ஒரு குளிர்கால தீ – ஜானவி பருவா

 

 

மிகப் பிந்தி, அதிர்ச்சி வடிந்த பிறகு, அப்பாதகம் மெல்ல மறைந்துபோனப்பின்னர், ஓயாத வம்புப்பேச்சுக்களெல்லாம் அவ்விழிநிகழ்வைப் பேசிப் பேசித் தளர்ந்தபின்னர்  மா ஒரு தகரப் பெட்டியில் போட்டு வைத்திருந்த கறுப்பு வெள்ளை புகைப்படங்களை துழாவிக்கொண்டிருந்தேன். அவள் அவற்றை காலக்கணக்கின்படி அடுக்கி ஒரு நீல நிற சாட்டின் ரிப்பனைக்கொண்டு கட்டி வைத்திருந்தாள். அந்தக்கால மா அப்படித்தான். எல்லாவற்றையும் அதனதனிடத்தில் அடுக்கி பட்டியலிட்டு, முடிந்தால் ஒரு வண்ணமான சாட்டின் ரிப்பனைக்கொண்டு கட்டி வைத்திருப்பாள்.

 

ரிப்பனை கழட்டினேன். சீராக முடிச்சை அவிழ்த்தேன் ஒப்புக்கொள்ள விரும்பியதைவிட நான் என் அம்மாவைப் போன்றவன்தான் – படங்களை வரிசையின்றி எடுத்தேன். முதல் படத்தைக் கவனத்துடன் எடுத்துக்கொண்டேன் (நல்ல துவக்கமாயிருந்தால் அதற்கு எளிதில் திரும்பிவிட முடியும்) மற்றவற்றை காரணமில்லா காரணங்களுக்காக எடுத்தேன். ஒன்று நீண்டிருந்தது என்பதால் எடுத்தேன், வேறொன்று இருப்பதிலேயே பெரியது என்பதால், இன்னொன்று ஓரமாய்க் கிழிந்திருந்தால் எடுத்தேன். எல்லா படங்களிலும் புரியின் நிலாமுகம் பாவங்களின்றி இருந்ததைக் கவனித்தேன்.

 

ஹஃப்லாங்கின் பழைய பங்களாவின் கல்படிகளில் எடுக்கப்பட்டிருந்த முதல் புகைப்படத்தில் அவள் தயக்கத்துடன் என்னை விறைப்பாக, தன் வலுவான கைகளில் ஏந்திக்கொண்டிருந்தாள். எங்கள் குடும்பத்துக்கு அப்போது அவள் புதிதுதான். மூன்றுமாதங்கள் இருக்கும். அந்த சங்கடம் தெளிவாய்த் தெரிந்தது. பைடியோ(அக்காள்)  அப்போது ஒரு மூன்றுவயதுக் கொழுகொழு பெண், கறுத்த வணங்காமுடி அவளது உருண்ட கண்ணை மறைத்தது. அவள் புரியின் முட்டியை அணைந்து நின்றிருந்தாள். மா, ஒல்லியாய் வடிவாய், மெலிந்த கைகளில்  அவளது முந்தானையை இறுகப்பிடித்துக்கொண்டிருந்தாள், கூந்தலைச் சுருளாக்கிய கொண்டை, எங்களுக்கு ஒரு படி மேலே நின்றிருந்தாள். டெயுட்டா, கறுப்பாய் அழகாய், இறுக்கமாய், கறுத்த சூட்டில், அவளுக்கருகே பாதுகாவல் போல நின்றிருந்தார்.

 

ஹஃப்லாங்கில்தான் புரி எங்களுடன் வந்து சேர்ந்தாள். டெயுட்டாவின் அலுவலகப் பியூன், உள்ளூர் டிமாசா(பழங்குடி இனம்), அவளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார், இறந்து போன அவரது சகோதரியின் மகள். அவளது வீட்டில் மூன்று இளையக் குழந்தைகள் இருந்ததால் தந்தை அவளை வேலைக்கு அனுப்ப விரும்பினார். மா, மக்களை நன்றாக அளவிடுபவள் எனவே அமைதியான அவளை என்னைக் கவனிக்கும்படிக்கு பணியமர்த்தினாள்.  அது எளிதான வேலை அல்ல, நான் அதிக தேவைகள் உள்ளக்  குழந்தையாக இருந்தேன். அப்போது என்னை ‘செல்லம்’ என்பார்கள்.

 

புரி  என்றால் ‘வயதானப் பெண்’  என்று அர்த்தம், அப்படித்தான் அவளை அழைத்தனர். அவள் பெயரே அதுதானா எனத் தெரியவில்லை, அசாமில் இளம் பெண்களை பிரியத்துடன் புரி என அழைப்பது வழக்கமே. பையனை புரா  என அழைப்பார்கள், வயதான ஆண் என்று அர்த்தம். நான் கத்தினாலும், அழுதாலும் அடிக்கடி சேட்டைகள் செய்தாலும் அவள் கவலைப்படவேயில்லை. அவள் ஏற்கனவே மூன்று குழந்தைகளை கவனித்த பழக்கமுடையவள். நான் அடங்கும்வரை பின்பக்கம் துணியில் என்னைக் கட்டிவைத்துக்கொண்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

 

இரண்டாவது படத்தில் அவள் இறுக்கமின்றி இருந்தாள். கண்ணில் சூரியன் ஒளிர்கிறது. – நாங்கள் எங்கள் ஷில்லாங் தோட்டத்திலிருக்கிறோம் – அவளது கை கண்ணுக்கு நிழலாய் வைக்கப்பட்டிருக்கிறது   அவள் என்னை கவனித்துக்கொண்டிருக்கிறாள். இப்போது எனக்கு மூன்று வயது. மூன்று சக்கர ‘சைக்கிள் புயல்’. அவள் என்னை எப்போதும் கவனித்துக்கொள்ள வேண்டும். நான் நீண்ட சரிவில் சறுக்கி விழுந்து மலைச்சரிவிலிருந்த ஓடையில் விழுந்து செத்துபோய்விடாமல் கண்காணிக்கவேண்டும்.

 

கடைசி  படத்தில்  அவளை பருத்திருந்தாள், ஒல்லியாயிருந்த அவளது உடலை கட்டுமஸ்தான தசை சுற்றியிருந்தது. அவளது சக்திவாய்ந்த கால் எனக்கு நினைவிருக்கிறது பைடோவுடைய, மாவுடைய மெலிந்த கால்களைவிட அவை மிக வித்தியாசமானவை. இங்கே அவள் நின்றுகொண்டிருந்தாள். வெளிச்சுவற்றைச் சுற்றியிருந்த உலோக வேலியில் சாய்ந்திருந்தாள், அவள் பின்னால் ஆறு இருக்கிறது, பிரம்பபுத்திரா, பரந்து கம்பீரமாய்.. சரைகாட் பாலம் அதைக் குறுக்கிடுவதற்கு சற்று முந்தைய வளைவு. வழக்கமாக உணர்வுகளற்ற அவளது முகத்தில் சிறு புன்னகை. ஒருவேளை புகைப்படம் எடுப்பது நானாக இருப்பதாலிருக்கலாம், அவள் தன் பையனை சந்தோஷப்படுத்த விரும்பியிருக்கலாம். கவுகாத்திக்குச் சென்றபோது எனக்கு வயது ஒன்பது. சந்தோஷமான நாட்கள். நாங்களெல்லோருமே அந்த ஆறு வருடங்களும் காரணமேயில்லாமல் சந்தோஷமாயிருந்தோம். ஒருவேளை கீழிருந்த ஆற்றினால் இருக்கலாம், எங்கள் ஒவ்வொருவருக்கும்  வெவ்வேறு வழிகளில் அது எழுச்சியூட்டியது.

 

ஆற்றின் விரிவையும் நில்லாத அசைவையும் நான் காதலித்தேன். இந்த இடத்தில் பிரம்மபுத்திரா கடல்போல விரிந்திருந்தது, சுட்டெரிக்கும் சூரியன் நீராவியை விலக்கியபின்னரும் அதன் எதிர்கரையும்  அதன் நீல மலைகளும் கலைந்த கோடுகளாகாவே தெரிந்தன. பின்வராந்தாவிலிருந்து பார்த்தால் அதைக்  கடல் என்றே நாம் கருதிக்கொள்ளலாம். குளிர்காலத்தில் மணல் திட்டுக்கள் அதில் தோன்றின. சார் என அவற்றை அழைப்பார்கள். படகுகளில் சிற்றுலா உணவுகளோடு அத்திட்டுக்களுக்குச் செல்வோம். சுற்றிலும் விரையும் நீர், மெல்லிய சாம்பல் நிற மணல் என் கால்களிலிருந்து உதிரக்  காற்றை எதிர்த்து நான் நடப்பேன், நீர்க்காகங்கள் நாரைகளின் சத்தங்கள் என் காதுகளை நிறைத்திருக்கும். பின்னர் ஒருபோதும் உணராத விடுதலையை நான் உணர்ந்தேன்.

 

ஆறு அசைந்துகொண்டேயிருந்தது, அதன் கருநீல கலங்கிய நீர் ஓயாமல் அலைந்துகொண்டிருந்தது. கீழிறங்கி ஓடி வங்கதேசத்தின் சமவெளிகளில் பாய்ந்து அயர்ந்து ஓய்ந்து கடலில் விழுந்தது. அதன் வெள்ளி நீரில் அது பலவற்றையும் தாங்கிச்சென்றது, படகுகள் நிச்சயமாய்,  கடுமையான கறுத்த ஒடுங்கிய படகுகள், அதிகமாய் முண்டுடுத்திய மீனவர்கள் ஓட்டிய மீன்பிடிப்படகுகள். நாங்கள் லாஞ்ச் என்றழைத்த சற்று பெரிய படகுகள்-டெயுட்டாவின் பயன்பாட்டுக்கென்று ஒரு லாஞ்ச் இருந்தது – தட்பவெப்பத்தால் பழுதடைந்த, சுடும் வெயிலில் வெளிறிய படகுகள். பொதுபோக்குவரதுதுக்கான மேலும் பெரிய படகுகள் மெதுவாக அசைந்து அசைந்து கறுப்புப் புகையை உமிழ்ந்தபடி பெருவாரியான மக்களை கரைக்குக் கரை கொண்டு சென்றன.  நல்லவேளையாக படகுத்துறை எங்களிடமிருந்து ஒரு மைல் தள்ளியிருந்தது, பரபரப்புக்களெல்லாம் எங்களைவிட்டுத் தள்ளியேயிருந்தன.

 

வேறு சில மிதவைகளும் ஆர்வமூட்டின – எங்கோ செல்ல விரையும் ஆகாயத்தாமரை, அவ்வப்போது விலங்குகளின் சடலங்கள், வழக்கமாகத்  தலைகீழாய் மிதக்கும் உடலுடன் உப்பிய வயிறு மேலிருக்க பசு மிதக்கும், அதன் கைகால்கள் வான் நோக்கி வேண்டுதலில் நீண்டிருக்கும். ஆற்றைச்சுற்றி ஏதோ ஒன்று எப்பொதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும், வருவதும் போவதும், பரபரப்புடன் இயங்குவதும், எல்லா நிகழ்வுகளையும் நான் தின்றுச் செழித்தேன், பயணங்கள் மீதான என் இச்சை அங்கேதான் கிளர்ந்திருக்க வேண்டும்.

 

காலைகளில் மீன்பிடிப் ப்டகுகள் எங்கள் படித்துறையை சூழ்ந்தன. மீனவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். ஒருவர் இன்னொருவருக்கும் மேலாக சப்தமும் புத்திக்கூர்மையும் கூட்டிப் பேசினர். அவர்களுக்குத் தெரியும் புரி தன்னை சிரிக்க வைப்பவர்களையே தேர்ந்தெடுப்பாள். முதல் அழைப்பைக்கேட்டதுமே புரி எல்லாவற்றையும் விட்டுவிட்டு மூங்கில்கூடையை எடுத்திக்கொண்டு கிளம்பிவிடுவாள். மா தோட்டத்தில் தோட்டக்காரருக்கு வேலைகொடுத்துக்கொண்டிருப்பாள், ஒரு சுருள் ரூபாய் நோட்டுக்களை புரியிடம் தருவாள் அவள் அதை ரவிக்கைக்குள் வைத்துக்கொள்வாள். பின்னர் படிக்கட்டை மறைத்து நின்ற வெளிக்கதவைத் திறந்துவிட்டு அதிவேகமாகப் படிகளில் இறங்கி ஓடுவாள்.

 

படிகளில் ஓடுகையில் அவள் முகம் மகிழ்ந்திருந்ததைக் காணமுடிந்தது, ஆனால் அவள் சிரிக்கவில்லை. மீனவர்களுடன் பேரம் பேசுகையில் அவள் குரலில் சிரிப்பு தென்படும். அலைந்து திரியும் ஒரு கடற்கன்னியைப்போல படிக்கட்டுக்களில் அவள் ஏறி வருவாள், நீண்ட கூந்தல் இடுப்புவரை நீண்டு கிடக்கும், முகம் நீர்த்திவாலைகளால் மினுங்கிடும. வெள்ளி மீன்கள் நிரம்பிய கூடையை பரிசுக்கோப்பையைப்போல ஏந்தி வருவாள்.

 

ஆறு எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழமான அர்த்தம் கொண்டதாயிருந்தது, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக, அதனால்தான் ஓய்வுற்றபோது டெயுட்டா தனக்கென ஒரு வீட்டை பிரம்ம புத்திராவை நோக்கியிருந்த குன்றின் தோள்களில் கட்டிக்கொண்டார். பழைய பங்களாவிலிருந்து சற்று தொலைவுதான், மூன்று மைல்களிருக்கலாம், ஆனால் அது அந்த அன்புக்குரிய ஆற்றை நோக்கியே அமைந்திருந்தது, சூரியன் மறைகையில் சரைகட் பாலம் நிழலாக நின்றுகொண்டிருந்தது.

 

புகைப்படங்கள் இப்போது மாவின் பெர்சிய தரைவிரிப்பில் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை எடுத்து சீட்டுக்கட்டைப்போல கலைத்தேன். இப்போது நான் எல்லா படங்களிலும் புரியின் முகத்தை மட்டுமே தேடிப்பார்த்தேன், பின்னணியிலுள்ளவற்றையும், தடைபோடும் நியாபகங்களையும் சட்டைசெய்யவில்லை. அவளது வட்ட முகம் ஆண்டுகள் செல்லச் செல்ல முழுமையை எட்டியிருந்தது, துவக்ககாலப் படங்களில் அவள் தோல் மிருதுவாகவும், கோடுகளற்றுமிருந்தது ஆனால் விரைவிலேயே, ஷில்லாங் நாட்களிலேயே, – அப்போது அவளுக்கு இருபத்திநான்குதான் இருக்கும் – சிறு சிறு கோடுகள் தென்பட ஆரம்பித்தன, அவள் எப்போதும் முகத்தை சுழித்திருப்பது போலவோ, அல்லது சுட்டெரிக்கும் சூரியனை தவிர்ப்பதுபோலவோ தோன்றும். பார்க்கப் பார்க்க எனக்கு அவள் முகம் பாவமற்றதாக அல்லாமல், ஏதோ வெடித்துக்கிளம்பும் உணர்வுகளை அடக்கிவைத்திருக்கும் ஒன்றாகவே தோன்றியது. அவள் தந்தை அவளை காணவராதது அவளுக்குக் கோபத்தைத் தரவில்லையா என ஒருமுறை அவளைக் கேட்டது நியாபகத்து வந்தது, இரு வருடங்களுக்குப் பிறகு அவர் யாரையாவது அனுப்பி சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டார், அவள் கதறி அழுதுவிட்டாள், கண்ணோரம் காத்திருந்ததைப்போல கண்ணீர் உருண்டோடியது. ஒரு கணத்துக்குப்பின் முகத்தை துடைத்துவிட்டு ஒப்பில்லாத அவளது கொச்சை அசாமியாவில், மரியாதைப் பன்மைகளுக்கு மதிப்பளிக்காமல் எல்லோரையும் மொத்தமாக நீ எனக் குறிப்பிட்டு ‘இருக்கட்டுமே, நீதான் என் குடும்பம் இப்ப’ என்றிருந்தாள்.

 

அப்போது புரி மீது தீவிர நேசம் என்னுள் உருவாகியிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்தவற்றை எதிர்கொள்ளக் எனக்குக் கடினமாயிருந்தது, இயலவில்லை என்றே சொல்லலாம். அவளது பக்கத்துவீட்டுக்காரர்கள் சொன்னது உண்மையென்றால், என்னை என் தாயைவிட அன்புடன் வளர்த்த இந்தப் பெண் தன் கணவனின் காதலியின் தலையை  தன் அரிவாளின் ஒரே வீச்சில் துண்டாக்கிவிட்டு தன் கணவனின் தலையையும் ஒரு இழை தோலில் அது தொங்கும்படி வெட்டி அவளும் தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்துக்கொண்டாள்.

 

புரி இறந்த நாளில் மா மான்செஸ்டருக்கு தொலைபேசியில் அழைத்து என்னுடன் பேசினாள். பின்மாலை நேரம். நினைவிருக்கிறது; பின் அறையில் மின்னடுப்பு எரிந்துகொண்டிருந்தது, வெளியே வானம் கறுத்தும் நடுங்கும் நட்சத்திரங்களுடன்  கீழிறங்கியுமிருந்தது. ரெபெக்கா வீட்டுக்கு வந்திருக்கவில்லை.

 

மாவின் குரல் அடிக்கடி தேய்ந்து தொனித்தது, இணைப்பு சரியில்லாமலிருந்திருக்கலாம், அல்லது அவள் தாங்கமுடியாத துக்கத்தின் எல்லையில், மனவருத்ததில் இருந்திருக்கலாம். சாதாரணமாகச் சொன்னாள் – நாடகத்தன்மைக்குப் பெயர்போனவளல்ல  மா- புரிக்கு விபத்தாகிவிட்டது, தீவிர தீக்காயங்களால் அவள் நல்ளிரவில் இறந்துபோனாள். மா கடைசி நேரத்தில் புரியுடன் இருந்தாள், புரிக்கு அது தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை, அவள் இறப்பதற்கு முன்பு எதுவும் சொல்லவுமில்லை.

 

நான் உடனடியாகக் கணக்கிட்டேன், கவுஹாத்தியில் அதிகால ஒரு மணி இருக்கும் மா அப்போதுதான் புரியை விட்டு வந்திருக்க வேண்டும்.

 

மாவின் குரலில் ஒரு இடைவெளி வந்தது பின்னர் அவள் பேசினாள் அப்போது அவள் குரலில் ஒரு நடுக்கம் தோன்றியது, அவளை எட்டிப்பிடித்து அணைத்துக்கொள்ளும் எண்ணம் என்னுள் வலியாக ஊறிட்ட்து. அவள் சொன்னாள் ‘ஜீத், இன்னும் ஒண்ணு இருக்கு. புரி தற்கொல செஞ்சுகிட்டா… அவ புருஷனையும் கள்ளக்காதலியையும் கொன்னுட்டான்னு எல்லாரும் பேசிக்கிறாங்க’.

 

என் கால்களுக்குக் கீழ் பூமி அதிர்ந்தது. நான் பேச்சற்றுப் போனேன், வார்த்தைகளுக்குத்  தடுமாறினேன், கண்ணீர் கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் கொட்டியது, மா பொறுமையுடன் எதிர்முனையில் காத்திருந்தாள். அவள் குழம்பியிருக்க வேண்டும், ஒரு வருடம் முன்பு காலை நடையை முடித்து வந்து சில நிமிடங்களுக்குப் பின் தீவிர இதய வலியல் டெவுட்டா இறந்துபோனபோது நான் இப்படி அழுதிருக்கவில்லை. ஒருவேளை கட்டுப்பாடுகளையுடைய மா அங்கிருந்ததால் இருக்கலாம், அல்லது ஒருவேளை அவரைப்பொறுத்தவரைக்கும் சட்டென்று  நொறுங்கிப்போன கனவுகளைக்குறித்து நான் துக்கம் கொள்ளத் தேவையில்லாமலிருந்திருக்கலாம். அவர் ஓரு நிறைவான வாழ்வை வாழ்ந்திருந்தார், வேலையிலும் நிறைவு, மனைவி மக்களிலும் நிறைவு, பைடியோ நல்லபடியாகத் திருமணம் முடித்திருந்தாள், கிளாஸ்கோவில் அவள் கணவன், சந்தன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருந்தாள். நான், நான் ஒன்றும் மோசமாக வந்துவிடவுமில்லை.

 

ரெபெக்கா வீடு வந்து சேர்ந்தபோது  நான் குழம்பி தவித்திருந்தேன். நாங்கள் ஜமேக்காவிலிருந்து வாங்கி வந்திருந்த ரம் போத்தலை எடுத்தாள், அதை கிட்டத்தட்ட முழுவதுமாக அருந்தின்விட்டு வரவேற்பரை தறை விரிப்பிலேயே மயங்கிக்கிடந்தோம்.

 

காலையில் மிக மோசமான பின்போதையுடன் தடுமாறி அறைவிட்டு அறை சென்று எங்கே நிம்மதியாக இருக்க முடியுமென்று தேடிக்கொண்டிருந்தேன். ரெபெக்கா வேலைக்குச் செல்லும் முன் வெப்பத்தைக் குறைத்துச் சென்றிருந்தாள். குளிர் வீட்டை ஆக்கிரமித்திருந்தது. புரி குறித்த நினைவுகள் என்னுள் முளைத்துக்கொண்டேயிருந்தன, அவள் என்னைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த  அர்த்தமற்ற உணர்வுபூர்வமான விஷயங்கள் எதிர்பாராவிதத்தில் என்னை உள்ளூர வெதுவெதுப்பாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்திருந்தன. உதாரணமாய் ஒவ்வொரு பரிட்சைக்கும் அல்லது நேர்காணலுக்கும் முன்பும் எண்ணை விளக்கை ஏற்றச் செய்வது. அவள் திரிநெருப்பைக் கொண்டு முடிவை கணித்துவிடுவாள். அவள் ஒரு ஆரூடக்காறி, ஒவ்வொருமுறை திரி வலிமையுடன் எரியும்போதும் என் பணி வெற்றியடையும் என்று கூறிவிடுவாள். அவள் எனக்கென்று தனிப்பட்ட முறையில் செய்து, ஒரு பழைய தகரடப்பாவில் ரகசியமாய் மறைத்து வைத்து எனக்கு அதிக ஆறுதல் தேவைப்படும் நேரம் என்று அவள் கருதியபோதெல்லாம் தந்த லாருக்கள்(தேங்காய் லட்டு). அவற்றின் மதுரமான முறுமுறுப்பு விரைவிலேயே பல்கூசும் இனிமையாக உருகிவிடும். அதுவும் என்னைச் சுற்றி இறுக்கும் அவளது கைகள் எப்போதும் என்னை ‘எல்லாம் நன்றே’ என்று நினைக்கச் செய்யும்.

 

கடந்த வருடத்தில் நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை, புரியும் நானும்; என்னை ஒரு புத்தகத்தைப் போல அவளால் வாசித்துவிட முடியும், இப்போது அவளது வாழ்க்கை குறித்தத் தேர்வு எனக்கு கோபத்தையும் அவச்சுவையையும் தந்ததை அவள் உணர்ந்திருந்தாள். இப்போது அவளது அருகில் அமர்ந்து என் தலையை அவள் மடியில் இன்னும் ஒரு முறை வைத்துக்கொள்ள ஏக்கம் என்னை ஆக்கிரமித்துவிட்டது. என்னக் குழந்தைமையிலிருந்து ஆண்மைக்கு நிலையான அன்புடன் நடத்திச்சென்ற அவள்மீது எனக்கிருந்த கடைசி உணர்வு கோபம் என்பது இப்போது தாங்கமுடியாததாயிருந்தது. நாங்கள் கடைசியாக சந்தித்த தருணத்தில் இந்தக் கசப்பான கோபத்தை அவள் மீது காட்டுவதில் எனக்குக் கவலையிருக்கவில்லை. கோபத்துடன் கத்தி கூப்பாடிட்டேன், அவள் தன் தைரியமானகுணத்தைவிட்டு அடங்கி நின்றது என் கோபத்தை மேலும் வளர்த்தது, அவளை நான் அறிந்திருக்கவில்லை என்றே உணர்ந்தேன். என் முன்னால் நிற்பது அறிமுகமற்ற ஒருத்தி, அந்த அந்நியள் மீது எனக்கு எந்தக் கருணையுமிருக்கவில்லை.

 

திடீரென எனக்குள் பைடியோவைக் காணும் ஆர்வம் எழுந்தது. அதுதான் வேண்டும். கிளாஸ்கோ சென்று  அவளுடன் சில நாட்கள் தங்க வேண்டும். பரபரப்புடன் ரெபெக்காவை பயிணிடத்தில் அழைத்தேன். சிறிய எரிச்சலுடன் என்னை இரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தாள். விரைவாக தேவையானவற்றை பையிலடைத்தேன். கிளாஸ்கோவிற்கு அடுத்த இரயில் எப்போது என்று எனக்குத் தெரியாது. முன்பு நாங்கள் கிளாஸ்கோவுக்கு காரில்தான் சென்றிருந்தோம். மெதுவான, பரபரப்பற்ற பயணங்கள், அமைதியான நாட்டுப்புறங்களின் வழியே, அவை ஸ்காட்லாந்தை அடையும்போது கடுமையானவையாக மாறியிருந்தன. அது முக்கியமில்லை, பிக்கடெலியில் நான் ரயில் நேரத்தை  தெரிந்துகொள்ள முடியும்.

 

அவசரமான பயணத் தயாரிப்புக்கள் முடிகையில் மணி பதினொன்றாகியிருந்தது. தாமதித்துத் தோன்றினாலும், நான் பைடியோவை அழைக்க முடிவு செய்தேன்.

 

அவள் இரட்டையர்களை மதிய உணவுக்குத் தயார் செய்துகொண்டிருந்தாள். என் குரலைக் கேட்க மகிழ்ச்சியுற்றவளாய் தொனித்தாள் – எவரின் குரலைக் கேட்கவும் அவள் விருப்பத்துடனேயிருந்தாள் – நான் மாலை வந்து செர்வேன் எனக் கேட்டால்! பின்னர் பழக்கமில்லாத ஒரு கவலை அவளது மெல்லிய குரலில் குடிகொண்டது ‘மா உனக்கு ஃபோன் பண்ணிணாளா? புரி பத்தி தெரியுமா?’ அவள் கேட்டாள். எனக்குத் தெரியும் ஆனால் அவள் கவலை கொள்ள வேண்டாம் என்றேன். ஒரு இடைவேளைக்குப் பின் அவள் உற்சாகமானக் குரலில் ரீனா ஹைலாண்ட் நடனப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறித்துச் சொன்னாள். ‘அவள ஏற்கனவே கையில பிடிக்க முடியாது, இதுவுமா!’ நான் விளையாட்டாகச் சொன்னேன் இருவரும் சிரித்தோம்.

 

பேசியபிறகு எனக்கு ஆறுதலாயிருந்தது. சுட்ட சாஸேஜும் நெய்தடவிய ரொட்டித்துண்டும் சேர்த்து மதிய உணவை எடுத்துக்கொண்டேன்.

 

மதியம் ஒருமணிக்கு ரெபெக்கா வெளியிலிருந்துகொண்டு உரக்க ஹாரன் சப்தமெழுப்பினாள். பையை எடுத்தொக்கொண்டு முன்கதவை வேகமாக அடைத்துவிட்டுக் கிளம்பினேன். நான் அதை வேகமாக அடைத்ததால் ரெபெக்காவின் முகம் பாவமற்றிருந்தது, அவளுக்குப் பிடிக்காதவை நிகழும்போது அப்படித்தான் இருக்கும்.

 

ரெபெக்க பேரழகி; என் வாழ்க்கையில் வந்த பிற பெண்களைப்போல கனிவானவளோ அடங்கியவளோ அல்ல ஆனால் பெரும்பேரழகி. நான் ஆறு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் அவளை சந்தித்தபோது அவள் எப்படி என்னைக் கவர்ந்திருப்பாள் என்று என்னால் யூகிக்க முடிந்தது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவளது சமரசமற்ற நேரடியான தனித்த குணமுடைய பெண்குணம் வெளிவர ஆரம்பித்தது. அவள் இன்றும் அழகாகத்தான் இருந்தாள், கழுத்துவரை நீண்ட கால்கள், தலைக்கவசம்போல கச்சிதமாக வெட்டப்பட்ட வெளிர் முடி, அவள் ஆண்களின் கனவுக் கன்னி. ஆனால் சில நாட்களாக உண்மையிலேயே அவள் என்னவள்தானா என நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவள் பொறாமைகொண்டிருந்தாள், ஆழத்தில் பெண்மையின் ஆறாம் உணர்வு நாங்கள் கலங்கிய நீருக்குள் காலடியெடுத்து வைப்பதை எச்சரித்திருக்கக்கூடும், அவளது பொறாமை பன்பத்துமடங்காகி, மிக அதிர்ச்சியான் அளவுகளுக்குச் சென்றது. சில நேரங்களில் அவளது அசட்டுத்தனம் இழிநிலைகளுக்குச் சென்றது, அக்டோபரில் நாங்கள் மதர்வெல்லுக்கு பைடியோவையும் குழந்தைகளையும் காணச் சென்றிருந்தோம். சந்தன் எங்களை ஒரு விலைகூடிய இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தான். ரெபெக்கா அங்கிருந்த சிவப்பு ஒஉயினை அளவுக்கதிகமாக குடித்துவிட்டு சகிக்கமுடியாதபடி நடந்துகொண்டாள். எப்போதும்போல அவளது குறி பைடியோவின் மேல் இருந்தது. நான் அவளை பைடியோ என்று (செல்லமாக) அழைப்பதை அவள் பிடித்துக்கொண்டது நினைவுள்ளது ‘நீ ஏன் எங்க எல்லாரப் போலவும் அவள லீனாண்ணு கூப்பிடக்கூடாது?’ அவள் சீறினாள் ‘இந்த ஆசிய ஆம்புள்ளைங்களுக்கெல்லாம் சகோதரி பிரச்சனை ஒண்ணு ஒட்டிகிட்டிருக்கு, கூடவே அந்தப் பழைய அம்மா பிரச்சனையும்’

 

பைடியோ வெட்கப்பட்டாள் சந்தன் வேறெங்கோ திரும்பிக் கொண்டான்.

 

என் எண்ணத்தைப் புரிந்துகொண்டவளைப்போல ரெபெக்கா சொன்னாள் ‘நீ ஏன் ஏதாவது நடக்கும்போதெல்லாம் ஒன் பாசமான தங்கச்சிகிட்ட ஓடிப்போகணும்னு எனக்குத் தெரியல’ என்றாள்.

 

நான் பொறுமையுடனிருந்தேன் ‘நான் ஓடிப்போகல பாக்கத்தான் போறேன்’.

 

‘ஓ அப்படியா? உனக்கு என் வீட்டு ஆட்கள பாக்கப்போகணும்னு தோணியதே கிடையாதே’

 

இது அயற்சியூட்டியது. ‘ஏண்ணா ஒன்னோட வீட்டுக்காரங்களுக்கு வெள்ளையனில்லாத ஒருத்தன் தன்னோட வீட்டு சாப்பாட்டு மேசையில உக்காந்திருக்கிறது பிடிக்காது.’ நான் அழுத்தத்துடன் சொன்னேன்.

 

அவள் பதில் சொல்லவில்லை ஆனால் கார் திணறும்படி வேகமெடுத்தாள். ஓல்ட் டிராஃபர்ட் எங்கள் வலதுப்புறம் இருக்கும் சாலைக்கு வந்தோம், ரெபெக்கா சாலை நெரிசலுக்குள் பின்னல் பின்னிக்கொண்டிருந்தாள். என்னை சண்ண்டைக்கு தள்ளிச்செல்ல அவள் எண்ணியிருந்தால் அது தவறானது, சத்தம்போடும் போட்டி ஒன்றுக்குத் தேவையான சக்தி என்னிடமில்லை.

 

பிக்கடெல்லி ரயில் நிலையத்தில் கிளாஸ்கோ செல்லும் வண்டிக்கு இன்னும் இரண்டு மணி நேரமிருப்பதை அறிந்ததும் ரெபெக்கா கோபமுற்றாள், அவளும் காத்திருக்க வேண்டுமே என நினைத்துக்கொண்டாள். நான் அவளை போகச் சொன்னேன்.

 

அவள் கன்னத்தில் முத்தமிடக் குனிந்தேன், நிமிரும் முன் அவள் வண்டி சீறிப் பறந்தது. கோபமாய்ப் பாய்ந்து சென்ற ஆரஞ்சு மினியின் பின்புறத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், பின்பு மெல்ல நடந்து குளிரில் உறைந்திருந்த சாலையைக் கடந்தேன்.

 

ஒரு மாற்றுக்கு சூரியன்  வெளியில் தெரிந்தது, அண்மையில் விழுந்திருந்த பனித்துகள்கள் சிதறிய ஒளியில் மிளிர்ந்தன. சோம்பலுடன் பிக்கடலி பூங்காவிற்குள் நுழைந்தேன், தாழ்ந்த அந்த சதுக்கம் ஆங்காங்கே பனியால் நிரம்பியிருந்தது. வசந்தத்தில் இது ஒரு இனிமையான இடம். நீரூற்றைச் சுற்றி பரப்பப்பட்ட மர இருக்கைகளுடனும், சிறிய மரங்களுடனும் – அவை செரி மரங்களா? – அவற்றினுடைய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர்களுமாய். இப்போது அவை கறுத்து வெறுமையாய் இருந்தன, அவற்றின் தடித்த கிளைகளில் பனி படர்ந்திருந்தது. ஒரு சிலர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர், கிறிஸ்துமஸ் பொருட்களை வாங்கிய களைப்பில்.

 

கிறிஸ்துமஸிற்கு இன்னும் ஒரு மாதமுள்ளது. விரைவில் அலங்கார மின்விளக்குகள் கடைகளை ஒட்டியிருக்கும் மரங்களிலும் கம்பங்களிலும் மாட்டப்படும், பிங் காஸ்பி ‘ஒயிட் கிறிஸ்மஸ்’ எனக் கதறுவார், அறிமுகமற்றவர்கள் ஒருவருக்கொருவர் பயத்துடன் புன்னகைத்துக்கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். எனது கிறிஸ்துமஸ் வாடிக்கையைத் துவங்க அது நல்ல நேரமாகத் தெரிந்தது. ஆர்ன்டேல் மையத்தில், மக்கள்திரளைக் கடந்து நுழைந்தேன். மக்கள் நெரிசலில் அவ்விடம் வெம்மையடைந்திருந்தது.

 

வாசனைத் திரவியங்கள் பைடியோவுக்கு  ஒரு பலவீனம்போல. நான் கட்டற்றவனாக இருந்தேன், நூறு மில்லி ஷனல் நம்பர் 5 – பெர்ஃப்யூம், கலோன் அல்ல – வாங்கினேன். சந்தனுக்கு சவரத்துக்குப் பின் பூசிக்கொள்ளும் ஹூகோ பாஸ். இதெல்லாம் எளிதான தேர்வுகள்; குழந்தைகளுக்கு என்ன வாங்குவது? பதின்வயதுப் பெண்கள் எனக்கு ஒரு புதிர்போல, ரீனாவுக்கு என்ன பிடிக்கும் என்பதுகுறித்து எனக்குத் துளி அறிவு கிடையாது. எனவே ஒரு உருண்ட விற்பனைப் பெண்ணிடம் தஞ்சமடைந்தேன். தன் செய்கைகளில் உறுதியுள்ளவளாகத் தெரிந்தாள். இருவரும் சேர்ந்து பனிமானின் உருவம் பொறித்திருந்த வெள்ளை நிற மேலயைத் தெரிவு செய்தோம். இரட்டையர்களைப்பொறுத்தமட்டில் எனக்கு தன்நம்பிக்கை இருந்தது, ஆண்கள் ஆண்கள்தானே! இருவருக்கும் ஒரேபோல மான்செஸ்டர் யுனைட்டட் மஃப்ளர்கள். அவைக்குறித்துப் பின்னர் சந்தன் விலாவலிக்கச் சிரித்தான் ‘நீ செல்ட்டிக் இல்லைண்ணா ரேஞ்சர் ஸ்கார்ஃபாவது வாங்கியிருக்கலாம்..இல்லைண்ணா மத்ர்வெல் எஃப்.சி. நம்ம டீம நாம சப்போர்ட் பண்ணலைண்ணா எப்டி’, அவன் சொன்னது சரிதான் சில நேரங்களில் நான் யோசிப்பதேயில்லை.

 

இருட்ட ஆரம்பித்திருந்தது. தெருவிளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. நான் இரயில் நிலையத்துக்குச் சென்று சேர்ந்தேன். இரயில் காத்திருந்தது. இரயிலின் வெம்மையிலும், அதன் சக்கரங்களின் சீரான தாலாட்டிலும் ஆழ்ந்து உறங்கினேன்.

 

வேகம் மாறியபோது விழித்துக்கொண்டேன், இரவின் இருளில் மின்னிக்கொண்டிருக்கும் விளக்கு வரிசைகள் கிளாஸ்கோ சென்ட்ரல் நிலையத்துக்கு என்னை வரவேற்றன. குளிர்ந்த அந்த இரவினுள் இரயில் சென்று நின்றது.

 

மதர்வெல்லுக்கு வாடகைவண்டி எடுத்தேன், பைடியோவின் வீட்டுக்கு வழி சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினேன். பைடியோவின் வீடிருக்கும் தெருவுக்குள் வண்டி மூக்கை நுழைத்ததும் எழுந்து அமர்ந்தேன். வண்டி குலுங்கி நின்றது, இரக்கத்தில் காரோட்டி ‘ஹான்ட் பிரேக்’ போட்டு நிறுத்தியிருந்தார்.

 

என்னைச் சுற்றியும் குளிர்காலக் கனவுதேசம் போலக்  காட்சியளித்தது. இரக்கத்தின் இருமருங்கிலுமிருந்த வீடுகளில் கனமான பனித்தூவல் இருந்தது. குன்றின் அடிவாரத்தில், காடு துவங்குமிடத்தில் பனி மேலும் ஆழத்துடன் இருக்கும், முட்டளவு அல்லது அதற்கும் அதிகமாய்.  கோடையில் இது அதிசயிக்கத்தக்க இடம், சூரியன் தகிக்க, மலர்கள் மணம் வீச, நீலமணிப்பூக்களும், பேரரளிப் பூக்களுமாய் நிறைந்திருக்கும். மௌனம் கறுத்த கானகத்திலிருந்து கிளம்பி ஒவ்வொரு வீட்டையும் சென்று சேர்ந்திருந்தது. அவை பனிவிழும் சத்தத்தில் முணுமுணுத்துக்கொண்டிருந்தன. சன்னல்களில் விளக்கொளியும் பனியுமன்றி ஆட்கள் எவரும் தென்படவில்லை. மான்செஸ்டரைவிட ஸ்காட்லாந்து எத்தனைக் குளிராகவும், தொலைவாகவும் இருக்கிறது என்பதை எப்போதும் வியப்புடன் உணர்வேன். பைடியோ கதவைத் திறந்தாள், அவளைக் கட்டிக்கொண்டேன், அவளது சிறு தலை, பச்சை ஆப்பிளின் மணத்தோடு என் நெஞ்சில் தஞ்சம் புகுந்தது.

 

விளக்கமுடியாத சாந்தம் பைடியோவின் வீட்டுக்குள் குடிபுகுந்திருந்தது. முன்பே அதை அறிய முற்பட்டிருக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் அது என்னக்குப் பிடிபடுவதில்லை. எதுவாகவிருந்தாலும் நான் அங்கு சென்றதும் சில நிமிடங்களிலேயே இளக ஆரம்பித்துவிடுவேன். என்னுள் உறைந்து உறுதியான பனிக் குச்சிகள் உருகி ஓடிப்போயின. வாழ்வதின் வசீகரம் அங்கே தொடர்ச்சியாக உறுதிசெய்யப்பட்டது, வாழ்க்கை பெரிய சுமையான இடமாகத் தெரியவில்லை.

 

அவர்கள் இருவரும் சரியான பொருத்தமுடையவர்கள், சந்தனும் பைடியோவும். சந்தன் அதிகமாகப் பேசுபவனல்ல, ஆனால் அவன் சக மனிதர்கள் மீது அமைதியான நல்லெண்ணத்தைக் கொண்டவன். அதுவும், அவனது வறட்டு நகைச்சுவையுணர்வும் வியத்தகு அறிவும் அவனை தகுதியுள்ளவனாக்கின. அவனைக் குறித்து எனக்குள் ஒரு உள்ளுணர்வு இருந்தது அவன் எதைச்செய்தாலும் சரியாகச் செய்வான் என நான் நம்பினேன். பைடியோ மனதிற்கினியவள். அதுவே அவளைப்பற்றிய எல்லாவற்றையும் சொல்லிவிடும். மென்மையானவள், அன்பானவள் – இன்றைய உலகில் பெரிய பயனெதுவும் இல்லாத பழங்கால குணங்கள் – நகைச்சுவை உணர்வுள்ளவள், மனம் விரும்பி விசுவாசமானவள். நான் அவளை ஆராதித்தேன். ரெபெக்கா அவளை வெறுப்பதில் வியப்பேதுமில்லை.

 

சமையலைறை மேசையில் ஒரு பியருடன் அமர்ந்தேன், சந்தன் இரட்டையர்களுக்கு அரிசியும் கோழிக்கறியும் பிசையப்பட்ட உணவை ஊட்டிக்கொண்டிருந்தான். பைடியோ எனக்காக மீன் பொரித்துக்கொண்டிருந்தாள்.

 

இரட்டையர்கள் அடுத்த நாள் காலையில் என்னை எழுப்பும் பணியைச் செய்தனர். சீலையிடப்படாத என் சன்னல் வழியே நான் பயம்காட்டும் சாம்பல் நிற வானத்தைக் கண்டேன் அவர்கள் இருவருமே மணி ஒன்பது ஆகிவிட்டதாகக் கூறினர். சிரிப்பொலிகளுக்கு மத்தியில் நான் அறையை விட்டு வெளியே வந்தேன், மணி ஆறுதான் ஆகியிருந்தது.

 

அதிகாலையில் எழுவது நல்ல பழக்கம் என நினைத்துக்கொண்டேன், தேனீர் போட்டுக்கொள்ள சமையலறைக்குச் சென்றேன். பைடியோ அங்கே ஏற்கனவே நின்று சாஸேஜ்களை பொரித்துக்கொண்டிருந்தாள். ரீனா சமையலறை மேடையில் அமர்ந்து நிதானமாக மென்றுகொண்டிருந்தாள். சந்தன் அவளை ஐர்’க்கு வழக்கமான சனிக்கிழமை  காலை பியானோ வகுப்புக்கு அழைத்துச்செல்லவிருந்தான், எனவேதான் அதிகாலை பரபரப்பு. ரீனா சிறிதாகப் புன்னகைத்தாள். அண்மையில் அவள் சற்று என் முன்னால் சங்கடத்துடன் நடந்துகொள்கிறாள். அவளது செயல்பாடுகளில் புதிதாக தடைகள் உருவாகியிருந்தன. பைடோவிடம் சொன்னபோது ‘அதைக் கண்டுக்காத .. அவ எல்லார்கிட்டேயும் இப்படித்தான் இருக்கா’ என்றாள். அது எனக்கு ஆறுதலைத் தரவில்லை, நான் அவளுக்குக் கால்கழுவிவிட்டிருக்கிறேன், அவளது கழிவாடைகளை மாற்றியிருக்கிறேன். என்னிடம் தயக்கம் கொள்ள எந்தக் காரணமுமில்லை.

 

சந்தனும் ரீனாவும் சமயலைறைக் கதவின் வழியே வெழியேறினர். அது வாகனம் நிறுத்துமிடத்திற்கு அருகில் இருந்தது. கதவு திறக்கப்பட்டதும் காற்று உள்ளே நுழைந்தது இரட்டையர்கள் கூச்சலிட்டுக்கொண்டு உள்ளறைக்கு ஓடினர், காற்றில் ஏதோ பூதங்ஜள் வந்ததைப்போல.

 

நான் தேனீரை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்குச் சென்றேன், இரட்டையர்கள் ‘லெகோ’ விளையாடிக்கொன்டிருந்தனர். பைடியோ ஒரு நாற்காலியில் ஒருங்கியிருந்தாள், அவளது நீல நிற இரவாடையில். கண்ணை மறைத்த முடிக் கற்றை வழியே குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள் ‘என்ன..நீ நல்லாத்தான இருக்க?’ ‘ஆமா’ நான் அவள் கண்களை நேரிட்டேன் ‘நீ எப்டி இருக்க?’

 

ஒருகையால் கண்களைத் தடவிக்கொண்டாள் ‘ம்ம்…ஒனக்குத் தெரியாதா?’ அவள் குரல் நடுங்கியது,’எனக்குப் புரியல. அவ ஏன் இதையெல்லாம் செஞ்சா… அவதான் செஞ்சாளா?’ சட்டென கண்ணீர் வழிந்தது, அவள் அழுதாள். அவள்  முன் சென்று தரை விரிப்பில் மண்டியிட்டு அவளை அணைத்துக்கொண்டேன். இரட்டையர்கள் எங்களை நோட்டமிட்டுவிட்டுக் கட்டிடம் கட்டும் வேலையைத் தொடர்ந்தனர். பிறகு பைடியோ அமைதியாகி என்னைத் தள்ளிவிடடாள். மூக்கைச் சீந்தி உறிஞ்சினாள்.’நீ புரி பத்தி எப்பவாச்சும்  யோசிச்சு பாப்பியா?’ என்றாள்.

 

‘நிச்சயமா’ நான் தரையில் அமர்ந்தவாறே பதில் சொன்னேன் ‘அப்பப்ப நினைச்சுப் பாப்பேன்’

 

‘இல்ல. நான் என்னெ சொல்றேன்னா உண்மையிலேயே அவளப்பத்தி யோசிச்சு பாப்பியா. அவ எப்படிப்பட்ட ஆளாயிருப்பா, நம்ம வீட்ல அத்தன வருஷம் வேலக்காறியா இருந்ததப் பத்தி என்ன நினைச்சிருப்பா.. எல்லாம்’

 

எனக்குக் கோபம் வந்தது ‘அவ வேலக்காரி இல்ல’.

 

‘இல்ல இல்ல’ பைடியோ கையை காற்றில் அசைத்தாள் ‘பெரிய இவனாட்டம் பேசாத.. நான் என்ன சொன்னேன்னு ஒனக்குப் புரியும்’

 

தேனீர் கோப்பையை இருகைகளிலும் இறுகப் பிடித்துக்கொண்டேன். ‘இல்ல தெரியல…உண்மையிலயே.. நேத்துவரைக்கும் இல்ல’.

 

புரி இரும்பு மனுஷியாகத்தான் இருந்திருக்கக்கூடும். அவள் தன்னை மறைத்துக்கொண்டவிதம், அசாதாரணமான செயல் அது.  எங்களுடன் முப்பது வருடங்கள் இருந்திருக்கிறாள், எங்கள் குடும்பத்தின் அச்சாணி அவள்; அவளை எடுத்துவிட்டால் நாங்கள் ஒவ்வொருவரும் கலைந்து தடுமாறி தரையில் விழுந்துவிடுவோம். தனியாக நின்று என்னை வளர்த்தாள், மாவிற்கு அதிக சிரமம் தரக்கூடாதென்பதால்; பைடியோவை கவனித்துக்கொண்டாள், அவளோ இந்த கண்காணிப்பை விரும்பாமல் எப்போதும் எதிர்த்துக்கொண்டேயிருந்தாள். டெயுட்டாவைக்கூட கவனித்துக்கொண்டாள், அவரது துணிகளை தயார் செய்வது, களைத்திருக்கும்போது தலையைப் பிடித்து விடுவது. சமையலறை மட்டுமே அவளது மேற்பார்வைக்கு அப்பாலிருந்தது. அதிலும் சமையல்காரர் டொங்கேஸ்வர் அவளது முத்துக்கண்கள் தன்மீது இருப்பதை அறிந்து கவனமாகவே நடந்துகொண்டார். எப்போதும் அவள் தன்னை மறைத்துக்கொண்டேயிருக்கவேண்டியிருந்தது, ஏனென்றால் நாங்கள் பார்த்தது புரியை அல்ல. நான் என் பணியிடத்தைக் குறித்து எண்ணிக்கொண்டேன். என் துர்ரதிஷ்ட ஆய்வுக்கூட நண்பர்கள் கண்டது என்னை அல்ல; அவர்கள் கண்டது துருபஜீத் மஹந்தாவை, ஒரு புத்திசாலி ஆராய்ச்சியாளனை, ஒரு புத்திசாலி, பழுப்பு நிற முகம் கொண்ட ஆராய்ச்சியாளனை, வேடிக்கையானவன், அலுவலகத்தில் வேறு யாரையும் அசாத்தியமாக மென்று துப்பிவிடக்கூடியவன். அது பணியிடத்தில், ஏன் மனித குருத்தணுக்கள் வெவ்வேறு உறுப்புக்களின் அணுக்களாக மாறுகின்றன என்பதை நான் ஆராய்ந்துகொண்டிருக்குமிடத்தில். அந்தப் பகுதியை நான் விட்டகன்றதும் என் வெளித்தோலை கழற்றிவிட்டு உள்ளே பலவேலைப்பாடுகளுடன் அடர்வண்ணங்களில் எழிலாக நெய்யப்பட்ட வேறொரு நான் வெளிவந்துவிடுகிறேன்.

 

இந்த ஏமாற்றுவேலையை நான் மட்டும் செய்வதில்லை, ஏமாற்று என்பது ஒரு வலுவான வார்த்தையாகத் தோன்றலாம். நம்மில் அதிக நேர்மையானவர்கள்கூட இதை பயன்படுத்துகின்றனர், வேண்டுமென்றே அல்ல, இயல்பாக, மோசமான எண்ணத்துடனும் அல்ல. நாம் எல்லோருமே உள்ளுணர்வால் செய்வது, சுவாசிப்பதைப்போல, உயிர்வாழ்வதற்காக.

 

புரி பொது உலகின் பார்வையிலேயே எப்போதும் வாழ்ந்தாள்; எந்தவகையிலும் தனிமை அவளுக்குக் கிடைக்கவில்லை. தனிமையில் நெருங்கியிருப்பதன் வெம்மையையும் அவள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவள் என்றென்றைக்கும் புரிதான் ‘புரி அக்கா’ இல்லை அல்லது ‘புரி சித்தி’ இல்லை; அவளது புரிமையைக்கு உரிச்சொற்களே இல்லை, தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு உலகில் நிலைத்த ஒன்றைப்போல அவள் மட்டும் என்றும் புரி என்று நிலைபெற்றிருந்தாள்.

 

பைடியோவை நோக்கினேன். ‘ஒனக்குத்  தெரியுமா, அவளுக்கு என்ன வயசாகுதுண்ணே எனக்குத் தெரியாது? ஹஃப்லாங்க்ல அவ நம்ம வீட்டுக்கு வந்தப்போ அவளுக்கு என்ன வயசிருக்கும்?’

 

பைடியோ குழப்பத்துடன் பார்த்தாள் ‘ஏன், அவளுக்கு மா வயசுதான் இருந்திருக்கும். ஆமா. ஆமா, உண்மதான். இருபத்தி ஒண்ணுதான் இருந்திருக்கணும்’.

 

மாவின் வயது. அச்சிந்தனை என்னை உலுக்கியது. மா தனது அருள்கொண்ட பாவத்தில், பாரம்பரியத்தில், புரியைவிட வேறேதோ உலகத்திலிருந்து வந்தவளைப்போலிருந்தாள். புரியை மாவுடன் ஒப்புவைப்பதென்பது அவளைக் கீழ்மைப்படுத்தி அவளது முக்கியத்துவத்தை குறைப்பதுபோலிருந்தது.

 

ஒரு நினைவு வர புன்னகைத்தேன்’ஹே பைடியோ, புரி ஷில்லாங்ல அந்த ஆள அடிச்சு துவச்சாளே, நியாபகமிருக்கா’

 

‘அவனுக்குத் தேவதான்’ பைடியோவும் புன்னகைத்தாள்.

 

ஒரு குளிர்கால நாளில், ஷில்லாங்கில் – எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருந்திருக்கும் – வீட்டின் பின்புறமிருந்து வந்த கூச்சலில் நாங்கள் அதிர்ந்துபோனோம். எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு பெரும் தோட்டம், அங்கே பேரிக்காய், ஆப்பிள் மரங்கள் நிறைந்திருக்கும், அங்கே, சற்று தொலைவில் குளியலறையுடன் கூடிய ஒரு மரவீடு இருந்தது, அதுவே புரியின் வீடு. காதைச் செவிடாக்கும் கூக்குரல் அத்திசையிலிருந்து வந்துகொண்டிருந்தது. டெயுட்டாவும், காவலாளி பகதூரும்  யாரோ புரியைக் கொல்லப்பார்க்கிறார்கள் என பயந்து மரவீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே சென்றபோது புரி தன் சேலையை பழங்குடி பாணியில் நெஞ்சில் அணிந்துகொண்டு தரையில் சுருண்டு கிடக்கும் ஒருவனை வெறிகொண்டு அடித்துக்கொண்டிருந்தாள். விறகுத் துண்டு ஒன்றை எடுத்து அவன் மீது இலாவகமாகப் பிரயோகித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் அவளை அவனிடமிருந்து விலக்கிவிட்டனர். அவள் கடைசிவரை காறித் துப்பிக்கொண்டு காலால் உதைத்தபடியே இருந்தாள். அவள் குளிக்கும்போது அவன் எட்டிப்பார்த்ததாகவும் இன்னும் கொஞ்சம் அவனை சாத்தியிருக்கலாம் என்றும் அவள் சொன்னாள்.

 

இரட்டையர்கள் வெளியே செல்ல வேண்டும் என்றனர்.

 

‘வெளிய ஒரு நடை போலாமா. ஜீத்’ பைடியோ கேட்டாள் கோப்பைகளை சமையலறைக்கு எடுத்துச்சென்றபடியே.

 

‘சரி’ என்று சொல்லிவிட்டு துணி மாற்றச்சென்றேன்.

 

வெளியெ உற்சாகமாக இருந்தது, மலை உச்சியில்ருந்து காற்று கிழித்துக்கொண்டு கீழிறங்கியது, ஆனால் சூரிய வெளிச்சமிருந்தது, காற்று இலகுவாக இருந்தது.

 

நாங்கள் குளிராடைகளை ஒன்றமேல் ஒன்றாய் அணிந்திருந்தோம். இரட்டையர்கள் ஒரேபோன்ற சிவப்பு ‘ஸ்கி ஜாக்கெட்டும்’, அந்த முட்டாள்தனமான மஃப்ளர்களையும் அணிந்திருந்தனர். பைடியோ கம்பளி கால்சட்டையும் ஒரு தடித்த, பூவேலைகள் கொண்ட ஜாக்கெட்டும், ஒரு கம்பளித் தொப்பியும் அணிந்திருந்தாள். நான் ஒரு ஸ்கி கால்சட்டையும், ஜாக்கெட்டும் அணிந்திருந்தேன், தலையையும்  மூடிக்கொண்டேன்.

 

நான் குளிரை உணரவேயில்லை, என் மூக்கு சற்று குளிர ஆரம்பித்தது, ஆனால் அது ஒன்றுமில்லை. ஷில்லாங்கின் குளிர்காலத்தைக் குறித்து நினைத்துக் கொண்டேன் இங்கிருப்பதைவிட பாதிக் குளிர்கூட அங்கிருக்காது, பனிப்பொழிவு போலெல்லாம் எதுவுமில்லை. ஆனால் காலைகளில் வெளியிலிருந்த நீர்த்தொட்டியில் உறைநீரின்  திடப்பூச்சு இருக்கும். நான் அங்கே ஒருபோதும் வெம்மையை உணர்ந்ததில்லை என்பதை எண்ணிக்கொண்டேன், எத்தனை குளிராடைகளை அணிந்துகொண்டாலும், காலுறைகளை போட்டுக்கொண்டாலும்,  கம்பளிகளை போர்த்திக்கொண்டாலும் நான் எப்போதும் குளிராகவே உணர்ந்தேன். இதன் இரகசியம் வீட்டை  சூடேற்றும் முறையில் இருந்தது, மரவீடுகளின் ஒவ்வொரு அறைகளும் நிலக்கரி எரியும் கல்கணப்படுப்புக்களால் வெம்மையேற்றப்பட்டன, அடுப்புக்கு அருகே அதி வெம்மையாகவும் தள்ளிச் செல்லச் செல்ல வெப்பம் குறைவாகவும், இறுதியாக அறையின் மறு எல்லையில் எப்போதும் குளிராகவும் இருக்கும். இரவில் நெருப்பு கவனிக்காமல் விடப்படுவதால் அணைந்துபோய்விடும், மூலையில் காத்திருந்த குளிர் குதுகுலத்துடன் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும்,  போர்வைக்குள் சுருண்டுகொண்டே கடைசியாக எரிந்துகொண்டிருக்கும் தணல் எரிந்துகொண்டிருப்பதை உற்றுநோக்கி அதிலிருந்த கடைசி வெம்மையையும் நான் எடுத்துக்கொள்வேன். வீடு முழுவதையும் சூடேற்றும் புதிய முறை எனக்குப் புதுவாழ்வைத் தந்துள்ளது.

 

இரட்டையர்களில் ஒருவர் பைடியோவின் கையையும் இன்னொருவர் என்கையையும் பற்றியிருந்தனர்; ரிக்கி என்னுடன் பாபி பைடியோவுடன். இருவரும் எங்கள் நடையின் வேகத்தை தங்கள் முழு எடையையும் போட்டுக் குறைத்தார்கள், சில அடிகளுக்கு ஒருமுறை அத்தியாவசியமான ஏதோ ஒன்றுக்காக எல்லோரும் காத்திருக்க வேண்டியிருந்தது. மலை உச்சிக்குப் பாதி வழியில் அவர்கள் சிதைந்துபோன பனிமனிதன் ஒருவனைக் கண்டார்கள். இருவரும் குதுகலக் கூச்சலிட்டு வேடிக்கை பார்க்க எங்கள் நடை மீண்டும் தடைபட்டது.

 

பைடியோ அவர்களைக் கூர்ந்து கவனித்தாள், அவர்கள் ஒரு குட்டையான சுவற்றினருகே நின்று சலசலத்துக்கொண்டிருந்தனர். சட்டென சொன்னாள்,’எனக்குப் பொறாமையா இருந்துச்சு தெரியுமா’

 

ஆச்சர்யத்துடன் நான் அவளைப் பார்த்தேன், என் பார்வை பட்டதும் ஒரு வெட்கம் அவள் முன்கழுத்து வழியே மேலேறியது. தன்னுணர்வுடன் அவள் சொன்னாள் ‘ஓ..தெரியாதா. உங்க ரெண்டுபேரையும் நெனச்சு ரெம்ப பொறாமப் பட்டேன். நீ புரிகூட இருக்கத்தான் விருப்பப்படுவ, என்னால தாங்க முடியல. அவ உம் மேல அவ்வளவு பிரியமா இருந்தா.. எனக்கு வெறுப்பா இருந்துச்சு’ இடைவெளி விட்டுவிட்டு தலையை ஒருபக்கம் சரித்துக்கொண்டாள் ‘என் மேலையும் அவ அத்தன பிரியமா இருக்கணும்னு ஆசப்பட்டேன், நீயும் எம்மேல அவ்வளவு பிரியமா இருக்கனும்னு விரும்பினேன்’ கைகளை மல்லாக்க தூக்கிக் காண்பித்து விரக்தியுடன் சொன்னாள் ‘நான் எவ்வளவு மோசமா.. சந்தோசமேயில்லாம இருந்தேன் தெரியுமா’

 

‘ஆனா, பைடியோ, நான் உன்ன ஆராதிச்சேன். உனக்கு கண்டிப்பா அது தெரிஞ்சிருக்குமே?’ நான் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தேன் அவள் பின் நகர்ந்துகொண்டாள். தலையை அசைத்தாள் அவள் கண்கள் ஈரமாயிருந்தன.

 

அவளை கட்டிப்பிடித்து  ‘ஏ நான் உன்ன ரெம்ப நேசிச்சேன்’ என்றேன்.

 

பைடியோ பதில் சொல்லவில்லை.  அவளை விடுவித்துவிட்டு கையைப் பற்றினேன் ‘உனக்கு புரிய பிடிக்கலைண்றது எனக்கு எப்பவுமே தோணிட்டுத்தான் இருக்கும், அவ உன்ன எப்படியோ காயப்படுத்தியிருக்காண்ணு நினச்சேன்’  நான் ஆழமாக மூச்சிழுத்துக்கொண்டேன் ‘புரியும் அப்படித்தான் நினைச்சா தெரியுமா, அதுல அவளுக்கும் வருத்தம்’

 

‘அவ சொன்னாளா என்ன?’ பைடியோ ஆர்வத்துடன் கேட்டாள்

 

‘ஆமா’

 

இரட்டையர்கள் மீண்டும் மலைப்பாதையில் ஏறத்துவங்கியிருந்தனர், நாங்கள் பின் தொடர்ந்தோம். ‘அவ ஜோடுவ கல்யாணம் பண்ண நினைச்சப்ப உனக்க்கு கோபமா இருந்துச்சா?’

 

நான் சரியான வார்த்தையைத் தேடினேன் ‘பேய்க்கோபம்’

 

‘ஏன்?’

 

பைடியோவைப் பார்த்து நின்றேன் ‘உண்மையா?.. உனக்கு உண்மையிலேயே தெரியாதா? பைடியோ அவளுக்கு அப்ப அம்பத்தோரு வயசு, ஜோடுக்கு முப்பது வயசு, எனக்கும்  முப்பது வயசு, ஆண்டவா.. டெயுட்டா அவனுக்கு நல்ல கவர்ன்மென்ட் வேல வாங்கித்தரேண்ணு சொன்னதாலத்தான் அவன் கட்டிகிட்டான்’

 

‘எல்லா பொண்ணுக்கும் அவளவளோட கட்டாயங்கள் இருக்கும் ஜீத்’ பைடியோ சொன்னாள்.

 

‘என்னது.. செக்ஸ் போலவா? அதா சொல்ற!’

 

‘இல்ல ஜீத்’ பைடியோ மெல்லச் சொன்னாள் ‘ஒரு குடும்பத்த உருவாகுறது போல’

 

நான் பதில் சொல்லவில்லை. அதுதான் பிரச்சனையாக இருந்தது, அதுதான் தாங்கமுடியாததாயிருந்திந்தது, நான் மட்டும் அவளுக்குப் போதவில்லை என்பது.

 

குன்றின் உச்சியில் நாங்கள் நின்றோம். மைல்கணக்கில் பனிபடர்ந்த நாட்டுப்புறம் எங்களைச்சுற்றி பரந்து கிடந்தது. சிவந்த முகத்துடன் ஒருவன் எங்களை நோக்கி துள்ளோட்டமாய் வந்தான். ஓட்டத்தை நிறுத்திவிட்டு பைடோவிடம் ‘ஆக்.. லீனா அன்பே, பசங்ககூட வெளிய வந்தியா?’

 

‘ஆமா மிஸ்ட்டர்  ஃப்ரேசர்.’ பைடியோ புன்னகைத்தாள் ‘இது ஜீத், என் தம்பி. மேன்சஸ்டர்லேந்து வந்திருக் கான்’. அவன் குதிகாலில் முன்னும்பின்னும் ஆடிக்கொன்டே ‘ஓ.. அவ்வளவு தூரமா.. இங்கிலாந்துலேந்து வந்திருக்கானா!’

 

நான் புன்னகைத்தேன். நான்  வெகு தொலைவிலிருந்து, இந்தியாவிலிருந்து, அதன் வடகிழக்கு முனையிலிருந்து, திபெத்தின் மறுதலிக்கப்பட்ட குன்றுகளிலிருந்து ஓடிவரும் நதிக்கரையிலிருந்து வந்தவன் எனத் தெரிந்தால் இவன் என்ன சொல்வான்?

 

சந்தனும் ரீனாவும் மதிய உணவுக்குப் பின்னர் நெகிழிப் பைகள் நிறைய பொருட்களுடன் வந்து சேந்தனர். சந்தன் அவ்வாரத்திற்கான பொருட்களை வாங்கிவந்திருந்தான்.

 

இரட்டையர்கள் பைகளின் மீது பாய்ந்து பொருட்களை தேர்ந்த இளம் மாயவித்தைக்காரர்களைப்போல எடுத்து வைத்தனர். ரீனா வெறுப்புடன் பார்த்தாள், பின்பு அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

சந்தன் உற்சாகமாயிருந்தான்; அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. வாரத்திற்கான வேலை முடிந்துவிட்டது. தந்தைக்கான அவ்வாரத்தின் கடைசிக் கடமையும் முடிந்துவிட்டது, அவன் கால் விலங்குகள் கழட்டப்பட்டுவிட்டன. பியரை வெளியில் எடுத்தான் நாங்கள் இருவரும் வரவேற்பரையில் மெத்தை இருக்கைகளில் அமர்ந்துகொண்டோம்.

 

சன்னலில் இடப்பட்டிருந்த வெனிஸ் நகரச் சீலையின் வழியே  பின் மதிய வானத்தின் கீற்றுகள் தெரிந்தன. இன்னும் நீலம் இருந்தது, சூரியனின் கடைசிக் கதிர்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஆனால் கீழே இருட்டியிருந்தது, கால்களின் கீழே ஆரஞ்சுநிற ஒளிப்பொழிவில் நின்றுகொண்டு தெருவிளக்குகள் ஒளிர்ந்தன.

 

சில கணங்கள் அமைதியாக மது அருந்தினோம். திடீரென சந்தன் சிரித்தான் ‘டாக்டர் பெஸ்புராவ பத்திக் கேள்விப்பட்டியா?’ கண்ணில் குறும்பு வெளிப்படக் கேட்டான்.

 

‘இல்லையே; ஆர்வத்துடன் நான் கேட்டேன் ‘கேன்சர் டாக்டர்தானெ?’

 

‘ஆம அதேதான்.’ சந்தன் புன்னகைத்தான். ‘போன சனிக்கிழம வெம்ப்ளில பர்த்தக்கர் வீட்ல டின்னர். பத்துமணி ஆகிடுச்சு ஆனா ராபின் பெஸ்புரா இன்னும் வரல’

 

‘அவன் பர்மிங்ஹம்ல இருக்கான் இல்லியா?’

 

‘ஆமா,’ சந்தன் தொடர்ந்தான். ‘எல்லாருக்கும் ரெம்ப பயமாயிடுச்சு.. அவன் ஃபோன் பண்ணினான்.’

 

‘என்ன ஆச்சு?’ நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.

 

சந்தன் கேலியாக தலையசைத்துச் சிரித்தான் ‘அவன் ஹைவேல தப்பான திருப்பத்துல இறங்கி வேல்ஸுக்குப் போயிட்டான்! வேல்ஸ்! நம்ப முடியுதா?’

 

லண்டனுக்குச் செல்ல வேண்டிய ஒருவன் பனிப்பொழிவுக்கு மத்தியில் – பொழிந்திருக்கும் என யூகித்தேன் – வேல்ஸுக்குச் சென்று சேர்ந்ததை எண்ணிச் சிரித்தேன்.

 

பைடியோ இரட்டையர்களுக்கு உணவு ஊட்டி படுக்க வைத்துவிட்டு வந்தாள். சந்தனின் இருக்கையின்  பக்கத்தில் அமர்ந்தாள். ‘சந்தன், நல்ல பிள்ளையா எனக்கு அந்த ரம்மும் ஆப்பிள் ஜூசும் கலக்கி குடுக்கிறியா?’ என்றாள். சந்தன் சமயலைறைக்குள் சந்தோஷத்துடன் மறைந்தான. ரீனா உணவறையில் மெலிதாகப் பியானோ வாசித்துக்கொண்டிருந்தாள், நாங்கள் அவளைப் பார்க்கமுடியவில்லை ஆனால் இசை வரவேற்பறைக்குள் வழிதவறி  வந்துகொண்டிருந்தது. மொசார்ட்டின் செவ்வியல் இசைக்கோப்பு என்று பைடியோ சொன்னாள், மிருதுவான அந்த இசைக்கோர்வையை நான் மயக்கத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

 

ஆப்பிள் சாறும் ரம்மும் கலந்த அந்த பானம் சூடானது; சாறும் ரம்மும் மெலிதாக கொதிக்கவிடப்பட்டு, கிராம்பும் சாதிக்காயும் சேர்க்கப்பட்டிருந்தது. இனிப்பான பானமென்றாலும் இது வியத்தகு ருசியுடனிருந்தது, எனவே அதைக் குடிக்க ஆரம்பித்தேன்.

 

தத்தம் மதுவை அருந்திக்கொண்டிருந்தோம். சந்தன் இப்போது அமைதியிழந்து சாப்பாட்டறையை நோக்கிக்கொண்டிருந்தான்.

 

‘ஹே ரீனா..’ ஒருவழியாகக் உரக்கக் கேட்டான் ‘ஏதாவது மார்டனா வாசியேன்’

 

பியானோ சட்டென நின்று அமைதி உருவாகியது. பைடியோ பார்வையால் சந்தனை மிரட்டினாள், அவன் பலவீனமாய் சிரித்தான்,

 

சட்டென பியானோ மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது; ரீனா ஒரு பழைய பீட்டில்ஸ் பாடலை வாசித்தாள் ‘வென் ஐம் சிக்ஸ்டி-ஃபோர்’ (‘எனக்கு அறுபத்திநாலு வயதாகும்போது’). உற்சாகத்துடன் வாசித்தாள், சில குறும்பான இசைத்துண்டுகள் அவ்வப்போது சேர்ந்துகொண்டன, விரைவிலேயே நாங்கள் அந்தத் தொற்றும் தாளத்துக்கேற்ப கால்களைத் தட்டினோம். சந்தன் பொறுமையிழந்தான். படிப்பறைக்குச் சென்று கித்தாரை எடுத்துவந்தான்.

 

இரவின் இயல்புக்குள் உற்சாகமாய் நுழைந்தோம். பழைய கித்தாரை சந்தன் மீட்டினான், நாங்கள் எல்லோரும் பாட ஆரம்பித்தோம், குரல்கள் ஒன்றாகின, எங்கள் குழந்தைப்பருவ, இளமைப்பருவப் பாடல்களைப் பாடினோம். ‘ஒன்ன நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்’ சந்தன் பைடியோவைப் பார்த்துப் பாடினான் ‘தங்கமே ஞானத் தங்கமே’ பைடியோ திரும்பப் பாடினாள். நான் முணுமுணுத்துப்பாடினேன், இடைவெளிகளை நிரப்பிக்கொண்டு, வெளியில் மின்னிய நட்சத்திரங்களை நோட்டமிட்டபடியே, அவைதான் என் பால்யத்திலும் மின்னிக்கொண்டிருந்திருக்கும் என்று எண்ணியபடியே…

 

உணர்ச்சிகள் ததும்பிய அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்தவளாயும், அதீத உணர்ச்சிப்பெருக்கைக் கண்டு வியந்தவளாயும் எங்களருகில் வந்தமர்ந்தாள் ரீனா. கிரீன் டோர் பாடலை மிகக் கச்சிதமாகப் பாடி எங்களை வியப்பிலாழ்த்தினாள். எல்விஸ் பிரெஸ்லிப் பாடல் அவளுக்கு எப்படித் தெரிந்தது எனக் கேட்டதும் ‘பிரெஸ்லியா, இதுகூடத் தெரியாதா, இது ஷேக்கின் ஸ்டீவன்ஸ்’ என்றாள். நாங்கள் கண்ணீர் வரும்வரை சிரித்தோம்.

 

இரவுணவு நினவிலில்லை, அனைவரும் அதிகமாய் மது அருந்தியிருந்தோம், பைடியோவின் படுக்கை அறைக் கதவின் முன், தைரியமும் தாராளமனமும் மேலிட நான் அவளை இறுகக் கட்டிக்கொண்டு ‘எனக்கு உம்மேல கொள்ளைப் பிரியம் தெரியும்ல?’ என்றேன்.

 

‘தெரியும்டா பச்சக் குழந்த’ என்றாள்.

 

ஞாயிறு காலை நாங்கள் எடின்பரோவிற்கு பயணித்தோம்.

 

சூரியக் கடவுள் கருணையுடனிருந்தார், நாங்கள் பிரின்ஸஸ் தெருவுக்கு வந்தபோது அது குளிருடன் பொலிந்துகொண்டிருந்தது. பெண்கள் பிரிட்டிஷ் ஹோம் ஸ்டோருக்குச் சென்றனர், நானும் சந்தனும் இரட்டையர்களுடன் பிரின்ஸஸ் ஸ்ட்ரீட் பூங்காவிற்குச் சென்றோம். எதிர்பார்த்ததைப்போலவே அங்கேயும் பனி விழுந்திருந்தது இருப்பினும் சிலர் இருக்கைகளில் அமர்ந்து சொற்பச் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தனர். கோடையில் சரிந்த அந்தக் கரையோரத்தில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்கும், காற்றில் அவற்றின் மணம் கமழும். இப்போது குளிர்ந்த ஈரம் காற்றில் மிதந்துகொண்டிருந்தது. இரட்டையர்கள் ஒரு பனிமனிதனைச் செய்ய முற்பட்டனர், நாங்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். அந்த தடித்த சிறிய உருவம் சோகமாய் நின்றுகொண்டிருந்தது. இரட்டையர்கள் அதைச் சுற்றி கத்திக்கொண்டே ஓடினர்.

 

பெண்கள் சீக்கிரம் முடித்துக்கொண்டு வந்தனர்; ரீனா புதிதாய் வாங்கிய ஆடை ஒன்றை அணிந்திருந்தாள், சிவப்பு வண்ண டார்ட்டன் கில்ட் (ஸ்காட்லாந்தில் அணியப்படும் பாவாடை போன்றது). பூங்காவின் படிக்கட்டுக்களில் இறங்குகையில் அவள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். பார்ப்பதற்கு மா’வைப்போல அவள் மாறி வருவதை நான் உணர்ந்தேன்.

 

அடுத்து நாங்கள் போர்டபெல்லோ கடற்கரைக்குச் சென்றோம். குளிர்கால்த்துக்கு ஏற்ற இடமல்ல, ஆனால் எல்லோருமே போக விரும்பினோம்.

 

குளிர்காலக் கடல் சாம்பல்நிறத்தில் வெள்ளை நிற சிற்றலைகள் நிரம்பத் தழும்பிக்கொண்டிருந்தது, காற்று கத்தியின் கூர்மையைக் கொண்டிருந்தது.

 

வெட்டவெளியைக் கண்ட இரட்டையர்கள் கைகளை விரித்து விமான சத்தங்களை எழுப்பிக்கொண்டு ஓடியாடினர். ரீனா தன் தந்தையுடன் நீரின் கரையில் கைகோர்த்து நடந்துகொண்டிருந்தாள்.

 

பைடியோ தன் கையை என்கையோடு பின்னிக்கொண்டாள். நாங்கள் நின்ற இடத்திலிருந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அலைகள் உடைவதும் கடற்புறாக்களின் ‘ஸ்க்ரீ.. ஸ்க்ரீ’ சத்தமும் என் காதுகளை நிரப்பின. சட்டென, எதிர்பாராமல், பிரம்மபுத்திரா என்முன் இருந்தது. வெள்ளி நீர்ப்பரப்பின் பின்னணியில் நீல மலைகளை நான் காணமுடிந்தது, கடற்புறாக்கள் என் பால்யத்தின் நாரைகள். முன்னால், இரும்பு வேலியின் அருகே புரி நின்றிருந்தாள், புன்னகைத்துக்கொண்டிருந்தாள். அவளது நீண்ட கேசம் இடுப்புவரைத் தொங்கிக்கொண்டிருந்தது. நான் பதிலுக்கு புன்னகைத்தேன். என்னுள் வெம்மையான ஒளி படர ஆரம்பித்தது. மெல்லிய நீராவி மூட்டம் தரையிலிருந்து கிளம்பியது. அது மறைந்ததும் ரீனா எங்களை நோக்கி ஓடிவந்துகொன்டிருந்தாள், நீண்ட சுருட்டை முடி அவள் பின்னால் இழைகளாகப் பறந்துவந்தது. அவள் முகத்தில் வெட்கமிருந்தது, சந்தன் சொன்ன ஏதோ ஒன்றைக் கேட்டு சிரித்தபடியே வந்துகொண்டிருந்தாள். முழுவேகத்துடன் வந்து கைகளால் என் இடுப்பைச் சுற்றிக்கொண்டாள். ஒரு கணம் அவள் குழந்தைப்பருவத்தில் இருந்ததைப்போலவே இருந்தது, என்னை நம்பிக்கையுடன் பற்றிக்கொண்ட ஈரக் கைகள், வெம்மையான இனிய மூச்சு என் முகத்தில் வீசியது.

 

கடந்த சில வருடங்களில் நான் கணிசமானவற்றை மறந்துபோயிருந்தேன். நமக்குச் சொந்தமானவர் ஒருவர் நம் மீது கொள்ளும் எதிர்பார்ப்பேயில்லாத அன்பு, அதன் பயனாகத் திடீரெனப் பீரிடும் பேரன்பு. அந்தப் பேரன்பு வேறொருவருக்காகவேண்டி தள்ளிவைக்கப்படும்போது அது எத்தனை பரிதாபத்துக்குரியதாகிறது. நான் ரீனாவைக்  கட்டிப்பிடித்தேன். குனிந்து என் கன்னத்தை அவள் சுருண்ட முடியில் வைத்தேன், என் கண்களில் ஈரம் நிரம்பியிருந்தது. அங்கே அமைதியில் நின்றுகொண்டிருக்கையில் பிரம்மபுத்திராவிலிருந்து ஒரு தண்ணீர் தேச இளவரசியைப்போல புரி எழுந்து வருகையில் எத்தனை அழகாக இருந்தாள் என்பதை நினைத்துக்கொன்டேன்.

 

 

வீட்டுக்குச் செல்லும் வழியில், வெறுமையான நெடுஞ்சாலையில், இரு விஷயங்களைச் செய்ய முடிவெடுத்தேன். ஒன்று எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக ரெபெக்காவை விட்டு அகல்வது. இரண்டு வீட்டுக்குச் சென்று மா’வைக் காண்பது.

 

திங்கள் மதியம் நான் மான்செஸ்டருக்குத் திரும்பிவிட்டேன். ரெபெக்கா என்னைக் கண்டு மகிழ்ச்சியாயிருந்தாள். கனிவுடனும், அழகாகவுமிருந்தாள், என் முடிவை அவளிடம் சொல்ல முடியவில்லை. ஆனால் கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்தது, கருணையுடையவனாய் இருக்கக்  கொடூரமாயும் நடந்துகொள்ளவேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே பல்கலைக்கழகத்தில் ஒரு கோப்பை காப்பிக்கு மத்தியில் நான் அவளை விட்டுப் பிரியப் போவதை தெரிவித்தேன்.

 

‘நாயே’ என்று சொன்னாள், கண்ணீர் கட்டுக்கடங்காமல் அவள் மூகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்கள் முறைத்துப்பார்த்தனர். ரெபெக்கா அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

 

அவள் கெஞ்சவோ இரைஞ்சவோ இல்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது, மாறாக அவள் என்னிடமிருந்து திடமாகத் திரும்பிச் சென்றாள் அவள் கண்னீரை விட அதுவே என்னை அசைத்தது. அவள் வலியுடன் எதிர்கொள்ளவிருப்பவற்றை நினைத்துக்கொண்டேன், கிறிஸ்துமஸை அவள் பெர்றோர்களுடன் செலவிடவேண்டும், அவர்கள் என்னைவிட அவளையே அதிகம்  தாழ்ந்தவளாக உணரச் செய்தவர்கள்.

 

நான் வீட்டை காலி செய்தேன், அது ரெபெக்காவின் தந்தை அவளுக்குத் தந்த பரிசு, அமித் பட்டேலின் டிட்ஸ்பரி வீட்டிற்குச் சென்று தங்கினேன். விடலை இளைஞர்களின் விடுதலையுணர்வும் சுத்தமற்ற உற்சாகமும் என்னை புதுப்பித்தன. அந்தப் பருவத்தின் மந்தநிலையையும் மீறி என்னுள் ஒரு செடி முளைத்தது. அலுவலகத்தில் இரு வாரம் விடுப்புப்  பெற்றுக்கொண்டேன். வீட்டிற்குப்  பயணச் சீட்டுக்களை பதிவு செய்தேன். பிப்ரவரி முதல் வாரத்தில் நான் அங்கே இருப்பேன்.

 

மா என்னைக் கண்டதில் மகிழ்ச்சிகொண்டாள், அவள் சொல்ல மாட்டாள், ஆனால் நான் இருக்குமிடத்தை சுற்றிக்கொண்டேயிருந்தாள், என்னை உற்று நோக்கியபடியே, அவளது அழகிய தலையை ஒருபக்கம் சரித்தபடியே…

 

அந்தப் பழைய படங்களை நான் பார்த்த சில நாட்களுக்குப் பின்பு ஒரு காலை வேளை நாங்கள் புல்வெளியில் அமர்ந்திருந்தோம், தேனீர் அருந்திக்கொண்டு படகுகள் ஆற்றில் விரைவதைப் பார்த்துக்கொண்ண்டிருந்தோம், வியப்புடன் அவள் எழுந்து உள்ளே விரைந்தாள். உடனே திரும்பி வந்தாள், ஒரு தடித்த பழுப்பு உறையை எடுத்து வந்தாள்.

 

‘இது என்னது?’ நான் கேட்டேன்.

 

என்னிடம் தந்துவிட்டுச் சொன்னாள் ‘இத மறந்தே போனேன், மன்னிச்சிரு, புரி உன்கிட்ட குடுக்கச் சொன்னா.’

 

நான் அதைக்  கவனமாகத் திறந்ந்தேன். உள்ளே சில தாள்கள் இருந்தன. அறிமுகமில்லாத கையெழுத்தில் – அவள் யாரையாவது எழுதச் சொல்லியிருக்க வேண்டும் – பின்வரும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன ‘என் மகன், துருபஜீத் மஹந்தாவுக்கு’

 

அது அவளுடை உயில். அவளுக்குச் சொந்தமாயிருந்த ஒன்றையும் எனக்கே விட்டுச் சென்றிருந்தாள். அவள் திருமணத்திற்காக டெயுட்டா ‘சிக்ஸ் மைல்’ பகுதியில் வாங்கித் தந்திருந்த நிலம்.

 

நான் கற்பனைகளில் மிதப்பவன் அல்ல ஆனால் அந்தக்கணம் புரியின் திடமான கைகள் என்னைச் சுற்றி அணைப்பதையும் அவளது வெல்வெட்போன்ற கன்னம் என்னை அழுத்துவதையும் நான் உணர்ந்தேன்.நீர்ப்பறவைகளின் சத்தங்களை ஏந்திக்கொண்டு ஆற்றின் திசையிலிருந்து காற்று வீசியது,  நான் என் கோப்பையை உயர்த்தினேன், புரிக்காக, அவள் எங்கே இருந்தாலும்.

 

தமிழாக்கம் சிறில் அலெக்ஸ்

மாயவி(த்)தை- ஜானவி பரூவா

தேசபக்தர்- ஜானவி பரூவா.

பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா

‘விழிப்பு’- ஜானவி பரூவா

முந்தைய கட்டுரைகே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27