விழா கடிதம் – நினேஷ்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

முதன் முறையாக இந்த வருடம்தான் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்கிறேன். வெள்ளிக்கிழமை காலை விழா அரங்கம் வந்தடைந்த பொழுது மீனாம்பிகை தங்கும் அறைக்கு வழிகாட்டினார்கள். அதற்குப்பின் இந்த இரண்டு நாட்களும் தங்கும் அறை சம்பந்தமாக செய்த அனைத்து தொந்தரவுகளை பொருட்படுத்தாமல் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினர்களை போல் கவனித்துகொண்டார்கள்.

அருமையான உணவு, தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகள், தெளிவான விழா ஒருங்கிணைப்பு செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றிகள்.

நானும் என் நண்பர் நாராயணசாமியும் பெங்களூரில் இருந்து வந்திருந்தோம். மற்ற யாரிடமும் அறிமுகம் இல்லை, அதனால் நான்கு ஐந்து நபர்கள் எங்கே கூட்டாக நின்று பேசிக்கொண்டு இருந்தாலும் நாங்களே வம்படியாக உள்ளே நுழைந்து எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தோம்.

வெள்ளிக்கிழமை கூட்டம் துவங்குவதற்கு முன்பே ஆயிரம் மணி நேரம் வாசிப்பை முடித்த சாந்தமூர்த்தி அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர் படித்த புத்தகங்கள் பற்றியும் மற்றும் அவர் அரசு வேலையில் இருந்த பொழுது சந்தித்த மனிதர்களின் இலக்கிய அறிவு மற்றும் பொது அறிவு நிலையையும், இலக்கியத்தால் நாம் எவ்வாறு மேம்பாடு அடைகிறோம் என்பதைப் பற்றியும் பேசினர். நன்றி சாந்தமூர்த்தி ஐயா.

கே பி வினோத் அவர்களிடம் வெள்ளிக்கிழமை காலை பேசினோம். உடனான அவரது நட்பு பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். இரண்டு நாட்களும் அவ்வப்பொழுது எங்களுடன் பேச அவருக்கு நேரம் கிடைத்தது. அவர் இயக்கிய ஆவணப்படம் திரையிட்ட பிறகு நெகிழ்ச்சியுடன் இருந்தார். ஆவணப்படத்தில் அபி அவர்கள் பேசிய ஒரு வார்த்தையும் அதனுடைய அர்த்தத்தை நான் புரிந்து கொண்ட விதத்தை சொல்லிய பொழுது அவருடன் மிகவும் அணுக்கமானேன். இரண்டு நாட்களிலேயே மிகவும் உறவாகி விட்டார். நன்றி வினோத்.

குக்கூ முத்து. பேசுவதற்கு 10 நிமிடம் தான் நேரம் கிடைத்தது. குக்கூ பள்ளியில் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் தங்கி அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பு கேட்டேன். மிகவும் சந்தோஷமாக அனுமதி கொடுத்துள்ளார். நன்றி முத்து.

லோகமாதேவி, இவர் சுவாமிநாதன் ஐயா வழியாக பெற்ற தகவல்களை பற்றி உங்களது வலைதளத்தில் எழுதிய கடிதத்தை படித்திருந்தேன். அந்தத் தகவல்களை பெறுவதற்காக அவரிடம் பேசினேன். மிகவும் பொறுப்புடன் அந்த அரிய தகவல்களை அனைவரிடமும் பகிர்வதை கடமையாகவே கொண்டுள்ளார். நன்றி லோகமாதேவி.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப், இவருடன் தங்கும் அறையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாசிப்பு சம்பந்தமாக எனக்கு உள்ள கேள்விகள், படித்த மற்றும் படித்து கொண்டு இருக்கும் புத்தகங்கள் பற்றி அவரிடம் பேச ஆரம்பித்துள்ளேன். கேள்விகளை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலளிக்க தொடங்கியுள்ளார். நன்றி சுரேஷ் பிரதீப் அவர்களே.

எழுத்தாளர் சுசித்ரா. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னுடைய பக்குவம் இல்லாத கேள்விகளை பொறுத்துக் கொண்டு, ஒவ்வொரு கேள்விக்கும் பதில் புரிகிறதா என்று கேட்டு கேட்டு, அவர் மற்ற எழுத்தாளர்களிடம் பேசும் நேரத்தையும் எனக்கு வழங்கினார். என்னை மறுபடியும் தொகுத்துக் கொண்டு என்னுடைய சந்தேகங்களை இமெயில் வழியாக அனுப்ப அனுமதி பெற்றுள்ளேன். நன்றி சுசித்ரா அவர்களே.

நாஞ்சில் நாடன் அவர்களுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. அவர் தனியாக மேற்கொள்ளும் பயணங்களில் நானும் இணைந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன்,அவ்வாறு இணைவதால் அவருடன் நீண்ட நேரத்தை செலவிட முடியும் என்று. முடியாது என்பதற்கான காரணத்தை தெளிவாக விளக்கினார். அதன்பின் வேறு வேறு நேரங்களில் சிறு சிறு உரையாடல்கள். நன்றி ஆசிரியரே.

எழுத்தாளர் அமிர்தம் சூர்யா. இவருடைய எந்த எழுத்தையும் படிக்காத காரணத்தால் இரண்டு நாட்களாக பேசுவதற்கு தயங்கிக் கொண்டே, வசவு கிடைத்தாலும் பரவாயில்லை என்று உண்மையை சொல்லி பேச ஆரம்பித்தேன். அதை பற்றிய எந்த புகாரும் இல்லாமல் ஒரு உறவாட ஆரம்பித்து விட்டார். கிடைத்த குறைந்த நேரத்திலும் நுண்ணியமான உரையாடல்கள். நன்றி ஆசிரியரே.

கடந்த 3 மாதமாக வரலாறு மற்றும் புராதான கட்டிடக்கலை சம்பந்தமான புத்தகங்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்தேன், சில புரதான கட்டிடங்களை நேரில் சென்று பார்ப்பதற்காக. அதை விடுத்து, இந்த வருடம் விழாவில் கொண்ட ஆளுமைகளின் எழுத்தைப் படித்து இருந்தால் இந்த விழா இன்னும் எனக்கு உவப்பாக இருந்திருக்கும்.

இலக்கியம் படிக்க ஆரம்பித்த இந்த நான்கு வருடங்களில் எந்த இலக்கிய ஆளுமை மற்றும் நண்பர்களுடன் உருப்படியான தொடர்பை ஏற்படுத்தி கொள்ளவில்லை. அதை செய்திருந்தால் இன்னும் இலக்கியத்தை நுண்ணியமாக உள் வாங்கி இருக்கலாம் என்பதை இந்த இரண்டு நாள் புரிய வைத்து விட்டது.விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆளுமைமைகளும் மிக மிக நெகிழ்வான அன்பையே ஒவ்வொரு வாசகர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்.இந்த இலக்கிய சந்திப்பு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழாவை, எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் என்னை போன்ற அறைகுறையும் மிகப்பெரிய ஆளுமைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக கொடுத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

விஷ்ணுபுரம் விழாவை மையமாய் நின்று நிகழ்த்தி கொண்டிருக்கும் இளைய யாதவர் நீங்கள். நீங்கள் ஒரு காதலனாக, தந்தையாக, குருவாக, வழிகாட்டியாக, எங்களை உருவாக்குபவராக, இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்துபவராக வேறு வேறு முகம் காட்டிக் கொண்டே இருக்கிறீர்கள். இந்தப் பிறவியில் உங்கள் அடிவருடியாக வாழ்வதை விட பேருவுகை வேறு ஏதும் இல்லை.

நன்றியுடன்,

நினேஷ் குமார்,

பெங்களூர்.

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்

முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா

அபி -ஆவணப்படம்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

முந்தைய கட்டுரைவிலாஸ் சாரங் தன் படைப்புலகம் குறித்து…
அடுத்த கட்டுரைபத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்