விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்
விஷ்ணுபுரம் விழாவுக்கு இம்முறை நேராக மலேசியாவிலிருந்து வந்துசேர்ந்தேன். விழா ஏற்பாடுகள் எதையும் என்னிடம் தெரிவிக்கவேண்டாம் என சொல்லியிருந்தேன். தெரிவிப்பதில் பெரிய பயன் ஏதுமில்லை என்பது ஒரு காரணம். நான் அவற்றில் சொல்ல ஏதுமில்லை. அமைப்பாளர்கள் செந்தில், ராம்குமார், விஜய்சூரியன், மீனாம்பிகை, செல்வேந்திரன், ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் அமைப்பாளர்களாகவே பல்லாண்டுகளாக பணியாற்றுபவர்கள். ஆகவே நாகர்கோயிலில் ரயிலில் ஏறிப்படுத்தபோதுதான் விஷ்ணுபுரம் விருது பற்றி நினைத்துக்கொண்டேன்.
அதுவரை மலேசியாவில் நான் ஆற்றிய உரைகளைச் சார்ந்தே என் உள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வுரைகளுக்கு அடிப்படையாக அமைந்த உரையாடல்களை நான் 1995 வாக்கில் நித்ய சைதன்ய யதியிடம் நிகழ்த்தியிருந்தேன். அவருடைய அருகமைவை தொடர்ந்து உணர்ந்துகொண்டிருந்தேன். அலையலையாக அவர் நினைவுகள். புன்னகையாக, ஊழ்க அமைதியாக, சொற்களாக. அந்த இனிமையிலிருந்து மீண்டுவரத் தோன்றவில்லை.
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் அழைப்பாளர்களை ஒருங்கிணைப்பதை மட்டுமே நான் செய்திருந்தேன். அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்களா என்பதை மட்டும் கேட்டுத்தெரிந்துகொண்டேன். என்னுடன் அதே ரயிலில் போகன், லக்ஷ்மி மணிவண்ணன், வி.என்.சூர்யா ஆகியோர் வந்திருந்தனர். அபியும் அவரை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜி.எஸ்.எஸ்.வி.நவீனும் வந்தனர். தேவதேவனும் அதே ரயிலில்தான். வரவேற்க அரங்கசாமி வந்திருந்தார்.
பொதுவாக இவ்விழாவின் பெரிய பணிகளில் ஒன்று விருந்தினரை வரவேற்று திரும்ப அனுப்புவது. ஒவ்வொரு விருந்தினரும் தனிப்பட்ட முறையில் வரவேற்கப்படவேண்டும். அதற்குத்தான் விரிவான நண்பர்கூட்டம் தேவையாகிறது. ரயில்நிலையங்களில், விமானநிலையங்களில் பொறுமையாகக் காத்திருந்து வரவேற்று முகமன் கூறி விடுதிக்குக் கொண்டுசேர்க்கவேண்டும். அவர்கள் அவ்வாசிரியர்களின் நூல்களை வாசித்தவர்களாகவும் இருந்தாகவேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்கள் தன்னை வரவேற்பவர் தன்னை வாசித்திருக்கிறாரா என்பதையே முதலில் கவனிப்பார்கள்.
அபி உள்ளிட்ட முதன்மை விருந்தினர்களுக்கு ஃபார்ச்சூன் சூட்ஸ் ஏற்பாடு செய்திருந்தோம். எனக்கு ராஜஸ்தானி சங் விடுதி. ராஜஸ்தானின் சங் விடுதியின் அறைகள் மேலும் பெரியவை, வசதியானவை. ஆனால் முதன்மை விருந்தினரின் தனிமையை கருத்தில் கொள்ளவேண்டியிருப்பதனால் ஃபார்ச்சூன் சூட்ஸ். ராஜஸ்தானி சங் விடுதி முன்னால் ஏற்கனவே ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். வாசலிலேயே பெரிய கூட்டம். வரவேற்புத்தழுவல்கள், சிரிப்புகள், கூச்சல்கள்.
மேலே அறைபோட்டதுமே குளிப்பதற்கு முன்னதாக போகன், லக்ஷ்மி மணிவண்ணனுடன் ஓர் இலக்கியச் சர்ச்சை தொடங்கிவிட்டது. போகன் சட்டையில்லாமல் விவாதித்துக்கொண்டிருந்தார். என்னை அழைத்துக்கொண்டிருந்தனர். நான் குளித்து உடைமாற்றி வருவதற்குள் அரங்குக்கான பொழுது தொடங்கிவிட்டது. அவசரமாக காலையுணவு. அங்கும் பெரிய கூட்டம். முதல் அரங்கு கவிஞர் இசை. அவர் மேடையில் மிகச்சரியான நேரத்தில் வந்து அமர்ந்தபோது அரங்கு முழுமையாகவே நிறைந்துவிட்டிருந்தது.
அனைத்து அரங்குகளையும் ராஜகோபாலன் ஒருங்கிணைத்தார். அவர் காப்பீட்டுத்துறை பயிற்சியாளர், பயிற்சி வகுப்புகள் ஒருங்கிணைப்பதில் அனுபவம் கொண்டவர். ‘தன்னிச்சையான’ கூடுகைகள் மேல் சிற்றிதழாளர்களுக்கு ஒரு கவர்ச்சி உண்டு – அது ஒரு கருத்துநிலை மட்டுமே. அப்படியொன்று நடைமுறையில் சாத்தியமே இல்லை. அப்படி ஒன்று நடந்தால் தகுதியே இல்லாதவர் ஒருவர் மொத்த நிகழ்ச்சியையும் ஆக்ரமித்துக்கொள்வதே நிகழும். இது அனைவரும் அறிந்த தமிழக யதார்த்தம்.
சரியான நேரத்தில் தொடங்குவது, கேள்விகளைச் சரியானபடி ஒருங்கிணைப்பது என்பது நிகழ்ச்சிகளை பெருமளவுக்கு பயனுள்ளதாக்குகிறது. எந்நிகழ்ச்சியிலும் முதன்மையானவன் அரங்கில் இருக்கும் வாசகனே. அவனுக்குப் பயன்படுகிறதா இல்லையா என்பதே அளவுகோல். அந்த கோணத்தை முன்வைத்து இவ்வரங்குகளை சென்ற ஆண்டுகளில் ஒருங்கிணைத்தமையால்தான் அது வாசக ஏற்புக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழகம் முழுக்க இருந்து தேர்ந்த வாசகர்கள் முந்நூறுபேர் ஆண்டிறுதியின் வேலைநாள் காலையில் முழு அரங்கையும் நிரப்பி அமர்ந்திருந்தது அதையே காட்டியது.
இசை போன்று தணிந்த குரலும், தயங்கிப்பேசும் இயல்பும் கொண்ட ஒருவரின் அரங்கு சிறப்புறவேண்டுமென்றால் அவரை நோக்கி மட்டுமே குவியும் கூர்ந்த அவை உருவாகவேண்டும். வினாக்கள் வழியாகவும், அவருடைய கவிதைகள் சார்ந்தே விவாதம் குவியும்படிச் செய்யப்பட்டதன் வழியாகவும் சிறப்பான உரையாடலாக அமைந்தது. தொடக்கத்திலேயே அரங்கு தீவிரம் கொண்டதாக ஆகியது.
இந்தச் சந்திப்புக்கள் விவாத அரங்குகள் அல்ல. ஓர் எழுத்தாளரை அவருடைய வாசகர்கள் பலகோணங்களில் கூர்ந்து அறியும் முயற்சிகளே. ஆகவேதான் முன்னரே எழுத்தாளர்களின் பெயர்களை அறிவித்து அவர்களை முறையாக அறிமுகம் செய்கிறோம். விவாதம் அவர்களைச் சார்ந்தே நிகழவேண்டுமென முயல்கிறோம். ஆனால் ஓர் எழுத்தாளர் ஒரு கருத்துநிலையை அல்லது புனைவுமுறையை மேடையில் முன்வைக்கையில் அதற்கு எதிரான கருத்துநிலைகள், புனைவுமுறைகளின் குரல்கள் இயல்பாகவே எழுந்துவருவதை தவிர்க்கமுடியாது. ஆகவே சந்திப்பு விவாதமாக மாறி மீண்டும் சந்திப்பாக ஆகிவிடுகிறது.
இவ்விழாவில் இதுவரை வந்த அத்தனை படைப்பாளிகளும் பதிவுசெய்த ஒன்று உண்டு, இங்கேதான் அவர்கள் தங்கள் மிகச்சிறந்த வாசகர்களை, மிக அதிகமான வாசகர்களை சந்தித்திருக்கிறார்கள். தனக்கு வாசகர்கள் இருப்பதே இங்குவந்துதான் தெரிந்தது என்றுகூட எழுதியிருக்கிறார்கள். வியப்பு என்னவென்றால் ஜனிஸ் பரியத், அனிதா அக்னிஹோத்ரி போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகள்கூட தங்கள் மிகச்சிறந்த வாசகர்களை இங்கே கண்டதாக எழுதியிருக்கிறார்கள். ஜனிஸ் சமீபத்தில்கூட அப்படி எழுதியிருந்தார். விஷ்ணுபுரம் போன்றே ஓர் இலக்கியக் கூடுகையை அனிதா அக்னிஹோத்ரி வங்கத்தில் ஒருங்கிணைப்பதாக எழுதியிருந்தார்.
27 காலை பத்து மணிமுதல் இரவு எட்டரை மணிவரை தொடர்ச்சியாக சந்திப்புகள். இசையின் சந்திப்பை நரேந்திரன் ஒருங்கிணைத்தார். நரேந்திரன் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவருடைய மொழியாக்கச் சிறுகதைத்தொகுதி இவ்வாண்டு வெளியாகிறது. கிருஷ்ணன் [ஈரோடு] யுவன் சந்திரசேகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அவர்கள் நெடுங்கால நண்பர்களும்கூட. யுவன் வழக்கம்போல நிகழ்ச்சியை ஒரு குதூகலமான அனுபவமாக ஆக்கினார். விமர்சனங்களை முன்வைக்கவும் தயங்கவில்லை.
கே.என்.செந்தில் நிகழ்ச்சியை விக்ரம் ஒருங்கிணைத்தார். மதிய உணவுக்குப்பின் முதல் சந்திப்பு வெண்பா கீதாயன். காளிப்பிரசாத் ஒருங்கிணைத்தார். அமிர்தம் சூரியா சந்திப்பை சௌந்தர் ஒருங்கிணைத்தார். சௌந்தர் சென்னையில் சத்யானந்த யோகநிலையத்தை நடத்துபவர். அமிர்தம் சூரியாவின் பேச்சு அவர் எழுதி புகழ்பெற்ற சென்னையின் சித்தர்களைச் சார்ந்தும் அவருடைய வடசென்னை வாழ்க்கையைச் சார்ந்தும் சென்றது.
இம்முறை மாலையில் 2 மணிநேரம் நட்புச்சுற்றத்திற்கான பொழுதாக ஒதுக்கப்பட்டிருந்தது. இது இந்த ஆண்டுமுதல் ஏற்பாடு. இரவுகளில் எழுத்தாளர்களும் வாசகர்களும் நட்புகொண்டாடுவது வழக்கம்தான் என்றாலும் இப்படி ஒரு இடைவேளை தேவை என்ற எண்ணம் செந்திலுக்கு சென்ற ஆண்டே உருவானது. இத்தகைய வாசகர் கூடுகைகளில் எழுத்தாளர்கள் தங்களுக்குரிய வாசகச்சுற்றத்தை கண்டுகொள்கிறார்கள். மிக அதிகமான வாசகர்கள் போகனைச் சூழ்ந்தே இருப்பதைக் காணமுடிந்தது. அவர் உரையாடல் தேர்ச்சி கொண்டவர். ஆனால் பேசவே தெரியாத தேவதேவனைச் சூழ்ந்தும் எப்போதும் வாசகர்களின் ஒரு திரள் இருந்துகொண்டிருந்தது.
இவ்வுரையாடல்கள் வழியாக வாசகர்கள் எழுத்தாளர்களை அணுகுகிறார்கள். தங்கள் ஆக்கங்கள் எவ்வண்ணம் வாசிக்கப்பட்டன என்பதை எழுத்தாளர்கள் புரிந்துகொண்டார்கள். இத்தகைய ‘கட்டற்ற’ பொழுதுகள் வணிகச்சந்திப்புகளில் வழக்கம்தான். அவற்றை இலக்கியச் சந்திப்புகளிலும் உருவாக்கலாம் என்பது ஒரு நல்ல யோசனைதான்.
மாலை அடுத்த அமரவை விஜயராகவன் ஒருங்கிணைக்க சுரேஷ்குமார இந்திரஜித் அதில் பங்குகொண்டார். இயல்பான சிரிப்புடன் சுரேஷ் தன் தனிவாழ்க்கையையும் புனைவுகளின் இயல்பையும் பகிர்ந்துகொண்டார். சுரேஷின் படைப்புக்களிலுள்ள அடிப்படைப் படிமங்கள், அவருக்கே உரிய தனிச்சொல்லாட்சிகள் குறித்த விவாதம் அவருடைய புனைவுலகுக்குள் செல்வதற்கான வாயிலாக அமைந்தது.
ரவிசுப்ரமணியம் அரங்கை யோகேஸ்வரன் ராமநாதன் ஒருங்கிணைத்தார். ரவி சுப்ரமணியம் கும்பகோணத்துக்காரர். யோகா மாயவரம். ரவி இசைகற்றவர். யோகா புகழ்பெற்ற தவில்வித்வான் தலைச்செங்கோடு ராமநாதனின் மகன். உரையாடல் ரவியின் தனிவாழ்க்கை, கவிதைகள் வழியாக கவிதைக்கும் இசைக்குமான உறவைச் சார்ந்தே நிகழ்ந்தது. ரவி அவர் இசையமைத்த கவிதைகளைப் பாடினார்.
இரவுணவுக்குப்பின் வழக்கமான இலக்கிய வினாடிவினா. செந்தில் நடத்தும் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நிகழும் ஒரு கொண்டாட்டம். ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான நூல்களை, ஆசிரியர்களை நினைவுகூர்வதற்கான தருணம் இது. கேள்விகள் ஆண்டுதோறும் கடினமாகிக்கொண்டே சென்றன. அரிதான மேலைநாட்டு இலக்கியச்செய்திகள், செவ்விலக்கியச் செய்திகள், சமகால எழுத்தாளர்களான சுரேஷ் பிரதீப், பிரபு காளிதாஸ் வரை செல்லும் குறிப்புகள் என விரிந்த புலம்கொண்ட கேள்விகள். ஆனால் அனைத்துக்கேள்விகளுக்குமே விடைகள் எழுந்தன.
உண்மையில் எனக்கு இந்த அரங்கு எப்போதுமே விந்தைதான். ஒரு வரியைச் சொல்லி ‘இது எந்த நாவலில் வரும் வரி?” என்றதுமே ‘பிரபு காளிதாஸ், நீருக்கடியில் சிலகுரல்கள்’ என விடை எழுவதை பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் எண்ணியே பார்த்திருக்க முடியாது. ஒவ்வொரு பதிலுடனும் கேலியும் சிரிப்பும் என இந்நிகழ்ச்சி ஒருநாளின் நீண்ட இலக்கிய விவாதங்களை இனிதாக முடித்து வைத்தது
அதன்பின் என் அறைக்குள்ளும் வெளியிலுமாக மேலும் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் தூங்கச்செல்லும்போது ஒருமணி. காலை ஐந்து மணிக்கே எழுந்து காபி குடிப்பதற்காகச் சென்றோம். ஒரு பெரிய ஊர்வலம்போல. எழுபது காபி. திரும்பி வந்து குளித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே அவசரப்படுத்தினர். விழா தொடங்கிவிட்டது. ஒன்பது மணிக்குச் சரியாக அடுத்த அரங்கு.
முதல் அரங்கு அஸாமிய எழுத்தாளர் ஜான்னவி பருவா. ராம்குமார் ஒருங்கிணைத்தார். ஜான்னவியின் படைப்புகளின் மையப்படிமமான பிரம்மபுத்திரா, அவர் அளிக்கும் நிலக்காட்சி மற்றும் தாவரங்கள், அவருடைய புனைவுலகின் உணர்ச்சித்தருணங்கள் சார்ந்து வினாக்கள் இருந்தன. ஜான்னவி கூர்மையாக பதில் அளித்தார்.
அவர் புனைவுலகு நகர்ப்புற உயர்நடுத்தரப் பார்வையிலேயே அமைந்திருப்பதனால் எந்த அளவுக்கு அஸாமியத்தன்மையை பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும் வினா எழுந்தது. தன் படைப்புக்களை இவ்வளவு விரிவாக வாசித்த வாசகர்களை சர்வதேசக் கருத்தரங்குகளில் கண்டதில்லை என்று ஜான்னவி சொன்னார். இந்தியாவின் மெய்யான இலக்கியவாசகர்கள் வட்டார இலக்கியச்சூழலிலேயே இருக்கிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன்..
கே.ஜி.சங்கரப்பிள்ளை அரங்கை நான் ஒருங்கிணைத்தேன். அவருடைய பேச்சை மொழியாக்கம் செய்வதே என் வேலை. கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளின் தொகுப்பாகிய ‘பலாக்கொட்டைத் தத்துவம்’ ஜான்னவி பருவாவால் வெளியிடப்பட்டது. சங்கரப்பிள்ளை தன் கவிதையின் இலட்சியவாதம் என்பது நீதியுணர்வில் வேரூன்றிய எதிர்ப்பே என்று உறுதியுடன் சொன்னார்.
எல்லா வினாக்களுக்கும் அக்கணத்திலேயே எழுந்த ஆழ்ந்த பதில்களைச் சொன்னார் சங்கரப்பிள்ளை. எதிலும் பாவனைகள் ஏதுமில்லை. மலையாளக்கவிதைகளின் இசைத்தன்மை, அக்கவிதைகளிலுள்ள நேரடி அரசியல், பிறபண்பாட்டுச் செயல்பாடுகளுடன் தொடர்புகொண்டு செயல்படும் இயல்பு ஆகியவற்றுக்கான பின்புலத்தை விளக்கினார்.
கவிஞர் பெருந்தேவியின் அரங்கை சுசீல்குமார் ஒருங்கிணைத்தார். கல்வியாளரான சுசீல்குமார் ஈஷா யோகமையத்தின் கல்விப்பணிகளை ஒருங்கிணைப்பவர். சிறந்த கவிதை வாசகர். பெருந்தேவி அரங்கை தன்னம்பிக்கையின் விளைவான அமைதியுடன் எதிர்கொண்டார்.ஒருமுறைகூட முகத்திலிருந்த சிரிப்பு விலகவில்லை. எதிர்கவிதை என ஒன்றை முன்வைத்தாலும் அதை ஒரு அடையாளமாக தன் கவிதைமேல் சுமத்துவத்தை மறுத்துக்கொண்டும் இருந்தார்.
அவருடைய கவிதைக்கொள்கை பொதுவாக இரு தரப்பினரால் எதிர்க்கப்படும். செவ்வியல் கவிதை நோக்கு கொண்டவர்களாலும் நவீனத்துவக் கவிதைநோக்கு கொண்டவர்களாலும். அவ்வெதிர்ப்பும் உரையாடலும் உருவாகி வந்தன. லக்ஷ்மி மணிவண்ணன் முதன்மையாக அவருடைய தரப்பை எதிர்த்துப்பேசினார்.
மதிய உணவுக்குப்பின் கடலூர் சீனு ஒருங்கிணைத்த அரங்கில் கவிஞர் அபி வாசகர்களிடம் உரையாடினார். அவருடைய கவியுலகில் உள்ள அருவத்தன்மை, அதன் முன்தொடர்ச்சியாக அமைந்த கவிஞர்கள், அவருடைய கவிதைகள் அடைந்த பரிணாமம் என அவருடைய உரையாடல் நீண்டுசென்றது. அவருடைய கவிதைகளுக்கும் அவர் கேட்கும் இசைக்கும் இடையேயான உறவு அரங்கில் வெளிப்பட்ட ஒரு முக்கியமான வெளிப்பாடு.
அவருடைய அரங்கில் பெரும்பாலும் அவர் கவிதைகளைப்பற்றிய வெவ்வேறு கோணங்களிலான பார்வைகளே வெளிப்பட்டன. எதிர்ப்புத்தரப்பு எழவில்லை. அவருடைய நிதானமான விளக்கம், எழாத குரலும் அரங்குக்கு மிக அணுக்கமானவையாக இருந்தன.
மாலை விழா அரங்கு. இம்முறை சென்ற ஆண்டைவிட திரள் மிகுதி. இதை எல்லா ஆண்டும் சொல்கிறோம். முன்பு இளையராஜா வந்தபோது அரங்குக்கு வெளியிலும் ததும்பும் கூட்டம் இருந்தது. இப்போது வரும் கூட்டம். இலக்கியத்தின் பொருட்டு மட்டுமே திரள்வது. கோவையின் இலக்கியமுகங்கள், தொழிலதிபர்கள் என திரண்டிருந்த இக்கூட்டம் தமிழில் நவீன இலக்கியத்திற்கும் கூட்டம் வரும் என்பதற்கான சான்று. நான் மீளமீளச் சொல்வது ஒன்றே, உங்கள் பொழுது வீணடிக்கப்படாது என வாசகர்களுக்கு உறுதியளியுங்கள். கூட்டம் வரும்.
விழாவுக்கு முன் கே.பி.வினோத் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. அபியின் கவிதையின் இயல்புகளையே ஆவணப்படம் முன்னிறுத்தியது. அவருடைய கவிதைகளின் அருவத்தன்மை, அவற்றின் பேசுபொருளான தத்துவத்தேடல். அவற்றுடன் தொடர்புகொண்டது என்ற அளவிலேயே அவருடைய தனிவாழ்க்கை காட்டப்பட்டது. அவருடைய கவிதைகளின் இயல்பான மென்மையை தானும் கொண்ட ஆவணப்படம்
விழாவில் வழக்கம்போல இரு இறைவணக்கம். நண்பர் கண்ணன் தண்டபாணியின் மகள் மகிழ்மலர் தேவாரம் பாடினார். நண்பர் ஜான் சுந்தர் நாகூர் ஹனீஃபாவின் பாடல் ஒன்றைப் பாடினார். விழாவை செல்வேந்திரன் தொகுத்துவழங்க அரங்கசாமி விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகளை சுருக்கமான அறிக்கையாக வழங்கினார். ஆவணப்படத்தை பெருந்தேவி வெளியிட்டார். அபி குறித்த நூலை ஜான்னவி வெளியிட்டார். பரிசு அறிவிக்கையை செந்தில்குமார் வாசிக்க ஜான்னவி பருவாவும் கே.ஜி.சங்கரப்பிள்ளையும் அபிக்கு விருதை வழங்கினர்.
விழாவில் ரவி சுப்ரமணியம் அபியின் கவிதைகளைப் பாடினார். முதல்முறையாக ஸ்வேதா சண்முகம் உரையாற்றினார். சென்ற ஆண்டு இளம்வாசகர் சந்திப்புக்கு வந்தவர். அவர் கொண்டுவந்திருந்த கதை முக்கியமானது – கடைசி முகலாய அரசரின் வாழ்வின் ஒருநாள். நாளை தமிழின் சாதனையாளராக திகழவிருக்கும் படைப்பாளி அவர் என நினைக்கிறேன். தன் முதல் உரையை மிகச்சிறப்பாக நடத்தினார். ஜான்னவி பருவா, கே.ஜி.சங்கரப்பிள்ளை ஆகியோர் உரையாற்றினர்.
அபியின் உரை நிதானமான உணர்வுகளுடன் அமைந்திருந்தது. நன்றிகூறல்களுக்குப்பின் தன் கவிதைக்கொள்கையை, தன் நம்பிக்கைகளை விரித்துரைத்தார். அபியின் குடும்பம் மகன்களும் மகள்களும் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களின் பொங்கும் உணர்வுகளை பார்த்துக்கொண்டே இருந்தேன். அது இச்செயல் எத்தனை மதிப்பு மிக்கது என எனக்கு உணர்த்தியது.
விஷ்ணுபுரம் அமைப்பைப் பற்றிப் பேசும்போது ஜான்னவி பருவாவிடம் இந்த அமைப்புக்கு நிர்வாகிகள் என்றோ, நிர்வாகக்குழு என்றோ ஏதுமில்லை என்று சொன்னபோது வியப்படைந்தார். உறுப்பினர்கள் என்றும் எவரும் இல்லை. தன்னியல்பாக வந்து கூடுபவர்களால் ஆனது இது. ஆண்டுக்காண்டு பங்கெடுப்போரின் எண்ணிக்கை, இளைஞர்களின் வருகை பெருகி வருகிறது. மேலிருந்து பார்க்கையில் முக்கால்வாசி பங்கேற்பாளர்கள் இளைஞர்கள், பாதிப்பங்கினர் 25 வயதுக்காரர்கள் என்பது ஒருவகையில் திகைப்பையே அளித்தது.
விஷ்ணுபுரம் அமைப்பினர் என தன்னை உணர்பவர் அனைவரும் விஷ்ணுபுரம் அமைப்பினரே என அரங்கசாமி அறிவித்தபின் விழாவுக்குப்பிந்தைய கூட்டுப்புகைப்படம் எடுக்க மேடையில் கூடியபோது பெருங்கூட்டம். முகங்கள் புள்ளிப்புள்ளிகளாகத் தெரியும் அளவுக்கு நண்பர்திரள்.
விழா முடிந்த நிறைவு. அரங்கை காலிசெய்து அளிக்கவேண்டும். எங்கேனும் அமரலாம் என்று வெளியே சென்றோம். என் அறைக்குச் செல்லத் தொடங்கி அங்கே அத்தனைபேர் அமர முடியாதென்பதனால் திரும்பி வந்தோம். வெளியே நல்ல பனி. ஆகவே மண்டபப் படிக்கட்டிலேயே அமர்ந்தோம். இரண்டு மணிநேரம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம். மேடையில், அரங்கில் ‘சொதப்பியவர்களை’ பற்றிய கேலிதான் பெரும்பாலும். பன்னிரண்டரை மணிக்கு வலுக்கட்டாயமாக எங்களை கலைத்துக்கொண்டோம்.
அதன்பின்னரும் அறைக்குள் நானும் கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். என் தொண்டை அடைத்திருந்தது. மூச்சு எழவில்லை. ஆயினும் துயிலில் மூழ்குவதுவரை பேசிக்கொண்டிருந்தோம். விழாவின் நிறைவு, எதிர்கால திட்டங்கள். இரவு இரண்டு மணிவரை. பெரும்பாலும் சிரிப்புதான். இச்சிரிப்புதான் எங்கள் நிகழ்ச்சிகளை உரியமுறையில் நிறைவுறச் செய்கிறது.இங்கே இலக்கியத்தரப்புக்கள் உண்டு. விவாதம் உண்டு. ஆனால் அது இனிய நட்பார்ந்த சூழலில் நிகழவேண்டும் என எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன்.
வெறுப்பைக்கொட்டும் கசப்பை வளர்க்கும் உளநிலைகளே நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அவற்றுக்கு நடுவே ஒரு சிறு தீவு இது. நுண்ணுணர்வின்மை, அறிவார்ந்த நோக்கின்மை, வாசிப்பின்மை ஆகியவை நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. நடுவே இது ஒரு சிறு தீவு. அங்கே சலித்தவர்கள், அமைய முடியாத நுண்ணுணர்வு கொண்டவர்களே இங்கே வருகிறார்கள். அவர்கள் வேறு ஓர் உலகில், தங்கள் கனவுகளுடன் தனித்து நின்று செயலாற்றவேண்டும் என்பதே இவ்வரங்கின் நோக்கம். அது நிறைவேறுகிறது என்பதே இந்நாட்கள் அளித்த நிறைவு.
விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019
விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்
முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்
விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா
அபி ஆவணப்படம்