ஆசிரியருக்கு,
“மயில் கழுத்து” ஒரு அமானுஷ்ய தன்மை உடைய தலைப்பு.இது வடிவத்தையும், மென்மையையும் குறிக்கிறது என முதலில் தோன்றியது . சந்திராவின் புடவை நிறத்திற்கு நகரும்போது “அட” நிறத்தை குறிக்கிறது என்ற மேல் அதிர்ச்சி. நீலமா பச்சையா என அடையாளம் காண இயலாத மினுக்கும் மயில் கழுத்து. ( டைமண்ட்னாகூட நீலம்தான். நீலத்திலே என்னமோ ஒரு மர்மம் இருந்துண்டே இருக்குன்னு சொல்லுவா. நீலத்த கொஞ்ச நேரம் பாத்துண்டே இருந்தா மனசு மயக்கம் அடைஞ்சிரும்னு ஒருவாட்டி சொன்னா). ஏனோ, எதோ ஒரு இஸ்லாமிய வாசனைத் திரவத்தின் வாசனையும் உடன் மனதுக்குள் மணக்கிறது. ஒரு பூடக அமானுஷ்ய சொல் சற்று அச்சுறுத்தும் அம்சத்துடன்.
“ஒரு கரிய பறவையின் குரல்” இது போல் ஒரு அமானுஷ்ய ஒலிப்பை தரும். தொலை தூரத்து இருளில் தென்படா கரும் பறவையின் நெஞ்சை அதிர்ந்து துளைக்கும் திக்கென்ற அமானுஷ்ய ஒலி, அச்சுறுத்துதலுடன் .
பேருந்து பயணத்தின் ஜன்னல் பின் கட்சியில் ராமனின் முகம் எழுந்து வரும் விவரிப்பிலேயே இது ஒரு படைப்பு உச்சத்தை நோக்கி எழும் கதை என்பது தெரிந்து விடுகிறது.( சன்னல்பக்கமிருந்து முகத்தைத் திருப்பி பஸ்சுக்கு வெளியெ ஓடும் வெளிக்காட்சிகளின் ஒளிநிழலாட்டத்தால் காலவெளியில் விரைவதுபோல தோற்றமளித்த முகத்துடன் ராமன் கேட்டார்).
சந்திராவின் அறிமுகமும் சுப்பு ஐயரின் கேலியும் , ஒரு ஆணின் உணர்கைக்கு மட்டுமே புலப்படும் பெண் அனுபவம். பின் ராமன் சந்திராவை பற்றி கூறும் போதும் பெண்ணின் தன்னியல்பும் வீச்சும்.
(உலகத்திலே இருக்கிற எல்லா ஆண்களையும் அப்டித்தான் கவரணும்னு நெனைப்பா. அவளோட மனசு அப்டி. எதுக்குன்னா காந்தம் ஏன் இழுக்குதுன்னு கேக்கிறாப்ல. அதோட நேச்சர் அதானே…’ ‘அது எல்லா பொண்ணுகளிட்டேயும் உண்டு. சின்னப் பொண்கொழந்தைங்க கூட அட்ராக்ட் பண்ண முயற்சிபண்ணும்…..
…..சாதாரணமான பொம்புளைக்குரல். வேணும்னேதான் முதல்ல பேசுறப்ப அப்டி பேசறா’அதே மாதிரித்தான் மச்சத்தையும் பாத்துப் பாத்து அழகா ஆக்கிண்டுடுவோம்)
வாழ்க்கையயும், பெண்களையும் கவனித்து விளங்கி கொள்ள முயல்பவனின் தெளிவின்மை விலகும் இடம் இது. தழல் வெப்பத்தில் குஞ்சென்றும், மூபென்றும் இல்லை.
Masocism, narcissism, incest, pedophilia, necrophilia போன்ற அனைத்தும் மனிதத்தின் ஆதி இயல்பு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் தணிந்த நிலையில் பண்பாட்டு எடையில் அழுந்தி பிதுங்கி எஞ்சும்.விதிவிலக்காக சிலரிடம் விருட்டென மேலெழும் , அதில் மிக சொற்பமாக சிலரிடம் அதன் உச்ச நிலையில் நிரந்தரமாக தங்கும். இங்கு இது தொடர்பில்லை என்றாலும் ஏனோ இது நினைவுக்கு வருகிறது. மயில் கழுத்தின் பூடகம்.
சந்திராவின் பாலு அருகே அமர்வதும் , அந்த தொடுகையும் ஒரு தோலற்ற சதை நுனியின் ஸ்பரிசம். (சந்திரா திரும்பி பாலசுப்ரமணியன் கையை தொட்டு ‘சாப்பிட்டுட்டேளா?’ என்றார். ……..
……..அவளுடைய தொடுகை பாலசுப்ரமணியன் உடலை அதிரச்செய்தது.அவள் தன் கையின் தொடுகையை எடுக்கவேண்டும் என பாலசுப்ரமணியன் தவித்தார். மெல்லத் தன் கையை விலக்கிக்கொள்ள முயன்றார். ஆனால் கையை அசைக்கவே முடியவில்லை.)
கிளைத்து விரியும் அந்த இசை அனுபவம் அப்பாடல்களை அடையாள படுத்தவில்லை என்றாலும் உன்னத அனுபவம். ( ஓடைநீரில் இழையும் நீர்ப்பாம்பு. கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. …..
……இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது). இந்த விவரிப்பும் , உயரமும் என்னுள் தந்திகளின் ஆணியை முறுக்கி , ஒரு கச்சித விடர்ப்பில்,அதன் அதி சத்தியமான துல்லிய பதத்தில் சீரமைத்து, மீட்டு , மீட்டு என ஏங்கி எழுகிறது . இக்கடிதம் எழுதும் இக்கணம் வரை நான் இதே ஸ்ருதியில்.
முதலில் இது ஒரு மேம்பட்ட மானுட அனுபவம் எனத்தோன்றியது , பின்பு அல்ல , இது ஒரு உன்னத இசை அனுபவம் என விளங்கியது, சிறிது தூரத்திற்கு பின் இவை ஏதுமல்ல , இது ஒரு மாபெரும் கலைஞன் மனித ரசனைக்கும் ஏற்புக்கும் அளிக்கும் தனது அதி சிறந்த பரிசு என உணர்கிறேன். (ஒரு சொல்லமுடியாமையை இன்னொரு சொல்லமுடியாமையால் ஈடுகட்டுகிறோம்)
பாத்திரம் நிரம்பி வழிந்து தாளமுடியாமல் பதற்றத்தில் கால்கள் நிலைகொள்ளாமல் தவித்தாலும், “இன்னும், இன்னும் ” என்று ஆயிரம் நாவுகளுடன் , தணியாத தாகத்துடன் ஒரு கலா ரசிகன்.
கங்கை தீரும் வரை தீராது தாகமும்.
கிருஷ்ணன்.