1965 ஆம் ஆண்டு ராகவன்- ருக்மிணி தம்பதியருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். மேற்கு மாம்பலத்தில் வளர்ந்தார். ராஜ்பவனில் பணியாற்றியதால் நண்பர்கள் வட்டாரத்தில் கவர்னர் ஸ்ரீனிவாசன் என்று அழைக்கப்படுபவர். வெண்முரசின் மெய்ப்பு நோக்குனர். தீவிர வாசகர்.
உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)?
கல்வி – தமிழிலக்கியத்திலும் கல்வியியலிலும் முதுகலைப் பட்டம். தமிழிலக்கியத்தில் எம்.ஃபில். பணி – தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு. குடும்பம் – அம்மா, மனைவி, மகன் – வாசகர்கள்
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
சிறுவர் இலக்கியத்தில் தொடங்கி, வார இதழ்களில் அச்சான அனைத்தையும் படித்ததுண்டு.
பள்ளிப்படிப்பை முடிக்கும் தறுவாயில் இலக்கிய அறிமுகம் கிடைத்தது கணையாழி இதழ் மூலம்.
தமிழில் லா.ச.ரா, தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன்; ஆங்கிலத்தில் சாமர்சட் மாம், பி.ஜி.உட்ஹௌஸ் இவர்களின் படைப்புகளை தேடித்தேடி படித்ததுண்டு. ஆதர்சங்கள் டால்ஸ்டாய், அ.முத்துலிங்கம், ஜெயமோகன்
கூண்டுக்குள் பெண்கள். மொழியாக்க அனுபவம் மற்றும் சவால்கள் என்ன?
விலாஸ் சாரங்கின் நடை மிகவும் சரளமானதாக இருப்பதால், அது நம்மை அச்சுறுத்துவதில்லை. மொழிபெயர்ப்பாளன் திகைத்து நிற்கும் இடங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை இடக்கரடக்கல் எதுவுமின்றி அப்பட்டமாக, வாசகனை கிளர்ச்சியோ அதிர்ச்சியோ அடையச் செய்யும் நோக்கம் எதுவுமின்றி நேரடியாக மிக இயல்பாக சொல்லிச் செல்கிறார். மொழிபெயர்க்கையில் அவற்றை அதே தரத்தில் கொண்டு வர முடியுமா என்பது சவாலாக இருந்தது.
விலாஸ் சாரங்கையும் இந்த சிறுகதை தொகுப்பையும் தேர்ந்தெடுத்தது எப்படி?
காளிபிரசாத் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ‘தம்மம் தந்தவன்’ நூல் மூலமாகத்தான் விலாஸ் சாரங் அறிமுகமானார். நற்றிணை பதிப்பகத்தின் திரு. யுகன் இத்தொகுப்பை மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டார்.
இந்த நூலுக்கான கவனம் எப்படியுள்ளது?
இனிதான் கவனிக்கப்படும் என எண்ணுகிறேன்.
இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்ன. இந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன?
மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை அளித்தது இந்த நூல். இந்தக் கதைகள் பேசும் தளங்களின் வகைமைகள் ஆச்சரியகரமானவை. மனிதவாழ்வு இவ்வளவுதான் என்பதை நாம் ஒருபோதும் உணர்ந்துவிடப் போவதில்லை என்பதற்கு பெரும் சான்று இந்தக் கதைகள். சமகாலப் பொருத்தப்பாடு என்பதை கடந்து நிற்பவை இந்நூலில் உள்ள கதைகள்.
அடுத்து என்ன?
கன்னட எழுத்தாளர் எச்.எஸ். சிவப்பிரகாஷின் ‘குரு’ நூலை மொழியாக்கம் செய்து முடித்துவிட்டேன். விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.
வங்க எழுத்தாளர் திருமதி அனிதா அக்னிஹோத்ரியின் ‘The Awakening’ நாவலை மொழிபெயர்க்க ஆவல்.
***