மீள்கை

விஷ்ணுபுரம் விழா எப்போதுமே ஒரு தனிமையை அளிக்கிறது. நண்பர்கள் புடைசூழ இருந்து பேசி, சிரித்து, களித்து மெல்ல உருவாகும் தனிமை அது. முதலில் உருவாவது ஒருவகையான சங்கடம். நான் இவ்விழாவில் என்னை முன்வைப்பதில்லை. எவ்வகையிலும் என் படைப்புக்கள் பேசப்படுவதே இல்லை. ஆயினும் ஒரு பெருமிதம் உருவாவதை தவிர்க்கமுடியாது. அப்பெருமிதம் ஒருநாள் நீடிக்கும். விழா மறுநாள் காலை உலகையே வென்றுவிட்டது போலிருக்கும். நண்பர்களும் நிறைவுடன் மிதப்புடன் இருப்பார்கள். அன்று மாலைக்குள் அது குறையத்தொடங்கும்.

குறைந்தாகவேண்டும். இவை என்னுடையவை அல்ல, என்னால் அல்ல என விலக்கிக்கொள்ளாமல் எவரும் மேலும் செயலாற்ற முடியாது. ஒரு நாவலை எழுதியதும் அதிலிருந்து விலகிவிடுவதுபோல. ஆனால் அது எளிதும் அல்ல. ஆகவேதான் பெரும்பாலும் விழா முடிந்தபின் ஊட்டி குருகுலம் சென்று நித்ய சைதன்ய யதியின் நினைவிடத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அது என்னை விடுவிக்கிறது. மீண்டும் எளியவனாக ஆக்குகிறது. எனக்குமேல் மலைகள் என நிமிர்ந்திருக்கும் ஆளுமைகள் எனக்கு எப்போதுமே தேவையாகின்றனர்

.

விழா தொடர்ந்து நுண்ணிய பதிவுகளை அளிக்கிறது. இத்தகைய விழாக்களில் சிலவற்றை எப்போதும் அவதானிக்கிறேன். ஒன்று அப்போது என்னவகையான ‘டிரெண்ட்’ வாசிப்பில் சிந்தனையில் நிகழ்கிறது என்பது. எவர்மேல் கவனம் இருக்கிறது என்பது..அது தன்னிச்சையானது. அதை எவரும் வடிவமைக்க முடியாது.

நூறுபேருக்குள் அமைந்த ஒரு கூட்டம் ஒரு நட்புத்திரள். அதற்கு முகதாட்சணியங்கள் உண்டு. ஐநூறுபேர் கொண்ட கூட்டம் என்பது ஒரு சமூகம். அது ஒருவகையில் இரக்கமற்றது. எவர் முக்கியம், எது முக்கியம் என அது முடிவெடுக்கிறது. அதை வெளிக்காட்டுகிறது. தங்கள் இடத்தை தாங்களே உணர்வதற்கு எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு இது.

வாசகர்களின் ஏற்பு கொண்ட எழுத்தாளர்கள் நம்பிக்கையை, ஊக்கத்தை அடைகிறார்கள். அல்லாதவர்கள் சோர்வடைகிறார்கள். அவர்களில் இளம்படைப்பாளிகள் அதை சவாலாக எடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் எல்லையை உணர்கையில் சிலர் சீண்டப்படுவதுண்டு. அதற்கு எவரும் எதுவும் செய்யமுடியாது, பொறுப்பேற்கவும் முடியாது.

செந்திலின் நிறுவன வடிவமைப்பில் டிஷர்ட்

 

அதேபோல நூல்கள் விற்பனையாவதன் வழியாக ஒரு பொதுப்போக்கை கவனித்தேன். பொதுவாக புதிய எழுத்தாளர்களின் நூல்கள் விற்பதில்லை என்பது ஒர் உண்மை – அது இயல்பே. அவர்கள் தங்களை இன்னமும் நிறுவிக்கொள்ளாதவர்கள். ஆனால் இம்முறை நிறைய புதுப்படைப்பாளிகளின் நூல்கள் விற்கப்படுவதைப் பார்த்தேன். பலர் மேல் ஒரு கவனம் உருவாகியிருக்கிறதெனத் தெரிந்தது.

விழா மறுநாள் காலை ஏழுமணிக்குள் ராஜஸ்தானி சங் அரங்கை காலிசெய்தாகவேண்டும். ஆறுமணிக்கே ஒவ்வொருவரையாக எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். அருகே இரண்டு இடங்கள் மேலும் தங்குமிடங்களாக எடுக்கப்பட்டிருந்தன. குஜராத்தி சமாஜ் மாளிகை, ராஜா மாளிகை. ராஜா மாளிகையை மேலும் ஒருநாள் தக்கவைத்துக்கொண்டோம். ஐம்பதுபேர் வரை அன்றுமாலை கிளம்புவதாக இருந்தது. அவர்கள் அங்கே தங்கியிருந்தனர்.

அங்கு சென்று அமர்ந்து மதியம் வரைப் பேசிக்கொண்டிருந்தோம். இது பெரும்பாலும் அரட்டைதான். அபி ஃபார்ச்சூன் சூட்ஸிலிருந்து எங்களைப் பார்ப்பதற்காக வந்தார். அவரும் குடும்பமும் மதியம் கிளம்பிச் சென்றார்கள். ஒவ்வொருவராக விடைபெற நானும் யோகேஸ்வரனும் கே.பி.வினோத்தும் நிர்மால்யாவும் ஒரு காரில் ஊட்டிக்குக் கிளம்பினோம்.

ஊட்டியில் நல்ல குளிர். செல்லும்வழியில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். ஆகவே கண்மூடித் திறக்கும் நேரத்தில் சென்றுவிட்டோம். குரு வியாசப்பிரசாத் இருந்தார். வெண்முரசு ‘இமைக்கணம்’ அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதை அவரிடம் அளித்தேன். இரவில் சில குறுஞ்செய்திகளை அனுப்பினேன். ஒவ்வொரு நண்பராக நினைவுகூர்ந்து. பத்துமணிக்கு படுத்து காலை ஏழு மணிக்கு எழுந்தபோது எல்லா தூக்கச்சோர்வும் அகன்று கண்கள் தெளிவாக இருந்தன.

குரு நித்யாவின் சமாதிக்குச் சென்று விளக்கேற்றி சற்றுநேரம் அமர்ந்திருந்தேன். முழுமையாக மீண்டுவிட்டேன் என்று தோன்றியது. காலையில் ஒரு நடை சென்றோம். அருகிருந்த தேயிலைத் தோட்டத்தில் காட்டெருதுக்கூட்டம் ஒன்று நின்றிருந்தது. அதன்மேல் முட்டிக்கொள்ளும் அளவு சென்றபின் திரும்பிவந்தோம். ஊட்டியின் இளவெயில். செயற்கை ஓசைகளே இல்லாத ஆழ்ந்த அமைதி. குளிர். விழிப்பும் தூக்கம்போலவே இருந்தது. எல்லா சொற்களும் கரைந்தழிந்தன. இனி மீண்டும் அனைத்துக்கும் சென்று சேர்ந்துவிடலாம் என எண்ணிக்கொண்டேன்

இத்தகைய கூட்டங்களை நான் ஏன் நடத்துகிறேன்? இவை ஒருவகையில் நித்யாவுக்காக நான் செய்யும் கடன்கள் என இன்று தோன்றுகிறது. அவர் எனக்கு எதையும் சொல்லவில்லை. ஆனால் மௌனமான ஆணை ஒன்று இருந்தது அவரிடம். அதுவே இவையாக விரிந்திருக்கிறது. இன்னும் விரியவும்கூடும். என் எல்லை வரை. ஆனால் இவை எவையும் நான் அல்ல என உணர இங்கே வந்தாகவேண்டியிருக்கிறது.

***

முந்தைய கட்டுரைபத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
அடுத்த கட்டுரைபாண்டிச்சேரியில்…