குடிமக்கள் கணக்கெடுப்பு

 

இப்போது குடிமக்கள் கணக்கெடுப்பு, குடியுரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பலரும் கேட்கிறார்கள்.

இச்சிக்கலின் முழுவடிவை உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அரசியல் நோக்கங்களுக்கு உட்பட திரித்து, மிகையாக்கி, கூறப்படும் கூற்றுக்களே நீண்ட கட்டுரைகளாகக் கிடைக்கின்றன. இருதரப்பிலும்

இவற்றுக்கு அப்பாற்பட்டு மெய்யாகவே இதை புரிந்துகொள்ள முடியவில்லை. என்னைப்போலத்தான் இன்று பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் தெளிவாகவே ஒன்று புரிகிறது, இஸ்லாமியர்களிடம் உருவாகியிருக்கும் அச்சமும், ஆவேசமும். அது இப்பிரச்சினையில் இருந்து தொடங்குவதல்ல. அது இந்த அரசு முஸ்லீம் பங்களிப்பே அற்றது என்பதிலிருந்து தொடங்குகிறது. அத்தகைய அரசு இஸ்லாமியர்களின் பங்களிப்பில்லாமலேயே அவர்களின் சமூக அரசியல்நிலைகளை மாற்றியமைக்க முயல்கிறது என்பதில் வளர்கிறது. முத்தலாக், காஷ்மீர் சட்டத்திருத்தம், ராமர்கோயில் தீர்ப்பு என ஒவ்வொன்றாக கூர்கொண்டிருக்கிறது.

இச்சட்டம் அந்த அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பெருக்குகிறது. இது அப்பட்டமாக ஃபாஸிஸம் நோக்கிய நகர்வே. ஜனநாயகம் என்பது பங்களிப்பினூடாக முன்னகரும் அரசியல். இந்த அரசு அதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. தேசம் பொருளியல் சீரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது, நாடெங்கும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்னும் அறைகூவல்கள் சிறுபான்மையினர் மீதான உளவியல் வன்முறை. நேரடி வன்முறைக்கான திட்டம் என அவர்களை எண்ணவைக்கும் உத்தி.

பொருளியல்தளத்தில் இந்த அரசு அடைந்திருக்கும் முழுத்தோல்வியை மறைக்க, அதற்கு ஆக்கபூர்வமாக ஏதும் செய்யமுடியாத நிலையில் சில முதலாளிகளின் கைப்பாவையாக செயல்படவேண்டியிருப்பதை விவாதத்தில் இருந்து அகற்ற, செய்யப்படும் சூழ்ச்சி.ஆனால் இதன் விளைவு இந்திய குடிமக்களில் கணிசமானவர்கள தேசிய எண்ணங்களிலிருந்து விலக்குவது. அவர்களின் ஜனநாயகப் பங்களிப்பை மறுப்பது. நீண்டகால அளவில் மிக ஆழமான பின்விளைவுகளை இச்செயல் உருவாக்கும்.

இது இந்தியாவின் குடிமக்களுக்கு, சற்றே வறுமையைவிட்டு வெளியே வரத்தொடங்கியிருக்கும் கோடானுகோடிகளுக்கு எந்த நன்மையையும் செய்யாது. இது கண்மூடித்தனமான வெறியின், எதிர்காலத்திட்டங்களே இல்லாத குருட்டுத்தனத்தின் வெளிப்பாடு மட்டுமே. இஸ்லாமியரின் அச்சம் ஒரு பக்கம். அதைவிட நவீன ஜனநாயக குடியரசில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் அச்சம் பெரிது. அதில் பங்கெடுக்கிறேன்

***

முந்தைய கட்டுரைகாலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரைசோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி