திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்
- உங்களைப்பற்றி – கல்வி, குடும்பம், வேலை:
இளநிலை – வேளாண்மை, முதுநிலை: ஊரக மேலாண்மை
குடும்பம்: சிறு விவசாயக் குடும்பம். அம்மாவும் அப்பாவும் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள். அம்மாயி, தாய்மாமாவின் உதவியால் படித்தேன். காதல் திருமணம் – மனைவி விஜயலக்ஷ்மி மனித வளப் பேராசிரியர். மகள் முதுநிலை – வளர்ச்சியியல் பட்டதாரி. தற்போது சென்னை ஐஐடியில் திபெத் அகதிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கிறார். மகன் அருண் – இளநிலை பொறியியல் படிக்கிறார்.
வேலை: 30 ஆண்டுகளாக, கூட்டுறவு, தனியார் துறைகளில் வேலை – தற்போது தான்ஸானியாவில் பணி.
- இலக்கியப் பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
வார இதழ்கள் தான் முதலில் பரிச்சயம் – ராணி துவங்கி விகடன் வரை. பள்ளியில் படிக்கையில் சுஜாதாவும், ஜெயகாந்தனும், சாண்டில்யனும். பின்னர் கல்லூரியில், பாலகுமாரன் துவங்கி கி.ரா, சுந்தர ராமசாமி என அறிமுகம். அதன் பின்னர் தமிழகத்தில் இருந்து வெளியில் இருந்ததால், இடைவெளி. பின்னர் வண்ணநிலவன், ஜெயமோகன். ஆதர்சங்கள்: ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ரா, ஜெயமோகன்.
- காந்தியை அணுக்கமாக வந்தடைந்தது எப்படி?
ஆறாம் வகுப்பில் என் வாழ்க்கைக் கதையைப் படித்ததில் துவங்கியது ஒரு அணுக்கமான அறிமுகம். பின்னர் அட்டன்பரோவின் காந்தி. அதன் பிறகு ஊரக மேலாண்மைக் கழகத்தில், அமுல் போன்ற மற்றும் காந்தியத் தொண்டு நிறுவனங்களின் பணிகள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அது மிக விரிவான அறிமுகம். எங்கோ ஒரு இடத்தில், காந்தி நம் உள்ளுணர்வைத் தொட்டு விடுகிறார். அதன் பின்னர் அவரைப் பற்றிப் படிப்பதெல்லாம், நம்முள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில், உள்ளுணர்வில், குற்றமற்ற ஒரு உயர் ஆளுமை எப்படிச் செயல்பட்டிருப்பார் என நம்புகிறோமோ, அப்படித்தான் காந்தி எப்போதும் செயல்பட்டு வந்திருக்கிறார். பலரும் காந்தியைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளின் மூலமே கேள்விப்பட்டிருக்கிறேன் எனச் சொல்வார்கள். எனக்கு அப்படி நிகழவில்லை. அவரை, கிட்டத்தட்ட கடவுளின் தூதர் என்னும் நிலையில் இருந்துதான் அறியப் பெற்றிருக்கிறேன். எதிர்மறைச் செய்திகளை ஒரு போதும் நம்பியதில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் நினைப்பேன் – பின்னர், தரவுகள் அந்த நம்பிக்கை சரி என நிருபித்திருக்கின்றன
- இன்றைய காந்திகளுக்கான யோசனை எப்படி வந்தது?
எனது முதல் கட்டுரை, எனது கல்விநிலையத்தின் தலைவரும், வெண்மைப்புரட்சியின் தந்தையுமான டாக்டர்.வர்கீஸ் குரியன் இறந்த போது, எழுதிய அஞ்சலிக் குறிப்பு.
அந்தக் காலத்தில், ஜெயமோகன் நவ காந்தியர் பற்றிய ஒரு கட்டுரைத் தொடர் எழுதப்போவதாகச் சொல்லியிருந்தார்.
பின்னர், நண்பர் ஒருவர் நவகாந்தியர்களைப் பற்றி எழுதலாமே எனச் சொல்லியிருந்தார்.
சென்ற ஆண்டு, எனக்கு நண்பர்கள் மூலமாக வந்த வாட்ஸ் அப் செய்தி ஒன்று வருத்தப்பட வைத்தது. என்.டி.டி.வி யில் ஸ்ரீனிவாசன் ஜெயின் என்னும் பிரபலமான செய்தித் தொகுப்பாளர் பணிபுரிகிறார். அவர் ஒரு தேச விரோதி . ஏனெனில், அவர் தந்தை எல்.சி.ஜெயின் ஒரு தேச விரோதி என. எல்.சி.ஜெயினைப் பற்றி, நான் ஊரக மேலாண்மைக் கழகத்தில் படித்திருக்கிறேன். இந்த அவதூறு என்னைப் பாதித்தது. எனவே எல்.சி.ஜெயின் பற்றிய கட்டுரையை எழுதினேன்.
அதை வெளியிட்ட ஜெயமோகன், இன்னும் பல காந்தியர்களைப் பற்றி எழுதப் பணித்தார். பின்னர், தன்னறம் வழியாகப் பிரசுரம் செய்யவும் ஏற்பாடு செய்தார்.
இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் 11 ஆளுமைகளும், தங்கள் சுயநலம் தவிர்த்து, மக்கள் நலனை முன்வைத்த மாபெரும் ஆளுமைகள். இவர்களின் ஆளுமை வெளிச்சத்தில், இதனூடே இயங்கும் காந்திய அணுகுமுறையின் செயல்திறனை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது.
தொழில், நிர்வாகம், கல்வி, அரசியல், சூழல், தொழிலாளர் இயக்கம், மருத்துவம், கல்வி எனப் பல தளங்களில் இந்த ஆளுமைகள், காந்திய வழியினூடே, கோடிக்கணக்கான மக்களைப் பயன்பெறச் செய்திருக்கிறார்கள்.
காந்திய அணுகுமுறை, உலகில், மக்களின் அடிப்படைத்தேவைகளுக்கான எல்லாச் செல்வங்களும் உள்ளன என்கிறது. அனைத்து மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும். குறிப்பாக, மிக ஏழ்மையில் உழலும் கடைக்கோடி மனிதனில் இருந்து அது துவங்க வேண்டும் என்னும் அறத்தின் அடிப்படையில் இயங்குவது. அது வெறும் பொருளியல் சித்தாந்தம் மட்டும் அல்ல. ஒரு முழுமையான அணுகுமுறை. மனிதனை முன்வைத்து நோக்கும் ஒரு வழி.
மாறாக, மரபான பொருளியல் அணுகுமுறை, உலகில் உள்ள வளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. அவற்றை மனிதனின் பல்வேறு தேவைகளுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்னும் புள்ளியில் இருந்து பேசுகிறது. இது வளங்களை முன்வைத்து, அவற்றின் பங்கீட்டை நோக்கும் அணுகுமுறை.
காந்தியம், வாழ்வியல்த் தன்னிறைவு பெற்ற கிராமத்தைக் கட்டமைப்பதன் மூலம், நாட்டைக் கட்டமைப்பதைப் பேசுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியையும் வலுப்படுத்துவதே, மொத்த உடலையும் வலிமையாக்கும் வழி என்பது போல.
மரபான அணுகுமுறை, இருக்கும் வளத்தை உபயோகித்து, நாட்டு முன்னேற்றத்துக்கான பொதுவான கட்டமைப்பை அமைப்பதைச் சிந்திக்கிறது.
காந்தியம் கிராமத்தில் இருந்து தில்லியை நோக்குகிறது. மரபான அணுகுமுறை, தில்லியில் இருந்து நாட்டை ஒரே அலகாக நினைத்துத் திட்டங்களை வகுக்கிறது.
நாட்டின் அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேட்கர், பின்னர் நாட்டின் பொருளியற் கட்டமைப்பை அமைத்த நேரு, இருவருக்குமே கிராமம் என்பது ஒரு பிற்போக்கான அமைப்பு என்னும் ஆழமான எண்ணம் இருந்தது. சமூகப் பார்வையில் அது மிகவும் சரி. ஆனால், பொருளியல்ப் பார்வையில், அது தவறு.
இந்தியா போன்ற, அதிக மக்கள் தொகை கொண்ட வேளாண் சமூகத்துக்கு, அடிப்படை அலகு கிராமம்தான். அதன் வாழ்வியல் தன்னிறைவே, நாட்டை வலுவாக்கும் வழி. இதை உணர்ந்து, உறுதியாக முன்வைத்தவர் காந்தி.
மிகத் துரதிருஷ்டவசமாக, உலகெங்கும் அரசுகள், மரபான பொருளியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. இந்தியா விடுதலை பெற்றதும், நமது அரசுத் திட்டங்கள் யாவும், இந்த அணுகுமுறையில்தான் அமைந்தன. கையில் இருக்கும் நிதியை எவ்வாறு மிகச் செயல்திறன் மிக்க வழியில் செலவழிப்பது. மேலும் நிதியை எவ்வாறு திரட்டி, நாட்டை எவ்வாறு நிர்மாணிப்பது என்னும் வழியில் சென்றோம். இதனால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. வறுமை குறைந்தது. ஆனால், 70 ஆண்டுகள் கழித்து இன்னும் 50% மக்கள், அடிப்படை வசதியில்லாமல் வாழ்கிறார்கள். பசியும், பட்டினியும் தொடர்கின்றன.
மாறாக, இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மனிதர்கள் சமைத்திருக்கும் வழிகள், பொருளியல் அடுக்கின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர்களுக்கானவை. அந்த மக்களின் பொருளாதார அலகுகளுக்கேற்ப, தீர்வுகள் சமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்து, 1.5 கோடி சிறு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் பால், சேகரிக்கப்பட்டு, பதனப்படுத்தப்பட்டு, லாப நோக்கில்லாமல், தினமும் 40 கோடி நுகர்வோரை அடையும் அமுல் தொழில் மாதிரியின் அடிப்படை இதுதான். ஆர்வரி மலைப்பகுதியில் பெய்யும் 600 மில்லிமீட்டர் மழையை, 70 கிராமங்களில் வசிக்கும் மக்கள் எவ்வாறு அனைவருக்குமான அடிப்படைத் தேவைக்காகச் சேமித்து பங்கிட்டுக் கொள்கிறார்கள் என்பதன் அடிப்படையும் இதுதான்.
2010 ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மேலாண் அறிஞர் சி.கே.ப்ரஹ்லாத் அவர்களும், புகழ்பெற்ற இந்திய அறிவியலர் மஹ்ஷேல்கரும் இணைந்து, ‘புதிய வழிகளின் புனித மறை (Innovation’s Holy grail)’, என்னும் புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார்கள்.
சி.கே.ப்ரஹலாத் ஒரு மரபான வலதுசாரி மேலாண் அறிஞர். தனது வாழ்க்கையின் துவக்கத்தில், பெரும் நிறுவனங்களின் தொழிற்திட்டங்களை, செயல்திறனை மேம்படுத்தும் ஆலோசகராக இருந்தவர். ஆனால், தன் வாழ்க்கையின் பின்பகுதியில், அங்கிருந்து நகர்ந்து, பொருளாதார அடித்தட்டில் இயங்கும் வெற்றிகரமான தொழில்களைப் பற்றி அவதானித்தார். ‘பொருளாதார அடித்தட்டில் புதையல் (Fortune at the Bottom of the Pyramid)’, என்னும் மேலாண் புத்தகத்தை எழுதினார். அதில், பொருளாதார அடித்தட்டில் இருக்கும் நுகர்வோருக்கான பொருட்களை வடிவமைத்து, தயாரித்து முன்வைப்பதன் மூலம், நிறுவனங்கள் எவ்வாறு செல்வம் ஈட்ட முடியும் என்பதை ஆராய்ந்து எழுதியிருந்தார்.
பின்னர், அங்கிருந்தும் நகர்ந்து, ’புதிய முறைகளின் புனித மறை’ கட்டுரையில், காந்தியை நோக்கி வருகிறார். மேலாண்மை வழிகளில், இந்தியக் கலாச்சாரம் என ஒன்று உண்டு. பிரச்சினைகளுக்கு, அதிக செலவில்லாமல், உள்ளூர்த் தீர்வுகளைக் காண்பது. விடுதியில் வசிக்கும் மாணவர், மின்சார அயர்ன் பாக்ஸைக் கொண்டு, டீ தயாரிப்பது; மோட்டார் சைக்கிளை உபயோகித்து நீர் இறைப்பது போன்றவை. இதை இந்தியில், ஜூகாட் (Jugaad) என அழைப்பார்கள். இந்த அணுகுமுறையின் அடிப்படையை, கொஞ்சம் மாறுபட்ட பார்வையில், ப்ரஹலாத், ‘காந்திய அணுகுமுறை’, என அழைக்கிறார்.
இந்த அணுகுமுறையின் அடிப்படையில், இரு காந்திய விழுமியங்கள் உள்ளன என்கிறார் அவர். அவை: 1. Affordability 2. Sustainability. ஆனால், இந்தக் கட்டுரையுமே, பெரும் அலகுகளில் இருந்து கீழிறங்கி, சிறு அலகுகளை நோக்கி மட்டுமே பேசுகிறது. இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழும், அருகிலும் இருப்பவர்கள் 60 கோடிப் பேர் – அவர்கள் குறு அலகுகள்.
இங்கே, அலகுகள் தாண்டிய ஒரு தத்துவத்தைச் சொன்னவர், மேலாண் சிந்தனையின் பிதாமகனாகிய பீட்டர் ட்ரக்கர். ‘ஒரு நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோள், அது தன் நுகர்வோரை அடையாளம் கண்டு, அவர்தம் தேவைகளை, மிகக் குறைவான செலவில், மிகக் குறைவான நேரத்தில் பூர்த்தி செய்வதே. அது லாபகரமாக இயங்குவது, நிறுவனம் தன் முதன்மை நோக்கத்தை, செயல் திறன் மிக்க வழியில் நிறைவேற்றி வருகிறது என அர்த்தம்’, என்பது அவரது கொள்கை. 30% இலவச சிகிச்சை, 30% மானிய விலையில் சிகிச்சை, 40% சந்தை விலையில் பாதிவிலையில் சிகிச்சை என்னும் தொழில் மாதிரியில் இயங்கும் அர்விந்த் கண் மருத்துவமனையின் லாபம் 39% ஆக இருக்கையில், இந்தியாவின் மிகப் பெரும் தனியார் மருத்துவக்குழுமத்தின் லாபம் 14% ஆக இருப்பது, காந்திய வழிமுறையில் இயங்கும் தொழிலின் மேம்பட்ட செயல்திறனைக் காட்டுகிறது. இந்தப் புள்ளியை நாம் மிகவும் கவனமாக நோக்க வேண்டும்.
காந்தியம் என்பது ஏதோ காலாவதியான ஒரு வழி முறை அல்ல. மிகக் குறைவான வளங்களை உபயோகித்து, மிக அதிகமான மக்களுக்குப் பயன்படும்வகையில், நீடித்து நிலைக்கும் வழிமுறை. எந்தத் தனியார் தொழில்மாதிரியையும் விட, அதிகச் செயல்திறன் கொண்டது. இலக்கியத்தில், மாடர்னிசம், போஸ்ட் மாடர்னிசம் என்றெல்லாம் வகைப்பாடுகள் உண்டு. காந்தியம் – எவர் மாடர்ன் வாழ்வியல் தத்துவம். அமுல், அர்விந்த் நம் கண் முன்னே நிற்கும் வெற்றிகரமான உதாரணங்கள். இவர்கள் இயங்கும் துறையில், இந்தியாவின் மிகப் பெரும் தொழில்நிறுவனங்கள் இவை. இவற்றின் அடிப்படை, காந்திய வழிமுறை என்பதை நம் தலைமுறைக்கு உரக்கச் சொல்லும் முயற்சியே இந்தப் புத்தகம்.
- இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்ன?
காந்தியப் பொருளாதாரம் என நான் நம்பிய கொள்கையின் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றதுதான்.
- அடுத்து என்ன?
தெளிவில்லாமல் இருக்கிறேன்.