உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)
பெயர் சுசித்ரா. அப்பா பெயர் எம். ராமச்சந்திரன், வங்கியில் வேலையாக இருந்தார். அம்மா ஜானகி, பள்ளி ஆசிரியை. தற்போது இருவரும் ஓய்வுபெற்றுவிட்டார்கள்.
அப்பா, அம்மா இருவரும் பூர்வீகமாக மதுரை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நான் பிறந்தது சென்னையில் என்றாலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் மேற்கொண்டது மதுரையில். 2009-ல் எஞ்சினியரிங் படிப்பு முடித்ததும் முழு உதவித்தொகையுடன் அமெரிக்கா பிட்ஸ்பர்கில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆய்வுமேற்கொள்ள வாய்ப்புக்கிடைத்தது.
2014-ல் முனைவர் ஆய்வேடை சமர்பித்தேன், அதே வருடம் திருமணமும் ஆனது. கணவர் பெயர் வருண். கல்லூரியில் ஒன்றாக படித்தவர். அறிவியல் ஆய்வாளர். இசைக்கலை பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வருகிறார்.
தற்போது ஆய்வுப்பணி நிமித்தமாக சுவிட்சர்லாந்து நாட்டின் பாசல் என்ற நகரில் வசித்துவருகிறோம்.
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
அம்மா ஆங்கில இலக்கியம் படித்தவர். நன்றாக கதை சொல்வார். ஆகவே ஐந்து-ஆறு வயதிலேயே பல செவ்வியல் இலக்கிய ஆக்கங்களை வாய்மொழிக்கதையாக கேட்கும் வாய்ப்பு அமைந்தது.
அமர் சித்ர கதா மூலம் கிடைத்த புராண, இதிகாச, ஜாதக, பஞ்சதந்திர கதைகள், கிரேக்க தொன்மங்கள், ஐரோப்பிய தேவதைக்கதைகள், மாலுமிக்கதைகள் என்று என் குழந்தைக்கால வாசிப்பு மொத்தமும் மனதில் பளீர் வண்ணக் கனவுகளை விட்டுச்சென்ற கதைகளால் நிறம்பியிருந்தது.
ஆரம்ப வாசிப்பு எல்லாமே ஆங்கிலத்தில்தான். பத்து-பன்னிரெண்டு வயது முதல் பிரிட்டிஷ் விக்டோரிய யுக நாவல்களை படிக்கத்தொடங்கினேன். பள்ளிக்காலத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகக்களை மூலத்திலிருந்து சுருக்கி எழுதி மேடையில் நிகழ்த்தியிருக்கிறேன்.
பள்ளியில் தமிழை பாடமாக எடுத்து படிக்கவில்லை. பத்தாம் வகுப்பு விடுமுறையில் தமிழில் வாசிக்கத்தொடங்கினேன். தமிழில் படித்த முதல் இலக்கிய ஆக்கம் அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு. தமிழிசை மூலம் பாரதியை அறிமுகம் செய்துகொண்டேன். ஜெயகாந்தனை வாசித்தேன். ஆனால் கல்லூரி நாட்களில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் வாசித்தேன் – தாகூர், தஸ்தாயேவ்ஸ்கி, ஹெர்மான் ஹெஸ்ஸி, காஃப்கா முதலியோர்.
கல்லூரி படிப்பை முடித்து அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில் தான்,இந்திய ஆங்கில இலக்கியத்தின் வழி உருவான நிறைவின்மை வழியாக தமிழ் மற்றும் இந்திய இலக்கியங்களை விரிவாக வாசிக்க ஆரம்பித்தேன் – முதலில் மொழிபெயர்ப்புகள் மூலமாக, பின் நேரடி வாசிப்பு வழியாக.
2014-ல் ஜெ தளத்தை வாசிக்கத்தொடங்கினேன், அதன் வழியே இலக்கியத் தொடர்ச்சிகளை பற்றிய அறிமுகம் கிடைத்தது. வாசிப்பை செழுமைபடுத்த உதவியது. மரபிலக்கியம் வாசிக்கும் பழக்கம் உருவானது. ரசனை நுண்மை கூடியது.
தற்போது இலக்கியத்தின் சகோதரக்கலைகளுடனான பரிச்சயம் ஏற்பட்டுள்ளது. கலைநோக்கை பற்றிய கருத்துகளை உருவாக்கிக்கொள்ள உதவுகிறது.
என்னுடைய இலக்கிய ஆதர்சங்கள் பெரும்பாலும் செவ்வியல் ஆக்கக்காரர்கள். பொதுவாக இலட்சியவாதிகளையும் நல்ல கதைசொல்லிகளையும் பிடிக்கும்.
உலக இலக்கிய பரப்பில் – ஹோமர், விக்டர் ஹியூகோ, தால்ஸ்தாய், ஜார்ஜ் எலியட், எமெர்சன், எமிலி டிக்கின்சன், ஷேக்ஸ்பியர்
இந்திய இலக்கியத்தில் – ரபீந்திரநாத் தாகூர், சிவராம காரந்த், வைக்கம் முகம்மது பஷீர்.
தமிழில் – இளங்கோ, ஆண்டாள், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா, ஜெயமோகன்
சிறுகதைகளை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ன? இதை உங்கள் முதன்மை வடிவமாக தேர்ந்தது ஏன்?
தற்போது எனக்கு சிறுகதை எழுதுவதில் உள்ள சவால்கள் –
- சிறுகதைக்கான பொருத்தமான கருக்களை தேர்ந்தெடுப்பது. சில சமயங்களில் நல்ல கதைக்கருவாக இருந்தாலும் ஒற்றைப்புள்ளியில் திறண்டு வருவதில்லை. ஆகவே கூர்மை மழுங்குகிறது. கதையை எழுதி முடிக்கும்போதே இந்த பிரச்சனை தெரிகிறது. இப்போது தொடர்ந்து எழுதுகையில் இயல்பாகவே கரு தோன்றும் தருணத்திலேயே அதை குறைத்துச் சுருக்கி ஒற்றைப்புள்ளியாக மாற்றி மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை உருவாகியுள்ளது. அதைநோக்கிச்செல்கையில் கதை நேராகிறது.
- ஒருமை நிகழாதது. கற்பனைக்கு லாடம் போடுவது எனக்கு சவாலாக உள்ளது. நல்ல வடிவத்தை பற்றியான பதிவு தொடர்ந்து கதைகளை வாசிக்கையில் மனதில் திரள இந்த பிரச்சனை மறையும் என்று நினைக்கிறேன்.
- இன்றைய சிறுகதை ஒரு பக்கம் படிம அடுக்குகளாக கவிதை பக்கம் நகர்கிறது. மறுபக்கம் நாவல்தன்மை கொண்ட கதைகளும் எழுதப்படுகின்றன. ஆனால் சிறுகதையின் மைய அடையாளமான கொழுப்பற ஒற்றை உடல் – இறுதித் திருப்பம் என்றும் பேணப்படுவது. இவற்றை சிதறல் இல்லாமல் நிகழ்த்துவது ஒரு சவால். எழுத்து வடிவங்களின் பயிற்சிக்காகவே சிறுகதை எழுதத்தொடங்கினேன். அதை என் முதன்மை வடிவமாக கருதவில்லை.
ஒளி தொகுப்பில் உள்ள கதைகளை ஏதேனும் ஒரு புள்ளியில் தொகுத்து கூற இயலுமா”?
அப்படி ஒரு தொகுப்புப்புள்ளியை எதிர்நோக்கி எழுதவில்லை என்றாலும், ஒளி தொகுப்பில் உள்ள கதைகளில் இருப்பின் அடிப்படை துக்கத்தை மீறிய அர்த்தத்துக்கான – ஒளிக்கான – தேடல் நிகழ்ந்துள்ளதாக நினைக்கிறேன்.
எதற்காக எழுதுகிறீர்கள்?
எழுதும்போது விஷயங்கள் தெளிவாகின்றன. அந்தத் தெளிவுக்காக எழுதுகிறேன். புனைவு எழுதும் போது வேறு வாழ்க்கைகள் வாழ்கிறோம். என் உலகம் என்னை மீறி விரிவடைவதாக உணர்கிறேன். அந்த பறத்தலுக்காக எழுதுகிறேன். என் கதைகளில் வரும் மனிதர்கள் அனைவர் மீதும் நான் பெருத்த அன்பு கொண்டிருக்கிறேன் – இதை கதை எழுதம்போது உணர்கிறேன். வாழ்க்கையில் அத்தனை அன்பை வெளிப்படுத்த வாய்ப்புகள் கம்மி. கதையில் சுதந்திரமாக அன்பு பாராட்டலாம். ஆகவே அதற்காக எழுதுகிறேன். அப்புறம் பள்ளிநாட்களிலிருந்து சிறுவர்க்கூட்டங்களை சுற்றி வைத்துக்கொண்டு கதை சொல்லும் பழக்கம் இருந்தது. என்கதையில் அவர்களை கட்டிவைத்துக்கொள்வதில் பெரிய இன்பம் கண்டிருக்கிறேன். அந்த அல்ப சுகத்தின் ஆசையிலும் எழுதுகிறேன்.
அடுத்து என்ன?
அடுத்த சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். பிறகு ஒரு நாவல்.
***
===============================================================================
நூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமி | இன்றைய காந்திகள் |
பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]
பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
விஜயராகவன் | தேரையின் வாய் |
பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்
தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
நாகப்பிரகாஷ் |
எரி |
பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்
நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை
ஸ்ரீனிவாசன் |
கூண்டுக்குள் பெண்கள் |
பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
நரேந்திரன் |
இந்தக்கதையை சரியாகச் சொல்வோம் |
பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்
நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
சா.ராம்குமார் |
அகதி |
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
சுசித்ரா |
ஒளி |
பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா
பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
காளிப்ரசாத் |
தம்மம் தந்தவன் |
பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்
கிரிதரன் ராஜகோபாலன் |
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை |
பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ராஜகோபாலன் | ஆட்டத்தின் ஐந்து விதிகள் |