தும்பி – தன்னறம் நாட்காட்டி 2020

 

 

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

கடந்த வருடம் தன்னறம் நூல்வெளி சார்பாக வெளியிட்டிருந்த நாட்காட்டியில், பிரகாஷ் வரைந்த காந்தியின் கோட்டோவியங்களோடு உங்களுடைய சில வார்த்தைவரிகளையும் இணைத்து அச்சுப்படுத்தியிருந்தோம். நிறைய மனங்களுக்கு நிறைவையளித்த நாட்காட்டியாக அது இன்றளவும் இருக்கிறது. இம்முறை 2020ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வினோபா பாவேயின் புகைப்படங்கள் மற்றும் வாழ்வுச்சொற்களைக்கொண்டு தன்னறம் மற்றும் தும்பி சார்பாக வடிவமைத்திருக்கிறோம். நாட்காட்டியின் முழுமைபெற்ற வடிவம் இன்று அச்சுக்குச் செல்கிறது.

 

பூமிதான இயக்கத்தைத் தோற்றுவித்து, பாதயாத்திரை வழியாக இந்திய நிலப்பரப்பெங்கும் அலைந்துதிரிந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை எளிய ஏழைமக்களுக்குப் பெற்றுத்தந்தவர் வினோபா பாவே. வினோபாவின் சொற்கருத்துக்கள் ஒவ்வொன்றும் இறைக்கருணையில் வேரிறிக்கி எழுந்துநிற்பவை. செயல்வழியே ஞானம் என்கிற பெரும்பாதையை கருணையோடும் இறையுணர்வோடும் கடக்கக் கற்றுத்தந்தவர்.தேசத்தின் ஆகச்சிறந்த ஆன்மீக சாட்சிகளில் ஒருவராக ஒளியடைந்து நின்ற பேரான்மா.

 

வினோபா பாவேவின் வாழ்வுவரலாற்றை ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தி, அவருடைய கருத்துக்களை பரவலாக கொண்டுசேர்க்கும் பெருஞ்சீடர் கெளதம்பாய் பஜாஜினை நேர்சந்தித்து உரையாடி, இந்நாட்காட்டிக்கான ஒளிப்படங்களை வினோபாவின் பவ்னார் ஆசிரமத்தில் பெற்றோம்.

 

இத்தேசத்தின் நிலமெங்கும் தன் நிழல்விழ நடந்த ஒரு ஆன்மீக செயல்மனிதரின் வாழ்வினை இந்நாட்காட்டியின் ஒவ்வொரு பக்கமும் அகத்துள் வெளிச்சப்படுத்தும். ஒவ்வொரு தினத்துக்கான நம் நம்பிக்கையினை இந்நாட்காட்டி நிச்சயம் கூட்டுவதாக அமையும். ஒளிப்படங்களாகவும் வார்த்தைகளாகவும் வினோபாவும் அவருடைய மொழிதல்களும் நமக்கு மெல்ல வசப்படும்.

ஆங்கிலம்-தமிழ் என இருமொழிகளைத் தாங்கி, நேர்த்தியான தேர்ந்த காகிதத்தில் இந்நாட்காட்டி அச்சாக்கப்பட்டுள்ளது.

 

உங்களுடைய வாசக நண்பர்கள் மற்றும் தோழமையுறவுகள் தயைகூர்ந்து இந்நாட்காட்டி பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம். நம்பிக்கைதரும் சில முன்பதிவுகள் இதற்கான பொருளியல் செலவுகளை தாக்குப்பிடிக்க வைக்கும் என நம்புகிறோம். ஏதோவொருவகையில் நவீன மனங்களுக்கான புலப்பாட்டு வடிவத்தில் வினோபா பாவேயின் இருப்பினை இன்னும் பரவலாக்க இது கைகொடுக்கும்.

 

பதிவுசெய்தவர்களுக்கு ஜனவரி முதல்வார இறுதியில் நாட்காட்டியை அஞ்சல்வழி அனுப்பத் துவங்குகிறோம். நாம் கற்றுத்தெளிந்து பற்றுகொள்வதற்கான அத்தனை விடயங்களும் வினோபாவிடம் உள்ளுறைந்திருக்கிறது. ஆத்மசாட்சியாக வாழ்ந்த அவருடைய பாதங்கள் நம்மை வழிநடத்தும்.

 

வினோபா நாட்காட்டி பெற:

 

http://thannaram.in/product/2020-thannaram-thumbi-calender/

 

9843870059

 

கரங்குவிந்த நன்றிகளுடன்,

தன்னறம் நூல்வெளி

 

முந்தைய கட்டுரைவிழா- லோகமாதேவி
அடுத்த கட்டுரைபாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி