விழா – ஆனந்தகுமார்

அன்புள்ள ஆசானுக்கு,

இன்னும் கனவு நிலையில் தான் இருக்கிறேன். வாழ்வின் சிறந்த இரண்டு நாட்கள். விஷ்ணுபுரம் விழா எனக்கு இதுதான் முதல் அனுபவம், ஆனாலும் அப்படி இல்லை என்பது போல, எல்லோரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் போலத்தான் இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் செறிவாக அமைந்தது. எழுத்தாளர் உடனான கூடுகைகள் உலகத்தரம். உங்கள் கனவு ஏற்கனவே செயல்படத் தொடங்கி விட்டது. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் அது நடந்திருக்கும், நிச்சயமாக!

எழுத்தாளர் கூடுகைகள் பற்றி நண்பர்கள் விரிவாக எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். முக்கியமாக அரங்கில் இன்னும் தொடர்ந்திருக்க வேண்டிய பெருந்தேவியுடனான (சுனில் சுட்டி காட்டிய அவருடைய வேறு முகங்களின் வழியாக அவரை அணுகுவதற்கான) உரையாடல்,  ரவி சுப்ரமணியத்திடம் யுவன் போன்றோர் கேட்ட கேள்வி (ஏற்கனவே செய்யுளை, சந்தங்களை ரத்து  செய்து விட்டு வரும் நவீன கவிதைகளை இசையில் ஏற்றுதல் – இதில் எனக்கு ஒரு சந்தேகம், தவறாக இருக்கலாம் நவீன கவிதை செய்யுளை எதுகை மோனைகளை களைந்து விட்டு வருகிறது சரி, ஆனால் ஒரு நல்ல கவிதையில் இசை அடியில் ஓடிக்கொண்டுதானே இருக்கும்? ), சங்கரன்பிள்ளை அவர்கள் சொன்ன இக்காலத்துக்கான லட்சியவாதம் பற்றிய உரையாடல் போன்றன.

எனக்கு மிகவும் பிடித்தது சங்கரன் பிள்ளை மற்றும் அபியுடனான உரையாடல். மிக ஆழமாக இருந்தது. மிக இயல்பாக கே.ஜி.எஸ் ஆழமான உரையாடலுக்குள் கொண்டுசென்று விடுகிறார். அதே நேரம் அபியின் உரையாடல் நம்மை கைபிடித்து கூடி செல்வது இல்லை அவர் நோக்கும் திசை அப்படிப் பட்டது என்பதாலேயோ என்னவோ; ஆனாலும் அதன் சாயல்களை நமக்கு உணர்த்திவிடுகிறார், அவர் கவிதையை போலவே. பெருந்தேவியுடனான சில கேள்விகள் இடையில் கொஞ்சம் திசைமாறிவிட்டது போலத் தோன்றியது. ஆனாலும் அவர் மேடையை எதிர்கொண்ட விதம் அவரது ஆளுமை எல்லாம் மிகச்சிறப்பு. அவரை மிகவும் பிடித்துப் போனது.

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுடனான உரையாடல் மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது. முக்கியமாக யுவன், சுரேஷ்குமார், ரவி எனது தொடர்ந்து ஒரு இசை கச்சேரியின் மனநிலைக்கு சென்று விட்டேன்.  ரவி தனது உடலில் ஒரு நிமிடம் ஜேகே-வை கொண்டுவந்தார், அரங்கு கொஞ்சம் சிலிர்த்துத்தான் போனது. பாடல்களின்போது நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தான் இருந்தேன் (கண்களை மூடி கேட்டதனாலேயோ என்னவோ).

அமிர்த்தம் சூர்யா மிகச்சிறந்த உரையாடல்காரர், அவரது உடல்மொழி சாருவுடையது போல் இருந்தது, பேச்சும் சிலசமயம். அபாரமான கதைசொல்லி. அவரது பேச்சும் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஜானவி பரூவா மேடையை அழகாக ஆக்கினார் (மேடையில் அவர் அமர்ந்திருக்கும் போது,எனக்கு ஏற்கனவே இது ஒரு international forum – எனத் தோன்றிக்கொண்டே இருந்தது), இத்தனை வாசிப்பும் அர்ப்பணிப்பும் உள்ள பார்வைளார்களை முதல்முறை அவர் எதிர்கொள்கிறார் என அவர் முகமே சொல்லிக்கொண்டிருந்தது . ஜானவி, கே ஜி எஸ், அபி முதலானோர் இதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்கள், அந்த கூட்டத்தில் இருப்பதே கொஞ்சம் கர்வமாகக்கூட இருந்தது .  வெண்பா கீதையனும் இதுபோன்ற  பார்வையாளர்களை மொத்தமாக பார்க்கும்போது உருவாகும் பதட்டத்தில் (அப்படி ஓன்று அது அவர் முகத்திலோ உடல் மொழியிலோ தெரியவில்லை ) கேள்விகளின்  ஆழத்தை சரியாக உள்வாங்கவில்லை என்பது போல தோன்றியது. ஆனாலும் இது முக்கியமான ஒரு வாய்ப்பு, அதை அவர் புரிந்துகொண்டிருந்தார், மேலும் தீவிரமாக எழுதுவார் என நம்புகிறேன்.

அதன்பின் விருது பெறுபவர் பற்றிய உரைகளும் மிகச்சிறப்பு . நீங்கள் முன்னமே மேடைப் பேச்சுக்களில் ஆகச்சிறந்த  கட்டத்திற்கு நகர்ந்து விட்டீர்கள். கீழே அமர்ந்திருப்போரை மிக எளிதாக ஒரு கனவின் வாசல் வரை உங்களால் கூட்டிச் செல்ல முடிகிறது. அற்புதமான உரை.

எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த நாட்கள் என்னுடைய அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் ஒரு படி, எனோ அப்படித்தான் தோன்றியது. முக்கியமான நண்பர்களை உருவாக்கிக்கொண்டேன்  வினோத் பாலுச்சாமி, பிரசன்னா போன்ற என்னுடைய ஒத்த அலைவரிசையில் இருக்கும் முக்கியமான நண்பர்கள் கிடைத்தார்கள்.

என்னை தனிப்பட்ட முறையில் கவர்ந்தது அரங்கிற்கு வெளியே அங்கிருந்த ஒவ்வொருவருடைய  முகத்திலும் ததும்பிய பரவசம்தான். கையில் கேமரா வைத்திருந்தேன். எனக்கு என்ன செய்ய வேண்டுமென தெரிந்துவிட்டது. முடிந்தவரை முகங்களின் ஒலித்துணுக்குகளை பதிவுசெய்தேன். அதை கோர்த்திருக்கிறேன், இந்த இழையில்.

https://www.youtube.com/watch?v=vAsvMLH2_x4&t=35s

அல்லது

https://youtu.be/vAsvMLH2_x4

மேலும், முகங்களின் புகைப்படங்கள்..

https://photos.app.goo.gl/ika74BMJYiGkC41U7

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி !

அன்புடன்

ஆனந்த் குமார்.

***

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – தகவல்கள், கூறுமுறை
அடுத்த கட்டுரைவிழா- லோகமாதேவி