‘தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

.

உலகின் பல்வேறுபட்ட படைப்பாளிகளின் படைப்புகளை படிக்கும்போது வாழ்வின் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வு, நிலைகுலைவுகள் ஆகியவற்றை அவர்கள் காண்பிக்கும் காட்சிபடிமங்களும் பல்வேறு கோணங்களும், அவர்களுடைய கலாச்சாரம் வாழ்நிலை சூழல் மதம் மற்றும் அரசியல் சார்ந்து பிரதிபலிப்பதை பார்த்து மொழிபெயர்க்க ஆவல் கொண்டேன்.

இத்தொகுப்பில், புனைவுகதைகளில் உள்ள உணர்வு வித்தியாசங்களுக்காகவும், படைப்பாளிகளின் படைப்புப் பார்வையில் பெண் எனும் பிரகிருதியை அவர்கள் அணுகும் விதங்களுக்காகவும் என் ரசிப்பின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளேன்.

கட்டற்ற வேட்கையையும், உடலை கொண்டாடும் போக்கையும், மாயா யதார்த்த சொல் முறையையும், தென் அமெரிக்க எழுத்தாளர்களில் குறிப்பாக போர்ஹேவிடமும் இஸபெல்லா அலெண்டே விடமும் காண்கிறேன். அவர்களின் கதை சொல்லும் பாங்கு ஒரு விடுதலை உணர்வோடும், மனித வாழ்வை கொண்டாடும் விதமாகவும் இருக்கிறது.

ரேமண்ட் கார்வர் அமெரிக்காவின் முக்கிய சிறுகதையாளரும் கவிஞருமாவார். எளிமையான சித்தரிப்புகளோடு குறுக தரித்த கூறுமொழியா சுருங்க சொல்லி விரிந்த பொருள் அளிக்கக்கூடியவர். அமெரிக்க யதார்த்தவாத எழுத்தை மறுபடியும் புதுப்பித்தவர். ஆண் பெண் உறவின் சிடுக்குகளை நுட்பமாகவும் குறைந்த மொழியின் வாயிலாகவும் புரியவைத்தவர்.

ஐசக் பாஷாவிஸ் சிங்கர் யூத எழுத்தின் பிதாமகர் என்றே சொல்லலாம். 1978-ல் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை பெற்றவர். தனது எழுத்தில் ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் இணைத்து மானுடத்தின் ஆதார கேள்விகளுக்கான பதிலை தேடுகிறார்.

D.H.லாரன்ஸ் ஆங்கில எழுத்தாளரும் கவிஞருமாவார். இவர் தனது எழுத்தில் நவீனமயமாதலின் மனிதனின் பாதிப்பை பற்றியும் அவனின் மனநலம் வீரியம், காமம், உள்ளுணர்வின் உந்துசக்தி போன்ற காரணிகளை ஆராய்ந்தார். நான் மொழிபெயர்த்த இவரது சிறுகதையில், அன்பும் பொருளாசையும் எப்படி ஒன்றிணைய முடியாத நிலையில் உள்ளது என்பதை ஒரு நடுத்தர குடும்ப சூழலின் மூலம் சொல்லிச்சென்றுள்ளார்.

சல்மான் ரஷ்டி, இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிப்பவர். இவரது எழுத்து மாயாயதார்த்தமும் பகடியும் சரித்திர காலவிமர்சனங்களையும் தாங்கி வருவதாகும். “சாத்தானின் கவிதைகள்” நாவலால் மதவாதிகளால் உச்சபட்ச தண்டனை அறிவிக்கபட்டதால் இங்கிலாந்திற்கும் பின்பு அமெரிக்காவிற்கும் சென்றுவாழ வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டார். இவரது கதையில் பெண்களின் நிலை பண்டைய காலத்தில் இருந்த கோலத்தை மாயாஜால உத்தியோடு விவரிக்கிறார்.

வங்க மொழி எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி இந்திய ஆட்சிபணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளம்பிராயத்தில் இவர் சத்தியஜித் ரே நடத்திவந்த குழந்தைகள் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். இவரது எழுத்தை வங்க பெரும்எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் எழுத்தோடு ஒப்பிடுவார்கள். சாமானிய மக்களின் பாடு, அவர்களது பரிதவிப்பு, போராட்டம், வாழ்நிலை சூழ்நிலைகளை தன் எழுத்தின்மூலம் காட்டுகிறார். இந்த கதையில் பாமர ஏழை மக்களின் இடப்பெயர்வை சோகத்தோடு நினைவுகூர்கிறார்.

வாழ்வில் எல்லாம் முக்கியம் ஆனால் கடைசியில் எதுவும் அவ்வளவு முக்கியமில்லை, எனும் சித்தாந்தத்தின் படி வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு செல்லும் என்னையும் ஆரம்பத்திலிருந்து ஊக்கப்படுத்திய என் ஆங்கிலதுறை பேராசிரியர் திரு.மைலப்பன், நண்பர் இ.சி.ராமச்சந்திரன், புதிய எழுத்து மனோன்மணி, மதன்குமார், பாரதி இளங்கோ ஆகியோருக்கு என் அன்பு.

எனக்கு படைப்பாளியாக அறிமுகமாகி தத்துவவாதியாக பரிணமித்து, திகைக்க வைக்கும் வாழ்வின் இருண்ட பக்கங்களுக்கு ஒளி பாய்ச்சி விளக்கமளிக்கும் நண்பராக மாறிப்போன திரு.ஜெயமோகன் அவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

விஜயராகவன்.

முந்தைய கட்டுரைவிழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்
அடுத்த கட்டுரைபத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்