நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கேட்கக்கூடாது, இருந்தாலும் கேட்காமலும் இருக்கமுடியவில்லை. நூறுநாற்காலிகள் உண்மைக்கதையா? உண்மைக்கதை இல்லைதானே? ஆனால் உண்மைக்கதைபோல ஒரு பாவனை, சுந்தரராமசாமி பெயர் எல்லாம் வருகிறது. உண்மைக்கதையாக இருக்கக் கூடாது என்று மனம் பதறுகிறது.

குமார் செல்வராஜ்

அன்புள்ள குமார்

இந்தவரிசையில் எல்லா கதைகளுமே சாராம்சத்தில் உண்மைக்கதைகள்.

கதைகளில் வரலாற்றுமனிதர்கள் வந்தால் அவர்களின் பெயரையே பயன்படுத்துகிறேன். கொஞ்சம் தனிப்பட்ட முறையில் செல்லுமென்றால், அல்லது அவர்களின் குணச்சித்திரம் உண்மையை கொஞ்சம் மீறி விரியும் என்றால் ஊகிக்கக்கூடிய முறையில் மாற்றியமைக்கிறேன்.

ஏனென்றால் இந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்னும் பிரக்ஞை இவற்றின் வாசிப்பில் மிகமுக்கியமான ஓர் உணர்ச்சி. அது இவர்கள் முன்வைக்கும் விழுமியங்களுக்கு அடிக்கோடிடுகிறது. இக்கதைகள் அனைத்துமே நேர்நிலையான உச்சம் நோக்கிச்செல்பவை. நேர்நிலை மனிதர்களைப்பற்றியவை. அவர்களின் நேர்நிலை உணர்ச்சிகளைப்பற்றியவை.

ஆனால் இந்தக்கதையில் கதைநாயகனை எவ்வகையிலும் எவரும் ஊகிக்கக்கூடாதென்று எல்லாவகையான முயற்சிகளையும் செய்திருக்கிறேன். இடம், வேலை, அடையாளம் எல்லாமே மாறிவிட்டிருக்கிறது. ஒருபோதும் அந்த மனிதரை எவரிடமும் சொல்லப்போவதில்லை. அதை அவர் விரும்புவதில்லை. ஆனாலும் அவர் உண்மையானவரே என வாசகர் உணர ஒரு சிறு தடையம் விடப்பட்டிருக்கிறது.

ஓய்வுபெற்று மும்பையில் இருக்கிறார். எனக்கு வாழ்நாளின் ஒரு முக்கியமான தருணத்தில் முக்கியமான உதவி செய்தவர். சுந்தர ராமசாமிக்கு தெரிந்தவர். இந்தக்கதையை எழுதும்படி என்னிடம் ஒருமுறை ராமசாமியே சொல்லியிருக்கிறார்

உண்மையில் 1989ல் இதை நான் எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். நீளம் என்று திரும்பி வந்தது. மதனா இல்லை மாலனா தெரியவில்லை ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தார்கள். அதன்பின் இதன் இன்னொரு வடிவை ஒரு சின்ன பத்திரிக்கையில் எழுதினேன்.அது வெறும் செய்திமாதிரித்தான் இருந்தது.

1992ல் இந்த நிகழ்ச்சியை உண்மை வடிவில் திருவண்ணாமலையில் ஓர் விடுதியறையில் சொன்னேன். அப்போது பவா செல்லத்துரை, போப்பு எல்லாம் இருந்தார்கள். இந்த உண்மைக்கதை வரிசை வெளிவர ஆரம்பித்தபோது ஜி. குப்புசாமி [ காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலின் மொழிபெயர்ப்பாளர்] ஆரணியில் இருந்து என்னை அழைத்தார். திருவண்ணாமலையில் அந்த நிகழ்ச்சியை சொன்னபோது அவரும் இருந்தார். இந்தக் கதைவரிசையை உணர்ச்சிகரமாக பாராட்டிவிட்டு நான் அந்நிகழ்ச்சியை நான் எழுதலாம் என்றார்.

’பதினெட்டு வருடங்களாக நீங்கள் சொன்ன உண்மைநிகழ்ச்சி நெஞ்சில் இருந்துகொண்டே இருக்கிறது. அப்படியென்றால் அதில் அழியாத ஒரு தார்மீகப்பிரச்சினை உள்ளது. நீங்கள் எழுதியே ஆகவேண்டும்’ என்றார். நான் ஏற்கனவே எழுதிய வடிவங்களை எண்ணிக்கொண்டேன். ஏன் அவை தோல்வி அடைந்தன என நினைத்தேன்.

அவற்றை வெளியே இருந்து பார்த்தேன். அவற்றில் இருந்தது கருணை [ Sympathy ] . இக்கதைக்கு தேவையானது தன்னிலையற்ற இணைவு. [Empathy] கதையை ’நான்’ என ஆரம்பித்தேன். சில வரிகளுக்குப்பின் காப்பன் நான். நாயாடியாகப் பிறந்து எரிந்து அணைந்தேன்.

இக்கதையை சம்பந்தப்பட்டவர் மனைவியை வைத்து வாசித்தார். ‘நான் அடுத்த ஜென்மத்தில் பிறந்து வந்து எழுதவேண்டும் என நினைத்திருந்த கதை. நீ நானாகவே நின்று எழுதிவிட்டாய். நான் அடைந்த வலிகளை கற்பனையிலானாலும் நீ அடைந்தாய் என்று நினைக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது. ஆசிகள்’ என்று மின்னஞ்சல் வந்தது

பெரிய விருதுகளில் ஒன்று

ஜெ

அன்பின் ஜெ,

தற்போது நீங்கள் எழுதி வரும் அறம் தொடங்கி நூறு நாற்காலிகள் வரையிலான “மானுட தரிசன ” கதை வரிசைகளைப் படித்து விட்டு எழுதும் ஒரு எண்ணப் பதிவு.
முதலில் இந்த மானுட தரிசனம் என்பதை என் வரையில் வகைப்படுத்திக் கொண்டதை சொல்கிறேன். பூமியின் எந்தப் பகுதியில் வசிக்கும் மனிதனுக்கும் பொதுவான உணர்வுகளை நாம் பசி, தாகம், பாலுறவு என்று உடற்கூறு அடிப்படையில் வகை செய்து வைத்தாயிற்று. ஒரு வகையில் மாஸ்லோவின் “தேவை அடுக்கு விதி” சரிதான். ஒரு அடுக்கிலான தேவைகள் நிறைந்ததும் அடுத்த அடுக்கை நோக்கிய பயணம் மனிதன் என்னும் மிருகத்திற்கே உண்டு. இப்பயணத்தில் அவன் தாண்டி செல்ல நேருவதும், வெற்றி கொள்ள விழைவதும் இயற்கை அவனுக்கு கொடுக்கும் சவால்களை அல்ல. அந்த முன்னேற்றத்தின் நெருக்கடி என்பது சக மனிதன் மீது இயற்கை உருவாக்கி வைத்திருக்கும் அவனுக்கான இடம் என்பதால் மேலே, மேலே செல்ல நினைக்கும் ஒருவன் சக மனிதனை மிதித்து, அவனை, அவனுக்கான இடத்தை தனது பயன்பாடாக்கித்தான் செல்கிறான். இதை நீங்கள் மந்தை மன நிலையாக உணரலாம். மந்தையாய் சேர்ந்து சில பொது சவால்களை நசுக்கியதும், மந்தைக்குள்ளேயே அதனை தனி இருப்பை நிர்ணயிக்க வேண்டி அதே வேலையை சக உறுப்பினர்களுக்கும் செய்ய வேண்டியதுதான். மிதித்து புறம் தள்ளப்பட்டோர் நடுவிலிருந்து எழும் ஒரு மின்னற் பொழுதேயான அசைவு/ குரல், அவனும் நமது சக பயணியே என்பதை பட்டென உணர்த்துகையில் அவன் நிலையை, நம் நிலையை, நம் மேல் உள்ளவரின் நிலையை ஒரே தட்டில் வைத்து நோக்கி அகம் பொங்கி விடுகிறோம். அந்த மின்னற் பொழுது எப்போது, எங்கே, எப்படி, யாரால், எம்முறையால் நிகழும் என்பது “விண்ணில் வகுக்கப்பட்ட கணம்தான்”.

நீங்கள் எழுதி வரும் இவ்வரிசை கதைகள் அனைத்துமே அந்த மின்னற் பொழுதை மீண்டும், மீண்டும் எனக்குள் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. சோற்றுக் கணக்கு வாசித்ததுமே எனது அகம் பொங்கி விட்டது. எனக்கு சிறு வயதில் பந்தியில் உணவு மறுக்கப்பட்ட சம்பவத்தை, அது எனக்குள் ஏற்படுத்திய விளைவுகளை, அவற்றை நான் ஆடையால், தோற்றத்தால் இட்டு நிரப்பிக் கொண்ட சுய அனுபவத்தை நீண்ட கடிதம் மூலமாக உங்களுக்கு எழுதினேன். எழுதி பதிவிட்ட பின் இரு தினங்கள் வரை ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் எனது எண்ணப்போக்கில் ஒரு மாற்றம் நடந்த உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. உறக்கம் வராத ஒரு இரவில் சட்டென பிடி கிடைத்தது. (மனைவி வீட்டின் மாடியில் நிலாவும், தலை விரித்த ஆல மரமும் கூடவே இருந்தன).

ஜெ! நான் நிறைய லேசாகிப் போயிருக்கிறேன். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எனது மனதில் பொருக்கு தட்டி நின்ற புண்ணின் கட்டி காய்ந்து போயிருக்கிறது. ஒவ்வொரு முறை ஆடை வாங்கும்போதும், ஓய்வாய் கண்ணாடி பார்க்கும் போதும் தலை தூக்கும் அந்த சம்பவம் இப்போது நினைவில் வருவதே இல்லை. பழக்கம் காரணமாக நானே வியப்புடன் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன ஆயிற்று? எனது அனுபவம் என்ற வகையில் நானே அடை காத்து, “தங்கப் பெட்டியில் சாணி உருண்டையாய் “, இந்த அனுபவத்தின் பசுமை காயாமல் வைத்திருந்திருக்கிறேன் . இன்று இக்கதை படித்து பொங்கி விட்ட தருணத்தில் எனது அனுபவம் உலக மானுடம் அனைத்திற்கும் பொதுவான பேரனுபவம் ஒன்றை சென்று சேர்ந்து விட்டது. இனி அந்த அனுபவம் நான் சொல்லிக் கொள்ள என்னிடம் இருக்குமே தவிர முன்பு போல அந்த அனுபவத்தை நான் உரிமை கொண்டாட முடியாது. துப்பாக்கியை இயக்கும் விசையென உங்கள் படைப்பு வழியாக என்னை அங்கு கொண்டு சேர்த்து விட்டீர்கள். இனி எனது அனுபவம் வழி நான் மானுட பேரனுபவத்தை விளக்க முயற்சிக்கலாமே அன்றி அதை என்னுடையதாய் குறுக்கிக் கொள்ள என்னால் இயலாது.

சற்று நிதானமாய் யோசிக்கையில் இன்னுமொன்றும் புரிந்தது. இந்த அவமதிப்பு அனுபவத்தை நான் விரும்பி வைத்திருந்திருக்கிறேன். அவமதிப்பின் அணிகலன் நானே விரும்பி பூட்டிக் கொண்ட ஒன்று. “ஒரு காலத்துல எவ்வளவு அவமானப் பட்டிருப்பேன் தெரியுமா….” என்று இன்றைய நிலையின் பெருமையை அந்த அவமதிப்பின் அடிக்கல்லில் ஏற்றிக் கட்டியிருக்கிறேன். என்னை பாதிக்கப்பட்டவனாய் உணரச் செய்ய இப்படியான அனுபவங்களை நினைவில் சேமித்திருக்கிறேன். ” இன்னும் கொஞ்சம் ஆழமா அவமானப்பட்டிருந்தா நல்லா இருந்திருக்குமோ” என்று இப்போதைய வெற்றி விபரீதமாய் சிந்திக்க வேறு வைத்தது. இப்போது எனது அனுபவங்கள் “மகத்தான மானுட தரிசனத்தை” காணச் செய்த வாசல்களே என்று இக்கதைகள் எனக்கு உணர்த்தி விட்டன. வாசல் திறந்த பின் இத்தனை நாளாய் வெளிச்சத்தை பாராது வாசலின் உள்ளே நான் இருந்த இருட்டையே பார்த்திருக்கிறேன். முதுகில் உறைத்த வெளிச்சத்தின் அளவே போதுமானதாய் இருந்திருக்கிறது.

இனி எனது அனுபவங்கள் அனைத்துமே அதன் வழி மானுட தரிசனம் சுட்ட விழைவதாய் கொள்ள வேண்டும். கரப்பானின் மீசை அதன் உணர்திறன் கருவிதானே. இனிமேல் எனது அனுபவங்களின் மீசை கொண்டு பேரனுபவம் உணர முயற்சிக்க வேண்டியதுதான்.

ஒவ்வொருவரும் பட்டு வந்த கதையை படித்துப் பார்க்கையில் எனது அனுபவம் எவ்வளவு சிறியது என்றும், இதற்குத்தானா இவ்வளவு அலட்டிக் கொண்டேன் என்றும் தோன்றுகிறது. காப்பானும், வணங்கானும், பாட்டியும் பட்ட அவமதிப்பில் என் அனுபவம் லட்சத்தில் ஒன்று பெறுமா?
கேத்தேல் சாகிபும், பிரஜானந்தரும், போதானந்தரும், கோட்டாறு பிள்ளைவாளும், மார்ஷலும் செய்த காரியங்களை எண்ணினால் இரு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்று அவர்களின் வாழ்வில் நான் “ஒளியேற்றி” வைத்ததாய் நினைப்பது எவ்வளவு சிறுமை. பரிதாபப்படக்கூட நான் நாலு படி ஏறி நிற்க வேண்டியுள்ளது குறித்த அகத்தூண்டல் இப்போதுதான் கூடுகிறது.
“எந்தரோ மகானு பாவுலு” … சத்தியமாய் அந்த ஒல்லி கிழவன் இப்படி யாரையோ பார்த்துதான் பாடியிருப்பான் (மூன்று வாரமாய் இந்தப் பாட்டையே கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதுவும் http://www.youtube.com/watch?v=iWFqdYBtILI இவரே பாடியது).

இப்போது புரிகிறது… ஏன் சிலர் அவர்களது அனுபவத்தை கூறினால் நமக்கு அலுப்பாகிறதென்று. அவமதிப்பின் முட்டைகளை அடைகாத்தால் அன்னத்தின் குஞ்சா பொறியும்? அவமதிப்பில் கூட எனது அவமதிப்பே உயர்ந்தது என்ற எண்ணம் வேறு. எனது அனுபவத்திற்கு உனது அனுபவம் இணையாகுமா என்ற கேள்வி வேறு. நானும் இப்படியாகிப் போயிருப்பேனே ஜெ ……. இப்போது அனுபவம் எனக்கு கனமாகத் தோன்றவில்லை. பாரம் இறங்கியது போல உணர்கிறேன். கண்ணீர் வந்தது அதனால் தானோ என்னவோ …

இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன என்ற கேள்வி உங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஒன்று அவர்களை என்னிடம் அனுப்பி வையுங்கள் அல்லது இந்த கடிதத்தைக் காட்டுங்கள்.

ராஜகோபாலன்.ஜா, சென்னை

முந்தைய கட்டுரைமூன்றுகதைகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரமும் பிராமணர்களும்