விழா கடிதம்- காளிப்பிரசாத்,சிவக்குமார்

அன்புள்ள சார்,

ஆவணப்படம் ஒளிபரப்பாகி முடிந்தவுடன் விழா மேடையை மூடியிருந்த திரைச்சீலையைத் திறந்தனர். ஆ! என்ற வியப்பொலி நான் அமர்ந்திருந்த வரிசையின் பின்னாலிலிருந்து எழுந்தது. மேடை அமைப்பு ஒரு பிரமிப்பை உண்டாக்கியிருந்தது. பக்கத் தடுப்புகள் பொன்னிறமாய் மின்ன இந்திர நீலமாய் ஜொலித்தது விழா மேடை. முதலிருநாள் அமர்வுகளுக்கான மேடையுமே ஒரு வண்ணக்கடலாக இருந்தது. வெற்றிக்கோப்பை கேப்டன் க்விஸ் செந்திலுக்குத்தான். ஆட்டநாயகன் விருதை விஜயசூரியனுக்கு அளித்து விடலாம்

அமர்வுகள் மூலம் ஒரு வாசகனாக சுரேஷ்குமார் இந்திரஜித், பெருந்தேவி, கேஜி சங்கரன் பிள்ளை, ரவி சுப்ரமணியம், அபி ஆகியோரை அணுக்கமாக உணர முடிந்தது. ஏற்கனவே வாசித்திருந்த இசை, கே.என்.செந்தில், எம்.யுவன், அமிர்தம் சூர்யா, ஜானவி ஆகியோரை இன்னும் ஆழ்ந்து புரிந்துகொள்ளவும் முடிந்தது. வெண்பாவின் அமர்வு பெற்றோர்கள் மத்தியில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது :-)

முந்தைய வருடங்களைவிட இந்த வருடம் நிகழ்ந்த உரையாடல்கள் கச்சிதமாக இருந்தன. வாசகர்கள் கேள்விகளை தொகுத்துக் கச்சிதமாகக் கேட்டதில் அதைக் காண முடிந்தது. அமர்வு முடிந்ததும் அனைத்து எழுத்தாளர்களும் அதைக் கூறினர். ரவிசுப்ரமணியம் அவர்களின் இசையில் நவீன கவிதைகளை கேட்டது அற்புதமான அனுபவம்.

மொத்தத்தில் ஒவ்வொரு வருடமும் சொல்வது போல இந்தவருடம் நிகழ்ந்த விழாதான் முந்தைய விழாக்களைவிடவும் அருமையான ஒன்று.

அன்புடன்

R.காளிப்ரஸாத்

***

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பாக நான் பார்த்தது ஏராளமான எழுத்தாளர்கள். அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் வாசகர்களின் வட்டம் உருவாகி வந்திருப்பதைக் கண்டேன். யுவன் சந்திரசேகர், போகன் இருவரும்தான் நட்சத்திரங்கள் என்று தோன்றியது. அவர்களைச் சுற்றி கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. அந்த கொப்பளிப்பையும் சிரிப்பையும் ரசித்துக்கொண்டே இருந்தேன்

ஆண்டுதோறும் இந்த விழா ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. உங்களுக்கே தெரியும், இங்கே இலக்கியச் சூழலில் வாசகனாக மட்டுமே செயல்படுவதுதான் நல்லது. நான் கொஞ்சநாள் முகநூலில் இருந்தேன். எல்லா எழுத்தாளர்களையும் ஃபாலோ செய்தேன். ஆனால் மனச்சோர்வுதான் மிச்சம். மிகச்சின்ன விஷயங்கள். அதற்கான சண்டைகள் ,சச்சரவுகள். ஆகவே நின்றுவிட்டேன். வாசகனாக என்னுடைய நாள் இது என்று நான் உணரும் ஒரு இடம் இந்த விழாவிலே இருக்கிறது. ஆகவேதான் விஷ்ணுபுரம் விழா எனக்கெல்லாம் ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது

விஷ்ணுபுரம் விழாவில் இருக்கும் கட்டுப்பாடு தன்னிச்சையாக உருவாகி வருவதைக் காண்கிறேன். இரண்டு விஷயங்கள். ஒன்று, எல்லா விழாக்களிலும் வந்து அமர்ந்து கூச்சலிடும் கும்பல் இங்கே இல்லை. அவர்கள் எதுவுமே படிப்பவர்கள் அல்ல. வெறும் சத்தங்கள். ஆனால் அவர்களால் நம் சூழலை இயன்றவரை மலினப்படுத்திவிடமுடிகிறது. இன்னொன்று நேர ஒழுங்கு விஷய ஒழுங்கு ஏதுமில்லாமல் பேசிப்பேசி போர் அடிக்கும் சிலர். இங்கே நேரம் கச்சிதமாக வகுக்கப்பட்டிருப்பதனால்தான் இத்தனைபேர் இத்தனை ஆர்வத்துடன் வந்து அமர்ந்திருக்கிறார்கள்.

குறை என்றால் இந்தவிழாவிலும் சென்ற ஆண்டு விழாவிலும் எழுத்தாளர்களின் கேள்விகளும் விவாதங்களும் கொஞ்சம் அதிகம். வாசகர்களின் குரல்கள் அரங்கில் அதிகம் எழவில்லை. இத்தனை எழுத்தாளர்கள் இருக்கையில் அதை தவிர்க்கமுடியாதுதான். எல்லா குரல்களும் ஒலிக்கத்தானே வேண்டும்?

சிவக்குமார்

***

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் 2019

அபி -ஆவணப்படம்

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்

முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36
அடுத்த கட்டுரைநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை