யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை

கவிதை பற்றிய கட்டுரை: மொழியாக்கம் அழகிய மணவாளன்

 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அப்பா அந்த சைக்கிளில்தான் ஏழாம்மைல் என்ற ஊரிலிருக்கும்  ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியராக போனார். வயல், கடம்பநாட்டு சந்தை, சவறையில் உள்ள அம்மாவின் வீடு, சாஸ்தாம்கோட்டையிலிருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் , ஏ.ஈ.ஓ ஆபீஸ் என அனைத்திற்கும் சைக்கிள் தான். அடூரில் இருக்கும் வங்கிலிருந்து பணயம் வைத்ததை மீட்டு வந்தது அந்த சைக்கிளில்தான். உடல் நலமில்லாத என்னை சூரநாடு அரசு மருத்துமனையிலிருக்கும் தன் நண்பர் டாக்டர். ராகவனிடம் சைக்கிளில்தான் கூட்டிப்போனார். என்னை சீட்டின் முன்னால் இருக்கும் கம்பியில் உட்கார வைத்தார். எனக்கு கேரியரில் தான் உட்காரப் பிடிக்கும். ” உடம்பு சரியில்லை,காற்று அடிப்பதால் தூங்கி கீழே விழுந்துவிடுவாய் ” என முன்னால் உட்கார வைத்துவிட்டார். . கொஞ்ச நேரத்தில் கம்பிக்கு என்னிடம் கோபம் வந்துவிட்டது , கம்பி பொசுங்குவதாக எனக்குத் தோன்றியது. மிக கடுமையாக நடத்த ஆரம்பித்துவிட்டது, என் உடல் வலிக்க தொடங்கியது. முன்னால் சின்ன இருக்கையெல்லாம் அப்போதைய சைக்கிள்களில் இல்லை. கேரியரில் உட்கார்ந்து செல்லும் பிள்ளைகளால் ஆன சைக்கிள்கள் எங்களை கடந்து சென்றபடியே இருந்தன. பின்சீட்டிற்கு ஒரு பிரமோஷன் என்றைக்காவது எனக்கு கிடைக்கும். என் இருபுறமும் தந்தையின் கால்கள் ஒரே தாளத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் இயங்கின. இறக்கம் வரும்போது மூக்கணாங்கயிறு கட்டிய காளை என சைக்கிள் முனக ஆரம்பித்தது. ஏற்றங்களில்  பாதிதூரத்தை  மட்டும்  அப்பா கஷ்டப்பட்டு  ஓட்டினார், மீதியை இறங்கித் தள்ளத்தான் வேண்டியிருந்தது.

சூரநாட்டிற்கு செல்லும் பாதையில் வயல்கள், ஆட்கள், மாட்டுவண்டிகள் தென்னைகள் என பின்னே கடந்து சென்றபடியே இருந்தன. சைக்கிளின் டெம்போவை  என்னால் கேட்க முடிந்தது. சாலையின் செம்மண் நிலத்தில்  சரல்கற்கள் வரிவரியாக தெரிந்தன. அந்த சமயத்திலும் சரல்கற்களை அப்படி என்னால் காணமுடிந்ததை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

ராகவன் டாக்டர் குளித்துகொண்டிருந்தார். ‘யார்?’ என்றார். அப்பா பெயரைச் சொன்னவுடன் ‘ ஓ, இதோ வந்துவிடுகிறேன் ’என ஒரே ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு டாக்டர் வந்தார். நன்கு கொழுத்து உருண்ட வெள்ளை நிற அழகன். எதையோ சொல்லி சிரிக்க ஆரம்பித்தார். கம்யூனிஸ்டுகள் என கேட்ட நினைவு. என்னை பரிசோதித்துவிட்டு  மருந்தெடுத்து கொடுத்தார். டாக்டர் வெறும் துண்டு மட்டும் கட்டிய நிலையிலேயே என் பரிசோதனை முடிந்துவிட்டது, அவ்வளவுதான்.  என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘ இவனுக்கு உடம்பிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. சிரிக்கிறான் பாருங்கள் ’ என அப்பாவிடம் சொல்லி அனுப்பி வைத்தார். பின்பு கொஞ்ச நாட்களுக்கு செய்தித்தாளில் சர்ச்சிலின் படத்தைப் பார்த்தால் எனக்கு டாக்டர் நினைவுதான் வந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பியதும் அப்பா ”பின்னால் உட்கார முடியுமா? கேரியரில்?” என்றார். ”உம்” என்றேன். சீட்டின் கீழிருக்கும் ஸ்பிரிங்கைப் பிடித்துதான் அமர வேண்டும். ஓட்டுபவரின் அழுத்தத்திற்கு இணையாக ஸ்பிரிங் சுருங்கும்போது விரல்கள் அதில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்றங்களில் நம்மை பின்னால் இழுக்கும் விசையிலிருந்து மீள ஸ்பிரிங்கை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். எனக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தால் போதும் என்றாகிவிட்டது.

பள்ளியில் இருந்து சீக்கிரம் வீட்டிற்கு மீளும் நாட்களில் அப்பா சைக்கிளை பழுதுபார்க்க ஆரம்பித்துவிடுவார், இடையில் நிறைய கதைகள் சொல்லிக்கொண்டே. பெரும்பாலும் கைக்கிளில் எந்த கோளாறும் இருக்காது. சைக்கிளை பரிசோதனை செய்யவும் பரமாரிக்கவும் கொஞ்சம் தாமதித்துவிட்டது என்று அவர் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணிக்கொண்டு செய்யும் வேலை இது.  களப்புரையின் வராந்தாவில் வைத்து உத்தரத்தில் கைக்கிளை கட்டித் தொங்கவிடுவார். அப்பாவின் டூல்ஸ் பாக்ஸ் – அறுவைசிகிச்சை கருவிகளுக்கு நிகரான துல்லியத்துடன் – வெளியே வரும். அவை பயன்படுத்த ஆரம்பித்தவுடனேயே கைக்கிள் பல உறுப்புகளாகிவிடும். அப்பா சைக்கிளின் உள்ளுறுப்புகளுடன் மானசீகமாக பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்,. தன்னுடைய சங்கடங்களை அப்பாவிடம் மட்டும்தான் கைக்கிளால் சொல்ல முடியும் என்ற பாவனை அவர் முகத்தில் உண்டாகும். தான் மட்டுமே அறிந்த ஒரு ரகசியத்தை ஆராயும் புராணகால வைத்தியரின் முகபாவம். சைக்கிளை உயிர் என்றே கருதி அதனுடன் உரையாடத் தொடங்கியவர்கள் ஊரில் இருக்கும்  பழைய சைக்கிள் ஓட்டிகள்.

அப்பாவின் நண்பர்கள் இருவர். வடக்கேமலை என்ற ஊரைச் சேர்ந்த வெள்ளை ஜார்ஜ், கருப்பு ஜார்ஜ். சைக்கிள் நிபுணர்கள். பல இடர்களிலிருந்து தங்களை மீட்டெடுத்த ஏராளமான சைக்கிள் கதைகள் கொண்டவர்கள். கட்சி மீட்டிங் முடிந்து இரவில் கருப்பு ஜார்ஜ் வீடு திரும்பும்போது தெங்ஙம் வாய்க்கால் உயர்ந்து கரை  சுத்தமாக இல்லாமலாகி விட்டிருந்தது. அவருக்கு அது தெரியாது. ஆனால் சைக்கிள் கண்டுகொண்டது. நம்பமுடியாது. சைக்கிள் பறக்கும் குதிரையாகி வாய்க்காலை கடந்துவிட்டது. உயிர்பிழைத்துவிட்டார். ஊருக்கு முதன்முறையாக கொசுவலையை அறிமுகப்படுத்தியது இந்த கருப்பு ஜார்ஜ் தான். தன் முதல் ரேலி கைக்கிளை கப்பல் வழியாக அவரது அப்பா கொண்டுவந்தார். மீனவர் அவராச்சன் சைக்கிள் வாங்கியபிறகு மிக உயரமாக , எடை மிகுந்ததாக குத்தூரிலிருக்கும் கொல்லர்களை வைத்து புதிதாக்கிக்கொண்டார். ஒரு பெரிய மீன்கூடை வைக்க வசதியாக இருக்கவேண்டும் கேரியர் என்பது அவராச்சனின் பிடிவாதம். சிவராமபிள்ளை சாரைப் பொறுத்தவரை கேரியர் என்பது  குடை, சோற்று மூட்டை,ஒரு புத்தகம் இவை வைக்கப் போதுமானதாக இருந்தால்போதும். கருணன் அண்ணா ஒரே சாக்கிற்குள் நெல், பரங்கிக்காய், வெள்ளரி ,காராமணிக்காய் இவையெல்லாம் சுகமாக பயணம் செய்ய வசதியாக வாடிய வாழையிலையால் கேரியரின் விலாப்பகுதியை ஆசுவாசப்படுத்தி தயார்படுத்துவார். வீட்டிற்கும் உலகத்திற்கும், தனிமைக்கும் சந்தைக்கும், வேலைக்கும் கனவுக்கும், தெளிவிற்கும் சிக்கலுக்கும்  இடையில்  கைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. தரியின் ஊடுபாவு போல. கேரியரைப் பார்த்து யாருடைய சைக்கிள் என சொல்லிவிடலாம். கைக்கிள் வைத்திருந்த ஒவ்வொருவரும் மாலை, மோதிரம், சலங்கை, வளையல், பூக்கள், பொட்டு, பட்டு, பெயர், நம்பிக்கை  என எதையாவது கூட சேர்க்காமல் அதை முழுமையானதாக உணரமுடியவில்லை. கைப்பிடி ஓரத்தில், சீட்டின் பின்னால் ஏதேனும் கட்டி அலங்கரித்து சைக்கிளை உருமாற்றியபடியே இருந்தனர். சைக்கிள் இடைத்தரகர்கள் சீட்டை மெருகேற்றுவதை மட்டுமே வைத்து தனித்தன்மை கொண்ட சைக்கிள் என  நம்பவைத்தனர்.  அப்பாவும் சைக்கிளை பண்படுத்திக்கொண்டே இருந்தார். அவரின் ஒவ்வொரு பழுதுபார்க்கும் பணியும் அதற்கான தொடக்கம்.

சிலசமயம் பழுதுபார்க்கும் வேலைக்கிடையில் அப்பா சைக்கிள் புராணங்கள் சொல்ல ஆரம்பிப்பார். வெளியம் பக்கத்தில் பூயப்பள்ளி ஸ்கூலில் வேலை பார்த்த சமயம் தான் சைக்கிளில் மிதித்துச்சென்ற தூரங்களைப்பற்றி. ” கூட வேலைபார்த்த ராவுத்தர் சார் வைசூரி நோய் வந்து இறந்த போது நள்ளிரவில் ஓடனாவட்டத்திற்கு செல்ல நேர்ந்தது. போகும் வழியில் இருக்கும் குன்றில் உள்ள காவை கடக்கும்போது வயல் ஓரமாக எல்லா ஆபரணங்களும் சூடிய  ஒரு அழகி சைக்கிளை நிறுத்தினாள். நள்ளிரவாகிவிட்டதால் தன் வீடுவரைக்கும் கூட நடக்க இயலுமா என கேட்டாள். செல்லும்வழியில், அவள் சிரித்தபோது தோன்றி மறைந்த தேற்றை பற்களை வைத்துதான் யட்சி என அடையாளம் காண முடிந்தது. அப்படியே பயத்தில் என் உடல் மரத்துப்போய்விட்டது. நான் தங்கியிருந்த உதியூர்வீட்டின் மூத்தவர் அந்த வழியில் பிளஷர் காரில் கடந்து வந்ததால்தான் என்னால் தப்பிக்க முடிந்தது. அடுத்த நாள் கூட ஆளைக்கூடிக்கொண்டு சைக்கிள் எடுக்கப்போனபோது அதில் பாலைப்பூக்கள் இருந்தன.” என புராணத்தைத் தொடர முயற்சி செய்த அப்பாவை “ சும்மா பசங்களை பயப்படுத்த என்ன வேண்டுமானாலும் புழுகலாமா? ” என அம்மா சொன்னதும் கதையின் தாளம் தவறும். கூடவே பழுதுபார்க்கும் வேலையும் நின்றுவிடும். காணாமல் போன போல்ட்,நட்களை என் தம்பிதான் எடுத்திருப்பான் என அவன்மேல் கோபப்படுவார். இரண்டு அடி கிடைக்கும். யார் அங்கே வருவதையும் விரும்பாமலாகிவிடுவார். ஃப்ரேம் மட்டுமே கொண்ட சைக்கிள் அங்கே தொங்கிக் கிடக்கும். அன்றும் அதற்கு அடுத்த நாளும் அதே நிலையில்தான் இருக்கும் . பின்பு அதை உயிர்த்தெழச் செய்வது சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருக்கும் தடிமனாக கண்ணாடி அணிந்த குஞ்ஞூஞ்ஞு ஆசான்.

பழைய கடிகாரங்களின் சக்கரங்களைப் போல சைக்கிள் பாகங்கள் ஒவ்வொன்றையும் பொறுமையுடன் பார்த்து பார்த்து இணைத்து நம் எண்ண ஓட்டத்தின் வேகத்துடன் கச்சிதமாக ஒத்திசையும் சைக்கிளாக அதை ஆக்கிவிடும் ஆசானின் கலையை நாம் சலிக்காமல் பார்த்துபடி அமர்ந்திருக்கலாம். ஆசானின் கடையிலிருக்கும் பழைய வண்டிகளில்தான் கடம்பநாட்டின் பலதலைமுறையினர் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டார்கள். ஆர்.எஸ் பணிக்கர் வீட்டின் பின்னுள்ள ஊடுவழிகளில் ஆசான் கடையிலிருக்கும் குட்டி சைக்கிளில் விழுந்து, புரண்டு நானும் தம்பியும் சைக்கிள் பறவைகளாக பறக்க ஆரம்பித்தோம்.

“கழுதைகளாக நடிக்கவேண்டியான குதிரைகள்’ என்ற கவிதையில் ஒரு பகுதி:

கடம்பநாட்டு ஆட்களுக்கு

  பிடித்தவற்றில் சைக்கிள் ரிப்பேரிங்கும் அடங்கும்

  அறுத்த காளைமாட்டைப் போல

  உரித்து தொங்கவிட்டு

  சுமை அழுந்திய தோள்கள்

  பலமுறை சகித்துக்கொண்ட வலிகள்

  பயம் நிறைந்த குழல்கள்

  தழும்புகள், காயங்கள், பியரிங் உட்பூசல்கள்

  இவற்றை பரிசோதித்து

  சைக்கிளின் உள்ளே பயணம் செய்வதுதான்

  கடம்பநாட்டுகாரர்களுக்குப் பிடிக்கும்

  இடித்துவிட்டதால் முக்கோணமோ சதுரமோ

  ஆகிவிட்ட சக்கரங்களை

  மீண்டும் சக்கரங்கள் ஆக்குவது

  இடப்பக்கமோ வலப்பக்கமோ

  வளைந்துவிட்ட ஹேண்டில்பாரை

  நேராக்குவது

  உடைந்த சங்கிலியின் கண்ணிகளை

மீண்டும் இணைப்பது

பழைய தோரணையை மீட்டெடுப்பது

மீண்டும் சைக்கிளாக மீள்வதை

கண்டு ரசிப்பதுதான்

கடம்பநாட்டுகாரர்களுக்கு பிடிக்கும்

 

மேலே குறிப்பிட்டுள்ள பகுதி என் பழையகாலம். என் வீட்டு முற்றத்தில் கழித்த மாலை நேரங்கள். அவை அப்படியே கவிதைக்குள் வந்துவிட்டன. அந்தக் கவிதையின் மற்ற பகுதிகள் பிற ஊர்களிலிருந்து , பல சைக்கிள் நட்புகளிலிருந்து, சமகால வாழ்வின் சுமைகளிலிருந்து என பலவழிகளில் வந்தவை. கூடவே அந்த கவிதையில் சினிமா, இலக்கியம், ஓவியம், அரசியல், சர்க்கஸ், பதினைந்து ஆண்டுகளாக நான் கண்டுவந்த கவிஞர் வைலோப்பள்ளி ஸ்ரீதரமேனோனின் சைக்கிள், சில நண்பர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வைத்திருக்கும் உடற்பயிற்சி செய்யும் சைக்கிள் என பலவற்றின் குறியீடாக விரிந்து சைக்கிள் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.

எனக்கு என்றென்றைக்கும் விருப்பமானவர்கள் சைக்கிளை கழற்றி மாட்டுவதுபோல தன்னை உரித்து புதுப்பித்துக்கொள்ளும் ஆளுமைகள். தங்களில் ஒரு திருத்தம், புதுமையாக்கத்திற்கான யத்தனம், முதிர்ச்சி, நுட்பம் என பலவாறாக பயணிப்பவர்களை எனக்குப் பிடிக்கும். சைக்கிளைச் சுற்றிதான் நடுத்தரவர்கத்தின் இருப்பை நாம் கண்டுகொள்கிறோம்.

நான்கு கால்கள் கொண்ட குதிரையை நான்கு சக்கரங்கள் கொண்ட காருடன் ஒப்பிட இயலவில்லை. குதிக்கும் சைக்கிளை நாம் மானசீகமாக குதிரை அம்சத்துடன் இணங்கிப்போவதாக ஏற்கிறோம். தன் பரிணாமம் வழியாக சைக்கிள் பெற்றுக்கொண்டது இந்த ’குதிரை’த்தன்மையை. நாம் காணமுடியாத தசைகளின் சக்தி பிரவாகத்திலூடே, காணாச்சிறகு வீசும் மாந்தீரிகப் பறத்தல் வழியாக சைக்கிள் பெற்றுக்கொண்டது . ஆனால் இன்றைய சைக்கிள்  புதுப்பித்து கொள்ளும் இயல்பை, அதிகாரங்களை துறந்துவிட்டது. தன்னுடைய இடம் வரலாற்றில் அப்படியே இருக்கிறதா? இல்லையா? என தேடாமல், அறியாமல், புதிய சுமைகளைத் தாங்க காத்திருந்து, பின்வாங்கி, மீண்டு வந்து குனிந்து நிற்கும் கழுதையாக தன்னை பாவித்துக்கொண்டு விட்டிருக்கிறது.. அதனாலேயே விளிம்பிற்கு தள்ளப்பட்டது.  இன்று தன்னை குசேலனாக நிகழ்த்திக்கொள்கிற, அடக்கமே உருவான சைக்கிள் எனக்கு ஆபாசமாக காட்சியளிக்கிறது. சைக்கிளின் இந்த சுயநிராகரிப்பு எனக்குப் பிடிக்கவேயில்லை. வரலாற்றின் முன் பாராமுகமாக, தொன்மங்கள் நிறைந்ததாக,  கிராமத்தனமான மௌனம் மட்டுமாக எஞ்சிவிட்ட சைக்கிளை கழற்றி பரிசோதிக்க வேண்டும் என்றும், நெருக்கமாக அறியவேண்டும் என்றும் தோன்றியது. சிக்கலான யதார்த்தங்கள் நிறைந்த இன்றைய ஊர்களை அறிய நாம் சைக்கிள் வழியாகவும் பயணிக்கலாம் , அதுதான் எளிமை என்றும் தோன்றியது. ”கழுதைகளாக நடிக்க நேர்ந்த குதிரைகள் ” என்ற கவிதை இந்த பின்னணியில் தான் உருவாகி வந்தது.

 

விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1

கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்

காலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை

வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை

பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை

முந்தைய கட்டுரைபலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்
அடுத்த கட்டுரைபுலி : ஜானவி பரூவா