அன்புநிறை ஜெ,
விஷ்ணுபுர விழா தந்த மகிழ்வும் கொண்டாட்டமுமான மனநிலையோடு இன்று காலை சிங்கை வந்து சேர்ந்தேன். ஜனவரி 10 சென்னை வந்துவிட முடியும் என்ற எதிர்பார்ப்பு இவ்வளவு பெருங்களிப்பின் பின் எழும் துயரை, பிரிவின் அழுத்தத்தை இலகுவாக்கியிருக்கிறது.
விழாவைப் பற்றி எண்ணும்போது நதியின் பெரும் பிரவாகத்தில் கலந்துவிட்ட ஒற்றைத் துளியின் அனுபவம் போல ஒரு ஒருமித்த அனுபவமும் அதனிடையே மிதந்து செலலும் தன்னிலை அனுபவமுமாய் இரண்டு பறவைகள் மனதுள் உரையாடிக் கொண்டேயிருக்கின்றன.
“உயிர் சுவையுடையது.மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம்.” என்ற பாரதியின் சந்நதத்தை இம்மனநிலையில் புரிந்து கொள்ள முடிகிறது. அனைத்துக்குமாய் அன்பும் நன்றியும் வணக்கங்களும்.
வெளிவந்தவற்றில் சில புகைப்படங்கள் பனித்துளி சிறைப்பிடித்த கதிர்முகமென மூன்று நாட்களை தன்னுள் ஏந்தி இருக்கின்றன. அந்தப் படிகளின் பின் உள்ள யானையின் சித்திரம் உருவாகிக் கொண்டிருக்கும் பெருவரலாற்றுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
மிக்க அன்புடன்,
சுபா
ஜெ
துரையப்பன் என்றொரு விவசாயி உண்டு எங்கள் கிராமத்தில், இன்றளவும் மருத நிலத்து வாழ்முறையிலிருந்து பிறழாமல் இருப்பவர். உழவு முடித்து வீடு திரும்பும் அந்தி வேளையில் தெருமுக்கு செட்டியார் கடையை தாண்டியதும், கொலுப்பலகையை விட்டு குதித்து இறங்கிவிடுவார்.
துரையப்பன் வீடு சேர்கையில் அனைத்து பணிவிடைகளும் பக்குவமாய் முடிக்கப்பட்டு, துரையப்பன் கொடுக்கப்போகும் தவிட்டு ரொட்டியின் பாதி துண்டுக்காக ஆசையுடன் அசைபோட்டபடி காத்திருக்க ஆரம்பிக்கும் அந்த காளைகள்.அந்நிகழ்வை நினைவுறும் ஒத்திசைவும் ஒருங்கமைவும் இணைந்த பத்தாம் ஆண்டு விஷ்ணுபுர விருது விழா.
ஆதிகேசவனின் பெயரால் அமையப்பெற்ற அறக்கட்டளையின் விருது விழாவில்,நபியை துதித்து இறைவணக்கம் பாடி ஆரம்பித்து வைக்கிறார் ஜான்சுந்தர்.
வண்ணதாசன் விழாவிற்க்கு சற்றே மிரட்சியுடன், மெதுவாய் காலடி வைத்து வந்த வெண்பா, இவ்வருட நிகழ்வில் படைப்புசார் கேள்விகளின் கலந்துரையாடலில் பங்குபெறும் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவர்.
சென்ற வருட ராஜ் கௌதமன் விழாவிற்க்கு கூச்சம் கலந்த தயக்கத்துடன் ஸ்வேதா கடந்துசென்ற நுழைவாயிலில் இவ்வருட விழாவிற்க்காக வைக்கப்பட்டிருக்கும் பதாகையில் பங்குபெறும் பாக்கியம்.
சில வருடங்களாக விருதுவிழா நிகழ்வுகளுக்கு ஆடியோ அமைப்பவர் இவ்விழாவில் சற்றே உற்சாக மிகுதியுடன் அமர்வுகளை தொழில்சார்ந்த கவனத்தை தாண்டி, உன்னிப்பாக
கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.
குவிஸ் செந்தில் நடத்திய இலக்கிய வினாடி வினா நிகழ்வின்போது அவருடைய பணியிடத்தை விட்டுவிட்டு செந்திலின் அருகில் நின்றபடி, முழு நிகழ்வையும் கண்டு மகிழ்ந்தபடி இருந்தார்.
யானை டாக்டர் புத்தகத்தை அவருக்கு பரிசாக அளித்திருக்கிறேன். அடுத்த வருட விழாவிற்க்கு, அனேகமாக வேறு
மைக் செட்டுக்காரரை தேடவேண்டியிருக்கலாம்.
அபிக்கான ஆவணப்படம் திரையிடப்பட்டு முடியும்போதும், ஆளுயர மாலை அணிவித்து விருதளித்தபோதும், முன்வரிசை நாற்காலிகளில் நெகிழ்ச்சியோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள் அபியின் குடும்பத்து பெண்கள்.
தாத்தாவை கொண்டாடும் அரங்கை சுற்றி சுற்றி பார்த்தபடி,மேடைக்கு எதிரே டான்ஸ் ஆடி தங்களின் உவகையை வெளியிட்டபடி இருந்தார்கள் அபியின் பேரப்பிள்ளைகள்.
மதியம் நடைபெற்ற அபிக்கான அமர்வில் இடையிடையே ரவிசுப்ரமணியன் மெட்டமைத்த அபியின் கவிதைகளை பாடலாக கேட்கையில் அந்தர வெளியில் சயனிக்கும் உணர்வு நிலை, கே.பி.வினோத்தின் ஆவணப்படத்தின் மூலம் “அந்தர நடை” யாக மாறியது.
ஒரு படைப்பாளிக்கு,தேர்ந்த வாசகர்கள் நிரம்பியிருக்கும் அரங்கொன்றில், குடும்பத்தார் முன்னிலையில் பெறும் பாராட்டென்பது எத்தகைய உவகையை கொடுக்கும் என்பது அபியின் ஏற்புரையில் வெளிப்பட்டது.
விழா முடிந்து வழியனுப்பி வைக்கும்போது அபியின் மகளிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.ரோட்டை தாண்டி நின்றிருக்கும் வேனுக்கு செல்ல ஆரம்பித்திருந்த மற்ற உறவுப்பெண்களும் நெகிழ்வாக நன்றிகளை தெரிவித்தபடி இருந்தார்கள். வாழ்த்துமடலை அபியின் மகள் கையில் கொடுத்து விடைகொடுத்தேன்.
மீண்டும் ரோட்டை கடக்க ஆரம்பித்த மொத்த குடும்பத்தையும் “இருங்க” என்று நிறுத்தியபடி, விளக்கு வெளிச்சக்கீற்றுக்கு வாழ்த்துமடலை சற்றே உயர்த்திபிடித்தபடி வாய்விட்டு படிக்க ஆரம்பித்தார்.
கல்யாணம் முடிந்த களைப்பில்,மடித்து கட்டிய பட்டு வேஷ்டியொடு,மண்டபத்து வாசல்படியில், கக்கத்தில் கேஷ்பேக்குடன் கணக்கு முடித்துக்கொண்டிருக்கும் மூத்தவராய் குவிஸ் செந்தில் அண்ணன். “அந்த சாம்பார் வாளியில ரெண்டு கொறயுது, எங்க கெடக்குதுன்னு தெர்லியே….” என்று அங்கலாய்த்தபடி உக்கிராண அறையில் தேடிக்கொண்டிருக்கும் விஜயசூரியன்.”முன்னூத்தி ரெண்டுல இருக்குற கெஸ்ட் நைட்டு சாப்பாட்டுக்கப்புறம் ரெண்டு ரஸ்தாலி சாப்டுதா தூங்கப்போவாரு, அவரு ரூமுல இந்த ரெண்டு பழத்த கொண்டுபோய் வச்சிட்டு வந்திடுப்பா…..”சுஷிலிடம் பரபரத்துக்கொண்டிருக்கும் மீனாம்பிகை.
விழா மறுநாள் – ஞாயிற்றுக்கிழமை.
ராஜா நிவாஸ் கட்டிடத்தின் வாசல் திண்ணையில் நீங்கள் தீவிர இலக்கியம் பேசிக்கொண்டிருக்கையில், இயல்பாய் வந்து உங்கள் மடிமீதமர்ந்தபடி தன்னுலகில் விளையாடிக்கொண்டிருந்தாள் செல்வேந்திரன்– திருக்குறளரசி இணையர்களின் இரண்டாம் புதல்வி இளம்பிறை. அருகாமை இருக்கையொன்றில் வேடிக்கை பார்த்தபடி மூத்தவள் இளவெயினி
சில வருடங்களுக்கு முன் உங்கள் மடியில் தவழ்ந்தவள் அல்லவா இளம்பிறை.மானசாதேவியின் மடியிலிருந்து மந்திரச்சொல் கேட்டிறங்கி செல்லும் ஆஸ்திகனைப் போல்…
உங்கள் மடியேறி தவழ்ந்த இளவேனிக்களும், இளம்பிறைகளும், முழுமதிகளாக ஆக முயன்ற வண்ணம் வெண்பாவாகவும், ஸ்வேதாவாகவும் முதல் படியை வைத்தபடி இருக்கிறார்கள்.
யோகேஸ்வரன் ராமநாதன்
***