பகுதி ஐந்து : விரிசிறகு – 1
நகர்மேல் எழுந்துநின்ற கோட்டை மேலிருந்து சம்வகை சூழ நோக்கிக்கொண்டிருந்தாள். அஸ்தினபுரிக்குள் பாரதவர்ஷம் எங்கணுமிருந்து மக்கள்பெருக்கு வந்து நிறையத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. அனைத்துத் தெருக்களிலும் தலைகள் செறிந்து திரளன்றி பிறிதொன்றும் விழிக்கு தெரியாமலானது. நகரம் ஒரு கொடியென நெளிவதாக, சுனையென அலைகொள்வதாக விழிமயக்கூட்டியது. ஒவ்வொருவரும் அந்நகரை நோக்குவதை விரும்பினர். எங்கேனும் உயர்ந்த இடத்தில் இருந்து அதை நோக்கியவர்கள் மெய்மறந்து விழிகளாகி நெடுநேரம் நின்றிருந்தனர்.
எறும்புக்கூட்டங்கள்போல மக்கள் ஒழுகிக்கொண்டிருந்தனர். ஆயினும் மேலும் மேலுமென உள்ளே வந்து செறிந்துகொண்டிருந்தனர். எவரையும் விலக்குவது இயலாதென்பதை அதற்குள் புரிந்துகொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்தனர், அங்கு வருவதொன்றே வாழ்வின் நோக்கமெனக்கொண்டு ஊர்களிலிருந்து கிளம்பியிருந்தனர். அவர்களை எந்தத் தடையும், எந்த ஆணையும் அஸ்தினபுரியிலிருந்து விலக்க இயலாதென்பதை காவலர் அறிந்துவிட்டிருந்தனர். அந்த மக்களைச் சென்றடையும் ஆணைகள் ஏதும் காவலர்களிடமிருக்கவில்லை. சொற்கள், முழவொலிகள், கொம்பொலிகள். சவுக்கடிகள்கூட.
அவர்களின் உளநிலையில் அவை அனைத்துமே விளையாட்டாக மாறின. சவுக்கடி பட்ட பீதர்முகம் கொண்ட உழவன் ஏதோ சொல்ல அவனுடன் வந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர். “என்ன சொல்கிறான்?” என்று சவுக்கு வீசிய வீரன் கேட்டான். அவர்களுக்கு அந்தச் சொற்களும் புரியவில்லை. “என்ன சொல்கிறான்?” என்று அவர்கள் அதையே தங்கள் மூக்கடைத்த கிளிக்குரலில் திரும்பக்கூவினர். அதை மாறிமாறி பல ஒலிகளில் கூச்சலிட்டு நகைத்தபடி முன்னால் சென்றனர். அவன் அவர்களின் சிரிப்பை நோக்கியபடி நின்றான். செல்லும் ஒவ்வொருவரிடமும் “அவர்கள் சொல்வதென்ன? சொல், அவர்கள் சொல்வதென்ன?” என்று கேட்டான். அவர்கள் அனைவருமே சிரிக்கும் முகம் கொண்டிருந்தனர். சிரிப்பு ஓர் ஒளியோடை என அவன் முன் நெளிந்து சென்றது.
அவன் அச்சொற்களை திரும்பத்திரும்ப தன் நாவில் பதியவைத்துக்கொண்டான். பலரிடம் உசாவினான். இறுதியில் ஒருவன் சொன்னான் “நாக்கு என்கிறார்கள், வீரரே”. காவல்வீரன் திகைத்து “நாக்கு என்றா?” என்றான். “ஆம், சவுக்காலடிப்பதை நீங்கள் அவர்களை நக்குகிறீர்கள் என எடுத்துக்கொள்கிறார்கள்.” காவல்வீரன் சோர்ந்து “மெய்யாகவா?” என்றான். பின்னர் தன் காவல்தலைவனிடம் “இவர்களை சவுக்காலடிப்பதில் பயனில்லை. அம்புகளை எய்தால்கூட அதை கோழி கொத்துவது என்று சொல்லி சிரித்துக்கொண்டு உயிர்விடுவார்கள்” என்றான். காவல்தலைவன் அவனை நோக்கி விழிமலைத்திருந்தான். “ஆம், அவர்கள் பித்தர்கள் போலிருக்கிறார்கள்… அவர்களை நோக்கி நாம் எதையும் சொல்லமுடியாது” என்றான். காவல்வீரன் “குழந்தைகள்போல” என்றான். சம்வகை அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு அப்பால் நின்றிருந்தாள். ஒருகணம் விழிதூக்கியபோது கடந்துசென்ற அத்தனைபேரும் சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு முதல்முறையாக துணுக்குற்றாள்.
அந்த மக்கள் பலவகையான முகங்கள் கொண்டிருந்தனர். உடலசைவுகளேகூட வேறுபட்டன. “மானுடர் ஒன்றே என்பது பொய்மொழி. விலங்கெல்லாம் ஒன்றே என்பதுபோல. புலியும் பூனையும் வேறுவேறே. நாயும் பூனையும் வேறு வேறு” என்று ஒரு காவல்வீரன் சொன்னான். “ஆனால் நாம் இவர்களை ஒன்றெனக் காண்கிறோம். ஒற்றைத்திரள் என ஆக்கிக்கொள்கிறோம். எத்தனை முகங்கள், எத்தனை விழிகள்!” அவர்கள் சொல்லிச் சொல்லிச் சலித்தும் சொல்லிக்கொண்டிருந்தனர். “முகம் என்னும் வடிவம் ஒன்றே பொது. அவை கலங்கள், ஊற்றிவைக்கப்பட்டவை வெவ்வேறு நீர்மைகள்” என்றான் ஒருவன்.
அவர்களிடம் கள்வாங்கி அருந்திவிட்டு மீசையை நீவித்துடைத்து பூச்சிகளை துப்பியபின் சூதன் ஒருவன் திரும்பி அத்திரளைப் பார்த்தான். “நீங்கள் இங்கே இருந்து கண்டது சிறு வட்டம் மட்டுமே. பாரதவர்ஷம் முகங்களின் பெரும்பரப்பு. விழிகளின் விண்மீன் வானம். இதோ இந்த நகரில் இப்போது பாரதவர்ஷம் ஒரு சிறுபுள்ளியில் குவிகிறது. வானம் பனித்துளியில் என.” அவன் கைசுட்டி முகங்களை காட்டினான். தனக்குத்தானே சிரித்தவனாக “விரித்துப் பரப்பியதை எல்லாம் அள்ளிச் சுருக்கிக்கொள்கிறது ஊழ். விதைநெல் சேர்க்கும் உழவனைப்போல” என்றான்.
ஆனால் மெல்லமெல்ல அத்திரள் ஒற்றை முகமெனத் தெரியலாயிற்று. ஒற்றை மொழிகொண்டு பேசலாயிற்று. காவல்மாடங்களின் மேல் நின்றிருக்கையில் அந்தத் திரளின் முகம் வானுருவமெனத் தெரிந்து உளம் திகைக்கச்செய்தது. அதன் சொல் துயிலிலும் வந்து அழைத்தது. ஆணையென்றாகியது. அறைகூவலாக ஒலித்தது. அதை கேளாமல் வாழமுடியாதென்றாகியது. படைக்கலங்கள் அதன் முன் தணிந்தன. பூதமென எழுந்து நின்று அது அவர்களை மிகக் குனிந்து நோக்கியது. “செய்” என்றது. “பணி” என்றது. “தொழு” என்றது. “நானே” என்றது. “ஆம் ஆம் ஆம்” என்றனர் வீரர்கள்.
அஸ்தினபுரியின் அனைத்துப் பாதைகளும் மக்கள்பெருக்கு செறிந்து ஓடைகளென்றாயின. பாதைகள் மக்கள் வந்து வந்து அகன்று இருமடங்கு விரிவு கொண்டதாயின. பாதைகளின் இருபுறமும் இருந்த காடுகள் வெட்டி அழிக்கப்பட்டு அங்கே குடில்கள் உருவாயின. அக்குடில்கள் பெருகி மேலும் இருபக்கங்களிலாக அகன்று சிற்றூர்களாயின. “முந்திரிக்கொடியில் கனிக்கொத்துகள் செறிவதுபோல் ஒவ்வொரு பாதையிலும் சிற்றூர்கள் உருவாகியுள்ளன” என்று ஒற்றனாகிய சூதன் சொன்னான். “காட்டெரி பரவுவதுபோல் மானுடர் எரிந்து விரிகிறார்கள். உடல்கள் தழல். உண்டு தீராத பசிகொண்ட அலைவு” என்றான்.
அஸ்தினபுரியைச் சுற்றி நூற்றியெட்டு ஊர்கள் உருவாயின. ஒவ்வொன்றுக்கும் இயல்பாகவே பெயர்கள் அமைந்தன. அங்கு வந்து தங்கிய குடிகள் கொண்ட தனித்தன்மையை அவ்வழி கடந்து சென்ற பிறர் கண்டு சூட்டிய பெயர்களாக அவை அமைந்தன. பெரும்பாலும் விந்தைகளைக் கண்டுதான் அப்பெயர்கள் சூட்டப்பட்டன. அரிதாக அடையாளங்களின் வழியாக. எப்போதாவது எந்நோக்கமும் இன்றி. அப்பெயர்கள் எதிலும் அறிவு எதுவும் செயல்படவில்லை. அவை குழந்தை நோக்கில் இடப்பட்ட பெயர்களாகவே தெரிந்தன. சிரிப்புத்தலை என ஓர் ஊருக்கு பெயர் இடப்பட்டிருப்பதைக் கேட்டு தாங்கள் நகைத்ததை பின்னர் அவர்கள் எண்ணிக்கொண்டனர். “கைப்புண்” என்றும் “பூனைக்காது” என்றும் ஊர்களுக்கு பெயர்களிடப்பட்டன. “நல்ல ஊற்று” என்றும் “உப்புக்கஞ்சி” என்றும் ஊர்களுக்கு பெயர்கள் அமைந்தன. ஒவ்வொரு புதுப் பெயரும் புன்னகைக்க வைத்தது. அப்பெயர்கள் நிலைகொண்டதே அப்புன்னகையால்தான் என்று தோன்றியது.
பல ஊர்களின் பெயர்கள் விந்தையான அயல்மொழியில் அமைந்திருந்தன. அவற்றை சூதர்களைக்கொண்டு மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதன் பின்னரும் அவை ஒலிகளாகவே அமைந்தன. அயல்மொழிச் சொற்களை வெற்றொலியெனக் கேட்ட செவிகள் அவற்றை ஏளனம் கலந்து சொல்லத்தொடங்கி புதிய பெயர்களை யாத்தன. ஊர்களைப் பதிவுசெய்ய ஒரு அமைச்சு அமைந்தது. அதில் நாளுமென பெயர்கள் வந்து தங்களை அடுக்கிக்கொண்டன. “இளமையில் ஒரு கதை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை சிறகை விரித்து அடுக்கும்போதும் தூவல்கள் பெருகும் ஒரு பறவையைப்பற்றி. அது ஆணவம் கொண்டு கடல்மேல் பறக்கலாயிற்று. சிறகுகள் பெருக முடியாமல் நீர்வெளியில் விழுந்து மறைந்தது” என்றார் சுதமன்.
அஸ்தினபுரியின் நான்கு பக்கமும் உருவாகி பெருகிய ஊர்ப்பெயர்களுடன் அத்திசையையும் இணைத்துக்கொள்ளச் சொன்னாள் சம்வகை. பெயரைக் கேட்டவுடன் அது எங்குள்ளது என்ற உளப்பதிவு உருவாக வேண்டியிருந்தது. தட்சிண மிருகபாதம், உத்தரமாகம் என்று பெயர்கள் அமைந்தன. அப்பெயர்கள் சூட்டிய ஊர்களைக்கொண்டு அஸ்தினபுரியின் நிலவரைபடம் ஒன்றை உருவாக்கும் பணியை சுதமன் மேற்கொண்டார். கலிங்க நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் எழுவர் அமர்ந்து சேர்த்து தைத்து உருவாக்கப்பட்ட பெரிய தோல்திரையில் அடர்ந்த எண்ணை வண்ணங்களில் அஸ்தினபுரியின் கோட்டையையும் அதைச் சுற்றி அமைந்த ஊர்களின் பெயர்களையும் வடிவமைத்தனர்.
நிலம் வரையப்படுவதை சம்வகை ஒவ்வொரு நாளும் சென்று நோக்கிவந்தாள். நிலம் என அவள் உணர்ந்த ஒன்றுடன் அக்கோட்டுவிரிவை அவளால் இணைத்துக்கொள்ள இயலவில்லை. அது வேறு ஒரு நிலமாக, எங்கோ இருக்கும் ஒன்றாகத்தான் தோன்றியது. ஒவ்வொருநாளும் அதில் வரையப்பட்ட ஊர்களுக்கு அவள் புரவியில் சென்று மீண்டாள். மெல்ல மெல்ல அந்த கோட்டுரு நிலமென்று ஆகியது. பெரும்பாலான ஊர்கள் ஓடைகளால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை கோட்டுருவால்தான் அவள் அறிந்துகொண்டாள். அவை பின்னர் சாலைகளாலும் பாதைகளாலும் இணைக்கப்பட்டன. இருவகை நரம்புகளால் அவை ஒன்றெனப் பின்னப்பட்டன.
“இவ்வாறு நகரைச்சுற்றி ஊர்கள் அமைவது ஒருவகையில் நன்று. அஸ்தினபுரிக்குள் வருபவர்களை இந்த ஊர்க்ளே தாங்கிக்கொள்ளும்” என்று சுதமன் சொன்னார். “ஆயிரம் அணைகளைக் கடந்து இங்கே வரவிழைபவர்கள் மட்டும் வரட்டும்.” சுரேசர் வெளியிலிருந்து வருபவர்கள் அனைவரும் அச்சிற்றூர்களுக்குச் செல்லவேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் அஸ்தினபுரிக்குள் வந்து அங்கு தங்கள் ஊழ் என்னவென்று அறிந்து அதன் பின்னர் வெளிச்சென்று மட்டுமே மக்களால் அச்சிற்றூர்களில் தங்க இயன்றது. அங்கு சென்ற பின்னரும் அவற்றை அஸ்தினபுரியின் கைகளென கால்களென கற்பனை செய்துகொண்டார்கள்.
ஆனால் சிலர் தாங்கள் விட்டுவந்த ஊர்களை அங்கு திரும்ப உருவாக்கிக்கொண்டார்கள். அவ்வூர்களின் பெயர்களையே அங்கு அமைத்துக்கொண்டார்கள். “விட்டுவிட்டு வந்த ஊர்களை ஏன் மீள உருவாக்கிக்கொள்கிறார்கள்?” என்று சுதமன் கேட்டார். “அவர்கள் குழியானைகளைப்போல. எங்கு எடுத்துப் போட்டாலும் சுழன்று அவ்வட்டத்தையே அமைப்பார்கள்” என்று சீர்ஷன் சொன்னான். “எனில் ஏன் ஊரைவிட்டு கிளம்புகிறார்கள்?” என்று சுதமன் கேட்க சுரேசர் நகைத்து “தாங்கள் புதிய ஊரிலிருக்கிறோம் என்பதை தங்களுக்குத் தாங்களே நிறுவிக்கொள்வதற்காகத்தான். பழைய ஊர்களின் சிக்கல்களும் இடர்களும் இல்லாத புதிய ஊர் ஒன்றை அமைக்க முயல்கிறார்கள். ஆனால் அவர்களின் கற்பனையும் இயல்கையும் இணைந்து உருவாக்கும் ஊர்களையே அவர்கள் அமைக்க இயலும்” என்றார்.
“நாம் அவர்களுக்கு ஊர் உருவாக்கும் நெறிமுறைகளை வகுத்தளிப்போம்” என்று சம்வகை சொன்னபோது சுரேசர் நிமிர்ந்து நோக்கி “ஆம், அது நன்று. நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றார். “ஆனால் இயல்பாக ஊர்களை உருவாக விட்ட பின்னர் அவற்றை செம்மைப்படுத்துவது எளிதல்ல. அவற்றுக்கு ஒரு கட்டற்ற தன்மை வந்திருக்கும். அவை உருவாகும்போதே சில அடிப்படை இயல்புகளை வகுத்து அளிப்பது ஒருமையை உருவாக்கும். நூல்கள் அதைத்தான் சொல்கின்றன. ஊரை உருவாக்கும் முதல் தறியும் முதல் நூலும் அவ்வூரில் என்றும் இருக்கும்” என்றார்.
அரசவையில் சுரேசர் அதை முன்வைத்தார். “ஆம், அஸ்தினபுரியில் இன்று செல்வம் இருக்கிறது. காடுகளை அழித்து திட்டமிட்டு ஊர்களை அமைப்போம். நேரான தெருக்களும், ஒழுங்கமைந்த இல்லங்களும், கோட்டையும், புறங்காடும், இணைப்பு பாதைகளும் கொண்டவை” என்றார் யுதிஷ்டிரன். சுரேசர் “அவ்வாறு ஊரமைப்பு உருவாக்குவது ஒன்றும் பெரிய பணி அல்ல. ஆனால் அங்கு குடியேற்றங்களை உருவாக்குவது எளிதல்ல. அங்கு எவ்வகை குடிகள் சென்று வாழ்வார்கள்? எவ்விதமான குமுகங்களை அங்கு உருவாக்குவார்கள் என்பதை நாம் அங்கு வகுக்க இயலாது. நகரங்களை உருவாக்கலாம். ஆனால் இல்லங்களை அமைப்பதில் நம்மால் ஒரு கொள்கையை வகுக்கவோ அதை நிலைநிறுத்தவோ இயலாது. அவர்களே தங்கள் போக்கில் உருவாக்கிக்கொள்ளும் குமுகங்களுக்கு ஓரளவுக்கு நெறிப்படுத்தப்பட்ட ஊரமைப்பை வலியுறுத்துவதே நம்மால் செய்யக்கூடியது” என்றார்.
“புதிய நகர்கள் உருவாகட்டும். அங்கே என்ன நிகழ்கிறதோ அதை நாம் ஒழுங்கமைப்பு செய்வோம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நகர வடிவமைப்பாளர்களான நூறு கலிங்கச் சிற்பிகளை வரவழைப்போம். புதிய வடிவங்களில் நகர்கள் எழட்டும்.” சம்வகை வணங்கி மெல்ல கனைக்க யுதிஷ்டிரன் திரும்பி நோக்கினார். “அரசே, அஸ்தினபுரியின் இதே நகர அமைப்பையே பல்வேறு வகையில் உருமாற்றம் செய்து அவ்வூர்களுக்கான வரைவுகள் உருவாக்கப்படுவதே நன்று” என்றாள். “ஒரு நகரை ஆள்வது எளிதல்ல. நகரம் நம் கால்களில், செவிகளில், விழிகளில் உள்ளே சென்று உறையவேண்டும். அதற்கு ஆண்டுகள் பல ஆகும். நாம் அஸ்தினபுரியை ஆண்டு பழகியிருக்கிறோம். அஸ்தினபுரிகளை ஆள்வது மிக எளிது.” யுதிஷ்டிரன் கூர்ந்து நோக்க சுரேசர் “ஆம், அன்னைப்பன்றி நூறு குட்டிகளை பெறட்டும். அனைத்தும் அன்னை வடிவிலேயே” என்றார். யுதிஷ்டிரன் வெடித்து நகைத்து “ஆம், ஆகுக!” என்றார்.
சுற்றியமைந்த கோட்டையும், நான்கு வாயில்களையும் ஒன்றுடன் ஒன்றிணைக்கும் மையச்சாலைகளும், நடுவே அரண்மனையும், அரண்மனையைச் சுற்றி சிறு கோட்டையும், ஒவ்வொரு சாலையிலிருந்து இன்னொரு சாலைக்குச் செல்லும் ஊடுபாதைகளும் என அவ்வூர்கள் அஸ்தினபுரியின் வடிவிலேயே அமைந்தன. புதிய ஊருக்குச் செல்பவர்கள்கூட வழிதவறாமல் தங்கள் இலக்குகளை அடைந்தனர். “இவ்வூர்களின் அமைப்பு என்பது ஒன்றே. இதை சக்ரவியூகம் என்கிறார்கள். இந்த நகர்வடிவம் சதுரமாக்கப்பட்ட வட்டம் போன்றது” என்று கலிங்கச் சிற்பி சந்திரர் சொன்னார். “ஊர்வடிவங்களில் இதுவே மிகச் சிறந்தது. பாரதவர்ஷத்தின் பெரும்பாலான நகரங்கள் இவ்வடிவிலேயே அமைந்துள்ளன.”
“ஏன்? வெவ்வேறு வகையான ஊர்களை உருவாக்கும்போது அல்லவா வெவ்வேறு வகையான இயல்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது?” என்று சுதமன் கேட்டார். சந்திரர் “இவ்வாறு ஒரு நகர் வடிவம் உருவாகி வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு தேவை. பல வடிவங்களில் நகர்கள் முயலப்பட்டிருக்கலாம். தொல்குடிகளின் ஊர்களை நான் சென்று பார்த்ததுண்டு. குகைத் தொகுதிகளான ஊர்கள், மரங்களுக்கு மேல் அமைந்த ஊர்கள், சுழி வடிவ ஊர்கள், பாலையில் அமைந்திருக்கும் பொந்துவடிவ ஊர்கள் என. அவற்றில் பிறை வடிவ ஊர்கள், அம்புமுனை வடிவ ஊர்களைக்கூட நான் பார்த்திருக்கிறேன். அந்தந்த நிலங்களுக்கு ஏற்ப அந்தந்தக் குடிகளின் அமைப்புக்கேற்ப ஊர்கள் அமைகின்றன” என்றார்.
“ஆனால் சகடவடிவ ஊர்களே நெடுநாட்களாக நீடித்தன. அவை அவ்வாறு நீடித்தன எனில் அதற்கான பயன்பாடும் தேவையும் வலுவாக உள்ளதென்றே பொருள். சகடவடிவ ஊர்கள் பின்னர் சதுரவடிவிலாயின. அச்சு அவ்வாறே நீடித்தது” என்று சந்திரர் தொடர்ந்தார். “ஊரென்பது புறத்தே நின்று உருவாக்கப்படக்கூடியது அல்ல. அம்மக்களின் கோன்மையின் படிநிலையே ஊரென்றாகிறது. மன்னன் முதற்றே மலர்தலை உலகென்ற தொல்கூற்றின் வெளிப்பாடே இந்நகரங்கள். நாம் அமைக்கும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு தலைவன் என்று ஒருவனை அமைக்கிறோம். அவன் ஆளுகைக்குள் அந்த ஊர் இருக்கவேண்டுமென்று எண்ணுகிறோம். ஆகவேதான் இவை இவ்வடிவில் அமைகின்றன.”
“இந்நகர்களின் மையமாக ஊர்த்தலைவனின் மாளிகை அமைவது என்பது உடலில் தலை எழுவதுபோல. உண்மையில் அரசனின் மாளிகை ஊரின் மையத்தில் அமைவது அவ்வளவு உகந்தது அல்ல. அது அதன் நுழைவாயிலில் கிழக்குக் கோட்டையை ஒட்டி அமைவதே பல வகையிலும் புழக்கத்திற்கு எளிதாகிறது. எப்போதாவது போர் நடக்கையில் மட்டுமே அவன் மையத்தில் இருப்பது தேவையாகிறது. மற்றைய பொழுதுகளில் எளிதாக வெளியே செல்லவும் உள்ளே வரவும் உகந்த முதன்மை இடத்தில் அம்மாளிகைகள் அமைவதே நன்று. நகரங்கள் போரில் ஈடுபடுவது என்பது பல தலைமுறைகளுக்கு ஒருமுறையே நிகழ்கிறது. அதன்பொருட்டு ஒவ்வொரு நாளும் வருபவர்களும் செல்பவர்களும் கோட்டைமுகப்பிலிருந்து நகர் மையம் வரை சாலைகளில் செல்ல வேண்டிய தேவை இல்லை. தேவைப்படுமெனில் நகர் மையத்தில் ஒரு மாளிகை அமைத்துக்கொள்வதும், போரெனில் அங்கு சென்று தங்குவதும் மிக எளிய செயல்.”
“ஆனால் நகரென்பது அக்குடிகளின் உள்ளத்தில் அமையும் ஓர் அடையாளமும்கூட. நகர் மையத்தில் அரண்மனை இருக்கையிலேயே தங்கள் வாழ்வின் மையத்தில் அது இருப்பதாக மக்கள் எண்ணுவார்கள். தங்களுக்குமேல் ஒரு கோபுர முகடென அரண்மனை இருப்பதாக அவர்கள் உள்ளம் சமைத்துக்கொள்கிறது. ஒவ்வொருவரிடமிருந்தும் அது கொண்டிருக்கும் தொலைவு அக்கோன்மையின் அளவுக்கு அடையாளம். நகர்முகப்பில் அரண்மனை இருக்குமெனில் அவ்வரண்மனைக்குப் பின்புறம் அவ்வரண்மனையால் அறியப்படாது தாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதான உணர்வை குடிகள் அடையக்கூடும். அரசன் அங்கிருந்து தங்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனும் கற்பனை குடிகளுக்குத் தேவை. அதுவே அரசெனும் அமைப்பை நிலைநிறுத்துவது” என்று சந்திரர் சொன்னார்.
நகர்களினூடாக சம்வகை ஓயாது புரவியில் சென்றுகொண்டிருந்தாள். சுதமன் அவளிடம் “நீங்கள் இன்று படைத்தலைவி. அரண்மனையில் இருந்தபடியே அனைத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் ஆணைக்கு இங்கே ஏவலரும் காவலரும் உள்ளனர்” என்றார். சுரேசர் “கால்களினூடாக மண்ணை அறிந்தவனே நல்ல அரசன் என்பார்கள். காவலரும் அவ்வாறே” என்றார். சம்வகை “நான் அறிந்துகொண்டிருப்பது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாளுக்குநாள் இந்நகரத்தொகை என்னை அணுகிவருகிறது என்று மட்டும் தெரிகிறது” என்றாள்.
அவளை நகர்மக்கள் அடையாளம் காணவில்லை. ஒவ்வொரு ஊரிலும் புதியவர்களே நிறைந்திருந்தனர். அவர்களின் அந்த உவகை அவர்களுக்குமேல் ஓர் அரசு இன்னமும் உருவாகவில்லை என்பதனாலா என்று அவள் வியந்தாள். அரசு இல்லாமையால் அவர்களின் ஒழுங்கு குலையவில்லை. அவர்களின் அறமும் ஒழுக்கமும் எல்லை கடக்கவில்லை. அவர்களிடையே நிகழ்ந்த பூசல்கள்கூட மூத்தோரால் உடனே தீர்த்துவைக்கப்பட்டன. அப்படியென்றால் அரசு என்று ஒன்று எதற்காக? இப்போது ஓர் எதிரி இந்நாட்டை தாக்குவான் என்றால் அரசு தேவை. அதன் படைவல்லமை, அதன் அமைப்பு, அதை நடத்தும் அரசு தேவை. ஆனால் அரசன் என்று ஒருவன் இல்லை என்றால் இன்னொரு அரசன் படைகொண்டுவர வாய்ப்பில்லை. அரசனை தேன்கூடு என்கின்றன நூல்கள். அங்கிருந்தே தேன் கவரமுடியும். மலர்களில் நிறைந்திருக்கும் தேனை எவரும் கவரமுடியாது. மக்கள்திரள் மேல் எவர் படைகொண்டுவரக்கூடும்?
தன் எண்ணங்களை அவள் அளைந்துகொண்டே இருந்தாள். கோட்டைக்காவல்பெண்டாக அமைந்த நாள்முதலே அவள் உள்ளம் பெருகிக்கொண்டிருந்தது. சொற்களை அவளே அவ்வப்போது நின்று நோக்கி துணுக்குற்றாள். “இந்நகர்களை ஒரே ஆணையால் அஸ்தினபுரி தன்னை நோக்கி இழுத்து படையென திரட்டிக்கொள்ள முடியும்” என்று ஒரு காவலர்தலைவன் சொன்னபோது அவள் உள்ளம் “இவை ஒரே ஆணையால் அஸ்தினபுரியை நூறாகப் பிளந்துவிடவும்கூடும்” என்று எண்ணிக்கொண்டாள். பின்னர் ஏன் அவ்வாறு தோன்றியது என வியந்தாள். கோன்மையைக் கையாள்பவர்களுக்குள் கோன்மைக்கு எதிரான ஒருவன் எழுந்து பேசிக்கொண்டிருப்பான் போலும். அவன் அக்கோன்மைக்கு ஒற்றனும்கூட.
அவள் புரவியில் அமர்ந்து அந்த துளிநகரங்களின் சாலைகளினூடாகச் சென்றுகொண்டிருந்தாள். அவை உருவாகி வந்த விரைவு அவளை ஒவ்வொரு முறை விழிதூக்கும்போதும் துணுக்குறச் செய்தது. பல நகரங்கள் பதினைந்து நாட்களுக்குள் எழுந்துவிட்டிருந்தன. அவை மரத்தாலானவை என்பதனாலா? அன்றி ஊரார் அனைவருமே அந்நகரை உருவாக்குவதில் முழுமையாக முனைந்தமையாலா? ஆனால் அவை கட்டிமுடிக்கப்படவுமில்லை. கட்டக்கட்ட அவை பெருகின, செய்யச் செய்ய பணி கோரின. அவை இன்னும் நூறாண்டுகளுக்கு கட்டி முடிக்கப்படாமலிருக்கக்கூடும்.
அவள் அந்நகர்களில் ஒவ்வொருவரும் சற்றே தடுமாறுவதை கண்டாள். அவை அவர்கள் அறிந்த ஊர்களல்ல. பெரும்பாலானவர்கள் சிற்றூர்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அந்த நகர அமைப்பை உடலில் வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் உவகையில் திளைத்துக்கொண்டிருந்தனர். ஆகவே ஒவ்வொன்றையும் கொண்டாட்டமாக ஆக்கிக்கொண்டிருந்தனர். ஒற்றைத்திரள் என வந்த அம்மக்கள் மீண்டும் பல்லாயிரம் நகர்களாக குமுகங்களாக குலங்களாக குடிகளாக பிரிந்துவிட்டதை அவள் கண்டாள். அப்பேருருவை அஞ்சி அதை செய்தோமா? அந்தப் பெரும்பூதத்தை ஆளமுடியாது. அதற்கு எந்த ஆணையையும் இட முடியாது. அதை வெல்வதற்கு ஒரே வழி அதுவே தன்னை பலவாக உணரவைப்பது மட்டுமே.
அவள் ஜலநிபந்தம் என்னும் சிறிய நகர்சதுக்கம் ஒன்றினூடாகச் செல்கையில் சிறுமியர் விளையாடிக்கொண்டிருக்கும் சிரிப்பொலியை கேட்டாள். அவர்கள் செம்மண் நிலத்தில் அரங்கு வரைந்து வட்டாடிக்கொண்டிருந்தனர். கண்களை மூடி தலையை அண்ணாந்து நெற்றிமேல் வைத்த பனையோட்டு வட்டுடன் ஒரு பெண் தாவித்தாவிச் சென்றாள். அரங்கின் கோடுகளுக்கு மேல் அவள் கால்கள் படுகின்றனவா என பிற சிறுமியர் நோக்கி கூச்சலிட்டனர். அவள் தாவித்தாவிச் சென்று இறுதிக்கோட்டைக் கடந்து குதித்து வட்டை எடுத்த பின் “வென்றுவிட்டேன்! வென்றுவிட்டேன்!” என்று கூச்சலிட்டு குதித்தாள். அவளுடன் இணைந்த சிறுமியரும் கூச்சலிட்டனர். சிறுபறவைகளின் ஓசைபோல அச்சிரிப்புகளும் கூச்சல்களும் கேட்டன. சம்வகை மலர்ந்த முகத்துடன் நோக்கியபடி சென்றாள்.