விழா-சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

 

மற்றுமொரு ஆண்டு கடந்துவிட்டது. இந்த பத்து விழாக்களில் முதல் விழாவிற்கு மட்டும் நான் வந்ததில்லை. ஒன்பது ஆண்டுகளாக வருகிறேன். நம் நண்பர்கள் சிலர் பத்தாண்டுகளாக வருபவர்கள் இருப்பார்கள். எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது. எது என்னை திரும்பத்திரும்ப வரச் செய்கிறது?

 

முதன்மையாக உங்களையும் நம் நண்பர்களையும் காண வேண்டும் எனும் விழைவு. வருடத்திற்கு இருமுறையோ மூன்று முறையோதான் எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு. சுந்தரவடிவேலன், காளி போன்றோரிடம் தினமும் பேசுகிறேன் ஆனால் சந்திப்பது அரிது. உங்களிடம் பேசுவதும் நேரில் சந்திக்கும்போதுதான்.மொத்த சூழலுமே ஒருவித அறிவு விவாதத்திற்கானது.

 

விவாத அரங்கில் பங்குகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் தவிர்த்து, நாஞ்சில், சுசீலாம்மா, சு. வேணுகோபால், தேவதேவன், புண்ணியவான், கார்த்திகை பாண்டியன், போகன், இளங்கோ, பரமேஸ்வரி, சுரேஷ் பிரதீப், வே.நி.சூர்யா, ச.துரை, கவிதா, அகில்குமார், நகப்பிரகாஷ், சுசித்ரா என இத்தனை எழுத்தாளர்களை சந்திக்கவும் அவர்களுடன் பேசி பரிமாறிக்கொள்ளவும் முடிந்தது.

 

இந்த ஆண்டு விஷால், கே.ஜெ.அசோக் போன்றோர் குறிப்பிடத்தக்க விடுபடல்கள். ஒவ்வொரு ஆண்டும் இத்தனை எழுத்தாளர்களை நட்பார்ந்த சூழலில் சந்திக்கும் வாய்ப்பு இங்குதான் எனக்கு வாய்க்கிறது.

 

ஒரு வாசகனாக எனக்கு பிடித்த, நான் தொடரும் எழுத்தாளர்களை மேடையில் காண்பது. சில ஆண்டுகளுக்கு முன் வட்டமாக அமர்ந்து கலப்ற்றாவுடன் அவருடைய கவிதைகள் வாசித்து உரையாடியது என்னளவில் விஷ்ணுபுர அமர்வுகளில் நான் பங்குக்கொண்ட ஆகச்சிறந்தது என்பேன். யுவனையும், சுரேஷ்குமார இந்திரஜித்தையும் பெருந்தேவியையும் இந்த ஆண்டு மேடையில் காண்பது அவ்வகையில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. எழுத்தாளருக்கு விருது அங்கீகாரம் பணமுடிப்பு எல்லாம் பின்னர்தான்.

 

சுரேஷ்குமார இந்திரஜித்தை சில ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு விஷ்ணுபுர நிகழ்வில் தான் முதன்முறையாக அறிந்து கொண்டேன். இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது எழுத்தாளர்களுக்கு அளிக்கும் நிறைவு போல் வேறொன்றும் அளிக்காது.

 

விழாவிற்கு தயாராவது என்பது ஒரு வாய்ப்பு. பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் விழாவிற்காக தயாரானதில் தான் வாசித்தேன். இரா.முருகனின் அரசூர் வம்சம் அப்படியொரு முறை வாசித்து வியந்ததுதான்.

 

வாசகனாக வந்தவனை எழுத்தாளனாக ஆக்கியதில் சர்வநிச்சயமாக விஷ்ணுபுரம் விழாவிற்கு பங்குண்டு. எல்லாகாரனங்களை காட்டிலும் இதுவே முதன்மையான காரணம் என எண்ணுகிறேன். ஒருவகையான படைபூக்கமிக்க அமைதியின்மையை ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விழா எனக்கு அளிக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் நீலகண்டம் முதல் வரைவு முடித்தேன். அதற்கு முந்தைய ஒரு ஜனவரியில்தான் பழுவேட்டையர் எனும் பாத்திரம் உருவானார். அதற்கு முந்தைய ஒரு ஜனவரியில்தான் காந்தி இன்றின் சில நல்ல கட்டுரைகள் எழுதப்பட்டன. வாசிப்பதிலும் எழுதுவதிலும் எப்போதும் புதிய உத்வேகமும் உற்சாகமும் விழாவிற்கு பின்பான காலங்களில் நீடித்திருப்பதை உணர முடிகிறது.

 

இப்போது எழுத்தாளராக ஆனபின்னர் விழாவில்தான் நான் அறியாத வாசகர்களை தெரிந்து கொள்கிறேன். நீலகண்டம் குறித்து மூன்று நண்பர்களாவது பேசினார்கள்.

தங்குமிடமும், உணவும், அரங்க அமைப்பும் மிகச்சிறப்பு. தன்னலமற்ற நண்பர்களின் உதவியால் மட்டுமே இது சாத்தியமாகும். பெருந்தேவி சொன்னது போல் இது ஒரு இயக்கம். அரங்கா உரையில் குறிப்பிட்ட விஷயம் குறித்து மதியம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். விஷ்ணுபுரம் எனும் அமைப்பை ஒரு பொலிட் பீரோ கணக்காக கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படியொன்றும் இங்கு இல்லை. விஷ்ணுபுரத்தார் மேடைக்கு வந்து குழு புகைப்படம் எடுத்துகொள்ள அழைத்தபோது எவரெல்லாம் தன்னை விஷ்ணுபுரம் வட்டம் என கருதினார்களோ அவர்கள் அனைவரும் வந்தார்கள். இது ஒரு இறுகிய அமைப்பு அல்ல. நாம் தான் பிணைப்பு கொள்வதையும் விலகி நிற்பதையும் முடிவு செய்கிறோம்.

 

விழாவின் முக்கிய பங்களிப்பு என்பது வெளி மாநில எழுத்தாளர்களை இங்கே அறிமுகப்படுத்துவது. அதே போல் இங்கிருக்கும் சில போக்குகளை அவர்களுக்கு அறிமுகபப்டுத்துவது.

 

மேடை உரைகள் எல்லாமே சிறப்பாக இருந்தன. ஸ்வேதாவின் உரை அசலானதாக இருந்தது.யோகி ரவி சுப்பிரமணியம் அரங்கை சிறப்பாக ஒருங்கிணைத்தார். யுவன், சுரேஷ்குமார இந்திரஜித், இசை, கே.என்.செந்தில், பெருந்தேவி,  ஜான்வி, கே.ஜி.எஸ். மற்றும் அபியின் அரங்குகள் வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

அரங்கா பழைய உற்சாகத்துடன் இருந்தது மகிழ்ச்சியை அளித்தது.நிறைவான நாட்களுக்கு நன்றி ஜெ..செந்தில், மீனா, விஜய் அண்ணனுக்கு மேலதிக நன்றிகள்

 

சுனீல் கிருஷ்ணன்

 

முந்தைய கட்டுரைவிழா- கடிதங்கள்- சுபா, யோகா
அடுத்த கட்டுரைவிழா ,கடிதம்-கதிர்முருகன்