விழா பதிவு: கொள்ளு நதீம்

அன்பின் ஜெ. அவர்களுக்கு.

வணக்கம்.

விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ள வியாழன் இரவே வந்து சேர்ந்தேன். வெள்ளிக்கிழமை காலை கோவை ரயில்வே ஜங்கஷனில் அரங்கசாமி இரண்டு பேர்களுடன் அபியை வரவேற்க புரொட்டொகால்படி குறித்த நேரத்திற்கு சற்று முன்பே வந்திருந்தார்.

சேலம் கலைக்கல்லூரியில் அபி பணியாற்றியபோது அவரிடம் படித்த (பிரம்மராஜன், சிவக்குமார் போன்றவர்களில்) உத்தமபாளையம் சீனிவாசனும் ஒருவர். கூட்டுறவுத்துறையில் ஆடிட்டராக இருந்து ஓய்வு பெற்ற சீனிவாசன் அபியை 55 ஆண்டுகளாக பின் தொடர்ந்து வருபவர். ”அந்தர நடை” ஆவணப்படத்திலும் மின்னலாக வந்துபோகும் குரு – சீடர் மரபின் தொடர்ச்சி அவர். அரை நூற்றாண்டுகள் என்பது மனித ஆயுளில் முழு தலைமுறைக் காலத்துக்கும் அதிகமல்லவா?

 “எத்தனை, எத்தனை குருமார்கள்! எத்தனை ஞான பாடங்கள்! எவ்வளவு சிஷ்யர்கள்! எத்துணை தரிசனங்கள்! விஷ்ணுபுரம் மூச்சு முட்டச் செய்கிறது. கூடவே குரு சிஷ்ய உறவின் எல்லா சாத்தியங்களையும் காட்டிச் செல்கிறது. ஒரு வகையில் சொல்வதென்றால் மொத்த விஷ்ணுபுரமுமே குரு, சிஷ்ய சம்வாதம்தான்” என்பார் ராஜகோபாலன் ஜானகிராமன். அதன் நேர்ப்பொருள் அபி – சீனிவாசன் உறவுமுறை.

தன் கணவருடன் விழாவிற்கு வந்திருந்த பேராசிரியை பாக்கியவதி அபியை அப்பா என்று வாய் நிறைய அழைத்துக் கொண்டிருந்தார். Frans Eemil Sillanpää (1888 – 1964)வுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றுத்தந்த ”மீனும் பண் பாடும்” என்கிற நாவல், சபா நக்வியின் In Good Faith: A Journey in Search of an Unknown India, முன்னாள் மத்திய அமைச்சர் Indira Gandhi: A Life in Nature, நூலின் மொழிபெயர்ப்பு இந்த ஜனவரி சென்னைப் புத்தக காட்சியில் வெளிவர இருக்கிறது, இவற்றை மொழிபெயர்த்த முடவன்குட்டியும் அபிக்காக பெங்களூரிலிருந்து வந்திருந்தார். BSNL-ன் முன்னாள் ஊழியரான இவரை தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

புவியரசு என்னப்பா என்று அலைபேசியில் அழைத்தபோது அபியுடன் அவருக்கிருக்கும் நெருக்கம் புரிந்தது. தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்முகம் சுசிலா அம்மையாரையும், மலேசிய குருபீடம் பிரம்மானந்த சுவாமியையும் விழாவில் கண்டு வணங்கினேன். ஓய்வு பெற்ற மூப்பு நிலையில், பயண அசௌகரியங்களை மீறி ஒரு கலைஞனுக்கான கொண்டாட்டத்தில் பங்கெடுக்கவே இவர்கள் வந்து சேர்கிறார்கள். இலக்கியவாதியை அதன் பெறுமதிக்காக கௌரவிக்கப்படுவதில் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்களென்றே நம்புகிறேன்.

வைகறையில் எழுந்துவிடும் பழக்கமுடைய அபி, அவ்வப்போது அலைபேசியில் அழைப்பார். காலை 5 மணிக்கு அவருடன் பேசிய பொழுதுகளே என்னளவில் நிறைய உள்ளன. “நகலிசைக் கலைஞன்” ஜான் சுந்தரின் ‘அதிகாலை நேரம் ஸுபுஹுக்கு பின்னே, அண்ணல் நபி வரும்போது…’ பாடல் அனைவரையும் உள்ளடக்கிய நெடும் பயணத்தை காட்டுவதாக இருந்தது. விழா முடிந்து வீடு போய் சேர்ந்தபின் இலக்கிய வம்பில் ஈடுபடும் சில தோழர்(?)கள் இதொரு இடஒதுக்கீடு என்று கூறியபோது இருக்கட்டுமே, அதனாலென்ன? இதுவரை விருதாளர்கள் அனைவரும் ஆண்களே. பெண் படைப்பாளிகள், திருநங்கை, திருநம்பி யாரேனும் தகுதியானவர்களாக இருந்தால் அவர்களையும் விஷ்ணுபுரம் கௌரவிக்கும் என்று பதிலளித்தேன்.

கிறிஸ்தவர்களின் Sunday Congregational church போல வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பள்ளிவாசலுக்கு போகும் வழக்கம் அபிக்கு உள்ளதைத் தவிர மத அபிமானம் அவரளவில் அகவயமானதே. பொதுவெளியில் தன் மதத்தை, இறைவனை, என்றைக்கும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.

வளைகுடா அரபு நாடொன்றில் முழு வனவாச காலம் பணியாற்றியவன் என்கிற முறையில் அங்கிருந்த மலையாள சுஹுர்த்துகளின் அறைகளில் கே.ஜி.சங்கரன்பிள்ளையின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. அக்மார்க் நக்சலாக இருந்தபோதிலும் இங்கு நம்மூர் வானம்பாடிகளிடம் காணப்படாத ஏதோவொரு இலக்கியத்தன்மையே விஷ்ணுபுரத்தில் சிறப்பு அழைப்பாளராக வர வைத்திருக்கிறது என்று எனக்குத் தெரிந்த மலையாளத்தில் சொன்னேன், நல்லவேளை இன்குலாப் இங்கில்லை என்று புரபசொர் சகா சத்தம் போட்டு சிரித்தார்.

ஜெயமோகன்தான் என்னை அறிந்த முதல் தமிழ்நாட்டுக்காரன் என்று நினைத்தேன், என்னை உனக்கு எப்பொழுதிருந்து தெரியுமென்று கேட்டார். 97 என்றேன், 22 கொல்லங்களாயிட்றெ என்றார். குறிஞ்சிவேலனின் “திசையெட்டும்”, கோணங்கியின் “கல்குதிரை”, வழியாக நாம் தமிழில் படித்து வருவதை அவரிடம் நினைவுகூர்ந்தேன்.

 “பெரும்பாலான எழுத்தாளர்கள் தன்னை வரவேற்பவர் தன்னை வாசித்திருக்கிறாரா என்பதையே முதலில் கவனிப்பார்கள்.” ; “இங்கேதான் அவர்கள் தங்கள் மிகச்சிறந்த வாசகர்களை, மிக அதிகமான வாசகர்களை சந்தித்திருக்கிறார்கள். தனக்கு வாசகர்கள் இருப்பதே இங்குவந்துதான் தெரிந்தது என்றுகூட எழுதியிருக்கிறார்கள்.” ; “இந்தியாவின் மெய்யான இலக்கியவாசகர்கள் வட்டார இலக்கியச்சூழலிலேயே இருக்கிறார்கள்” என்று தாங்கள் எழுதியிருப்பதே சத்தியமான வார்த்தைகள்.

நாடு திரும்பிய பிறகு இனி எஞ்சிய வாழ்க்கை வாசிப்புக்கு மட்டுமேயென தேர்ந்துகொண்ட பின்பு சென்னையிலும் பிற ஊர்களிலும் இலக்கிய கூட்டங்கள் அரசியல்சாய்வுடன் கேட்க கிடைப்பது அயர்ச்சியைத் தருகிறது. விஷ்ணுபுரத்தில் நூறு சதவிகிதம் இலக்கியம் மட்டுமே பேசப்பட்டது, அந்தவகையில் அது எனக்கு அணுக்கமானதும்கூட.

தமிழ்ப் புத்தாண்டில் 1000 மணிநேர வாசிப்பு சவால் போட்டி அறிவிக்கப்பட்டபோது அதில் வெளிப்படையாக பதிவு செய்துகொள்ளவில்லை. ஒரு வரிக் கவிதையை / வர்ணனையை கேட்ட நொடியில் ஆசிரியரின் பெயரை சொல்லும் வாசகர்களைக் கொண்ட விஷ்ணுபுர இளம் வாசகர்களுடன் ‘அங்கிள்’ ஆகிவிட்ட நம்மால் மூச்சுமுட்ட ஓடமுடியாத இயலாமைதான் காரணம். வெற்றிகரமாக செப்டம்பரிலேயே சுந்தரமூர்த்தி கடந்து விட்டிருந்தாலும் அதை டிசம்பர் வரை நீட்டித்து இணை ஓட்டத்தை ரிங்குக்கு வெளியே ஓடி நிறைவு செய்தேன்.

அந்த வகையில் சத்தியமூர்த்தியின் ‘தாகங்கொண்ட மீனொன்று’ தந்த பரவசத்தில் மஸ்னவி பற்றி 1972-ல் வானொலியில் பேசியதாக சொன்ன அபியை நச்சரித்து அந்த கட்டுரையை தேடிப்பிடித்து வாங்கினேன். அபியை இன்னும் அதிகம் புரிந்துகொள்ள உதவக்கூடும் என்று அபிக்கு பிடித்தமான லா.ச.ரா., மௌனி, பிச்சமூர்த்தி கலீல் ஜிப்ரான் படைப்புகளை மறுவாசிப்பு செய்தேன். படிக்கணும், படிக்கணும் என்று தள்ளிப்போட்டு வந்த மௌலானா ரூமியின் 29000 ஈரடி செய்யுளின் தமிழ் மொழிபெயர்ப்பு முழு தொகுப்பு மொத்தம் ஐயாயிரம் பக்கங்களை ஆசை தீர படித்து முடித்தேன்.

காலை அமர்வில் வெளியிடப்பட்ட ”பலாக்கொட்டை தத்துவம்” விழா முடியும்வரை வாசலிலிருந்த கடையில் கிடைக்கவேயில்லை. அபியைப் பற்றிய ’இரவிலி நெடுயுகம்’ நூலை அவசியம் கொண்டு வரவேண்டுமென்று யாழன் ஆதி கேட்டுகொண்டதை அரங்கசாமியிடம் சுட்டிக்காட்டியபோது ஈரோடு பாரதி புத்தகாலய கடையில் விற்பனைக்கு வைத்தார். கே.ஜி.சங்கரன்பிள்ளை நூலை எப்படி பெறுவது என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் ஜனவரி 10-ந்தேதி நூலரங்கில் கிடைக்குமாறு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அபி 2000-வது ஆண்டில் ஓய்வு பெற்றவர். அனேகமாக அவரின் பேரப்பிள்ளைகளில் எவரும் அபி பணிக்காக வெளியே போவதை பார்க்காமல் வளர்ந்தவர்கள். “அந்தரநடை” படத்தில் வரும் சிறுவர்களில் அவரின் பேரனும் ஒருவன். பதின்ம வயதிலுள்ள அந்த குழந்தை நம்ம அப்பா (அதாவது தாத்தா) இவ்வளவு நேரம் மேடையில் பேசக்கூடியவரா என்று வியந்தான்.

தமிழக முஸ்லிம்களில் வடமாவட்டத்துக்காரர்கள் உருது மொழிக்கு மாற்றப்பட்டவர்கள். வாழிடச் சூழலால் அந்த மொழி எனக்கு அத்துபடி. ”கர் கா பீர் மஸ்கரா” என்று அங்கு புழங்கும் ஒரு சொலவடையுண்டு. ‘ஊர் மெச்சும் சூஃபி குருவுக்கு குடும்பத்திற்குள் எந்த மதிப்பும் இருப்பதில்லை’ என்பதாக அதை பொருள் கொள்ளலாம். அபியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான ரவி சுப்ரமணியன் சொன்னதைப் போல “அபி”யை குறிப்புணர்த்தும் வழிகாட்டிப் பலகையாக இந்த நிகழ்ச்சி அமைந்து போனது. அபியின் உயரத்தை தமிழ் இலக்கியத்திற்கு மறு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது விஷ்ணுபுரம்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் தனியொரு ஆளாக விஷ்ணுபுர விருது விழாவுக்கு வந்திருந்தபோது உள்ளதிலேயே நெற்றி நிறைய விபூதியும், உச்சிக் குடுமியுடன் இருந்த ஒருவரிடம் அருகில் ஏதும் பள்ளிவாசல் உள்ளதா என்று வழி கேட்டேன். (குசும்பெல்லாம் கிடையாது, தற்செயலாக – மற்றபடி இவர் கடலூர் சீனு கிடையாது) சற்று நில்லுங்க பாய் என்று பூக்கடை பள்ளிவாசலில் தன் பைக்கில் கொண்டு வந்து விட்டுபோனார். சக குடிமகனுடைய பெருந்தன்மையின் மீது எனக்கு பெருத்த நம்பிக்கையுள்ளது. இந்த ஆண்டு காரில் எங்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று மீண்டும் மண்டபத்தில் இறக்கிவிட்ட சுஷில்குமார் பாரதிக்கும், விஷ்ணுபுரம் குழுவிற்கும் அல்லாஹ் எல்லா வளத்தையும் தரட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

கொள்ளு நதீம்

***

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 38
அடுத்த கட்டுரைபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை