‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36

பகுதி நான்கு : அன்னையெழுகை – 8

யுயுத்ஸு திரௌபதியின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தான். தான் பேசும் சொற்கள் அவளை சென்றடைகின்றனவா என்று ஐயுற்றான். திரௌபதி பிறர் பேசும்போது எப்பொழுதும் சற்றே விழிகளை சரித்து வேறெங்கோ நோக்கி வேறெதிலோ உளம் செலுத்தி அமர்ந்திருப்பவள் போலிருப்பாள். அது பேசிக்கொண்டிருப்பவரை ஏமாற்றும் ஒரு பாவனை என அவன் அறிந்திருந்தான். அவள் நன்கு உளம் ஊன்றவில்லை என்றும், சொற்களை சரியாக அவள் பொருள் கொள்ளவில்லை என்றும் எதிரில் இருப்பவர்கள் எண்ணுவார்கள்.

அவர்கள் அவள் உளம் கொள்ளவேண்டுமென்று எண்ணும் வார்த்தைகளை பிறிதொரு முறை சொல்வார்கள். நாத்தவறி வந்துவிட்ட ஒரு வார்த்தையை மறைக்கும்பொருட்டு அதைச் சுற்றி பொருளற்ற சொற்களால் ஒரு வளையம் அமைப்பார்கள். அவர்கள் கூற விழைவதென்ன மறைக்க விரும்புவதென்ன என்பதை அவள் எளிதில் உணர்ந்துகொள்வாள். பின்னர் அவள் பேசத்தொடங்குகையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த அனைத்துக்கும் அப்பால் சென்று அவர்களை அவள் பார்த்துவிட்டாள் என்பதை உணர முடியும்.

ஓரிரு முறை அதை தான் அறிந்த பின்னர் யுயுத்ஸு அவளிடம் பேசும்போது தானும் விழிகளை தழைத்து நிலம் நோக்கியபடி சொற்களை கோக்கலானான். அவள் உடலில் சற்று அசைவு எழுகையில், மூச்சொலி மாறுபடுகையில் விழிதூக்கி அவளை பார்ப்பான். அவளை நேருக்கு நேர் பார்த்து பேசுவது கடினமென்று அதன் பின்னரே அவன் கண்டுகொண்டான். அவளுடைய தோற்றம் பேசுபவரில் ஆழ்ந்த அழுத்தத்தை அளித்தது. அவள் ஒரு பெண்ணல்ல, கருவறை வீற்றிருக்கும் தெய்வம் என்பதுபோல. அவளை மானுடர் எவரும் அணுக இயலாதென்பதுபோல. முப்பொழுதையும் எட்டு திசையையும் ஏழு அகநிலைகளையும் நன்கு அறிந்தவள் என்பதுபோல.

அவள் அதற்குரிய பாவனைகளை இயல்பாகவே அடைந்திருந்தாள். எப்பொழுதும் மிகக் குறைவாகவே பேசினாள். மிகத் தாழ்ந்த குரலில் தான் எண்ணுவனவற்றை உரைத்தாள். ஒவ்வொரு சொல்லுக்கும் நடுவே ஆழ்ந்த இடைவெளிவிட்டாள். அப்போது சொற்கள் ஊழ்கநுண்சொற்கள்போல ஒலிதோறும் அழுத்தம் கொள்கின்றன. ஒலியே உணர்த்துவதாகிறது. அவள் பேசும்போது அவள் குரலைக் கேட்கும்பொருட்டு எவராயினும் சற்றே முன்னகர வேண்டியிருக்கும். அது அவள்முன் கேட்பவர் பணிவது போன்ற ஓர் அசைவை உருவாக்கும். உடலில் ஓர் அசைவெழுந்தால் அவ்வசைவிற்குரிய பொருளை உள்ளம் இயல்பாகவே அடைகிறது. தருக்கி நிமிரும் பாவனையை தோள்களில் கொண்டுவந்தால் எதையும் பொருட்டின்றி எண்ணும் உளநிலை அமைகிறது, தோள்கள் குறுகி தலை சற்று தாழ்கையில் உள்ளம் பணிவு கொள்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான். அவள் தன் முன் பணியாது பேசும் எவரையேனும் கண்டிருப்பாளா என வியந்தான்.

அவள் எப்பொழுதும் வினாக்களை முழுமைப்படுத்துவதில்லை. அவ்வினா என்ன என்பதை கேட்பவர் புரிந்துகொண்டு தொகுத்துக்கொள்வதற்காக அடையும் பதற்றமே அவ்வினாவிற்கு அவர் அளிக்கக்கூடிய தடைகளை இல்லாமலாக்கிவிடும். பெரும்பாலானவர்கள் அவற்றைக் கேட்டவுடனே “அரசி?” என்று பணிவுடன் மீண்டும் கேட்பார்கள். அவள் விழி நிமிர்ந்து அவர்களை கூர்ந்து பார்த்து முன்பு சொன்ன வினாவின் ஓரிரு சொற்களை சற்றே மாற்றி மறுபடியும் கேட்பாள். அப்பதற்றத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் மறுமொழியை உளம்நழுவி சொல்லிவிடுவார்கள். உடனே பதறி அக்கூற்றிலிருக்கும் பிழைகளையோ விரும்பாமெய்களையோ மறைக்கும்பொருட்டு சொல்பெருக்குவார்கள். அவ்வாறு தங்களை முழுமையாகவே அவள் முன் படைப்பார்கள்.

பிறர் பேசும்போது சில இடங்களில் அவள் காற்று தொட்ட திரை ஓவியம்போல மெல்ல கலைந்து ஓர் அசைவொலி எழுப்புவாள். ஒரு மூச்சொலி எழும். மிக அரிதாக விழிதூக்கி புன்னகைப்பாள். அவ்வெதிர்வினைகள் அனைத்துமே பேசும் சொற்களுடன் நேரடியான பொருத்தமில்லாமல் சற்றே இடம் மாறி விழுவதை யுயுத்ஸு கண்டிருந்தான். அது பேசிக்கொண்டிருப்பவரை உடனடியாக பதறச்செய்யும். தான் பேசிக்கொண்டிருக்கும் சொற்களைப் பற்றிய அலசல் ஒன்றை தனக்குள் நிகழ்த்திக்கொள்ளச் செய்யும். பிழை இழைத்துவிட்டோமா, பொருத்தமற கூறிவிட்டோமா, எண்ணாப் பிறிதொன்று கடந்து வந்துவிட்டதா என நெஞ்சு துழாவிக்கொண்டிருக்கையில் அவர்களின் சொற்கள் தடுமாறத் தொடங்கும்.

தெளிவுறக் கோத்து பிறர் கூறும் சொற்களில் பொய்யே மிகுதி என அவன் கண்டிருந்தான். அது பொய்யல்ல, மானுடர் எவ்வண்ணம் தங்களை காட்டிக்கொள்ள விரும்புகிறார்களோ அது. எவ்வண்ணம் தங்களை தாங்களே சமைத்துக்கொண்டிருக்கிறார்களோ அது. பெரும்பாலும் அது அவர்களால் வாழ்நாள் முழுக்க பயிலப்பட்டதாக இருக்கும். ஆகவே அதற்குரிய சொற்கள், உளநிலைகள், உடலசைவுகள், முகநடிப்புகள் அனைத்தையும் பழகியிருப்பார்கள். மிகத் தேர்ந்த சொல்சூழ்வோர் மட்டுமே அவர்களின் அந்த பாவனையைக் கடந்து ஊடுருவிச்சென்று அவர்களின் மெய்மையை அடையமுடியும். எஞ்சியோர் பெரும்பாலானவர்கள் அந்தத் திரையையே அவர்களென எண்ணுவார்கள். சற்றே திறன்கொண்டோர் அதை தங்கள் கற்பனையால் கடந்து அக்கற்பனையே அவர்கள் எனக் கொள்வார்கள்.

யுயுத்ஸு அவர்களின் அந்தத் தற்கோப்பைக் குலைத்து உள்ளே செல்ல பல வழிகளை தானே கண்டடைந்திருந்தான். அவர்கள் உருவாக்கும் அச்சித்திரத்தின் ஒருமைக்குள் ஒரு இடைவெளியைக் கண்டடைந்து அதில் விசையுடன் தன்னை செலுத்திக்கொண்டு அவர்களை நிலைகுலைய வைப்பதே அவனுடைய வழக்கம். அவன் சூதன் என்றும் அரசுசூழ்தல் முறையாகக் கற்காதவன் என்றும் அவர்கள் எண்ணியிருப்பதனால் பாம்பு படமெடுப்பதுபோல அவன் எழும்போது அவர்கள் அகம்பதறி நிலைஅழிந்து சொல் சிதறவிடுவார்கள். சில தருணங்களில் கூரிய வினாக்களினூடாக அவர்கள் தங்களை தொகுத்து வைத்திருக்கும் திசையை பிறிதொன்றாக திருப்பிவிடுவான்.

மிக அரிதாக பெரும்பணிவு ஒன்றை நடித்து அவனுக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்களை நம்பவைத்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர்களை தங்களைப் பற்றி பேசவிட்டு அவர்கள் தேவைக்கு மேல் சொல் பெருக்கி தங்களை காட்டிக்கொள்ளவிடுவான். எத்தனை பயின்ற தன்நடிப்பாயினும் அதை ஒருவர் மிதமிஞ்சிச் செய்வாரெனில் அது பொய்யாக ஆகிவிடுகிறது. அது பொய்யென்று அவரே உணர்ந்து மீண்டும் தன் எல்லைக்குள் திரும்பும் பொருட்டு அதுவரை சொன்னவற்றை நகையாட்டாக மாற்றி அல்லது பிறிதொரு கோணத்தை அளித்து சற்றே மறுத்து சொல்லெடுப்பார்கள். அத்திரும்பலினூடாக அவர்களை அவன் அடையாளம் காண்பான்.

ஆனால் திரௌபதி அவ்வண்ணம் தன்னிடம் பேசவருபவர்களைக் கடந்து உள்ளே செல்வதை அவர்களே அறிந்திருப்பதில்லை. அவளிடம் பேசிவிட்டு எழுந்து செல்லும்போதுகூட மெய்யாகவே தங்கள் காப்புகளை அவள் கரைத்துவிட்டதை, கடந்து சென்று தங்களை துளியென்றாக்கி அவள் புரிந்துகொண்டதை அவர்கள் உணர்ந்திருக்கமாட்டார்கள். கூர்மிக்கவர்கள்கூட தங்களை அவள் உணர்ந்துகொண்டிருக்கக் கூடுமோ என்று ஐயுற்று அப்படி இருக்காதென்று ஆறுதல் கொண்டு ஊசலாடிக்கொண்டிருப்பார்கள். அவளுடைய தெய்வத்தன்மையே அவ்விலக்கத்தை அளித்தது. தெய்வம் மானுடர்களுடன் அவ்வாறு விளையாடுமா என்ன என்று எண்ணவைத்தது.

அவனுடன் சொல்லாடுபவர்கள் மிக விரைவிலேயே அவன் கடந்து உள்ளே நுழைந்துவிட்டதை அறிவார்கள். அதனால் எச்சரிக்கையும் எரிச்சலும் கொள்வார்கள். அவனை அப்பேச்சின் இறுதிக்குள் எவ்வகையிலாவது புண்படுத்த முயல்வார்கள். அவன் வெறும் ஒரு சூதன்தான் என்பதை அவனிடம் எவ்வண்ணமோ சொல்வார்கள். அவன் சிறுமையோ சீற்றமோ கொள்ளும் ஒன்று அவர்கள் பேச்சில் இயல்பாக எழுந்து வரும். பெரும்பாலும் அது அவனது அன்னையின் காந்தாரநாட்டுப் பிறப்பு குறித்ததாக இருக்கும். அவனுடைய குலத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று அவர்களில் எழும். அது எப்போதும் ஒரு வகை பாராட்டாகவே சொல்லுரு பூண்டிருக்கும்.

அதன் மெய்ப்பொருள் என்ன என்று அவன் அறிவான். “தாங்கள் சூதர்களுக்குரிய நுண்ணுணர்வுடன் இருக்கிறீர்கள், அரசுசூழ்தலில் அது மிகப் பெரிய படைக்கலம்” என்று ஒருவர் சொன்னால் அவன் இளமையில் கடும் சீற்றம் கொண்டு, விரல்கள் நடுங்க, முகம் சிவந்து கொந்தளித்து, பின்னர் தன்னை அடக்கிக்கொள்வான். பின்னர் அந்தப் படைக்கலம் அவனுக்கு பழகியது. அதை அவர்கள் எடுக்கும் தருணத்திற்காக காத்திருப்பான். அவர்கள் எடுத்த உடனே மேலும் பணிவுடன் அப்படைக்கலத்திலிருந்து ஒழிவான். மேலும் சிறிதாகிவிடுவான். உடல் குறுக்கி அவர்கள் முன் அமர்ந்திருப்பான். “வாள்வீச்சுகளிலிருந்து பூச்சிகள் எளிதாக தப்பிவிடுகின்றன” என்று ஒரு சூதர் சொன்னது அதற்குரியதாக அவனுக்கு எப்போதும் தோன்றியிருந்தது.

ஆனால் அவர்கள் எழுந்து செல்வதற்குள் அவர்கள் கரந்து வைத்திருக்கும் ஓர் இடத்தை மெல்ல தொட்டு அனுப்புவான். அத்தொடுகை அவர்களை திடுக்கிடச் செய்யும். பிறர் எவரும் அறியாத ஓரிடத்தில் அவன் எப்படி வந்தான் என்று திகைப்பார்கள். அது தற்செயலாக இருக்குமோ என்று குழம்புவார்கள். விடைபெற்றுச் செல்கையில் நிலையழிந்திருப்பார்கள். செல்லச் செல்ல அவன் எண்ணிச் சூழ்ந்து அங்கு வந்தடைந்தான் என்பதை புரிந்துகொள்வார்கள். அதை அவன் சொன்னதனால் அல்ல, சொல்லும் நிலையிலிருக்கிறான் என்பதனால் மேலும் சீற்றம் கொள்வார்கள். எவ்வகையிலும் அச்சீற்றத்தை அவனிடம் காட்ட முடியாதென்பதனால் சினம் பெருகி உடல் பதற நின்றுவிடுவார்கள். நாட்கணக்கில் அவ்வலியில் துடிப்பார்கள். பின்னர் அவனை பார்க்கையில் அவர்களிடம் இயல்பாக ஒரு அச்சம் திகழும்.

ஈயல்ல குளவி என்று தன்னை அறிவுறுத்துவதே அவனுடைய சொல்சூழ்தலின் மைய இலக்காக இருந்தது. பிற அனைவரிடமும் அவன் தன் கொடுக்குகளில் ஒன்றை வெளியே எடுப்பதுண்டு. யுதிஷ்டிரனிடம் அவர் கற்ற நூல்களில் ஒரு போதும் அவர் காணாத ஒன்றை அவன் கூறுவான். அவர் அனைத்து நூல்களையும் மேலிருந்து அணுகுபவர் என்று அவன் புரிந்துகொண்டிருந்தான். அனைத்து நூல்களையும் அடியிலிருந்து அணுகி புதிய ஒரு நோக்கை அவன் அளிப்பான். ஆகவே யுதிஷ்டிரன் அவனிடம் பேசும்பொழுது எப்பொழுதும் அவர் கற்ற நூல்களில் ஒன்றைச் சொல்லி உடனே அதில் ஐயம் கொண்டு அவன் என்ன சொல்கிறான் என்று கேட்பார். அதனூடாக அவனுக்கான இடத்தை அவரே உருவாக்கி அளிப்பார். அவன் அதனூடாக அவரைக் கடந்து சற்றே அப்பால் சென்று நின்று மேலும் பணிவை நடிப்பான்.

நகுலனிடமும் சகதேவனிடமும் அவன் யுதிஷ்டிரனின் அதே பாவனையை தானும் கைக்கொண்டான். யுதிஷ்டிரனின் உடலுடன் அவனுக்கிருந்த ஒற்றுமையும் பேச்சிலும் நோக்கிலும் இருந்த சாயலும் அவர்களை அறியாமல் விழிபதறச் செய்தன. அவன் இளையோன் எனினும் அவர்கள் அறியாமல் மூத்தோனுக்குரிய சொற்களையும் உடல்மொழியையும் அவனுக்கு அளித்தனர். அம்முரண்பாடால் எப்போதும் அவனிடம் நிலைகுலைந்து இருந்தனர். அர்ஜுனனுடன் அவனுக்கு சொல்லாடலே நிகழ்வதில்லை.

பீமன் அவனை எப்போதும் வெற்று உடலாகவே நடத்தினான். பீமனின் பெரிய கைகள் தன்னை சூழ்ந்துகொள்கையில் அவன் ஆடைகளை களைந்துவிட்டு வெற்றுடலுடன் நிற்கும் சிறுகுழவியென உணர்ந்தான். அத்தருணத்தின் உவகை உடனே திகட்டி தவிப்பென்றாகியது. அவன் அணைப்பில் அவன் நிற்கையில் உளமுருகி உடனே தன்னை உணர்ந்து இயல்பாக விலகி அப்பால் சென்றான். ஆனால் எப்போதும் ஓரவிழியால் அவனை பார்த்துக்கொண்டே இருந்தான். எவ்வகையிலேனும் தனியென, சிறியவன் என, அயலான் என உணர்கையில் பீமனின் வலிய கைகளின் தொடுகையை நாடினான்.

இளைய யாதவரிடமும் திரௌபதியிடமும் மட்டுமே அவன் கொண்ட படைக்கலங்கள் அனைத்தும் பயனிழந்தன. எவ்வகையிலும் கணிக்க முடியாதவர்களாக இருந்தார்கள் அவர்கள். அரிதென நுண்ணென சிடுக்கெனத் தோன்றிய அனைத்தையும் எந்த முயற்சியும் இல்லாமல் இயற்றினார்கள். இயற்றியதறியாமல் அகன்று நின்றனர். தன் முன் இருப்பவர்களை மிகச் சிறியவர்களாக மாற்றி மலையென ஓங்கினர். தேவையான இடங்களில் கூழாங்கல்லென மாறி தங்களை விளையாடக் கொடுத்தனர்.

பின்னர் அவன் அறிந்துகொண்டான், அவர்கள் இருவரிடம் மட்டும் அனைத்துப் படைக்கலங்களையும் கீழே வைத்து எந்தக் காப்புமின்றி நிற்பதே உகந்ததென்று. தன் ஐயங்களை, குழப்பங்களை, நோக்கங்களை அவன் எடுத்த எடுப்பிலேயே அவர்கள் முன் திறந்து வைத்தான். தனக்கு, தன் தரப்புக்கு எது நன்றோ அதை அவர்களே உவந்து செய்யவேண்டும் எனும் கோரிக்கையை அவர்கள் முன் வைத்தான். அதற்கான சொற்களை மட்டுமே சூழ்ந்தான். அவர்கள் நலம் சூழ்வதன்றி பிறிதொன்று கருதமாட்டார்கள் என்று அவன் ஆழம் உறுதியாக நம்பியது. ஆகவே அவர்கள் முன் அவ்வாறு சென்று முழுக்க திறந்துகொள்வது ஒரு விடுதலை என்று தோன்றியது. அவர்கள் முன்னிருந்து எழுகையில் நெடுநேரம் அருவியில் குளித்து மீண்டதுபோல் நிறைவும் ஓய்வும் தோன்றியது.

 

யுயுத்ஸு தன் தூதை முறையான சொற்களில் முதலில் சொன்னான். அதன்பின் யுதிஷ்டிரன் தன்னிடம் சொன்னவற்றை எல்லாம் ஒரு சொல் எஞ்சாமல் உரைத்தான். சுரேசரின் ஆணையையும் கூறி முடித்தான். திரௌபதி அவன் சொற்களைக் கேட்டபடி விழிதாழ்த்தி அமர்ந்திருக்க அவன் அவள் மேலும் எதிர்பார்ப்பதென்ன என்று எண்ணிக்கொண்டு அவள் கால்களை நோக்கி இருந்தான். அவள் மெல்ல அசைந்தமர்ந்தாள். “நான் இங்கே தங்கியிருப்பதாக முடிவேதும் எடுத்து இங்கே வரவில்லை” என்று திரௌபதி மெல்லிய குரலில் சொன்னாள். “ஆனால் இங்கு வந்தபின் இங்கே அமைந்துவிட்டேன். எதன்பொருட்டும் இங்கிருந்து கிளம்பவேண்டும் என்று தோன்றவில்லை” என்றாள்.

“அரசி, தாங்கள் இந்திரப்பிரஸ்தத்தை விட்டு கிளம்ப மறுப்பீர்கள் என்று அரசர் ஐயம் கொண்டிருக்கிறார். அவர் அஸ்தினபுரியின் அரசரென மணிமுடி சூடிக்கொள்ளவே விழைகிறார். இந்திரப்பிரஸ்தத்தில் அவருக்கு சிறு ஒவ்வாமை உள்ளது. அது தன் நகர் அல்ல என்று எண்ணுகிறார். தாங்கள் அஸ்தினபுரிக்கு வந்து அவருடன் அமர்ந்து மணிமுடி சூடிக்கொள்ள வேண்டும் என அவர் விழைவது அதனால்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அச்சடங்கு நிகழுமெனில் அது தாங்கள் முடிசூடியது போலாகும். இது தங்கள் நகர், இங்கு முன்பு நடந்த ராஜசூயத்திலும் மும்முடி சூடியவர் நீங்கள். அஸ்தினபுரி குருகுலத்திற்கு உரியது. யுதிஷ்டிரனின் முன்னோர்களின் மணிமுடி அங்குள்ளது. அவர் சூடிக்கொள்ள விரும்புவது அதைத்தான்.”

“உண்மையைச் சொல்வதென்றால் நெடுநாட்களாக அவர் தன்னுள் கொண்டிருக்கும் கனவு அது. அக்கனவு தன்னுள்ளிருப்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வாறல்ல என்று பிறரை நம்பவைக்க முயன்றுகொண்டிருந்தார். தன்னை நோக்கி அவ்வாறல்ல என்று பலமுறை கூறினார். இப்புவியில் அவர் முதன்மையெனக் கருதுவது அதுதான். தெய்வங்களைவிட, அறத்தைவிட, உடன்பிறந்தாரைவிட, தங்களைவிட அவருக்கு அம்மணிமுடியே முதன்மை பொருட்டு. அதை அவர் சூடுகையில் நீங்கள் அங்கு இருக்க வேண்டுமென்று அவர் விழைகிறார். அதுவே அவருடைய முழு வெற்றி. அவருடைய பிறவி நிறைவுறுகை” என்றான் யுயுத்ஸு.

“அதற்குப் பின்னால் அரசியல் கணிப்புகள் பல உண்டு என்பதை தாங்கள் அறிவீர்கள். தாங்கள் வந்து அவருடன் அமர்ந்து மணிமுடி சூடவில்லையெனில் அவரது குலம் ஒருபடி குறைவானது என்பதனால் இன்னும்கூட ஷத்ரியர்களின் முழுதேற்பை அவருடைய அரசுநிலை பெறாமல் போகலாம். அவர் போர்வெற்றியினால் மட்டுமே ஷத்ரியர்களின் முழுதேற்பை அடைய முடியாதென்பதை இதற்குள் புரிந்துகொண்டிருக்கிறார். தோற்ற பின்னரே ஷத்ரியர்களின் குலத்தன்னுணர்வு சீண்டப்பட்டுள்ளது என்பது இயல்பானது. யாதவக்குருதி கொண்டோரால் தாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை அவர்கள் சொல்லிக்கொள்ள விழையமாட்டார்கள். ஆகவே அதை மறுப்பார்கள். நூல்களில் மழுப்புவார்கள். களத்தில் வென்று நிகர்செய்யும் கனவை வளர்த்துக்கொள்வார்கள். ஆகவே ஒருபோதும் பகை அணையாது.”

“மணிமுடி சூடுகையில் தாங்கள் அருகிருந்தால் ஷத்ரியகுலத்துப் பேரரசியால் தோற்கடிக்கப்பட்டோம் என்று அவர்கள் எண்ணிக்கொள்ள முடியும். அவர்கள் விழைவது அத்தகைய ஓர் அடையாளத்தை மட்டும்தான். அதன்பின் அவர்கள் பகைமறக்கக்கூடும். சிதைந்த நாடுகளை மீட்டுக் கட்டியெழுப்ப முடியும். அரசி, தாங்கள் முடிசூடி அதை பாரதவர்ஷத்து அரசர்கள் முழுதேற்பார்கள் என்றால் ஒரு தலைமுறைக் காலத்திற்கேனும் பாரதவர்ஷத்தில் போர் இல்லாமலாகும். குடிகள் செழிப்பார்கள். நகர்கள் மீண்டெழும். வேள்வியும் அறமும் மெய்மையும் நிலைகொள்ளும். தாங்கள் உளம்கனியக் காத்து நின்றிருக்கின்றன கோடி உயிர்கள்.”

“அதன் பொருட்டே தங்களை அழைக்கிறார் யுதிஷ்டிரன்” என்று யுயுத்ஸு தொடர்ந்தான். “ஆகவேதான் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார் இங்கு அமைச்சரை அனுப்பியிருக்கலாம். தங்கள் முன் மேலும் சிறப்பாக அவர் சொற்களை அவர்களால் முன்வைக்க முடிந்திருக்கும். ஆனால் தங்கள் முன் அரசுசூழும் ஆற்றல் கொண்டவர்கள் எவரும் இல்லை. ஆனால் நான் அவருடைய உடலுருவுடன் அணுக்கம் கொண்டவன். என்மேல் நீங்கள் மைந்தன் எனக் கொண்டுள்ள கனிவை அவர் அறிவார். ஆகவே என்னை அனுப்பியிருக்கிறார். என் சொல் ஆணையென எழாது, அடிபணிந்த மன்றாட்டென்றே ஒலிக்கும் என அவர் அறிந்திருக்கிறார்.”

“ஆகவே இந்தச் சொற்களுக்கு உங்கள் உளமிரங்கவேண்டும். அஸ்தினபுரியின் அரசரும் என் தமையனுமாகிய யுதிஷ்டிரன் தாங்கள் இந்திரப்பிரஸ்தத்தைவிட்டு அஸ்தினபுரிக்கு வந்து அவர் ராஜசூயத்தில் அமர்ந்து மும்முடி சூட்டிக்கொள்ளுகையில் அருகிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை ஏற்றருள்க!” என்றான் யுயுத்ஸு. திரௌபதி தலையசைத்தாள். அதன் பொருள் அவனுக்கு புரியவில்லை. அவன் மேலும் தழைந்து “தாங்கள் எண்ணுவதென்ன என்பதை நான் நன்கு அறிவேன். ஏனென்றால் அன்னையை மகவென உங்களை அறிந்துகொண்டிருப்பவன் நான். மிகைச்சொல் என்றால் பொறுத்தருள வேண்டும்” என்றான். அவள் விழிதூக்கி நோக்கினாள்.

“அஸ்தினபுரியின் ஆட்சியில் இந்திரப்பிரஸ்தம் கைவிடப்படும் என்று உணர்ந்திருக்கிறீர்கள். அது மெய். ஒருபோதும் இந்திரப்பிரஸ்தம் தழைத்தோங்க யுதிஷ்டிரன் விரும்பமாட்டார். இந்திரப்பிரஸ்தம் என்னும் சொல்லே பாரதவர்ஷத்தின் நாவிலிருந்து அகலுமெனில் அவர் நிறைவடையவும் கூடும். முன்பு அங்கு முடிசூடிக்கொண்ட போதே அவரிடம் அந்த ஒவ்வாமை இருந்ததை நான் இப்போது நினைவுகூர்கிறேன். இப்போது சூதர்கள் பாடும் எப்பாடலிலும் அஸ்தினபுரியின் அரசன் என்ற சொல்லையே அவர் விரும்புகிறார். ஒன்றை வெறுப்பவர்கள் அதை விலகுவார்கள். ஒன்றிலிருந்து ஒவ்வாமை கொண்டவர்கள் அதை பலமடங்கு விலக்குவார்கள். ஒன்றை அஞ்சுபவர்கள் அதை பற்பல மடங்கு விலக்குவார்கள்.”

“மூத்தவர் யுதிஷ்டிரன் இந்திரப்பிரஸ்தத்தை அவர் கைவிடுவதைப்பற்றிக்கூட ஒரு பேச்சு எழுவதை விரும்பமாட்டார். ஆனால் அதை அவர் உளம்கொள்ளவும் மாட்டார். இந்நகரம் இப்பொழுதே புழங்குவாரற்ற பெருவெளியாக உள்ளது. இங்கே ஒரு துணை தலைநகர் அமையும். அவ்வப்போது அவர் இங்கு வந்து தங்கவும் கூடும். ஒருவேளை முடிசூட்டிக்கொண்டபின் தாங்கள் இங்கு வந்து தனித்து தங்கலாம். தங்களின் அவை இங்கு கூடவும் கூடும். ஆனால் அஸ்தினபுரியில் அவர் மணிமுடி சூட்டிக்கொண்டால், உடன் நீங்கள் அங்கே அமர்ந்தால் இந்திரப்பிரஸ்தம் கைவிடப்படும், மறக்கப்படும். அதை எவருமே மாற்றமுடியாது. அதுவே ஊழின் வழி” என்றான் யுயுத்ஸு.

“ஏனெனில் குருக்ஷேத்ரப் பெரும்போர் அஸ்தினபுரிக்காகவே நிகழ்ந்ததென்பதை சூதர்கள் பாடிப் பாடி நிறுவிவிட்டார்கள். பாரதவர்ஷம் எங்கும் இன்று திகழும் பெயர் அஸ்தினபுரியே. இங்குள்ள கோட்டைகளையும் பெருமாடங்களையும்விட, செல்வக்குவைகளைவிட மதிப்பு மிக்கது அஸ்தினபுரிக்கு இருக்கும் தொன்மை. அச்சொல் எழுப்பும் கனவு. ஆகவே இந்நகர் குறித்த தங்கள் ஐயங்களும் அச்சங்களும் முற்றிலும் உண்மை. அதன் பொருட்டு நீங்கள் தயங்குவது சரியானது.”

திரௌபதி அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். யுயுத்ஸு தொடர்ந்தான். “தாங்கள் பாரதவர்ஷத்திலுள்ள பல்லாயிரம் கோடி மக்களின் கனவுகளுக்கு கடன்பட்டவர். குருக்ஷேத்ரத்தில் உங்கள் பொருட்டு உயிர்துறந்த படைவீரர்களின் குருதிக்குக் கடன்பட்டவர் என்று அரசர் தங்களிடம் கூறும்படி என்னிடம் சொன்னார். தாங்கள் அஸ்தினபுரியில் மணிமுடி சூடி அமரவேண்டும் என்பதன் பொருட்டே மக்கள் உயிர்துறந்தார்கள் என்றார். நீங்கள் மக்களின் கனவுகளால் சூழப்பட்டிருக்கிறீர்கள் என்றே நானும் எண்ணுகிறேன். அரசகுடியினர் அக்கனவுகளை தவிர்க்கவே முடியாது.”

“ஆனால் இச்சொற்கள் தங்களை இழுத்து வருவன என்று அரசருக்கே நம்பிக்கை இல்லை. ஏனெனில் எதனுடனும் எந்நிலையிலும் கட்டுப்பட்டவராக தாங்கள் தங்களை உணர்வதில்லை. ஆகவே பிறிதொன்று சொன்னார். அஸ்தினபுரியின் அவையில்தான் தாங்கள் சிறுமை செய்யப்பட்டீர்கள். அங்குதான் உங்கள் வஞ்சினம் உரைக்கப்பட்டது. ஆகவே அங்கு ராஜசூயம் நிகழ்ந்து அதே அவையில் நீங்கள் முடிசூடி அமர்கையிலேயே அவ்வஞ்சம் முழுமை பெறுகிறது. அவ்வஞ்சம் உங்களுக்குள் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாரதவர்ஷத்தின் பலகோடிப் பெண்டிர் அதை தங்கள் வஞ்சம் என ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வழிவழியாக பிறந்து எழும் பெண்கள் அதையே முழுச் சீற்றதுடன் வந்தடைவார்கள். அவர்கள் அனைவருக்குமான மறுமொழியாக தாங்கள் அங்கு அமரவேண்டும். அக்கதை அவ்வண்ணமே நிறைவடையவேண்டும்.”

“அதை என்னிடம் சொல்லும்போது அதுவும் தங்களை அங்கு அழைத்து வராமல் போய்விடுமோ என்ற அரசர் அஞ்சினார் போலும். ஆகவே அறுதியாக ஒரு கணவராக, தங்களுக்காக இதுகாறும் வாழ்ந்தவராக நின்று எளிய மன்றாட்டாகவும் இதை முன் வைத்தார். இறுதியாக தாங்கள் முடிவெடுக்கலாம்” என்றான் யுயுத்ஸு. “இவை அனைத்துமே மெய்யானவை என்றே நான் உணர்கிறேன். தாங்கள் வந்தாகவேண்டும் என நானும் என் ஆழத்தில் உணர்வதனாலேயே இங்கே வந்தேன். இது என் தனிப்பட்ட மன்றாட்டும் கூட.”

அவள் கலைந்து மூச்செறிந்து “இந்நகரை பார்த்தாய் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான் யுயுத்ஸு. “இந்நகரிலும் மக்கள் வந்து குழுமிக்கொண்டிருக்கிறார்கள். இந்நகரில் அவர்கள் நிலைபெறுவார்கள். இந்நகர் இவர்களால் நெடுங்காலம் வாழும்” என்றாள். “ஆனால் இன்று இதற்கு இருக்கும் முழுமையும் முதன்மையும் நீடிக்காது” என்றான் யுயுத்ஸு. “அதை நானும் அறிவேன். நான் இங்கிருந்து அதை சிறப்புறச் செய்ய முடியும். இங்கு வரும் குடிகள் எனக்கு போதும். இவர்களே என்னை நம்பி இங்கே வந்தவர்கள். என் கடன் முதன்மையாக இவர்களிடமே. இங்கு நான் முடிசூடி அமர்ந்தால் அனைத்துக்கும் நிறைவென ஆகும். பாரதவர்ஷத்தின் தலைநகராக இந்நகரை நிலைநிறுத்துவது எனக்கு மிக எளிதே.”

“ஆம், தங்களால் இயலும்” என்று யுயுத்ஸு சொன்னான். “எனில் சொல், எதன் பொருட்டு நான் அஸ்தினபுரிக்கு வந்து அவருடன் அமர்ந்திருக்க வேண்டும்? இந்நகரை அழிய விடுவதற்கான முடிவை நான் ஏன் எடுக்க வேண்டும்? என்னை நிறைவுறச் செய்யும் ஒன்றை நீ சொல்வாயெனில் நான் உடன்படுகிறேன்” என்றாள். யுயுத்ஸு அவளை நேர்விழி கொண்டு பார்த்து “பேரரசி, தாங்கள் இந்நகரை அஸ்தினபுரிக்கு மேல் பாரதவர்ஷத்தின் தலைநகர்களுக்கு நிகராக நிலைநிறுத்த முடியும். ஆனால் அதை தாங்கள் செய்யமாட்டீர்கள்” என்றான். அவள் விழித்து நோக்கி அமர்ந்திருந்தாள்.

“இந்நகரைக் கட்டி எழுப்புகையில் மாகிஷ்மதியையும் மகேந்திரபுரியையும் உருவாக்கிய அசுரப்பேரரசர்களின் உளநிலையில் இருந்தீர்கள். இங்கு ஒவ்வொன்றும் பேருருக்கொண்டது தங்கள் ஆணவத்தால். அந்த ஆணவம் இன்று உங்களிடம் இல்லை. ஆகவே இதை உங்களால் நிலைநிறுத்த முடியாது. இடையாடையைக் கழற்றி வீசி நீரில் பாயும் உளநிலையுடன் இந்நகரை நீங்கள் அகற்றி விலகிச்செல்லக்கூடும். இந்நகர் மேல் மெய்யாகவே உங்களுக்கு பற்றில்லை. ஏனெனில் இவ்வுலகில் எதன் மீதும் இன்று உங்களுக்கு பற்றில்லை. பற்றற்றவர்கள் பேரரசர்களாக முடியாது.”

திடுக்கிட்டவள்போல் அவள் அவனை நோக்கி அமர்ந்திருந்தாள். “நீங்கள் இன்னும் நெடுங்காலம் இங்கு திகழமுடியாது. கோல் கொண்டு எழுவது மட்டும் அல்ல, குடி கொண்டு வாழ்வதும்கூட தங்களால் இயலாது. கனி பழுத்த பின் மரத்தை அது கைவிடுகிறது. நீங்கள் உலகிலிருந்து அகன்றுவிட்டீர்கள். இக்குடிகளுக்கு, பாரதவர்ஷத்தின் மக்களுக்கு, மூதாதையருக்கு, பிறப்போருக்கு என எப்பொறுப்பையும் நீங்கள் இனி ஏற்க மாட்டீர்கள்” என்று யுயுத்ஸு சொன்னான்.

“ஆனால் இறுதியாக எஞ்சும் கைப்பொருளை கனிந்து எவருக்கேனும் அளிக்க முடியும். பெறும் தகுதி கொண்டவர்களில் முதல்வர் அங்கே துவாரகையில் பிறந்திருக்கும் இளவரசர். ஒரு பூனைக்குட்டியளவுக்கே இருக்கிறார். அவர் உயிர்கொண்டெழுவது பீதர்நாட்டு மருத்துவர்களிடம், ஊழிடம் உள்ளது. அவர் எழுந்து வரவேண்டுமென்றால் இங்கிருந்து பெரும் அறைகூவல் ஒன்று செல்லவேண்டும். அதைவிட பெருங்கொடை ஒன்று அளிக்கப்படவேண்டும். அதை அச்சிற்றுடலில் குடியேறியிருக்கும் ஆத்மன் அறியவேண்டும். நீங்கள் மும்முடிசூடி அஸ்தினபுரியில் அமர்ந்தால் அவர் ஷத்ரியர்களால் முழுதேற்கப்பட்ட பேரரசொன்றினை அடைவார். ஐயமின்றி ஷத்ரியர் என ஏற்கப்படுவார்” என்றான் யுயுத்ஸு. பின் கைகூப்பியபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தான்.

திரௌபதி பெருமூச்சுவிட்டாள். பின்னர் மெல்ல எழுந்து தன் மேலாடையை சீரமைத்தாள். தணிந்த குரலில் “சென்று சொல்க அரசரிடம்! நான் அஸ்தினபுரிக்கு வருகிறேன்” என்றாள்.

முந்தைய கட்டுரைபாண்டிச்சேரியில்…
அடுத்த கட்டுரைவிழா கடிதம்- காளிப்பிரசாத்,சிவக்குமார்