பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

ராம்குமார்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)

நான் மைசூரில் பிறந்து பின்னர் கோவையில் இளங்கலை வரை பயின்றவன். இளங்கலையில் உளவியலும் முதுகலையில் சமூகப்பணியையும் கற்றேன். 2013ல் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மசூரியில் பயிற்சியும், அசாம் மாநிலத்திலும், மத்திய அரசிலும் பின்னர் மேகாலயாவிலும் பணியாற்றியுள்ளேன். தற்போது தென்மேற்கு காரோ மாவட்டத்தின் ஆட்சியராக உள்ளேன். என் மனைவி அபிநயா மருத்துவத்தில் முதுகலை பயின்று வருகிறார். மகனுக்கு இரண்டரை வயது. பெற்றோர் கோவையில் வசிக்கிறார்கள். என் அண்ணன் அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார்.

இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?

ராஜேஷ்குமாரில் துவங்கி பின்னர் அபுனைவு இலக்கியங்களுக்குள் சென்று பின்னர் ஜெயகாந்தன் வழியே இலக்கியத்திற்கு வந்து சேர்ந்தேன். கல்லூரி காலக்கட்டங்களில் இருந்து வாசித்து வருகிறேன். இலக்கியம் பயின்ற மற்ற நண்பர்கள் வழியே பிற இலக்கியங்களையும் வாசிக்கப்பெற்றேன். ஆதர்சங்கள் என்றால் புதுமைப்பித்தனும் அசோகமித்ரனும் என்று சொல்லலாம். புதுப்புது இலக்கியங்கள் வழியே தினமும் ஆதர்சங்களை கண்டடைந்து கொண்டேதான் இருக்கிறேன். அந்த வகையில் என் பட்டியல் இன்னும் முழுமைப்பெறவில்லை. சமீபத்தில் பரிச்சயமான அனிதா அக்னிஹோத்ரியின் பல கதைகள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.

சிறுகதைகளை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ன? இதை உங்கள் முதன்மை வடிவமாக தேர்ந்தது ஏன்?

சிறுகதையை என் வடிவமாக தேர்ந்தெடுத்ததற்கு என் இலக்கிய முன்னோடிகளே காரணம் என நினைக்கிறேன். ஆழமான உண்மைகளை சொல்ல இந்த ஊடகம் மிக சிறப்பாக பயன்படும். வாசிப்பின் அனுபவத்திற்கு நாவல் உகந்ததாக் இருந்தாலும் ஒரு சிந்தனையை ஒரு சின்ன அதிர்வை ஏற்படுத்த சிறுகதையே சிறந்த வழி. நாவல் எழுதவதற்கும் இதுவே ஒரு பயிற்சி முறை. என்னால் கவிதைகளுக்குள் செல்ல முடியவில்லை. அது மிக ஆழமான அதே சமயம் மிக ஆழமற்றதாகவும் தெரிந்தது. அந்த மன நிலையும் எனக்கு சரிவரவில்லை. அதனால் தற்சமயம் சிறுகதைகளை என் ஊடகமாக கொண்டுள்ளேன். சிறுகதையின் சவால்கள் என்பது அதன் கச்சிதத்தன்மை. ஒவ்வொருமுறையும் அதை கொண்டுவர சில மெனெக்கடல்கள் தேவையாக இருக்கின்றன. அதே சமயம் அவற்றைப்பற்றி அதிகமாக சிந்திக்காமல் இருக்கவும் பயின்றிருக்கின்றேன்.

அகதி தொகுப்பில் உள்ள கதைகளை ஏதேனும் ஒரு புள்ளியில் தொகுத்து கூற இயலுமா?

அப்படி ஒரு புள்ளியில் கூற முடியாது என்று தான் நினைத்தேன். அதன் பின்னர் தொகுதிக்கான முன்னுரையை எழுதும்போது எனக்கு தோன்றியது சில உண்மைகளை செறிக்கவைக்க எழுதப்பட்ட கதைகள் அவை. நான் அறிந்த உண்மைகள், தினந்தோறும் காண்பவை என்று ஏதோ ஒரு வகையில் அவற்றை சொல்லி தொகுத்துக்கொள்ளவே இந்த கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த புள்ளி பழசாக இருக்கலாம் ஆனால் அங்கிருந்து தொடங்குவதே சாத்தியமாக எனக்கு தோன்றுகிறது.

. உங்கள் பணி அனுபவங்கள் கதையெழுத உதவியுள்ளனவா?

ஆம். என் பணியில் முதல் சில நாட்களில் நான் உணர்ந்தது அந்த அலுவலகத்திலேயே எனக்குத்தான் வயது குறைவு என்பது. நான் பணி தொடங்கிய முதல் அலுவலகத்தின் முதன்மை அலுவலர் நான். அப்போது எனக்கு திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. அந்த தருணத்தில் என்னை அணுகும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு தென்பட்டார்கள். எடுத்துக்காட்டாக இல்லத்தில் கம்பீரமாக இருக்கும் ஒரு நடுத்திர வயதுக்காரர் அலுவலகத்தில் எங்கிருந்தோ வந்த தன்னை விட வயது குறைந்த ஒருவனிடம் சற்றே பயந்து பேச வேண்டிய நிலை. அந்த இல்லத்தின் மகனாகவும் அந்த அதிகாரியாகவும் என்னால் ஒரே சமயம் உணர முடிகிறது. பலதரப்பட்ட மக்களை தினமும் பார்ப்பது புதுப்புது கதைக்கருக்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது. அவர்களின் பல முகங்களை பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைப்பதால் அதையும் பயன்படுத்த முடிகிறது. மேலும் இந்த பணியின் காரணமாக பல நிலப்பகுதிகளையும் கலாசாரங்களையும் அவற்றின் வித்தியாசங்களையும் ஓர்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. சில விஷயங்களை துல்லியமாக எழுதவும் பயன்படுகிறது. அதைவிட முக்கியம் இலக்கியம் என் பணிக்கு உதவியாக இருப்பது. மனிதர்களின் வித்தியாசம் தெரிவதாலும் மனிதர்களுக்குள் இருக்கும் நிறவேறுபாட்டை ஒருவகையில் இலக்கியம் மூலம் பரிட்சயம் கொண்டிருப்பதாலும் அவர்களை அணுக தவறுகளை கடந்து செல்ல என்னை ஒப்புக்கொடுக்கவும் உதவியாக இருக்கிறது.

எதற்காக எழுதுகிறீர்கள்?

தெரியவில்லை. தற்சமயம் எழுதுவது நன்றாக இருக்கிறது. அதில் ஒரு விளையாட்டு இருக்கிறது. நமக்குள்ளே ஆடிக்கொள்ளும் சதுரங்கம் போல. அந்த விளையாட்டில் தினமும் நம்மையே கண்டடைய முடிகிறது. இந்தப் பணியில் கால்கள் தரையில் நில்லாமல் செல்வதற்கான காரணிகள் அதிகம் உண்டு. மண்ணோடு அந்த உறவை தொடரவும் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். என்றாவது ஒரு வீழ்ச்சி நிகழ்ந்தால் அதிக சேதாரம் இருக்காது.

அடுத்து என்ன?

நாவல். மேகாலயாவின் காரோ மலைப்பகுதி மக்களைப்பற்றிய ஒரு செறிவான நாவல் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை. அதைவிட மிக மிக சுவாரசியமான கதைக்களம் கொண்ட ஒரு புள்ளி எழுந்துள்ளது. மிக தற்செயலாக அந்த கதையின் முடிவு நான் இருந்தபோதுதான் நடந்தேறியது. என் தனிச்செயலர் சொன்ன சில தகவல்கள் பல பல ஆச்சர்யங்களை கலந்திருந்தன. நாவலின் தலைப்பு ‘கொய்லா’.

***

 

===============================================================================

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ்

எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்

அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா

ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

முந்தைய கட்டுரைவிழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்
அடுத்த கட்டுரைசு.வெங்கடேசனுக்கு  ‘இயல்’ விருது