சென்ற சில ஆண்டுகளாகவே விஷ்ணுபுரம் அமைப்பின் முதன்மைச் செயல்பாட்டாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நரேன். தொடர்ச்சியாக மொழியாக்கங்களை செய்து வருகிறார். அவருடைய முதல் மொழியாக்கச் சிறுகதைத் தொகுதி ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம் வெளிவந்துள்ளது
உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)
நான் வேலுர் மாவட்டத்தில் திருவலம் என்ற பாலாற்றாங்கரை கிராமத்தில் பிறந்தவன். அப்பா G.மணி அம்மா L.K. சசிகலா இருவரும் தபால் துறையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தங்கை ம.ரேவதி மேலாண்மையில் முதுகலை முடித்து தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பள்ளிப் படிப்பை இராணிப்பேட்டையில் முடித்த பின், காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றேன். இக்காலங்களில்தான் வாசிப்பின் தொடர்ச்சியாக எழுதிப் பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். நாடகங்கள் எழுதி இயக்கி மாநில அளவில் பரிசுகள் வென்றேன். இறுதியாண்டில் விகடன் மாணவ பத்திரிகையாளனாக தேர்வாகி காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தின் வாழ்க்கைக் கதைகளை கட்டுரைகளாக விகடன் குழும இதழ்களில் எழுதினேன். கணினி பயன்பாட்டியலில் முதுகலை பட்டப் படிப்பிற்காக கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் நான் கோவைக் குடிமகனாக மாறினேன். ஆறு வருட அமெரிக்க வாசத்திற்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறேன்.
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் குமுதமும் ஆனந்த விகடனும் வாங்குவார்கள். அதில் ஜோக்குகளையும் துணுக்குகளையும் எழுத்து கூட்டி வாசிக்கத் தொடங்கிய எனக்கு அவற்றில் வரும் தொடர் கதைகளை என் பெற்றோர்கள் சிரத்தையாக வாராவாரம் கிழித்து இறுதியாக புத்தகமாக கோர்த்து வைத்தது ஆர்வமூட்டுவதாக இருந்தது. எங்கள் இல்லத் தயாரிப்பில் என் பெற்றோர்கள் பதிப்பித்த நாவல்கள்தான் நான் வாசிக்கத் தொடங்கியதின் ஆரம்பப் புள்ளி. சுஜாதா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் எழுத்தாளர்கள் எங்கள் வீட்டு சேகரிப்பில் இல்லாதபோது நான் இராணிப்பேட்டை நூலகரை அணுகுவேன். அப்படித்தான் என் பன்னிரெண்டாம் வகுப்பு விடுப்பில் விஷ்ணுபுரத்தை அவரிடம் கேட்டு நின்றேன். எப்படி தருவித்துக் கொடுத்தார் என்று எனக்கு இப்போது பிரமிப்பாக இருக்கிறது. பொருள் ஒன்றும் கொள்ளாமல் எழுத்து கூட்டி வாசித்து முடித்தேன். ஜெயமோகனை மூடி வைத்து அதுவரை வந்திருந்த அத்தனை இந்திரா பார்த்தசாரதி நாவல்களையும் வாசித்தேன். பிரபஞ்சன், பாலகுமாரன், எஸ்.ரா., சாரு என்று தொடர்ந்த நான் இரண்டு வருடங்களில் ஜெயமோகனிடம் வந்து மீண்டும் தஞ்சமடைந்தேன். அன்றிலிருந்து அவரின் வலைப்பூ, வலைத்தளம், மின்னஞ்சல் குழு என்று அவரை மானசீகமாக என் ஆசானாக ஏற்று அவரை மெளனமாக பின் தொடர்ந்தேன். சரியாக ஈரேழு வருடங்கள் கழித்து முதன்முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.
இவற்றுக்கிடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கிய நான் ஜெயமோகன் அவரை முன்வைத்த பின் தீவிரமாக பற்றிக்கொண்டேன். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் எனக்குள் வேறு ஒருகோணத்தில் திறக்கத் தொடங்கின. கோவையில் அவரை ஏதேச்சையாக சந்தித்துப் பேசியதும் அமெரிக்காவில் அவருடன் மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ததும் என்னை அவருக்கு மிக அணுக்கமானவராக உணரச் செய்தது.
இலக்கியத்தை நோக்கும் எனது பார்வையை திருத்தி வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் என் ஆர்வத்தை இறுக்கிப் பூட்டிய வண்டியைப் போல செலுத்தும் நாஞ்சிலும் ஜெயமோகனுமே எனக்கு ஆதர்சங்கள்.
இந்தத் தொகுப்பின் கதைகளை மொழியாக்கம் செய்த அனுபவம் மற்றும் சவால்கள் என்ன?
முதன்முறையாக இத்தனை நூறு வார்த்தைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியபோது எனக்கு அத்தனையுமே சவாலாக இருந்தன. வார்த்தை தேர்வில் இருந்து வாக்கிய நீளத்தை தக்க வைப்பது வரை. உதாரணமாக ஒரு நீண்ட வாக்கியத்தில் அலைக்கழியும் ஒரு பாத்திரத்தின் உணர்வுகளை ஆசிரியர் தொகுத்திருப்பார். முதல் வார்த்தையில் “ஆம்” என்று தொடங்கி அவ்வரியின் இறுதியில் “இல்லை” என்றாகி நின்றிருக்கும். அவ்வாக்கியம் ஒரு உணர்வின் எழுத்துப் பிரதி. ஓடும் ஆற்றின் அடியில்தானே என்று ஒரு கூழாங்கல்லை எடுத்தாலும் ஆறு தடம் மாறுவதைப் போன்ற பிரமையில் தவித்திருக்கிறேன். போகப் போக ஆசிரியரும் பாத்திரமும் அவர்கள் எழும்பி நின்றிருக்கும் வார்த்தைகளும் என் மொழியுமேகூட எனக்கு புலப்படத் தொடங்கின.
சவாலுடன் கூடிய சுவாரசியமாக அமைந்தது இக்கதைகளின் வரலாற்றுப் புலங்களை அறிந்துகொண்டது. மற்றும் வெவ்வேறு மொழிகளில் உள்ள பெயர்களையும் உரையாடல்களையும் தமிழில் அப்படியே மொழி மாற்றி எழுதும்போது அதன் உச்சரிப்புகளை தேடி தெரிந்து கொண்டது.
எந்த அடிப்படையில் மொழியாக்கம் செய்யவும் தொகுப்பாக்கவும் நீங்கள் கதைகளை தேர்வு செய்கிறீர்கள்?
சமகால உலகச் சிறுகதைகளை வாசிக்கும் ஆர்வத்தில்தான் ஆங்கில இலக்கிய மின் இதழ்களில் வரும் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். மொழிபெயர்க்கும் கலையை பயிலும் முயற்சியாக வாசித்ததில் பிடித்த கதைகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். அது கிட்டத்தட்ட சுயமாக ஒரு சிறுகதை எழுதும் அனுபவத்தை ஒத்திருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு பெரும் திறப்பாக அமைந்தது. கதையின் மொழி பிரதிபலிக்கும் அவ்வாசிரியனின் உணர்வை நேரடியாக புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாய் ஒன்றை படைக்கும் அகமகிழ்வை தந்ததால் தொடர்ந்து நான் வாசித்த சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அப்படி சமகால ஆங்கில பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுக்கும் அளவிற்கு மொழிபெயர்த்தேன். ஆங்கில குறுநாவல், சிறுகதை தளங்களில் தற்போது பெண் எழுத்தாளர்களின் பங்கு மிகப் பெரியது. பிற்பாடு, அதிகம் விவாதிக்கப்பட்ட பரிசு பெற்ற சிறுகதைகளை கவனிக்கத் தொடங்கியபோது அவை பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகளாகவோ அல்ல புலம் பெயர்தலைப் பற்றிய சிறுகதைகளாகவோ இருந்தன. தொடர்ந்து அச்சிறுகதைகளை மொழிபெயர்த்து இப்போது அது தொகுப்பாக வரவிருக்கிறது.
என் வாசிப்பில் சிறந்ததென உணரும் சிறுகதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கி பின் அதன் மைய ஓட்டத்தை ஒத்திருக்கும் சிறுகதைகளை தேடத் தொடங்கிவிடுகிறேன். சிறந்ததெனத் தோன்றும் பட்சத்தில் அவற்றை மொழிபெயர்த்து அக்கதைகளை சற்று நெருங்கி அணுக முற்படுகிறேன். கீழைத்தேசங்களின் கதைகள், மேற்கத்திய வாசகர்களின் பொரித்த அவலாக மாறாமல் நேர்மையாக சொல்லப்படும் கதைகள், என் விருப்பத்திற்குரியவனாக இருக்கின்றன.
இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்ன? இந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன?
பரவலாக அறியப்படும் சமகால வரலாற்று நிகழ்வுகளில்கூட இன்னும் கண்டறியப்படாத பதுங்கு சுரங்கங்களைப் போல பல்வேறு சிதைவுகளும் அதன் பிறகான கதைகளும் இருப்பது அறிய வரும்போது வரலாறு எனக் கொள்வது எதை என்ற கேள்வியை எழுப்பியது. ஆப்பிரிக்க நாடுகளின் கதைகள், பண்பாடு, விழுமியங்கள் என்று நமக்கு சொல்லப்பட்டிருந்தவை அங்கிருந்து எழுந்து வந்து மேற்குலகின் மொழி பயின்ற ஒருவரின் சொற்களாக வெளிவரும்போது அவை திருத்தப்பட்டு நேர்மையாக திருப்பிச் சொல்லப்படுகிறன. அங்கும் இங்குமென தொடர்ந்து நமக்கு சொல்லப்படும் கதைகளும் நாம் தேடி அறிந்துகொள்ளும் வரலாறும் இரண்டு பக்கமிருந்தும் நம்மை இழுத்து ஒரு நிலையில் நிறுத்துகின்றன. வெறும் தகவல்களாலும் செய்திகளாலும் நாம் அவற்றை புரிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு புனைவாசிரியனின் உள்ளுணர்வை புரிந்துகொள்வது முக்கியம் என்று படுகிறது.
உலகெங்கிலும் இலக்கியம், தேசம் அழிக்கும் போர்களில் தொடங்கி ஒரு கூரையின் கீழ் உணர்வுகள் மிதிபடும் உறவுகள் வரை, வன்முறைக்கு எதிராக உரக்க மன்றாடுகிறது. இந்த உயிர் விதை பிளந்து வருவது எங்கிருந்தோ வரும் ஒரு பூட்ஸ் அடியில் நசுக்கப்படுவதற்கல்ல. இக்கதைகள் அனைத்தும் வன்முறையின் ஒரு துளி உருவாக்கும் சிதைவுகளைப் பற்றி பேசுகின்றன. அடிப்படைவாதமும் அதன் ஆதரவாக எழும் ஒற்றைத் தன்மையிலான மூர்க்கமும் அழிவுகளை நோக்கியே இழுத்துச் செல்லும் என்று சொல்கின்றன. உலமயமாக்கல் நமக்கு ஈட்டித் தந்த “உலகக் குடிமகன்’ என்ற கருத்து நிதர்சனமானதுதானா? முப்பதாண்டுகளில் நாடுகள் முன்னெப்போதையும்விட எல்லைகளை மூடி, தேசிய உணர்வுகளைப் பெருக்கி, அன்னியன் எவன் என்பதை வரையறுக்கத் தொடங்கியிருக்கும் இக்காலத்தில் இக்கதைகள் நமக்கு பிற்காலத்தில் எஞ்சியிருக்கப்போவது என்ன என்று காட்டுகின்றன.
அடுத்து என்ன?
வியட் தன் குவென் எழுதிய புலிட்ஸர் பரிசு பெற்ற நாவலை மொழி பெயர்க்கும் எண்ணத்தில் இருக்கிறேன். வியட்னாம் போரின் பின் நாட்களை அடிப்படையாக வைத்து ஒரு உளவாளியின் கதை இது. சொந்தமாக சில சிறுகதைள் எழுதிப் பார்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
***
===============================================================================
நூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமி | இன்றைய காந்திகள் |
பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]
பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
விஜயராகவன் | தேரையின் வாய் |
பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்
தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
நாகப்பிரகாஷ் |
எரி |
பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்
நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை
ஸ்ரீனிவாசன் |
கூண்டுக்குள் பெண்கள் |
பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
நரேந்திரன் |
இந்தக்கதையை சரியாகச் சொல்வோம் |
பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்
நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
சா.ராம்குமார் |
அகதி |
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
சுசித்ரா |
ஒளி |
பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா
பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
காளிப்ரசாத் |
தம்மம் தந்தவன் |
பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்
கிரிதரன் ராஜகோபாலன் |
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை |
பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ராஜகோபாலன் | ஆட்டத்தின் ஐந்து விதிகள் |