உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)?
திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சொந்த ஊர். அப்பா ஜானகிராமன், அம்மா நாகலட்சுமி. இளங்கலை வணிகவியலும், வணிக மேலாண்மையில் முதுநிலையும் கற்றேன். காப்பீட்டுத் துறையில் பயிற்சிப் பணியில் இருபது ஆண்டுகள் அனுபவம். தற்போது மனித வளப் பயிற்சி & மேம்பாட்டு ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கி நடத்து வருகிறேன். மனைவி சுபாஷிணி டாடா நிறுவனத்தில் பணிபுரிகிறார். மகன் விஸ்வஜித் நான்காம் வகுப்பில் படிக்கிறார்.
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
மூன்றாம் வகுப்பு கோடை விடுமுறையில் குமுதம் ஒருபக்கக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். நூலகத்தில் திறக்கும் நேரம் தொட்டு முடியும் நேரம் வரை இருப்பது வாடிக்கையானது. ஏழாண்டுகளில் இரண்டு நூலகர்களைப் பார்த்தேன். இருவருமே நான் விரும்பும் புத்தகங்களை எடுத்துத் தருபவர்களாக இருந்தனர். வாண்டுமாமா என் ஆரம்பகால ஆதர்சங்களில் ஒருவர். அவர் வழியே லயன்-முத்து காமிக்ஸ், முல்லை தங்கராசு, தமிழ்வாணன், ராஜேஷ்குமார், சுபா, கல்கி, பாலகுமாரன் என வந்தபோது நூலக அலமாரியில் ஒற்றன் எனும் புத்தகத்தைப் பார்த்தேன். சாகச நாவல் என நினைத்து நான் எடுத்துப் படித்த அப்புத்தகத்தின் வழியே அசோகமித்திரன் என்னை நவீன இலக்கியத்திற்குள் அழைத்து வந்தார். இன்றுவரை வாசித்துத் தீரவில்லை. ஆதர்சங்கள் என்றால் நவீன தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன், நாஞ்சில் நாடன், கி.ராஜநாராயணன், ஜெயமோகன் ஆகியோரைச் சொல்வேன்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் எனும் இந்த தொடர் கட்டுரைக்கான விதை எது?
காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்ட ஆரம்பகாலங்களில் நான் பணிக்குச் சேர்ந்தேன். முன்னுதாரணங்களும், வழிமுறைகளும் அற்ற சூழலில் தொடர்ந்து கற்றும், கற்பித்தும் வளர வேண்டிய நாட்களில் இருந்தேன். ஒவ்வொரு முறையும் கற்பது என் கற்பித்தலை பாதித்தபடியே இருந்தது. எட்டு ஆண்டுகளில் கற்றவற்றை செறிவு செய்து நானே உருவாக்கிக் கொண்ட பயிற்சி முறை நிறுவனங்களில் தனிச்சிறப்புடன் பாராட்டப்பட்டது. மிக முக்கியமாக பங்குபெற்றோர் இதிலிருந்து பயனடைந்த அனுபவங்களைக் கூறுவது இன்றுவரை தொடர்கிறது. இப்பயிற்சி என்னால் வாய்மொழியாக மட்டுமே நடத்தப்படுவது. கையேடு எதுவும் நான் கொடுப்பதில்லை.
என்னிடம் பத்து ஆண்டுகளுக்கு முன் பயிற்சி பெற்ற ஒரு மேலாளர் பயிற்சியின் போது தான் குறித்து வைத்திருந்த குறிப்பேட்டை தொலைத்து விட்டதாகவும், சிறு குறிப்புகள் எனும் அளவிலாவது இப்பயிற்சி குறித்த கையேட்டை தரமுடியுமா எனக் கேட்டார். என்னிடம் இருக்காது என தனக்குத் தெரியும் என்றாலும் இத்தனை ஆண்டுகளில் அப்படி ஒன்றை உருவாக்கி இருப்பேன் என்று நம்பியே கேட்டதாகவும் சொன்னார். அதைக் குறித்து யோசிக்கும் அதே நேரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் காப்பீடு குறித்த ஓர் உரையாடலில் நீண்ட விளக்கம் ஒன்றை வைத்தேன். அதை வாசித்திருந்த நண்பர் கிரிதரன் ராஜகோபாலன் நேரில் சந்திக்கையில் பேச்சு என் பயிற்சி முறை தொடர்பாக வந்தது. அதன் முடிவில் கிரிதரன் கேட்டுக்கொண்டதன் பேரில் இத்தொடரை சொல்வனம் இணைய இதழில் எழுதினேன்.
பிற ஆளுமை வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் புத்தகங்களில் இருந்து இந்த நூல் எவ்வகையில் தனித்துவமானது?
தமிழில் வெளிவந்துள்ள ஆளுமை வளர்ச்சி நூல்களை பொதுவாக இரண்டு விதங்களில் பிரிக்கலாம். முதலாவது ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்படுபவை. இவை சில பொது அம்சங்களைக் கொண்டிருந்தாலும் அதில் வரும் சூழல்களும், உரையாடல்களும் அந்த மண்ணின் பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்து வருபவை. பலாவில் சுளை எடுப்பது போல புரிதல்களைக் கொள்ள வேண்டியிருக்கும்.
இரண்டாவது, தமிழில் நேரடியாக வரும் ஆளுமை வளர்ச்சி நூல்கள். இவை பெருமளவு மேற்கோள்களாலும், “அறிஞர்கள் வாழ்விலே ஒருமுறை. …… “ என்பனவற்றாலும் நிரப்பப்படும் அளவில்தான் அமைந்திருக்கின்றன. தமிழில் ஆளுமை வளர்ச்சி என்பதைப் போல தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சொற்கள் மிகக் குறைவே. உடல் தோற்றம், மிடுக்கு, ஆடை அணிமுறைகள், உரையாடல் முறைகள், உத்வேகமூட்டல், எழுச்சியூட்டல் போன்ற அனைத்தையும் ஆளுமை வளர்ச்சி என்றே இங்கு முன்வைக்கிறார்கள். கற்றுச் செரித்து பயன்படுத்தி பண்பட்டு மேலே செல்லல் எனும் அளவில் பேசுபொருளைக் கொண்ட ஆளுமை வளர்ச்சிப் புத்தகங்கள் தமிழில் இல்லை. ஒரு மனிதரை விதந்தோதி நூலாக்கி ஆளுமைவளர்ச்சிப் புத்தகம் என்று சொல்லும் அபத்தங்களுக்கும் குறைவில்லை.
தொழில் முனைவோர்களின் அனுபவங்கள் புத்தகங்கள் ஆவதில் உள்ள சவால் என்பது நீர்பாத்திரத்தின் விளிம்பில் உப்புக்கட்டியை வைத்து தூக்கிப் போவது போலத்தான். அவர்களது அனுபவங்கள் வழியே உருவான கற்றல்களுக்குள் போவதற்குப் பதில் சுயசரிதை எனும் இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.
மேலே சொன்னவற்றை மனதில் கொண்டே இப்புத்தகம் எழுதப்பட்டது. அனுபவங்கள், அவை உருவாக்கிய படிப்பினைகள், அவற்றிலிருந்து உருவான கற்றல்கள், கற்றவற்றைப் பயன்பாட்டில் கொணர்கையில் உருவாகும் இடர்கள் மற்றும் சவால்கள், அவற்றைப் புரிந்து கொண்ட விதம் என்பதே இப்புத்தகத்தின் அமைப்பு முறை. கூடவே, ஒரு பயிற்சிக் கையேடு போல் அல்லாமல் புனைவின் தன்மையுடன் கூடிய எழுத்தோட்டம் ஆகியவை இதை வேறுபடுத்திக் காட்டுவதாக எண்ணுகிறேன்.
இந்தத் தொகுப்பின் சமகால முக்கியத்துவம் என்ன?
கணிணித் துறை தவிர பிற துறைகளில் தொழில்நுட்பம், திறன் சார் நுட்பங்கள் குறித்த புத்தகங்கள் தமிழில் நேரடியாக எழுதப்படுவதில்லை. கணிணித் துறையில் கூட மிகக் குறைவான நேரடி தமிழ் புத்தகங்கள் வெளிவருவதும் காம்கேர் புவனேஸ்வரி போன்ற மிகக்குறைந்த அளவிலான தொழில்நுட்ப எழுத்தாளர்களின் பிடிவாதமான தன்னார்வத்தால் மட்டுமே சாத்தியமாகிறது.
தொழில்நுட்பத்தைப் போலவே செயல்பாட்டு நுட்பம் எனும் தளத்தில் தமிழில் வெளிவந்த நூல்களின் எண்ணிக்கை ஒரு கைவிரல்களை விடக் குறைவாகத்தான் இருக்கும். பொதுவாக செயல்பாட்டு நுட்பம் குறித்த நூல்கள் கல்லூரி பாடத்திட்டத்துக்கு ஏற்ப வெளியிடப்படும் உரைநூல்களை சற்று ஆடைமாற்றி அனுப்பிவைத்தது போல இருக்கும். பலநேரங்களில் அவற்றை வெளியிடுவது கல்லூரி பேராசிரியர்களே என்பதும் காரணமாக இருக்கலாம்.
செயல்பாட்டு நுட்பம் என்பதும் கற்க வேண்டிய ஒரு பயன்பாட்டறிவுத் துறையே எனும் விழிப்புணர்வு குறைவாகத்தான் உள்ளது. விற்பனை, தொடர்பு முறைகள், உரையாடல் முறைகள், சமரசப் பேசுமுறைகள், மேடை உரை என செயல்பாட்டு நுட்பம் தனிமனிதச் செயல்பாடுகளில் தொடங்கி நிர்வாக மேலாண்மை, மனித வள மேலாண்மை, யுக்திகள் வகுத்தல், மாற்றங்களை மேலாண்மை செய்தல் என நிறுவன ரீதியில் விரியக்கூடிய பெரும் தளம்.
அத்தகைய செயல்பாட்டு நுட்பங்களில் முக்கியமானது விற்பனைத் திறன். பணி அனுபவத்தில் வட இந்திய நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு, தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் விற்பனைத் திறனில் கெட்டிக்காரர்கள் என. ஆனால் அது ஒரு பயிலப்பட சாத்தியமுள்ள துறையாக நேரடியாக தமிழில் நூலாகவில்லை. அவ்வகையில் இப்புத்தகம் இன்று ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே.
அடுத்து என்ன?
இதுவரை எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை ஒரு தொகுப்பாக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டக் குழுவால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் குறித்து ஆற்றிய உரையினை நூலாக ஆக்கும் பணியில் இருக்கிறேன். சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், நாவலும் இவ்வாண்டுக்குள் எழுதி விடும் முயற்சியில் இருக்கிறேன்.
***
=============================================================================================================
நூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமி | இன்றைய காந்திகள் |
பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]
பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
விஜயராகவன் | தேரையின் வாய் |
பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்
தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
நாகப்பிரகாஷ் |
எரி |
பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்
நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை
ஸ்ரீனிவாசன் |
கூண்டுக்குள் பெண்கள் |
பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
நரேந்திரன் |
இந்தக்கதையை சரியாகச் சொல்வோம் |
பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்
நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
சா.ராம்குமார் |
அகதி |
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
சுசித்ரா |
ஒளி |
பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா
பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
காளிப்ரசாத் |
தம்மம் தந்தவன் |
பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்
கிரிதரன் ராஜகோபாலன் |
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை |
பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ராஜகோபாலன் | ஆட்டத்தின் ஐந்து விதிகள் |
பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்
ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை
=========================================================================================================