புலி : ஜானவி பரூவா

 

மானஸ் தேசிய பூங்காவின் நுழைவு வாயிலின் சோதனைச் சாவடியை அவர்களின் கார் சென்றடைந்தபோது சூரியன் மறைந்து, வெளிச்சம் வெகுவாக குறையத்துவங்கி இருந்தது. காரோட்டி லஹுன் காரில் இருந்து இறங்கி சாலையோரத்தில் இருந்த மரத்தாலான காவலர் குடில் நோக்கி சென்றான். அவர்களை பின்தொடர்ந்து வந்த ஜீப், அவர்களது அம்பாசிடரை அணுகியதால்,பின்னாலிருந்து எழுந்த சரளைக் கற்களில் டையர்கள் உரசும் ஒலியை கேட்டுக்கொண்டிருந்தாள் பப்லி

“இதோ அவங்களும் வந்துட்டாங்களே” என்றபடி முன் இருக்கையிலிருந்து  திரும்பி அப்பா கண்ணாடி வழியாக பின்னால் பார்க்க முயன்றார். அவளது அம்மாவுக்கும், சகோதரன் ரூபுலுக்கும் இடையில் இடுங்கியவளாக அமர்ந்திருந்த பப்லி, அப்பா பார்ப்பதற்கு வசதியாக, தன் தலையை கொஞ்சம் சரித்தாள்.

“நான் வெளியே போறேன்” என்றபடி, மற்றவர்கள் எதுவும் சொல்வதற்கு முன் கதவை தள்ளி திறந்துகொண்டு இறங்கிய ரூபுல், ஜீப்பை நோக்கி நடக்கத் துவங்கினான்.

ரூபுலின் அம்மா இறுகிய முகத்துடன், “அவனைப் பாருங்க, அவனை ஏதாவது சொல்லுங்க” என்று கடிந்து கொண்டாள்.

“ரூபி, அவன் என்ன குழந்தையா? அவனுக்கும் பதினைந்து வயசாயிடுச்சு” என்றபடி இருக்கையில் பொறுமையின்றி அசைந்து அமர்ந்தவர், “நானும் இறங்குறேன், எனக்கும் காலை கொஞ்சம் நீட்டிக்கணும், புரோ பிரும் இறங்கிட்டார்” என்றார்

ரூபி ஃபுக்கான் தன்னுடைய சால்வையை இறுக்கமாக உடலோடு சுற்றிக்கொண்டார். “என்னடி, நீ போகலையா?” அவள் குரல் உடைந்துவிடும்போலிருந்தது.

“இல்ல” என்ற பப்லி தன் இருதொடையையும் ஒன்றுடன் ஒன்று ஒடுக்கியவளாக, கைகளை உடலை சுற்றி கட்டிக்கொண்டு. “குளிருது” என்றாள்

ஆண்கள் சிறிய கூட்டமாக சாலை ஓரத்தில் இருந்த புல்வெளியில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு கீழ் இருந்த நிலம் செங்குத்தாக இறங்கி, தரிசாக காய்ந்து, பிளந்து, காடுவரை நீண்டிருந்தது. ஒரு சிறு ஒலியுமற்ற அமைதி. அவ்வபோது அரை கிலோமீட்டருக்கும் அப்பால், அடர்த்தியாக வளர்ந்த மூங்கில் புதர்களுக்குப் பின் மறைந்திருந்த புல் வேய்ந்த குடிசைகளில் இருந்து கேட்ட பசுக்களின் நீண்ட முக்காரை ஒலிமட்டுமே அங்கிருந்த அமைதியை கலைத்தது. பறவைகள்நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவர்களது வாகனங்களைக் கடந்து, கூட்டமாக, இருள் கவியும் வனத்தில் நுழைந்து, கலவையான சிலம்பல் ஓசைக்களுக்கிடையே, மரங்களில் இறங்கி இரவமையத்துவங்கின.

லஹூன் குடிலில் இருந்து வெளியேறி வந்தான். அவனைத் தொடர்ந்து சீருடை அணிந்த சிலரும் சிறு குழுவாக விரைந்து வந்தனர்.

“சார், வாங்க, வாங்க!” அவர்களில் ஒருவர் பப்லியின் தந்தையை நோக்கி கூறினார். “தாமதத்துக்கு மன்னிக்கணும், இப்போ எல்லாம், ஒயர்லெஸ்ஸில் ஹெட் குவார்ட்டர்ஸில் கேட்க வேண்டி இருக்குது”. அங்கிருந்து சோதனைச் சாவடியில் நின்றிருந்த காவலரை நோக்கி விரைந்து கைகளை அசைத்து, “ஓய் பசுமத்தாரி, கேட்குதா? ஃபுக்கான் சாருடன் வந்தவங்கள உள்ள விடு” என்றார்.

சாலையின் இருமருங்கிலும் புதர்களாக செடிகள் வரத்துவங்கின. பப்லி அடர்த்தியாக வளர்ந்திருந்த உண்ணிச் செடிகளையும், அதன் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் பூத்திருந்த மலர்கள் அரை வெளிச்சத்தில் ஒளிர்வதையும் பார்த்துக்கொண்டிருந்தாள். மூங்கிலின் முட் புதர்களும், தலை கவிழ்ந்து நின்ற பூக்களுடன் ஊமத்தைச் செடிகளும் வளர்ந்து மற்ற வனத்தாவரங்களுடன் காடாக செறிந்து அடர்ந்திருந்தன. அறியுமுன்னமே காடு அணுகிவிட்டிருந்தது. மரங்கள் கூட்டமாக சாலையின் ஓரங்கள் வரை பரவி இருந்தன. மரங்களின் உச்சிக்கிளைகள் பசுமையாக ஒன்றை ஒன்று தழுவி ஒரு பச்சை நிறச் சுரங்க வழி என நீண்டு அங்கிருந்த குறை வெளிச்சத்தையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்துவிட்டிருந்தன.

லஹூன் வண்டியின் முகப்பு விளக்குகளை ஒளிரவைத்தான். இரட்டைக் குழல்களாக விழுந்த ஒளி, கரடு முரடான சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் தாளத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக குதித்து, சுற்றிலும் இருந்த கரிய மதிலில் ரகசிய தடங்களை உருவாக்கியபடி நகர்ந்தது.

ஒருவளைவில் திரும்பிய போது, வெளிச்சத்தைக் கண்டு சிலைத்து நின்ற இரு நியான் பச்சை நிறக் கண்களை பப்லி கண்டாள். “புலி” என்று அலறினாள்.

காருக்குள் ஒரு நடுக்கமும் சிலிர்ப்பும் பரவியது. பப்லியின் தந்தை கார் கதவின் கண்ணாடி வழியாக பார்க்கத்துவங்கியதும், லஹூன் காரின் இயக்கத்தை நிறுத்தினான். அந்த விலங்கு தாவி புதர்களுக்குப் பின்னாக நகர்ந்து கடந்தது.

“மான்தான்” என்றவாறு சிரித்தான் ரூபுல்.

பப்லி தன் கரங்களை மார்போடு இறுக்கமாக அணைத்து, கண்களையும் மூடிக் கொண்டாள். ஒரு சில நிமிடங்களில் ஆழ்ந்து உறங்கியும் போனாள்.

பப்லி பதறியபடி கண் விழித்தாள். அவள் இதயம் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. முழுதும் இருள், காரும் நகராமல் நின்றுவிட்டிருந்தது. முன் இருக்கையின் குளிர்ந்த ரெக்ஸினை இறுகப் பற்றியபடி பப்லி நிமிர்ந்து அமர்ந்தாள். கண்ணாடி வழியாக நிலவெரியும் வானின் பின்னணியில் நிழல் உருவாக ஒரு மலை முனையில் அமைந்திருந்த மாளிகையை பார்த்தாள்.‘கிறுக்குத்தனம்’ என்றவாறு தானாக சிரித்துக்கொண்டாள். காரில் இருந்து இறங்கி, இரு தளமாக கட்டப்பட்டிருந்த மரக்கட்டடத்தின் முன் வளைத்திருந்த தாழ்வாரத்தை நோக்கி செல்லும் கல்லால் ஆன படிக்கட்டுகளின் கீழ், மற்றவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்த சரிவை நோக்கி சென்றாள். அவள் அப்பாவும் மாமாவும் சாமான்களை பிரித்து வெவ்வேறு அறைகளுக்கு முறையாக அனுப்புவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்தனர். அம்மாவும் அத்தையும் சால்வைகளை குளிருக்கு இதமாக அழுந்தச்சுற்றியவர்களாக நெருங்கி நின்றுகொண்டிருந்தனர். பப்லி அவள் அணிந்திருந்த கனமான பஞ்சு பொதிந்த மேற்சட்டை, குளிருக்கு போதுமானதாக இருந்தது குறித்து மகிழ்ச்சியுற்றாள்.

அவள் அவர்கள் அருகில் வந்ததும் புரோபீர் மாமா “நல்ல தூக்கமா?” என்றவாறு முதுகில் முஷ்டியால் செல்லமாக குத்தினார். “ரூபா உள்ள தான் இருக்கா , நீயும் போ! இரண்டு பேரும் ஒன்னாத்தான் தங்கப் போறீங்க”

முதல் தளத்தின், ஒரு மூலையில் இருந்த அறை, விதானத்தில் குறுக்காக சீரற்று ஓடியிருந்த மர உத்தரத்திலிருந்து தொங்கிய மெல்லிய சரட்டில் நிச்சயமற்று ஆடிக்கொண்டிருந்த மங்கலான ஒளி சிந்தும் மின் விளக்கால் ஒளி கொண்டது. விளக்கு மங்கியும், ஒளிர்ந்தும் அறியா இதயப் துடிப்பிற்கு இணைகொண்டது போல மின்னிக்கொண்டிருந்தது. ஒரு வெளிறிய சிவப்புக் கம்பளம், ஆங்காங்கு கிழிசல்களுடன் அறையின் தளப் பலகைகளை மூடியிருந்தது. தூரத்தில் சுவரை ஒட்டி, சாம்பல் நிற கனமான கொசுவலைகள் சுற்றி தொங்கவிடப்பட்டிருந்த மரக்கட்டில்கள் கிடந்தன. வலது புறத்தில் இருந்தது குளியல் அறைக் கதவாக இருக்க வேண்டும். உள்ளிருந்து ரூபா கொப்பளிப்பதும், துப்புவதும், நீர் கல கல என ஒழுகும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தது. அப்போதுதான் பப்லி அந்த ஓசையை கேட்டாள். ஒரு மென்மையான சீறல் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. விரைவான கதியில். அந்த ஒலி, வனத்தையும், மாளிகையயும் தன் இருண்ட அணைப்பால் பற்றியிருந்த அமைதியையும், சூழவும் இருந்த ஒலியின்மையையும், மேலும் அடர்த்தியாகக் காட்டியது விந்தையாக இருந்தது.

பப்லி அசைவற்று நின்றாள். சாளரத்தின் அருகில் செல்லச் செல்ல அந்த ஒலி மேலும் வலுத்தது. சிவப்புக்கம்பளத்தின் குறுக்காக நடந்து கடந்து ஜன்னலின் கதவுகளை தள்ளித் திறந்தாள். அந்தச் சீறல் ஒலி பெரும் முழக்கமாக மாறியது. கிழே ஒரு அகன்ற வெள்ளிப் பட்டையென நிலவொளியில் ஒளிர்ந்தபடி வேகமாக ஓடிக்கொண்டிருந்த மானஸ் நதியை கண்டபோதுதான் அவள் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்.

ரூபா அவள் பக்கமாக வந்து நின்றாள். அவள் மாற்றுடையாக அணிந்திருந்த ஒரு வடிவுமற்ற சல்வார் கமீஸால், அவள் பருமனான உடலை சிறிதும் மறைக்க முடியவில்லை. புதிதாக ஷாம்பூ இட்டு கழுவப்பட்டிருந்த கூந்தல் அவளது வெளிறிய முகத்தில் விழுந்து கிடந்தது. பப்லியின் கூந்தல் சாலையில் பயணம் செய்ததால் சேர்ந்த புழுதியால் இறுகிப் போயிருந்தது, அவள் தலை அரிக்கத்துவங்கியது. கட்டியிருந்த தலைமுடிக்கு இடையில் தன் விரல்களை ஓட்டினாள். இனி இன்று முடியைக்கழுவுவது இயலாது, நேரம் கடந்து விட்டது. காலை வரை காத்திருக்க வேண்டும்.

“இது நல்லா இருக்கில்லியா?” ரூபாவின் குரல் நிறைவும், மென்மையும் கொண்டிருந்தது. தன் முழங்கைகைகளை ஜன்னலில் ஊன்றி முகத்தை தாங்கிக்கொண்டிருந்தாள். “காலேஜுக்கு போறதுக்கு முன்ன இப்படி நீயும் நானும் ஒண்ணா இருக்க வாய்ச்சது சந்தோசமா இருக்குதுல?”

பப்லி ஆம் என்று மெல்ல முனகினாள்.

“பப்லி, ரூபா, வாங்க! விளக்கு அணையறதுக்குள்ள சாப்பாட்டை முடிச்சிடலாம்” என ரூபியின் குரல் கீழே இருந்து ஒலித்தது.

இரவுணவு உணவறையில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு நீண்ட குறுகலான அறை, ஒரு காட்சிக்கூடம் போல முன்புறத்தில் நதியைக்காணும் வகையில் கண்ணாடித்திறப்போடு அமைந்திருந்தது. பப்லி உள்ளே நுழைந்தபோது, அவள் இன்னமும் புழுதி படிந்த ஜீன்சும், கலைந்த கேசமுமாக இருப்பது கண்டு, அவளது அம்மாவின் முகம் இறுகியது.

அம்மாவின் கண்களை சந்திப்பதை தவிர்த்து, விரைந்து உணவு மேஜையின் விளிம்புக்கு சென்றவள், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மேஜையில் வைக்கப்பட்டிருந்த பூக்கள் வரைந்த சீனத் தட்டுகளின் மீது பார்வையை பதித்தாள்.

அவ்விடுதியிலேயே தங்கி பணி செய்யும் சமையல்காரரான ரோமேன், அவரது இரு உதவியாளர்களுடன், ஆவி பறக்க, பெரிய சீன கிண்ணங்களில் விளிம்பு வரை நிறைந்த உணவு வகைகளுடன் உள்ளே வந்தார். அனைவரும் உடனே உண்ணத் துவங்கினர். குவாஹாத்தியில் இருந்து இங்கு வந்தது ஒரு மிக நீண்ட பயணம், அதனால் அனைவருமே பெரும் பசியுடன் இருந்தனர். வெகு ருசியாக பக்குவம் செய்யப்பட்டிருந்த மசூர் பருப்புக்கறியை எவ்வளவு சாப்பிட்டும் போதவில்லை பப்லிக்கு. மென்மையாகவும், ஐந்து விதமான மசாலா, பச்சை மிளகாய் எல்லாம் போட்டு தாளித்ததால் எழுந்த வாசனையுடனும் இருந்தது பருப்புக்கறி. ஆனாலும் வேறு ஏதோ ஒன்று அதன் ருசியை மேலும் கூட்டியது. மெல்ல அப்பருப்புக் கூட்டினை நாவில் சுழற்றியபோது அது மரப்புகையால் ஏறிய இனிய மணமும், சுவையும் என்று அறிந்து கொண்டாள்.

தூரத்தில் ஒரு வாகனம் வரும் ஒலியை அவர்கள் கேட்டனர். அருகே வர வர அது ஒரு நான்கு சக்கர வாகனம் எனபதும், ஒரு ஜீப்பாக இருக்கக்கூடும் என்பதும் புலப்பட்டது. இயந்திரத்தின் உறுமலுடன் வண்டி மேலேறி வந்து நின்றவுடன், உதிரியாக ஏதேதோ உரையாடல்களின் சத்தமும் திறந்த ஜன்னல் வழியாக மிதந்து உள்ளே வந்தது. தொடர்ந்து, காலடி ஓசைகள் மரத்தரையில் எதிரொலிக்க நடந்து வந்த, வளர்ந்த உருவம் ஒன்று உள்ளே நுழைந்தது. ரோமேன் வாசலின் திரைச்சீலையை விலக்கிப் பற்றி அவர் உள்ளே நுழைய வழி செய்தார். அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தவர் சற்று தயங்கினார்.

“ஆசிஷ் சிங், சார்” என்றபடி புதிதாக வந்தவர் தன் கைகளை பப்லியின் தந்தையை நோக்கி நீட்டினார்.

“ஓ ஹெலோ ஹெலோ” பப்லியின் அப்பா எழுந்து நின்று, அவரது கைகளை குலுக்கினார். “ஏற்பாடு எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு, நன்றி”

“எல்லாம் சரியா இருக்குதில்லையா சார்?”

“நல்லா இருக்கு.” பப்லியின் தந்தை அந்த இளம் மனிதரை மேஜைக்கு அழைத்துக்கொண்டு வந்தார். “வாங்க வாங்க, நீங்களும் எங்களோட சாப்பிடுங்க!”

“நன்றி சார், நான் சாப்பிட்டுட்டுதான் வந்தேன் “ என்றபடி பின்னடி வைத்தவராக “நான் வெளிய இருக்குறேன்?” என்றார்.

“சரி, நல்லது”

பப்லி மேஜையின் மறுபுறத்தில் இருந்த ரூபுலை பார்த்துக்கொண்டாள், இருவரும் சற்று திருட்டுத்தனமாக அவர்கள் மாமியை நோட்டம் விட்டனர்.

பீணா மாமி முன் புறமாக சாய்ந்தார். அவரது கனத்த மார்புப்பகுதி மேஜை விளிம்புகளில் சரிந்தது. கேள்வியால் கூர்ந்த கண்களுடன் பப்லியின் தந்தையை நோக்கியவராக, “அண்ணா, யார் இவரு?” என்றார்.

“அடடே, மறந்துட்டேன் பார்த்தியா, அவரை உங்களுக்கு எல்லாம் அறிமுகம் செய்திருக்கலாம்” என்றபடி பருண் ஃபுக்கான் கைக்குட்டையால் வாயினை துடைத்துக் கொண்டார். “அவர் தான் சிங், இங்க துணை வனப்பாதுகாவலரா இருக்கார். நாம மோதன்குறியில தங்குறதுக்கு எல்லா ஏற்பாடும் அவர்தான் செய்தார்.”

“நிஜமாவா?” பீணா மாமியின் கண்கள் ஒளிர்ந்தன.

அறையின் மூலையில் நின்றுகொண்டிருந்த ரோமேன் மெல்ல இருமினார்.

பருண் பாதி திரும்பியவராக “என்ன?” என்றார்.

“இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்குது சார்… ஜெனெரேட்டர்… அதைத்தான் சொல்ல வந்தேன்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே விளக்குகள் சிமிட்டின. மேலும் மேலும் வெளிச்சமாகியபடி வந்து பின் அணைந்தன. அறையில் இருள் மண்டியது. விளக்குகள் எப்போது வேண்டுமென்றாலும் அணைந்துவிடும் என்று அனைவரும் தயாராகவே இருந்தார்கள். ஆனாலும், அவர்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால் அவர்களால் இன்னமும் தெளிவாக பார்க்க முடிந்தத்து என்பதுதான். நிலவொளி அந்த அறையில் மங்கியும் ஒளிர்ந்தும் ஒளிகூட்டிக்கொண்டிருந்தது.

பப்லி திறந்திருந்த சாளரம் நோக்கி சென்று, அதன் வழியாக வெளிப்புறமாக சாய்ந்தபடி, ஒரு புறமாகத் திரும்பி, நிலவை பார்த்தாள். முழுமையான வட்ட நிலா, இருண்ட நீல வானத்தில் பளபளத்துக்கொண்டிருந்தது. “நிலா முழுசா இருக்கு” என்றாள். யாரிடமிருந்து பதில் வராததால் திரும்பியவள், அனைவரும் நதியை நோக்கி இருக்கும் தாழ்வாரத்திற்கு செல்லத் துவங்கிவிடத்தை அறிந்தாள்.

வெளியே தாழ்வாரத்தில் நாற்காலிகள் சீரற்ற வட்டமாக இடப்பட்டிருந்தன. அங்கு நிலவொளியோடு கூட ‘உஷ்’ என்று உறுமிக் கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கின் கடுமையான வெளிச்சமும் துணை செய்துகொண்டிருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு இருக்கையை கண்டடைந்து அமர்ந்து கொண்டனர். பப்லி ஒளி வட்டத்தின் விளிம்பில் தயங்கியவளாக சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, பின் தாழ்வாரத்தைச் சுற்றி இருந்த மரத் தடுப்பில் ஏறி அமர்ந்து, பின்னாலிருந்த மரத்தூணில் சாய்ந்துகொண்டாள். அங்கிருந்து பார்த்தால், நதி அகன்று, வளைந்து திரும்பி பின் பார்வையில் இருந்து முற்றிலுமாக மறைந்தது. நிலவொளியில், பாறை படர்ந்த கரைகள், மங்கலாக மிளிர்ந்து கொண்டிருந்தன. வெள்ளியாலான நாடாவின் அப்புறத்தில், தாழ் குன்றுகளின் வரிசை ஒன்று இருளின் ஆழத்தில் தெரிந்தது. “பூடான்”.

அந்தச் சொல்லை அவள் இறுக அணைத்துக்கொண்டாள். அது அவள் உடலை சிலிர்க்கச் செய்தது.

விளக்கைச் சுற்றியிருந்த கூட்டம் ஒரு நோக்கமும் இல்லாமல் வெறுமனே கதையாடிக்கொண்டிருந்தது. புரோபீரின் மனைவிபீணா பரூவாதான் பெரும்பாலும் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஆசிஷை நோக்கி சாய்ந்தவாறு இருந்தமையால் அவரது புடவையின் தலைப்பு அடிக்கடி விலகி அவரது மார்புப் பகுதியை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.

“சிங், உங்களுக்கு எந்த ஊர்?” அவர் துவங்கினார்.

“தில்லி மேடம்” என்றபடி நிமிர்ந்து அமர்ந்தார் ஆசிஷ்.

“தில்லியா?” என்று குரலெழுப்பினார் பீணா. “டெல்லியிலிருந்து வந்த உங்களுக்கு இந்த இடம் எல்லாம் சலிப்பா இல்லையா?”

ஒரு குளிர்ந்த காற்றலை ஆற்றிலிருந்து வீசி பப்லியை குளிரில் நடுக்குறச் செய்தது.

“அண்ணா, அண்ணா! நாம நெருப்பு மூட்டலாமா?” ருபுல் இடையறுத்தான்.

“சரி தம்பி “ பூபுல், ரூபாவின் சகோதரன் உற்சாகமாகி எழுந்து நின்றான்.

“ஒரு நிமிஷம், சிங்” என்றபடி, பருண் தன் உரத்த குரலில் அழைத்தார் “ஏய், யாராவது இருக்கீங்களா? ரோமேன்!”

“வரேன் சார்” ரோமேன் வீட்டின் உள்ளே இருந்து ஓடி வந்தார்.

“விறகு இருக்கா ? பசங்க கணப்பு மூட்டணும்னு சொல்றாங்க”

பருண் ரூபுலிடம் திரும்பினார்.

“கொல்லையில் வைப்போமா?” என்றான் ரூபுல். “நாங்களும் உங்களுக்கு உதவறோம்?”

பையன்கள் வீட்டினுள் ரோமேனுடன் சென்று மறைந்தனர். அவர்கள் காலடியோசை மெல்ல தொலைவில் ஒலித்து அடங்கிய போது, பீணா ஆசிஷ் உடனான உரையாடலை மீண்டும் துவங்கினார்

“சொல்லுங்க சிங், சலிக்கலையா ?”

ஆசிஷ் வட்டத்தை நோக்கி சாய்ந்தவராக “சலிப்பெல்லாம் இல்லை “ என்று நிறுத்தினார், சரியான வார்த்தைகளுக்காக துழாவுபவர் போல. “தினம் புது நாள்தான் இங்க, ஆறு, காடு, வானம் எதையும் முன்னவே யூகிக்கவும் முடியறதில்ல, எதையும்நம்மால கட்டுப்படுத்தவும் முடியறதில்ல.” என்று சொல்லி சிரித்தார். “இங்க எந்த கட்டுப்பாடும் இல்ல, என்னமும் நடக்கலாம், அதுவே ஒரு உற்சாகத்தை உண்டு பண்ணிருது”

பீணா குழம்பியவராக. “ஆமாம், இங்க எல்லாமே நல்லா இருக்கு” என்றார்.

பப்லியால் உறுதியாக சொல்லமுடியவில்லை, ஆசிஷின் கண்களில் ஒரு ஒளித்துளி பிரதிபலித்ததாகக் கூட இருக்கக்கூடும், ஆனால் அவளுக்கு ஆசிஷின் கண்கள் சிரித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அங்கு ஒரு சிறிய அமைதி படர்ந்தது.

“அப்ப உங்களுக்கு தனியா இருக்கிறது சிரமமா இல்லையா ?” என்று பீணா கேட்டார்.

ஆசிஷ் நிழலுக்குள் சாய்ந்து அமைந்தவராக, “சில நேரம் இருக்கும் “ என்றார். “மனைவியையும், மகனையும் ரொம்பவே தேடும்.”அவரது வலுவான வெண் பற்களை காட்டியபடி புன்னகைத்தார். “எனக்கு ஒரு குட்டி பையன் இருக்கான் – ராகுல் – இரண்டு வயசாகுது. ரெண்டு பேரும் டெல்லியில் என் அப்பா அம்மாவுடன் இருக்கிறாங்க”

கீச்சிடுகிற கூச்சல் ஒன்று காற்றை கிழித்தது

“ரூபுல்தான்” ரூபி முணுமுணுத்துக் கொண்டார். “நான் அவன ஒரு வழி பண்றேன்.”

அவள் கணவர் நகைத்தவாறு, “வாங்க, புரோபீர், வாங்க சிங். போகலாமா? கணப்பு மூட்டிட்டாங்க போல” என்றவர் “நீங்களும் வரீங்களா?” என்று பெண்களை நோக்கி கேட்டார்.

பெண்கள் அங்கேயே தங்க முடிவு செய்தனர். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரூபி தொலைவில் உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பீணா கவனமற்றவராக தன் புடவையின் தலைப்பில் மடிப்பு வைப்பதும் கலைப்பதுமாக இருந்தார். ரூபா நாற்காலியிலேயே உறங்கிவிட்டிருந்தாள். வாய் திறந்திருக்க, ஒரு ஓரத்தில் இருந்து நூலாக எச்சில் ஒழுகியிருந்தது.

“நேரம் ஆகிடுச்சு, போய் படுக்கலாம்” ரூபி தீர்மானமாக முடி எடுத்தவராக சில நிமிடங்கள் கழித்து எழுந்தார். “10 மணி ஆகிடுச்சே”

“ஹாலிடேஸ்தான இப்ப!”, பப்லி மறுத்தாள்.

“காலையில சீக்கிரமே எழுந்திருக்கணுமே” அவளது தாய் உறுதியாக இருந்தார். “போய் தூங்கு!”

அவர்கள் ரூபாவை அசைத்து எழுப்பி அழைத்துக்கொண்டு, மெதுவாக மேலே ஏறிச் சென்றனர். பப்லி அவளது குறுகலான படுக்கையில் படுத்துக்கொண்டாள். சொர சொரப்பான போர்வை அவளது முகவாய் வரை இழுத்து விடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக நிலவு ஒளிவீசிக்கொண்டிருந்தது. சதுர இரவுவானத் துண்டால் சட்டகம் இடப்பட்ட, ஒரு வெள்ளி வட்டு போலிருந்தது. ஆற்றின் இனிமையான சலசலப்பு ஒலியில் அவள் உடனே உறங்கிப் போனாள்.

புழக்கடையில் இருந்து சேவல் கூவும் சத்தம் கேட்டு கண்விழித்தாள் பப்லி. அந்த ஒலி ஏனோ அவளுக்கு மனதிற்கு இதமாக இருந்தது. அதை கேட்டுக்கொண்டே சற்று நேரம் அசைவற்றுக் கிடந்தாள். குளியலறையில் இருந்து எழுந்த ஒலி, ரூபா ஏற்கனவே உள்ளே இருப்பதை அறிவித்தது. சலிப்பாக முனகியபடி புரண்டு படுத்துக்கொண்டாள். ரூபா அவளுடைய ஒப்பனைகளை முடித்து வெளியே வர இன்னும் ஒருமணி நேரம் ஆகிவிடும்.

வெளியில் வெளிச்சம் வந்திருந்தது. நீர்த்த சாம்பல் நிறத்தில் ஆங்காங்கே இளஞ்சிவப்பு நிறத்தை தெளித்தாற்போல சிவந்த்திருந்தது வானம். நதியின் சீரான ஓசை வேறு பல சத்தங்களால் உடைவு கொண்டிருந்தது. பறவைகளின் சிலம்பல்கள், விலங்குகள் எழுப்பும் சத்தம் (ஒருவேளை மானாக இருக்கலாம்), துணுக்குகளாக சிதறிய குரல் ஒலிகள், அத்தனையையும் காலை நேரத்தின் ஈரக்காற்று சுமந்து வந்தது. ஆச்சர்யமாக, ரூபா சீக்கிரமே வெளியே வந்துவிட்டாள். தளர்வான கருப்பு கால் சராய்களையும், கனமான போர்வை எனத் தோன்றும் பான்சோவையும் (தலை நுழைவதற்கு மட்டும் இடைவெளி விடப்பட்டிருக்கும் நீண்ட அங்கி) அணிந்திருந்தாள். அறையின் நடுவில் இடப்பக்கமாக சாய்ந்து நின்று, கரங்களை பிதுங்கிய இடையில் வைத்துக்கொண்டு படம்பிடிப்பதற்கு தோதுகூட்டி நிற்பது போல நின்றாள்.

“ஹேய்…” இழுத்து நீட்டி முழங்கியவளாக “நான் கிளம்பிட்டேன்” என்றாள்.

பப்லி சிரித்தபடி படுக்கையில் எழுந்து அமர்ந்தாள்.

குளியல் அறையில் வெந்நீர் இருந்தது, ஆனால் அது துருப்பிடித்த உலோகத்தின் சுவை கொண்டிருந்தது. நடுங்கியபடி பல் துலக்கினாள் பப்லி. விரைவாக குளித்து புதிய ஜீன்ஸ் ஒன்றை அணிந்து கொண்டாள்.

அறைக்கு திரும்பியவள் ஜன்னல் அருகில் நின்றுகொண்டிருந்த ரூபாவுடன் இணைந்து கொண்டாள்.

நதி அவளை முழுவதுமாக ஈர்த்துக்கொண்டது. அவள் நினைத்ததைவிட அது தொலைவில் இருந்தது. அவர்கள் விடுதிக்கும் நதிக்கும் இடையில் கூழாங்கற்கள் நிறைந்த கரை அரைலோமீட்டருக்கும் மேலாக அகண்டிருந்தது.  இரவின் முழக்கம் அறிகுறிகாட்டியதைவிட பகலொளியில் ஆறு எல்லையற்ற உயிரோட்டமும், துடிப்பும் கொண்டதாக இருந்தது. தெளிந்த நீர் கட்டில்லாத ஆற்றலோடு குமிழியிட்டு வழிந்துகொண்டிருந்தது. கட்டற்றுப் பொங்கும் ஒளிப்பரவகம். கரை எங்கும் கோடி கட்டியிருந்த வெளிறிய பரல்களும், கற்களும் அந்த ஒளியை பிரதிபலித்து மிளிருந்து கொண்டிருந்தன. கரையோரத்தில் காலைத் தென்றலில் சட சடத்துக்கொண்டிருந்த மரங்கள், ஆற்றோடு சாய்ந்து காதோடு காதாக உரையாடி அதன்ரகசியங்களை அறிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தன. ஆறு எல்லாவித சாத்தியங்களையும் கொண்டது, ஒருவர் அவற்றை பற்றிக் கொண்டால் போதும் எனத் தோன்றியது அவளுக்கு. ஆனால், அந்த பொங்கும் பிரவாகத்திற்கும் அடியில் துடித்துக்கொண்டிருக்கும் இருண்ட வலிமை பப்லியை அசச்சுறுத்தியது. அந்த இனிய காட்சி, அவளை அமைதியிழக்கவும் கொந்தளிக்கவும் செய்யும் ஒன்றாக மாறுவதை அறிந்து குழம்பியவளாக, சாளரத்தில் இருந்து பின்னடி வைத்தாள்.

குடும்பத்தினர் அனைவரும் முன் முற்றத்தில் விரைவான காலை உணவிற்குப் பின் கூடியிருந்தனர். நெருங்கி நின்ற, அவர்களது மூச்சுக் காற்று காலைக்குளிரில் சிறு பனிப் படலமாக உருமாறி வெளியேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ நினைவில் ஆழ்ந்தவர்களாக நின்றிருந்தனர். பழக்கமற்ற அந்தச் சூழலும், காலை நேரத்தின் வேகமான காற்றும், சிதறலாக கேட்டுக்கொண்டிருந்த பல்வேறு ஒலிகளும், ஊசியாக துளைக்கும் குளிரும், அவர்களை கிளர்ச்சி கொள்ளச் செய்திருந்தன.

பப்லி அந்த திறந்தவெளியை சுற்றி நோக்கினாள். முற்றத்தில் இருந்த கற்படிகள் ஒரு சேற்றுப் பாதை வரை நீண்டிருந்தது. அப்பாதை இடது புறமாக திரும்பி கூழாங்கற்கள் நிறைந்த நதிக்கரைக்குள் இறங்கியது. வலது புறத்தில் திரும்பிய பாதை, விடுதிக்கு பின்புறமாக, மலையை நோக்கி ஏறி, தூரத்தில் மலையின் ஆழத்தில் இருக்கும் புட்டியா கிராமம் நோக்கி நீண்டு மறைந்து போனது.

ஜீப் ஒன்று அவர்களை அணுகிவரும் ஒலி கேட்டது. உரசியபடி மாளிகையின் முன் நின்ற ஜீப்பில் இருந்து ஆசிஷ் சிங் குதித்து இறங்கி வந்தார்.

ரூபா அவளது முழங்கையால் பப்லியின் விலாவில் பலமாக இடித்தவாளாக “இவர் அழகா இருக்கிறார்ல?” என்று கிசுகிசுத்தாள். பப்லி பதிலுக்கு அவள் முழங்காலில் உதைத்தாள்.

சிறு பயணம் ஒன்று அன்றைய நாளுக்காக திட்டமிடப்பட்டிருந்தது. நாட்டுப் படகுகள் அவர்களை நதிவழியில் காபூர்போரா வரை அழைத்துச் செல்லும். அங்கு அவர்களுக்கு மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து வண்டிகளில் காட்டுப்பாதை வழியாக விடுதிக்கு திரும்புவதாக திட்டம்.

பூபுலும், ரூபுலும் மகிழ்ச்சியில் கத்தியவர்களாக முண்டியடித்துக்கொண்டு கல் படிகளில் இறங்கி ஓடினார்கள். மற்றவர்கள் மெதுவாக படிகளில் இறங்கி நதியை நோக்கி சென்றனர். ரூபா, தன் கனவு நிறைந்த கண்களை ஆசிஷின் குதிகால்களில்நிலைக்கவிட்டவளாக மெல்ல இறங்கி கொண்டிருந்தாள். நதியில் இருந்து வீசிய காற்று நீரின் வாடையையும், அவ்வப்போது ஒலிக்கும் பையன்களின் கூச்சலையும் சுமந்துகொண்டு வந்தது.

நதியருகில் படகுகள் காத்திருந்தன. கரிய, குறுகிய படகுகள். காக்கி நிற கால் சராய்களைம், கம்பளிப் பின்னல் ஆடைகளையும் அணிந்திருந்த திடமான ஆண்கள் படகுகளில் இருந்தனர். தெளிந்த பச்சை நிற நீரைக் கண்டு திகைத்தாள் பப்லி. படகுகள் கண்ணாடிப் பரப்பில் மிதப்பது போலத் தோன்றின. நதியின் விளிம்புக்குச் சென்று, நீருக்குள் கைகளை விட்டாள். சடுதியில் சில்லிப்பு பற்றி ஏறியதும் தவறுக்கு வருந்தினாள். நீர் ஐஸ்கட்டி போலிருந்தது.

அதற்குள் ஆசிஷ் மொத்தப்பேரையும் மூன்று குழுக்களாக பிரித்து விட்டிருந்தார். ஒன்று பருணால் முன்னெடுக்கப்பட்டது. ரூபா, ருபுல், ஒரு படகோட்டி மூவரும் அவருடன் இருந்தனர். இரண்டாவது புரோபீரின் தலைமையில், அவர் மனைவி, மகனுடன். மூன்றாவதில் பப்லியும் அவளது அம்மாவும், ஆசிஷ் தலைமையில். எல்லோரும் அவரவரக்குரிய படகுகளில் ஏறியதும் படகோட்டிகள் திறமையாக கழிகளை ஊன்றி படகுகளை கரையோரத்தில் இருந்து நதி மையத்திற்கு கொண்டு சென்றனர்.படகோட்டிகளின் திறமையையும் மீறி, படகுகள் கட்டுப்பாடில்லாமல் சுழன்றன, இங்கும் அங்குமாக உலைந்து ஆடின. சிலநேரம் வேகமாக ஓடும் பச்சை நிற வெள்ளம் படகுகளின் விளிம்பு வரை எழும்பி வந்தது. பப்லி பயத்தால், படகின் சட்டகத்தை திடமாக பிடித்திருந்தாள். சுழலும் பசிய நீர் பப்லியை தலை சுழல வைத்தது.

மெல்ல படகுகள் தங்கள் வழிகளைத் தேர்ந்து நதியின் போக்கில் ஓடத்துவங்கியதும், ஆட்டம் குறைந்தது. பப்லி சற்று ஆசுவாசம் அடைந்தாள். படகுக்குள் பயத்தால் ஒடுங்கி அமர்ந்திருந்த பப்லி, கிட்டத்தட்ட மார்பு வரை அவளறியாமலே குறுக்கியிருந்த கால்களை நீட்டிக்கொண்டாள்.

இறுகிய முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்த அம்மாவை அழைத்தவள், “எப்படி இருக்க?” என்றாள்.

“ரொம்ப நல்லா!” என்றூ எரிச்சலாக பதில் வந்தது. “உனக்குதான்  தெரியுமே இது எல்லாம் எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு” என்றார் ரூபி.

பப்லி சிரித்தாள். குளிர்கால வானம் நீலமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. கைகளால் குளிர்ந்த நீரை இழுப்பது போல் துழாவிக்கொண்டு வந்தாள் பப்லி. தெளிந்த கண்ணாடி போன்ற நீர்ப் பரப்பில், விரைந்து அவளைக் கடந்து செல்லும்மேகங்களின் பிரதிபலிப்பைக் கண்டு திகைத்தாள்.

நீரின் உறுமலுக்கும் மேலாக ரூபுல் “பப்லி பப்லி, நல்லா இருக்குதுல?” எனக் கூச்சலிட்டதை கேட்டாள்.

படகோட்டி சட்டென்று “அதோ… அங்க! வலதுபக்கத்தில பாருங்க!” என்று சுட்டினான்.

கல் பரவிய கரை எங்கும் மெல்லிய வெயிலில் கனத்த கரிய உடல்களைப் பரப்பியபடி மந்தமான எருமைகள் கூட்டமாக கிடந்தன. படகுகள் அவற்றைக் கடக்கும் போது சில கூரிய வளைந்த கொம்புகளைக் கொண்ட கனத்த தலைகளைத் தூக்கி என்ன என்பது போல நோக்கின. மற்றவை ஒரு அசைவும் இல்லாமல் கிடந்தன.

“நாம புலியை பார்க்க முடியுமா? “ என பப்லி படகோட்டியிடம் கேட்டாள்.

“அதுக்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணும்… இருந்தா புலியை பார்க்கலாம்” என்று பதில் அளித்தான் படகோட்டி.

படகுகள் நதியின் ஒரு வளைவை விரைந்து அணுகிக்கொண்டிருந்தன. நதியின் நடுவே பாறையாலான ஒரு தீவு போல இருந்தது. அந்த தீவுத்திடலின் இருபுறத்திலும் நீர் கொந்தளித்து, நுரைத்து வெண்மையாக பொங்கிக்கொண்டிருந்தது.

“இதை எப்படி கடக்கிறது?” என்றாள் பப்லி.

ஆசிஷ் ஒரு சிறிய அமைதிக்குப் பின் பதில் அளித்தார். “கடக்கவெல்லாம் முடியாது.” சுற்றிலும் விழியோட்டிவிட்டு “இங்கதான் நாம இறங்கிறோம்” என்றார்.

பின்னர் அவர் படகுகள் முடிந்த அளவிற்கு அந்த தீவின் அருகில் செல்லும், அங்கிருந்து நீரில் இறங்கி நடந்து அந்த பாறைப்பரப்பிற்கு செல்லவேண்டும் என்று விளக்கினார்.

“முட்டளவுதான் ஆழம்” என்று அலட்சியமாக கூறினார்.

“உங்களுக்கு வேணும்னா முட்டளவுக்கு இருக்கும்” என்று பட்டென்று கூறிவிட்டாள் பப்லி.

படகுகள் அங்கிருந்து விலகிச்சென்று, வெண்நீர் ஒழுக்கில், மெல்ல நகர்ந்து, பின்னர் தீவின் மறு முனையில் வந்து பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொள்ளும்.

முதல் படகு தீவை அடைந்தது. பப்லிக்கு பதட்டம் ஏறியது. அவளது அப்பாவும் ரூபுலும் தங்கள் காலணிகளை கழட்டி விட்டு, காற்சட்டைகளை மடித்து விட்டுக்கொண்டு, மிகக் குளிரான நீரில் கால் வைப்பதைக் கண்டு வெலவெலத்துப்போனாள். கைகளை கோத்துக் கொண்டு அவர்கள் இருவரும் மெதுவாக நடந்து தீவிற்கு சென்றனர். ரூபுலை பத்திரமாக கரையில் விட்டுவிட்டு பருண் மீண்டும் ரூபாவை அழைத்துச் செல்ல வந்தார்.

ரூபா படகில் எழுந்து நின்றபோது, படகு அபாயகரமாக ஆடியதில், அவள் மேலும் பயந்து கூச்சலிடத் துவங்கினாள். பப்லி அச்சத்தோடு திகிலில் உறைந்திருந்த ரூபாவை பார்த்துக்கொண்டிருந்தாள். பயத்தால் பின்வாங்கியவளாக படகிலிருந்து இறங்க மறுத்தாள் ரூபா. பருண், மிகுந்த கவனத்துடன் படகை நோக்கி மீண்டு வந்து, பயந்து போயிருந்த ரூபாவை சமாதானப்படுத்தி நீருக்குள் இறக்கி, தேம்பலும், தடுமாற்றமுமாக வந்தவளை உலர்ந்த பாறைகளுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

இரண்டாம் படகு நீரில் குதித்தபடி இருந்தது. புரோபீர் முதலில் அவர் மகனை பத்திரமாக கொண்டு போய் தீவில் சேர்த்தார். பின்னர் திகில் அடைந்திருந்த அவர் மனைவியின் உதவிக்கு வந்தார். பீணாவின் முகம் பயத்தால் சுருங்கி இருந்தது. அவர் முதலடியை நீருக்குள் வைக்க முயன்றபோது, அவரது விரிந்த புடவை தடுக்கியதால் தடுமாறி, பிடிமானம் இல்லாமல் அவர் கணவர் மீது சரிந்தார். புரோபீரூம் கீழே விழப்போனார். பருண் விரைந்து அவர்களை நோக்கி ன்றார். ஒருவழியாக இரு ஆண்களின் உதவியால் பீணா உலர்ந்த நிலத்திற்கு வந்து சேர்ந்தார்.

இறுதியாக அது அவர்களின் முறை. படகோட்டி படகினை அவனால் முடிந்தளவிற்கு நிலைப்படுத்தினான். அவளது அம்மா புடவையை மூட்டு வரை மடித்து சொருகிக்கொண்டார். நீரில் இறங்கி நின்றுகொண்டிருந்த ஆசிஷிடம் தன் கைகளை நீட்டி பற்றியவராக நிதானமாக நடந்து தீவினை அடைந்தார். அலைபாய்ந்துகொண்டிருந்த படகில் அமர்ந்திருந்த பப்லி மூச்சினை இழுத்து விட்டுக்கொண்டாள். அவள் அணிந்திருந்த ஸ்னீக்கர்ஸ் வகை காலணிகளைக் கழட்டி அவற்றின் நாடாக்களை தன் கழுத்தில் இட்டுக்கொள்வதற்கு தோதாக ஒன்றுடன் ஒன்றுடன் இணைத்து கட்டிக்கொண்டாள். முட்டுக்கு மேல் வரை அவள் ஜீன்ஸினை மடித்து விட்டிருந்தாள்.

படகு இங்கும் அங்குமாக ஊசற் குண்டு போல ஆடியது. கவனமாக எழுந்து நின்று, ஆசிஷின் கைகளை பற்றிக்கொண்டு, மூச்சு திணறியவளாக நதிக்குள் அடியெடுத்து வைத்தாள். கொந்தளிக்கும் நீர் அவள் தொடை வரையும் சில நேரம் அவள் இடை வரையும் கூட ஏறிவந்தது. நீரின் வேகமும் அதிகமாக இருந்தது. பொறுமையின்றி அவளை இழுத்துக் கொண்டு செல்ல எத்தனித்தது. தன்னைமீறி கூச்சலிடப்போனவள் அடக்கிக் கொண்டாள். கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

“காலை  நல்லா ஊன்றி  நட” என்றார் ஆசிஷ்.

பப்லி அவரது கரங்களை இறுகப் பற்றியவளாக, ஒன்றன்பின் ஒன்றாக அடிகளை எடுத்து வைத்து கவனமாக நடந்தாள். கண்கள் குருடாகிவிடும் அளவிற்கு கதிரொளி நீரில் பட்டு பிரதிபலித்தது. ஓர் இடத்தில் கால் இடறி விழப்போனவளை, ஆசிஷ் கீழே விழமல் பற்றி தூக்கிவிட்டார்.

“இதோ வந்துட்டோம்” என்றார்.

அவள் பார்வையை கரையை நோக்கி குவித்துக்கொண்டாள். ஒவ்வொரு அடியிலும் நெருங்கிக்கொண்டிருந்தது கரை.விரைவிலேயே கரை அணுகிவிட, நுரைத்த நீர் அவளது கணுக்கால்களை கூசச் செய்தது. பின்னர், ஆசிஷ் அவளது கரங்களை மெல்ல விடுவித்தபடி “வெல் டன்” என்று பாராட்டினார்.

அவர்கள் நதியொழுக்கில் பயணிக்கத் துவங்கியதும் சூரியனும் வானத்தில் உயரத்துவங்கியது. காபூர்போராவை அடைந்தபோது சூரியன் சரியாக உச்சிக்கு வந்திருந்தது.

ரோமேனும் அவரது ஆட்களும் அங்கு அவர்களுக்காக காத்திருந்தனர். அவர்கள் ஏற்கனவே அடுப்பு மூட்டிவிட்டிருந்தனர், பெரிய வாய் அகன்ற பாத்திரங்களில் உணவு வகைகள் கொதிப்பதும் பொங்குவதுமாக இருந்தன. மணல் பரவிய தளத்தில், படபடக்கும் கூடாரத் துணிகளுக்குக் கீழ், மூன்று மடக்கு மேஜைகள் விரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் திரும்பிச் செல்வதற்கான மாருதி ஜிப்ஸிக்கள் மர நிழல்களில் ஒரு புறத்தில் நின்றுகொண்டிருந்தன.

படகுப் பயணத்தால், அனைவருமே இன்னமும் உடல் குலுங்கி கொண்டிருப்பதான உணர்விலேயே இருந்தனர். அந்த மணற் சரிவில் எழுந்து நின்று, இங்கும் அங்குமாக திரும்பியபடியம், கண்களால் சூழலை கவனித்தபடியும், சமநிலைக்கு வர முயன்றுகொண்டிருந்தனர். பிற்பகல் வேளையின் வெயில் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உதவியது. அறியாப் பறவைகளின் இனிய சிலம்பல்களும், அருகில் எங்கோ சோம்பலாக ஒலித்துக்கொண்டிருந்த வண்டுகளின் ரீங்காரமும், சமையல் கூடத்தின் பாத்திரங்கள் மோதும் சப்தமும் அனைவரின் பதட்டத்தையும் தணித்து ஊக்கம் கொள்ளச் செய்தன.

ஆண்கள் கூடாரத்தில் இருந்த குளிர்பதனப் பெட்டியை நோக்கி சென்றனர். பருணும், புரோபீரும் இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து கொள்ள, ஆசிஷ் அவர்களுக்கு குளிர்ந்த பியர் கேன்களை கொடுத்தார். பெண்களுக்கும், பையன்களுக்கும் குளிர் பானங்களை கொண்டு வந்திருந்தனர். ரூபுல் தனக்கும் ஒரு பியர் வேண்டும் என்று குழைவான குரலில் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் அவன் தந்தை உறுதியாக மறுத்துவிட்டார்.

மீசையில் இருந்த நுரையை வழித்தவராக, “உனக்கு பதினெட்டு வயசானப்புறம் குடிக்கலாம்” என்றார்.

ரூபுலும், பூபுலும் அவர்களது பானங்களை எடுத்துக்கொண்டு நதியை நோக்கி சென்று மறைந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஒரு சமையல் உதவியாளரும் சென்றார். பப்லி ஒரு மடக்கு நாற்காலியில் அவளது தந்தை அருகில் பியர் குப்பியை மெல்ல விரல்களால் பற்றியவளாக அமர்ந்திருந்தாள்.

பருண் சிரித்தபடி, “ம், குடிச்சு பாரு” என்றார்.

அவள் குப்பியை உதட்டில் வைத்து, பட்டென்று அருந்தினாள். பியர் சிறிது விறுவிறுப்பாக இருந்தது, அவள் தொண்டை வழி மிருதுவாக இறங்கியது.

“ஹே! என்ன செய்ற ?” ரூபி கடும் சினம் கொண்டிருந்தாள்.

“நீங்கதான் பார்த்தீங்களே” என பப்லி அசிரத்தையாக பதில் சொன்னாள். அவள் நாற்காலியில் இருந்து எழுந்து, ரூபாவை நோக்கி சென்றாள். ரூபா புளிய மரத்தின் அடியில் மூங்கிலால் பின்னப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தாள். பப்லி, அருகிலேயே வெதுவெதுப்பான மணற் தரையில் அமர்ந்தாள்.

இருக்கையில் அசைந்து அமர்ந்தவளாக “அவங்க முன்னமே சொல்லியிருக்கலாம். எப்படியும் நான் பயந்திருப்பேன். ஆனாலும், பயம் கொஞ்சம் குறைவா இருந்திருக்கும், அழுதிருக்க மாட்டேன்” என்றாள். பப்லியை குனிந்து நோக்கி உதடுகளை அழுந்த மூடி, கண்களையும் சுருக்கி பொங்கி வரும் கண்ணீரை தடுத்துவிட முயன்றுகொண்டிருந்தாள்.

“இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல” என்றபடி அவளது அத்தை மகளின் முட்டில் கைகளை வைத்தவளாக “யாரும் ஒண்ணும் கண்டுக்கவே மாட்டாங்க” என்றாள்.

“அதுவும் சரிதான்” ரூபாவின் குரல் கோபத்தால் கடுமை ஏறி இருந்தது. “நீ சொல்றதும் சரிதான்” என்றாள்.

தூரத்தில் காற்றில் படபடத்துக்கொண்டிருந்த துணிப் பந்தல் நதியின் பின்புலத்தில் பொருத்தமில்லாமல் துருத்தலாக தெரிந்தது. பழுப்பு நிறக் கல்லில் எழுதப்பட்ட ஓவியம் போல இருந்தது அந்தக்காட்சி. ஒன்று குடித்துக் கொண்டும், ஒன்று சிரித்துக்கொண்டும் என பல வடிவங்கள் அந்த மாற்றுமெய்மைக்கு அர்த்தம் கூட்டிக்கொண்டிருந்தன. அவ்வோவியத்திற்கு “மானஸ் நதியில் கூடிய குடும்பம்” எனப் பெயரிடலாம் என எண்ணிக்கொண்டாள் பப்லி.

அப்போது சமையல்கூடப் பகுதியில், வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. மேஜைகள் முறையாக விரிக்கப்பட்டு, கனத்த சீன வட்டுகளில், மதிய உணவாக ஆவி பறக்கும் ஜோஹா அரிசிச் சோறும், மிளகிட்ட புறாக்கறியும், கடுகு எண்ணெயில் சிறிய துண்டுகளாக்கிய பச்சை மிளகாய்கள் இட்டு தாளித்து மசித்த உருளைக்கிழங்குகளும் எடுத்துவைக்கப்பட்டிருந்தன. அனைவரும் வயிறு நிறைய உண்டனர். அங்கிருந்த குளிர்ந்த காற்றும், காலையில் செய்த படகுப்பயணமும் அவர்கள் பசியை வெகுவாக தூண்டிவிட்டிருந்தன.

நல்ல உணவும், குளிர்காலச் சூரியனின் இளவெம்மையும் தந்த மயக்கத்தில் பெரியவர்கள் சோம்பலாக கூடாரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர். உரையாடல்கள் தொடர்ச்சியற்றவையாக இருந்தன. பீணா மட்டும்தான் கீச்சிடும் குரலில் ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தார். ரூபி அவ்வப்போது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தார். மற்றவர்கள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை.

பையன்கள் மீண்டும் மீன் பிடிக்கத் துவங்கியிருந்தனர். யாரோ முன்யோசனையோடு விரித்திருந்த மூங்கில் பாயில் நீட்டிப் படுத்து சீராக குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தாள் ரூபா. சலிப்புற்றவளாக, பப்லி நதிக்கரைக்குச் செல்லலாம் என முடிவெடுத்தாள். இங்கு மோதங்குறியைவிடவும் நதி அகலமாகவும், விரைவு குறைந்ததாகவும் இருந்தது. கரையும் கற்கள் நிரம்பியதாக இல்லாமல் மணற்பாங்காக இருந்தது. அங்கங்கு உயரமான புற்கள் அடர்த்தியாக வளர்ந்து மூடியிருந்தன.செங்குத்தான பாதையில் அவள் மிக கவனமாக இறங்கினாள். சரிவின் அடிவாரத்தை நெருங்கியபோது, அடி பிசகி, சறுக்கி அமர்ந்துவிட்டாள்.

விடாமுயற்சியுடன் தொடர்ந்து மீன் பிடிப்பில் ஆழ்ந்திருந்த ரூபுலும் பூபுலும், பப்லி விழுந்ததைக் கண்டு வெடித்துச் சிரித்தனர்.

“மீன் எல்லாம் பயந்து ஓடிடும், கத்தாதீங்க” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னவள், எழுந்து, ஜீன்ஸில் இருந்த மண்ணை தட்டி வீட்டுக்கொண்டாள். அங்கிருந்த முள் மரத்தின் நிழலில் வசதியான இடத்தைக் கண்டைந்து அமர்ந்தாள். சூரியன் தாழ்ந்துகொண்டிருந்து, அதன் பொன் கிரணங்கள் நீரில் சாய்வாக விழுந்து அலையடித்துக்கொண்டிருந்தன.

திடீரென்று பப்லியின் மனதில், விளக்கமுடியாத மெல்லிய அமைதி இன்மை ஒன்று படர்ந்தது. ஒளிரும் நதியை பார்த்துக்கொண்டிருந்தாள். நதியின் பொன்னலைகளும், பறவைகளின் கூட்டு ஓசையும், கூடாரத்தில் இருந்து எழுந்த மென் குரல் ஒலிகளும் அவளை விழித்திருக்கவிடாமல் சதிசெய்தன. மெல்ல தாலாட்டி, சூழ நிகழும் அத்தனையையும் எங்கோ தூரத்தில் இருந்து அவள் கவனித்துக்கொண்டிருப்பது போன்ற மயக்கநிலைக்கு தள்ளின. உடலைக் கடந்த அந்த நிலை அந்த வனத்தின் ஒவ்வொரு தாளத்தையும் அவளது கவனத்தில் நிறைத்துக்கொண்டிருந்தது.

காட்டில் இரவு அணைந்துகொண்டிருந்தது. வெயில் இறங்க இறங்க காட்டின் தாள வேகமும் குறையத் துவங்கியிருந்தது. பறவைகள் தீடிரென்று கூக்குரல் இடத்துவங்கின. நிழல் கவியுந்தோறும் அந்தக்கூக்குரல்களும்  உயரவத்துவங்கின. எங்கோ குரங்கு ஒன்று அலறும் ஒலி கேட்டது, அதைத் தொடர்ந்து அக்குரங்கு மரங்களுக்குள் தாவி மறையும் ஓசையும் இணைந்து கொண்டது. இரவின் நீண்ட முனகலுக்குள் அடங்கும் முன், காடு மாலை ஒளியில் தன்னையே உலைத்து குலுக்கிக் கொண்டிருந்தது.

பப்லியின் உடல் சிலிர்த்தது. அவளுடைய நகர்ப்புற வாழ்விடத்திற்கு மாறான அவளறியா அந்தச் சூழல் அவளுள் ஒரு அமைதியின்மையை நிறைத்திருந்தது. ஆனாலும் அந்த அதிசயமான இடத்தை விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை.

“பப்லி, ரூபுல், பூபுல் வாங்க, நேரம் ஆகிடுச்சு, கிளம்பலாம்” அவளது தந்தையின் உறுதியான குரல் புதர்களின் வழியே கேட்டது.

பப்லி மேலேறி வந்தபோது அனைவரும் ஒருங்கியிருந்தனர். பாத்திரங்கள், மற்ற சாமான்கள், விறகுகள், கூடாரத்துணி, மேஜைகள், நாற்காலிகள் எல்லாம் ஜிப்சியில் ஏற்றப்பட்டிருந்தன. ரோமேனும் அவருடன் வந்தவர்களும்கூட ஏற்றப்பட்ட பொருட்களுக்கு மேலாக ஏறியிருந்தனர்.

ஆசிஷ் ஒரு ஜிப்ஸியின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார். புரோபீர் அவர் அருகில் அமர்ந்துகொள்ள, குழந்தைகள் பின்புறத்தில் ஏறிக்கொண்டனர். மற்றவர்கள் கடைசி ஜிப்சியில் ஏறினார்கள். ஜிப்ஸியின் இயந்திரங்களை முடுக்கியதும், படைக்கலமேந்திய காவலர்கள் இரண்டுபேர் ஒவ்வொரு வண்டியின் பின்னாலும் தாவி ஏறிக்கொண்டனர்.

மாலைப்பொழுதுதான் ஆகியிருந்தது என்றாலும், வனத்திற்குள் நுழைந்ததும் மேலும் பொழுது கடந்துவிட்டது போலத் தோன்றியது. இரவும், இருளும் மலைகளில் விரைந்து கவிந்துவிடுமோ என்னவோ! சாலை வெறும் மண் பாதையாகவே இருந்தது. வழியெங்கும் புழுதி நிறைந்த குழிகள். மழை பெய்தால், விலங்கோ, வண்டியோ கூட மூழ்கிவிடக்கூடிய அளவுக்கு பெரியதாக இருந்தன. மரங்களும், செடிகளும் பழுப்பு நிறத்தில் காய்ந்து போயிருந்தன. ஆங்காங்குதான் சிறிது பச்சை நிறம் திமிறிக் கொண்டு தெரிந்தது. காடே வதங்கி சுருங்கிவிட்டதோ எனத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

ஜீப்புகள் வேகமெடுத்ததும் புழுதி கிளம்பி மேகமாக எழுந்தது. அனைவரும் அந்தப் புழுதியில் அமிழ்ந்து போயினர். நாசி வழி ஏறிய புழுதி தொண்டையில் படிந்து நமைச்சலை ஏற்படுத்தியது.

ஒரு இருபது நிமிட பயணத்திற்குப் பின், காவலர் ஒருவர் “இங்க எதோ இருக்குது “ என்று கூக்குரல் எழுப்பினர்.

சாலையின் ஒருபுறத்தில் காடு அகழ்ந்து சமப்படுத்தப்பட்ட நிலப்பகுதி ஒன்று வந்தது. ஆசிஷ் தன் வாகனத்தை நிறுத்தினார். மற்ற வாகனங்களும் அவரைத் தொடர்ந்து அங்கு நின்றன. முதலில், புழுதியால் கண் மறைக்கப்பட்டதாலும், வெளிச்சக் குறைவாலும், பப்லியால் எதையும் காண இயலவில்லை. ரூபுல் கைகளை இறுக்கி தூரத்தில் சுட்டினான். அவள் கண்கள் இருளுக்குப் பழகியதும், கனத்த கரிய உருவம் ஒன்று காட்டிலிருந்து சமநிலத்திற்குள் மெதுவாக நுழைவதை கண்டாள். அது ஒரு காட்டு எருமை. மிகப்பெரியது, கனத்து வளைந்த கொம்புகள், அதன் கம்பீரமான தலையை கிரீடம் என அலங்கரித்திருந்தன. சட்டென்று காவலர்கள் இடம் மாறி, துப்பாக்கிகளை சுடுவதற்கு தோதாக மடக்கி நிமிர்த்தி, அந்த விலங்கை நோக்கி குறி வைத்தனர்.

விலங்கின் மீது கண்களை குவித்தவராக, “எல்லாரும் அமைதியா இருங்க” என்றார் ஆசிஷ்.

அவர்கள் வாகனங்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து இருபத்தைந்து அடி தூரத்தில் சிறு அசைவும் இன்றி, அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றது எருமை. அவர்களும் உறைந்த சிலைகளைப் போல, ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அசைவின்றிஅமர்ந்திருந்தனர். சிவந்த, மணிக் கண்களால் அவர்களையே நோக்கியபடி கால்களை தரையில் உரசிக்கொண்டிருந்தது எருமை. பின்னர் ஜீப் முடுக்கப்பட்ட உறுமல் ஒலிமட்டும் எழுந்தது.

“சரி” ஆசிஷ் அடங்கிய குரலில் சொன்னார் “ போலாம்.”

ஆசிஷ் ஜீப்பை மெல்ல முன்னால் நகர்த்தினார். மற்றவர்களும் அதையே செய்தனர்.

எருமை சில அடிகள் முன்னால் வந்தது.

“அது தாக்க வருது” என்று ரகசியக்குரலில் சொன்னார் காவலர் ஒருவர்.

ஜீப் மேலும் நகர்ந்தது.

எருமை தலையை குலுக்கிக்கொண்டது. பின்னர், மெல்ல பின்னால் நகர்ந்து, காய்ந்த புதர்களின் வழியாக இருண்ட காட்டிற்குள் சென்று மறைந்தது.

“வாவ்” என்று கத்தி அங்கு சூழ்ந்து இருந்த இறுக்கத்தை தளர்த்தினான் பூபுல்.

“எமராஜன் அவர் வாகனத்தில ஏறி வந்துட்டாப்பல எனக்கு தெரிஞ்சது” என்றபடி காவலர் ஒருவர் சிரித்தார். மற்றவர்களும் அவரைத் தொடர்ந்து சிரித்து தங்கள் பதட்டத்தை தணித்துக்கொள்ள முயன்றனர். பப்லி அமைதியாக இருந்தாள். இறுக்கத்தாலும், பதட்டத்தாலும் அவள் தொண்டை வறண்டு போயிருந்தது.

“ராத்திரி நாம நைட் சஃபாரி போகலாம்” என்றார் ஆசிஷ். “எட்டுமணிக்கு பங்களாவில் இருந்து கிளம்பி உய்சிலாவிற்கு போவோம். அதிர்ஷ்டம் இருந்தா மிருகங்கள கூட பார்க்கலாம்”

“புலி…” ரூபுல் அலறினான். “நாம புலியைப் பார்க்கலாம்.”

பப்லி ஜீப்பில் இருந்து வெளிப்புறமாக நோக்கிக்கொண்டு வந்தாள். தூரத்தில் சாலையின் பக்கவாட்டில் மரம் ஒன்று தென்பட்டது. அம்மரம் அவள் நன்கு அறிந்த ஒன்று போலத் தோன்றியது. அருகில் வர வர அதன் கிளைகளையும், கொத்து கொத்தாக காய்த்திருந்த அதன் பச்சை நிற சிறிய பழங்களையும் கண்டுகொண்டாள்.

“நெல்லிக்காய்” என்றவள் ஆச்சர்யமாக “நெல்லி மரமா அது?” என்றாள்.

“ஆமாம் நெல்லி மரம்தான்” என்றார் ஆசிஷ். “வேணுமா?”

மரத்தின் அருகில் வண்டியை நிறுத்திய ஆசிஷ், வண்டியின் இயந்திரத்தை ஓட விட்டுவிட்டு தான் மட்டும் அதிலிருந்து குதித்து இறங்கினார். காவலர் ஒருவரும் அவருடன் இறங்கிச் சென்றார். சிறுத்தையைப் போல, ஒரு கிளையைப் பற்றி  இழுத்து ஏறி, அங்கிருந்து, பழங்கள் பழுத்து தொங்கிய மற்றொரு கிளைக்கு தாவினார். ஆசிஷ் பழங்களை கிளையில் இருந்து பறித்து, தரையில் இட, கீழே நின்றிந்த காவலர் பழங்களைப் பொறுக்கி, ஆசிஷ் கொடுத்தவிட்டு சென்றிந்த கைக்குட்டையை சிறிய பை போலாக்கி அதில் சேர்த்துக்கொண்டார். பை நிறைந்ததும் அதை பப்லியிடம் கொடுத்தார்.

நெல்லிக்கனிகள் சாறு நிறைந்ததாகவும் , புளிப்பாகவும் இருந்தன. பப்லி ஒரு பழத்தை எடுத்துக் கடித்ததும் நடுக்குற்றாள்.

மேலை வானத்தில் வேகமாக மூழ்கிக்கொண்டிருந்த சூரியன், அவர்கள் அங்கிருந்து நகரத்துவங்கியதும், மரங்களுக்குப் பின் சரிந்து, மறைந்து போனது. வனம் அமைதி கொள்ளத்துவங்கியது. காவலர்கள் மேலும் கூர்மைகொண்டவர்களாக, ஓய்வின்றி இருக்கையில் இங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்தனர். இருள் கரிய போர்வை போல மெல்ல கவியத் துவங்கியது. அவர்கள் மாளிகையை அடைந்த போது வெளிச்சம் மொத்தமும் வடிந்திருந்தது. அடர்ந்த வனத்தின் இரவு, இரவு விலங்குகளின் ஓலங்களும், பூச்சிகளின் தொடர் ரீங்காரங்களுமாக அவர்கள் மீது படர்ந்தது.

இம்முறை பப்லி குளியறைக்குச் செல்ல முந்திக்கொண்டாள். பகலின் புழுதியையும் அழுக்கையும் துருவேறிய வெதுவெதுப்பான நீரால் கழுவிக்கொண்டாள். அவள் வெளியே வந்தபோது ரூபா கட்டிலில் படர்ந்து கிடந்தாள். பப்லி கட்டில் மேல் உருட்டி தூக்கி எறிந்திருந்த கைக்குட்டையை மூக்கின் மீது அழுத்தியபடி “அதிர்ஷ்டக்கார பன்னி” என்றாள் ரூபா. அவளது மென்மையான குரலில் ஏளனம் இழையோடியது.

“என்ன சொல்ற?” என்றாள் பப்லி குழம்பியவளாக.

அவள் கண்களில் மெல்லிய கேலி தோன்ற, “அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்குது, எனக்குத் தெரியும், உன்னை ரொம்பவேபிடிச்சிருக்குது நம்முடைய அழகருக்கு” என்றாள் ரூபா.

பப்லி அவநம்பிக்கை தொனிக்க “உனக்கு கிறுக்குதான் பிடிச்சிருக்குது, அவர் கல்யாணம் ஆனவர், உனக்கே தெரியும்” என்றாள்.

பப்லி சோர்வுற்றவளாக தளர்ந்து சாய்ந்துகொண்டாள். அன்று இரவுலா வேறு இருந்தது. ரூபாவின் எதிர்ப்புறமாக படுத்து, கண்களை மூடிக்கண்டு, அசைவில்லாமல் கிடந்தாள். ரூபா படுக்கையில் இருந்து விலகி எழுந்து குளியலறைக்குச் செல்லும் வரை காத்திருந்தாள். பின்னர் குப்புற திரும்பிப் படுத்தவளாக, கைக்குட்டையை எடுத்து தன் மூக்கின் மீது வைத்துக்கொண்டாள். புழுதி மணமும், நெல்லிக்காயின் அமில மணமுமாக, வாசம் கொண்டிருந்தது கைக்குட்டை.

களைப்புற்றவர்களாக அனைவரும் தாழ்வாரத்தில் எட்டு மணிக்கு கூடிவிட்டிருந்தனர்.

பருண் அகன்ற கல் படிகளில் நின்றபடி, ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு வனத்தை பார்த்துக்கொண்டிருந்தார். மேலும் ஒரு நிலவொளிரும் இரவு. நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்த வானத்திற்கு மேலும் ஒளிகூட்டிக்கொண்டிருந்தது நிலவு.

எட்டரை மணியளவில் வனத்தை நோக்கிய அவர்களது பயணம் துவங்கியது. பிற்பகலைப் போலவே இப்போதும் அனைவரும் இரு வாகனங்களில் ஏறிக்கொண்டிருந்தனர். பப்லி ஆசிஷிற்கு நேர் பின்னால் அமர்ந்திருந்தாள். முன் இருக்கையின் பின்புறத்தை பற்றி இருந்ததால், அவள் கைகள் அவரது கழுத்தினை உரசும் நிலையில் இருந்தன.

இம்முறை அவர்கள் நதியில் இருந்து விலகி, மாளிகையின் கிழக்குப் புறமாக திரும்பி வனத்திற்குள் நுழைந்தனர். அவ்விடத்தில் வனம் மேலும் அடர்த்தியாக இருந்தது. இரவின் கனத்தால் அப்படி தோன்றியதாகக் கூட இருக்கலாம். மரங்கள் ஒன்றை ஒன்று நெருங்கியும், உயர்ந்தும் மேலும் அச்சுறுத்தும் வகையில் இருந்தன. இரு ஜீப்பின் மீதும் கனத்த ஒளியை பாய்ச்சக்கூடிய சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காவலர்களில் ஒருவர், அவ்விளக்கை இயக்கிச் சுழற்றி, கடந்து போகும் வனத்தின் உள்ளே பாய்ச்சிக்கொண்டு வந்தார். மையிருளில் ஊடுருவிய அவ்வொளி கலங்கரை விளக்கின் நீண்டு குறுகிய ஒளி வால் எனத்தோன்றியது. பூபுல் பப்லி அருகில் நெருங்கி வந்து “இங்க சிறுத்தைங்க இருக்கும்னு நினைக்கிறாயா?” என்று சுற்றும் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த மரக்கிளைகளை கூர்ந்து நோக்கியபடி கேட்டான்.

“கண்டிப்பா இருக்கும்” என்றாள் பப்லி மகிழ்ச்சியுடன்.

நட்சத்திரங்களால் ஒளிகூட்டப்பட்ட வானமும், புதுமையான சூழலும் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தன. அவளது களைப்பு முழுவதும் மறைந்து சொல்லமுடியா இனிமை கூடியிருந்தது. காவலர்களின் கூர்ந்த கவனமும், அவர்களது உறுதியான உடல்கள் மேலும் இறுக அவர்கள் பதட்டத்துடன் சூழ நோக்கி வருவதும் பப்லியின் மன மகிழ்ச்சியை மேலும் கூட்டவே செய்தது. எதிரில் அமர்ந்திருந்த ரூபா குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள். “அப்படி ஒண்ணும் குளிரல ரூபா” என்ற அவள் குரலில் ஏளனம் தொனித்தது.

கரிய சுரங்க வழி என நீண்ட சாலை முடிவற்றதாகத் தோன்றியது. யானைப்புற்கள் இருபுறமும் அடர்ந்து அப்பக்கத்தைக் காண ஒட்டாமல் செய்தன. அங்கு எது வேண்டுமானாலும் மறைந்திருக்கக்கூடும் என்று எண்ணியபோது, பப்லியின் உடல் நடுக்கு கொண்டது. இரவின் விந்தையான ஒலிகள் செவியில் விழுந்தன. சில்வண்டுகள் தொடர்ந்து கீச்சிடும் ஒலியின் இடைவெளிகளில் சரியாக ஆந்தைகளின் அலறல் ஒலியும் இணைந்து கேட்டுக் கொண்டிருந்தது. சுற்றிலும் இருளில் அவர்களால் எதையும் காண இயலவில்லை என்றாலும் உயிர்கள் நடமாடுவதை அவர்களால் உணரமுடிந்தது. மறைந்திருக்கும் ஒவ்வொரு விலங்கின் இதயத் துடிப்பையும் அவர்களால் கேட்க முடியும் என்பது போல.

“புலி பக்கத்துல இருந்தாலும் எப்படி தெரியும்?” என்று ரூபுல் கேட்டான். “பார்க்கவும் முடியாது, புல்லும் வளந்து மறைச்சிருக்கு , எப்படி தெரியும்?”

“அதோட வாசனைய வச்சுதான்” என்றார் ஆசிஷ். “இந்த வகைப் பூனைகளுக்கு தனி மணம் உண்டு” என நிறுத்தி “எப்படினு சொல்ல முடியல. ஒருமாதிரி கொடுமையான அழுகல் வாசனை, புலி எங்க இருந்தாலும் காட்டிக்கொடுத்துடும்.”

“ஜூல இருக்கற புலியோட வாசனை மாதிரியா?”

“ஆமாம், அப்படித்தான், ஆனா அதைவிட வலுவா இருக்கும்” என்று சிரித்தார்.

எல்லோருடைய பொறுமையும் குறையத் துவங்கிய போது, விளக்கின் ஒளி பாதையில் ஒரு இனிய காட்சியை காட்டியது. ஒரு பதினைந்தடி தூரத்தில் காண்டாமிருகம் ஒன்று தன் நிழலில் குட்டி ஒன்றை பாதுகாத்தபடி நின்றுகொண்டிருந்தது. தாயும், குட்டியும் அவ்வாறு வாகன ஒளியில் நின்றுகொண்டிருந்தது நம்ப முடியாததாக இருந்தது. ஜீப்பில் அனைவரும் பயத்தால் கலங்கிப் போயிருந்தனர். காவலர்கள் அமைதியாக இருக்கும்படி எச்சரித்தனர். அவர்கள் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பூபுலும் ரூபுலும் கள்ளக்குரலில் மென்மையாக உரையாடிக்கொண்டும், அவர்கள் இருக்கையிலிருந்து இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டும் இருந்தனர்.

அந்தக்காட்சி அனைவரின் சாகச உணர்வையம் தூண்டிவிட்டிருந்தது. அவர்கள் மீண்டும் பயணத்தை துவங்கியதும் அனைவரும் நிமிர்ந்து அமர்ந்து மேலும் ஆச்சர்யங்களை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஜீப் திடீரென ஒரு ஆழமான வளைவில் திரும்பியபோது, ஆசிஷ் அதிர்ச்சியில் சபித்தபடி ஆக்சிலரேட்டரில் இருந்து காலை எடுத்தார். வண்டி சட்டென்று வேகம் குறைந்தது.

சாலையில் அவர்களை நோக்கியவண்ணம் யானை ஒன்று தன் காதுகளை வீசியபடி, தரை வரைக்கும் நீண்டிருந்த தந்தங்களுடன் நின்றுகொண்டிருந்தது.

காவலர்கள் மேலும் இறுகினார்கள். அவர்களது ஒவ்வொரு புலனும் யானையின் அசைவை நோக்கியே குவிந்திருந்தது.

“அமைதியா இருங்க, சத்தம் போடாதீங்க” ஆசிஷின் குரலில் கண்டிப்பு கூடியிருந்தது.

புரோபீர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த ரூபா அவரை இறுகப் பற்றினாள்.

“விடு ரூபா” என்று கத்தினார்.

ஆசிஷ் உடனே கைகளை உயர்த்தி அமைதி காக்கச் சொல்லி சைகை செய்தார். ஆனால் யானை அதற்கு முன்னரே தலையைக் குலுக்கியபடி முன்னால் வரத்துவங்கிவிட்டிருந்தது.

“அப்படியே இருங்க!” என்றபடி இயந்திரத்தை முடுக்கி வண்டியை பின்னோக்கி நகர்த்தினார் ஆசிஷ். அதற்குள் இன்னொரு வாகனமும் பின்னோக்கி நகரத் துவங்கியிருந்தது.

யானை முன்னோக்கி வந்தாலும், அதற்கு தொடர்ந்து துரத்தும் எண்ணம் இல்லை என்பது விளங்கியது. சாலையில் இருந்து விரைந்து விலகி இரவிருளில் சென்று மறைந்தது.

அனைவரும் மெல்ல அமைதிக்கு திரும்பினர் என்றாலும் வேறுவித உணர்ச்சிகள் வெளிவரத் துவங்கின. காலையில் இருந்து நிகழ்ந்தவற்றால் ஊக்கம் குன்றி தளர்ந்திருந்த புரோபீர் திரும்பிச் சென்றுவிட விரும்பினார். அது அவருக்கும் ஆசிஷிற்கும் இடையில் கருத்து வேறுபாட்டினை உண்டாக்கியது.

“இது அபாயகரமா இருக்கே” என்று பிடிவாதமான குரலில் சொன்னார் புரோபீர்.

ஆசிஷும் களைத்திருந்தார். ஆனாலும் அங்கு நிகழ்ந்தவற்றால் சிறிதும் மனம் தளராதவராக கிண்டலான குரலில் “இது காடு மிஸ்டர் பரூவா, இங்க நீங்க இதைப் பார்க்கத்தான வந்திருக்கீங்க, அபாயம் உண்டுதான், ஆனாலும் பயந்து நடுங்கற அளவுக்கு ஒண்ணும் இல்ல” என்றார்.

“நீங்க கிண்டலடிங்க சிங், பரவாயில்ல” என்றவர் முகம் சிவந்துபோக “நாம திரும்பிப் போயிடலாம்” என்று உரக்க சொன்னார். “நான் சொல்றதக் கேளுங்க!”

“நான் சொல்றேன், நாம் உய்சிலாவுக்கே போவோம்” என்று நிதானமாக சொன்னார் ஆசிஷ்

“நான் என் மச்சினரிடம் பேசிக்கிறேன்” என்று சித்தில் தெறித்தார் புரோபீர்.

“அட என்னமும் செய்யுங்கள் பரூவா, ஒரு ஆம்பளை மாதிரி கொஞ்சம் தைரியமா நடந்துக்கோங்க” என்றார் ஆசிஷ் புண்பட்ட குரலில்.

ரூபா விம்மி அழத் துவங்கி விட்டாள். பப்லிக்கு அவளை அறையலாம் போல் இருந்தது. அங்கு உருவான அந்த எதிர்பாராத சூழல், அவளை வெட்கத்தால் பற்றி எரியவைத்த்திருந்தது. அவர்கள் பின்னால் இரு காவலர்கள் அமர்ந்திருந்ததும் அவள் கவனத்தில் இருந்தது. அவர்களும் முகத்தை திருப்பியவர்களாக, முன்புறத்தில் நிகழ்ந்த வார்த்தை பரிமாறல்களை கவனியாதரவர்கள் போல் தங்களுக்குள்ளாக மெல்ல உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் மரியாதை கருதியே அவ்வாறு இருக்கின்றனர் என்பதும் அவளுக்கு விளங்கியது. தான் நடுவில் புகலாமா என்று எண்ணியவளாக இருக்கையின் விளிம்பில் எழுந்து அமர்ந்தபோது பின்னாலிருந்து இரண்டாவது ஜீப் வந்து இணைந்துகொண்டது.

“எல்லாரும் மன்னிச்சுடுங்க” பருண் பின்னால் இருந்து அழைத்து “ரொம்ப நேரமாயிடுச்சு, போகலாம்” என்றார்.

ஆசிஷ் ஒன்றும் சொல்லாமல் வண்டியை முடுக்கி, வேகமாக ஓட்டத்துவங்கினார். அவர் எதுவும் பேசவில்லை. அவர்களைக் கடந்து செல்லும் புல் வெளியைக்குறித்து கூட ஒன்றும் சொல்லவில்லை.

கடுமையான குளிர் அவள் முகத்தில் மோதி சற்று குளுமை கொள்ளச் செய்தாலும், உள்ளே அவள் கோபத்தால் கனன்று கொண்டிருந்தாள். புரோபீர் மாமா நடந்துகொண்ட விதத்தால் கொந்தளித்துப்போயிருந்தாள். அதைவிடவும், ரூபா மேல் அவளுக்கு மிகுந்த வெறுப்பாக இருந்தது அவளுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ரூபாவிற்கு எதிரி அவளேதான். அவளுக்கென்று என்ன நல்லது நிகழ்ந்ததாலும், அவளுடைய சிறுபிள்ளைத்தனத்தால் அவற்றை கெடுத்துக்கொள்வாள் என்று எண்ணிக்கொண்டாள்.

அத்தோடு ஆசிஷ் மீதும் எப்படி அவளுக்கு அவ்வளவு வெறுப்பும் கோபமும் வந்தது என்பதும் புரியவில்லை. புரோபீர் மாமா அவருடைய அசட்டுத்தனத்தால் அனைவரையும் மிக மிக ஆபத்தான சூழலுக்கு தள்ளிவிட்டிருந்தார்தான். ஆனாலும் ஆசிஷாவது சற்று பொறுமையுடன் நடந்துகொள்வார் என எதிர்பார்த்திருந்தாள்.

இறுதியாக, சாலை இரண்டாகப் பிரியும் விலக்கு ஒன்றுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆசிஷ் காட்டுமிராண்டித்தனமாக கவனம் இன்றி வண்டியை ஒடித்துத் திருப்பி குறுகலான ஒரு சாலையில் நுழைந்தார். ஜீப் மேடுபள்ளங்களில் குதித்தபடி ஓடியது.

சில நிமிடங்களில் அவர்கள் முகாம் ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். அது காட்டினை அகழ்ந்து சமன்படுத்தி  உருவாக்கப்பட்டிருந்த நிலப்பகுதி.   உப்புக்குழிக்கு உப்புண்ண வரும் விலங்குகளை கவனிப்பதற்காக வன அலுவலர்களும் , பணியாளர்களும் தங்கும் இடம் அது. அங்கு பெரிய பெரிய மரத்துண்டுகளால், பரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கீழ்ப் புறமாக யானைகள் உப்புக்குழிக்கு சென்று வரும் வண்ணம் உயரமாகக் கட்டப்பட்டிருந்தது.

செங்குத்தான ஏணி போன்ற மரப்படிகள் பரணின் மேல் தளம் வரை சென்றன. ஜீப்கள் அங்கு உறுமியபடி உள்ளே நுழைந்ததும், மேலிருந்து ஆண்கள் சிலர் படிகளில் இறங்கி வந்தனர். பரஸ்பர அறிமுகங்களும், வரவேற்புரைகளும் முடிந்தபின் அனைவரும் பரணின் மேல் தளத்திற்கு ஏறிச் சென்றனர்.

அந்தப் பரண் மேடை அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது. மத்தியில் இருபுறங்களிலும் நோக்கும் வண்ணம் அமைந்த திறந்த வெளி. அதனை ஒட்டி இரண்டு அறைகளும் இருந்தன. ஒன்று அலுவலகம் மற்றும் முகாமின் தலைமையகமாக செயல்பட்டது (இங்குதான் பல அதிரடி திட்டங்கள் தீட்டப்படும். குறிப்பாக வனக்கொள்ளையர்களுக்கு எதிரான திட்டங்கள் தீட்டப்படுவதும், செயல்படுத்தபடுவதும் இங்கிருந்துதான்). மற்றொரு அறை ஆண்கள் தங்கும் ஓய்வுக்கூடம். அலுவலர்கள், காவலர்கள், மற்றும் பணியாளர்கள் அங்குதான் தங்குவார்கள்.

நடுவில் இருந்த திறந்த வெளியில் தற்காலிக கணப்பு மேடை ஒன்றும் இருந்தது. அவசியம் என்றால் அங்கு கணப்பு மூட்டிக் கொள்ளலாம். கணப்பு மூண்டதும் அந்த இடம் ஒளிகொண்டது, அனைவரும் அதை நோக்கி சென்றனர். ரூபியும், பீணாவும் அங்கிருந்த மூங்கில் இருக்கைகளில் தொய்ந்து அமர்ந்தனர். அவர்களால் அதற்கு மேல் அவ்விரவில் ஒன்றும் செய்ய இயலாது. ஆண்கள் சுற்றி நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களில் சூடான இனிமையான தேநீர் மரத்தில் குடைந்த குவளைகளில் வழங்கப்பட்டன. குழந்தைகள் அவர்களது தேநீர் குவளைகளை எடுத்துக்கொண்டு மேடையின் விளிம்பில் இருந்த மரத்தாலான வேலி அருகில் சென்று நின்று கொண்டனர். அங்கிருந்து காணக் கிடைத்த காட்சி அபாரமானதாக இருந்தது. முழு நிலவு பல மைல் தூரத்திற்கு வனத்தை ஒளிகொள்ளச் செய்திருந்தது. வெள்ளியால் ஆன விதானம் ஒன்று அடர்ந்து, எதனாலும் இடையறுக்க முடியாதபடி தொடுவானம் வரை நீண்டிருந்தது. பச்சை விரிப்பில் கண்ணீர்த் துளிகள் போல பனித்துளிகள் சொட்டி இருப்பதை மேடையின் அருகில் இருந்த மரங்களின் விரிவில் காண முடிந்தது. நிலவொளியில் வெளியே வரும் இரவு நேர விலங்குகளை காண்பதற்காக அவர்கள் கண்கள் கூர்ந்து காத்திருந்தனர்.

ஆனாலும், ஏமாற்றமே மிஞ்சியது. சில ஆந்தைகள் மரம் விட்டு மரம் தாவுவது தவிற வேறொன்றும் காணக் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு பின்னால்,  மரக்கோப்பைகளில் தேநீருக்கு பதிலாக ரம் நிறையத் துவங்கி இருந்தது. பருணும், புரோபீரும் மதுவும், குளிர்பானமும் கலந்த மதுக்குவளைகளை ஆளுக்கொன்றாக மன நிறைவுடன் கையிலேந்தியிருந்தனர். பீணா மாமியும் தன் கையில் ஒரு மதுக்கோப்பையை வைத்திருந்தாள். பப்லிக்கு அது ஒன்றும் அத்தனை ஆச்சர்யமானதாக இல்லை.

சில சுற்றுகளுக்குப் பிறகு, கணப்பைச் சுற்றிலும் இருந்த சூழல் மாறியது. கேலியும், சிரிப்பும் களைகட்டியது. பையன்கள் இருவரும் அவர்கள் வழக்கப்படி எங்கோ மறைந்துவிட்டிருந்தனர். ரூபா நெருப்பருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். பப்லி ஏனோ தனித்திருப்பவளாக உணர்ந்தாள். தனிமையின் கசப்பால் ஆட்கொள்ளப்பட்டவளாக பரண் மேடையின் நிழலில் மறைந்து நின்றுகொண்டாள்.

அந்த மகிழ்ச்சி வட்டத்தில் இருந்து பிரிந்து ஒரு உருவம் அவளை நோக்கி வந்தது. ஆசிஷ்தான். அவளருகில் வந்து மரத்தடுப்பைப் பற்றியபடி நின்று கொண்டார்.

“நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்கணுமே” என்றார்.

பப்லி உறைந்து நின்றாள். “எதுக்காக?” என்று பகட்டாக கேட்டாள்.

மெல்லிய எரிச்சல் ஆசிஷின் குரலில் படர்ந்தது.

“உனக்குதான் தெரியுமே. . கோபத்தில் பேசிட்டேன் உன் மாமாகிட்ட”

பப்லி கடுமையான குரலில் சொன்னாள் “அவர்தான் முட்டாள்தனமா நடந்துக்கிட்டார். நாமளும் அப்படியே நடந்துக்கணுமா ?”

“உண்மைதான்” என்றபடி நிமிர்ந்து திரும்பி வானத்தை நோக்கினார் ஆசிஷ். அவர் பப்லிக்கு மிகவும் நெருக்கமாக நின்றிஇருந்தார். அவள் ஆழ்ந்து ஒரு மூச்சிழுத்தால்கூட அவரை உரச வேண்டிவரும். தூரத்தில் ஒரு மரத்தில் தன் பார்வையை பதித்தவளாக, எத்தனை சுலபம் அது என்று எண்ணிக்கொண்டாள். ஆசிஷ் மர வேலியில் உள்ளங்கையால் தட்டி, தலையை மட்டும் திருப்பி அவளை நோக்கி புன்னகைத்தார். பின்னர் அவர் நடந்து பீணா அருகில் கிடந்த அவரது இருக்கைக்கு மீண்டார்.பீணா அவரது கைகளை அழுத்தமாக பற்றி வரவேற்றார். பப்லிக்கு அவள் மாமியின் வட்டமான வெளிறிய முகத்தையும், அந்த இளைஞரின் முகத்தை விட்டு ஒருபோதும் அகலாத அவரது கண்களையும் பிராண்டி வைத்தால் என்னவென்று தோன்றியது.

“ஹே பப்லி” என்று பின்னாலிருந்து குரல் கொடுத்தாள் ரூபா. ஒரு மூங்கில் விசிறியால் தன்னை விசிறிக்கொண்டிருந்தாள். முகத்தில் இருந்து வியர்வை வழிந்து கழுத்தின் மடிப்புகளுக்கு சென்றது. “ஐயோ, நெருப்பு பக்கத்தில கொதிக்குது” என்றாள்.

“ஆமாம்” என்றாள் பப்லி சூடான குரலில். “இங்க நிஜமாவே சூடாத்தான் இருக்குது. “

அவளது மெல்லிய கேலியை புரிந்துகொண்டவளாக, “என்ன சொல்ற” என்றாள் ரூபா கவனமாக.

“உன் அம்மாதான்” பப்லி சொன்னாள். “எப்படி இதை எல்லாம் பொறுத்துக்கிற?”

அவள் முகம் மெல்ல இருள “ நீ என்ன சொல்றனு எனக்கு புரியல” என்றாள்.

பப்லி கட்டுப்படுத்த முடியாமல் கொட்டிவிட்டாள் “ஒரே வார்த்தைதான் சொல்லலாம். அருவருப்பா இருக்குது உன் அம்மா நடந்துக்கிறது.”

ரூபா உடையும் குரலில் “அவர் போதையில இருக்கார்” என்றவள், சிறிய அமைதிக்குப் பின் “எப்பவும் சிடுசிடுன்னு இருக்கிற உன் அம்மாவை விட பரவாயில்லைதான் போ” என்றாள்.

முதல் பறவைக் குரல் கேட்டதும் அவர்கள் அங்கிருந்து  திரும்பினர்.

திரும்பி வரும்போது ரூபாவும் பப்லியும் வேறு வேறு வண்டிகளில் ஏறிக்கொண்டனர்.

காலையில், அறைக்குள் வெள்ளமெனப் பரவியிருந்த சூரிய ஒளியைக்கண்டு திடுக்கிட்ட பப்லி அவளது கைக்கடிகாரத்தை தேடி எடுத்து நேரம் என்ன என்று பார்த்தாள். பதினோரு மணி ஆகியிருந்தது. அவர்களின் விடுமுறையின் கடைசி நாளும் அதுவுமாக, காலைப்பொழுதை உறக்கத்தில் கழித்துவிட்டதை எண்ணி வருத்தப்பட்டாள்.

அவள் படுக்கையிலிருந்தபடி நதியையும், மரங்கள் அடர்ந்து, டிசம்பர் மாத வெயிலில் பொலிந்து கொண்டிருந்த கரையையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சி அவள் மனத்தில் அறியமுடியாத நிறைவின்மையை உண்டாக்கியது. ஒருவகையில் ஏமாற்றப்பட்டவளாக உணர்ந்தாள். அவளுக்கு வாக்களிக்கப்பட்டதைவிட குறைவாக கொடுக்கப்பட்டது என்பது போல. எரிச்சலடைந்தவளாக, குளியலறையின் குளிர்ந்த தரையில் நின்றுகொண்டு நீண்ட நேரம் வெதுவெதுப்பான நீரை குவளையில் அள்ளி அள்ளி உடல்மீது கொட்டிக்கொண்டிருந்தாள். அவள் உடல் கன்றிச் சிவந்து, முடிகளும் சிக்கலான பின்தான் நிறுத்தினாள்.

கீழே மேஜையில் மதிய உணவு எடுத்து வைக்கப்பட்டிருந்தது. யாரும் அவள் வராதது குறித்தோ, தாமதத்தைக் குறித்தோ ஒன்றும் குறிப்பிடவில்லை. உரையாடல் அவர்கள் கிளம்பிய சற்று நேரத்தில், பரண் மேடை அருகே தென்பட்ட ஆண் புலியைப் பற்றியே இருந்தது. பரண் மேடை அருகே சற்று நேரம் உலவிவிட்டு பின்னர்தான் உப்புக்குழியை நோக்கி போயிருக்கவேண்டும் அந்தப் புலி.

ரூபுலுக்கு புலியைக் காணமுடியாமல் போனது வருத்தமாக இருந்தது. “இப்படி ஆயிடுச்சே “ என மீண்டும் மீண்டும் புலம்பிக்கொண்டிருந்தான்.

“என்ன செய்ய முடியும்” என்ற படி பருண் தன் தலையை குலுக்கிக் கொண்டார்.

ரூபா மேஜையின் எதிர்ப்புறம் இருந்த பப்லியை பார்த்தாள். ஆனால் பப்லி முகத்தை திருப்பிக் கொண்டாள். முதல்நாள் நடந்த சிறு சண்டையை ஏற்றுக்கொள்ள இன்னும் அவள் தயாராகவில்லை. மேலும் அவள் எதுவும் தவறாக செய்துவிட்டதாகவும் நினைக்கவில்லை.

உணவுக்குப் பின், பெரியவர்கள் அனைவரும் படுக்கை அறைக்கு சென்று விட்டனர். பப்லி தாழ்வாரத்தில் இருந்த வசதியான பிரம்பு நாற்காலி ஒன்றில் கையில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்தாள். ரூபுலும் பூபுலும் நதிக்கரையில் கற்களை உரசி தீமூட்ட முயன்று கொண்டிருந்ததால் எழுந்த கல்லோடு கல் உரசும் ஒலியுயம், யானைப்பாகர்கள் யானைகளை வேலைக்காக அழைத்துச் செல்லும் ஒலியம், அறியாப் பறவை ஒன்றின் அலறல் ஒலியும் மீண்டும் மீண்டும் அவளைத் தீண்டி அவள் கவனத்தை சிதறடித்தன. பப்லி புத்தகத்தை மூடி அப்புறம் வைத்தாள். அதற்காகவே காத்திருந்ததுபோல ரூபாவும் அங்கு வந்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“என்ன படிக்கிற?” என்றாள்.

“ஒண்ணும் இல்ல”

“ராத்திரி ஒரு பார்ட்டி இருக்கு” ரூபா தொடர்ந்தாள். “ஃபேர்வெல் பார்ட்டி போல, பான்ஃபையரோட., கீழ உள்ள பங்களாவில.”

அவள் விருப்பமின்மையையும் மீறி பப்லி ரூபாவை நோக்கி திரும்பி “கீழயா? எந்த பங்களாவில?” என்று கேட்டாள்.

“அட, கீழே நதிக்கு பக்கமிருக்கிற பங்களாவிலதான்” ரூபா சிரித்தாள். “நீ பார்க்கவே இல்லனு சொல்லாத! நம்ம ஹீ-மேன் எங்க தங்கியிருப்பர்னு நினைக்குற? காட்டிலயா? “

அவள் பார்வையில் இருந்து அதுவரை தப்பியிருந்த அந்த மாளிகை அவள் ஆவலைத் தூண்டியது “விவரமா சொல்லு” என்றாள்.

ரூபா மகிழ்ச்சியுற்றவளாக, “கீழேயும் ஒரு பங்களா இருக்குது, அதில இருக்குற ரூமெல்லாம் இங்க இருக்கற மாதிரி வசதியானது இல்ல போல. ஆனா அங்கயும் தங்கலாம். நம்ம ஹீரோ அங்கதான் தங்கி இருக்காரு. ”

“பான்ஃபையர் எங்க?”

“பங்களாவுக்கு முன்னாடி பெரிய கரை இருக்கு.” ரூபா எழுந்து நின்று விடுதிக்கு முன்னால் இருந்த குன்றை நோக்கி சுட்டி “அங்க பார் தெரியும்” என்றாள்.

பப்லி அவளோடு இணைந்துகொண்டாள். கீழே முகப்பு வாயில் அருகில், சரிவின் அடிவாரத்தில், சிறிய பரல் கற்கள் நிறைந்த நீண்ட பாதை ஒன்று காடு நோக்கி செல்வது தெரிந்தது. அது காட்டின் ஒரு பகுதியாக கலந்து மறைந்திருந்தது. அதனால்தான் அவள் அதை கவனிக்கத் தவறியிருந்தாள். ஒரு மெலிந்த விரல் போல நதிக்கரை வனத்தை நோக்கி நீண்டிருந்தது. அங்குதான் விருந்து நடைபெறப்போகிறது.

ரூபா தொடர்ந்தாள், “காசி டூரிஸ்ட் சில பேர் ஷில்லாங்கில இருந்து வந்திருக்காங்க அங்க. அவங்க எல்லாம் நல்லா பாடுவாங்களாம். அதனாலதான் நம்மையும் அழைச்சிருக்காங்க. பிரச்சனை என்னனா” என அர்த்தபூர்வமாக பப்லியை நோக்கியவள் “ அம்மா நீ போறதா இருந்தாதான் நானும் போகலாம்னு சொல்றாங்க. உனக்கே தெரியும் ரூபி அத்தையை பற்றி”

பப்லி தன் கால் விரல்களை நீட்டிக்கொண்டவளாக “அதைப்பற்றி கவலைபடாத “ என்றாள்.

பெற்றோர் இருவரும் மாலைத் தேநீருக்கு கீழே வந்த போது பப்லி தயாராக இருந்தாள்.

அவள் ஒரு தொடக்கத்திற்காக காத்திருந்தாள். பீணாதான் முதலில் மாலை நேரத் திட்டங்களைக் குறித்து ஆரம்பித்தார். “நல்லா இருக்கும் இல்லியா? நீ என்ன நினைக்கிற ரூபி?” என்று பப்லியின் அம்மாவை நோக்கி கூறினார். “திறந்த வெளியில, நல்ல வெதர்ல…”

ரூபி பெரிதும் ஆர்வமில்லாமல் “ஆமாம்” என்றார். “ரோமேன்கிட்ட குழந்தைகளுக்கு மட்டும் சாதமும், பருப்பும், கொஞ்சம் கோழிக்கறியும்  செய்யச் சொல்லியிருக்குறேன். அவங்களுக்கு அது போதும்” என்றார் ரூபி.

பப்லி உள்ளே நுழைந்தாள். “குழந்தைகளுக்குன்னா? ரூபுலையும் பூபுலையும் பத்தி எனக்குத் தெரியாது, ஆனால் நானும் ரூபாவும் வருவோம்.”

“இல்ல, கண்டிப்பா கூடாது” என்றார் அம்மா. “கண்டபடி குடிப்பாங்க, அங்க வந்துருக்கிற பரதேசிகளும் எப்படிப்பட்டவங்கனு தெரியல. உங்களுக்கு அந்த இடம் சரி இல்ல” என்றார்.

“அவங்க பரதேசிங்கல்லாம் இல்ல, ஆம்பிளைங்க குடிக்கறத இதுக்கு முன்னமும் நான் பார்த்திருக்கத்தான செய்றேன் “ என்றாள் பப்லி கோபமாக. “உங்களுக்கு என்னதான் பிரச்சனை? என் மேல நம்பிக்கை இல்லயா? நான் அப்படி என்ன செஞ்சுட்டேன்?”

“போதும் பப்லி!” அவள் அம்மாவின் குரலில் சினம் ஏறியது. “உன் லெக்சர் எல்லாம் எனக்கு வேண்டாம்.”

“சரிதான்” என்றாள் பப்லி. “ ‘நான் உன் அம்மா, நீ எனக்கு புத்திமதி சொல்ல வேணாம்’னு உங்க வழக்கமான பல்லவிய ஆரம்பிச்சுடுங்க. நான் எதாவது சொன்னா, அது லெக்சர். நான் உங்களுக்கு மகளா பிறந்தது என் துரதிர்ஷ்டம் அதே மாதிரிஎனக்கு அம்மாவானது உங்களுக்கும் அப்படித்தான்.”

“பேசாம இரு பப்லி!” ரூபியின் குரலில் ஒரு எச்சரிக்கை தொனித்தது.

“முடியாது, நான் அமைதியா இருக்க மாட்டேன். என்ன செய்வீங்க? அடிப்பீங்களா?” பப்லியின் குரலில் வெறியேறியது. “நீங்க என்னை எதுவும் செய்யவும் விடமாட்டீங்க, எங்கயும் போகவும் விட மாட்டீங்க!”

பீணா முன்வந்து “அண்ணி, வெளிய போய்ட்டு வர அளவுக்கு அவங்க வளர்ந்துட்டாங்க. பப்லி அழகா, வளர்ந்துட்டா. அவளுக்கும் நாலு பேரோட பேசணும் கொள்ளணும்னு இருக்கத்தான செய்யும். நாமளும்  கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தான வேணும்.  மத்தவங்க விஷயத்தில கதையே வேற” என்றபடி அர்த்தபூர்வமாக ரூபாவை பார்த்தார். ரூபாவும் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதில நீ தலையிடாத பீணா” ரூபி கடுமையாகச் சொன்னாள்.

“அடக் கடவுளே, இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கிறத நிறுத்து” என்றார் பருண். தேநீர் கோப்பையை வேகமாக மேஜை மீது வைத்தார். “விடுமுறையையும் பாழாக்கப்போறியா? உன் முட்டாள்தனத்தால? பிள்ளைகளும் வரட்டும்.” தன் மனைவியை நோக்கியவராக “கொஞ்சம் யோசி… ரூபி, நாமும் அங்கதான இருப்போம், என்ன நடந்துடப்போகுது?”

ரூபி ஒரு பதிலும் சொல்லவில்லை.

நிலவு மேகங்களுக்குப் பின் ஒளித்திருந்தது, நதிக்கரையை நோக்கி ரோமேன் அவர்களை அழைத்துச் சென்றார். கல்படிகள் முடிந்த இடத்தில் அவர் இடதுபுறமாக திரும்பி உள் நிலத்தை நோக்கி சென்றார்.  அவர்கள் அவரைத் தொடர்ந்து பாறைகளில் தடுமாறியபடி சென்றனர். திடீரென்று காற்றில் கிடார் இசை மிதந்து வந்தது.

நிலத்தின் வளைவோடு, ரோமேனைத் தொடர்ந்து அவர்களும் இடப்புறமாக திரும்பிய போது நெருப்பு மூட்டப்பட்ட இடத்தில் இருந்த படபடக்கும் நெருப்பின் ஜுவாலையை காண முடிந்தது. நடமிட்டுக்கொண்டிருந்த நெருப்பைச் சுற்றி கரிய உருவங்கள் வெவ்வேறு விதமான நிலையில் வட்டமாக சூழ்ந்திருந்தன – சிலர் அமர்ந்திருந்தனர், சிலர் பியரை கையில் ஏந்தியபடி நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் சற்று தள்ளி கரிய திரளாக மாளிகை அரைகுறையாத்க தெரிந்தது. அதில் சில ஒளிப்புள்ளிகள் சிமிட்டிக்கொண்டிருந்தன. ஜன்னல்கள் போல.

அவர்களால் இப்போது கிடாரில் இருந்து எழுந்த இனிய இசையை தெளிவாக கேட்கமுடிந்தது. ஒரு சிறிய உருவம் மரத் திண்டு ஒன்றில் மாளிகைக்கு முதுகு காட்டி அமர்ந்தபடி கிடாரை இசைத்துக் கொண்டிருந்தது. கிடார் இசைக்கு இணையாக அதேநேரம் கிடாரின் ஒலியே பிரதானமானதாக கேட்கும்படி மென்குரலில் பாடிக்கொண்டும் இருந்தார் பாடகர். குழுவாக பாட வேண்டிய இடம் வந்தபோது மற்றவர்களும் அவரோடு இணைந்து கொண்டனர். அவர்கள் ஆவேசமாகவும் அதே நேரம் இனிமையாகவும் பாடிக்கொண்டிருந்தனர். அனைவர் குரல்களும் ஒன்றாகக் கூடி ஒரே பேரொலியாக இரவின் நிலைக் காற்றில் சுழன்று ஏறியபோது பப்லியின் உடல் முறுக்கேறியது. அவர்கள் பாடிக்கொண்டிருந்த அந்தப் பழைய மெல்லிசை அங்கிருந்த பின்புலத்தால் மேலும் மேலும் ஆற்றல் கொண்டதாக மாறிக்கொண்டிருந்தது. பப்லி அந்தப் பாடல் வரிகளை மீண்டும் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

என் உயிரெல்லாம் நிறைகிறாய் வனத்தின் இரவு போல” அடக்க முடியாத பேரின்பம் ஒன்று அவளை பற்றிக்கொண்டது.

“நல்லாவே பாடுறாங்களே” என்று புரோபீர் காழ்ப்பும், விருப்பும் கலந்த அடிக்குரலில் சொன்னார்.

“நம்முடைய மலைமக்கள்” என்று மெல்ல சிரித்தார் பருண்.

ஆசிஷ் அவர்களை வரவேற்பதற்காக வந்தார். அவர் நெருப்பால் சிவந்து, போதையில் பித்தேறி இருந்தார்.

“வாங்க , எல்லாரையும் சந்திங்க” என்று அழைத்தார்.

குழப்பமான அறிமுகப் படலம் நிறைவுற்றது. அங்கிருந்த அலைவுறும் ஒளியில் எவர் முகத்தைக் காண்பதற்கும் இயலவில்லை. யாரும் பெரிதாக கண்டுகொள்ளவும் இல்லை. அந்தக் கூட்டம் ஒரு நிரந்தரமும் இல்லாதது என்பதை அனைவரும் அறிந்துதான் இருந்தனர். அவ்விரவின் பொறுப்பற்ற தன்மையை அது மேலும் கூட்டியது. ஆனாலும்  அனைவரும் அவ்வினிமைக்கு தங்களை முற்றிலும் ஒப்புக்கொடுத்திருந்தனர், அந்தக் கணமே நிஜமென்றும், இனியதென்றும் திளைத்தனர்.

பருண் தன் அதிகார மிடுக்கை விட்டுவிட்டிருந்தார். புரொபீரும் கூட்டத்தில் ஒருவராக இணைந்துகொண்டிருந்தார். கையில் ஒரு பியருடன், இருவரும் தங்களை மறந்து அந்த இனிமையில் முற்றும் கரைந்து போயினர்.

பப்லி நெருப்பருகில் மடித்து இடப்பட்டிருந்த விரிப்பில் அமரப்போய், அனலைத் தாங்க முடியாமல் பின்னால் நகர்ந்தாள். இரு கைகளையும் உரசியபடி சுற்றிலும் நோக்கினாள். ரூபா சற்று தூரத்தில் ப்ளூஸ் இசையை முணுமுணுத்துக் கொண்டிருந்த பாடகர் மீது கண்களை வைத்தவளாக எதையோ மென்றுகொண்டிருந்தாள். அவளருகில் பப்லியின் அன்னை ஒரு அரைப்புன்னகையுடன் அமர்ந்து இருந்தாள்.   பின்னால் நதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட ஏக்கம் ஒன்று அவளுக்குள் கிளர்ந்து எழுந்தது. கூட்டத்தைத் துழாவி ஆசிஷை கண்டுகொண்டாள். ஆசிஷ் தரையில் அமர்ந்திருந்த பீணாவை நோக்கி குனிந்து, அவளுக்கு ஒரு பானத்தை கொடுத்துக்கொண்டிருந்தார். இருவரும் சிரித்துக்கொண்டிருந்தனர்.

இசை மேலும் செறிவுகொண்டது. பாடகர் கூட்டத்தை நோக்கி பாடிக்கொண்டிருந்தார். அவர் பழைய, பிரபலமான பாடல்களை வாசித்தார். அவை அங்கிருந்த அனைவரையும் ஆடவைத்தது. “வேக் அப், லிட்டில் சூஸி, வேக் அப்” என்று பாடத் தொடங்கியதும் ஜோடிகள் அவசரமாக எழுந்து தள்ளாடிக் கொண்டு ஏடாகூடமாக நடனமாடினார்கள். யாரோ அவளுக்கு ஒரு குளிர் பானத்தை வழங்கினார்கள். ஒரு மிடறு விழுங்கிய போது அவள் அறிந்தாள் அதில் ரம் கலந்திருப்பதை. அங்கு உணவு எதுவும் இல்லை – ஒருவேளை உணவு மாளிகையில் பரிமாறப்படலாம். அதைக்குறித்து யாரும் கவலை கொண்ட மாதிரியும் தெரியவில்லை. அவர்கள் பாடியும், ஆடியும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த ஆனந்தமே அவர்களை வேறொரு தளத்திற்கு, ஒரு புதிய உலகிற்கு கொண்டு சென்றுவிட்டிருந்தது. அங்கு அவர்கள் போதையின் பித்தேறி களித்தார்கள். அந்தக் கட்டற்ற களிப்பு மட்டுமே அவர்களுடையது, அவர்கள் விரும்பும் வரை அங்கேயே அவ்வாறே மகிழலாம் என்று எண்ணியவர்கள் போல திளைத்தார்கள்.

பப்லிக்கு அவள் குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. நேரம் பற்றிய உணர்வும் அவளுக்கு இருக்கவில்லை. ஒரு மணி நேரம்தான் ஆகியிருக்கும் என்று நினைத்தவளாக தன் கைக்கடிகாரத்தை பார்த்தவள் மூன்று மணி நேரம் ஆகிவிட்டிருந்ததை அறிந்து கொண்டாள். நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

திடீரென ஆசிஷ் அவளுக்கு அருகே தோன்றியதில் பயந்துபோனாள். அவள் கையிலிருந்த பானம் சிந்தியது.

“ஹே பப்லி!”

ஆசிஷ் அவள் கைகளைப் பற்றி இழுத்து நிறுத்தி திருப்பினார்.

“விடுங்க!” பப்லி அவர் பிடியில் இருந்து வெளிவர தத்தளித்தாள்.

திடீரென “நாம ஒரு வாக் போலாமா?” என்று கேட்டார் ஆசிஷ்.

பப்லி என்ன நிகழ்கிறது என்பதையே அறியாதவளாக சூழ நோக்கினாள். அனைவரும் இசையிலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி இருந்தனர்.

“போலாமே” தன் கையில் இருந்த குவளையை கவனமாக தரையில் வைத்தபடி சொன்னாள்.

அவர்கள் நதியை நோக்கி மெல்ல நடந்தனர். ஆசிஷ் முன்னால் நடந்து வழி காட்டினார். நதியில் இருந்து விரல்போன்று நீண்டிருந்த கரையின் கழுத்தில் படைக்கலம் தாங்கிய காவலர்கள் காவலில் இருந்தனர். அவர்கள் அவளைக் கண்டார்களா என பப்லிக்கு தெரியவில்லை.

நதியை அணுகும்தோறும் குளிர் பெருகியது. வேகமாக காற்று வீசிய போது பப்லி குளிரில் நடுங்கினாள். நிலவு மேகங்களுக்குப் பின் மறைந்துவிட்டதால் வெளிச்சம் குறைவாக இருந்தது. பப்லியின் காலில் அணிந்திருந்த காலணி வெளியில் நீட்டிக்கொண்டு இருந்த வேர் ஒன்றில் மாட்டிக்கொள்ள பப்லி தடுமாறினாள். ஆசிஷ் தன் கைகளை நீட்டி அவளை பற்றிக் கொண்டார். அவளும் அவர் கைகளை பிடித்துக்கொண்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள்.

நதியின் முழக்கம் பெருகியபடி வந்தது. நிலம் மெல்ல சரிந்து கொண்டே சென்றது. பப்லிக்கு பாறையில் நடப்பது சுலபமாக இருந்தது.

இறுதியாக, அவள் நதியை கண்டாள். இருண்டதாகவும், அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அதன் இடிமுழக்கம் போன்ற பேரொலி அவளை பயமுறுத்தியது. அவள் ஆசிஷ் அருகில் நெருங்கிச் சென்றாள். அவர்கள் நடந்து நதியின் விளிம்பிற்கு வந்து சேர்ந்தனர்.

“அழகா இருக்கில்ல?” ஆசிஷ் கேட்டார்.

அவர்கள் தோள்கள் உரச நின்றுகொண்டிருந்தனர். அவரது மூச்சில் ரம்மும், சிகரெட்டும் கலந்த வாசனை வந்துகொண்டிருந்தது. அவள் மூச்சை ஆழ இழுத்தபோது அவர் அவள் கைகளை மெல்ல பிடித்தார். விரல்களுடன் பின்னிக்கொண்டார். அவளும் தன் விரல்களை அவர் கைகளில் எஞ்சவிட்டாள். பின்னர், மிக மென்மையாக அவர் உதடுகளை அவளுடைய கழுத்தில் பதித்தார். பப்லி நடுங்கினாள், அவள் நரம்புகள் சிலிர்த்தன. எங்கோ இருளில் ஒரு இருமல் சத்தத்தை கேட்டாள். அவள் அதை பொருட்படுத்தாமல், தன் அருகில் இருந்த மனிதரைப் பற்றி மட்டுமே எண்ணியிருந்தாள். ஒரு இளம் வெம்மை பிரவாகமாக அவளுக்குள் பொங்கி அவளை மேலும் மேலும் மூழுடித்துவிடுவதுபோல் அச்சமூட்டியது.

பட்டென்று ஆசிஷ் அவளை நிலத்தில் தள்ளினார். அவள் மேல் சரிந்தார். அவரது எடை அவளை பாறையோடு அழுத்தியது. அவள் வாயை தன் வாயால் இறுக்கி, இதழ்களை சுவைத்தார். தன் நாவினை அவள் வாய்க்குள் நுழைத்தார். பப்லி திணறினாள். அடிவயிற்றில் இருந்து ஒரு கிலி படர்ந்தது. அவள் இதழ்களை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ள போராடினாள். அவர் கைகளை அவளது ஜீன்ஸின் இடுப்புப்பட்டியை நோக்கி கொண்டுசென்று உள்ளே நுழைக்க முயன்று கொண்டிருந்தார். பப்லி மூச்சுக்கு திணறினாள், கால்களை இறுக்கி உடலை மூடிக்கொள்ள முயன்றாள். ஆனால் அவளை மற்றொரு கையால் அசைய ஒட்டாமல் பற்றிக்கொண்டிருந்தார் ஆசிஷ். கண்களில் நீர் பெருகி அவள் முகத்தில் வழிந்தது. அம்மனிதரின் பேரெடை அவளை அசையவிடாமல் அழுத்தியது, ஆனாலும் தன் முழு பலத்தாலும் அவரை தள்ள முயன்றாள்.

சட்டென்று ஒரு புதிய உணர்வொன்று அவள் பிரக்ஞையை ஊடுருவியது. கூரிய கொடுமையான வாசனை – அவள் அறிந்த ஒன்றல்ல என்றாலும், அது அச்சமூட்டியது. தலையைத் திருப்பி, அவள் கண்ட காட்சி அவள் எலும்பையும் உருகச் செய்தது. ஒரு இருபத்தைந்து அடி தூரத்தில் நதியில் ஒரு பெரிய புலி. அவர்களை அறியாது, நதியில் நீர் அருந்திக்கொண்டிருந்தது. ஆசிஷும் அந்த வாசனையை அறிந்து, பப்லியிடம் இருந்து உருண்டு விலகி அவளை அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்தார். நிலவு மேகத்திரையில் இருந்து விலகி வெளியே வந்து, புலி தன் பரிபூரண கம்பீரத்துடன் அங்கு நின்றிருந்ததை காட்டியது. மிகப்பெரியது, வலிமையானது, அதன் ஒளிரும் மேற்தோலுக்குக் கீழ் உடற்சதைகள் முறுகி இருந்தன. பப்லி அசைவற்று நிலைகுத்திக் கிடந்தாள், காற்றின் திசை மாறிவிடக்கூடாது என்று பிரார்த்தித்தவளாக.

விலங்கு தன் வயிற்றை நீரால் நிறைத்தபின், இருண்ட காட்டுக்குள் தாவி மறைந்தது.

ஆசிஷ் பப்லியை எழுப்பி உட்கார வைத்தார். கண்களை பப்லியின் முகத்தில் இருந்து விலக்கி அவள் காலடியில் இருந்த நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தார். “நீ பங்களாவுக்கு போயிடறது நல்லது” என்றார் “உன் அப்பா அம்மா கேட்டா உனக்கு உடம்பு சரி இல்லனு நான் சொல்லிடுறேன்.” சுற்றும் பார்த்துவிட்டு “சீக்கிரம்” என்றார்.

அவர்கள் நதியிலிருந்து பங்களாவுக்குச் செல்லும் படிகளின் அருகில்தான் இருந்தனர். துரிதமாக அவளை மேலே இழுத்துக் கொண்டு வந்து விட்டு விட்டு, தாழ்வாரத்தின் அடியிலேயே நின்று விட்டார் ஆசிஷ். “பார்ப்போம் என்றவர் படிகளில் நடந்து மறைந்தார்.

பப்லி தடுமாறியபடி படிகளில் ஏறினாள். கண்களில் நீர் பெருகி மறைத்தது.

அவள் அறை இருண்டிருந்தது. அவள் மூட்டுக்கள் பலகீனமாகி விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. அவள் அடிவயிறு நிறைந்து முட்டிக்கொண்டு வந்தது. தவழாக்குறையாக குளியல் அறையில் நுழைந்ததும், தொண்டையில் பித்த நீர் பெருகி குமட்டியது. குமட்டியபடி பிசு பிசுத்து கொழ கொழப்பாக ரம்மும், குளிர் பானமும் கலந்த கரிய திரவத்தை உமிழ்ந்தாள்.

படுக்கை அறைக்கு வந்ததும் தன் கண்களை இருளுக்கு பழக விட்டு நின்றாள். திடுமென்று ஜன்னல் அருகில் ஒரு அசைவைக் கண்டதும், அவள் பயத்தில் உறைந்து போனாள்..

“யாரது?” பயத்தில் வறண்ட குரலில் கேட்டாள்.

“நான்தான் ரூபா” ரூபாவின் மென்குரல் ஒலித்தது.

பப்லி சாளரத்தின் அருகில் சென்றாள். ரூபா அழுதுகொண்டிருந்தாள். பயத்தால் வெளிறிய முகத்தில் கண்ணீர் வழிந்திருந்தது. மூக்கும் ஒழுகியிருந்தது.

“ஏன் அழுற? என்ன நடந்துச்சு?” பப்லி கேட்டாள்.

ரூபா முகம் சுளித்தவளாக “வேற என்ன? என்னைத்தவிர எல்லாரும் சந்தோசமா இருக்கீங்க. அப்பாவும், பருண் மாமாவும் எங்கயோ போய்ட்டாங்க. ரூபி அத்தையம் பாடிக்கிட்டு இருக்காங்க… அப்புறம் அந்த அழகர் போனவுடனே என் அம்மா ஒரு காசி பயணிகிட்ட ஒட்டிகிட்டார். உன்னையும் காணல, பசங்களையும் காணல. நான் வரும்போது அம்மா அந்தாள் மடியில உட்கார்ந்துட்டு இருந்தாங்க. உடனே நான் கிளம்பி வந்துட்டேன்.”

மூக்கை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். பின்னர் ஒரு வெற்றிப் பூரிப்பு அவள் கண்களில் ஒளிர “ஒரு விஷயம் தெரியுமா” என்று குரலை இறக்கி “நான் புலியப் பார்த்தேன்” என்றாள்.

பப்லி அசையாமல் இருந்தாள்.

ரூபா அவளிடம் குனிந்து “ரொம்ப அழகா இருந்தது இல்ல, பப்லி?” என்றாள்.

பப்லி தன் முகத்தை மறுபுறமாக திருப்பிக்கொண்டாள். அவளுக்கு தொண்டை அடைத்துக்கொண்டு, மூச்சு திணறுவது போலத்தோன்றியது.

 

தமிழில் சுந்தரவடிவேலன்

ஒரு குளிர்கால தீ – ஜானவி பருவா

தேசபக்தர்- ஜானவி பரூவா.

பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா

‘விழிப்பு’- ஜானவி பரூவா

முந்தைய கட்டுரையாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா:வாழ்த்துக்கள்