உங்களுக்கும், திண்ணையில் உங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் ரவி சீனிவாசனுக்கும் என்னதான் பிரச்சினை? ஏன் இத்தகைய மோதல்? இது வெவ்வேறு துறைகள் சார்ந்த பார்வைகள் வேறுபடுவதன் விளைவா?
— R.விஜயா.
ரவி சீனிவாசுடன் நான் எந்தப் பெரிய மோதலிலும் ஈடுபட்டதே இல்லை. விளையாட்டாக சில எழுதினேன், விட்டுவிட்டேன். அவரைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே நண்பர்களுக்கும் சொல்லிவருகிறேன். அவர் பலகாலமாகச் செய்திகளை வாசிக்கிறார். விளைவாக ஏராளமாகத் தெரிந்துவைத்திருப்பதாக நம்புகிறார். தீயூழெனலாம், நிறைய தெரிந்து வைத்திருப்பதற்கும் சிந்தனை மற்றும் இலக்கியத்தில் நிகழும் படைப்பூக்கத்துக்கும் தொடர்பே இல்லை. இவர்களால் எதையுமே எழுதி எவரையுமே பாதிக்க முடிவதில்லை. வெறுமே தகவல்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம், பிறர் எழுதிய தகவல்கள் தவறு என்று வாதம் செய்யலாம். ஆனால் வாசகன் தேடுவது தகவல்களை அல்ல. சிந்தனைகளை, சிந்தனைகளைத் தூண்டும் படைப்புசக்தியை. தகவல்கள் இந்த யுகத்தில் எங்குமே கிடைக்கும்.
ஆகவே இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு அங்கீகாரம் இல்லை என்றோ புறக்கணிக்கப்பட்டவர்களாகவோ உணர்கிறார்கள். அங்கீகாரம் பெற்றவர்கள் படைப்பூக்கம் கொண்டவர்கள் மீது கசப்பையும் வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள். மொத்தச் செயல்பாடுமே எதிர்மறையாக ஆகிவிடுகிறது. இதைப்போல பலர் இங்கே உள்ளனர். உலகமெங்கும் இருப்பார்கள். இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் எதையாவது செய்யமுடியும்
ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் என் மீது வெறுப்பைக் கொட்ட உக்கிரமாக முயல்வது உண்டு. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அக்கினிபுத்திரன். பிறகு விமலாதித்த மாமல்லன். பிறகு அறிவுமதி. இப்படிப் பலர். மாதம் ஒரு கட்டுரையாவது இவ்வாறு எழுதப்படுகிறது- நான் ஒரு அடிமுட்டாள், அரிச்சுவடி கூடத்தெரியாதவன், கடைந்தெடுத்த அயோக்கியன் என்றெல்லாம். ரவி சீனிவாஸ் என் கருத்துகளையோ தரப்பையோ மறுக்கவில்லை, நான் ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே என நிறுவ ஓயாது முயல்கிறார். நான் எப்போதுமே என்மீது கொட்டப்படும் வெறுப்பலைகளை இம்மிகூட பொருட்படுத்தியத இல்லை. பொருட்படுத்தியிருந்தால் இந்த அளவுக்கு ஊக்கத்துடன் எழுதியிருக்க இயலாது.
அதற்கு இரு காரணங்கள். என் இடம் எனக்குத்தெரியும். அதை உணர்ந்த வாசகர்கள் எனக்கு உள்ளனர்.