அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
மீண்டும் முழுமையான நிறைவைத்தந்திருக்கும் இரண்டு நாட்கள். துயரும் மகிழ்வும் நிறைவுமாக வீடு திரும்பினேன், விஷ்ணுபுரம் விழாமுடிந்து வீடுவந்த பின்னரும் மனம் அங்கேயே அரங்கினுள் அமர்வுகளில் அமர்ந்திருக்கும் உணர்விலேயே இருக்கின்றது. அன்று பெருந்தேவி, விழாவிற்கு ஸ்ரீவள்ளி வரவில்லை என்று சொன்னதுபோல அன்னையும் ஆசிரியையுமாகிய ஒருத்தியை பொள்ளாச்சியிலேயே விட்டுவிட்டு வாசகியும் எழுத்தாளர்களை சந்திக்கும் ஆர்வமுள்ளவளுமான நான் மட்டுமே விழாவிற்கு வந்திருந்தேன். வேறு எந்த நினைவுமின்றி அங்கு கிடைத்த அரிய பலவற்றை திகட்ட திகட்ட அள்ளிஅள்ளி அருந்தினேன்., அந்நிறைவையும், மகிழ்வையும் எப்படி எழுதினாலும் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாதென்றே நினைக்கிறேன்.
வழக்கம் போலவே மிகச்சரியான திட்டமிடலுடன் எவ்வித குறைபாடுமின்றி மிகச்சிறப்பாக நடந்துமுடிந்தது விழா. எப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்தும், பங்கேற்பாளர்கள், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று அனைத்துத்தரப்பிலும் இருந்த ஒழுங்கு இம்முறையுமிருந்தது. இத்தனைக்கும் விழாவுக்கு வழக்கம்போலவே அதிகம் புதியவர்களும் வந்திருந்தனர். இது ஒரு இலக்கிய விழாவென்பதை அனைவரும் உணர்ந்து விழாவிற்கான நெறிகளை யாரும் அறிவுறுத்தாமலேயே இயல்பாக பின்பற்றினோம். சின்ன சலசலப்போ நெறிமீறலோ மனக்கசப்போ சலிப்போ இன்றி இப்படி பலதரப்பட்ட வாசகர்கள், படைப்பாளிகள், விருந்தினர்கள் என்று பலர் இரண்டுநாட்கள் விழாவில் கலந்துகொண்டு மிகுந்த மனநிறைவுடனும் அவர்கள் திரும்பச்செல்வதென்பது விஷ்ணுபுரம் விழாவிலன்றி வேறெங்கும் சாத்தியமில்லை.
எல்லா அமர்வுகளும் சரியாக குறித்த சமயத்தில் நடந்து, முடிந்தன, அமர்வுகளை நடத்த தெரிவுசெய்யப்பபட்டிருந்தவர்களும் மிகப்பொருத்தமானவர்களாக இருந்ததால் அமர்வுகள் வெகுசிறப்பாக இருந்தன. குறிப்பாக ரவிசுப்ரமணியம் – யோகீஸ்வரன், சங்கரன்பிள்ளை- நீங்கள், ஜான்னவி – ராம் , இந்த அமர்வுகள் எல்லாம் மிகமிகச்சிறப்பாக இருந்தன,
கவிஞர் இசையுடன் அமர்வுகள் துவங்கியதாலோ என்னவோ இசை எதாவது ஒரு வடிவில் பெரும்பாலான அமர்வுகளில் தொடர்ந்து இருந்து கொண்டேயிருந்தது. கவிதைகள் பாடலாக இசைக்கப்பட்டது, இசையைக்குறித்து விருதேற்பாளர் அபி, திரு,யுவன், திரு சுரேஷ்குமார் இந்திரஜித், அமிர்தம் சூர்யா என பல ஆளுமைகள் விரிவாக பேசியதும், சிலர் பாடியதும் புதுமையாகவும் மிக ரசிக்கும்படியும் இருந்தது.
துயரை முன்வைக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரரான இசையை பகடிக்கவிஞர் என்று சொல்லப்பட்டதற்கு அவரது எதிர்வினை நன்றாக இருந்தது. இந்த அமர்வுகளல்லாமல் வேறெப்படியும் படைப்பாளிகளை அத்தனை நெருக்கமாக வாசகர்களால் அறிந்துகொண்டிருக்க முடியாது
கலந்துகொண்ட படைப்பாளிகளும் அமர்வுகளில் தங்களின் படைப்புலகை மட்டுமல்லாது அந்தரங்க வாழ்வையும் மிக வெளிப்படையாக முன்வைத்ததும் ஆச்சர்யமுட்டியது
சீம்பாலின் நஞ்சை எழுதிய ரவிசுப்ரமணியன் தன் பெற்றோர்களின் கண்டிப்பை, குடும்பத்தில் ஒருவருடன் தாம்பத்யத்தை தாண்டின உறவிலிருந்த பெண் ஒருவர் மென்கலைகளில் ஆர்வமுள்ளவராக இருந்ததை, 15 நாட்கள் வரை அறையில் அடைத்து வைக்கப்பட்டு அப்பாவிடம் அடிவாங்கியதை, அத்தனை கண்டிப்பையும் எதிர்ப்பையும் கடந்து கோடிக்கணக்கான சொத்துக்களை உதறிவிட்டு, தனக்கு தேவையானதை, தான் விரும்பியதை அடைந்த கதையை சொன்னார். அங்கிருந்த இளம்பங்கேற்பாளர்களுக்கு இவையெல்லாம் எத்தனை உளக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்றெண்ணிக்கொண்டேன் எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்படும் ஆவணப்படங்களில் உடல்மொழி எத்தனை முக்கியம் என்றும் அவரது அனுபவங்களிலிருந்து விளக்கினார். இளையராஜா அவர்களுடனான அனுபவங்களை அவர் அவ்வபோது குரலைமாற்றி மாற்றி உணர்வுபூர்வமாக சொல்லிக்கொண்டிருந்ததில் நானும் அச்சம்பவங்களுக்குள்ளேயே என்னையறியாமல் சென்றுவிட்டிருந்தேன். ’’நாளைக்காலை 5 மணிக்கு வா, கம்போஸ் பன்ணிரலாம்’’ என்று இளையராஜா ரவிசுப்ரமணியன் அவர்களிடம் சொன்னதைகேட்டபோது,, நானே வரச்சொல்லப்பட்டதுபோல் அகமகிழ்ந்துபோனேன்
’ துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’’
இவ்வரிகளை அவர் பாடியபோது நிசப்தமாகியிருந்த அரங்கையே அக்குரல் இழைந்து இழைந்து நிறைத்தது.
கவிதைகளை மெட்டமைத்து பாடலாக்குவது என்னும் புதுமையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கவிதைவரிகளை வாய்விட்டுக்கூட வாசிக்காமல் மனதிற்குள் வாசிக்கையில் கிடைக்கும் உணர்வுக்கும் அதே வரிகளை வேறு ஒரு ஆண் அல்லது பெண்ணின் குரலில் ஒரு குறிப்பிட்ட இசையில் பாடலாக கேட்கையில் வரும் வரையறுக்கப்பட்ட உணர்வுடன் ஒப்பிடவே முடியாதென்றே எனக்கு தோன்றியது. ஏற்கனவே வாசித்து, மனதில் பதிந்திருக்கும் வரிகளை. அதுக்கொடுத்திருக்கும் ஒரு உணர்வை, அப்படி முற்றிலும் வேறு ஒரு வடிவில் கேட்கும் உணர்வென்பது எனக்கு கலவையான, குழப்பமான ஒரு உணர்வையே தருமென்று தோன்றியது. ’பலவீடுகளில் ஆண்குழந்தைகளுக்கு பாவாடை சட்டை அணிவித்து, தலைவாரி பூச்சூடி பெண்குழந்தையைப்போல அலங்கரித்து கொஞ்சுவார்கள் அப்படி தற்காலிகமாக கவிதைகளை இப்படி ஒரு முற்றிலும் வேறான ஒரு வடிவில் அலங்கரித்து பார்த்துக்கொள்ளலாம் போல’ என்று நினைத்துக்கொண்டேன்.
//சொல்லிக்கொள்ளும்படியான பால்யமில்லை தனக்கு// என்று சொன்ன சுரேஷ்குமார் இந்திரஜித், வாசிக்கும் ஆர்வமுடைய தன் அண்ணிக்கு வாசகசாலையிலிருந்து புத்தகங்களை கொண்டுவந்துகொடுத்ததன் மூலம் இலக்கிய பரிச்சயமேற்பட்டதை சொன்னார், உறவுச்சிக்கல்களின் புதிர்த்தன்மை தன்னை துயருக்குள்ளாக்குவதையும், ஒரு புகைப்படமோ அன்றி திரைப்படங்களில் வரும் ஒரு காட்சிச்சித்தரிப்போ கூட உளரீதியாக தன்னை பெரும் தொந்தரவுக்குள்ளாகும் என்றும் சொன்னார். வாழ்வின் மீதான அவநம்பிக்கை கொண்டவராக தன்னை முன்வைத்த அவர் பலதரப்பட்ட கேள்விகளையும் எதிர்வினைகளையும் வெகுஇயல்பாக எதிர்கொண்டதும் சமநிலையுடன் பதிலளித்ததும் சிறப்பு. அவர் எடுத்துக்கொண்ட சில வருட இடைவெளியைக்குறித்தான உங்களின் கேள்விக்கு அவர் அப்போது தனக்கு திருமணமாகிவிட்டதென்று சொன்ன பதிலில் அரங்கு சிரிப்பில் நிறைந்தது.
சித்தர்களைக்குறித்த தொடரொன்றின் பொருட்டு நான் தேடிக்கண்டடைந்த அசாதாரண விஷயங்களை, தன் வாழ்வில் ஏற்பட்ட முன் ஜென்ம நினைவுகள் உள்ளிட்ட அமானுஷ்ய நிகழ்வுகளை, அமிர்தம்மாள் எனும் கதைசொல்லியான தன் பாட்டியை, இப்படி பல்வேறுபட்ட சுவையான நிகழ்வுகளை, நினைவுகளை பகிர்ந்துகொண்ட அமிர்தம் சூர்யாவின் அமர்வு கலகலப்பாக இருந்தது, ’’என் அப்பாவின் அம்சங்களும் என் தாத்தாவின் உடல்நிலையும் எனக்கிருக்கின்றது, தலைமுறைகளாக தொடரும் இதுபோன்ற விஷயங்களினால் எனக்கு மரணமில்லை’’ என அவர் சொன்னதை நான் இன்னும் யோசித்துக்கொண்டேயிருக்கிறேன்
காவிவேட்டியுடன் எளிமையாக அவருக்கான அமர்வில் கேஎன் செந்தில் கலந்துகொண்டார். சிறப்பான அமர்வு, ஆதர்சங்களிலிருந்து விடுபடுவது. தான் விளிம்புநிலைமக்களின் போதாமைகளை குறித்து எழுதுவது, குறித்தெல்லாம் அவர்பகிர்ந்துகொண்டவை மிக அருமை
யுவனின் அமர்வு மிக சிறப்பு. காகங்கள், அமானுஷ்யம் குறித்த தன் எழுத்துக்களைக் குறித்த எதிர்வினையில், ஏராளமான விஷயங்கள் நிறைந்திருக்கும் நம் தொன்மங்களையும் மரபையும் குறித்து எழுதுவதன் அவசியத்தை அவர் சொன்னது நன்றாக இருந்தது. இசையுடன் அவருக்கிருக்கும் உறவையும் அழகாக அனுபவித்து சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பிற ஆளுமைகளைக் கேட்ட கேள்விகளும் சிறப்பான, மிக முக்கியமனவைகளாக இருந்தன,
வெண்பா காளிபிரசாத் அமர்வும் நன்று. பிற பெண்ணியவாதிகளிலிருந்து எப்படி நீங்கள் வேறுபடுகிறீர்கள் என்னும் கேள்விக்கும், ’நீ கூடிடு கூடலே’ குறித்தான பலதரப்பட்ட கேள்விகளுக்கும் சரியாகவும் கவனமாகவும் எதிர்வினையாற்றினார். பிரத்யேக நீண்ட வினாக்கள் கேட்ட காளிபிரசாத்தும் வெண்பாவும் அவர்களுக்குள் ஒரு தனி அமர்வு நடத்தியபடிக்கே அமர்வை கொண்டுபோனதும் ரசிக்கும்படியே இருந்தது.
சங்கரன்பிள்ளை அவர்கள் , சிநேகிதமின்றி அகன்று அகன்று சென்றுகொண்டிருக்கும் மக்களை அணுக்கமாக்க தான் எழுதும் கவிதைகளைக்குறித்து சொன்னவை மிகச்சிறப்பான கருத்துக்கள், எழுத்தெழுத்தாக, உள்வாங்கிக்கொண்டிருக்கிறேன் அவரது அமர்வில் சொல்லப்பட்டவைகளை. மிக அரிய ஆளுமை அவர்.
பெருந்தேவியின் அமர்வும் வெகு சிறப்பு. ஒரு முகமூடியுடன் வந்த அவர் அதை அணியாததும் நல்லதே என்று தோன்றியது. அவர் பல எதிர்வினைகளை சந்தித்தாரென்றாலும் நல்ல புரிதலுடன் ஒவ்வொன்றையும் எதிர்கொண்டார். முகம் நிறைந்த சிரிப்புடன் கம்பீரமாக மேடையில் வீற்றிருந்தார்.அதிகம் ஸ்ரீவள்ளியின் கவிதைகளைக்குறித்து அமர்வில் பேசப்படாதது எனக்கு ஆதங்கமாக இருந்தது. ஸ்ரீவள்ளியின் பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழைக்கவிதைகளின் பெரும் ரசிகைநான். எதிர்க்கவிதையென்பது கவிதைகளுக்கு எதிரானதல்ல என்பதையும் தெளிவாக விளக்கினார்.
அபி அவர்களின் அமர்வில் லாசாராவே அவர் வடிவில் அமர்ந்திருப்பதுபோல் ஒரு மயக்கம் தோன்றியது. அவரது ’’நான்’’ இன்றி எழுதப்பட்ட கவிதைகள் குறித்தான விளக்கங்கள் அருமை.
ஜான்னவி அவர்களின் அமர்வு மிகப்பிரமாதமாக இருந்தது. பாரம்பரிய உடையில் கலந்துகொண்டிருந்தார். அவரது மண்ணிலல்லாது, பிறிதொரு இடத்தில், முற்றிலும் வேறு பாஷை பேசும் பங்கேற்பாளர்களுடன் இருக்கும் பதற்றம் துளியும் இன்றி மென்புன்னைகையுடன் கேள்விகளை தன்னம்பிக்கை மிளிரும் உடல்மொழியுடன் அவர் எதிர்கொண்டது அத்தனை அழகாக இருந்தது. அவரை பல கோணங்களில் வளைத்து வளைத்து அவரது கணவர் புகைப்படமும் காணொளியுமாக எடுத்துக்கொண்டிருந்தது அதைவிட அழகு.
தனக்கு பரிச்சயமுள்ள விஷயங்களை எழுதுகையில் தனக்கிருக்கும் செளகரியத்தையும், இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் எழுதுவதுகுறித்தும், அவர் ஒரு மருத்துவராக இருப்பதால் நீட்டி முழக்காமல் கச்சிதமாக மொழியை கையாள முடிகின்றதென்பதையும் ஜான்னவி அழுத்தமாக சொன்னார்.
வெள்ளியன்று இரவு அனைவரின் விருப்பத்திற்கும் உகந்த செந்திலின் வினாடி வினா நடந்தது. 30 கேள்விகள் அவரும் பின்னர் உங்களின் சில கேள்விகளுமாக களைகட்டியிருந்தது நிகழ்வு. இளைஞர்கள் துடிப்புடன் பதிலளிக்கையில் மேடையிலிருந்த யுவனின் உ.டல்மொழியில் தெரிந்தது, சொந்தக் குழந்தைகளின் சாமர்த்தியத்தை கண்டு மகிழும் தந்தையின் பெருமிதம். உளம்மகிழ்ந்து கவனித்தபடி இருந்தார். நாஞ்சில் அவர்களும் பரிசினை நெஞ்சம் நிறைந்து, விரிந்த புன்னைகயுடன் அளித்தார்
கேட்கப்பட்ட கேள்விகளில் எனக்கு இரண்டே இரண்டிற்குத்தான் பதில் தெரிந்தென்றாலும் எழுந்து பதிலளித்து பரிசுவாங்கும் நிறைவையும் பரவசத்தையும் விட, கேள்விகள் 1950களில் வெளிவந்த திரைப்படத்தை குறித்தோ, மிகப்பழைய குரல்பதிவோ அன்றி இலக்கியம் தொடர்பானதோ, நாவலின் தொடக்க அல்லது கடைசிவரிகளோ, என்ன கேட்டாலும் கூடியிருந்தோரின் பல கைகள் பதில்சொல்ல உயர்ந்ததிலும், என்ன கேட்கப்பட்டாலும் பதிலளிக்கக்கூடிய ஒரு குழுமத்தில் நானும் ஓரு அங்கமென்னும் நிறைவிலேயே நான் திளைத்திருந்தேன்
இலக்கியமும் இசையும் உணவும் தோழமையும் நிறைவுமாக இப்படி ஒருவிழாவில் தொடர்ந்து வருடங்களாக கலந்துக்கொண்டிருப்பது பெரும் நிறைவளிக்கின்றது. குடும்ப விழாக்களில்கூட இப்படி எவ்வித மனக்கசப்பும் சோர்வுமில்லாத முழுக்க முழுக்க நிறைவைமட்டுமே அளிக்கும் ஒரு நிகழ்வு இல்லவே இல்லை
சுவையான வேளாவேளைக்கான உணவும் தேனீரும், தங்கும் அறைகளும் இன்னபிற வசதிகளுமாக தடையின்றி கிடைத்தது அனைவருக்கும். மீனாம்பிகை, விஜயசூரியன் செந்தில் செல்வேந்திரன் உள்ளிட்ட விழா ஏற்பாட்டாளர்களுக்கு அனைவரின் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். இப்படி எந்த வேலையும் செய்யமல் புடவை மடிப்புக்கலையாமல் அமர்வுகளை கவனித்து சாப்பிட்டுக்கொண்டு, புகைப்படமெடுத்துக்கொண்டு இருந்தது கொஞ்சம் குற்ற உணர்வையும் தந்தது. அடுத்த விழாவிலிருந்தாவது ஏற்பாடுகளில் உதவி செய்யவேண்டும் நானும் மகன்களும் என்று முடிவுசெய்தேன்.
மனித விழுமியங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சங்கரன்பிள்ளை, தன்னை நம்பிக்ககையிழந்தவனாகவே முன்வைக்கும் சுரேஷ்குமார் இந்திரஜித், துயரையே பகடியாக மொழியும் இசை, போதாமைகளின் உலகை எழுதும் செந்தில், எனக்கும் தொழில் கவிதைதான் எனும் பெருந்தேவி,,யாரும் தொடாத பல இடங்களை கண்டுகொண்டு அவற்றை கவிதையாக்கும் அபி, தேடுபவர்கள் கண்டடைவார்கள் என்னும் ரவிசுப்ரமணியன், மொழிதல் முறை எத்தனை முக்கியமென்று சொன்ன அமிர்தம் சூர்யா, இசைஎன்னும் மனப்பழக்கத்திலிருக்கும் யுவன், இப்படி பலதரப்பட்ட ஆளுமைகளை சந்தித்த நிறைவை, அறிதலை, மறக்கவியலா அனுபவத்தை மீண்டும் விஷ்ணூபுரம் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். அனைத்திற்கும் நன்றி
வெள்ளி இரவு உணவிற்கு பின்னர் உங்களுடனான ஒரு தேநீர் நடையில் நானும் கலந்துகொண்டிருந்தேன், அரங்கிற்கு மீண்டும் திரும்புகையில் சாலையை கடக்கையில் மீனாம்பிகை இயல்பாக என் தோளைச்சுற்றி கைகளை போட்டுக்கொண்டு நடந்துவந்துகொண்டிருந்தார். விஷ்ணுபுரம் விழாவின் இனிய நினைவுகளின் எடையைப்போலவே என்றுமிருக்கும் அத்தோழமையின் எடை என்னுடன்.
விஷ்ணுபுரம் விழாவென்னும் விளக்குப்பிறையிலிருந்து சுடரேற்றிக்கொண்டு முன்னைக்காட்டிலும் ஒளி நிறைந்த உள்ளத்துடன் வீடு திரும்பியிருக்கிறேன்
மிக்க அன்புடன்
லோகமாதேவி