விழா ,கடிதம்-கதிர்முருகன்

 அன்புள்ள ஜெ வணக்கம்..

 

 

மருதமலை ரோட்டில் இருக்கும் என் வீட்டிலிருந்து சற்றேறக்குறைய மூன்றாவது கிலோ மீட்டரில் ஆர்எஸ் புரத்தில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்கத்தில் இனிதே நிறைந்தது விஷ்ணுபுரம்  பத்தாம் விருது விழா…

 

 

இந்த நிகழ்விற்காக ஆஸ்திரேலியாவிலிந்தும் அமெரிக்காவிலிருந்தும் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குழுமியிருந்தவர்களில்  மிகக் குறைந்த பயண நேரத்தில் வந்தவன் நானாகத்தான் இருப்பேன்.

 

 

எனக்கு விழா உணர்வு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கிவிட்டது… வெளியூரிலிருந்து வரும் படைப்பாளிகளை விடுதிக்கு அழைத்து வரும் பணியில் இருந்தேன், ரவி சுப்பிரமணியம் அமிர்தம் சூர்யா போன்ற விரிந்த அறிவும் ஆழ்ந்த அனுபவமும் கொண்டவர்களை தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து கொண்டது என் பாக்கியம்.

 

இசையின் அமர்வு அழகான தொடக்கம், எவ்வித பாசாங்குகளுமின்றி நேர்மையாக கேள்விகளை எதிர்கொண்டு ஒரு கலை மனம் தன் அன்றாடத்தில் அடையும் உச்சங்களையும், வீழ்ச்சிகளையும்,தவிப்புகளையும், எதிர்காலத்திட்டங்களையும், சிவாஜி வாணி‌ஸ்ரீ வடிவேலுவின் துணை கொண்டு எடுத்துரைத்தார்.

 

 

யுவன் சந்திரசேகர்

 

உங்களுக்கும் அவருக்கும் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு நெருங்கிய நட்பு.

 

நவீன மனதும், ஆழ்ந்த நுண்ணுணர்வும், வெடித்து பரவும் உற்சாகமும்,கூர்ந்த நகைச்சுவை உணர்வும் கூடிய சித்தரை சந்தித்தது போலிருந்தது அவரது அமர்வு

 

 

அமிர்தம் சூர்யா

 

இவருக்கு எல்லாம் ஒரு மணி நேரம் என்பது எவ்வகையிலும் போதாது,

குறைந்தது ஒரு நாள் வேண்டும்.

 

பகிர்ந்து கொள்வதற்குத் தான் எத்தனை கதைகள் அவரிடம், உறுதியோடு அவர் பேசும் விதத்தால் மொத்த அரங்கையும்

தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

 

வெண்பா கீதாயன்

 

குழும நண்பர்களில் ஒருவர், பல குழும விவாதங்களில் அவர் மட்டுமே சொல்ல முடிகிற கருத்துக்களை கொண்டிருப்பவர்.

 

தன் திறனை பல தளங்களில் நிறுவியவர் எனினும்… அன்று அவருடைய நாளாக அமைய வில்லை.

 

 

சுரேஷ் குமார இந்திரஜித்

 

எனக்கு ஏனோ இவருடைய அமர்வு ராஜ்கௌதமன் அவர்களுடைய அமர்வினை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

 

 

வன்முறை சோகம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வீடியோ பதிவுகளயோ ஏன் ஒரு புகைப்படத்தையோ கூட தன்னால் காண முடியாது.

 

காதல் காட்சிகளில் சிவாஜி கணேசனின் தாடை அசைவின் வன்முறையில் இருந்து மீள்வதற்கு பெரும் பாடுபடுவேன் என்றார்.

 

82 லிருந்து 87 வரை ஒரு ஐந்து ஆண்டுகள் பெரிதாக எழுதவில்லையே ஏன் ஏதாவது மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தீர்களா என்ற உங்கள் கேள்விக்கு ஆம் அப்போதுதான் எனக்கு திருமணம் ஆகி இருந்தது என்று அரங்கை அதிரவைத்தார்.

 

 

ரவி சுப்பிரமணியம்

 

மரணம் குறித்த ஜெயகாந்தனின் பார்வையும்இசைஞானி அவர்களுடன் இவருக்கு நிகழ்ந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து விதமும் என்றென்றும் மறக்காது குறிப்பாய் அவருடைய பாடல்கள்

 

 

வினாடி வினா

 

திரு செந்தில் அவர்களின் ஆளுமை அனைவரும் அறிந்ததே குறிப்பாக வினாடி-வினா நடத்தும் பொழுது அவர் விஸ்வரூபம் கொள்கிறார்.

 

இந்நிகழ்வுக்கு பெரும்பாலானோர் முந்தைய இரவு முழுவதும் பயணித்து வருகின்றனர் காலையிலிருந்து இடைவிடாத அமர்வுகள்

இரவு உணவுக்குப்பின் 10 மணிக்கு மேலும் இவ்வளவு உற்சாகமாக ஒரு கூடல் விஷ்ணுபுரத்தில் மட்டுமே சாத்தியம்.

 

 

ஜானவி பரூவா

 

இந்த அமர்வுகளுக்கு நீங்கள் சூட்டிய பெயர் meet the author.

 

ஏற்கனவே அவருடைய கதைகளை படித்து நாம் சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளுமையை நெருங்கி அறிய மேலும் அவர் படைப்புலகை புரிந்துகொள்ள எழுத்தாளர்களை சந்திப்பது உண்மையில் பேருதவி தான்.

 

தன் அறிவால்

உறுத்தாத இருப்பால், அழகால் அனைவர் மனங்களையும் வென்று சென்றார்.

 

அவர் மீண்டும் மீண்டும் மகிழ்ந்து நன்றி கூறினார் தன்னுடைய படைப்புகள் வாசிக்கப்படுவது குறித்த நிறைவால்.

 

தமிழ்ச் சூழலில் தான் இலக்கிய வாசிப்பு குறைவு என்ற நம்பிக்கையை உடைத்தார் இந்திய அளவிலும் நிலைமை அதுதான் போலிருக்கிறது.

 

(ராம்குமாருக்கு-வடகிழக்கில் ஆண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா)

 

கே. ஜி .சங்கரப் பிள்ளை

 

50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியச்செயல்பாட்டிலும், கம்யூனிச இயக்க அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபட்டுவரும் பேராளுமை.

 

அசைக்க முடியா உறுதியோடு கூடிய நிதானம் இந்த அமர்வு முழுவதும் இருந்தது.

 

புரட்சியில் தொடங்கியவர் , தரமான அழகிய தனக்குப் பொருத்தமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து டக்இன் செய்து வந்திருந்தது பல கதைகளை சொன்னது.

 

பெருந்தேவி

 

நீங்கள் கூறியது தான் எல்லோர் மனதிலும் ஒரு மதிக்கத்தக்க ஆளுமையாக இடம் பெற்றுவிட்டார்.

 

தொடர்ந்த சக எழுத்தாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சற்று நிதானம் இழக்காமல் பதில்களை கூறினார்.

 

சென்ற ஆண்டில் நிகழ்ந்த இது போன்றதொரு கவிதாயினியின் அமர்வுக்கும் இதற்கும் தான் எத்தனை வேறுபாடு.

 

 

அபி

 

கிருஷ்ணன் கூறினார் 10 ஆண்டு விஷ்ணுபுர அமர்வு களிலேயே கேஜிஎஸ் அவர்களின் அமர்வுதான் ஆகச் சிறந்தது என்று இந்த அமர்விற்கு பின் தன் எண்ணத்தை மாற்றி இருப்பார் என எண்ணுகிறேன், ஏனெனில் இவ்வளவு பழுத்த பின்பும் கேஜிஎஸ் அவர்களுக்கு எதிர்ப்பதற்கு சில எஞ்சி இருக்கிறது.

எதிர்ப்பவன் எதிர்க்கப் படுவது எதிர்ப்பு என்ற மும்மையை கடந்த பெரும்பாழில் நம்மை தள்ளி விட்டார் அபி அவர்கள்.

 

 

ஒவ்வொரு ஆளுமைகளும் பல வண்ணங்களால் ஆனவர்கள். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் ,வாசிப்பின் மூலம் கண்டடைந்த அறிவுச் செல்வங்களும் எல்லாம் இணைந்து ஏதோ ஒரு நறுமணத்தை தாங்கள் அறிந்தும் அறியாமலும் அமர்வுகளில் கசிய விடுகின்றனர்.

 

தோற்றத்தில் சிற்றுடலராக, மிக முதிர்ந்தவராக, இருந்தபோதும் இவருடைய முழு அமர்வும் ஒரு சத்சங்கம் போலிருந்தது எனக்கு.

 

 

தேவ தேவனிடமிருந்து இயற்கை ஆராதனையையும், அழகு வழிபாட்டையும், எதிர்காலம் மீதான பெரும் நேர்மறை நம்பிக்கையையும் நீக்கிவிட்டால் எஞ்சுவது அபி ஆகத்தான் இருக்கும்.

 

ஆம் அபி அவர்களின் இருப்பு பெரு மௌனம் தான்,

 

 

 

கேள்வி  பெருந்தேவி-சூன்யம், நிசப்தம், மௌனம் உங்கள்  படைப்புகளில் என்னவாக இருக்கிறது குறிப்பாய் மௌனம்?

 

பதில் அபி-

சூன்யம், நிசப்தம்,

நான், நீங்கள் இங்குள்ள அனைத்தயும் உள்ளடக்கியது தான் நான் கண்டடைந்த (அல்லது சுட்டும்) மௌனம்.

 

கவிதைகளில் தன்னுடைய பெயரை போடுவதற்குக் கூட உடன்பாடில்லை என்றார் எந்த உபநிடத ஆசிரியன் தன் படைப்புகளில் பெயரை விட்டுச் சென்றுள்ளான்…

 

 

மகிழ்மதி தேவாரம் பாட ஜான் முகமதுநபியை துதிக்க அபிபுல்லாவிற்கு

விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது….

 

 

நிகழ்விற்குப் பின் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல எஞ்சிய 50 பேர் கொண்ட குழு நீங்கள் செல்லுமிடமெல்லாம் பின்தொடர்ந்தது,உணவு உண்ணும்போதும் உண்ட பின்பும் அமர்ந்து பேச இடம் தேடி நகர்ந்தோம் அலைந்தோம் இறுதியாக ராஜஸ்தானி சங்கத்தின் படிக்கட்டுகளில் உங்களை சுற்றி அமைந்து மொய்த்துக் கொண்டோம்…

 

இந்த இரண்டு நாட்கள் தான் எவ்வளவு தீவிரமானவை என் கையில் கட்டியிருந்த MI

4 BAND இரு நாட்களில் மொத்தம் 25 ஆயிரம் அடிகள் நான் நடந்திருப்பதாக சொன்னது உண்மையில் ஒவ்வொரு அணுவிலும் அதை மீறிய உற்சாகம் பொங்கி வழிந்தது…

 

நான் எழுத்தாளன் ஆகும் எண்ணம் கொண்டவன் அல்ல,சிறந்த வாசகனும் அல்ல, பின்பு என்னதான் இந்த விழாவில் எனக்கு கிடைத்தது?

 

சுரேஷ்குமார இந்திரஜித் அபி அவர்களிடம் கூறினார், இந்த அமர்வில் சிறிதுநேரம் நான் என்னும் உணர்வு என்னை விட்டு நீங்கியது போல் இருந்தது என்றார்…(சற்று நேரத்தில் திரும்ப வந்து விட்டது என்றும் சொன்னார்)

 

 

ஆம் இந்த பருவுலகில் இருந்து சற்று நேரமேனும் நம் காலத்தின் மாபெரும் படைப்பு மனங்களோடு இணைந்து விழித்துக்கொண்டே காணும் பெரும் கனவுதான் விஷ்ணுபுரம்

 

இவ்வனைத்துக்கும் மூல விசை நீங்கள் தான் அதற்கு நன்றியும் அன்பும்

 

மு.கதிர்முருகன் கோவை

முந்தைய கட்டுரைவிழா-சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைகாலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்