’அகதி’ ராம்குமார் முன்னுரை

கோவையில் நடந்த ஒரு சிறிய புத்தக விழாவில் ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதை நிச்சயம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது நான் பள்ளி முடித்த நேரம். கையில் பணம் இல்லை. அம்மாவின் வங்கி அட்டை மட்டும் இருந்தது. அம்மாவை தொலைபேசியில் அழைத்து அதை வாங்கிக்கொள்ளவா என்று கேட்டேன். ‘அதுக்கென்னடா….எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்’ என்றார். அன்று நான் கேட்டது ஐநூறு ரூபாய். ஒரு நடுத்தர குடும்பமான எங்களுக்கு அதுவே அதிகம்தான். இருந்தாலும் தயங்காமல் வாங்கச் சொன்னதற்கு அன்று கொடுத்த உற்சாகம்தான் நான் தொடர்ந்து வாசிக்கவே காரணமாக இருந்தது. அந்த புத்தகம் சே குவேராவின் ‘மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்’.

அதன் பின்னர் நான் புனைவைப் படிக்கத்தொடங்கியது என் உறவினர் வீட்டில் கிடைத்த ‘ சில நேரங்களில் சில மனிதர்கள்’ புத்தகத்திலிருந்துதான். அந்தப் புத்தகத்தை இரயிலில், வங்கிவரிசையில், சென்னையில் ஷேர் ஆட்டோவில், சில சமயங்களில் நடந்தே படிக்க முடியுமா என்று கூட முயற்சித்தேன். அடுத்த ஆறு மாதங்களில் ஜெயகாந்தனின் அனைத்து புத்தகங்களையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தேன். இலக்கிய உலகிற்கு என்னை அழைத்து வந்தவர் அவரே. அவரை தொடர்ந்து தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாரயணன், சுந்தர ராமசாமி என்று முன்னோடிகள் அனைவரையும் வாசித்தேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் எனக்கு பெரிய ஆதர்சமாக இருந்தார்கள். ஜெயமோகனுடைய சங்கச் சித்திரங்கள்,, இன்றைய காந்தியில் நான் அவரை கண்டுகொண்டிருந்தாலும் அறம் தொகுதிதான் அவரை எனக்கு மிக அணுக்கமாக ஆக்கியது. அவர் காட்டிய திசைகள் நூற்றுக்கணக்கான மைல்கள் கடக்க வேண்டிய தொலைவு கொண்டவை. சில பாதைகளைக் கடந்திருக்கிறேன். சிலவற்றில் கால்கூட பதிக்கவில்லை.

புனைவுகளைப் படிக்கத்தொடங்கிய காலத்திற்கு பிறகே என் உலகம் விரியத்தொடங்கியது. எனக்கு தெரியாத மனிதர்கள், என் வாழ்க்கையைக் கடக்காத மனிதர்கள் மூலமாகவும் இந்த உலகத்தை பெரிதாக்கிக்கொண்டேன். இயல்பான ஆனால் உவப்பில்லாத பல உண்மைகளை அறிந்து கொள்ளவும் எனக்கு உதவியது. இலக்கியத்திற்குள் என்னுடைய பரிச்சயமும் உளவியலில் என் இளங்கலை படிப்பும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது என்னையும் பிறரையும் ஆழ்ந்து புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. இன்றுவரை என் பணியில் அது பெரிய உறுதுணையாக இருக்கிறது.

எழுதுவதை சிறிய வயதில் முயன்றிருந்தாலும் கதை சொல்லிக் கேட்பதிலும் அதை மற்றவரிடத்தில் பகிர்வதிலும் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தது. இலக்கியம் கற்ற பிற நண்பர்களிடம் நான் இதை சொன்னபோது அவர்கள் தந்த உற்சாகத்தில் எழுதத்துவங்கினேன். எழுதத்துவங்கியவுடன் எதையெல்லாம் புனைவாக்குவது என்ற ஒரு ஆர்வம் இயல்பாக வரத்தொடங்கியது.

அப்படி அலைந்துகொண்டிருந்த ஒரு தருணம் தேர்தல் நேரமாக இருந்தது. மக்கள் ஏன் ஒரு கட்சிக்காக வாக்களிக்கிறார்கள் என்று நாம் யோசிக்கும் அரசியல் காரணங்களின்றி வேறு ஒரு காரணமும் உண்டுதான் என்பதைக் கண்டபின்பே அது ரோஜா என்ற கதையை உருவாக்கியது. அந்தக் கதையை நான் எழுதும்போதுதான் என் நிலம் என்ன என்பதை நான் கண்டுகொண்டேன். அக்கதையை எங்கும் அமைத்திருக்கலாம். நான் பெரும்பாலும் கோவை நகரில் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்தக் கதைக்கு என் சொந்த கிராமமான ஒத்தையால் என் மனதில் எழுந்து வந்தது. இதுவே எனக்கு தொடக்கத்தில் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. அந்த நிலப்பகுதியின் கதைகளாகவே ‘பெருச்சாளி’ கதையையும் ‘கருவி’ கதையையும் பார்க்கிறேன்.

பின்னர் அங்கிருந்து வெவ்வேறு நிலப்பகுதிகளுக்குள் இப்போது என்னால் செல்ல முடிகிறது. நான் பணி செய்யும் வடகிழக்கு இந்திய பகுதியை கிட்டத்தட்ட துல்லியமாக என்னால் விவரித்து கதைக்கான தளமாக அமைத்துக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அப்படி எழுதப்பட்ட கதைகள்தான் லெனின், பதக்கம். சில நிலப்பரப்புகள் இன்று கட்டிடங்களுக்குள்ளாகவே சுருங்கிவிட்டன. ஒரு பெரும் தலைமுறை மண்ணைக்காணாமல் தார் சாலைகளையும் கட்டிடங்களின் நிழலிலும் உருவாகி வந்துள்ளது. அந்த தலைமுறையின் சிக்கல்களை எண்ணி எழுதியவை ‘காங்கிரீட் நிழல்கள்’ மற்றும் ‘பொன்னகரம்’. இந்த பொன்னகரம் புதுமைப்பித்தனுக்கு என்னுடைய சமர்ப்பணமாகவே சொல்லுவேன். சிறுகதைகளில் என்னை வெகுவாக பாதித்த கதை அது. வாளைவிட மிகக்கூர்மையான பேனாவால் செதுக்கப்பட்ட கதை அது. களம் இல்லாமல் உணர்வை மட்டும் கடத்த எண்ணி செய்த முயற்சி அகதி என்ற சிறுகதை. கோடுகள் தேசங்களாக மாறி மனிதர்களைக் காக்க எண்ணி சிலரை மட்டும் துயரத்தில் ஆழ்த்தும் இந்த நவீனயுகத்தின் உண்மை அக்கதை. இலட்சியவாதங்களின் வீழ்ச்சி ஒவ்வொரு முறையும் என்போன்ற பணியில் இருப்போருக்கு பெரும் சோர்வைத் தருவது. அந்த வீழ்ச்சியின் சாட்சியாக ‘சமரசம்’ மற்றும் ‘லெனின்’.

நான் எழுதும் கதைகளின் வழியே நான் கண்டடைய நினைப்பது சில உண்மைகளையே என்று தோன்றுகிறது. உண்மைகள் என்பது பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்தாலும் அவற்றை தனிப்பட்ட முறையில் நாம் நேரில் சந்திக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்குக் காரணம் அவை ஜீரணிக்கும் வகையில் இருப்பதில்லை என்றே எண்ணுகிறேன். அப்படிப்பட்ட உண்மைகள் கசப்பாக துவர்ப்பாக இருந்தாலும் அதை சமைத்து ஜீரணிக்கும் அளவு செய்வதே நான் கதை சொல்வதற்கான காரணம். இதை முன்னோடி எழுத்தாளர்கள் பலரிடம் கண்டிருக்கின்றேன். அசோகமித்ரன் அந்த வகையில் என் ஆதர்சங்களுள் முக்கியமானவர். அதை இன்னும் விரிவாக புதிய களங்களுடனும் இன்றைய சிக்கல்களின் ஊடாகவும் எழுத எண்ணியே ‘அகதி’ என்ற இந்த இந்த தொகுப்பை முன்வைக்கிறேன்.

உண்மையையும், செயலையும் இரு கண்களாகக் கொண்டிருந்த அண்ணல் காந்தியடிகளுக்கு சமர்ப்பணம்.

சா.ராம்குமார்

***

முந்தைய கட்டுரைவிழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்
அடுத்த கட்டுரைவிழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்