உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)
ஊர் சேலம். உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். ஒரு தம்பி, திருப்பூரில் வேலை செய்கிறான். இப்போது எர்ணாகுளத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். முறையான பள்ளிக் கல்வி வாய்க்கவில்லை, வேலைக்குப் போக நேர்ந்தது. இணையம் வழியும், தொலைநிலைக் கல்வி மூலமும் இப்போதே படித்துக் கொண்டிருக்கிறேன்.
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
என் வீட்டில் சற்றே வாசிப்புப் பழக்கம் இருந்தது. தாத்தா வீட்டில் தொடர்கதைகளை இதழ்களிலிருந்து சேர்த்து பைண்ட் செய்தெல்லாம் வைத்திருந்தார்கள். அப்பா அவ்வப்போது நூலகத்துக்கு போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார். இயல்பாகவே கல்வி கிடைக்க வழியில்லாதபோது நூலகம் போவதில் ஆர்வம் வந்தது. அங்கே விபத்தாகவே இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. எடுத்து வருகிற புத்தகங்களை அம்மாவும் நானும் போட்டியிட்டு வாசிப்போம். இப்போது நான் மட்டுமாக தொடர்ந்து வாசிக்கிறேன்.
என் ஆதர்சங்கள் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயமோகன், தாகூர்
சிறுகதைகளை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ன? இதை உங்கள் முதன்மை வடிவமாக தேர்ந்தது ஏன்?
ஒன்று, கச்சிதம். எப்போதும் வடிவம் குறித்து கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இயல்பாகவே எழுதும்போது பல்வேறு எண்ணங்களால் கதையின் போக்கு மாறுவதோடு வடிவமும் கையை மீறுகிறது.
இரண்டு, ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டவை. புதியதாக ஏதாவது சொல்கிறோமா இல்லையா என்கிற பயம்.
இதற்கு முன்னர் அவ்வப்போது கவிதை எழுதினேன். இப்போதும் சிறு நூலாக அவற்றை இணையத்தில் வெளியிட எண்ணம் இருக்கிறது. ஆனால் கவிஞன் என்று என்னை குறிப்பிடும்படி கவிதையை நவீன கவிதை வாசித்து பின்னர் முதிர்ந்து எழுத வந்தவனில்லை. தொடராமல் போனதற்கு காரணம், கவிதை எனக்கு தேவையாக இருந்த மன ஒருங்கிணைவை சற்றேனும் சிதைப்பதாக உணர்ந்தேன். ஒரு உந்துதல் வந்தால் எழுதாமல் இருக்க முடியாது, எழுதவென்று முயற்சி செய்யும் நேரம் வராமலும் போகும்.
அதுவே உரைநடையில் எதை எழுதினாலும் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைப்பை நீங்கள் தக்கவைத்துக் கொள்வீர்கள். மேலும் சிந்திப்பதற்கு திருத்தமான தருக்கத்தை உருவாக்கி மேம்படுத்திக் கொள்ளலாம். அது என்னைப் போன்ற உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனுக்கு அவசியம்.
எரி தொகுப்பில் உள்ள கதைகளை ஏதேனும் ஒரு புள்ளியில் தொகுத்து கூற இயலுமா
ஏன் சிலருக்கு மட்டும் வாழ்வு பிறரைக் காட்டிலும் சுமையாக இருக்கிறது? அப்படி சுமப்பவர்களின், அதிகமும் காயப்படுத்துதலுக்கு தகுந்தவர்களாக இருக்கிற, மனம் புரிந்துகொள்ளப்படாத, உள்ளே குழந்தைகளாகவே இருந்து அன்புக்கு ஏங்குகிற மனிதர்களின் அல்லது நிஜக் குழந்தைகளின் கதைகள்.
எதற்காக எழுதுகிறீர்கள்
வாழ்வு உருவாக்குகிற பிழைத்தல் சார்ந்த பயங்களை எதிர்கொள்ள துணையாக இலக்கியம் மட்டுமே இருந்தது. ஆனால், எழுதுவது என்பது என்னுடைய சுயதேட்டம்.
அடுத்து என்ன?
இன்னும் நிறைய வாசிப்பு. கூடவை நானே ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு இலக்கியத்தின் அடிப்படைகளை படிக்க வேண்டும். அடுத்து இன்னும் நிறைய எழுத வேண்டும். வரும் ஜூனில் கல்லூரிப் படிப்பை முடித்து நகர்ந்தால் அதற்காகப் போகும் நேரமும் வாசிப்புக்கும் எழுத்துக்கும் பயன்படும், அதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன்.
***
===============================================================================
நூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமி | இன்றைய காந்திகள் |
பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]
பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
விஜயராகவன் | தேரையின் வாய் |
பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்
தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
நாகப்பிரகாஷ் |
எரி |
பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்
நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை
ஸ்ரீனிவாசன் |
கூண்டுக்குள் பெண்கள் |
பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
நரேந்திரன் |
இந்தக்கதையை சரியாகச் சொல்வோம் |
பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்
நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
சா.ராம்குமார் |
அகதி |
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
சுசித்ரா |
ஒளி |
பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா
பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
காளிப்ரசாத் |
தம்மம் தந்தவன் |
பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்
கிரிதரன் ராஜகோபாலன் |
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை |
பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ராஜகோபாலன் | ஆட்டத்தின் ஐந்து விதிகள் |