேலென எழச் செய்கிறது. அனைத்திற்கும் அப்பால் நிற்கச் செய்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அது வெற்றியை அளிக்கிறது. அஸ்தினபுரி பாரதவர்ஷத்தை எதிர்த்து வெல்லும் நாடல்ல, பாரதவர்ஷத்தால் எதிர்க்கவும் எண்ணப்பட முடியாத நாடென்ற நிலையையே நான் விரும்புகிறேன்” என்றாள் சம்வகை.  “அன்று அது இங்குள்ள அனைத்து சிறுகுலங்களையும் ஒன்றாக்க முடியும். சிந்துவையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் ஒன்றென இணைக்க முடியும். பாரதவர்ஷம் முழுக்க மெய்மையின் செய்தியை அனுப்ப முடியும்.”

“எந்நகரில் கல்வி சிறக்கிறதோ அதுவே உண்மையில் வெல்லும் நகர். கல்வியினூடாகவே மெய்யான புகழ் நிலைநிறுத்தப்படுகிறது. ஒரு நகர் சுழன்றுகொண்டிருக்கும் மத்துபோல. இப்பாற்கடலில் அது எதை கடைந்தெடுக்கிறது என்பதே அதன் மதிப்பு. அஸ்தினபுரி சொல்லின் நகராக மாற வேண்டும். சொல் திகழவேண்டுமெனில் படைக்கலம் அதற்கு காவலாக இருக்க வேண்டும். அச்சொல் மெய்மையை சென்றடைய வேண்டும் என்றால் அதில் குருதி படிந்திருக்கலாகாது” என்றாள் சம்வகை. அவள் அச்சொற்களை முன்னரே பலமுறை சொல்லிக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தாள். அதை அப்போது சொல்வதுகூட வேறெங்கோ எவரிடமோ சொல்வதுபோல் தோன்றியது. எவருடைய சொற்கள் அவை என அகம் திகைத்தது.

உக்ரை அவளை விழிமலர பார்த்துகொண்டிருந்தாள். பின்னர் “பேரரசியருக்குரிய சொற்கள், தலைவி. தாங்கள் பிறந்த எளிய குடியிலிருந்து இவ்வெண்ணங்களை எப்படி அடைந்தீர்கள்?” என்றாள். சம்வகை புன்னகையுடன் மீண்டு “அவ்வப்போது நானும் அதை எண்ணிக்கொள்வதுண்டு. நான் பிறந்த சூழலில் இருந்து இந்த எண்ணங்கள் எதுவும் எனக்கு வந்ததில்லை. ஆனால் ஒவ்வொன்றும் நிலைகுலைந்த ஒரு தருணத்தில் இந்நகர்ப் பொறுப்புக்கு வந்தேன். ஒவ்வொரு நாளும் ஓர் ஆண்டுபோல் சென்றது. நான் இன்று அகத்தே முதுமையை அடைந்துவிட்டிருக்கிறேன்” என்றாள்.

சம்வகை தன் கவசங்களை எளிதாக்கி உடலை தளர்த்திக்கொண்டு நீள்மூச்சுவிட்டாள். “நெருக்கடிகளினூடாகவே நாம் நம்மை கண்டுகொள்கிறோம். நம்மை ஒவ்வொரு நாளும் கலைத்து மீண்டும் அடுக்கிக் கொள்கிறோம். ஒருவரின் அகமென்பது அவரே இயற்றிக்கொள்வதே. ஒருவர் சொல் சொல்லெனச் சேர்த்து தன் வாழ்க்கையை ஒரு நூலென யாத்துக்கொள்கிறார் எனத் தோன்றுகிறது. நான் என்னை அவ்வாறு உருவாக்கிக்கொண்டேன்” என்றாள்.

முந்தைய கட்டுரைசு.வெங்கடேசனுக்கு  ‘இயல்’ விருது
அடுத்த கட்டுரைவிழா பதிவு: கொள்ளு நதீம்