அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வாழ்த்துக்கள். இம்முறை அபி விருதுபெறுவது ஓர் அரிய நிகழ்வு. ஒரு ஆக்கபூர்வமான இலக்கியச் சூழல் மிகமெல்லிய குரலையும் கேட்பதாக இருக்கவேண்டும். அபி ஒரு சருகு உதிரும் சப்தத்திலே எழுதியவர். [மலர் உதிரும் சப்தம் அல்ல என்று வேண்டுமென்றேதான் சொல்கிறேன். அவருடையது அந்தியின் கவிதை. அதாவது உதிர்வதன் கவிதை] அவருடைய படைப்புக்கள் மேல் வெளிச்சம் விழுந்துள்ளது மகத்தான ஒரு பணி
அபியின் படைப்புக்கள் பற்றிய ஆவணப்படமும் அவர் பற்றிய நூலும் வெளியாகிறது. அவரைப்பற்றிய பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு எழுத்தாளருக்கு தமிழில் இது ஒருவகையில் வாழ்நாள் முழுக்கக் கிடைக்கும் கவனத்தைவிட பலமடங்கு. அபிக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
செல்வகணேஷ்.டி.எம்
***
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்விழாவை நான் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் செய்திகள் வழியாக கவனித்துக்கொண்டிருக்கிறேன். இன்று இவ்விழாவுக்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் அளிக்காவிட்டாலும் இது ஒரு முக்கியமான இலக்கிய நிகழ்வாக ஆகிவிட்டது. விஷ்ணுபுரம் விருதுபெறுவதே இன்று தமிழிலக்கியத்தில் முதன்மையான கௌரவமாக ஆகிவிட்டிருக்கிறது
இவ்விழாக்களில் தமிழுக்கு வெளியே இருந்து வந்து பங்களிக்கும் படைப்பாளிகளும் முக்கியமானவர்கள். அவர்களின் படைப்புக்களை முன்வைத்து அவர்களின் ஆக்கங்கள் மேல் ஒரு விவாதத்தையும் உருவாக்குகிறீர்கள். இந்த இலக்கிய உரையாடல் முக்கியமானது. ஜான்னவி பருவா இந்த ஆண்டு கலந்துகொள்கிறார். அவருடைய கதைகளை வாசித்தேன். முக்கியமான படைப்புக்கள் அவை. சென்ற ஆண்டு பங்குகொண்ட அனிதா அக்னிஹோத்ரி, அதற்கு முந்தைய ஆண்டு பங்குகொண்ட ஜனிஸ் பரியத் ஆகியோரும் முக்கியமான எழுத்தாளர்கள். மலையாள எழுத்தாளர்கள் கல்பற்றா நாராயணன், புனத்தில் குஞ்சப்துல்லா, டி.பி.ராஜீவன் ஆகியோரும் பங்கெடுத்திருக்கிறார்கள். இவர்களை நான் இப்படித்தான் அறிமுகம் செய்துகொண்டேன். மிக முக்கியமான இலக்கிய உரையாடல் இது.
இவ்வாண்டு பங்குகொள்ளும் கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களைப் பற்றிய அறிமுகமாக வந்துகொண்டே இருக்கும் கவிதைகள் ஆழமான ஒரு அனுபவத்தை அளிக்கின்றன. ஒரு அயல்மொழிப் படைப்பாளியை இப்படி அறிமுகம் செய்துகொண்டால்மட்டும்தான் முழுமையானச் சித்திரம் கிடைக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிதைகள் கண்களுக்குப் படுவதில் பொருளில்லை. கே.ஜி.சங்கரப்பிள்ளையை தமிழ்ப்படைப்பாளியாகவே நினைக்குமளவுக்கு நெருக்கம் உருவாகிவிட்டது
மிகப்பெரிய முயற்சி. மிக வெற்றிகரமான முயற்சி. என் வாழ்த்துக்கள்
எம்.ஆர்.கணேஷ்
***