அன்புள்ள ஜெயமோகன்,
இந்த சிறுகதை வரிசையில் நீங்கள் எழுதும் சிறுகதைகளில் பெரும்பாலானவை உண்மை மனிதர்களின் கதைகள் மாதிரி தோன்றுகின்றன. அந்த வரிசையிலே வரக்கூடிய கதையாக இந்த நூறுநாற்காலிகள் அமைந்துள்ளது. நடுங்க வைக்கும் கதை. கதையை போகிறபோக்கில் வாசித்துச்ச்செல்லும்போது ஒரு பதற்றமும் துக்கமும் ஏற்படுகிறது. பதற்றம் குற்றவுணர்ச்சியால் வரக்கூடியது. துக்கம் மனுஷனின் கையறுநிலையை உணர்ந்ததனால் வரக்கூடியது. இந்த வரிசையிலே வந்த கதைகளில் இதுதான் உச்சம் என்று ஒவ்வொரு கதையிலும் தோன்றுகிறது. ஆனால் உண்மையிலேயே இதுதான் உச்சம். இந்தவரிசையிலே வரக்கூடிய கதைகளில் எல்லாவற்றிலுமெ நியாயம் சம்பந்தமான கருக்கள்தான். இந்தக்கதையிலே உள்ள நியாயம் ரத்தம் தோய்ந்ததாக இருக்கிறது.
கதையை சொல்லும்போதே அதிர்வை உருவாக்கக்கூடிய கதை. நிறையபேர் அதிலே உள்ள கதையைத்தான் வாசிப்பார்கள். ஆனால் நான் 34 வருஷம் அரசாங்கத்திலே இருந்தவன். ஆகவே அதிகாரத்தைப் பற்றியும் அதிலே உள்ள மக்களின் மன அமைப்பைப்பற்றியும் பேசப்பட்டிருக்கும் இடங்கள் மிக நுணுக்கமானவை என்று நினைக்கிறேன். அந்த இடங்களை வாசித்து கொண்டுதான் மொத்தக்கதையையும் உள்வாங்கிக்கொள்ளமுடியும். தர்மபாலனின் துக்கம் என்ன?. அதாவது ஒவ்வொரு நிமிடமும் மோதி மண்டை உடைத்துக்கொண்ட கூண்டு எது என்று தெரிந்தால்தான் கதையே உள்ளே வருகிறது. அம்மா ஒரு கூண்டிலே இருக்கிறாள் என்றால் மகன் இன்னொரு கூண்டிலே இருக்கிறான். ரெண்டுபேருமே மண்டையை உடைத்துக்கொண்டு ரத்தம் கொட்டுகிறார்கள். உள்ளே சென்றதும் நான் நினைத்தது தூக்கு மாட்டிக்கொள்வதைப்பற்றிதான் என்ற வரி என்னை உடைய வைத்தது.
தலித்துக்கள் பழங்குடிமக்கள் போன்றவர்களின் துக்கத்தைப்பற்றியும் அவர்கள் சுரண்டல் செய்யப்படுவதைப்பற்றியும் நிறையவே வாசித்திருக்கிறோம். கலங்க வைக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் இங்கே ஒருதலித்தாக நாமே வாழக்கூடிய அனுபவம் கிடைக்கிறது. கதையில் உள்ள நுட்பமான உளவியல் தகவல்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். அவை வந்துகொண்டே இருக்கின்றன. வர்ணனைகள் காட்சியை கண்ணுக்குள் நிறுத்துகின்றன. ‘னின்னும்’ என்று சோறு கேட்கும் அந்த சின்னப்பையனைத் தொடக்கூடிய தூரத்திலே பார்க்கமுடிகிறது. அவன் அனுபவிக்கும் ஒவ்வொரு அவமானமும் சஞ்சலமும் மனசுக்குள் வந்து உட்கார்கிறது. நம்முடைய சொந்த துக்கமாக ஆகிறது
புலம்பத்தான் முடிகிறது ஜெ
சங்கரவேல்
அன்புள்ள சங்கரவேல்,
நன்றி
இந்த வரிசைக் கதைகளில் எல்லாவற்றிலும் பாதிக்குப்பாதி உண்மை கலந்துள்ளது. எவ்வளவு உண்மை என்று சொல்வது எனக்கே கடினமானது என சொல்லியிருக்கிறேன். இக்கதைகளின் மையநிகழ்ச்சிகள் உண்மையானவை. ஒன்று அந்நிகழ்வில் நானே பங்கெடுத்திருப்பேன். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியிருப்பார்கள். அல்லது செவிவழி வரலாறாக இருக்கும். ’அறம்’ சம்பந்தப்பட்டவரே சொன்னது. சோற்றுக்கணக்கு அறிந்த ஒருவர் சொன்னது. நேசமணியின் கதை பிரபலமான செவிவழிக் கதை. மத்துறுதயிர் நானே சம்பந்தப்பட்டது.
பலகதைகளுக்கு சுந்தர ராமசாமி, அவரது அவை காரணமாக அமைந்திருக்கிறது. வேதசகாயகுமார் பல கதைகளைச் சொல்லியிருக்கிறார். பேராசிரியர் ஜேசுதாசன் சொல்லியிருக்கிறார். யோசிக்கும்போது நான் அடிப்படையான தேடலில் இருந்த காலகட்டத்தில் இக்கதைகள் என்னை வந்து சேர்ந்தது முக்கியமானது என நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்வதில் அர்த்தமில்லை. அவர்கள் எவ்வகையிலோ என் வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள்.
முன்னர் பல அனுபவங்களை நேரடியாக அனுபவக்கதைகளாக மட்டும் எழுதினேன். அவற்றை அவ்வாறு உண்மைநிகழ்ச்சிகளாக எழுதும்போது அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட உச்சங்களை அதில் சேர்க்கமுடியவில்லை. யதார்த்தம் மிக கிடைமட்டமானது. நேரடியான கிளர்ச்சி இல்லாதது. சாராம்சம் உள்ளே வராதது. ஆகவேதான் அவை கதைகளாக ஆகின்றன. அப்போது மொழிக்கும் கற்பனைக்கும் சுதந்திரம் கிடைக்கிறது. கவித்துவமான அழுத்தங்கள் தத்துவார்த்தமான விவரணைகளுக்கு இடம் உருவாகிறது. என்னுடைய உணர்ச்சி உத்வேகம் அதில் பதிவாகிறது
உண்மைக்கதைகள் இங்கே கற்பனைமேல் பதிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே பல துணைக்கதைமாந்தர் கற்பனையானவர்கள். துணைச்சந்தர்ப்பங்கள் கற்பனையானவை. உண்மைநிகழ்ச்சி பெரும்பாலும் சாதாரணமானதாகவே இருக்கும். அதை அப்படியே சொன்னால் அதில் சாராம்சமான அறச்சிக்கல், அற எழுச்சி மேலெழுந்து வரவும்செய்யாது. ஆகவே புனைவின் உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக இலக்கியத்தில் இது தொன்மையான ஒரு வடிவம். தமிழில் அதிகம் எழுதப்பட்டதில்லை.
இவற்றில் பல கதைகளுக்கு இருபது இருபத்தைந்து வருடத்து வரலாறு உண்டு. நான் இளைஞனாக இருந்தபோது என் சிந்தனையை அதிரச்செய்து என் அறவுணர்வை கட்டமைத்த நிகழ்வுகள், மனிதர்கள் இவை. சிலகதைகளுக்கு முன்னரே ஒரு வடிவம் எழுதியிருக்கிறேன். இந்த வயதில் என்னை நானே மீண்டும் ஆழமாக பரிசீலனைசெய்யும் ஒரு தீவிரமான காலகட்டம் வழியாக நான் சென்றுகொண்டிருக்கிறேன். நான் பேசும் அறம் என்பதன் விரிவும் பெறுமதியும் என்ன என்பதே என் தேடல். இக்கதைகள் அதன் பொருட்டு நான் செய்துகொள்ளும் சுயவிசாரணைகள். எழுத்துதான் என் தியானம் என்பது
உலகமெங்குமாக ஒரு இரண்டாயிரம் மூவாயிரம்பேர் இந்த ஒருமாதக்காலமாக இதே உச்சநிலையில் இதே ஆன்ம விசாரணையில் என்னுடன் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் அளித்த பேறு. அவர்களின் எதிர்வினைகள் மூலம் என்னுடைய இந்த வேகம் இன்னும் தீவிரப்பட்டது. ஒருவேளை அவர்களின் இந்த உரையாடல் நிகழாதுபோயிருந்தால் இந்தக் கதைகள் ஒன்றிரண்டுடன் நின்றிருக்கலாம்.
நன்றி
ஜெ
அன்பின் ஜெயன்
நூறு நாற்காலிகள் படித்து விட்டு எழுதுகிறேன். என்னால் துக்கத்தை அடக்கவே முடியவில்லை. எதுவும் பேசவும் முடியவில்லை. காப்பனின் அம்மாவில் நான் இருந்தேன். அவளுடன் அழுது அவமானப்பட்டு குட்டியை பிரிந்த தாய் மிருகத்தை போல தவித்து நான் காணத உலகம் இது. போரின் இழப்புகளை மட்டுமே நான் அறிவேன். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அவமதிக்கப்படும் துன்பம் அதை விடப் பன் மடங்கு அதிகம். இதை எழுதும் போதும் என் கண்ணில் நீர் வடிகிறது. நீங்கள் பல ஆணடுகள் நலமாய் இருக்க வேண்டும்.
அன்பின் கலா
FM-NEPPL
அன்புள்ள கலா,
இந்தியாவில் நாம் சில விஷயங்களில் இருந்து மேலே வந்துவிட்டோம். ஆனால் இந்தியாவில் இன்னும் இதைவிட ஆழமான சேற்றுக்குழிகள் உள்ளன. ஆப்ரிக்காவில் ஆசியாவின் அறியபடாத நாடுகளில் வாழ்க்கை எவ்வளவோ இருக்கலாம்.
இன்று கொஞ்சம் முன்பு நாகர்கோயில் பேருந்து நிலையமருகே ஒரு பெரிய திறந்த வெளி நரிக்குறவக்குடியிருப்பை பார்த்துவிட்டு வந்தேன். அதில் எத்தனை காப்பான்கள் என யாரறிவார்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் சார்,
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் வீட்டில் தங்கியிருந்த, லுங்கி அணிந்துகொண்டு
கேட்-ஐ திறந்து போட்டுவிட்டு போன இளம் எழுத்தாளர் நலமா?. ‘ நூறு நாற்காலிகள்’ மற்றொரு கிளாச்சிக். நேற்று இரவு என்னால் கடைசி பகுதியை படிக்க முடியவில்லை. நான் சரியாக தூங்க முடியாததற்கு அதுவும் ஒரு காரணம். காலையில் அலுவலகம் வந்துதான் படித்து முடிக்க முடிந்தது. அதன் பிறகே அமைதியானேன்.
வழக்கம் போல என் மனதை பாதித்தது. கதை முழுக்க படிக்கும் தோறும் கூட வருவது ‘அருவருப்பு’ என்ற உணர்வு. நாயாடிகள் வலி எப்படி இருந்திருக்கும் என்று உணர்திவிட்டிர்கள். சாதி படிகளின் மேல இருக்கும் அனைவரும் தங்கள் கீழ் படிகளில் இருந்தவர்களை ஒடுக்கவே செய்திருக்கிறார்கள்.
உண்மையாக சொல்லப்போனால் எல்லோருக்கும் இரண்டு மனம் இருக்கிறது. ஒரு மனம் ஒரு மனிதனின் சாதியை குறித்து குறைவாகவே மதிப்பிடுகிறது. அதற்கு தர்க்கங்கள் எதுவும் இல்லை. அந்த மனம் யாருக்கும் அஞ்சுவதில்லை. இந்த முதல் மனதிற்கு பூச்சுகள் இல்லை. பாவனைகள் இல்லை. அந்த மனதின் எண்ணத்தை வெளியிட்டால் அதுவே சாதிவெறி என்று சொல்லப்படும். கல்வியால், நீதி போதனைகளால் நாம் உருவாக்கிக்கொண்ட தருக்கமணம் சாதி இல்லை என்கிறது. அந்த தருக்க மனம் மட்டுமே சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. பூச்சுகள் செய்து கொள்கிறது. பாவனைகள் செய்கிறது. இது எங்கும் நடக்கிறது. இல்லை என்று சொல்பவர்கள்அந்த இரெண்டாம் மனதில் இருந்துதான் சொல்கிறார்கள். நீங்களும் இதை எழுதி இருக்கிறிர்கள் என்பது
எனது புரிதல். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
என்னுடைய கவலை என்னவென்றால், சாதியை குறித்த இந்த இரட்டை மானது எப்போது ஒன்றாகும், என்பதுதான்?. இந்த இரட்டை மனது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் அணைத்து பாகங்களிலும் இருக்கிறது. வடிவங்கள் மட்டுமே மாறுகின்றன. இந்தியாவில் சாதிபடிகள் என்றால், வெள்ளையர் நாடுகளில் நிறவெறி.
ஒடுக்குபவர்களின், பாவனைகாரர்களின் மனசாட்சியை இந்த நாற்காலிகளின் ஆணிகள் குத்தும்.
அன்புடன்
குரு மூர்த்தி பழனிவேல், லாகோஸ்
அன்புள்ள குரு,
பொதுவாக நீதி -சமத்துவம் பற்றிய சமூக பிரக்ஞை என்பது அந்தந்த காலகட்டத்திற்குரிய பல்வேறு கருத்தியல்கள், அமைப்புகள் சார்ந்து உருவாகிறது. அதைச் சிந்தனைகளும் கலைகளும் மிகுந்த வேகத்துடன் உந்தும்போதுதான் அது மெல்ல முன்னகர்கிறது. நேற்றைய அநீதி நமக்கு ரத்தம் உறையச் செய்கிறது. அன்றாட அநீதி நம் கண்ணுக்குப் படுவதே இல்லை. நாம் ஓட்டலில் உணவுண்ணும்போது ஐந்து வயது குழந்தை நம் காலடியில் தரையை துடைத்துச் செல்கிறது. நாம் அதை பொருட்படுத்துவதே இல்லை
கலை அந்த அன்றாட பழக்கமனத்தை கொஞ்சம் கீறித் திறந்து வைக்கிறது. இங்கே நாம் அறிந்தவற்றையே மீண்டும் காண்கிறோம். ஆனால் நம் மனசாட்சி தூண்டப்படுகிறது. அந்த உத்வேகம் சிலசமயம் தற்காலிகமானதாக இருக்கலாம். ஆனால் அது ஒரு கூட்டுசக்தியாக ஆகும்போதே சமூகத்தை முன்னகர்த்தும் புதிய அறங்கள் உருவாகின்றன
ஜெ
*
ஜெ,
எத்தனையோ கோஷங்கள் எத்தனையோ கூக்குரல்கள் மேடை கர்ஜனைகள் வசைகள் தராத தாக்கத்தை ஒரு புனைவால் தர முடிகிறதே. இதுவும் நிஜம் என மனதில் பதிந்துவிட்டதாலா? வெறும் புனைவுதான் எனப் படித்தால் அனுபவம் வேறாக இருக்குமோ? இல்லை நிஜத்திலிருந்து எடுக்கப்பட்டதாலேயே இந்தப் புனைவு இத்தனை உக்கிரமானதா? சரசுவதியின் சக்தி வடிவமா?
உலகின் அத்தனை தத்துவங்களாலும், சிந்தனைகளாலும் கைவிடப்பட்ட மனிதர்கள், எல்லாம்வல்லவன் என்றும் கருணா மூர்த்தி என்றும், தந்தையே என்றும் நாமெல்லாம் கூவிப் புகழும் அந்தக் கடவுளினாலும் கைவிடப்பட்ட மனிதர்கள் இந்த உலகில் உண்டா? ‘இருந்தார்கள்’ என்பதா? இல்லை இருந்து கொண்டிருக்கிறார்களா? கடவுளே! கண்களை மூடிக் கண்ணீரை வழிய விடுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை.
என்ன செய்வது ஜெ! அதையும் சொல்லிவிடக் கூடாதா? கிடைத்ததை வைத்து வாழ்ந்து விட்டுச் சென்றுவிட வேண்டியதுதானா? வேறொன்றும் செய்வதற்கில்லையா? புத்தன் கண்டது இதைத்தானா? மனிதன் எனும் பெயரே ஒரு பட்டமா? தன்னளவில் அதுவே ஒரு பெரும் பேறா? நினைக்க நினைக்க மனது கனத்து சுமையாகிறது. நென்சை அழுத்துகிறது ஏதோ ஒன்று. குற்ற உணர்ச்சிதானா? சட்டையை கழற்றிவிட்டு நாற்காலியை தூக்கிவிட்டு சென்று வாழ்ந்துவிட்டால்தான் என்ன? அது வாழ்க்கையில்லையா? நாகரிகம் என்பது வெறும் வன்மமும், சூழ்ச்சியும், துரோகங்களும் நிறைந்ததில்லையா? மனிதா நீ விலங்கை விட மேலானவன் என்பது எத்தனை பெரிய ஏமாற்று? அது எதற்காக? நாம் பேசி எழுதி கொண்டாடி வழிபட்டு என்ன சாதித்து விட்டோம்? மீண்டும் மீண்டும் நம்மை நாமே தொலைத்துத் தேடி கண்டடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். எல்லாமே கற்பிதங்கள் இல்லையா? எல்லாமே கற்பனைக்ளில்லையா? ஒரு வேளை அதை நினைத்துத்தான் கண்ணீர் விடுகிறோமோ என்னவோ?
சிறில் அலெக்ஸ்
அன்புள்ள சிறில்,
ஹிட்லரின் நாஜி படுகொலைகள் வெளிவந்து உலகமே அதிர்ந்த போது காந்தி அதிரவில்லை என்று ஒருமுறை மேடையில் சொன்னார் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன். அவருக்கு மானுட இருள் தெரியும். அதனால்தான் அவர் அகிம்சையை பற்றிபேசிக்கொண்டிருந்தார். மனிதன் மீதான நம்பிக்கையா அவநம்பிக்கையா அவரை அப்படி பேசவைத்தது என்று சொல்வது கடினம்.
நாம் நின்றுகொண்டிருக்கும் இன்றைய உலகம் மாபெரும் அநீதிகளினாலானது. அதைப்பார்க்க மறுக்கும் மனநிலையை இயல்பாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அதன் மேல் வாழ்கிறோம். கலை அந்த மெல்லிய ஜவ்வுப்படலத்தை அவ்வப்போது கீறி விடுகிறது. வான்காவின் உருளைக்கிழங்கு தின்பவர்கள் என்ற ஓவியத்தைப்பற்றி அதைத்தான் சொன்னார் நித்யா. அதைப்பார்த்து கண்ணீர் விடும் ஐரோப்பியன் அந்த உண்மைக்காட்சியை நூறுமுறை நேரில் கண்டிருப்பான்
சென்னையில் தெருக்களில் இரவு 10 மணிக்கு நடந்தால் அன்றும் இன்றும் மனசாட்சி அதிரத்தான் செய்கிறது. குப்பைகள் போல தெருவில் மனிதர்கள் குவிந்திருப்பார்கள். ஏழாம் உலகமும் சரி நூறுநாற்காலிகளும் சரி நாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் உலகத்தை கிழிக்கின்றன. நான் கடவுளும், அங்காடித்தெருவும் அதைத்தான் முயன்றன. அதை இலக்கியத்தின் புனிதகடமை என்றே நினைக்கிறேன்.
எழுதத்தானே முடிகிறது என்று சிலசமயம் தோன்றும். ஆனால் எழுத்துமூலம் மட்டுமே ஏதேனும் செய்யமுடியும் என்றும் தெரிகிறது. இந்த சமூக அநீதிகளின் அடித்தளம் ஆதிக்க வர்க்கமோ அதிகாரமோ ஒன்றும் அல்ல. சமூகத்தின் கூட்டு மனநிலைதான். அது நியாயப்படுத்தி வைத்திருக்கும் விஷயங்கள்தான். அதன் சமகால சமூக அறம்தான்
எழுத்து, கலை, பிடிவாதமாக சிறுகச்சிறுக அதனுடன் உரையாடி கரைக்கிறது. அப்படித்தான் எல்லா மாறுதல்களும் உருவாகியிருக்கின்றன.
நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்களாக இருங்கள் என்பது ஒரு உபதேசம் அல்ல. சவால். பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் என் கிறிஸ்து வந்து அதை மீண்டும் சொல்லிவிட்டுச் செல்கிறார்
ஜெ