சென்ற இரு ஆண்டுகளாக புத்தாண்டில் சந்திப்பது எந்த திட்டமும் இல்லாமல் நிகழ்ந்துவருகிறது. ஈரட்டியில் சந்தித்தோம். இம்முறையும் திட்டம் இருந்தது. ஆனால் நண்பர் ஆனந்தகுமார் அவர் ஆனைகட்டியில் நடத்திவரும் சத்-தர்சன் என்னும் அமைப்பின் சார்பில் கட்டப்படும் ஒர் இல்லத்தை நான் திறந்துவைக்க முடியுமா என அழைத்தார். அதையே புத்தாண்டுச் சந்திப்பாக ஆக்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஊட்டியிலிருந்து ஆனைகட்டிக்குச் சென்றேன்
நண்பர்கள் சிலரை அழைத்திருந்தேன். இதை ஒரு பொது நிகழ்வாக அறிவிக்க விரும்பவில்லை, ஆகவே இணையதளத்தில் வெளியிடவில்லை. 30 நண்பர்கள் வந்திருந்தார்கள். 31-ஆம் தேதி காலை கோவையில் இருந்து கிளம்பி சென்று ஆனைகட்டியை அடைந்தோம். நண்பர்கள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். அங்கே தாவோ, சாது, கருப்பன் என மூன்று நாய்கள். தொடர்ந்து விருந்தினர் வரும் இத்தகைய இல்லங்களில் இருக்கும் நாய்கள் மிகமிக நட்பார்ந்தவை என்பதை கண்டிருக்கிறேன். புதிய மனிதர்கள், புதிய காவல்பணிகள் வந்துகொண்டே இருப்பதனால் மிகமிக உற்சாகமானவையும்கூட.
சத்-தர்சன் சிறுவாணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. ஆனந்தகுமார் அதை ஒரு தவச்சாலை போல் அமைத்திருக்கிறார். இசை, ஓவியம், இலக்கியம், தியானம் ஆகியவற்றுக்கான இடம் அது. குளிர்ந்த காடு சூழ்ந்த கட்டிடங்கள். இனிய காற்று. உளம்கவரும் அமைதி.
அங்கே அமர்ந்து ஓய்வாகப் பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் விஷ்ணுபுரம் விழாபற்றிய பேச்சு இல்லை. நான் அதிலிருந்து உளம்விடுபட்டுவிட்டேன். நாஞ்சில்நாடனின் 73 ஆவது பிறந்தநாள். அதை அங்கே கேக் வெட்டி கொண்டாடினோம்.
புகழ்பெற்ற பாடகியான சாருமதி அவர் நண்பர் லியோன் ஆகியோர் இணைந்து ஒரு இசைக்குழு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நாங்கள் அங்கே சென்றபோது அங்கிருந்தனர். எங்களுக்காக சாரு ஒரு செவ்விந்திய மொழி தாலாட்டுப்பாடலையும், வங்கமொழி பௌல் பாடலையும் ஒரு தமிழ்ப்பாடலையும் பாடினார். சாருவின் குரல் சற்றே உலோகக் கம்பித்தனம் கொண்டது. நாட்டாரிசைக்கு உரிய உச்ச உலாவல்களுக்கு உகந்தது. _ ஆஸ்திரேலியாவின் உள்ளிட்ட நாட்டார் இசைக்கலன்களை வாசித்தார். சாரு ஓர் அழகி என்பது இசையை மேலும் இனிதாக்கியது.
மாலை அருகிலிருந்த மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்றோம். ஐம்பதாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூரையிட்ட கோயில். அருகே பெரிய ஆலமரம். ஆனால் அப்பகுதியே ஆயிரமாண்டு தொன்மையை காட்டியது. அந்தியில் அங்கே சென்றது ஒரு ஆழ்ந்த அனுபவமாக அமைந்தது
சிறுவாணி ஆறு வெள்ளத்தில் மேலெழுந்து ஆனந்தகுமாரின் தோட்டத்தின் பெரும்பகுதியை மூடி சேறு நிறைத்து மீண்டுவிட்டிருந்தது. ஆகவே அந்தியில் அங்கே மின்மினிக்கூட்டம் எழுகிறது. ஏழுமணிக்கு அங்கே இருளில் ஓசையின்றி மின்மினிகள் எழுவதற்காகக் காத்திருந்தோம். மெல்லமெல்ல அனல்பொறிகள் எழுந்தன. சூழ ஒரு விண்மீன்வெளி உருவாகியது. மிதக்கும்போது ஒளிக்கோடு. பறந்தலையும் இமைப்பு. இருளில் விண்மீன்களினூடாக மிதந்தலைவதுபோல் ஒரு நடை.
இரவு 12 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். செல்மா லாகர்லெவின் தேவமலர் கதையை நான் சொன்னேன். தொட்டுத்தொட்டு அதைப்போன்ற எளிமையான கவித்துவம் கொண்ட கதைகளை சொன்னோம். 12 மணிக்கு நான் அங்கே ஆனந்தகுமார் கட்டிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கான தங்குமிடத்தை திறந்துவைத்தேன்
ஆனந்தகுமார் இந்த இடத்தை எழுத்தாளர்கள் கலைஞர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இங்கே தங்கி எழுதவோ கலையை உருவாக்கவோ தியானம் செய்யவோ முடியும். மது, ஊனுணவு அனுமதி இல்லை. நாளுக்கு ஒன்றரை மணிநேரம் அங்கே ஏதேனும் வேலை செய்யவேண்டும். ஒருநாளில் காலை அரைமணிநேரம் தியான அறையில் ‘அமைதியாக அமர்ந்திருத்தல்’ என்னும் பயிற்சி உண்டு. அதற்கு வந்தாகவேண்டும். உணவுடன் தங்குமிடம் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 350 ரூபாய் மட்டுமே.
வசதியான அறை. நல்ல உணவு சூழ்ந்திருக்கும் காடு. இரவின் ஆழ்ந்த ஓசைகள். நகரிலிருந்து விலகிச் சென்று எதையேனும் உருவாக்க நினைப்பவர்களுக்குரிய இடம் அது.
திறப்புவிழாவுக்குப்பின் தியானக்கூடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் பேசினோம். நண்பர் கதிர்முருகன், யோகேஸ்வரன் ராமநாதன் ஆகியோர் பாடினார்கள். நான் இந்து மெய்யியல் மரபில் குருமுறை பற்றி அரைமணிநேர உரை ஒன்றை ஆற்றினேன். மூன்று அடிப்படைக் கருதுகோள்கள் பற்றிய உரை.
காலையில் குளித்து நூற்பு அமைப்பிலிருந்து வாங்கிய இயற்கைச்சாயம் கொண்ட கைநெசவு சட்டையை அணிந்துகொண்டேன். நண்பர்களுடன் காட்டுக்குள் ஒரு நீண்ட நடை சென்றோம். நண்பர் கி.ச.திலீபன் [ஓலைச்சுவடி இணைய இதழ்] என்னை ஒரு நீண்ட பேட்டி எடுத்தார்.
நண்பர்கள் ஆற்றில் குளித்தனர். மதிய உணவுக்குப்பின் கோவை வந்தேன். அங்கிருந்து ஊர். ஆனால் பயணம் முடியவில்லை. சென்றதும் ஒரு பகல் மட்டுமே ஊரில். கிளம்பி 3 ஆம் தேதி திரூர் சென்று மாத்ருபூமி இலக்கியவிழாவை தொடங்கி வைக்கவேண்டும். அங்கிருந்து 4 ஆம் தேதி மதுரையில் அயோத்திதாசர் நூல் வெளியீட்டுவிழா. 5 ஆம் தேதி பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு வெளியீட்டுவிழா. இந்த ஆண்டு எட்டுக்கால் பாய்ச்சலில் கிளம்பியிருக்கிறது
***
சாருமதி- லியோன் டைம்ஸ் ஆஃப் இந்தியா
சத்-தர்சன் இணைய தளம்
www.satdarshan.org
[email protected]
***