விழா- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்!

வணக்கம்.விருது விழாவுக்கு வந்திராத அது பற்றி அறிந்திராத ஒருவரை நினைவில் கொண்டு என் விழா நினைவுகளை எழுதியிருக்கிறேன்.

அதன் சுட்டி:https://wp.me/patmC2-9r

நன்றி.

சாந்தமூர்த்தி,

மன்னார்குடி.

***

பெருமதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் விழாவில் இந்த முறை கலந்து கொண்டதும் உங்களை சந்தித்ததும் சென்ற ஆண்டில் மிக மறக்க முடியாத நிகழ்வாக எனக்கு அமைந்தது. முக்கியமாக உங்களை நேரில் முதல் முறையாக சந்தித்ததும், (பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும் , பெரியதாக பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ) நீங்கள் என்னை பார்த்து விட்டு தெரியும் என்று சொன்னதும் மனதிற்கு மகிழ்வு அளித்த கணங்கள். பேசவேண்டும் என்று நினைத்தாலும் உங்களை போன்ற ஒரு பெரிய ஆளுமையுடன் பேச எதோ ஒரு தயக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது.

இந்த விழா சில எழுத்தாளர்களை அருகில் இருந்து சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இப்படி பட்ட ஒரு நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் நீங்கள் மிக சிறந்த ஒரு பணியை உங்கள் முன் முயற்சியில் தமிழுக்கு செய்து கொண்டு இருப்பதாக உணர்கிறேன். இதை தொடர்ந்து செய்வதற்கான எல்லா பலத்தையும் இறை ஆற்றல் உங்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய இயக்கத்திற்கும் கொடுக்கட்டும்.

விழாவில் இருந்த நேரங்கள் புதிய அனுபவங்களாக அமைந்தது. எனக்கு கவிதைகள் படிப்பதில் பெரிய ஆர்வம் இது வரை இருந்தது இல்லை. விஷ்ணுபுர விழாவில் என்னை நன்கு பொருத்தி கொள்வதற்காகவாவது இனி கவிதை வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என தோன்றியது. ஹோம் ஒர்க் எதுவும் செய்யாமல், என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போமே என்று வந்து இருந்தாலும் அங்கு இருந்த ஒவ்வொரு நிமிடமும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

விழா அமர்வில் மாறுபட்ட கருத்துக்களை கூட முதிர்ச்சியுடன் ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்து கொண்டது, ஒவ்வொரு முறையும் அமர்வை நடத்துபவரும் சிறப்பு விருந்தினரும் நல்ல புரிதலோடு நிகழ்வை கொண்டு சென்றது சிறப்பு. அமர்வு முடியும் போது எல்லாம் முடிந்து விட்டதே என இன்னும் கொஞ்சம் நேரம் தொடரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதே தவிர நிச்சயம் சுவாரஸ்ய குறைவு எந்த கணமும் ஏற்பட வில்லை.

என்னை பொறுத்த வகையில் அமர்வுகள் ஒவ்வொன்றும் சிறப்பாகவும் நேரம் போனதே தெரியாமலும் இருந்தது. உதாரணமாக ரவி சுப்ரமணியன் அவர்களின் நிகழ்வை நேரம் கருதி நீங்கள் நிறுத்தும் பொழுது தான் நேரம் மிக கடந்து விட்டது தெரிந்தது. கேள்வி கேட்பவர்களின் stature பார்த்து பதில் அளிக்காமல் பதில்கள் இயல்பாக இருந்ததும் சிறப்பு. நிகழ்ச்சியின் இன்னொரு முக்கிய அம்சம் என்னை மாதிரி ஓரிடத்தில் பொருந்தி உட்காராத ஒருவனை நிகழ்வோடு ஒன்ற செய்தது. மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓரிடத்தில் இருக்க முடியாமல் சினிமாக்களை கூட சமீபத்தில் நான் தவிர்த்து வருகிறேன்.

என்னுடைய சிறிய ஒரு suggestion. அமர்வுக்கு முன்னரே கூட சில கேள்விகளை உங்கள் தளத்தின் மூலம் பெற்று கொண்டு அதனை முன் கூட்டியே சிறப்பு விருந்தினரிடம் கொடுத்து விட்டால் அவர் இன்னும் சிறப்பாக பதில் தயார் செய்ய முடியும் என நான் நினைக்கிறேன். ex tempore சில நேரங்களில் நாம் எதிர் பார்த்த பலன் அளிக்காமல் போகலாம்.எனக்கு தோன்றியதை சொல்கிறேன். தவறென்றால் மன்னிக்கவும்.

சிறப்பான ஒரு விழாவிலே பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அன்புடன்,

சுப்ரமணியம்

***

அன்புள்ள ஜெ,

விருது விழா மிக சிறப்பாக நிகழ்ந்தது. கேஜி சங்கரம்பிள்ளை பேசியதில் ஒன்றில் மட்டும் மாற்று கருத்து தோன்றியது, அவர் இக்காலகட்டத்தின் இலட்சியவாதமாக ‘எதிர்ப்பு அணுகுமுறையை ‘முன்வைத்தார், அதாவது அரசின், அதிகாரத்தின் தவறான செயல்களுக்கு எதிராக நிற்பது, எதிர்ப்பை வெளிப்படுத்துவது என அல்லது நான் அவ்வாறு உள்வாங்கி கொண்டேன்

எனக்கு அதில் உடன்பாடில்லை, ஏனெனில் அரசு என்பதும் மக்கள்தான், பெரும்பான்மை ( ஓட்டின் அல்லது ஆதரவின் அடிப்படையில் ) மக்களின் விருப்பம்தான் அரசின் செயல்பாடும், ஆக மாற்றம் வரவேண்டுமெனில் அது மக்களின் எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்கள் வழியாகவே உருவாகும், எனவே எதிர்ப்பரசியல் என்பதில் இதில் பயன்படாது என்பதே என் எண்ணம், அதற்கு பதிலாக உங்களை போன்றவர்கள் முன்வைக்கும் காந்தியம் வகையிலான அரசியல் செயல்பாடு சரியான வழி என்று நினைக்கிறேன்.

காந்தியம் என்பது விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் அணுகுமுறை என்று புரிந்து வைத்திருக்கிறேன், அதாவது தவறை தவறு என்று உணர செய்வதும் சரியை சரி என்று உணரச்செய்வதும், அவ்வாறு உணர்தலின் வழியாக சரிசெய்து கொள்ளுதலை காந்தியம் என்று எண்ணுகிறேன், அதாவது ஒரு மூடநம்பிக்கை அது ஒரு மூட நம்பிக்கை என்று அதை பின்பற்றுபவருக்கு உணர (விழுப்புணர்வு ) செய்தலின் வழியாக அதிலிருந்து விடுபட செய்வதை போன்ற ஒரு அணுகுமுறை, இது விவாதங்கள் வழியாகவே நிகழமுடியும், இதில் எதிர்பரசியலில் வரும் ஆபத்துகள் இருக்காது.

இன்னொன்று போகன் ஒரு கேள்வி வழியாக முன்வைத்த ஒன்று, அதாவது புராண படிமங்களை கவிதைகளில் பயன்படுத்துவதை பற்றி, அந்த கேள்விபதில் தாண்டி நான் வேறொன்று எண்ணினேன், அதாவது புராண படிமங்கள் என்பது ஒரு அறுபடாத இப்போதும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்று, நம் தமிழ் கவிகள் அதை ஒரு புராதான பொருள் போல எண்ணி விலக்கி கொண்டிருப்பார்கள் என்று எண்ணினேன்.

இன்னொன்று kn செந்தில் ஒரு எழுத வருபவரை, அல்லது எழுத்தாளரை தான் எப்படி மதிப்பிடுவேன் என்று சொன்னது பற்றி, அது அவரது மதிப்பீடு என்ற விதத்தில் சரி, ஆனால் அதை பொதுவான அளவுகோல் என்று நான் என்ன வில்லை, என்னளவில் ஒரு எழுத்தாளர் வெறும் புனைவில் மட்டும் நின்றுதான் பேசுவார் எனில் அதில் ஒரு குறைவு இருப்பதாகவே எண்ணுகிறேன் , மாறாக சமூகத்துடன் புனைவை தாண்டி உரையாடுபவராக (விமர்சக அணுகுமுறையில் ) இருக்கும்போது மேலும் மதிக்க தகுந்தவராக ஆகிறார் என்று எண்ணுகிறேன்

விமர்சனம் என்பது ஒரு தரப்பை எடுத்து எதிர்தரப்பை எதிர்ப்பது என்பதல்ல, மாறாக நேர்மையான விமரிசன அணுகுமுறையை சொல்கிறேன், ஜெயகாந்தன் அந்தவகையில் முழுமையான எழுத்தாளர், அதன் பிறகு நீங்கள், இப்போது லட்சுமி மணிவண்ணன் அண்ணனை அந்த வகையில் சொல்லமுடியும், இப்போது இலக்கிய உலகை தாண்டி சமூக விமர்சக /புனைவு எழுத்தாளர் என்ற வகையில் நேர்மையாக /சார்பில்லாத எழுத்தாளர் என யாருமில்லை, கார்ல் மார்க்ஸ் எழுதிய புனைவுகளை வாசித்ததில்லை, ஆனால் அவரின் அரசியல் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன், அவற்றில் சில குறைகள் இருந்தாலும் இந்த வரிசையில் வைத்து மதிக்க தகுந்த எழுத்தாளர் என எண்ணுகிறேன்

ராதாகிருஷ்ணன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34
அடுத்த கட்டுரைநாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை