நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

தற்கால ஆங்கில இலக்கியத்தில் சிறுகதைகளின் இடம் அநேகமாக இல்லாமல் ஆகியிருக்கும் ஒரு சூழலில் 2000க்குப் பிறகு ஒரு சிறு அலையைப் போல புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் மேலெழத் தொடங்கியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கிலச் சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கின்றன. இவர்கள் அகதிகளாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ 80-களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தவர்களின் முதல் தலைமுறை மக்கள்.

இவர்கள் மேற்கத்திய குடிமகன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரைக் கண்டடையும் தேடல் இவர்களுக்குள் இருக்கிறது. இரண்டு கலாசாரங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகளை எழுப்புகின்றன. குடிபெயர்ந்தவர்கள் தன் இருப்பை நிலைநாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றிணையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசுத் தட்டின் நடுமுள் போல இரு கலாசாரங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றிபெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏற்கனவே விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகின்றன. அப்படியான சில புலம்பெயரிகளையும் அவர்களின் சிறுகதைகளையும் தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகப்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம்.

கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் கொணர்ந்த தனிமனித சுதந்திரமும் உலகக் குடிமகன் என்ற கருத்துருவாக்கமும் அதன் எதிர்வினையாகப் பெருகி வரும் தேச இன உணர்வுகளும் வளர்ந்துவரும் நாடுகளில் சிக்கலான வாழ்வியல் சூழல்களை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் பன்னெடுங்காலமாக போர்களையும் மரணங்களையும் தோற்றுவித்து வரும் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேறி வாழும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. புது நிலங்களில் தங்கள் வாழ்வு வெறும் பிழைத்திருப்பதிலிருந்து ஒரு படியேனும் மேலோங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

அடுத்த நிலையில் புலம்பெயர்தல், ஒரு ஆறுதலான அல்லது ஒரு வசதியான சூழ்நிலையில் அது அமைந்திருந்தாலும் அப்புது மண்ணின் மனிதர்களாக மாறுவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும், இழக்கும் உறவுகளும் மொழியும் பண்பாடும் எதிலிருந்து மீண்டும் முளைக்கும்? இந்த விவாதங்களை எழுப்புவதினாலேயே இச்சிறுகதைகள் உலகத்தன்மையுடன் அனைவருக்குமான கதைகளாக மாறுகிறன

தற்கால உலகச் சிறுகதையாசிரியர்களை தேடி வாசிக்கையில், அவர்கள் பெரும்பாலும் புலம்பெயரிகளாக இருப்பதையும் அவர்களின் கதைகளின் மையம் இடமாற்றங்களின் வழியே மனிதர்கள் தங்களுக்குள் கண்டடையும் வாழ்வின் அர்த்தங்களையும் அபத்தங்களையும் அறிந்துகொள்ள முயல்வனவாக இருப்பதையும் அறியமுடிகிறது. தமிழ்ச் சூழலில் அறியப்படாத இவ்விளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது, தற்போது உலகமெங்கும் நிலவும் அகதிகளின் மீதான விவாதங்களினிடையில் அவசியமாகிறது. மேற்கு உலகிற்கு அணுக்கமான குரல்களாக இல்லாமல் கீழைத்தேசங்களிலிருந்தும் ஆயுத உரமேந்திய யுத்த நிலங்களிலிருந்தும் உரத்த உண்மையான குரல்களில் இவை வெளிவருகின்றன. இவர்களின் மூலமாக புலம்பெயரிகளின் கதைகள் இப்போது சரியாக சொல்லப்படுகின்றன.

என் இலக்கிய வாசிப்பிற்கும் ரசனைக்கும் செழுமை சேர்த்ததில் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்திற்கும் கோவை சொல்முகம் வாசகர் குழும நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கதைகள் தேர்விலும் தட்டச்சுவதிலும் உடனிருந்து உதவிய தோழி கனிமொழிக்கும் துணையாயிருந்த தங்கை ரேவதிக்கும் நன்றிகள். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து செய்திட எனக்கு தூண்டுதலாக இருந்த நண்பர் செல்வேந்திரனுக்கு தனிப்பட்ட நன்றிகள். இத்தொகுப்பை வெளிக்கொண்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் திரு. ஜீவகரிகாலனுக்கும் உளமார்ந்த நன்றிகள். இருபது வருடங்களாக ஆத்மார்த்தமாகவும் நேரிடையாகவும் வாசிப்பிலும் வாழ்விலும் குருவென்றான என் ஆசான் ஜெயமோகனுக்கு என் வணக்கங்கள்.

***

முந்தைய கட்டுரைவிழா கடிதம்- காளிப்பிரசாத்,சிவக்குமார்
அடுத்த கட்டுரைஆவணப்படம் – கடிதங்கள்