விழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்

வணக்கம்..

நான் முதன் முறையாக விஷ்ணுபுரம் விழாவிற்கு இவ்வருடம் 2019 வந்திருந்தேன்.மிகச் சிறப்பாக நடைபெற்றது பெருந்திருவிழா. அரங்கில் செலவிட்ட எனது கணங்கள் அனைத்திலும் பிரமிப்பில் திளைத்துக்கொண்டிருந்தேன்.

பல்வேறு எழுத்தார்கள், வாசகர்கள் என ஒரு பேரறிவுக் கூட்டம் அங்கு நிறைந்திருந்தது. கவிஞர் அபிக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை விஷ்ணுபுரம் அளித்திருக்கிறது. விழா ஒருங்கிணைப்பு மிக அருமையாக செய்திருந்தார்கள் அவர்களுக்கு நன்றி.இரண்டாம் நாள் அங்கு வருவதற்கு உண்மையில் பணம் இல்லை பக்கத்து வீட்டில் நூறு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு தான் வந்தேன்.அங்கு பரிமாறப்பட்ட உணவில் சிலதை நான் அப்போது தான் முதன் முதலில் பார்க்கிறேன்.

உங்களின் சிறுகதைகள் அடங்கிய ஒரு பெரிய தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.பல்லக்கு, மாடன் மோட்சம் சிறுகதைகள் அருமை. விழா முடிந்ததலிருந்து உண்மையில் ஏதோ ஒன்று எழுத வேண்டும் போலிருக்கிறது அய்யா..கொஞ்சம் எழுத துவங்கியுள்ளேன்.

உங்களின் மீதான அந்த தாக்குதலுக்கு பிறகு தான் உங்களை எனக்கு பிடித்துப் போனது அய்யா,அதற்குப்பிறகு உங்கள் மீதான சில எள்ளிநகையாடல்தான் உங்களை தேட வைத்தது பார்க்க வைத்தது அங்கு வரவைத்தது எல்லாம்.நான் உங்கள் அருகில் கூட விழாவில் வரவில்லை உங்களை பார்ப்பதற்கு முன்னாலே ஒருவித நெருக்கம் எனக்குள்ளே உருவாகிருந்தது அய்யா.

நன்றி…

ஜெகதீஷ்

***

அன்புள்ள ஜெ,

வழக்கம் போல் மற்றொரு சிறப்பான விழா. கிருஷ்ணன் கூறியது போல் கே.ஜி.சங்கரன்பிள்ளை அவர்களின் அமர்வு ஆகச் சிறந்ததாக இருந்தது. இத்தகைய அமர்வுகளில் ஆசிரியரின் தனிப்பட்ட ஆளுமை வெளிப்படுவதும் அதை வாசகன் கண்டுகொள்வதும் முக்கியமென நினைக்கிறேன். அது நிகழ்வதற்கான கூரிய கேள்விகள் எழுப்பப்பட்டன. தனிப்பட்ட முறையில் எனக்கு சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் அமர்வு முக்கியமாக இருந்தது. அவர் படைப்புகள் எழும் ஊற்றை கண்டுகொள்ள முடிந்தது. இதிலிருந்து மேல்சென்று அவர் படைப்புகளை வாசிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

விழாவின் ஆரம்பத்தில் ஒருசில நொடிகள் உங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. “தொடர்ந்து வாசிக்கிறீர்களா?” எனக் கேட்டது உங்கள் ஞாபக இடுக்கில் என் சிறிய நினைவும் இருப்பது அறிந்து மகிழ்ந்தேன். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக ருஷ்ய இலக்கியங்கள். போரும் அமைதியும் நாவலைத் தொடர்ந்து அன்னா கரினீனா, குற்றமும் தண்டனையும் ஆகிய இரு பெரு நாவல்களை வாசித்து முடித்தேன். தற்போது அசடன் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல இங்கு சொல்முகம் வாசகக் குழுமம் வாயிலாக மாதம் ஒரு நாவலை வாசித்து விவாதிக்கிறோம். இதுவரை 8 நாவல்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். வருகிற ஜனவரி மாதத்திற்கு “மானுடம் வெல்லும்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் சுனீல் கிருஷ்ணன், சுசித்ரா முதலானவர்களிடம் வாசிக்கக் கொடுத்து அவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறேன். சமீபத்தில் சொல்வனத்தில் என் சிறுகதை வெளியானது.

சுட்டி:

குருதி வழி – சிறுகதை – பாலாஜி பிருத்விராஜ்

நேரமிருக்கும் போது படித்துப் பார்க்கவும். நன்றி.

பாலாஜி பிருத்விராஜ்.

***

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019

முந்தைய கட்டுரைஅபி -ஆவணப்படம்
அடுத்த கட்டுரை‘தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை