விழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்

அன்புள்ள ஜெ,

இப்போதைய பொருளாதார சுழலில் பணி நெருக்கடி மற்றும் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்து விழாவுக்கு செல்ல வேண்டுமா என்ற கேள்வி வெளி மனதை துளைத்ததையும் மீறி உள்மன ஆசையே வென்ற நிலையில்தான் விழாவில் கலந்துகொள்ள விண்ணப்பித்தேன். தங்குமிட அனுமதி பெற்ற சந்தோஷத்தில் விழாவுக்கு முந்தைய நாளான டிசம்பர் 27 காலை 8:30 மணிக்கு தாமதமாக கன்னியாகுமரி புதிய வாசகர் (நான் கலந்து கொள்வது இவ்வருடத்துடன் 5வது விழா என்பதால்) டேவிட்டுடன் அரங்கினுள் நுழைந்தேன்.

அப்போதே களைகட்டியிருந்தனர் தோழர்கள். ராஜா நிவாஸுக்கு அண்ணன் அரங்காவின் துணையுடன் சென்று உடைகளை வைத்து விட்டு அவசரகதியில் காலை உணவை முடித்து சரியான நேரத்துக்கு கவிஞர் இசையின் அமர்வில் அமர்ந்தேன். இம்மாதிரி நிகழ்வுகளின் போது என் மனம் ஒருவிதமான கிலேச நிலைக்கு போய்விடுகிறது. சரியான சொல்லாக பித்தாக, மோனமாக, உன்மத்தமாக என எதை பிரயோகிப்பது என்று தெரியவில்லை. மனசுக்குள் இசையின் கவிதை வரிகள் ஓடிய கணத்துக்கும் இசையை இசையுடன் இசையாய் உணர்ந்த அனுபவம் என்ன சொல்ல? !

அடுத்து யுவனுடன் கிருஷ்ணனின் உரையாடல் இவர் இவ்வளவு எளிமையாக அணுகத்தக்கவரா என்று மனம் தெளிந்தேன். சரியான கலகக்காரராகவும் எனக்கு தெரிந்தார்.

செந்திலின் உரையாடல் விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்வு தெரிவிப்பதும் அதில் எழுத்தாளனாக தன்னுடைய நிலையை விளக்கியதும் நடந்தது. மதிய உணவிற்குப் பின் வெண்பா. வாசகியாய் பார்த்த முகமா தன்னுள் இத்தனை திறமை கொண்டிருக்கிறது என வியந்தேன். முக்கியமாக சங்க இலக்கிய பரிச்சயமும் புதுமை கொண்ட நவீன பார்வையும் மிரட்சி கொள்ள வைத்தன.

அமிர்தம் சூர்யா அத்தனை பரிச்சயமற்ற முகம் ஆனால் ஓரே உரையாடலில் தோழமை கொள்ள வைத்த உறவாய் மாறிப் போனார். வடசென்னையின் வாழ்வியல் யதார்த்தங்கள் கவிதையாகவும் உரையாகவும் பரிணமிக்கும் பாலனங்கள் அவரிடம் கண்டு பிடிகிடையா சென்னையும் பிடித்துவிடும்.

சுரேஷ்குமார இந்திரஜித் இசை குறித்தான பார்வைகளும் எழுத்தில் அவரது பாணியும் உரையாடலிலும் மாற்றமில்லாது ஒலித்தது. ரவி சுப்ரமண்யம் கவிதையை இசைக்கு மாற்றும் அவரது அனுபவமும் யாருக்கும் கிடைத்திராத இசைஞானி இளையராஜாவுடனான இசைக்கும் அனுபவமும் மெலிதான அதிரலுடன் கேட்டேன். விழா நாளன்று காலை ஜானவி பரூவாவுடனான கலந்துரையாடல் அஸ்ஸாம் நிலக்காட்சிகளும் அவர் கதையின் வரிகளுமென பசும்தழை விரிப்பை மனம் உணர்ந்து கொண்டிருந்தது.

அடுத்து கே.ஜி.சங்கரப்பிள்ளை. கவிதைகளில் நாம் பார்த்த மனிதரா என யோசித்துக் கொண்டிருந்தபோது பொதுவுடைமையும் நீதியுணர்வையும் வேர்தேடிய அவரது பேச்சு மனதுக்கு நிம்மதியாக இருந்தது. பெருந்தேவி அவர்களின் எதிர்கவிதைக்கான பதிலும் அதையொடியே தொடர்ந்த நண்பர்களின் கேள்விகளும் கவிதையின் புது பரிமாணத்தை காட்டியது.

விழா நாயகர் அபியுடன் கடலூர் சீனு அவ்வளவு பாந்தமாக அரங்கையே கட்டிப் போட்டிருந்தது. கூடவே இம்முறை இசை அனுபவம் சற்று கூடுதலாகவே கிடைக்கப் பெற்றேன்.

விழா அனுபவங்கள் வாழ்க்கையை புத்துணர்ச்சியுடன் அணுக தோள் கொடுத்தன.

நன்றி

கண்ணன்,

கோவை

***

அன்பு நிறைந்த ஜெயமோகன் அய்யாவுக்கு,

வணக்கம்.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது மிக குறைந்த மதிப்பெண்ணே எடுத்துக்கொண்டிருந்தேன். பத்தாம் வகுப்பிற்கும் பதினொன்றிற்கும் உள்ள வித்தியாசங்களை உள்வாங்க இயலவில்லை. படிப்பில் பயம் அதிகரித்து, அதிக தொகை கட்டி பள்ளியின் விடுதியில் தங்கி படிக்கிறோம் ஆனால் மதிப்பெண் எடுக்க இயலவில்லை என்ற குற்றவுணர்ச்சியில் மூழ்கியிருந்தேன்.

அந்த சமயத்தில்தான் திருநெல்வேலியில் இருந்து திரு.ரிச்சர்ட் தேவசகாயம் வகுப்பு ஆசிரியராக வந்திருந்தார். அவரின் அணுகுமுறை ஆறாம் வகுப்பு ஆசிரியர் திரு.சதாசிவம் ஆசிரியரின் சாயலை ஒட்டியே இருந்தது. திட்டுவதாக இருந்தால் கூட தனியாக அழைத்து left & right வாங்கிவிடுவார். ஆனால் மாணவர்கள் மீது அவ்வளவு அன்பு இருக்கும்.

ஒரு முறை மூன்று பாடங்களிலும் சேர்த்து 75  மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தேன். அன்று அவர் பேசிய வார்த்தைகள் தந்தையை விட ஒரு படி மேலே சென்று, எனக்கிருக்கும் பொறுப்புகளை எடுத்து சொல்லி, முதுகை தட்டி தலையை வருடிக் கொடுத்து, நான் இருக்கிறேன் இது ஒரு விஷயமே இல்லை என நம்பிக்கை தந்தார். அன்றைய இரவு என்னென்னமோ மனதில் ஓடியது. அந்த தன்னுணர்தலை  இப்பொழுதும் என்னால் விவரிக்க இயலவில்லை.

அதற்கு பிறகு என்னையறியாமலேயே படிக்கும் மனதோடு விளையாட்டு குணமும் கொண்ட நண்பர்களிடம் சேர்ந்தேன். மெல்ல மெல்ல எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். இன்று நினைத்தால் கூட எப்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

அன்று நான் அடைந்த அதே உணர்வு, இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழாவில் கிடைத்தது. சென்ற ஆண்டு தூரத்தில் இருந்து பார்த்த, குருவின் அருகாமை கிடைத்ததில்  மகிழ்ச்சியால் திளைத்திருந்தோம். ஆனால் இந்த ஆண்டு மகிழ்ச்சியையும் தாண்டி,  எங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை  உணர்ந்து, எல்லா நண்பர்களும் ஒவ்வொரு மனிதர்களையும் உள்வாங்க முயற்சித்தோம்.

அப்படியான ஒரு மனச் சுழலில், உங்களுடைய எழுத்து கொடுத்த அங்கீகாரத்திற்கும் சிவராஜ் அண்ணன் மற்றும் குக்கூ நண்பர்கள்  கொடுத்த அரவணைப்பிற்கும் மற்றும் இத்தனை மனிதர்களின் நம்பிக்கைக்கும் என்ன செய்யப் போகிறோம் என்று சுழன்று கொண்டிருந்தபோதுதான், நீங்கள் கேட்டது “என்ன சிவா சட்டை நல்லா இருக்கா ”  என்றவுடன் சற்றே திகைத்துப் போனேன். நல்லா இருக்குங்க சார் என்று பிரக்ஞையில்லாமல் என்னுள் இருந்து உடனே வார்த்தை வந்தது.

புதிய முயற்சியினை கையில் எடுத்து பயணிக்கும்போது நிறைய மனவலிமை தேவையாக இருக்கிறது. எதிர்பார்த்தது சரியாக கைவராமல் இருப்பதால் நம்மிடம் பொருள் வாங்கி உபயோகப் படுத்துபவர்களுக்கு எதாவது சிக்கலாகி விடுமோ, நம்மை நம்பி பயணிப்பவர்களுக்கு எதாவது நடந்து விடுமோ, என்றெல்லாம் மனது பயந்து நெருக்கடிகளை கோருகிறது. அப்படியான கட்டத்தில்தான் உங்களின் நம்பிக்கையான சொல் கிடைக்கிறது. இப்படியான தருணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கும் எங்களுடைய நண்பர்களுக்கும் உங்களிடம் இருந்தோ அல்லது உங்களது எழுத்துக்களில் இருந்தோ  சொல் கிடைத்துவிடுகிறது.

அன்று ரிச்சர்டு ஆசிரியரிடம் கிடைத்த அதே நம்பிக்கை நீங்கள் அணிந்துகொண்டபோது உணர்ந்தேன். மொழி, இலக்கியம், பண்பாடு,  பொருளாதாரம் எல்லாவற்றையும் தாண்டி தாழ்வுணர்ச்சியில் இருக்கும் ஒரு மனதிற்கு தக்க தருணத்தில் கிடைக்கும் நம்பிக்கையின் சொல் ஒன்றே ஒட்டுமொத்த வாழ்வாக அமையும் என்று நம்புகிறேன்.

மானசீகமாக ஏற்ற குருவிடம் இருந்து தன் செயலை அங்கீகரிக்கும் ஒரு சொல் அல்லது ஒரு சிறிய செயல் அமைந்தால் அவனுக்கு வேறு எதுவும் தேவை இருக்காது. அதுபோல்தான் இருக்கிறது அன்றில் இருந்து. அதைவிட ஆங்கில புத்தாண்டு அன்று நீங்கள் அணிந்திருந்ததை பார்த்தது, இந்த ஆண்டின் தொடக்கத்திற்கு எனக்கும் எங்களது பயணத்திற்கும் கிடைத்த ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

விஷ்ணுபுரம் நிகழ்வு முடிந்து எல்லோரும் நிறைவுடன் வீடு திரும்பினோம். சென்ற ஆண்டை காட்டிலும் எல்லா நண்பர்களின் மனதிலும் நிறைவு வியாபித்திருந்தது. நிறைய புதிய படைப்பாளிகளை பார்த்ததும் அவர்களிடம் உரையாடியதும் அவர்களின் சொல்லை உள்வாங்கியதும் எனக்குள் தேய்ந்து கொண்டிருந்த வாசிப்பையும் இலக்கியத்தையும்  உயிர்ப்பித்திருக்கிறது.

இத்தருணத்தை பரிசளித்த உங்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் மற்றும் குக்கூ சொந்தங்களுக்கும் வாழ்வின் என்றென்றைக்குமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பும்… பிரார்த்தனைகளும்…

சிவகுருநாதன்.சி

www.nurpu.in

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்

முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா

அபி -ஆவணப்படம்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39
அடுத்த கட்டுரைவிழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்