‘விழிப்பு’- ஜானவி பரூவா

அனுஜை வீட்டுக்குக் கொண்டுவந்த அந்த நாளில் மலையையே புரட்டிவிடும் என்று தோன்றுமளவுக்கு பலமான காற்று வீசிக்கொண்டிருந்து. அந்தக் கருமையான காற்று நதியில் இருந்து உருவானது. செங்க்குத்தான கரையில் ஏறி, வெண்ணிற மணலை வாரி வீசியது. எந்தப் பாதுகாப்புமில்லாத அந்த ஊரின்மீது அந்த மண்ணை கொடுமையாக பொழிந்து சென்றது.

உமாவுக்கு அந்தப் புயல் நன்றாக நினைவிருந்தது. அந்தப் புயல் அவளுக்குள் உருவாக்கிய சீற்றத்தை அவளால் மறக்க முடியவில்லை, தன்னையறியாமல் வந்த அந்த  கட்டுப்பாடில்லாத, வெறுப்பூட்டும் தனித்த கோபம் அது. அதுபோன்ற ஒன்றை அவள் அதுவரை உணர்ந்ததில்லை. அன்று இருளிலில் மூழ்கிவிடாமலிருக்க அவள் அந்தப் புயலை நேருக்குநேர் எதிர்கொள்ளவேண்டியதாகயிருந்தது. அனுஜின் தலைமாட்டிலிருந்த எண்ணை விளக்கை அந்தக் காற்று ஒவ்வொருமுறை அணைக்கும்போதும் அவள் தன் நடுங்கும் கைகளால் அதை மறுபடி ஏற்றினாள். உடனடியாக அந்தக் காற்று மறுபடி அணைத்தது. உமா மீண்டும் மீண்டும் பற்றவைத்துக்கொண்டிருந்தாள், தன் கைகளின் பதட்டத்தால் தானே அதைத் தட்டிவிடும் வரை. அந்த விளக்கு குளிர்ந்த சிமிண்ட் தரையில் கவிழ்ந்து கிடந்ததது. அதிலிருந்து சிந்திய மின்னும் எண்ணைப்படலம் விரிந்து படர்ந்து பரவிக்கொண்டிருந்தது. கடைசியில் தன் முயற்சியைக் கைவிட்ட உமா தளர்ந்து அமர்ந்தாள். முதலில் அவளிடமிருந்து அழுகை மெதுவாக வெளிப்பட்டது, அனுஜின் சடலத்தைச் சுற்றியிருந்த வெள்ளைத்துணியிலிருந்து வெளிப்பட்டிருந்த வெளிறிய பாதத்தில் அவள் பார்வை சென்றதும் அவளது எலும்புகள் உருக அலறும் புலம்பல் அவளிடமிருந்து மிருகத்தனமாக வெளிப்பட்டது.

ஜதின் அழவில்லை. அவர் அழுவார் என உமா எதிர்பார்க்கவும் இல்லை. அவள் அணையும் தீபத்துடன் போராடிக்கொண்டிருக்கும்போது அவர் அமைதியாக, வெள்ளை சடோரில் மூடிய ற்று மேலுடம்புடன் சுவரில் சாய்ந்து கால்மடக்கி அமர்ந்திருந்தார். உமா ஓலமிடத்தொடங்கியதும் அவளது இந்தக் கடும் போராட்டத்தால் அதிர்ச்சியடைந்தவர் போல கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தார். பின் தன் காலை பக்கத்தில் கொண்டுவந்த முட்டியில் முகம் புதைத்தார்.

அனுஜின் சவப்பெட்டியை அவர்கள் தூக்கிபோது உமா வெறிபிடித்த நிலையிலிருந்தாள். விவரிக்கமுடியாத திகிலால் அவள் ஆட்கொள்ளப்பட்டிருந்தாள், தன் உடலின் சதையே எரிக்கப்படப்போவதைப் போல, ஆம் அது அப்படித்தான் இருந்தது. தன் தொண்டைவரை பித்தம் ஏறியதை உணர்ந்தாள். அது அவளது சதை தான், தனது சதைலிருந்துவந்த மென்மையான சதை, தனது ரத்தத்தின் சொந்த ரத்தம், தான் ஒன்பது மாதங்கள் தனக்குள் பாதுகாத்து சுமந்த எலும்பும் தோலும், அது இப்போது எரியவிருக்கிறது. உமா எழுந்து அனுஜின் குளிர்ந்த உடலின் மீது பாய்ந்துவிழுந்தாள். சிலர் விரைந்து அவளை இழுக்க முயன்றனர். அவள் கைகளை அடித்தும் கால்களை உதைத்தும் அவர்களை வசைபாடினாள். ஒருவழியாக அவளை சடலத்திலிர்ந்து விலக்கித் தூக்கினர், இருந்தாலும் அவள் அது கிடத்தப்பட்டிருந்த மூங்க்கில்பாயின் பிடியை விடவில்லை. அவள் இறுகப்பிடித்திருக்க, அவர்கள் அவளை வலுக்கட்டாயமாக இழுக்க, அவளது விரல்கள் கொக்கிகளைபோல பாயைப் பிடித்திருக்க, பாயின் நுனிகள் அவளது மெலிய விரல் நுனிகளைக் கிழித்தது தனது வெள்ளைச் சடோர் மேல் ரத்தத்துளிகள் சிதற கடும் சீற்றம் கொண்டிருந்தாள்.

அவளது விரல்கள் குணமடைந்துவிட்டன. வெறும் ரத்தமும் சதையுமானவைதானே அவை. அவை ரத்தம் சிந்தி அவளது வெள்ளைச் சடோரை நனைத்து ஒருவருடம் சென்றுவிட்டது. காயங்கள் ஆறினாலும் அவள் விரல்கள் முன்பிருந்ததுபோலில்லை.  அவற்றால் அவள் சங்கடமடைந்தாள். நிறம்மாறிய தோலுக்குள் நகங்கள் புதைந்திருந்தன, பல இடங்களில் வெடித்திருந்தன, வெடிப்பின் முனைகள் கருப்பாக கறைபடிந்திருந்தன, ஒருகாலத்தில் மென்மையாக இருந்த அந்த விரல்கள் இப்போது தடிமனாகவும் மரத்துப்போயும் இருந்தன. அங்கு தோல் தடித்து சில நேரங்களில் மெல்லிய சடோர்கள் அதில் பட்டு கிழியும் அளவுக்கு இருந்தன. உமாவுக்கு வெறும் நாற்பது வயது தான்,இளமையானவள் தான் ஆனால் அவளது விரல்கள் அவள் வயதுக்கு ஒவ்வாதவையாக இருந்தன.

இந்த விரல்கள் ஒருகாலத்தில் நீண்டு  மிருதுவானவையாக இருந்தன. அவள் தனது விரல்களை பால் க்ரீமாலும் குழந்தைகளுக்கு பூசும் எண்ணையாலும் சீராட்டினாள் யாரும் கவனிக்காதபோது எலுமிச்சையைப் பிழிந்து அழுத்தித் தேய்த்தாள். சில சமயங்களில் நகப்பூச்சும் போட்டாள். முதலில் அவளுக்கு நகப்பூச்சு யோசனையைச் சொன்னது அனுஜ். அப்போது அவனுக்கு பத்து வயது.

பிக் மீ கடையின் அந்தக் கூட்டத்தில்,  சிவப்பு நிற குப்பியை அவன் கண்டுபிடித்து எடுத்தான்.

“அந்த நிறத்தை எடுங்க அம்மா” என அவனது மெல்லிய உறுதியான உடலை அவள் மீது சாய்ந்து வலியுறுத்தினான். ஆனால் அவள் அந்த நிறத்தை எடுக்க தயங்கி பிங்க் வண்ணம் தேர்ந்தெடுத்தாள். படுக்கையறையின் மங்கிய ஒளியில், கொளுத்தும் மதிய வெயிலை மறைத்த திரைகளால் மறைத்தும், துருவும் பார்வைகளிலிந்து மறைந்தும் அனுஜ் அவளுடைய நீண்ட விரல்களில் பளபளக்கும் பிங்க் நிறப் பூச்சை கவனமாக அடித்தான். அதற்கடுத்த சில நாட்களுக்கு தனது மென்மையாக கேசத்தை அழகாகக் கோதிக்கொண்டாள்,  மேசையில் அமரும்போது தனது விரல்கள் நன்றாகத்தெரியும்படி கையை வைத்து அமர்ந்தாள். பேசும்போது தனது கைகளை ஆட்டிப் பேசினாள் இப்படி  அந்த விரல்களை அவள் பெருமையாகக் காட்டிக்கொண்டாள்.

ஆனால் யாரும் அதைப்பற்றி பேசவில்லை, ஒருதடவை கூட. ஜதின் வழக்கம்போல அக்கறையற்ற பார்வையில் இருந்தது, இவள் தனது வாழ்க்கையில் எதற்கு இருக்கிறாள் என்றே அவருக்குத் தெரியாதது போல இருந்தது.

ஜதினின் தங்கையான மோனி உடனடியாக அதைக் கவனித்துவிட்டாள். ஒரு கணம் அவளது கூரிய கண்கள் மின்னின, உதட்டுச்சாயம் பூசப்பட்ட வாய் இறுகியது, ஆனால் எதுவும் சொல்லவில்லை. உமாவுக்கு நிறைவைத் தரும் பாராட்டைத் தர அவள் எப்போதும் விரும்பமாட்டாள். அனுஜ் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும்தான் அவளுக்கு அந்த பாராட்டு கிடைத்தது.

“அம்மா, இவை மிக அழகாக இருக்கின்றன” என்று சொல்லி ஒவ்வொரு விரலுக்கும் தனித்தனியே முத்தம் கொடுத்தான்.

இந்த விரல்கள் இப்போது அவனை அருவருப்படையச் செய்யும் என்று கூரிய வேதனையோடு நினைத்தாள். இப்போதெல்லாம் முகத்தைக் கழுவிக்கொள்வதும், எப்போதாவது முடியை சீப்பால் சீவி கொண்டை போட்டுக்கொள்வதும்தான் அவள் செய்யும் அதிகபட்ச அலங்காரம். தான் மிகவும் விரும்பிய தைலங்கள், எண்ணைகள்,அலங்காரப் பூச்சுகள் கொண்ட குப்பிகளை எல்லாம் அவள் தூக்கியெறிந்துவிட்டதால் வெறுமையாக இருக்கும் அலங்கார மேசையின்முன் எந்த அலங்காரமும் இல்லாமல் அமரும்போது அவள் தனது சிவப்பு பொட்டு வைத்துகொள்வதை கூட மிக வலிந்து தான் செய்ய வேண்டியிருந்தது.  இருந்தாலும் அவள் அப்படி அமரும்போது ஜதின் படுக்கையில் படுத்திருப்பதையோ, கை நாற்காலியில் அமர்ந்திருப்பதையோ பார்க்கும்போது எங்கே அவரையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் தன்னைச் செலுத்த தனது சந்தன நிற நெற்றியில் பொட்டு வைத்தக்கொள்வாள்.

அலங்கார குப்பிகளை அப்புறப்படுத்தியபோல தனது பளிச்சென்ற சேலைகளையும், மென்பட்டு ஷிபான்களையும், மற்றும் டெல்லி மும்பை மற்றும் கல்கத்தா பயணங்களில் ஆசையுடன் வாங்க்கிய அழகிய அச்சுக்கள் கொண்ட ஜோஜெட்டுகளையும் அப்புறப்படுத்திவிட்டாள். என்ன அழகான சேலைகள் உமா என அவளது தோழிகள் அவற்றைப்பற்றி வழக்கமாகச் பாராட்டும்போது அந்த வார்த்தைகளில் பொறாமை ஒளிந்திருக்கும். அவற்றை எல்லாம் அட்டைப்பெட்டிகளில் அடைத்து பரண்மீது ஏற்றிவிட்டாள்.

வெறுமையான முகத்துடனும், எளிய ‘மூக மேகலா’-வைச் சுற்றிய பருத்தியிலான சடாருடனும் இப்படி அவளை முதன்முதலாக பார்த்த அவளது அம்மாவின் உதடுகள் வெறுப்பால் நெளிந்தன.

“வழக்கம்போல நீ அதீதமாகச் செய்கிறாய்” என்று சொன்னாள்.

“இதையா அதீதம் என்று சொல்வீர்கள்” என்று உமா பதிலுக்குக் கத்த விரும்பினாள், இருந்தாலும் அமைதி காத்தாள்.

அம்மா தொடர்ந்தாள் . “நீ பேசுவாய் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது எனக்கே தெரிந்திருக்கவேண்டும், நீ வாய் திறந்து பேசுவதற்குள் வானமே இடிந்துவிழுந்துவிடும்”

பிரம்பு நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்திருந்த அம்மாவை உமா நிமிர்ந்து பார்த்தாள். அந்த பழகிய முகத்தில் அவள் உள்ளூர அறிந்த உணர்ச்சியிருந்தது, ஒவ்வாமையும் கோபமும் கலந்திருந்தது அவளது மெல்லிய உதடுகள் சுழித்து அதன் ஓரங்கள் கீழ் நோக்கியிருந்தாலும் எதிர்பாரதவிதமாக அவளது கண்கள் குளமாகியிருந்தன. அந்தக் கண்ணீர் சிந்துவதற்குள் உமா எழுந்து திரும்பினாள்.

“நான் கொஞ்சம் தேனீர் கொண்டுவருகிறேன் ” என்றாள்.

எரிவாயு அடுப்பில் கொதிகலன் கொதிக்க உமா அடுப்பு வைக்கப்பட்டிருந்த மேடையில் சாய்ந்து நின்றாள். அவளது தலை கனத்தது. அவளது அம்மாவுக்கு அவளிடமிருந்து என்ன வேண்டும். ஒவ்வொருவரும் அவளிடம், அவளால் தரமுடியாத எதைத் தான் எதிர்பார்க்கிறார்கள்? வார்த்தைகளா ? உரையாடலா, நகைச்சுவையா, சிரிப்பா, அவ்வளவு தானா இன்னும் ஏதாவதா.

ஜதின் அவளிடம் பேசுவதே இல்லை, அதுமட்டுமல்ல யாரிடமும் பேசுவது இல்லை, அது எல்லோருக்கும் ஏற்புடையதாயிருக்கிறது. அவன் அமைதியான குணமுள்ள அதிகம் பேசாதாவன் அது நல்ல பழக்கம் என்று சொல்கிறார்கள், ஆண்களிடமும் பெண்களிடமும் வேவ்வேறு குணங்கள் பிடிக்கின்றன போலும்.

ஆனால் அமைதி எப்போதும் உமாவுக்கு எளிதில் கைவிடாத தோழியாக இருந்தது. இந்தத் தோழமை அவளுக்கு மிக உதவியாக இருந்துவந்துள்ளது. கண்டிப்பான அவளது தந்தையின் வீட்டில் அவர்மீதான அச்சத்திலிருந்து காத்தது, அவளது அம்மா இயல்பாக வீசும் பழிச்சொற்களிலிருந்து இருந்து தப்பிக்க உதவியது. எப்படி இருந்தாலும் அவளது வாயாடியான சகோதரிகள் அந்த பெரிய வீட்டை நிறைக்குமளவுக்கு போதுமானப் பேச்சைப் பேசினார்கள். ஜதினுடைய வீட்டிலும் அமைதி அவளுக்கு உண்மையாக துணையாக எப்போதும் அவளைச்சுற்றி இருந்தது,  அவளது மாமியார் மற்றும் மோனியின் திட்டுகளில் இருந்து அதுவே அவளைக் காத்தது. அது அவளுக்கு இயல்பான பழக்கமாகி அவளது அமைதியான குணத்தை வடிவமைத்தது.

அவளது எண்ணத்தை மாற்றும்படியும், இதுவரை அவளறிந்த அனைத்தையும் தலைகீழாக்கும்படியும் பின்னர் அனுஜ் வந்தான். முதலில் அந்தப் பேச்சு, அவன் கொழுகொழுவென அழகாக, கட்டிலிலோ படுக்கையுலோ தனது புசுபுசுவென்ற கால்களை காற்றில் ஆட்டும் போது பேசும் மழலைச் சத்தமாக இருந்தது. அவள் பேசியபோது அவனும் மழலைஒலி எழுப்பினான். அதனால் தன் தன் உள்ளம் பொங்குவதும் அது தன் தளைகளை அறுத்து வான்வரை பறப்பதும் அவளுக்கே ஆச்சயமாகயிருந்தது.

அனுஜ் சீராக வளர்ந்தான். மெதுவாக திக்கித் திக்கி பேசத் துவங்கியிருந்தாலும் அந்த உரையாடல் பொருளுடைய உரையாடலாக இருந்தது. அவன் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான், காலையில் அவன் கண்விழிக்கும்போது ஆரம்பிக்கும் சொல்லருவி அவன் இரவில் தூங்குவது வரைத் தொடரும், உமா அவளது மகனுக்கு ஈடு கொடுக்கவேண்டிருந்தது. முதலில் அதற்காக அவள் முயற்சிசெய்ய வேண்டிருந்தது, பிறகு அதை அவள் ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அனுஜ் அன்றைய கதைகளுடன் பள்ளியிலிருந்து திரும்பிவருவதற்கு காத்திருக்கத் தொடங்கினாள். அவன் அனைத்தைப்பற்றியும் பேசினான், ஆசிரியர்களைப் பற்றி, மற்ற பையன்களைப்பற்றி, அவனை பள்ளியில் கொண்டுவிடும் ரிக்ஷாக்காரரைப் பற்றி, ஜொர்புக்குரியில் தண்ணீர் மட்டம் எள்ளவு இருக்கிறது என்று காலையில் பார்த்தது பற்றி என அவன் வானத்தின் கீழ் உள்ள அனைத்தப்பற்றியும் பேசிக்கொண்டேயிருந்தான். அரசியல், புவியியல், பொருளாதாரம் என அவன் பேச்சு முன்னேறி ஹிந்தி பாடல்கள் வரை வந்தது. அவன் மேலும் மேலும் எனப் பேசிகொண்டே செல்ல அவள் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் அவளுக்கு நிறைய சொல்லிக்கொடுத்தான். உதாரணமாக ஹிந்திப் பாடல்கள். ஹிந்தியில் ஒரு வாக்கியம் கூட பேசத் தெரியாத அவள் ஜீ தொலைக்காட்சியயின் ச ரி க ம ப தொலைக்காட்சித் தொடரின் ஆர்வமான ரசிகையாக மாறிவிட்டாள். அனுஜும் அவளும் அந்தில் ஒரு நிகழ்ச்சியைக் கூட தவறவிடுவதில்லை.

தொலைக்காட்சியின் முன் அமர்ந்ததும் “இது டிஸ்கோ நேரம்”  என்ற பாடலை அவன் பாட ஆரம்பிக்க அவள் சிரிப்பாள்.

அவளது உச்சரிப்புபற்றி இரக்கமில்லாமல் கேலி செய்வான். அவள் ஹிந்திப் பாடல்களை தனது அஸாம் உச்சரிப்பில் பாட அவன் படுக்கையில் விழுந்து புரண்டு சிரித்து கேலி செய்வான்.  அவன் மிக அழகாகப் பாடுவான், அவன் ஹிந்தியில் பேசுவதைப் பார்க்கும் யாரும் அவன் ஹிந்திக்காரனாக பிறந்தவனில்லை என நம்ப மாட்டார்கள். அவன் மொழிகளைக் கற்றுக்கொள்வதில் திறமையானவனாக இருந்தான். பெங்களூர் பொறியியல் கல்லூரியில் இருந்த ஒரே வருடத்தில் அவன் கன்னட மொழியை மிகச் சரளமாகப் பேசக்கற்றுக்கொண்டுவிட்டான்.

அவளது மகனான அனுஜ் அவளை மெதுவாகவும் நயமாகவும் அவளது அமைதிகோட்டையில் இருந்து வெளிவரச் செய்தான்.

கொதிகலன் சத்தம் எழுப்பியது உமா உடனடியாக சக்கரை மற்றும் பால் இல்லாத தேனீரை ஒரு கோப்பையில் ஊற்றி சில பிஸ்கட்டுகளை தட்டில் அடுக்கினாள்.

“இன்னொரு விஷயம்” உமா தட்டை மேசையில் வைத்ததும் அவளது அம்மா பேசத் தொடங்கினாள் “நீ எப்போதாவது நாங்கள் சொலவதைக் கேட்டிருக்கிறாயா? நாங்கள் சொல்லியபோதே நீ இன்னொரு குழந்தையைப் பெற்றிருக்கவேண்டும்”

உமா நிமிர்ந்து உட்கார்ந்தாள். அந்தத் தட்டு அவளது நெஞ்சத்துக்கு கவசம் போல இருந்தது.

“இரண்டாவது குழந்தையா” அவள் குரல் இடறியது “என்னால் அது முடியாது என உனக்குத் தெரியும் அம்மா… மருத்துவர்கள் அது அபாயம் என்று சொன்னார்கள்”

“அது என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும்” என்று அம்மா கடுமையான குரலில் தொடர்ந்தாள் “உன் வாழ்க்கையில் அப்படி என்ன பெரிய அபாயம், சொல்லு” என்றாள்

உமாவிடம் பதிலேதும் இல்லை.

அனுஜ் பிறந்திருந்த தினத்தில்  விடாப்பிடியான வலி தன்னை தன் முழுக் கட்டுப்பாடில் வைத்திருந்ததைத் தவிர வேறேதும் பெரிதாக நினைவிலில்லை. அந்தத் துன்பம் முடிவில்லாததாக இருந்தது.  காலை மயங்கி மாலையாகவும், மாலைஇரவுக்குள் அமிழ்வதும் என அது முடியாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. அந்த வலி மேலும் மேலும் என தொடர காலையொளி கொஞ்சம் ஆறுதலாகயிருந்தது. அந்த வலியை அமைதியாகப் பொறுத்துக்கொள்ள தன்னாலியன்ற அனைத்தயும் செய்துபார்த்தாள், பிறகு கதறியழுது இந்த வலியில் இருந்து எப்படியாவது தன்னைக் காக்கும்படி கடவுளிடம் வேண்டினாள். ஆனால் அதற்கு முடிவென்பதே இல்லாமலிருந்தது. கடைசியாக பெண் மருத்துவர் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக ஆகிவிட்டிருப்பதாகச் சொன்னார்.  ஆளமாக உள்ளூர உருவாகிய சிக்கலில் குழந்தையின் தலை சிக்கி, அவளது கருப்பை கிட்டத்தட்ட சிதையும் நிலையில் இருந்தது. அவர்கள் அறுவைசிகிச்சை செய்யவேண்டியிருந்தது. அடுத்த நாள் மதிய நேரத்தில் அவள் வயிற்றை அறுத்து கதறியழும் குழந்தையை எடுத்தனர். அன்று பிறகு அவள் மயக்கதிலிருந்து தெளிந்தபின் வந்த மருத்துவர்கள் வந்து அவள் மறுபடி கருக்கொள்வது ஆபத்து என எச்சரிக்கை செய்தனர்.

அதனால் உமா கவலைப்படவில்லை, அவள் இன்னொரு குழந்தையை விரும்பவில்லை. அவளுக்குள் இருந்த அவளுக்குள் முழுவதும் பரவியிருந்த கடினமான வெற்றிடங்களை அனுஜ் நிரப்பினான். இரவில் அவன் தனது அருகில் படுத்திருக்கும்போது அவனது சிறிய இதயத்தின் துடிதுடிப்பை அவளது நெஞ்சோடு உணரும்போது அவள் எப்போதும் உணர்ந்திராத முழுமையை உணர்ந்தாள்.

அதிகமாக வளர்ந்திருக்கும் தனது வீட்டு புல்தரையில் நடக்கும்போது அதில் நுனியுரசும் மேகலாவின் இரைச்சல் போல ஒரு சிந்தனை இன்நாட்களில் அவளை எப்போதும் கவலையடையச் செய்தது. ஒருவேளை அவள் அனுஜை மிக அதிகமாக நேசித்துவிட்டாளா? மிக அதிகமாவது எதுவுமே நல்லதற்கில்லை. அனுஜ் தான் அவள் வாழ காரணமாகயிருந்தான், அதை அவள் தன்னையறியாமல் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் தான் அவளது இதயமாக இருந்தான், அவள் அப்படிக்கூப்பிடவும் செய்தாள். எனது செல்ல  குட்டி இதயமே என்று. அவளது அதீத அன்பின் வழியாக கொடும்விதியை அவளே வரவழைத்துவிட்டாளோ.

ஒருவேளை ஜதினின் வழிமுறையே நல்லது போலும். திருமணமாகி இந்த இருபது வருடங்களில் அவர் இருக்கமான உணர்ச்சியற்றவர் என்றுதான் நினைத்துவந்தாள். அவரைப் பார்த்தால், அவர் உணர்ச்சி என்ன என்பது ஒருபுறம் இருக்க அவர் என்ன நினைக்கிறார் என்றுகூட கண்டுபிடிக்கமுடியாது. இப்போதும் கூட அவர் வாழ்க்கை அவளை விட்டு எங்கோ வெகுதொலைவில் இருக்கிறது.

ஜதினுக்கு அனுஜின் இழப்பு ஒரு பொருட்டே இல்லையோ என்று கூட சிலசமயம் நினைப்பாள். அவர் அப்படிப்பட்ட தடயங்களைப் காட்டுவது மிகச் சொற்பமே. ஆனால் ஒவ்வோருமுறை இவ்வெண்ணம் தோன்றும்போதெல்லாம் உடனடியாக மனம் வருந்தி அந்தக் கேள்வியை உள்ளிருத்துக்கொள்வாள். கண்டிப்பாக ஜதினும் அந்த இழப்பை உணர்வார். அதைப்பற்றி அவளிடம் அவர் பேசியதில்லை, ஆனால் கண்டிப்பாக அனுஜின் இழப்பை உணர்வார்,

ஒருமுறை அனுஜூக்கு கைபிசகு ஏற்பட்டது நினைவுக்கு வந்தது. அப்போது அவனுக்கு நாலு வயது. அது ஒரு கடும் கோடை நாளின் காலை, ஜதினும் அனுஜும் முன்னால் இருந்த தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர், நனைந்து ஒட்டிய ஆடைகளுடன் உமா வராந்தாவில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து பார்த்துகொண்டிருந்தாள். ஜதின் அனுஜின் இடது கையைப் பிடித்து சுற்றினான். அனுஜ் விட்டு விட்டு மகிழ்ச்சியுடன்  சிரித்துக்கொண்டிருந்தது அவளுக்கு நினைவிருக்கிறது. திடீரென க்ளிக் என ஒரு சத்தம் கேட்க உமா பதறி நிமிர்ந்துபார்த்தாள். அவள் பார்க்கும்போது அவன் சுருண்டு விழுந்து இடது முழங்க்கையை வித்தியாசமாகத் தாங்கி சுருண்டு விழும் காட்சியைத்தான் அவள் பார்த்தாள்.

உமா தனது இருக்கையில் இருந்து தாவியெழுந்து மேகலாவை கணுக்கால் வரை தூக்கிப்பிடிந்து தோட்டத்தை நோக்கி ஓடினாள். அவனை நோக்கி அவள் குனிந்து பார்க்க தனது வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.

“வலிக்குது அம்மா” என்று சொன்னபடி கண்களை மூடினான். உமா தனது கையை அவனது வெள்ளை முகத்தில் வைத்தபோது அது ஈரமாக குளிர்ந்திருந்தது. அவளது இதயம் உறைந்தது. அவள் அவனருகில் மண்டியிட்டு அவளது நெஞ்சில் காது வைத்துக் கேட்டாள், அவனது இதயம் துடித்துக்கொண்டிருந்தது, அவளது மூச்சு கூர்மையாகயிருந்தது. அவள் நிமிர்ந்து பார்க்கையில் ஜதினின் முகத்தில் இருந்த பார்வையைப் பார்த்து ஆச்சர்யமடைந்தாள், எப்போதும் உணர்ச்சியற்ற நிலையிலிருக்கும் அவர் முகம் வித்தியாசமாகயிருந்தது. அச்சத்தாலும் வலியாலும் அவர் முகம் நெளிந்திருந்தது.

அனுஜின் முழங்கை மெதுவாக குணமானது. மீண்டும் அனுஜ் வழக்கம்போல மகிழ்ச்சியானவனாக ஆனான். ஆனால் ஜதினின் திகில்கொண்ட கண்கள் உமாவுக்கு வெகுகாலம் நினைவிலிருந்து அகலவில்லை.

எனவே ஜதினுக்கும் உணர்ச்சியிருக்கிறது. ஆழமாகக் கூட. ஆனால் ஏன் அவர் உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை என உமாவுக்குப் புரியவில்லை. ஒருமுறை மோனி தான் வழக்கமாகச் செய்யும் பொருளற்ற ஏதோ ஒரு சீண்டலால் உமா அழுதுகொண்டிருக்கும்போது “உனக்கு இப்படிச் செய்ய ஏன் அவர்களை அனுமதிக்கிறாய்” என்று கேட்டார் “நீ அனுமதித்தால் மட்டுமே அவர்களால் செய்ய முடியும்”  என்றார்.

ஜதினின் வார்த்தைகள் அவளுக்கு ஒரு திறப்பாக இருந்தது. அன்றிலிருந்து ஜதினின் தாயும் மோனியும் அவளை வருத்தப்படச் செய்யமுடியவில்லை. உடனடியாக ஒரு கேள்வி அவளுக்கு உதித்தது. இதே போன்ற பாதுகாப்பு முறையை ஜதினிடமும் கையாளலாமா என்று. கடைசியில் அது வேண்டாம் என முடிவுக்கு வந்தாள். அதற்குப் பதில் ஜதினின் அக்கறையற்ற தன்மையால் எப்போதும் இருக்கும் வலிக்கு தன்னை ஒப்புக்கொடுப்பது என முடிவு செய்தாள், அதனால் சிலசமயம் மகிழ்ச்சிகூட கிடைக்கும் என்ற நம்பிக்கையால்.

சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன என்பதை உமா ஒப்புக்கொள்வாள். ஒரு நாள் அனுஜ் தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்தான், அவர்கள்  ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி படகில் பயணம் செய்யவேண்டுமென. வழக்கத்துக்கு மாறாக எதுவும் செய்யாத வழக்கம் கொண்ட ஜதின் இந்தத் திட்டத்தைக் கடுமையாக மறுத்தார் ஆனால் அனுஜ் தன் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை. அவர்கள் சுக்லேஸ்வர் ‘காட்’டில் ஒரு சிறிய படகை வாடகைக்கு அமர்த்தி படகின் குறுகிய தளத்தில் ப்ளாஸ்டிக் இருக்கையில் அமர்ந்தனர். ஆற்றின் எதிர் நீரோட்டத்தில் படகு மெதுவாகச் சென்றது. அதுதான் உமா பிரம்மபுத்திரா நதியை முதன்முதலாகப் பார்த்தது, அவளது வாழ்க்கை முழுவதும் இந்த நதிக்கரையில் தான் வாழ்ந்தாள் என்றாலும் நதியைப் பார்த்ததில்லை என்பது நம்பமுடியாத விஷயம்.

நதியின் குளிரால் தனது மேலாடையை வைத்து தன்னைச் சுற்றிக்கொண்டாள். படகு மெதுவாகச் செல்ல நதியைச் சுற்றியுள்ளக் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தன.  உயரம் குறைவான மலைகள் அந்த பரந்த நதிக்கு அரணாக இருபுறமுமிருந்தன. வலது புறத்தில் கலெக்டரின் பங்களா நதி நீருக்கு மேல் இருப்பது போலத் தோன்றியது. அவளது இடப்புறத்தில் இருந்த அந்த அடர்ந்த காட்டுக்குள் எங்கோ டோல் கொபின்டொவின் ஆலயம் இருக்கிறது.  அப்போதும் அனுஜ் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்தன். ஆனால் இந்தமுறை அவனது பேச்சில் அவள் கவனம் செல்லவில்லை. அவள் இந்த நதியில் கிடைக்கும் வித்தியாசமான அமைதியில் மூழ்கியிருக்க நினைத்தாள். தனது சாதாரணமான இயல்பு வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதைபோல இருந்தது. இங்கு இருக்கும் வாய்ப்புகள் தரையில் நினைத்துப்பார்க்கமுடியாதவை.

அவர்கள் கார்குலி மலையைப் பார்ப்பதற்கு கொஞ்சம் முன்னரும், நதியின் வளைவுக்கு முன்னரும் ஒரு மேட்டுக்கு வந்து சேர்ந்தனர். நதியிலிருந்து குளிர்காலத்தில் வந்தொதிங்கிய வெண்ணிற மணலாலன கரை அது. படகுக்காரர் எஞ்சினை நிறுத்த, படகு அந்த கொந்தளிக்கும் தண்ணீரில் ஆடியபடி நின்றது. மூவரும் மரத்தாலான வழியில் பளபளக்கும் மணலை நோக்கி இறங்கினார்கள். நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது அது கைப்பிடியளவு மண்ணை காற்றிலிறைத்துக்கொண்டிருந்தது. தொலைவானத்தில் சில பட்டங்கள் காற்றோட்டத்தில் நீந்திக்கொண்டிருந்தன. ஒரு இனம்புரியாத மகிழ்ச்சிக்கு ஆளானாள் உமா. திடீரென ஒரு எண்ணம் தோன்றியது இங்கு வரத்தான் அவள் எப்போதும் விரும்பியிருந்தாள். அஜினும் ஜதினும் அவளுடனிருக்க அந்த நதி தொடுவானம் நோக்கிப் பாய்வதை பார்த்துக்கொண்டு அவள் இங்கேயே காலம்காலமாக இருந்துவிடலாம் என்று எண்ணினாள்.

சூரியன் மறைந்துகொண்டிருந்தது. தங்கப் பாளங்கள் போல சாய்வான சூரியக் கதிர்கள் நேராக தண்ணீருக்குள்  இறங்கின. உமா நீரோட்டத்தைப் பார்த்தபடி, சரைகாட் பாலத்தைப் நோக்கி அந்த மணலில் அமர்ந்தாள், ஜதினும் அவளருகில் அமர்ந்தார்.

“அழகான காதல் தருணம்” என அனுஜ் பின்னாலிருந்து சிரித்தான். “தயங்காதீங்க, இருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு என்னை மகிழச்செய்யுங்கள்” என்றான்.

‘டேய்,’ என உமா கடிந்துகொண்டாள், ஆனால், ஜதின் மெதுவாகஅருகில்வந்து, அவளது கையை அவனுள் எடுத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அனுஜ் அவர்கள் பின்னால் இருந்து வந்து அவர்களின் தோள்களைச் சுற்றிக் கட்டிக்கொண்டான்.

பாலத்தின் கருப்புக் கம்பிகளுக்குப் பின்னால் இப்போது சூரியன் இப்போது  எரியும்தட்டு போல இருந்தது. அதைச் சுற்றி வானம் நெருப்புபோல இருந்தது, சூடான பிங்க், எரியும் ஆரஞ்சு மற்றும் கிரிம்ஸன் அனைத்து நிறங்களும் ஒன்றுடனொன்று கலந்து இருந்தன. உமா தனது சிறிய குடும்பத்தைச் சுற்றி சூரியன் அணைத்திருப்பதைப் போல உணர்ந்தாள்.

அனுஜ் இருந்த வரை உமா தன்னைச் சுற்றியுள்ள மனித வாழ்க்கையின் துடிதுடிப்போடு எப்படியாவது இணைந்திருப்பதை உணர்ந்தாள், ஆனால் இப்போது அவள் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது போல் இருந்தது. அனுஜ் அவள் அருகில் இருந்த வரை, அவள் தனியாக இருக்கவில்லை. இப்போது அவளைக்கு முன்னால் இருந்த தரிசு நிலத்தோடு தனியாக போராடுவதாக உணர்ந்தாள்.

அனுஜ் இறந்து ஒரு வருடம் கடந்துவிட்டது.

அவனது முதல் வருடாந்திர நினைவு(ஷ்ரத்தா) நாளில், உமா படுக்கையறையில் இருந்து வெளியேற மறுத்தாள். அவள் ஒருபுறமாக சுருண்டு அசைவில்லாமல் படுக்கையில் படுத்திருந்தாள், அவளுடைய மனம் அலைந்து திரிந்தது, அவள் அதைத்தன் கட்டுப்பட்டிலிருந்து விடுவித்து, அது செல்லும் மகிழ்ச்சியான இடங்களுக்கு ஆவலுடன் பின்தொடர்ந்தாள். அது அனுஜ் சிறுவனாக இருந்தபோது  பக்கத்து வீட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபோது அவள் தூரத்தில் இருந்து பார்த்த நாளுக்கு அழைத்துச் சென்றது.காலையின் பிரகாசமான ஒளி அவனது பழுப்பு நிற முடியில் சுடரென பிரகாசித்தது. அவன் ஒரு பந்தை சிக்ஸர் அடித்து சூரியனை நோக்கிச் செலுத்த  உமா மூச்சுவிட மறந்து மெய்மறந்து பார்த்தாள். உற்சாகமடைந்த  சிறுவர்கள் கைதட்ட, உமாவின் கன்னங்கள் பெருமிதத்தில் சிவந்தன. உற்காசத்தில் அவளுக்குள் எழுத உற்சாகக் கூவலைக் கட்டுபடுத்தி அவள் தனது வாயில் மேல் கைகளைப் பொத்திக்கொண்டாள்.  விளையாடும்போது அவள் தன்னை நோக்கிக் குரலெழுப்பதை அனுஜ் விரும்புவதுல்லை.. அவளே வியக்கும்படி அனுஜ் தனது மட்டையை தரையில் விசிறிவிட்டு அவளை நோக்கி ஓடிவந்தான். அவன் நுழையும்படி கைகளை நீட்டி  அவள் அவனது சூடான பழக்கமான உடலை அவளுக்கு நெருக்கமாக, அவனது பரபரப்பான இதயம் அமைதியடையும்படி அணைத்துக்கொண்டாள்.

ஒரு எண்ணம் உமாவை அடியைப் போல் தாக்கியது: இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக யாரும் அவளை அணைத்துக்கொள்வதில்லை. அவளை அணைக்க யாரும் இல்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இயல்பாக அணைக்க அல்லது பிடிமானத்துக்குக்கூட யாரும் இல்லை என்பது யோசிக்கமுடியாதது.  அவளது கணவர் அன்பானவராகவும் அதைக் வெளிக்காட்ட தயங்காதவராகவும் இருந்தால் அவள்  அதிர்ஷ்டசாலி. நண்பர்கள், சகோதரிகள் சில சமயங்களில் பெற்றோர் கூட அப்படியிருந்தால் நல்லது ஆனால் உமா ஒருபோதும் இவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருந்ததில்லை.

ஒரு வருடம் முன்பு, அனுஜ் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நாளில், துலியாஜனிலிருந்து வந்திருந்த மோனி, உமாவைச் சுற்றி தனது கைகளை அணைத்திருந்தாள்:உமா அவற்றை எஃகு கம்பிகளைப் போல உணர்ந்தாள். அவளுடைய சகோதரிகளும் அந்த நாளில் உமாவை கொஞ்சம் ஆறுதலாக அணைத்தனர்; அவை அவளுடைய உறுதியான உடலின்மீது பட்டாம்பூச்சி இறக்கைகள் போல இருந்தன. உமா கண்களை மூடி எரியும் கண்ணீத்துளிகளைக் கட்டுப்படுத்தினாள்

மறுநாள் காலையில் ஜதின் ஒரு படகு சவாரிக்கு தன்னுடன் வரும்படி அவளை ஒப்புக்கொள்ளவைத்தார்.

அவர்கள் மீண்டும், சுக்லேஷ்வர் காட்டில் இருந்து புறப்பட்டனர், ஆனால் இந்த முறை அது நடுப்பகலாக பரபரப்பான செயல்பாட்டில் இருந்தது. உமா நிலைகொள்ளாமல், அமைதியற்றவளாக உணர்ந்தாள். சீரற்று எழும்பிய காற்று நீரின் மேற்பரப்பை உரசிச்சென்றது. அதனால் ஆற்றில் சிறிய வெள்ளை அலைகள் விழித்தெழுந்தன.

எதிர்பாராத விதமாக, உமா ஒரு உறுதியான விருப்பம் தன்னை ஆட்கொள்வதை உணர்ந்தாள்.

‘நான் பெங்களூருக்கு செல்ல விரும்புகிறேன்,’ என்றாள். ‘நான் சொல்வதைக் கேளுங்கள் ஜதின் , நான் அனுஜின் கல்லூரிக்குச் சென்று நானே நேரில் பார்க்க விரும்புகிறேன்.’ ஜதின் குழப்பமடைந்தார். ‘இது ஒரு பைத்திக்காரத்தனமான யோசனை,’ என்றார். ‘இதனால் இப்போது என்ன பயன்?’

ஆனால் உமா மனம் மாறுவதுபோலில்லை. இந்த விருப்பத்தின் காரணம் அவளுக்கே முழுமையாக புரியாவிட்டாலும் அங்கு சென்றாகவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தாள்.

ஜதின் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டார், மூன்று நாட்களுக்குப் பிறகு உமாவும் அவரும் பெங்களூருக்கு பறந்தனர். உமா இதற்கு முன்பு ஒருபோதும் நகரத்திற்கு வந்ததில்லை, ஆயினும் அவர்கள் விமான நிலையத்திலிருந்து தங்கள் ஹோட்டலுக்கு பரபரப்பான சாலையில் சென்றபோது, அது பழகிய இடத்தைப்போல உணர்ந்தாள். அனுஜ் நகரத்தைப் பற்றி அதிகம் பேசியிருந்தான், மேகமற்ற பிப்ரவரி வானத்தின் மீது  ஊதா நிறத்தைத் தெளிக்கும் ஜகாரண்டா மரங்கள் , அதிரும் சாலைகள், அடர்த்தியான பசுமையான மரங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்க்கும்  சிவப்பு ஓடுகளுடன் கூடிய பழைய பங்களாக்கள் என அவன் சொன்னது எல்லாம் அவள் அறிந்திருந்தாள். இது அழகான இடம், அனுஜ் மிகவும் இந்நகரத்தை மிகவும் நேசித்தான், ஆனால் உமாவுக்கு அதன்மேல் எந்த உணர்வும் ஏற்படவில்லை. அதன்மீது நேசமோ அல்லது பாசமோ இல்லை, ஆச்சர்யகரமாக  பகை அல்லது வெறுப்பு கூட இல்லை.

ஹோட்டல் எம்.ஜி. சாலை  என்ற பிரதான சாலையிலேயேயிருந்தது. அங்கு அவர்கள் வரவேற்பறையில் அவர்களுக்காக் காத்திருந்த அனுஜின் நண்பன் மற்றும் அறைத்தோழனான தருணைச் சந்தித்தனர்.

தருண் கொஞ்சம் சங்கடமாக இருந்தான் , அது புரிந்துகொள்ளகூடியதுதான். அவன் அவர்களைச் சந்திப்பது இரண்டாவது முறையாகும், இவை நல்ல தருணங்கள் இல்லைதான். ஆனாலும் அவன் இரவுணவின்போது நன்கு பேச்சுக்கொடுத்தான். அவன் வளாக வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைகள் குறித்து ஆர்வத்துடன் பேசியபோது உமா தன்னுழெழும் கோபத்தின் கீற்றை உணர்ந்தாள். அனுஜ் வேலைக்குப் போவதில் மிகவும் ஆர்வமாக இருந்தான். அவள் அவனைக் கட்டிகொண்டு, படிப்பதற்காக வீட்டிலிருந்து வெகுதூரம் செல்ல வேண்டாம் என்று அவனிடம் அழுது மன்றாடியபோது, அவன் சிரித்தான்.

‘நீங்கள் ஒரு மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்புவது போல் அழுகிறீர்கள்’ என்று அவன் கிண்டல் செய்தான்.

அவள் இன்னும் அழுதாள்.

‘அழ வேண்டாம், அம்மா,’ என்று சொன்னான். ‘நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள்.’

தருண் மற்றும் ஜதின் இப்போது தங்கள் ஐஸ்கிரீம்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். உமா வெறுமே அதைக் கிண்டிகொண்டிருந்தாள். அதற்குமேல் அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை.

‘அது எப்படி நடந்தது என்று சொல்லு’ என்று அவள் திடீரென்று கோரினாள்.

தருண் திடுக்கிட்டான்.

‘எல்லாமே அந்த அறிக்கையில் இருந்தது, அம்மா,’ என்று அவன் தயங்கினான், ‘காவல்துறையின் அறிக்கையில்…’ ‘ என்று தொடர்ந்தான்

நான் உன்னிடமுருந்து நேரடியாகக் கேட்க விரும்புகிறேன்,’ என்று உமா அழுத்தமாகச் சொன்னாள். சங்கடமாக உணர்ந்த ஜதின் ‘உமா, தயவுசெய்து வேண்டாமே,’  என்றான்

ஆனால் உமா விடாப்பிடியாக இருந்ததால் தருண் தட்டுத்தடுமாறி சொல்ல ஆரம்பித்தான். கல்லூரி விழாவின் கடைசி நாளன்று கல்லூரி வளாகத்தில் ஒரு சண்டை உருவானதாக அவன் அவர்களிடம் சொன்னான். ஒரு சில உள்ளூர் ஆட்களும் வீட்டிலிருந்து வரும் மாணவர்களும் கல்லூரி விடுதிப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர். கலக்கமடைந்த அவர்கள், விடுதி மாணவர்கள் குழுவாக இருந்த இடத்துக்கு ஓடிச்சென்றனர். கோபமடைந்த விடுதி மாணவர்கள் தவறு செய்த ஆட்களை அடையாளம் காணவும் அவர்களை மன்னிப்புக்கேட்க வைக்கவும் முயன்றனர்.  ஆனால் உள்ளூரைச் சேர்ந்த அந்தக் கூட்டம் அதற்கு மறுத்தது. விடுதிவாசிகள் அவர்கள் மன்னிப்புக்கேட்கவேண்டும் எனபதில் பிடிவாதமாக இருந்ததால் பதற்றம்  பெருகியது. இந்த நேரத்தில், உள்ளூர்வாசிகள் மேலும் ஆவேசமடைந்தனர், மேலும் மேலும் ஆட்கள் சேர்ந்து அது பெரிய கும்பலானது. அந்த பெரிய கும்பலில் இருந்து ஒருவன் விடுதி மாணவர்களை நோக்கி கல்லை ஏரிந்தான்.  அது வன்முறை வெறியாட்டத்தைப் பற்றவைக்க போதுமானதாக இருந்தது. அந்த மாபெரும் கும்பல் விடுதி மாணவர்களின் சிறிய கூட்டத்தின் மீது இடியென இறங்கியது. அதிலிருந்து சிலர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. ஆனால் நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது அந்த தறிகெட்ட கும்பல் அவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கியது. நாற்பது நிமிடங்கள் கழித்து அதிகாரிகளும் காவல்துறையினரும் வந்தபோது அந்தக் கும்பல் கலைந்து ஓடியது. அந்தப் புழுதி நிறைந்த தரையில் தாக்கப்பட்ட உடல்களை அவர்கள் விட்டுச் சென்றிருந்தனர்.

அனுஜை அவர்கள் பார்க்கும்போது அவன் இறந்திருந்தான். அவனது தலையில் பலத்த காயங்கள் இருந்தன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இன்னொரு மாணவன் பிறகு இறந்தான். மற்றவர்கள் உயிர்பிழைத்தனர்.

தருண் இப்படி சொல்லி முடித்ததும் உமா தனது காதுகளில் ஒரு ரீங்க்காரத்தை உணர்ந்தாள். இந்த விபரங்கள் இதற்கு முன்னால் அவளுக்குச் சொல்லப்படவில்லை.

காவல்துறை சொன்னது மிகச் சுருக்கமாக இருந்தது, என்ன இருந்தாலும் சம்பவம் நடந்த இடத்தில் அவர்கள் இல்லை என்பதால் அவர்கள் சொன்னதை அவள் எப்படியும் முழுமையாக நம்பவில்லை. அவள் ஜதினைப் பார்த்தாள்; அவர் தனது ஐஸ்கிரீம் கிண்ணத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நிமிர்ந்து தன்னைப் பார்த்துவிடக்கூடாது என உமா வேண்டிக்கொண்டாள், அப்படிப் பார்த்தால் அவளால் பொங்கிவரும் அழுகையைக்க் கட்டுப்படுத்த முடியாது.

மறுநாள் காலையில் ஜதினும் உமாவும் அனுஜின் கல்லூரிக்குச் சென்றனர். நகரிலிருந்து ஒரு மணிநேரத்தில் செல்லும் தொலைவில் இருந்தது.

வேறொரு நிலைமை என்றால் உமா அந்தப் பயணத்தை ரசித்திருப்பாள். கிராமப்புறங்கள் அழகாக இருந்தன, போகும் வழியெங்கும் புதர்மண்டிய பயன்படுத்தபடாத நிலங்கள் இருந்தன. அவை அவளுடைய அசாமின் செழுமையான பசுமையான மிகுந்த நிலப்பரப்பு போன்றவையல்ல.

அனுஜ் பற்றிய எண்ணங்கள் இப்போது அவளை ஆட்கொண்டிருந்தன: தன்னை நோக்கிகொண்டிருக்கும் இந்தப் பாறைகளை அவனும் பார்த்திருப்பான். இப்போது இவர்களின் கார் ஏறும் இந்த மேட்டின் மீது அவனும் ஏறி இருப்பான்.இந்த அன்னிய நிலத்தைப் பார்த்தபோது என்ன எண்ணியிருப்பான்? அவன் வீட்டைப் பற்றி நினைத்திருப்பானா? வீட்டின் முன்னிருக்கும் காடாக வளர்ந்திருக்கும் முற்றம் அவன் கண்களை நிரப்பியிருக்குமா? தன் வீட்டை நினைத்து ஏங்கியிருப்பானா? தன்னை நினைத்து ஏங்கியிருப்பானா? இப்போது தன்னை நினைத்துக்கொண்டிருப்பானா?

கல்லூரி அவர்கள் கண்முன்னே தோன்றியது. கார் வாயில்கள் வழியாகச் சென்று ஒரு தாழ்வாரத்தில் நின்றது. அங்கு புடவையில் இருந்த ஒரு இளம்பெண் அவர்களுக்காகக் காத்திருந்தாள்.

‘நான் ஷார்தா’ என்றாள். ‘வருக.’

கல்லூரி இப்போது விடுமுறையில் இருந்தது. பெரிய தாழ்வாரங்கள் மற்றும் அமைதி குடிகொண்ட உயர்ந்த அறைகளுமாக இருந்தது. கேண்டீனுக்குப் பின்னால் இருந்த சம்பவம் நடந்த இடத்துக்கு ஷார்தா அவர்களை அழைத்துச் சென்றாள்.

நிழலற்ற அந்த இடத்தில் உமாவும் ஜதினும் அருகருகே நின்றனர். இரக்கமில்லாத சூரியனின் கீழ்நின்ற உமாவின் சுயக் கட்டுப்பாடு குறையத் தொடங்கியது; தன் முழங்கால்கள் நடுங்கத் தொடங்குவதை அவள் உணர்ந்தாள். விழுந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக அவள் புழுதி நிறைந்த தரையில் சட்டென அமர்ந்தாள். நிலம் உலர்ந்து மென்மையாக இருந்தது. அதில் தனக்குத் தெரிந்த மிக விலைமதிப்பில்லாத ஒன்றைத் தேடுவதுபோல தனது விரல்களால் துளாவினாள்.

அனுஜ் தனது இறுதிக் கணங்களில் அவளுக்காக அழுதானா? அவள் அந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தாள்? மிகத்தொலைவில் இருந்தாலும் அவளது சின்ன இதயம் இங்கு இறந்துகொண்டிருந்தபோது எப்படி அதை அவள் உணராமல் இருக்கமுடிந்தது?

உமாவைப் பற்றியிருந்த அந்தப் புயலின் வேகம் சட்டெனக் குறைந்தது. அதனால் ஒரு விசித்திரமாக அமைதி அவளுள் எழுந்தது.   அனுஜை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியாதென்றும், அவனது பழக்கமான உடற்சூட்டை தனது கைகளில் இனியெப்போதும் உணரமுடியாதென்றும் இப்போது அவள் உணர்ந்தாள், அந்த வலி மட்டுமே தனக்கு எஞ்சியிருப்பது என்றும் உணர்ந்தாள், ஆச்சர்யகரமாக அதை அவள் விரும்பினாள். அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தாள், அது தன் தோலைக் கிழித்து ரத்தம் சிந்த வைத்தபோது மகிழ்ச்சியடைந்தாள். அப்படியாவது தன்னுள் இன்னும் ரத்தம் மிச்சமிருப்பதை உணரமுடிகிறதே.

ஒரு வெப்பமான பிற்பகலில் உமா சமையலறை மேடையில் வறுத்துக்கொண்டிருந்தாள். சாளரம் வழியாக உயரம் குறைவாக எல்லைச் சுவருக்கு அப்பால் திறந்தவெளியைக் காண முடிந்தது. சுமார் பத்து அல்லது பன்னிரண்டு வயதுடைய ஒரு சிறுவன் களத்தில் ஒரு பந்தை உதைத்துக் கொண்டிருந்தான். அந்தப் சிறுவனைப் பார்த்ததால் கவனம் சிதறிய நேரத்தில்  கரண்டி கெராஹியில் விழுந்தது. சூடான எண்ணெய் அவள் மணிக்கட்டில் தெறித்தது.

உமா வலியால் கத்தினாள். ஜதின் விரைந்து வந்து சமையலறை மேசையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். உமா இப்போது சத்தமாக அழுது கொண்டிருந்தாள். வலி அவ்வளவு பெரிதாக இல்லாவிட்டாலும் அவளால் கண்ணீர் பெருகுவதை தடுக்க முடியவில்லை.

ஜதின் ஒரு பாத்திரத்தில் சிறிது பனிக்கட்டியைக் கொண்டுவந்தார். அவர் அவளது கையை எடுத்து குளிர்ந்த நீரில் நனைத்தார்.

‘கடவுளே, மிகவும் வலிக்கிறது’ என்று உமா அழுதாள்.

‘நான் இருக்கிறேன் உமா, நான் இருக்கிறேன்”  என்றார் ஜதின். ‘என்ன செய்யவேண்டுமென்று என்னிடம் சொல். என்னிடம் காட்டு. என்ன செய்வதென்றே தெரியவில்லையே”

பிற்பகலின் சூரிய ஒளியின் கீற்று மேசையின் குறுக்கே விழுந்து கொண்டிருந்தது. உமா தனது நாற்காலியில் நகர்ந்தபோது அது அவளது வெறும் முன்னங்கையை மென்மையாகத் வருடியது. உமா தனது வலது கையால் கண்ணீரைத் துடைத்தாள். அவள் மெதுவாக முன்னோக்கி சாய்ந்து ஜதினின் மார்பில் தலையை வைத்தாள். பின்னர் அவள் வலது கையை அவனைச் சுற்றியவாரு, மென்மையாக, அவனது அரவணைப்பிற்குள் தன்னை ஒப்புக்கொடுத்தாள்.

தமிழில் சுரேஷ் பாபு

விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா

பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா

தேச பக்தர் – ஜானவி பரூவா

முந்தைய கட்டுரைவழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்