அபி -ஆவணப்படம்
அன்புள்ள ஜெ
கே.பி.வினோத் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அந்தரநடை என்னும் தலைப்பில் தொடங்கி அபியை மிக நெருக்கமாக பின் தொடர்ந்திருக்கிறது ஆவணப்படம். பொதுவாக ஆவணப்படங்கள் எழுத்தாளரை ஒரு மனிதனாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளும். அந்த மனிதனின் ஆசாபாசங்கள், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றையே அவை அதிகமாகப்பேசும். கே.பி.வினோதின் இந்த ஆவணப்படம் அபியை கவிஞராக மட்டுமே கருத்தில் கொள்கிறது. அவரை கவிதை வழியாக மட்டுமே அணுகிச் செல்கிறது. கவிதையை அபியைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்கிறது. அது மிகச்சிறந்த முயற்சி
அபியின் கவிதைகளைச் சொல்லி, அவற்றிலிருந்து அவருடைய கவிதைகளின் தனித்தன்மைகளை அவரும் அவருடைய வாசகர்களும் விமர்சகர்களும் சொல்ல வைத்திருக்கிறார். அவருடைய நண்பர், மாணவர், விமர்சகர், வாசகர் என நான்குநிலைகளில் அந்த எதிர்வினைகள் அமைந்திருக்கின்றன. அபியின் கவிதைகளில் அந்த மைதானம் இடம்பெறுவதை வாசித்தவர்களுக்கு ஆவணப்படத்தில் மைதானம் இடம்பெற்றிருக்கும் விதம் அருமையான ஒரு அனுபவம். அதில் வெயில் விழுந்து கிடப்பதையும் வெயில் மறைவதையும்தான் அபி எழுதியிருக்கிறார். அது ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
இயக்குநர் கே.பி.வினோத், தயாரிப்பாளர் ராஜா சந்திரசேகர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்
எம்.ராஜேந்திரன்
***
அன்புள்ள ஜெ
ஆவணப்படம் சிறப்பாக உள்ளது. கே.பி.வினோதுக்கு பாராட்டுக்களை தெரிவியுங்கள்.
இப்படிப்பட்ட ஆவணப்படத்தில் குறியீடுகளை மிக அமைதியாகப் பயன்படுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் சினிமாவின் பின்னணியில் இந்த நுட்பம் அபூர்வமானது. மழை பெய்துகொண்டிருக்கிறது. ஓடை பெருகிப்பாய்கிறது. ஆனால் அபியின் கவிதை ஓர் இலையில் இருந்து சொட்டும் ஒரு துளி மட்டுமே
மிகப்பொருத்தமான மென்மையான இசை. அந்த டைட்டில் இசை காதிலேயே நிற்கிறது. ராஜன் சோமசுந்தரம் அவர்களுக்கும் பாராட்டுக்கள். தயாரிப்பாளர் ராஜா சந்திரசேகர் அவர்களுக்கும் நன்றி.
ஆர்.ராஜசேகர்
***