எதிர்விமர்சனம் -கடிதம்

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

 

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… மீதான என் பார்வை..

 

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

கல்லூரி இறுதிவருடத்தில், வளாகத்தில் நிகழ்ந்த நேர்முகத் தேர்வில் எனது முதல்  பணிக்கான ஆணையை பெற்றேன். ஹைதராபாத்-சிகந்தராபாத் இரட்டை நகரின் மையத்தில் அமைந்திருந்த ஒரு ஐந்து மாடி கண்ணாடி கட்டிடத்தில் பணியிடம். சில நாட்கள் மச்சவதாரத்தில் இருந்து, இன்று  ஹுசைன் சாகர் ஏரியின் நடுவில், எழுந்து நின்று ஆசியளிக்கும் புத்தரின் பார்வையில் இயங்கிய ஆரம்பகால நாட்கள். அதுநாள் வரை பள்ளி கல்லூரிகளில் சுமந்து கற்றவைகளை நினைவிலிருந்து அழித்து, மென்பொருளாக்க செயல்முறை  அடிப்படைகளைப் பெற்று வளர்சிதை மாற்றமடைந்து கொண்டிருந்தேன். வீட்டு உணவு மற்றும் கல்லூரி விடுதி உணவு என கட்டுக்குள் இருந்த ருசியின் வீச்சு, பாரடைஸ் பாவர்ச்சி பிரியாணிகள், வட இந்திய, ஆந்திர வகைகளில் சிறந்தவைகள் என  நீட்சியடைந்து மனதினை நிரப்பிய அனுபவங்களைப் பெற்ற இரண்டு வருடங்கள்.

 

ஹைதையில் ஆரம்பித்து பின் சென்னையில் தொடர்ந்து வரும் இந்த 15 வருட மென்பொருள் துறை வாழ்க்கையில் மூன்று வகையான நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கின்றேன்.

 

  1. ஸ்டார்ட் அப் எனப்படும் 20 முதல் 30 ஆட்கள் மட்டுமே கொண்ட மீக்குறு நிறுவனங்கள் ( உதாரணமாக அலைபாயுதே படத்தின் நாயகன் பணியிடம்). பொதுவான செயல்திட்டமற்ற (Procesless) இத்தகைய  அலுவலங்களில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கற்பதற்காவும், புதிவற்றை பரிசோதனை செய்யவும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும், உடனடி வளர்ச்சிக்கு வாய்ப்புண்டு. . இத்தகைய நிறுவனங்கள் நல்ல நிகர லாபத்தில் இயங்கினாலும், ஏற்கனவே தனக்கான சந்தையை நிறுவிய  குறு மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்திற்காக விழுங்கி (acquisition and merging) சுவடில்லாமல் தன்னுடன் இணைக்கப்படும் ஆபத்தும் உண்டு. வேறு வேறு தருணங்களில் பணியாற்ற நேர்ந்த நிறுவனங்களில் இரண்டு முறை இந்த கைப்பற்றப்பட்டு விழுங்க நேரிடும் அனுபவத்தினை காணப் பெற்றிருக்கிறேன்.

 

  1. 1000+ ஆட்கள் கொண்ட பெரு நிறுவனங்கள். அதன் எதிர்கால இலக்கினை நோக்கிய நிகழ்கால செயல்முறைக்கு,   கறாரான பொதுவான செயல்திட்டம் இருக்கும். 360 டிகிரி கண்காணிப்பு என்கிற வகையில் ஒரு நபர், தான் பணிபுரிய நேரிடம் பலவர்களிடமிருந்து ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் பெறுவார். சகோதரத்துவமும், பணித்தகவல்களைப் பரிமாறுவதும் கவனத்துடன் நிகழும். தன் கண்டறிதல்களை தன்னை சூழ்ந்த அனைவரிடமும் விவாதித்து நிறுவும் ஆற்றல் அதிகமாக கொண்டவர்கள் இத்தகைய நிறுவனங்களில் தாக்கம் அளித்து,  வளர்ச்சி பெறுவர். செயல்திட்டத்தில் பிசிகும் மிகச்சிறு தவறுகள் கூட சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்படும். முதல்வகை நிறுவனங்களை இத்தகைய நிறுவனங்களே பெரும்பாலும், நல்ல விலைகொடுத்து கைப்பற்றி, படிப்படியாக தன் செயல்முறைத் திட்ட வடத்திற்குள் கொண்டு வரும். தேவைகளைப் பொறுத்து அவ்வப்போது திரளான பணிநீக்கமும், ஆள் சேகரிப்பும் இங்கு நடைபெறும். இத்தகைய நிறுவனத்தில் என்னை பொருத்திக்கொள்ள முடியாமல் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்.

 

  1. 200 முதல் 500 வரை ஆட்கள் கொண்ட குறு நிறுவனங்கள். என்னுடைய மனதிற்கு நெருக்கமானவை இத்தகைய நிறுவனங்கள்.  செயல்திட்டம் நெகிழ்வுத்தன்மை கொண்டிருக்கும். தனக்கான நேரத்தில் வழங்கப்பட்டிருக்கும் பணியை முடித்துவிட்டால்,  பிடித்த வேலைகளில் சுதந்திரமாக இயங்கலாம். தன் வருடாந்திர அறிக்கையை (Yearly review) படிக்கும் மேலதிகாரி தவிர எவருக்கும் கட்டுப்பட தேவையில்லை. ஒரளவு சகோதரத்துவம் இருக்கும். சீரான இடைவெளியில், மேம்படுத்தப்பட்ட தரமான மென்பொருளை உருவாக்குவதே முதன்மை நோக்கம்.  இத்தகைய நிறுவனங்களுக்கான அறைகூவல்கள். சந்தையின் போட்டிக்கிடையில் , மற்ற நிறுவனங்களால் கைப்பற்ற படாமலிருக்க வேண்டும். தங்கள் காலூன்றி நின்றிருக்கும் வரம்பில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, புதிய தொழில்நுட்ப கருவிகளை கற்று அறிய வேண்டும். ஆகவே எழுதப்படும் நிரல்களின் (Program/coding/Bug fixing) திறன் பல்வேறு நிலைகளில் தரக்கட்டுப்பாடு கொண்டிருக்கும்.

 

மனித உழைப்பினை குறைக்கும் நோக்குடன், விரைந்த  தீர்வினை வழங்கும் நம்பகமான அந்த மென்பொருள், கண்டங்கள் கடந்த பல பேர்களின் இருபத்தைந்தாண்டு விடாத முயற்சியால்,  விவாதத்தால் கட்டியெழுப்பட்ட சொற்களன். ஆரம்ப கட்டத்தில் மீச்சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் பணிபுரிந்த நான், அந்த குறு நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு சுவரை உடைத்து என்னை பொருத்திக் கொண்ட வழி வதையாக இருந்தது. முதன்மையாக காரணம் அங்கு ஆரம்பத்தில்,  நான் எழுதிய நிரல்களின் ஒவ்வொரு வரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் மனதளவில் புண்பட்டேன்., பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, அதன் நிலைத்தன்மைக்கு எந்த எதிர் பாதிப்பும் வழங்காமல் என் நிரல்களை பொருத்துவதற்கு நேரம் ஆனது. முயற்ச்சி எடுத்து கற்றுக்கொள்ள தேவையான நேரமும் ஆலோசனைகளும் எனக்கு வழங்கப்பட்டது. அந்த மென்பொருளின் நம்பகத்தன்மையை நீட்டிக்க நான் வழங்கிய நேர்மறையான பங்கிற்கான பாராட்டும் வெகுமதியும் பெற்றேன். முதலிரண்டு நிறுவனங்களில் நான் வழங்கிய பங்களிப்பு நீண்ட காலம் தொடர்ந்து பயன் அளிக்காமல், பெரும்பாலும் சாம்பலாகி அழிந்து போனது. ஆனால் மூன்றாவது நிறுவனத்தில் நான் வழங்கிய பங்களிப்பினை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின் அதே நிறுவனத்தில் சேர்ந்த ஒரு இளம் மென்பொருளானுடன் நேரடியாக உரையாடாமல், அவன் விரைவாக கற்கும் வகையில், அவனுக்கு மதிப்பான வேலைநேரத்தை வழங்குவதற்கு விமர்சன தீப்பந்து பரிட்சையில் எரிந்தது போக மிஞ்சிய நிரல்கள் உதவியிருக்கின்றன.

 

புறவயமான சேவையை வழங்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கே அதன் நீடித்த மதிப்பு வழங்கும் சேவைக்காக, இத்தகைய பலமுனை விமர்சனங்ககும், கருத்து மோதல்களும் தேவைப்படுகிறது.  மாபெரும் முன்னோடிகளின் மனங்களால் இன்னல்கள் கடந்து கட்டி எழுப்பப்பட்டு, அதன் நீட்சிக்காக பல வேறு களங்களில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் தமிழிலக்கிய சொற்களனில் தன் தடயத்தை பதிப்பதற்காக உழைக்கும் இளம் படைப்பாளிகள் விமர்சனத்தை எதிர்கொண்டு பரிசீலித்து இயங்குதல் அதன் ஆதாரமான ஒரு பகுதிதான்.

 

என்றும் அன்புடன்,

சிவமணியன்

முந்தைய கட்டுரைஅம்மையப்பம் – கடிதம்
அடுத்த கட்டுரையா தேவி! [சிறுகதை]