தேசபக்தர்- ஜானவி பரூவா.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிந்தவுடன் தீரன் மஜும்தாரின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பவழமல்லி மரம் பூத்துக் குலுங்கத் துவங்கி விடும். வான் நோக்கி வளர்ந்திருக்கும் அதன் மெல்லிய கிளைகளில் மொட்டவிழ்ந்து நிற்கும் அந்த மலர்களை அதிகாலை ஒளியில் காணும்பொழுது இலைகளிலிருந்து முத்துக்கள்தான் இவ்வளவு உன்னதமாக எழுந்து நிற்கின்றனவோ என்று தோன்றுமளவிற்கு அவை பளபளப்புடன் காணப்படும். அதைக்காணும்பொழுதெல்லாம் தீரன் மஜும்தாருக்கு உள்ளம் உற்சாகத்தில் துள்ளும். தான் எத்தனை அபாயங்களைக் கடந்து சென்று அதைப் பறித்து வருகிறோம் என்ற பெருமிதமும் அவருடைய அந்த உற்சாகத்தில் கலந்திருக்கும்.

அவரது காலைநேர பூஜையில், ஒரு கூடை நிறைய பவழமல்லி மலர்கள் தவறாது இடம் பெற்று விடும். ஆனால் அந்த நறுமணம் மிக்க மலர்களைப் பறித்து வருவது என்பது எத்தனை சவாலானது என்பது தீரன் மஜூம்தாருக்கு மட்டும்தான் தெரியும். அந்த மரம் ஒரு புறம்போக்கு நிலத்தில்தான் இருந்தது. அந்த இடம் அடர்த்தியான பாசிகளால் போர்த்தப் பட்டிருந்த ஒரு வழுக்கலான நிலப்பரப்பின் சிறிய துண்டுப் பகுதியில் வளர்ந்திருந்தது. அதன் ஒரு பக்க எல்லையில் அவரது வீட்டின் முன்புறம் இருக்கும் அந்தப் பள்ளத்தாக்கு இருந்தது. மறுபுறம் தார்ச்சாலையிலிருந்து அதைப் பிரித்து ஒரு வேலி போல் வளர்ந்து நிற்கும் மூங்கில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது

அதை அடைய தீரன் மஜூம்தார் முதலில் துர்நாற்றம் வீசும் கால்வாய் மீது இருக்கின்ற குறுகலான அந்த மூங்கில் நடைபாலத்தைக் கடக்க வேண்டும். அந்தப் பாலம் அவரது மிகுதியான எடையையும் தாங்கக் கூடியதாகத்தான் இருந்தது என்றாலுமே அவரது மனம் அதைக் கடக்கும் போதெல்லாம் திகிலில் ஆழ்ந்து விடும். அந்தப் பாலம் மிகவும் பழமையாகிவிட்டிருந்தது. ஒவ்வொரு முறை அதைக் கடக்கும்போதும் தான் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிக் கொள்வார். மறுபக்கம் சென்று தரையில் கால் வைத்ததுமே தன் மனக்குழப்பத்தை எண்ணித் தானே நகைத்துக் கொள்வார். மேலும் அவரது இயல்பான குணமும் அப்பொழுது எட்டிப் பார்க்கும். அந்தப் பாலம் இன்னும் பல மழைக்காலங்களைத் எப்படியும் தாண்டிவிடும் என்று எண்ணிக் கொள்வார்

அவரது பாதையில் வரும் அடுத்த தடை மூங்கில் வேலியாக இருக்கும். அதற்கும் அந்தப் பக்கம்தான் அந்த பவழமல்லி மரம் நிற்கிறது. சாதாரணமாக, தீரன் மஜும்தார் இதைத் தாண்டுவதற்கெல்லாம் சிரமப் படமாட்டார், ஓரளவிற்கு உயரத்துடன் நல்ல பருமனானவராக இருந்தாலும் அவர் மிகவும் துடிப்பான கை, கால்களைக் கொண்டிருந்தார். தன் இளமைப் பருவத்தில் இப்படியான எத்தனை கணக்கற்ற வேலிகளைத் தாண்டியிருக்கிறார் எத்தனை எண்ணற்ற மரங்களில் ஏறி இறங்கிச் சோதனை செய்திருக்கிறார். அவற்றையெல்லாம் அவர் மனதில் எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தார். அக்கம்பக்கத்து வீடுகளில் ஒரு மரம் கூட அவரிடமிருந்து தப்பியதில்லை. மாம்பழம், கொய்யா, நாவல் பழம் ஏன் நெல்லிக்காய்களைக்கூட அவர் விட்டு வைத்ததில்லை. அனைத்தையும் பறித்திருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த பாழாய்ப்போன வேட்டியைக் கட்டிக்கொண்டு அல்லாடியதில்லை. காலைநேர பூஜைக்காக தீரன் மஜூம்தார் மிகவும் சுத்தபத்தமாக, தூய வேட்டியைக் கட்டிக்கொண்டிருக்கிறார். அந்த வேட்டிதான் அவர் இடுப்பு வரை வளர்ந்து நிற்கும் அந்த வேலியைத் தாண்டவிடாமல் தன் வலுவான எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த சாலைக்குப் பக்கத்தில் ஒரு சலவைக் கடை இருக்கிறது. ஒரு சிறிய பழங்காலக் கட்டிடமாக இருந்த அந்தக் கடை இந்நேரத்திற்கெல்லாம் அவ்வளவாக திறக்கப் படுவதில்லை. அது அவருக்கு ஒரு விதத்தில் ஆசுவாசமாகத்தான் இருக்கும். சற்றும் இங்கிதம் இல்லாத அந்த வண்ணான் பியாரி லாய், அந்த நிறுவனத்தைத் திறந்தவுடன் அந்தக் குட்டிக்கடையின் வெளியே இருக்கும் அந்த நீண்ட மர இருக்கையில் அமர்ந்தபடி தீரன் மஜூம்தாரின் ஒவ்வொரு அசைவையும் கண்டு பரிகசித்துக் கொண்டு இருப்பான்

இன்றைக்கு அதிர்ஷ்ட்டம் தீரம் மஜூம்தார் பக்கம் இல்லை. பியாரி லாய் அந்த வீணாய்ப்போன இருக்கையில் அமர்ந்தபடி பீடி குடித்துக் கொண்டிருந்தான்

”வணக்கம் பாபு..” என்றான் சத்தமாக

பதிலுக்கு தீரன் மஜூம்தார் பலமாகத் தலையாட்டினார்

வேலிக்கு அருகே சென்று அங்கு வெளிப்பக்கமாக நீட்டிக் கொண்டிருந்த ஒரு மூங்கில் முனையில் பித்தளைக் கூடையைத் தொங்கவிட்டார். பிறகு மிகுந்த கவனத்துடன் மூங்கில் பத்தையைப் பற்றிக்கொண்டார். அந்த வேலியில் இருந்த ஒரு இடைவெளியில் தன் வலதுகாலை வைத்தார். தன் உடலின் மொத்த எடையையும் தோளிலும் வலது காலிலும் கொடுத்தவாறு தன் இடதுகாலைத்தூக்கி ஆடிக்கொண்டிருந்த அந்த வேலியின் மீது வைத்தார். தீரன் மஜும்தார் அந்த வேலியில் உச்சியில் இவ்வாறாக அலைபாய்ந்து கொண்டிருந்த அந்த சொற்ப நேரத்திற்கும் அவ்வளவு பெரிய பளுவை எதிர்பார்க்காத அந்த வேலி இங்கும் அங்குமாக ஆடியது. சற்று நேரத்திலேயே இடதுகால் தனக்கான ஒரு பிடிப்பைக் கண்டடைய அவர் தன்னை நிதானப் படுத்திக் கொண்டார். அதன் இரு புறத்திலும் காலை போட்டவாறு அசந்தர்ப்பமாக அமர்ந்தபடியே அவர் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். பின் பெரும் துணிவுடன் அவர் தன்னுடையை வலது காலால் அந்த வேலியின் மீது விசிறுவது போல எழும்பி அதே வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டு மெதுவாக தரையில் குதித்தார். அவரது கால் தரையில் பட்ட அதேநேரத்தில் ஆடை கிழியும் சப்தமும் கூடவே கேட்டது. அவர் முகம் சற்று இருண்டுப் போனது. குனிந்து பார்த்த போது வலது தொடைக்கு அருகே வேட்டி சற்று கிழிந்திருந்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. தைத்து விடலாம். தலையை நிமிர்ந்த போது பியாரி லாயின் முகத்தில் எழுந்த அகன்ற புன்னகையை ஓரக்கண்ணால் பார்த்தார்

’ஏய்..சாலா..” என்று அந்த ஒல்லியான மனிதனை நோக்கித் தன் முட்டியை மடக்கியவர், ’மூஞ்சிக்கு வெளிய பல்லைக் காட்டறது நிறுத்து. இல்லாட்டி நான் வந்து மொத்தமா நிறுத்திருவேன்’

கைகளைக் கூப்பி ஒரு செயற்கையான வணக்கத்தைப் போட்டபடி, பியாரிலாய் தன் கடைக்குள் சென்று மறைந்து போனான்

தீரன் மஜும்தார் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலைக்கு மீண்டு வந்தார். கொக்கியில் மாட்டிய அந்த பூக்கூடையை எடுத்தவர் அதைக் கொத்துவது போல அந்த ஈர நிலத்தில் மரத்திற்கு அருகில் அழுத்தி வைத்தார். அந்த மரத்தடியில் கம்பளம் விரித்தாற்போல பவழமல்லி மலர்கள் அதிக அளவில் உதிர்ந்து கிடந்தன. தீரன் மஜும்தார் அவற்றின் மீது ஜாக்கிரதையாக நடந்து சென்றார். அவரது கட்டைக் குட்டையான கால்கள் மீது அந்த மலர்கள் மென்மையாக அரவணைத்திருப்பது போல இருப்பதைக் கண்டு வருத்தப் பட்டவராக ஒரு பெருமூச்சுவிட்டார். பின்னர் சோர்ந்து போனவர் போல மெல்லச் சென்று இன்னும் ஈரம் போகாத அந்த மரக்கிளைகளிலிருந்து அந்த வெள்ளைப் பூக்களை ஒளி ஊடுருவிக்கொண்டிருக்கும் அந்த ஆரஞ்சு தண்டுகளுடன் சேர்த்து பறிக்கத் துவங்கினார்

இந்த கணத்தை மிகவும் அனுபவித்தபடி அவசரம் ஏதுமில்லாமல் அவர் பறித்துக் கொண்டிருந்தார். அவர் பணியில் இருந்த காலங்களில் எல்லாம் மூன்று நிமிடங்களுக்குள் இந்த பூக்களைப் பறித்து கூடையை நிரப்பித் தர வேண்டிய கட்டாயத்தில் இருந்த தருணங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தன. அப்பொழுதெல்லாம் ஒருவித கூச்சத்துடன் தரையில் உதிர்ந்து விழுந்த பூக்களை குனிந்து எடுத்து நிரப்புவார். அதை இப்பொழுது நினைத்தால் கூட ச்சீ! ச்சீ! என்று தனக்குள்ளே அவர் கூசிக்கொள்வார்

இப்பொழுது அவர் ஒன்றும் அவசரப்படத் தேவையில்லை. தன் வாழ்நாள் சேவையை அஸ்ஸாமிய அரசுக்காக அவர் ஆற்றியிருக்கிறார். அஸ்ஸாமிய மக்களுக்கு சேவையாற்றியிருக்கிறேன் என்று பெருமிதமாக சொல்லிக் கொள்ளுமளவிற்கு அவர் நேர்மையுடனேதான் பணியாற்றினார். தன் பணிக்காலத்தில் எந்த ஒரு இக்கட்டிலும் மாட்டிக் கொள்ளாமல் மிகுந்த கவனத்துடன் சமாளித்தபடியே வந்திருந்தார். அதேநேரத்தில் தன் உயரதிகாரிகளின் அன்பிற்குப் பாத்திரமானவராகவும் அவர் திகழ்ந்தார். அதன் பலனாக கல்வித்துறையின் உள்துறைச் செயலராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்குப் பிறகும் அவர் ஒரு அமைதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இவ்வாறு தன் பூஜைக்கான பூக்களைப் பறிப்பதிலேயே மூழ்கிப்போகும் வண்ணம் நிம்மதியான வாழ்க்கை என்றும் சொல்லலாம். பூக்களைப் பறித்துக்கொண்டு மீண்டும் தன் வீட்டுக் கதவிற்கருகில் வந்தபோது அவர் மொத்தமாக வியர்வை மழையில் நனைந்திருந்தார். தன் கச்சையில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்த தீரன் மஜும்தார் முற்றிலும் வழுக்கையாக இருந்த தன் உச்சந்தலையையும் பின் தன் முகத்தினையும் துடைத்துக் கொண்டார். அதன்பின் தன் தொந்தியையும் மேம்போக்காகத் துடைத்ததுவிட்டு அதை எடுத்த இடத்திலேயே மீண்டும் செருகிக் கொண்டார். அவர் வீட்டு முற்றத்தின் மரக்கதவுகள் அவர் வருகையை எதிர்நோக்கி அமைதியாகக் காத்திருந்தன. பெரும் ஆலோசனையுடன் அவற்றைக் கடந்து பூஜை அறைக்கு கவனத்துடன் சென்றார் தீரன் மஜூம்தார்

காலைநேர பூஜை பரிபாலனங்கள் முடிந்ததும் தீரன் மஜூம்தார் வெளிமுற்றத்தில் நல்ல வெளிச்சம் விழும் இடத்தில் பிரம்பு நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொண்டார். அந்த இடத்திலிருந்து அவரால் சுற்றிவர மதில் சுவர் எழுப்பப் பட்டிருந்த அந்த இடம் முழுவதையும் எந்தவித இடையூறும் இல்லாமல் காண முடிந்தது. அது அவரது சொந்த இடம்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் ஆவி பறக்க இருக்கும் தேநீர்க் கோப்பையை ஒரு கையில் ஏந்தியவாறு, அன்றுதான் முதல்முறை பார்ப்பது போல தன் ராஜாங்கத்தை தீரன் மஜூம்தார் பார்வையிடுவார்

அந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் அவர் தற்போது வசிக்கும் எளிய வீடு அமைந்திருந்தது. அது ஒன்றும் அவ்வளவு பெரிய வீடெல்லாம் இல்லை. ஒரு சிறிய வீடு, சிமெண்ட் சுவர்களால் எழுப்பப்பட்டு, மேலே அடர் பச்சை நிறத்தில் வளைந்து வளைந்து ஏகப்பட்ட நெளிவுகளுடன் இடுக்கும் தகர மேற்கூரையுடன் இருந்தது. அவர் கையில் இருந்த பணத்தை வைத்து இரு படுக்கை அறைகளும், ஒரு சமையலறையும் ஒரு கூடமும் கொண்ட வீட்டினைதான் கட்ட முடிந்தது. சமையலறைக்கு அருகில் இருந்த ஒரு திறந்த முற்றத்தில்தான் உணவு மேசையை வைத்திருந்தார். அவரது இடப்புறத்தில் பெரிய செவ்வக வடிவத்தில் சுமார் மூன்று ’கோத்தாஸ்’ அளவிற்கான நிலம் கிடக்கிறது. அந்த நிலத்தில் அவரது தாத்தா கட்டிய மரத்தினாலான ஈரடுக்கு வீட்டைத்தவிர வேறு எதுவும் இல்லை. அதுவும் இப்பொழுது முற்றிலும் கைவிடப்பட்டு, சிதிலமடைந்து கிடக்கிறது. எண்ணற்ற மழைகளில் நனைந்து ஊறிப்போன அந்த வீட்டின் மரப்பாகங்கள் ஓரங்களில் உளுத்துப்போயும் இருந்தன. அந்த வீட்டில் சிறுவனாக தான் வளைய வந்தது தீரன் மஜூம்தாருக்கு இன்னுமே நினைவில் இருக்கிறது. அப்பொழுதே ஐம்பது வருடங்களாகியிருந்த அந்த வீடு அவர் சிறுவனாக இருந்த போதே ஆட்டம் காணத் துவங்கியிருந்தது. தீரன் மஜும்தாரும் அவரது சகோதரிகளும் மரப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் அது குலுங்கியது. ஆற்றிலிருந்து மண்வாசமும் மீன்வாசமும் கலந்து எழுந்து வரும் காற்று மோதும்போது அந்த வீட்டின் மர இணைப்புகள் வேதனையில் இறைஞ்சத் துவங்கின. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அது வாழத் தகுதியில்லாத ஒரு வீடாகவே மாறியது. எனவே அவர்களின் தந்தை அந்த வீட்டைக் காலிசெய்து அருகிலேயே ஒரு கூரை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். பிற்காலத்தில் தீரன் மஜூம்தார், அந்தக் கூரை வீடு இருந்த இடத்தில்தான் வசதியான இந்த வீட்டைக் கட்டியெழுப்பியிருக்கிறார்.

வெறும் ஓடாக மட்டுமே எஞ்சியிருந்த அந்தப் பழைய வீடு அவருடைய குழந்தைகளுக்குமே இளம் வயதில் ஒரு விளையாட்டு மைதானமாகத்தான் விளங்கி வந்தது. அவரது குழந்தைகள் மரப்பலகைகளின் மீது ஓடி ஆடும்போதுமே அந்த சிதிலமான கட்டமைப்பு அதிரும் லேசாக ஆடவும் கூடச் செய்யும். எவ்வளவோ எச்சரிக்கையும் தண்டனையும் கொடுத்துமே அவர்கள் தங்கள் விளையாட்டு மைதானமாகக் கருதிய அந்த இடத்திற்குள் செல்வதை யாராலும் தடுக்க முடிந்ததில்லை. இப்பொழுதும் அந்த இடத்திற்குள் செல்ல யாரையுமே தீரன் மஜூம்தார் அனுமதிப்பதில்லை. அது முற்றிலும் பாதுகாப்பு அற்ற ஒன்றாகவே இருக்கிறது

அந்தச் சிதிலமடைந்த பெருவீட்டைப் பார்த்ததும் தீரன் மஜூம்தாருக்குள்ளிருந்து ஒரு சொல்லமுடியாத உணர்வு எழுந்து பெருமூச்சாக வெளிப்பட்டது. அது கைவிடப்பட்டு ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு மழைக்காலத்திலும் அந்த மரம் ஊறியும் பூஞ்சை பூத்தும் போகிறது. அதற்குப் பிறகான குளிர்காலத்தில் அந்த ஈரம் காய்ந்து மெல்ல விரிசல் விடுகிறது. சில நேரங்களில் முறுக்கிக் கொண்டு விநோதமான தோற்றத்தில் நிற்கிறது.

அந்த மர வீட்டைச் சுற்றி மெல்ல மெல்ல காட்டுச் செடிகள் மண்டத் துவங்கின. மிச்சமாய் நின்று கொண்டிருந்த சுவற்றிலும் ஆங்காங்கு விழாமல் இருந்த கூரையிலும் கூட உறுதியான புல்லுருவிகள் பரவத் துவங்கின. அந்தத் தரையில் சேம்புச் செடிகளின் பச்சைத் தண்டுகள் அழுகிப்போய் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடக்கும். யானைக்காது போன்ற அதன் இலைகள் அவற்றின் மேலே இறுக்கமாக வலைபோல போர்த்தியிருக்கும். அடர்ந்த முட்புதர்களும் கூரான முனைகள் கொண்ட புற்களும் தடையேதுமின்றி வளர்ந்து கிடக்கும். அந்த இடிபாடுகளுக்கிடையே என்னவெல்லாம் இருக்கும் என்று எண்ணிப்பார்த்த தீரன் மஜூம்தாருக்குள் ஒரு நடுக்கம் மெல்ல ஊடுருவியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் அந்த பாழடைந்த வீட்டில் பேய்கள் அலைவதாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கதைகளை அவர் பரிகசித்தாலும் அத்தகைய இடிபாடுகளில் வந்தடையக்கூடிய நிஜமான ஆபத்துகளை எண்ணித்தான் அவர் அச்சப் பட்டுக்கொண்டிருந்தார். ஆம்! நாகப்பாம்புகள். அவை தவிர இரவு நேரங்களில் அங்கு வட்டமிட்டுப் பறக்கும் வெளவால்களும் தான்.

தீரன் மஜூம்தாரின் மனைவி உமா, அவருக்கு தேநீரைக் கொடுத்தபடியே அவரது ஏக்கப் பெருமூச்சையும் கவனித்தாள். ” அந்த இடிபாட்ட மொத்தமா இடிச்சுத் தள்ளிட வேண்டியதுதான்’ என்றாள் தீர்க்கமாக

தீரன் மஜூம்தார் தன் நாற்காலியில் நன்கு நிமிர்ந்து உட்கார்ந்தார். அவ்வாறு நிமிர்ந்து உட்கார வேண்டிய தாக்கத்தை அவர் மனைவி அவருக்குத் தந்து கொண்டேயிருந்தாள்.

’சரி..சரி.. பார்க்கலாம்..’ என்றார். ‘எப்படியும் இந்த வருஷக் கடைசீல பண்ணிடலாம். மழைக்காலம் போகட்டும்..’

என்னதான் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டாலும் அதை தான் செய்யப் போவதில்லை என்பது அவருக்கே நன்றாகத் தெரியும். தன் முன்னோர்களின் எச்சமாக இன்றுவரை நிற்பது அந்த வீடு ஒன்றுதான். அதை அப்படி இடித்துத் தள்ளிவிட வெல்லாம் முடியாது. மேலும், அதை ஏன் இடிக்கக் கூடாது என்பதற்கு அவரிடம் இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த வீட்டை மட்டும் இடித்து விட்டால் அதுவே, இந்தத் இடம் ஒரு திடல் போலப் பரந்து கிடந்து வெறித்துப் போய் கிடப்பதை நன்றாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும். அது, அவருடைய தோல்வி முகத்தை அவருக்கே நேருக்கு நேராக சுட்டிக் காட்டும் என்பதும் அவரது அச்சம். அவரது இளம்வயதில் எல்லாம் அந்த வீட்டை இடிப்பதற்கான குற்றவுணர்ச்சி எதுவும் அவர் மனதில் இருந்ததில்லை. சொல்லப்போனால், அதை இடிப்பது என்பது அவருக்குமே ஒரு ரகசிய ஏக்கமாகத்தான் இருந்தது. அதை இடித்துவிட்டு அந்த நிலத்தில், குளியலறைகளுடன் இணைக்கப்பட்ட மூன்று படுக்கை அறைகள் கொண்ட கான்கிரீட்டால் எழுப்பப்பட்ட மாடி வீடு ஒன்றைக் கட்ட வேண்டும் என்பது அவர் விருப்பம். தனக்கு திருமணமான ஆரம்ப நாட்களில் உமாவிடம் அதை நம்பிக்கையுடன் கூறியதையும் அவர் நினைத்துக் கொண்டார். அதற்கு உமா பதில் ஏதும் சொல்லவில்லை. பொதுவாகவே அவள் அதிகம் பேசக்கூடியவள் இல்லை. அவளுக்குள்ளும் தனக்கான கனவுகள் என்று ஏதாவது இருந்திருக்கலாம்

அந்த பழைய மர வீட்டை இடித்து பெரிய மாடிவீடு கட்ட வேண்டும் என்னும் கனவு கைகூடவில்லை என்றாலும், அவரால் தான் வசித்த அந்த கூரை வீட்டை இடித்துத் தள்ளி அதே இடத்தில் சற்றுப் பெரியதான இந்த வீட்டைக் கட்டிக்கொள்ள முடிந்தது. தனது மூன்று மகள்களுக்குத் திருமணம் செய்யவேண்டும் மேலும் தன் மகன் அஞ்ஜனின் படிப்புச் செலவு வேறு இருக்கிறது. ஒரு சாதாரண அரசு ஊழியரின் சம்பளத்தை வைத்துக்கொண்டு எவ்வளவுதான் கட்டி இழுக்க முடியும்?

உமாவுமே தனக்குள் ஏதேனும் வருத்தமோ குறையோ இருந்தாலும் கூட அவற்றை வெளியே சொன்னதில்லை. தனக்கோ தன் குழந்தைகளுக்கோ தீரன் மஜுதார் ஏதும் செய்யாமல் விட்டதாக அவள் என்றுமே குறை சொன்னதில்லை. அதேநேரம், அவள் அவ்வாறு அமைதியாகவும், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்தபடி திடமாகவும் இருப்பதே தீரன் மஜூம்தாருக்குப் பதட்டம் அளிக்கும். திருமணமான இந்த முப்பத்தைந்து வருடங்களில் அவள் எது குறித்தாவது கவலைப்பட்டு பேசி அவர் பார்த்ததில்லை. அகலமான நெற்றியும் கூரான நாசியும் கொண்ட அவளது வெண்ணிற கம்பீர முகம் தன் கட்டுப்பாட்டை இழந்ததே இல்லை. அவளது அந்த நிதானத்தின் முன் தீரன் மஜூம்தாருமே சற்று அச்சத்துடனேதான் இருந்தார். அவள் மனதுக்குள் ஓடுவது என்ன என்று அவரால் உய்த்துணரவே முடியாது. அது அவருக்குள் ஒரு ஆவலைத் தூண்டியபடியும் இருந்து வந்தது

தன் அலுவலகங்களில் தன் உயரதிகாரிகளிடம் இருந்த அதே பயம் அவருக்குத் தன் மனையிடமும் இருந்தது. அவர் மாவட்ட ஆட்சியர்களிடம் பணிபுரிந்தார். அந்நாட்களில் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள். ஆழ்ந்த பனிப்பாறை போன்று தோன்றும் அவர்களின் முகத்தைக் கண்டதுமே தீரன் மஜும்தார் வியர்த்து வழிவார். தனது மொத்த வாழ்நாளிலும் அவர் சிந்தித்தது செயல்பட்டது வியர்த்து வடிந்தது எல்லாமே தான் வம்படியாக ஏதாவது செய்து தன்னை சிக்கலில் ஆழ்த்திக் கொண்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது மட்டும் தான். அவர் ஒரு கடின உழைப்பாளிதான் எனறாலும் தன் குடும்பத்தைப் பாதுகாக்க அது மட்டுமே போதாது என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே தனக்கு முன் இருந்த அத்தனை சாத்தியங்களையும் அவர் பிரயோகித்தார். மாம்பழக் காலங்களில் கூடை நிறைய பழங்களைத் தன் மதிலுக்கு முன்னால் இருந்த மரத்திலிருந்து பறித்து தன் அதிகாரியின் வீட்டிற்கு அனுப்பினார். ஆற்றங்கரையில் ஒரு பெரிய கெண்டை மீனைக் கண்டால் அதன் வாசனையை உமா அறியும் முன்னரே அதை கொண்டுபோய் தன் அதிகாரிகளின் மனைவியிடம் அளித்து வந்தார். ஆண்டாண்டு காலமாக, மணிக்கணக்காக நிமிடம் கூட விடாமல் அவர் காட்டிய அந்தப் பயந்தாங்கொள்ளித் தனமும் முன்னெச்சரிக்கையும் அழிக்கமுடியாத கறையாகவே அவர்மேல் தங்கி விட்டன. அவர் தனக்குள் மிகவும் பதட்டத்துடனே இருந்தார் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் போலியான ஒரு சகஜ பாவத்தைக் கையாண்டு அந்தப் பதட்டத்தை சமாளித்தபடியே இருந்தார். ஆனால் அது, அவரே முற்றிலும் விரும்பாத அல்லது எதிர்பார்க்காத அடிமைக் குணமாக மட்டுமே இறுதியில் வெளிப்பட்டது. தீரன் மஜூம்தாருக்கே அது தெரியாது. இத்தனை ஆண்டுகளில் தான் எப்படி மாறிவிட்டோம் என்று அவர் அறிந்திருக்கவே இல்லை.

வீட்டைப் பொறுத்தவரையில் வெகு சிறப்பாகவே செயல்பட்டார். ஆனாலும், இன்று பாழடைந்து இருண்டு கிடக்கும் அந்தப் பழைய வீடு அவரைப் பார்த்து பரிகாசம் செய்வதாகவே அவருக்குத் தோன்றியது. சில நேரங்களில் உமா தன்னைப் பரிகசிக்கிறாள் என்று அவர் எண்ணிக் கொள்வார். ஆனால் தற்போது அவருடைய கவலையெல்லாம் அஞ்ஜன் கூட ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் அவரைக் குற்றம் சொல்வதாக அவருக்குத் தோன்றுவதுதான்.

அஞ்ஜன்தான் அவர்கள் குழந்தைகளில் கடைக்குட்டி. மூன்று பெண்குழந்தைகளுக்குப் பின் பிறந்ததால் அவன் மிகவும் செல்லமான குழந்தையாக வளர்ந்தான். தன் மகன் மீது தீரன் மஜூம்தாரும் பெருமளவு அன்பு கொண்டிருந்தாலும் மகன் வளர வளர அன்பைவிடவும் ஒரு தடுமாற்றம் அவருக்குள் எழுந்து வந்தது. மகள்கள் மூவரும் அவரைப் போலவே இருந்தனர். அவர்கள் குள்ளமாகவும் பூசின உடல் வாகுடனும் ரோஸ் நிற கன்னங்களுடனும் இருந்தனர். அவர்கள் கலகலவென பேசியவாறும் இருந்ததில் தீரன் மஜூம்தாருக்கு அவர்கள் மீது அளவு கடந்த நேசமும் உண்டானது. ஆனால் மறுபக்கம் அஞ்ஜன் அவரைப் போல இல்லாமல் முற்றிலும் வேறு ஒரு உலகத்தில் இருப்பவன் போல இருந்தான். தன் தாயைப் போலவே அவன் நல்ல உயரமாகவும் அழகாகவும் இருந்தான். தன் தாயிடமிருந்த அந்த தீர்க்கமான சுபாவமும் அவனுக்கு வந்திருந்தது. தீரன் மஜூம்தார் அடிக்கடி திகைப்பில் ஆழ்வது அதனால்தான். அவர் மகன் மிகவும் திறமையானவனாகவும் இருந்தான். பள்ளியிலும் அதன் பின் தில்லியில் கல்லூரியில் படிக்கும் போதும் மிகவும் எளிதாகவே முன்னிலை பெற்று சிறந்து விளங்கினான். அதன்பின்னர் அவன் குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தற்போது அஸ்ஸாம் மேகாலயா இணைக்கட்டமைப்பில் உதவி ஆணையராக இருக்கிறான். அவனது முதல் பணி ஆணை டர்ராங் மாவட்டத்தில் இருந்தது. அதுவே ஆறு மாதங்களுக்கும் முன்பு. தற்போது காமரூப்பில் துணை ஆணையராக இருக்கும் அஞ்ஜன், பங்பஜார் அருகே இருக்கும் மலைப்பகுதியில், பரந்துவிரிந்து மாடித் தோட்டம் எல்லாம் கொண்டு ஆற்றைப் பார்த்தபடி அமைந்திருக்கும் ஒரு பங்களாவில் வசித்து வருகிறான்

தன் மகனின் பதவி குறித்து தீரன் மஜூம்தார் மிகவும் மலர்ச்சி அடைந்தார். இனிமேல் தான் தன்னுடைய வேலையில் எந்தவொரு நாத்தம் பிடித்த தேவ்டியாப் பயலுக்கும் பயப்படத் தேவையில்லை. இனி அவர்களின் அந்த அரிதான உலகில் தன் மகனுமே இருக்கிறான் என்று மகிழ்ந்தார். ஆனால் நிகழ்ந்தது என்னவோ நகைமுரணாகவே இருந்தது. அவர் தன் அதிகாரிகளிடம் அதே பயத்துடன் தான் நடந்து கொண்டார். மேலும் அதே நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தன் மகன் மீதும் அவருக்கு ஏற்பட்டது. சிலநேரங்களில் அஞ்ஜன் வீட்டிற்கு வரும்போது அவர் கிட்டத்தட்ட விறைப்பாக எழுந்து நின்றிருக்கிறார்

’ஹேரா நான் சொல்லுவது கேட்குதா?’ உமாவின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது. ‘ வாங்க, வந்து காலை உணவை எடுத்துக்கங்க”

சரியாக அமர்ந்து சோம்பல் முறித்தபடி,’ வறேன்..வறேன்..’ என்றார்

’அஞ்ஜன் காலையில மீன் கொடுத்தனுப்பியிருந்தான். ‘ என்றாள் உமா தீரன் மஜும்தருக்கு சிரா டொய் -ஐ பரிமாறியபடியே.’ நாலு கிலோ இருக்கும். இப்ப புடிச்ச மீன்தான்….கெண்டை’ என்றாள்

’அருமை’ என்றார் தீரன் மஜூம்தார். ‘கடுகு தாளிச்சுப் போட்டு கெண்டமீன் கறீ பண்ணிடு மத்தியானத்துக்கு’

தீரன் மஜூம்தாரிடமிருந்து சற்றுத் தள்ளி அமர்ந்தபடி,’சரி.. நான் அதைப் போட்டு காரக்குழம்பு பண்ணலாம்னு இருந்தேன்’ என்றாள்

தீரன் மஜூம்தாருக்கு உணவு புரையேறிக் கொண்டது. சில மடக்குகள் நீரைக் குடித்தார், ’அருமையா இருக்குமே’ என்றார். ‘அதுவே நல்லா இருக்கும்’

’இன்னைக்கு சாயங்காலம் கோஸ்வாமி வீட்டுக் கல்யாணம் இருக்கு. நீங்க வறீங்களா?’ என்றாள் உமா

’இல்லை’ என்றார் தீரன் மஜூம்தார் உறுதியாக. ‘ இங்க எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு’

’சரி’ என்ற படி எழுந்துகொண்டாள் உமா. ’பியாரி லாய் அயர்ன் பண்ண துணிகளை எடுத்து வருவான். அதை எண்ணி சரிபார்த்து வாங்கிக்கங்க’

பின் மதிய உறக்கத்துக்குப் பிறகு தீரன் மஜூம்தார் எழுந்த போது உமா கல்யாணத்திற்குக் கிளம்பிச் சென்றிருந்தாள். அவர் மெல்ல முற்றத்திற்கு நடந்து வந்தார். அங்கிருந்த நாற்காலிக்குள் ஆழ்ந்துபோவதுபோல அமர்ந்து கொண்டார்

சூரியன் வானிலிருந்து மெல்ல ஒளிர்ந்தபடி இருந்தது. அதன் சாய்வான கதிர்கள் தென்னை மரத்தைப் போர்த்தியிருந்த பனியிழையை அகற்றிக் கொண்டிருந்தன. சில கதிர்கள் அந்தக் கூரையையும் ஊடுருவித் தரையில் வீசின. மாலை வெயில். பசுக்கள் தனக்குப் பின்னால் புழுதிகளைப் கிளப்பியபடி தன் வீடுகளுக்கு திரும்பும் நேரம். மாலை ஒளியும் பசுக்கள் எழுப்பிய புழுதிகளும் காணும் அந்நேரத்தில் ஏற்படும் இனம்புரியாத உணர்வெழுச்சியில் தீரன்மஜூம்தாருக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. எப்பொழுதும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை. அவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் எல்லாம் ஒரு நாள் எவ்வாறு கடக்கிறது என்பதைக் கூட அவர் அறிந்ததில்லை. அன்றைய நாளின் வேலையை முடித்து வீட்டிற்குத் திரும்புவதிலேயே அவர் கவனம் மொத்தமும் இருக்கும். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக அவர் மதிய உறக்கத்துப் பழகி விட்டிருந்தார். மேலும் அவர் எழுந்தவுடன் அவர் மனதிற்குள் ஒரு அமைதியின்மையும் உருவாகும். அவருக்கு கண்ணீர் வருமளவிற்கு அது மிகவும் கூர்மையான ஒன்றாக இருந்தது.

அவருடைய சோம்பலைப் போக்குவதற்காக அடிப்பது போலவே கோயில் மணியோசை எழுந்தது

’ஏய்..பூபென்.. நான் கூப்பிடுவது கேட்கிறதா? எனக்கு ஒரு கப் டீ எடுத்துகிட்டு வா’

அந்த இனிய தேநீர் அவரை மீட்டுக் கொண்டுவந்தது. ஒருமுறை தன்னைத் தானே பார்த்துக் கொண்டார். யாரோ கதவைத் திறக்கும் ’க்ளக்’ ஒலி அவரை நேராக உட்கார வைத்தது. மாலை நேர மங்கிய ஒளியில் பியாரிலாய் வந்து கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு கட்டு துணி இருந்தது

’நமஸ்காரம் பாபு’ என்றான் குரலில் ஒரு சிரிப்போடு. ‘நல்லா இருக்கிங்கன்னு நினைக்கிறேன்’

’சரி நிறுத்து!’ என்றார் தீரன் மஜூம்தார் கடுமையாக. ‘ துணியை ஒழுங்கா எண்ணு. ஒண்ணுகூடக் குறையக் கூடாது.. சொல்றது கேட்குதா?’

அவன் வேலையும் முடிந்தது. அவனும் குறிப்பிட்ட இசை என்றில்லாமல் ஏதோ ஒரு பாடலை விசிலடித்தபடியே சென்றான்.

தீரன் மஜூம்தார் திரும்பிச் செல்பவனையே கோபத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பன்னிப்பயல் என்று மனதுக்குள் நினைத்தார். வந்தேறிப்பயல்.. எங்கேந்து வந்தானோ அங்கேயே திரும்ப அனுப்பிடனும் இவனையெல்லாம். அதேநேரம், இவனோட அப்பன் கண்ணையா லாய் எவ்வளவு நல்லவனா இருந்தான். ஆனால் இவன் ஒரு ஈனப்பய.. என்று பொருமினார்

இவ்வாறு எண்ணியபடியே தீரன் மஜூம்தார் தன் கையிலிருந்த தேநீரை ஒரு மடக்கு உறிந்தார். பரவாயில்ல, இப்பல்லாம் பசங்க வாயைத் திறந்து எதாவது சொல்றாங்க. வந்தேறிகளைக் குறித்த பேச்சுக்களும், அவர்களை வெளியேற்றி மண்ணின் மைந்தருக்கே நிலத்தை திரும்பத்தர வேண்டும் என்று மாநிலம் முழுவதும் எழுந்த அலையும் ஒரு கணம் அவர் நினைவிற்கு வந்து சென்றது. அவர் எந்தப் பக்கமும் இருந்ததில்லை. அவருக்கு தெரிந்தது எல்லாம் தனக்கு ஒரு வேலை இருக்கிறது அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு பணம் சம்பாதித்து தன் குடும்பத்திற்கு செலவழித்தால் போதுமானது என்பது மட்டும்தான். தனக்கு மிஞ்சித்தான் மற்றதெல்லாம். தாய் நிலத்தைக் காப்பாற்ற மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் இருந்துவிட்டார். தான் ஒரு சுயநலத்துடன் குறுகிய எண்ணத்துடன் இருந்துவிட்டோமோ என்று எண்ணி அவர் சற்று ஆச்சரியமாய் யோசித்தார். அதனால் என்ன? அதெல்லாம் ஒரு குற்றமா?

பழைய வீட்டிற்கு அருகே இருந்த மாமரத்திலிருந்து பறவைகளின் கீச்சொலி எழுந்தது. தீரன் மஜூம்தார் திரும்பி அதை நோக்கினார். அவருக்கே சோகத்தில் தொண்டை அடைத்துக் கொள்ளும் அளவிற்கு அந்த வீடு அந்த மங்கிய ஒலியில் மிகவும் பரிதாபமாகக் காட்சியளித்தது.

திடீரென எழுந்த ஒரு மின்னல்கன அசைவை அவர் கண்டார். அவர் எழுந்து நின்று கவனமாக நோக்கினார். அப்பொழுது அந்த அசைவு மீண்டும் தெரிந்தது. மேல் மாடியின் திறந்த ஜன்னலில் ஏதோ நிழலாடியது. தீரன் மஜூம்தாரின் முதுகெலும்பில் ஒரு நடுக்கம் தோன்றி மறைந்தது. அதற்கு என்ன அர்த்தம்? அது எதனுடைய நிழல்? அவர் தனக்குப் பின்னால் இருந்த மரத்தூணைப் பற்றிக் கொண்டார். மெல்ல மூச்சு விட்டு நிதானப் படுத்திக் கொண்டார். அது ஒன்றும் இருக்காது. வழிதவறிய வவ்வாகவோ அல்லது காகமாகவோ இருக்கலாம்.

தீரன் மஜூம்தார் மீண்டும் தன் பழைய நிலைக்கு மீளலாம் என குதிகாலைச் சற்றுத் திருப்ப எத்தனித்தார். அப்பொழுது அந்த நிழலுருவம் மற்றொரு ஜன்னலில் இருந்ததைக் கண்டார். அது என்னவென்று தெரியாமல் அந்த மங்கிய ஒளியில் அவர் உற்றுப் பார்த்திருக்கும் போதே அது மெல்ல ஊதாக் கதிர்களின் உள்ளே சென்று மறைந்தது. இனி செய்ய வேண்டியது என்ன என்று தீரன் மஜூம்தார் உணர்ந்தார். அவரே சென்று பார்த்து விட வேண்டியதுதான்

தன் படுக்கையறையிலிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டார். அதை இடது கையில் எடுத்துக் கொண்டவர் மறுகையில் டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டார். வெளியே இப்பொழுது இருள் கவ்வத் துவங்கியிருக்கிறது. கும்மிருட்டாக ஆகவில்லையென்றாலும் நல்ல இருள்தான். அங்கு ஏதுமே இல்லாமல்கூட இருக்கலாம். அந்த உருவம் அந்த இருளின் மாய்மாலமாக இருக்கலாம். தீரன் மஜூம்தாரின் முன்னெற்றியில் வியர்வை முத்துக்களாக அரும்பத் துவங்கின. அவர் தன் கரங்களை ஒருமுறை மடக்கி நோக்கினார். சதைகளுக்குள்ளே இறுக்கமான தசைகளை அவரால் உணர முடிந்தது. அவரிடம் ஒரு திருப்தி ஏற்பட்டது

பாழடைந்த வீட்டிற்குச் செல்லும் அந்தக் குறுகலான அழுக்கான பாதை காலை சறுக்குவதாய் அமைந்திருந்தது. அது மிகவும் ஈரமாகவும் சகதிகள் நிறைந்தும் இருந்தது. அங்கிருந்த புதர்களும் காட்டுச்செடிகளும் மனிதனின் கால முட்டியளவிற்கு வளர்ந்திருந்தன. சில இடுப்பு உயரத்திற்கும் கூட வளர்ந்திருந்தன. அங்கிருந்து கடும் நாற்றமும் எழுந்து வந்தது. தீரன் மஜூம்தார் தன் நாசியைச் சுளித்தவாறு முன் சென்றார். அங்கு மெல்லிய பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவாறு சூரிய வெளிச்சம் படாமல் காடாக மண்டிக் கிடக்கும் அந்த இடத்திற்கு அடியில் இருக்கலாம். அவர் தன் கையில் இருக்கும் டார்ச்சின் ஒளியை அவருக்கு முன்னால் பாதையில் அடித்தபடி அதன் பின்னாலேயே கவனமாகச் சென்றார். வேறு ஏதாவது ஊர்வன அங்கு காத்திருந்தாலும் அகன்று செல்லும்படி, தன் கையில் இருந்த கைத்தடியால் தரையில் அடித்து முன் சென்றார்.

இறுதியாக அந்த பாழடைந்த இடத்திற்கு வந்தார். குறுகலான மரப்படிகள் வீட்டின் முன்னாலிலிருந்து எழுந்து மேல்மாடிக்கு இட்டுச் சென்றன. அந்தப் படிகளின் அடியில் ஒரு கனம் நின்றார் மஜூம்தார். அதன் அடியில் விளக்கின் ஒளியைப் பாய்ச்சியவர் பின் இன்னும் உள்ளே பார்த்தார். அங்கு முன்பு வசிப்பறையும் சமையலறையும் இருந்த இடத்திலும் ஒளியைப் பாய்ச்சினார். அங்கும் எதுவும் இல்லை. வெறும் புற்கள் தான் வளர்ந்திருந்தன

தீரன் மஜூம்தார் மாடிக்கு ஏறிச் செல்லத் துவங்கினார். வீட்டு முகப்பிலிருந்து மாடிக்குச் செல்லும் மாடிப்படிகள் பற்றிக்கொள்ள ஏதும் இல்லாமல் அபாயமான நிலையில் இருந்தன. மரப்படிகள் சில இடங்களில் விழுந்து கிடந்தன. எங்கெல்லாம் அவை இன்னும் விழாமல் இருந்தனவோ அங்கெல்லாம் கோணல்மானலாக தங்கள் பிடியை ஏனோதானோவென பற்றியபடிதான் இருந்தன. தீரன் மஜூம்தார் அதன் கீழ்படியில் காலை வைத்தபோதே அது ஒரு அபாயமான கிறீச்சிடும் ஒலியை எழுப்பியது. தன் கைத்தடியால் அதைப் பலமாகத் தட்டினார். அது சற்று உள்வாங்கினாலும் உடைந்து விழவில்லை. இவ்வாறு மெல்ல ஒவ்வொருபடியாகத் தட்டியபடியே தீரன் மஜூம்தார் உச்சிப்படி வரை ஏறிச் சென்றார்.

வாசற்படியைப் பிடித்தவாறு அவர் அந்த கதவருகே நின்றார். உள்ளே நள்ளிரவு போல கும்மிருட்டாக இருந்தது. காற்று இருந்தாலும் அங்கிருந்த அழுகியும் பூஞ்சை பூத்தும் கிடந்தவற்றால் அது அடர்ந்த துர்நாற்றமாக வீசியது. அது அவருக்கு மூச்சுத் திணறலையே ஏற்படுத்தியது. தனது நாசிகளை தன்னுடைய சட்டைக் காலரால் அவர் பொத்திக் கொண்டார். கைத்தடியை சுவர் நோக்கி சாய்த்து உயர்த்தியபடி கையிலிருந்த டார்ச் ஒளியை தன் தோளுயரத்திற்கு அடித்தார். அந்த வெளிச்சம் அடர் இருளை கிழித்தபடி பாய்ந்தது. சிலந்திகள் எல்லா இடத்திலும் வலை பின்னியிருந்தன மற்றும் ஒரு இன்ச் அளவிற்கு எங்கும் தூசு படிந்திருந்தது. ஆனால் அங்கு வேறு எதுவும் இல்லை. தீரன் மஜூம்தார் தன் ஒளியை கீழ்நோக்கி அடித்தார். ஒரு கணம் மூச்சைப் பிடித்துக் கொண்டார். அவர் முன் ஒரு இடம் தூசுபடாமல் இருந்தது. அதை உற்று நோக்கினார். அந்த இருளில் அவ்விடத்தில் வேறு ஒன்று சற்று முன்புவரை இருந்திருக்கிறது என்பது அவருக்கு உறுதியானது

மீண்டும் டார்ச்சை இயக்கினார். இந்த முறை இடுப்பளவு உயரத்திற்கு அதை வைத்துக்கொண்டு அறை முழுவதற்கும் ஒரு வில் போல மெல்லப் பாய்ச்சினார். தரைப் பலகைகள் எல்லாம் பொருத்தமில்லாமல் கிடந்தன. சில இடங்களில் பூச்சி அரித்து இடைவெளி விழுந்து பெரும் துவாரங்களே இருந்தன. தீரன் மஜூம்தார் அந்த ஒளியை வலது பக்கம் நோக்கிப் பாய்ச்சினார். அந்த வெளிச்சம் வடமேற்கு மூலையில் இருந்த ஜன்னல் அடி வரைக்கும் பாய்ந்தது. அவர் இதயம் ஒருகணம் துடிப்பதை நிறுத்தியது. அங்கு ஏதோ இருக்கிறது. ஒரு ஜோடி கண்கள் அந்த வெளிச்சத்தில் நிலைகுத்தியபடி இருந்தன. அது என்ன காட்டுப்பூனையா? மலையிலிருந்து காட்டுப்பூனைகள் வீடுகளுக்குள் உணவு தேடி வருவது அப்பகுதியில் வழக்கம்தான். இல்லை. அந்த விழிகள் மனிதர்களுடையவை. தீரன் மஜூம்தார் அந்த கண்களைச் சுற்றியும் டார்ச்சைச் சுழற்றினார். அவர் அங்கு ஒரு உருவத்தைக் கண்டார். பழைய துணியை உடுத்தியபடி, தரையில் சாய்ந்து கிடந்த உருவம். தீரன் மஜூம்தாருக்கு ரத்தம் உறைந்து போனது

’ யார் நீ? ‘ என்றார். கூடியவரை தன் குரலை திடமாக வைத்துக் கொண்டார்

மனிதனோ ஆவியோ அல்லது எதுவோ.. அந்த உருவம் ஏதும் பதில் உரைக்கவில்லை.

தீரன் மஜூம்தார் தன் குரலை உயர்த்தியபடி,’கேட்டதற்கு பதில் சொல்லு ‘ என்றார் ஆணையிடுவது போல

தன் முழங்கையை ஊன்றியபடி சாவகாசமாக எழுந்த அந்த உருவம்,’ சத்தம் போடாதே கிழவா..’ என்றது ஒரு அடர்த்தியான ஆண்குரலில். அந்த உருவத்தின் கையில் ஒரு துப்பாக்கி இருப்பதையும் அது தன் மார்பைக் குறிபார்த்தபடி இருப்பதையும் தீரன் மஜூம்தார் கண்டார்

’சுடாதே!! சுடாதே!! ‘ என்று மெல்லக் கூறியபடி, அது கேட்காவிட்டாலும் கூட தன் கரங்களை உயர்த்தினார். கரங்கள் பலமாக ஆடின. டார்ச் வெளிச்சம் பெரிய வில் அளவிற்கு ஆடியது

’என் கூட்டிற்கு உன்னை வரவேற்கிறேன். ‘ என்றபடி அந்தக் குரல் தொடர்ந்தது. ‘ அருகே வா கிழவா.. உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்’

பயத்தில் தன் முழங்கால்கள் பலமிழந்து போவதை தீரன் மஜூம்தார் உணர்ந்தார். தட்டுத் தடுமாறிய குரலில்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா ‘ என்று சுவாசத்தினூடே மெல்ல முணுமுணுத்தார்

விரைவில் தன் கால்விரல்கள் வெம்மையான ஒன்றின் மீது படுவதை அவர் உணர்ந்தார்.

’உட்காருங்கள் மரியாதைக்குரிய பெரியவரே..’ என்று கிண்டலாக சிரித்தது அந்தக் குரல். ‘இதை உங்கள் வீடாக எண்ணிக் கொள்ளுங்கள்’

அந்தக் குரல் தீரன் மஜூம்தார் கையிலிருந்த டார்ச்சை இருவருக்கும் பொதுவாக மேலே நோக்கிப் பாய்ச்சியபடி வைக்கச் சொன்னது

அந்த மறைமுக வெளிச்சத்தில், தன் முன் இருக்கும் இந்த உருவம் ஒரு இளைஞன் என்று தீரன் மஜூம்தார் உணர்ந்தார். ஒரு பையன் என்றுகூடச் சொல்லலாம். அடர்ந்த அழுக்கான கறுந்தாடி, அவனை சற்று வயதானவனாகக் காட்டினாலும் அந்த இளைஞன் தன் பதின் வயதை சமீபத்தில்தான் கடந்திருக்க வேண்டும். அவன் பழைய துணியால் ஆன உடை உடுத்தியிருந்தான் அதுவும் மண்ணில் புரண்டு தேய்ந்து உலர்ந்து போன இரத்தத்தின் நிறத்தில் இருந்தது. அவன் இன்னும் கீழேயேதான் இருந்தான் எனவே அவனுக்கு ஏதோ சரியில்லை என்று தீரன் மஜூம்தாருக்குப் புரிந்தது. மேலும் அவனுடைய அந்தக் கண்கள்!! அவன் கண்கள் அந்த இருளிலும் சுடர் விட்டுக் கொண்டு இருந்தது. அது தீரன் மஜூம்தாரை எரித்துக் கொண்டிருந்தது

”என்னைப் முழுசா பார்த்து முடிச்சுட்டியா?’ அவனது குரலில் ஒரு எகத்தாளம் இருந்தது. அவன் துப்பாக்கி இன்னும் தீரன் மஜூம்தாரின் மாரையே நோக்கியிருந்தன

’இல்லை இல்லை.. நான் எதுவும் காரணத்தோடு பார்க்கல’

’அது சரி.’ என்றபடி தரையில் சரிந்து படுத்தான்

’உனக்கு என்னப் பிரச்சினை..’ தீரன் மஜூம்தார் மெல்லக் கேட்டார்

 ‘நான் குண்டடி பட்டிருக்கிறேன்’ என்றபடி அவன் தன் கண்களைச் சற்று மூடினான். “காலில்’

’ஸ்..ஸ்.. ; என்றார் தீரன் மஜூம்தார் வருத்தம் தோய்ந்த குரலில்..’ யார் இப்படி சுட்டது..’

’மக்களுடைய எதிரிகள் தான்..’ என்றான் கடுமையான குரலில்…’பச்சைத் துரோகிகள்’ என்றான்

தீரன் மஜூம்தாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ சரி, நீ யாரு?’ என்றார்

அவன் அமைதியாக இருந்தான். ’ வாயை மூடு கிழவா’ என்றான் அழுத்தம் திருத்தமாக. ‘ உயிர் மேல ஆசையிருந்தா வாயை மூடு…’

உண்மையில், அவன் குரலில் எந்த கரகரப்பும் இல்லாமல் மிகவும் அடித்தொண்டையில்தான் கூறினான் என்றாலும் அவரால் அவன் சொன்னதை சரிவரக் கேட்க முடியவில்லை. மேலும் வெளியே மாமரத்தில் புகுந்து செல்லும் காற்றும் ஒரு விசில் ஒலியை எழுப்பியபடியே சென்றது. ஆனாலும் அவன் சொன்ன விதத்தைப் பார்த்தே கருத்தைப் புரிந்து கொண்ட தீரன் மஜூம்தார் உடனடியாக அமைதி காத்தார்.

சற்று நேரம் கழித்து அந்தப் பையன் மீண்டும் பேசத் துவங்கினான்,’ சொல்வதை ஒழுங்காகக் கேள். உனக்கு உன் உயிர் மேலயும் உனக்கு பிடிச்சவங்க உயிர் மேலயும் அக்கறை இருந்தால் நான் சொல்வதை அப்படியே செய்’ என்றான் தீரன் மஜூம்தாரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி

’புரியுதா?’

தீரன் மஜூம்தார் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் சரியெனத் தலையாட்டினார். “ என்னால் உனக்கு என்ன செய்ய முடியும்? நான் ரொம்பவும் ஏழை தெரியுமா… எங்கிட்ட பணம் கூட இல்லை..’

’சும்மா இரு !’ என்று அதட்டினான் அவன். ‘எனக்கு உன் பணம் ஒண்ணும் வேணாம்.. இதை மட்டும் செஞ்சாப் போதும்..’ என்றபடி அவன் தீரன் மஜூம்தாரிடம் அவர் என்னென்ன செய்யவேண்டும் எனக் கூறினான். அவனுக்கு உணவும் தண்ணீரும்,அவன் காயத்தை ஆற்ற சில மருந்துகளும் வேண்டும். காயத்தை சுத்தம் செய்ய அறுவை சிகிச்சையின் போது பயன் படுத்தப்படும் திரவம் வேண்டும். மேலும் அதன் மீது பூச நோய் எதிர்ப்புக் களிம்புகளும் பஞ்சும் கட்டுத்துணியும் வேண்டும். தீரன் மஜூம்தார் இவை அனைத்தையும் வாங்கி வர வேண்டும்

’இதையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல நான் எப்படிச் செய்ய முடியும்?’ என்றார் திகிலடைந்த முகத்துடன். தன் மனைவியின் கண் பார்வையிலிருந்து தற்போது தப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே அவருக்கு இருந்தது

’ அதை நீயேதான் கண்டு பிடிக்கணும் கிழவா’ என்றான் அவன்

தீரன் மஜூம்தார் எரிச்சலில் தன் தலையை ஆட்டினார். என்னவொரு சிக்கலில் வந்து மாட்டிக் கொண்டோம்? இவ்வளவு உறுதியாப் பேசும் இந்தச் சின்னப்பையன் யாரு? அடிபட்டு, உதவக் கூட யாருமில்லாம கீழே விழுந்து கிடக்கிறான் ஆனாலும் ஆணையிட்டுப் பேசுகிறான் என்றெல்லாம் யோசித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் தீரன் மஜூம்தாரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அவன் கையில் ஒரு துப்பாக்கி இருப்பது உண்மைதான் ஆனால் அவன் ஆற்றல் ஏதுமில்லாமல் கிடக்கிறான். இப்பொழுது தீரன் மஜூம்தாரால் அவனிடமிருந்து துப்பாக்கியைப் பறித்துவிட முடியும். ‘ அது தன்னால் நிச்சயமாக முடியும் தானே?’ என்று எண்ணினார்

அவர் மனதைப் படித்தவன் போல அவன் மீண்டும் பேசத் துவங்கினான். ‘ என்னைப் பிடித்து உள்ளே தள்ளிவிடலாம் என்று மட்டும் நினைக்காதே. என்னிடம் ரேடியோ இருக்கிறது. அங்கே பார்’ அவன் தன் தோளுக்கு அருகில் இருந்த ஒரு மூட்டையைக் காட்டினான். ’ மேலும் நான் என் நிலைமையைப் பற்றி ஏற்கனவே என் தோழர்களிடம் சொல்லியிருக்கிறேன். என்னிடமிருந்து செய்திகள் வருவது நின்று போனால் அவர்களிடமிருந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் துவங்கும். எங்கு வைத்து உன்னையும் உன் குடும்பத்தியும் சந்திக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்’

அந்த சொல் அத்தனை குழப்பங்களையும் தீர்த்து வைத்தது. தீரன் மஜூம்தார் ஒன்றும் கதாநாயகன் அல்ல. ‘உனது வேண்டுகோள்களை நிறைவேற்ற நான் கிளம்பலாமா?’ என்றார் அவனிடம்

’ஆம்..” என்று ஆணையிட்டான் அவன்

தடபுடலென படிகளில் இறங்கி ஓடினார் தீரன் மஜூம்தார். கடைசிப் படியில் இறங்கும் போது கால் தடுமாறி தரையில் மோதி விழுந்தார். மரப்பலகையில் சிலாம்பு ஒன்று அவர் ஆடுசதையைத் துளைத்தது. அவர் வலியில் அலறினார். அதை வெளியே பிடுங்கி எடுத்தெறிந்து விட்டு வேகமாகச் சென்றார். இனி ஒரு நொடி கூட தாமதிக்க

’ஏய்.. பூபென்..பூபென்..’ தீரன் மஜூம்தார் தன் உடைகளை கழட்டிவிட்டு காற்சட்டையும் பனியனும் (புஷ் சட்டை )அணிந்து கொண்டார்.

’சொல்லுங்கள்.. தேவுதா..’ அந்தச் சிறுவன் படுக்கையறையின் கதவருகே வந்து நின்றான்

’ எனக்குப் பசிக்கிறது புபென்..சீக்கிரமா எனக்குக் பரோட்டாவும் உருளைக் கிழங்கு கறியும் பண்ணித்தறியா?’ என்றபடி தன் பர்ஸை தன் பைக்குள் போட்டுக்கொண்டவர் ‘ நான் ஐடியல் மருந்து கடை வரை போறேன்..வந்துட்டு சாப்பிடறேன்’ என்று கூறிச் சென்றார்.

தீரன் மஜூம்தார் பதினைந்து நிமிடங்களில் மருந்துகடையிலிருந்து திரும்பி வந்தார். சொல்லபோனால் அவர் ஓடிச் சென்று ஓடி வந்தார். எப்பொழுதும் செய்வது போல, வழியில் நண்பர்களுடனோ தெரிந்தவர்களுடனோ அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அந்த மருந்துகடையில் இருந்த மருத்துவ உதவியாளர் மணிராமிடம் அவர் தன் காலில் அடிபட்டதாகச் சொன்னார். மணிராம் மருந்துகளை எடுத்து வைத்தபோது சாலையைத்தாண்டி மருந்துக் கடைக்கு எதிர்ப்புறம் இருந்த வீட்டைப் பார்த்தார். அப்பொழுது அவருக்கு உடல் சில்லிட்டுப் போனது. அந்த வீட்டில்தான் அவருடைய பள்ளித் தோழரும் அதன்பின் சைக்கிய அமைச்சரவையில் தனி அமைச்சராகவும் இருந்த முகுந்த் கோஸ்வாமி வசித்து வந்தார். கிளர்ச்சியாளர்களால் பட்டப்பகலில் அவர் சுட்டுக் கொல்லப் பட்டார்.

’நான் இதற்கு ரசீது தரவா? எப்பொழுதும் போல டிசி சார் இந்தப் பணத்தை அலுவலகத்தில் கோரிப் பெற்றுக் கொள்ள முடியும்’ என்று கேட்டான் மணிராம்

’வேண்டாம்.. அது வேண்டாம்’ என்றார் தீரன் மஜூம்தார் பதற்றமாக. அவர் கல்லாவிற்கு அருகில் சென்று குனிந்து,’இது பற்றி நீ அஞ்ஜனிடம் ஏதும் சொல்ல வேண்டாம். இது ஒரு சின்ன சிராய்ப்புதான். உனக்குத் தெரியாதா? பசங்க ரொம்ப கவலைப்படுவாங்க இல்லையா?’ என்றார்

தீரன் மஜூம்தார் திரும்ப வருவதற்குள் பூபென் உணவைத் தயார் செய்து வைத்திருந்தான். அதை முற்றத்துக்கு அருகில் இருந்த சிறிய அறையில் வைத்திருந்தான். அந்த அறையைத்தான், தன் அலுவலகம் என்று தீரன் மஜூம்தார் சொல்லிக் கொள்வார் ஆனால் உண்மையில் உமாவிடமிருந்து தப்பிக்கத்தான் அதை உபயோகிப்பார். அங்கே உட்கார்ந்து சாப்பிடுபவர் போல பாவனை செய்தவர், பூபென் சென்றதும் அந்த உணவை ஒரு தன் மேஜையில் தயாராக எடுத்து ஒளித்து வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் போட்டுக் கொண்டார். அதன் பின் விரைவாக பாழடைந்த அந்த வீட்டை நோக்கி இருட்டில் கிளம்பிச் சென்றார். அந்தப் புதர் பரப்பில் சரசரவென ஏதோ சப்தங்கள் கேட்டது. ஆனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அவர் முன்னே சென்றார். அவர் கவன்ம் முழுவதுமே அங்கு காத்திருக்கும் அந்த அபாயமான உருவத்தின் மீதே நிலைகொண்டிருந்தது

அவன் பலநாள் பட்டினி கிடந்தவன் போல அந்த உணவை அவசர அவசரமாக உண்டான். பின்னர் தீரன் மஜூம்தார் அவனுக்காக எடுத்து வந்த தண்ணீரை சப்தம் எழக் குடித்தான்.

’நான் சொன்ன மருந்துகளை வாங்கி வந்தாயா?’ என்றான்

தீரன் மஜூம்தார் அந்த பழுப்பு நிற மருந்து உறையை அவனிடன் அளித்தார்

’நான் உனக்கு உதவி பண்ணட்டுமா?’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்

’வேண்டாம்’ என்றபடி அந்த உறையைப் பிரித்தவன், ‘ போகும்போது அந்த டார்ச் லைட்டை வச்சுட்டுப் போ’ என்றான்

தீரன் மஜூம்தார் அன்றிரவு சரியாகத் தூங்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தவர் சில நேரங்களில் எழுந்து ஜன்னலின் வழியாக நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். பொழுது விடிவதற்காக நிலைகொள்ளாமல் தவித்தார். ஆனால் காலைவேளையும் அவருக்கு நிம்மதி எதையும் அளிக்கவில்லை. காலைப் பனியால் போர்த்தப்பட்டு அலங்காரமாக நிற்கும் அந்தப் பவழமல்லி மரத்தைக் கண்டுமே அவருக்குள் எந்த மகிழ்ச்சியையும் அது கொண்டுவரவில்லை

அந்த நாள் முழுவதுமே தீரன் மஜூம்தாரை ஒரே ஒரு ஐயம் மட்டுமே சீர்குலைத்திருந்தது. அவர் செய்து கொண்டிருப்பது சரியான ஒன்றா? கண்டிப்பாக இந்தக் குழப்பத்திலிருந்து மீண்டுவர அவரிடம் விவேகமான ஒரு வழியுமே இருந்தது. மிகவும் எளிதான ஒன்றாக இருப்பது அதை அஞ்ஜனிடம் சொல்லிவிடுவதாகத்தான் இருக்கும். தனக்கு ஆதரவாகத் தன் சொந்த மகனைவிடவும் சிறந்தவராக வேறு யாரால் இருந்துவிட முடியும்? மேலும் அவனே அந்த மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துபவனாகவும் இருப்பதும் வசதியான ஒன்று. ஆனால் அந்த ரேடியோ.. அது போன்ற கிளர்ச்சியாளர்களின் கோபத்துக்கு ஆளானவர்களை அஞ்ஜனால் கூட காப்பாற்ற இயலவில்லை. கிருஷ்ண கிருஷ்ணா!! அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்?

மாலைக்குள் தீரன் மஜூம்தார் இடையறாத பதட்டத்தினால் முற்றிலும் தளர்ந்து போய்விட்டிருந்தார். அந்த சலவைக் கடைக்குப் பின்னால் இருந்த சாலையில் இருந்த நாம்கரை நோக்கி உமா செல்வதை ஒருவித கோபத்துடன் அவர் பார்த்துக் கொண்டிருந்தார். எப்படியும் குறைந்த பட்சம் இரு மணிநேரங்களுக்கு அவள் அங்கே இருப்பாள். இதுவே அந்த தப்பியோடி வந்திருக்கும் நபருக்கு மாலை உணவை எடுத்துச் செல்ல சரியான நேரம்.

’பூபென்! இங்கே வா”

அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை

’ஏய் பூபென்! மரமண்டை’ தீரன் மஜும்தார் தனக்கு கோபம் ஏறி வருவதை உணர்ந்தார். “ நீ இருக்கியா போயிட்டியா?’

’வறேன் தேவுதா..’ பின்கட்டிலிருந்து பூபென் ஓடி வந்தான்

’சரி சொல்லு’ என்றவாறு திடீரென பரவசமடைந்தவராக,’சாப்பிட என்ன இருக்கு?’ என்றார் தீரன் மஜூம்தார்

பூபென் வாய் அகலமாக புன்னகைத்தான்.’ பைதியோ ராத்திரிக்கு கோழிக்கறி பண்ணிருக்காங்க. நான் அதுவும் கொஞ்சம் சப்பாத்தியும் உங்களுக்கு எடுத்திட்டு வரவா?’

’வேணாம். கொஞ்சம் சாதம் இருந்தா எடுத்திட்டு வா’ என்றார் தீரன் மஜூம்தார். ‘ சரி கேளு, இதெல்லாம் உங்க பைதியோ காதுல விழக்கூடாது சரியா? எனக்கு ஏன் இப்படி பசியெடுக்குதுங்கிறது எனக்கே தெரியல. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்’

தீரன் மஜும்தார் மீண்டும் அந்த பாழடைந்த வீட்டிற்குள் செல்லும்போது அந்தி சாய்ந்திருந்தது. அவரது சோகத்தை இன்னும் ஆழப்படுத்துவது போல ஆலய மணிகள் இறைஞ்சியபடி ஒலித்தன. துர்நாற்றம் வீசும் அந்த அறையில் அந்தப் பையன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்ததைக் கண்டார்.

’வாங்க’ என்றான் அவர். தீரன் மஜும்தார் அந்த தட்டையும் தன்ணீர்ப் பொத்தலையும் அவனுக்கு அருகில் தரையில் வைத்தார்.

அவனிடம் அந்த மாலைப்பொழுதில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. அவன் மிகவும் நிதானமடைந்தவனாகத் தோன்றினான். அதுதான் அந்த வித்தியாசமாக தோன்றியிருக்க வேண்டும். அவன் ஒவ்வொரு பருக்கையையும் அனுபவித்து உண்பவன் போல மிகவும் மெதுவாக உணவை உண்டான்.

தீரன் மஜும்தார் அவனை மிகவும் நெருக்கமாகப் பார்த்தார். அவன் கண்கள் சோர்வாகத்தான் இருந்தன. அவன் கண்களில் நேற்று இரவு கண்ட உக்கிரம் எவ்வாறோ மறைந்திருந்தது போலத் தோன்றியது. ‘ஒண்ணும் பிரச்சனையில்லையே?’ என்று கேட்டார் இறுதியாக

’ஆம்’ என்றான் அவன். ‘ கொஞ்சம் ஜுரம் இருக்கு, அவ்வளவுதான்! நாளைக்கு குணமாயிடுவேன்’

மறுநாள் காலையில்தான் அந்த நாள் முழுவதும் தனக்கு வெளியே செல்ல வேண்டிய வேலை இருப்பதாக உமா தெரிவித்தாள். பிரம்மபுத்ராவின் வடக்குக் கரையில் உள்ள டோல் கோவிந்தாவில் பூஜை செய்யவிருப்பதாக அவள் கூறினாள். அவள் அஞ்ஜனின் மனைவி மாலாவுடன் செல்கிறாள். தீரன் மஜும்தார் மனதுக்குள் ஆசுவாசமாக உணர்ந்தாலும் வெளியே ஏதும் காட்டிக் கொள்ளவில்லை.

’நீங்களும் காலையில் ஓய்வு ஊதிய அலுவர்களின் சந்திப்புக்குப் போறீங்கன்னு நினைக்கிறேன்’ என்றாள் அழகாக அந்த முஹா மேகலாவை அவளைச் சுற்றிக் கட்டியபடி

’தெரியல’ என்றார் தீரன் மஜும்தார் காலை செய்தித்தாளுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டபடி. ‘ எனக்கு ஒரு உடம்பு ஒரு மாதிரியா இருக்கு. சரியில்ல. நான் இங்கேயே ஓய்வு எடுக்கலாம்னு நினைக்கிறேன்’

’ஏன்.. என்னாச்சு?’

’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் தீரன் மஜும்தார் பதட்டமடைந்தவராய். ‘ கவலைப்பட ஒன்ணும் இல்ல..கொஞ்சம் களைப்பா இருக்கு அவ்வளவுதான்’

உமா இங்கும் அங்குமாக சென்று வந்து தயாராகிக் கொண்டிருந்ததால், அவர் செய்தித்தாளையே ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்த செய்திகள் அவரை நோக்கிக் குதித்த வண்ண்ம் இருந்தன. தலைப்புச் செய்தியும் மற்ற பெரும்பாலான செய்திகளும் கிளர்ச்சியால் மாநிலம் குதறப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தன. மாநில அரசு, ராணுவத்துடன் இணைந்துகொண்டு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். பெரும்பாலான அமைப்புகளின் தளவாடங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஆனால் ஆயுதம் ஏந்திய அதன் உறுப்பினர்கள் பலர் தப்பித்து ஓடி விட்டதாகவும் அதில் எழுதியிருந்தது. தீரன் மஜும்தார் தன் தோல் முள் போல சிலிர்த்து நிற்பதை உணர்ந்தார்.

அவர் உமா செல்லும் வரை காத்திருந்தார். உமா வாசற்கதவை சாத்தும் ஒலி எழும்பியதுமே அவர் தன் நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து தப்பிவந்த அந்த பையனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் அங்கு செல்வதை பூபெனே அல்லது பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவதோ கவனித்து விடும் வாய்ப்பு இருப்பதால் இவ்வாறு காலையில் செல்வது முட்டாள்தனமான ஒன்று என்னும் எண்ணம் அவர் மனதில் இடறியது. ஆனாலும் அவரால் இரவு வரை காத்திருக்க இயலவில்லை. இவ்வாறு தனக்கு பெரும் வேதனை தருபவனைப் பார்த்து இரண்டில் ஒன்று முடிவு செய்தாக வேண்டும். ஒன்று அவன் அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும்.. அல்லாவிடில்…..!!! அல்லாவிடில் என்ன? அது அவருக்கேத் தெரியாது. ஆனால் அதைக் கண்டறியத்தான் வேண்டும். அதற்குத் தயராகச் சென்றார்

ஆனால் அங்கு அவரை எதிர்நோக்கிக் காத்திருந்த ஒன்றிற்கு அவர் தயாராக இருக்கவில்லை. அந்த இளைஞன் தரையில் படுத்துக் கிடந்தன். கண்கள் தூங்குவது போல மூடியிருந்தன. அவன் தூக்கத்தில் மெல்ல உளறிக் கொண்டிருந்தான். சிலநேரங்களில் அவன் சத்தமாக, ’பிதா, பிதா.. நீ எங்க போன? மாய் மாய்?..’

தீரன் மஜும்தார் அந்த அறைக்குள் விரைந்து சென்றார். அவனின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தார். சுட்டெரித்துக் கொண்டிருந்தது

சூழ்நிலை வேறு வகையில் மாறி விட்டிருக்கிறது. அதை பயங்கரமான சூழ்நிலை என்றுதான் வரையறுக்க முடியும். தீரன் மஜும்தார் தன்னைத்தானே நொந்து கொண்டார். இவ்வாறு ஜுரம் வருவதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். காயத்திற்கு களிம்பு பூசியபோதே இதற்கும் மாத்திரையை அளித்திருக்க வேண்டும். இந்தப் பையனின் நிலை இன்னும் மோசமானால் என்னவாகிவிடும்? அவன் இப்பொழுது இறந்து விட்டால் என்னவாகிவிடும்? இந்தப் பையன் தன் இடத்தில் இருந்ததற்கான காரணத்தை அவர் எப்படி விளக்குவார்? தான் இவ்வாறு மிரட்டப்பட்டதை அதிகாரிகளிடம் சொல்லி அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ராணுவம் இதையெல்லாம் நம்பிக் கொண்டிருக்காது. அவர் ஏற்கனவே இத்தகைய சில சம்பவங்களை அறிந்திருக்கிறார். தீரன் மஜும்தார் தன் அலைபாயும் மனதை பிடித்து நிறுத்த முயற்சித்தார். இதையெல்லாம் யோசிக்க இது நேரம் இல்லை. இப்பொழுது செய்ய வேண்டிய வேலைகள் சில உள்ளன

அவனது கால்களையுமே பரிசோதிக்க வேண்டும். தீரன் மஜும்தார் மனதில் அது குறித்து ஒரு அருவருப்புத் தோன்றியது ஆனால் அவர் அதை ஒதுக்கி வைத்தார். இடது காலின் ஆடுசதையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவன் அது வரைக்கும் தன் கால்சட்டையைக் கிழித்து விட்டிருந்தான். மிகவும் மென்மையாக தீரன் மஜும்தார் அதை தூக்கிப் பார்த்தார். ஆனால் அவர் பார்த்தது அவர் வயிற்றைப் புரட்டியது

அந்தக் கட்டு மொத்தமும் ரத்தத்தில் தோய்ந்திருந்தது. அந்த இடமே சீழ்கட்டி அருவருக்கத்தக்க துர்நாற்றத்துடன் இருந்தது. அது மிகவும் தளர்வாக கட்டப் பட்டிருந்தது. அதனால் அதனடியில் இருந்த காயம் தெளிவாகத் தெரிந்தது. பருத்தித் துணிகள் காய்ந்து போய் அந்தக் காயத்தின் மீது ஒட்டியிருந்தன. தீரன் மஜூம்தார் மருத்துவர் அல்ல ஆனால் அவருக்குத் தான் கண்டது மோசமான ஒன்று என்று பார்த்தவுடனே புரிந்தது. அந்தக் காயம் பலமான ஒன்றாகத் தோன்றியது மேலும் பசும் மஞ்சள் நிறத்தில் சுற்றிலும் அழுக்காகப் படிந்திருந்தது. நடப்பதைப் பார்க்கையில் அது அந்தப் பையனுக்கோ தனக்கோ நலம் பயக்கப் போகும் ஒன்றாகத் தோன்றவில்லை

நோய் எதிர்ப்பு மருந்து. ஆம்.. அதுதான் அவர்களுக்கு முதலில் தேவையான ஒன்று. தீரன் மஜூம்தார் ஐடியல் மருந்துகடையை நோக்கி விரைந்தார்

மணிராம் வாசலில் இருந்த நீள்இருக்கையில் அமர்ந்து சூரிய ஒளி வாங்கியபடி வெறுமனே அமர்ந்திருந்தான். ‘மஜும்தர் சார்! என்ன விஷயம்?’ என்று கேட்டபடி எழுந்து நின்றவன்,’ நீங்க ஏதோ கவலையில இருக்கிற மாதிரி இருக்கே’ என்றான்

தீரன் மஜூம்தார் அவனிடம் தன் காலில் விழுந்த வெட்டு குறித்துக் கூறி, அது குணமடையாமல் மேலும் பாதிப்படைந்ததாகக் கூறினார். மணிராம் அதற்கான ’நோய் எதிர்ப்பு மருந்து’ ஏதாவது தர முடியுமா என்றூம் கேட்டுக் கொண்டார்

’ வேணும்னா டாக்டர் பருவா அதைப் பார்த்தா சரியா இருக்கும்…’ என்றான் மணிராம் சந்தேகமாக

தீரன் மஜூம்தார்,’இது ஒரு சின்னக் காயம். இதற்காக ஏன் அவரை தொந்தரவு செய்ய வேண்டும்?’ என்றார் சிரித்தபடி

மணிராம் ஒரு அட்டை மாத்திரைகளை அளித்தான்,’இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றான் அவன். ‘காலையில் ஒன்று..மாலையில் ஒன்று..;

தீரன் மஜூம்தார் தொலைக்காட்சியில் கண்டிருந்த ஒன்றை நினைவு கூர்ந்தார்,’காயங்களைக் சுத்தப்படுத்த உபயோகிக்கும் திரவம் என்ன? நுரைத்துக்கூட வருமே?’

’ஹைட்ரஜன் பராக்ஸைடு’ என்றான் மணிராம்.. ஆனால்…

’ அதுவும் கொஞ்சம் பெடாடைனும் கொடு…’ என்றார் தீரன் மஜூம்தார் அழுத்தமாக

அவர் அந்த மருந்துப் பொட்டலத்தை தன் மார்பில் அணைத்துப் பிடித்தவாறு தூசி நிறைந்த அந்த சாலையில் இறங்கினார். ஒரு உள்ளுணர்வின் பேரில், அவர் கோவில் மதிலுக்குள் புகுந்து செல்வது என்று முடிவு செய்தார்; அது அவர் வழக்கமாக செல்லும் பாதையில்லை. அவருக்கு தேவியின் ஆலயத்தை குறுக்காகத் தாண்டிச் செல்வது அவமரியாதைக்குரியதாகத் தோன்றும், மேலும் தன் துணிகளை அளித்து வர குறுக்குவழியில் மதிலுக்குள் சென்று வந்ததற்காக பியாரே லாயை பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால் இன்று இவையெல்லாம் விதிவிலக்கான சூழ்நிலைகள். கோயிலுக்குச் சென்ற விரிசல் நிறைந்த கான்கிரீட் பாதையைத் தாண்டி அவர் விரைவாகச் சென்றபோது, ​​சன்னதிக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் சற்று நின்றார். அங்கிருந்து காண்கையில் வெளிப்புற மண்டபத்தின் ஊடாக கருவறை தெரிந்தது. கருவறைக்குள் வெளிச்சம் இல்லாமல் மங்கலாக இருந்தது, ஆனால் தீரன் மஜும்தாருக்கு கோயிலின் இதயமாக அமைந்திருக்கும் இருண்ட, சதுர குளத்தை அவரது மனதால் காண முடிந்தது. இது இன்னுமே முடிவின்மையில் உறைந்து இருக்கும். அதன் பசும் மேற்பரப்பு அமைதியாகவும் ஒளி ஊடுருவ இயலாத ஒன்றாகவும் இருக்கும். தீரன் மஜூம்தார் தன் கைகளைக் கூப்பிய வண்ணம், தனது எண்ணங்கள் வழியாகவே தேவியிடம் பிரார்த்தித்துக் கொண்டார். அம்மா, என்று அவர் நினைத்த கணமே, எதிர்பாராத விதமாக, அவரது கண்களுக்குள் கண்ணீர் நிரம்புவதை உணர்ந்தார். அவர் உடனே தன் கண்களை மூடியபடி அதைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அதற்குப் பதிலாக தன் கவனம் முழுவதையும் குளத்தை நோக்கிச் செலுத்தினார், உடனடியாக, அவரது மனமும் தன்னை மீட்டு எடுத்துக் கொண்டது.

தீரன் மஜூம்தார் பாலத்தின் மீது குறுக்கே ஓடும்போது மூங்கில் பாலம் நடுங்கியது. அதைத் தாண்டியதும் அவர் ஒரு கணம் நின்று கீழே உள்ள பள்ளத்தின் கொந்தளிப்பான பச்சை நீரைப் பார்த்தார். சில நாட்களுக்கு முன்பு இதில் நடக்கும்போது உள்ளே விழுந்து விடுவோமோ என்பதே அவருடைய மிகப்பெரிய கவலையாக இருந்தது என்பதை இப்போது நினைக்கையில் அவருக்கு வெட்கமாக இருந்தது.

மர வீட்டிற்குச் செல்வதற்கு முன், தீரன் மஜூம்தார் தனது படுக்கையறைக்குள் விரைவாக சென்றார். சில சமயங்களில் சமையலறை தோட்டத்தில் வேலை செய்யும் போது அவர் பயன்படுத்தும் ஒரு கத்தரிக்கோல் மற்றும் பழைய ஒரு ஜோடி ரப்பர் கையுறைகளை அங்கே தேடினார். அவற்றுடன் இரண்டு வெற்று பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து அவர் எடுத்துக் கொண்டார். இதையெல்லாம் அவர் ஒரு தோள்பட்டை பையில் மருந்துகளின் பொட்டலத்துடன் சேர்த்து அடைத்தார். கடைசியாக அவர் குளியலறையில் இருந்து சூடான நீரை எடுத்து ஒரு குடுவை நிறைய நிரப்பினார்; சுடுநீர் உண்டாக்கும் கொதிகலனின் பொத்தானை அணைக்காமலேயே விட்டுச் சென்றார்.

அவர் அருகில சென்று அமர்ந்தபோது அந்தப் இளைஞனின் நிலைமை இன்னும் மோசமாகத் தெரிந்தது. அவன் தரையில் அமைதியில்லாமல் தூக்கி வாரிப் போட்டபடி கிடந்தான். தனது கைகளை அடிக்கடி உயர்த்தி, வெற்றுக் கரங்களால் எதையோ குறிவைத்து யாரையோ நோக்கிச் சுட்டான். அவன் தனது அம்மாவை பலமுறை அழைத்தான். சில சமயங்களில் தன் அப்பாவையும் அழைத்தான். தீரன் மஜூம்தாரும், ஷ்! ஷ்! என்று சத்தங்களை எழுப்பி அவனை அமைதிப்படுத்த முயற்சித்த்தார். அப்பொழுது அவன் அசையாமல் இருந்த ஒரு கணத்தைப் பற்றிக் கொண்டு, தீரன் மஜூம்தார் ஒரு தன் கையில் இருந்த மாத்திரையை எடுத்து கிண்ணம் அளவு தண்ணீரில் அமிழ்த்தினார். அவர் அதை மெதுவாக, சிறிது சிறிதாக, அவன் வாயில் புகட்டினார்.

இதற்குப் பிறகு அவர் அவனது காலுக்கு வந்தார். கத்தரிக்கோலால் தீரன் மஜும்தார் காயத்தில் ஒட்டியிருந்த நைந்த துணியை வெட்டினார். பின்னர் நனைந்து போய்க்கிடந்த கட்டுகளைப் பிரித்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தார். அடுத்து அவர் கையுறைகளைப் போட்டுக்கொண்டு ஹைட்ரஜன் பெராக்சைடு பாட்டிலைத் திறந்து, அழுகிய சதையின் உட்பக்கங்களைச் சிறிது சிறிதாக நனைத்தார். திரவம் கொப்பளித்து நுரைத்துப் பொங்கியதில் அவன் அலறத் துவங்கினான்; பொங்கிய நுரை அவனது காலில் வழிந்தோடியது. தீரன் மஜூம்தார் தான் செய்ததை  குழப்பத்துடன் மீண்டும் பார்த்தார், தான் தவறாக ஏதேனும் செய்கிறோமா? இது தவறான ஒன்றாக இருந்தால் என்ன ஆகும்? ஒருவேளை இந்த திரவம் எலும்புக்கு கீழே உள்ள சதைகளையும் அரித்துவிடுமா?

அந்தப் பொங்கிய நுரை அடங்கியபோது, ​​காயத்தின் மேல் அருவருக்கத்தக்க வகையில் இருந்தவை எல்லாம் சுத்தமாக அகற்றப்பட்டு இருந்ததை தீரன் மஜூம்தார் கண்டார். அது அவருக்குச் சற்று ஆசுவாசத்தை அளித்தது. அதற்கும் அடியில், அவரால் செக்கச் சிவந்த சதைகளையும் காண முடிந்தது. தீரன் மஜூம்தார் சிறிது பஞ்சுத் துண்டுகளை எடுத்து மேலே மூசும் களிம்பு மருந்தை அதில் பிதுக்கி, அந்தக் காயத்தை மெதுவாகத் துடைத்தார். அவன் இப்போது கூக்குரலிட்டான், அவனது மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. களிம்பினைக் கொண்டு அந்தக் காயம் முற்றிலும் பூசப்பட்ட பின், ​​தீரன் மஜூம்தார் அதை நிறுத்திவிட்டு, துணியால் மூடப்பட்ட சுத்தமான பருத்தியால் மருந்தை உள்ளே திணித்தார். பின்னர் அதை மெதுவாக காயங்களைக் கட்டும் மெல்லிய துணியால் சேர்த்துக் கட்டினார்.

அதை செய்து முடித்த நேரம் வரை, தீரன் மஜூம்தார் நடுங்கிக்கொண்டும் இருந்தார்; அவரது மூச்சுவிட்டு விட்டு வெளிவந்தது. திடீரென்று அவர் அந்த நாற்றமெடுக்கும் அறையிலிருந்து தான் வெளியேறிவிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அவசரமாக அவர் இரத்தம் தோய்ந்த குப்பைகளை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்துக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கினார். அவர் அவற்றை வெகுதூரம் விசிறியடித்து விட்டு தனது குளியலறையை நோக்கிk கிட்டத்தட்ட ஓடினார். அங்கு ஷவருக்கு அடியில் சென்று, சூடான தண்ணீரைத் தன் உடல் முழுவதும் ஓடவிட்டபடி நீண்ட நேரத்திற்கு நின்றார்.

துர்நாற்றமெடுக்கும் ஒரு உணர்வு அந்த நாள் முழுவதுமே தீரன் மஜும்தாருடன் இருந்தது; அழுக்கான தரையில் கிடந்த அவன் உருவம் அவரது மனதில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது. அவர் மதியம் தூங்க முயன்றார், ஆனால் தூக்கம் அவரைத் தவிர்த்தது. எப்படியும் சிறிது நேரமாவது அமைதியாக தூங்கிவிட வேண்டும் முடியும் என்று நம்பிக்கையுடன் அந்தி விழும் வரை அவர் காத்திருந்தார், ஆனால் மாலைப் பொழுதின் அந்த அமைதியும் கூட ஒரு மாயை போலத்தான் அவருக்குத் தோன்றியது. தனக்குத் தீங்கிழைக்கப் போகும் ஏதோ ஒன்று அங்கே உருவாகி, மாலை வெயிலின் மங்கலான மஞ்சள் விளிம்புகளுக்குள் தன்னை வெகு சீராக, தள்ளிவிட்டுக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது.

உமா ஏழு மணியளவில் திரும்பி வந்தாள். வரும்போது அஞ்ஜனின் குழந்தைகளான இஷானையும் ப்ரியாவையும் உடன் அழைத்து வந்திருந்தாள். அவர்களைக் கண்டதும் தீரன் மஜூம்தாரின் மனம் சற்று மேலெழும்பி வந்தது. அவருடைய பேரன் தன்னைத் தூக்கிக் கொள்ளவும் சுமந்து செல்லவும் அவரைக் கட்டாயப் படுத்தினான். அவனால் ஆட்டுவிக்கப்படும் குதிரையாக அவர் சிறிது நேரம் இருந்தார். அவருக்கு அது ஒரு ஆசீர்வதிக்கப் பட்ட தருணமாக அமைந்தது. ஆனால் எப்பொழுது அவர் அஞ்ஜனின் காலடிச் சப்தத்தைக் கேட்டாரோ அதற்குப் பிறகு மேலெழுந்து வந்த அவர் மனம் மீண்டும் அமிழ்ந்து கொண்டது. மீண்டும் தன் மீதான அவநம்பிக்கை அவரைச் சூழ்ந்துகொண்டது

’எப்படி இருக்கிறீர்கள்.. தேவுதா..?’ என்று கேட்டான் அஞ்ஜன்

’நல்லா இருக்கேன்ப்பா.. ” என்றார் தீரன் மஜூம்தார் மகிழ்ச்சியுடன்..’ ரொம்ப நல்ல இருக்கேன். நீ எப்படி இருக்க?’ என்றார்

அஞ்ஜன் தன் உள்ளங்கையை முகத்தில் ஓட்டியபடியே,’ரொம்ப வேலை.. அதுவும் இந்த கலவரமான சூழ்நிலையில..’ என்றான். அதற்குள் உமாவும் அவனை அழைத்தபடி வெளியே வர அவனும் தன் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தபடியே சென்றான். அவன் செல்லும்போதே தன் கரங்களை அவளது தோளில் மெல்ல போட்டு அவளை மெல்ல அணைத்தபடி பேசிக்கோண்டே சென்றான். அவர்கள் இருவரும் உடனடியாக தீரன் மஜூம்தாரின் கண் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று வேறு எவரும் உய்த்துணரவே முடியாதபடிக்கு எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும். ஒரு லட்சுமணன் கிழித்த கோடு போன்ற ஒன்று அவரை எப்பொழுதுமே அவர்களிடமிருந்து விலக்கியே வைத்திருக்கும். எப்பொழுதுமே அவரால் அதற்குள் நுழைய முடிந்ததில்லை. அவர் அமைதியாக தன் நாற்காலிக்குத் திரும்பினார்.

இப்பொழுது அவர்கள் என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்று அவருக்கு ஒரு வியப்பு ஏற்பட்டது. ஒருவேளை தான் செய்தது என்னவென்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ? இத்தனை வருடங்களாக இந்த குடும்பத்தை எந்தவொரு ஆபத்தும் தீண்டிவிடக் கூடாது என்றுதான், தான் எந்தவொரு சின்ன அபாயத்திலும் பட்டுக் கொள்ளாமல் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறேன். இத்தனை நாட்கள் தீவிரமாக கட்டிக்காத்து இவ்வளவு தூரம் வந்த பிறகு தன் விரும்பிய அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் விதமான ஒன்றைத் தானே செய்து விட்டோமே! அந்த சமயத்தில் தன்னால் வேறு எதுவும் செய்திருக்க முடியாது என்பது என்னவோ உண்மைதான்.. அந்த ரேடியோ ஒன்று மட்டும் தான் செய்த அனைத்திற்கும் ஆதார காரணம். அது மட்டும் இல்லாவிடில் தன்னால் கண்டிப்பாக வேறு எதையாவது செய்திருக்க முடியும். ஆம்.. அந்த ரேடியோ!!! அதை நினைக்கையில் அவர் இரத்தம் உறைந்து போனது. அந்த இளைஞன் சுவாதீனம் இல்லாமல் குழப்பமாக உளறியபடி நாள் முழுவதும் உறங்கிக் கிடக்கிறான். அவனால் தன் தோழர்களுக்கு செய்தி எதையும் அனுப்பியிருக்க முடியாது. இந்த நிமிடம் அவர்களால் தன் குடும்பத்தினருக்கு பெரும் ஆபத்து ஒன்று சூழப் போகிறது. அவர் எழுந்து நின்றார். ஆனால் தன் முழங்கால்கள் நடுங்கி அவர் மீண்டும் அந்த நாற்காலிக்குள்ளேயே விழுந்தார்

தீரன் மஜும்தார் அவசரம் அவசரமாக  சூழ்நிலையைக் கவனித்தார். அனைவரும் உள்ளே இருக்கிறார்கள். எப்படியும் உமா அவர்களை நீண்ட நேரம் உபசரிப்பாள். இந்த நேரத்தைத் தான் தவறவிடக் கூடாது. தீரன் மஜூம்தார் அந்தப் பையன் விழுந்து கிடக்கும் இடத்திற்கு மீண்டும் சென்றார். அந்த டார்ச்சின் குறைவான ஒளியில் நடுக்கத்துடன் அவர் அங்கும் இங்கும் தேடினார். அவனது வலது புறம் ஏதும் இல்லை. அவர் முகம் முழுவதும் வியர்த்து வழிந்தது. பிறகுதான் அவன் தன் இடது தோளில் இருந்த பெரிய மூட்டையைச் சுட்டிக் காண்பித்ததை நினைத்துக் கொண்டார். தீரன் மஜூம்தார் அவனுக்கும் சுவற்றுக்கும் இடைப்பட்டக் குறுகலான பகுதியை தன் கரங்களால் துழாவினார். இறுதியாக அவர் கரங்கள் சதுரமாகவும் கனமாகவும் இருந்த ஒன்றில் தட்டுப்பட்டது. அதை மெல்லத் தூக்கியவர் தரையில் கவனமாக வைத்தார். அந்தப் பொருள் பழைய துணிகளைக் கொண்டு கவனமாகச் சுற்றப் பட்டிருந்தது. அந்தத் துணிகளை அவர் கவனமாகப் பிரித்தார். அதற்குள் சதுரவடிவில் ஒரு உலோகப் பெட்டி இருந்தது. அதைப் பார்த்தால் ரேடியோ போல தோன்றவில்லை. அதை சுற்றும் முற்றும் பிரட்டிப் பார்த்தவர் ஓரிடத்தில் அதைத் திறப்பதற்கான கைப்பிடி இருப்பதை அறிந்தார். அதற்கும் மேலாக ஒரு தாழ்ப்பாள் இருந்தது. அதை நீக்கி அந்தப் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்தவற்றைக் கலக்கத்துடனும் திகைப்புடனும் ஆராய்ந்தார். அதற்குள் ஒரு சவரக் கத்தியும், பற்பசையும் இருந்தன. ஒரு டைரி போன்ற ஒன்று அதன் அடியில் இருந்தது. அதை எடுத்துப் பார்த்த போது அது ஒரு பர்ஸ் என புரிந்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை

தீரன் மஜூம்தார் அந்தப் பெட்டியை தரையில் வைத்தார். அந்த இருட்டுக்குள் அங்கும் இங்குமாகத் தேடினார். அந்த ரேடியோ எங்குதான் சென்றது? அப்படி எப்படி அதனால் மறைய முடியும்? அல்லது.. அல்லது.. ஆம்! ஆரம்பத்திலிருந்தே அது இங்கு இல்லை. அந்தப் பையன் புளுகியிருக்கிறான். தீரன் மஜூம்தாரின் உடலில் ஒரு ஆத்திரம் தோன்றியது. அவன் அவரிடம் பொய் சொல்லிவிட்டான். அவருடைய கரங்கள் தானாக உயர்ந்தன. அப்படியே அவன் கழுத்தை நெரித்து விட வேண்டும் என்றும் கண்களை நோண்டி எடுத்துவிட வேண்டும் என்று அவை துடித்தன.

’அப்பா.. அப்பா.. அவளை அனுப்பிடாதீங்க அப்பா…’’ என்று மயக்கத்தில் பிதற்றினான் அவன்… ‘ எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கப்பா..’ அவன் தீரன் மஜூம்தாரைப் தோளைப் பிடித்துக் கொண்டான்

தன் தோள் மீது விழுந்த அந்தக் கரங்களைக் கண்டதுமே தீரன் மஜூம்தாரின் கோபம் நீராவி போல வெளியேறியது. அவனது கரங்கள் அவனது நகம் அளவிற்கே மிகவும் மெலிந்திருந்தன. அவன் தோல் மிகவும் லேசானதாக இருந்தது. அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். எத்தனை நாட்களாக இவன் இப்படி உணவின்றி இருக்கிறானோ? என்று தீரன் மஜூம்தார் எண்ணிக் கொண்டார்.

அந்தக் கும்மிருட்டில் தரையில் உட்கார்ந்தபடியே அவர் சூழ்நிலையை பரிசீலித்தார். இப்பொழுது அவர் செய்ய வேண்டியது அந்தப் பையனை குணப்படுத்தி அனுப்புவது ஒன்றுதான்

மெல்ல அந்த நோய் எதிர்ப்பு மாத்திரையைப் பொடியாக்கி நீரில் கரைத்து அவனுக்குப் துளித் துளியாக அவனுக்குப் புகட்டினார்.

அதற்கடுத்த மூன்று நாட்களுமே அவன் ஜுரத்தில்தான் விழுந்து கிடந்தான். உறக்கத்தில் என்னவெல்லாமோ உளறினான். அவன் குரல் மன்றாடுவது போல ஒலித்தது. அவன் தன் அப்பாவிடம் எதையோ கேட்டு இறைஞ்சுகிறான். தன் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லி வேண்டுகிறான்

தீரன் மஜூம்தார் அவநம்பிக்கையோடு அவனைப் பார்த்தபடி இருந்தார். ஒருபுறம் அவர் மனது உறுதியாக ஒன்றை விரும்பியது. அது அவன் குணமாகி வீடு திரும்பவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் அவனுக்கு அருகில் அமர்ந்து அவனைப் பார்த்தபடி இருந்த தருணங்களில் அவன் மீது தனக்கு கோபம் எதுவும் எழவில்லை என்றும் அவருக்குப் புரிந்தது. அவன் பெயர் கூட அவருக்குத் தெரியாது. ஒரு பரிதாபமான நாய்க்குட்டியினால் கூட ஓர் மனிதனின் ஆன்மாவினைத் தட்டி எழுப்பிவிட முடிகிறது. இங்கே ஒரு சிறுவனே அப்படிக் கிடக்கிறான். இவன் தன்னைப் பெரிய ஆள் போலக் காட்டிக்கொண்டிருக்கிறான். ஆனால் சிறுவன் தான். இப்படித் தன் வாழ்க்கைக்குள் புகுந்து அதை முற்றிலும் தலை கீழாக மாற்றியவன் மீது அவருக்கு இப்பொழுது சிறு சீற்றம் கூட எழவில்லை. இதுவரை என்னென்னவோ நடந்து இங்கு வந்து நிற்கிறது. இனி நடக்க வேண்டியதை எவ்வளவு சிறப்பாக செய்து முடிக்க முடியுமோ அப்படிச் செய்து வைக்க வேண்டும். தீரன் மஜூம்தார் அப்படியே அமர்ந்து கொண்டார். அந்த இருட்டில் அமர்ந்தபடி, ’அனைத்தையும் நல்ல விதமாக நீதான் முடித்துத் தர வேண்டும் அம்மா!!’ என்று தேவியிடம் பிரார்த்தித்தார்

நான்காம் நாளின் காலையில் தீரன் மஜூம்தார் கையில் உணவும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு அவனைக் காண மாடிப்படியில் ஏறிச் சென்றார். அப்பொழுது சுவற்றில் முட்டுக் கொடுத்து ஒருவாறு சாய்ந்து அவரை நோக்கியபடி அமர்ந்திருந்த அவன் தன் பார்வையால் அவரை வரவேற்பது போல நோக்கினான்

’நல்லது’ என்றார் அவனைப் பார்த்ததும். ‘இப்பொழுது நீ நன்கு குணமாகிவிட்டவன் போலத் தோன்றுகிறாய்’

அவன் அவரை தர்ம சங்கடமாகப் பார்த்தான். அவன் அவரிடம் தன் தன் காலில் காயத்தின் மீதிருந்த கட்டுக்களைக் காட்டி சுட்டிக் காண்பித்து, ‘ இது நீங்க பண்ணியதா?’ என்றான்

அவனை தயக்கத்துடன் பார்த்த தீரன் மஜூம்தார் ‘ஆமாம்’ என்றார்

அவனும் சங்கடமாக,’மிக்க நன்றி’ என்றான்

தரையில் உணவினை வைத்துக் கொண்டிருந்த தீரன் மஜூம்தாருக்கு அதைக் கேட்டு வியப்பு மேலிட்டது. அவனை நினிர்ந்து பார்த்தார். ‘ ஒன்றும் இல்லை…சும்மாதான் ’ என்றான் அவன்

அவன் உணவை உண்டு மாத்திரைகளையும் சாப்பிட்டதும் தீரன் மஜூம்தார் அவன் அருகே அமர்ந்தார்

’இப்ப சொல்லு..’ என்றார் அவனைப் பார்த்து. ‘ உன் பேரு என்ன?’

’மனோஜ்’ என்றான் அவன். பின் முகத்தில் பழைய கொடூரத்தைத் கொண்டுவந்து,’அதோட நிறுத்திக்க! மேலே கேட்காதே!’ என்றான்

’நீ மயக்கத்துல என்னென்னவோ உளறின’ என்றார் தீரன் மஜூம்தார் அதைக் கண்டுகொள்ளாமல்

உடனே எச்சரிக்கையாக நிமிர்ந்து உட்கார்ந்தவன்,’ என்னவெல்லாம் நான் சொன்னேன்?’ என்றான்

தீரன் மஜூம்தார் புன்னகைத்தார். ‘பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. நீ உங்க காம்ரேட்டுகளைப் பத்தி எதுவும் தரக்குறைவாக பேசிடல..நீ உன் அம்மா அப்பா பத்தி பேசின.. அப்புறம் அவளை அனுப்பிடாதீங்கன்னு யாரைப் பத்தியோ சொன்ன’

அவன் சற்றுத் தொலைவாக பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்

தீரன் மஜூம்தார் அவனை மீண்டும் வற்புறுத்தினார்,’ நீ யாரைப் பற்றி அப்படிப் பேசினாய்?’

’ அவள் என் தங்கை ‘ என்றான் அவன் சிறிது நேரம் கழித்து. ‘ என் அப்பா அவளை டெல்லிக்கு அனுப்ப முடிவு பண்ணியிருந்தார். அங்க ஒரு பணக்காரர் வீட்டுல வீட்டு வேலை செய்வதற்காக.. ’ அவன் சற்று மென்று முழுங்கியவாறு, ‘நாங்க ஒண்ணும் வேலைக்காரங்க இல்லை. புரியுதா? ‘ என்றான். பின் குரலை உயர்த்தி,’ நாங்க வேலைக்காரங்களா இருந்ததில்லை. இருக்கவும் மாட்டோம்’ என்றான்

தீரன் மஜூம்தார் ஒன்றும் சொல்லவில்லை

அவன் மேலும் தொடர்ந்தான்.’ நான் பல்கலைக்கழக ஆரம்பகட்டத் தேர்வு எல்லாம் பாஸ் பண்ணிட்டேன். தெரியுமா?’ என்றான். ஒரு ஏளனப் புன்னகையுடன் தீரன் மஜூம்தாரைப் பார்த்தபடி,’ நான் அப்படிப் படிச்சு பாஸ் பண்ணிருப்பேன்னு உங்களுக்குத் தோணவே இல்லை. நான் சொல்வது சரிதானே? அப்புறம் நான் பாஸ் பண்ணியதும் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியனாகும் வேலைக்கான நேர்முகத் தேர்வுலயும் ஜெயிச்சேன். நான் அந்த வேலையில் சேர அவங்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டாங்க. ஒரு லட்சம்!! அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போவோம்?.. தேவ்டியாப் பசங்க..’

தரையில் முட்டிக்கால் போட்டபடி அமர்ந்திருந்த தீரன் மஜூம்தார் முட்டியை நேராக்கி அமர்ந்தார். சற்று நேரம் தன் தலையைக் குனிந்து கொண்டார். இந்த கதை அவருக்கு ஒன்றும் புதிது இல்லை. இதே கதையை பலமுறை பலர் சொல்லி அவர் கேட்டிருக்கிறார். வயதான மூன்று மகள்களுக்குத் திருமணம் செய்ய அந்த வயதான தந்தை எப்படி தன் கிராமத்து நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்றார் என்பதையும், அதன்பின் நிலமும் பணமும் கொஞ்சமும் எஞ்சாமல் போனதையும், தாய்க்கு வயதாகி முதுகு வளைந்து போனதையும் மீண்டும் கேட்டார். கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு ரணம் போல அவருக்கு குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்தது.

அவன் பேசுவதற்கு சிரமம் ஏதும் படவில்லை. தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டே சென்றவன், ‘அப்பத்தான் அவங்க கிராமத்துக்கு வந்தாங்க’ என்றான். அவன் குரலில் ஒரு பெருமிதம் தோன்றியது. ’இந்த சிறைவாசத்தை உடைத்தெறிய இதுதான் சரியான நேரம் என்று அவர்கள் சொன்னார்கள். நம்முடையவற்றை நாம் எடுத்துக் கொள்ள இதுதான் சரியான நேரம். நம்முடையது எல்லாத்தையும் நாம திரும்ப எடுக்கனும்.. நம்முடைய நிலத்தை.. நம்முடைய வேலையை.. அப்புறம் முக்கியமா நம்முடைய சுயமரியாதையை.. எல்லாத்தையும் திரும்ப எடுக்கனும்.

அவன் தீரன் மஜூம்தாரைத் தீர்க்கமாகப் பார்த்தான். ” அவர்கள்தான் எங்களை கவனித்துக் கொண்டார்கள். நானும் என் வீட்டிற்குப் பணம் அனுப்பத் துவங்கினேன். தங்கையை வீட்டிலேயே வைத்துக்கொள்ளச் சொல்லி அப்பாவிடம் கூறினேன்… ஆனால் கொஞ்ச காலமாக அவர்களிடமிருந்து எனக்கு செய்தி எதுவும் வரவில்லை. ‘ அவன் தலையைக் குனிந்து கொண்டான். அவனது நீர்கோர்த்த கண்களை தீரன் மஜூம்தார் கண்டார்

’நீங்க என்ன பண்றீங்க?’ என்றான் அவர் தயங்கியவாறு

’நான் அரசாங்க ஊழியனாக இருந்தேன்..’ என்றார் தீரன் மஜூம்தார். ’இப்பொழுது ஓய்வு பெற்று விட்டேன்..’

ஒரு மாதிரியான ஆர்வமும், பின் வேறு பல உணர்ச்சிகளும் மாறி மாறி அவன் முகத்தில் தோன்றின. “ அப்ப.. நீயும் ஒரு துரோகிதான்’ என்றான். அவன் குரல் அடர்த்தியாக ஒலித்தது. ஏளனமும் அதில் இருந்தது. ‘ உன் குடும்பத்துல இருப்பவங்க எல்லாரும் என்ன பண்றாங்க? உனக்கு ஏதாவது பசங்க இருக்காங்களா? அவங்களும் துரோகிதானா?’

 “என் மகன்..’ என்று சொல்லத் துவங்கியபோதே தீரன் மஜூம்தாருக்கு உள்ளங்கைகள் வியர்க்கத் துவங்கின. ‘என் மகன் காம்ரூப் மாவட்டத்தோட துணை கமிஷனரா இருக்கான்’

அவன் அவநம்பிக்கையுடன் சிரித்தான். கண்ணில் நீர் வழிந்தோடும் வரை சிரித்தான். ‘ சிங்கத்தின் குகைக்குள்ள நேரா வந்து புகுந்துட்டேன் போலிருக்கே..’

தீரன் மஜூம்தார் அவன் சிரித்து முடிக்கும்வரை காத்திருந்தார். பின் ரத்தினச் சுருக்கமாக கூறத்துவங்கினார்..’ ஆமாம். அதான் இப்ப நிலைமை. என்னால பண்ண முடிஞ்ச எல்லாத்தையும் நான் பண்னிட்டேன். நீ கேட்ட எல்லாத்தையும் கூட நான் பண்ணிட்டேன். இதுக்கப்புறமும் நீ இங்க இருப்பது நல்லதுக்கு இல்ல. நீ இன்னும் கொஞ்ச நாள் கூட இங்க தங்கி ஓய்வு எடுக்க விரும்பினா எடுத்துக்கோ. அப்புறம் கிளம்பிடு. ‘ சொல்லியபிறகு அவன் முன்னால் குனிந்து சற்று நெருக்கமாக சென்று ‘ ஒண்ணு தெரிஞ்சுக்கோ.. எனக்கு அந்த ரேடியோ பத்தி நீ விட்ட கதையெல்லாம் தெரிஞ்சு போச்சு. அப்படி ஒண்ணும் கிடையாதுன்னு இப்ப எனக்குத் தெரியும்.” என்றார்.

மறுநாள் தீரன் மஜூம்தார் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருடைய கஷ்டகாலம் எல்லாம் இப்ப கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் ஓரிரு நாட்கள்தான். பின் வாழ்க்கை முன்பு இருந்தது போல மாறிவிடும்

அதன்பின் அவர் தைரியமாக ஒரு நடைபயிற்சிகூட செய்து வந்தார். தான் சிறு வயதில் சுற்றிய சந்து பொந்துகளில்லாம் புகுந்து நிதானமாக நடந்து சென்று வந்தார். பிரம்மபுத்ரா வரை நடந்து சென்றவர், அங்கேயே நின்றபடி தனக்கு மிகவும் பழகிய அந்த ஆற்றை நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து மெல்ல நடந்து கடைத்தெரு வரை சென்றார். அங்கிருந்த பழைய தியேட்டரில் சிறிது நேரம் நின்றார். சில இளைஞர்கள் வெய்யிலில் சுற்றிக்கொண்டு, மலிவான சிகரெட்டுக்களாக வாங்கி புகைத்துக் கொண்டிருந்தனர். அவர் நடந்து சென்று வந்த மொத்த சூழலுமே மிகவும் நேர்த்தியாகவும் அவருக்கு மகிழ்வளிப்பதாவும் இருந்தது

ஆனால் அந்தநாள் துவங்கியது போல அவ்வளவு எளிதாக முடியவில்லை. அன்றிரவு தீரன் மஜும்தார் தன் பழைய வீட்டில் இருப்பவனைப் பார்த்துவிட்டு மறைந்துபடி திரும்ப தன் வீட்டிற்கு வந்தபோது, அங்கு முற்றத்தில் உமா அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டார்

’அந்தக் காட்டுக்குள்ள இந்த ராத்திரியில என்ன பண்றீங்க?

’சும்மா பார்த்துக்கிட்டிருந்தேன்..’ என்றார் அவசரமாக. ‘ அந்தப் பழைய வீட்டை இன்னும் நாம வச்சுக்கிட்டு இருக்கனுமான்னு பாத்துக்கிட்டிருந்தேன்..’

இன்னும் இரு நாட்கள் கழிந்தன. தீரன் மஜும்தார் மேலும் நிதானமாகி விட்டிருந்தார். அதன்பின், நான்காம் நாள், அவர் அந்தப் பழைய வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் திரும்பி வரும்போது மாதுளை மரத்தினடியில் ஒரு உருவம் காத்திருப்பதைக் கண்டார். அவர் எச்சரிக்கையுடன் அங்கேயே நின்றார்

”யாரது?” என்றார் உரக்க

’நாந்தான் தேவுதா..’ என்றான் அஞ்ஜன் நிலவொளியில் வெளியே வந்தபடி

அந்த விளையாட்டு முடிவுக்கு வந்தது. தீரன் மஜூம்தார் அப்படியே உட்கார்ந்தார்

’தேவுதா.. என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..’ என்றான்.. ‘உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே..’

’’அவன் என்னை மிரட்டினான்…’என்றார் தீரன் மஜூம்தார் ஆவேசமாக. “ உங்க எல்லாரையும் காட்டி மிரட்டினான்.. உன்னை.. அம்மாவை..’

’சரி சரி..’ என்று அவரை அமைதிப்படுத்தினான் அஞ்ஜன். ‘ உங்களால என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணிட்டீஙக.. அவனை இனிமே என் பொறுப்புல விட்ருங்க..நான் பாத்துக்கிறேன்..’

அஞ்ஜன் சொன்னதன் முழுப்பொருளும் ஒருகணத்தில் அவன் புத்திக்கு சடாரென உரைத்தது. ‘வேண்டாம்.. ‘ என்றார் அவசர அவசரமாக, நீ அவனை கைது செய்யக்கூடாது. நான் அவனை கிளம்பிப் போகச் சொல்லிட்டேன். இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல அவன் போயிடுவான்..’

’என்ன சொல்றீங்க தேவுதா.. உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா..” அஞ்ஜன் குரல் கடினமாகியது.. ‘அது ஒரு ஆபத்தான இயக்கம்… தடை செய்யப்பட்ட ஒண்ணு.. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த தீவிரவாதி அவன்.. அவனை நான் கைது பண்ணி சிறையிலடைச்சே ஆகணும்..’

தீரன் மஜூம்தார் ஆவேசமாக சில அடிகள் முன்னெடுத்து வைத்தார். ‘ அதுக்கு நான் உன்னை அனுமதிக்க மாட்டேன்..’ என்றார்.. இன்னும் அவன் முன்னால் சென்று..’ அப்படி நீ அவனை கைது செய்தால், நான்தான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தேன்னு தெருவுல கத்தி சொல்லுவேன்.. அப்புறம் உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ..’

அஞ்ஜன் தன் தந்தையை புரிந்துகொள்ளமுடியாமல் பார்த்தான்..’அவனை நான் கைது பண்ணியே ஆகனும் தேவுதா..’ என்றான் அமைதியாக. ‘இப்போ நான் சொல்றதை தெளிவா கேட்டுக்கோங்க.. நாளைக்கு காலையில எட்டுமணிக்கு நீங்க அவனைப் பார்த்துட்டு எனக்குத் தகவல் சொன்னதா சொல்லி நானே வந்து அவனைக் கைது செய்து கூட்டிட்டுப் போறேன்’

’சரி..’ என்றார் தீரன் மஜூம்தார்

அஞ்ஜன் கிளம்பிச் செல்லும் வரை காத்திருந்த தீரன் மஜூம்தார், அவன் சென்றதும் அந்த மரவீட்டை நோக்கி ஓடினார். அவன் தூங்கி விட்டிருந்தான். அவனை உலுக்கி எழுப்பிய தீரன் மஜூம்தார் அவனிடன் நடந்ததை விவரித்தார். “விடியறதுக்குள்ள நீ கிளம்பனும்” என்றார் அவசர அவசரமாக..

அவர் தன் வீட்டிற்குத் திரும்பியபோது உமா முன் முற்றத்தில் அமர்ந்திருந்தாள். அவர் எதுவும் பேசாமல் அவள் அருகே சென்று அமர்ந்து கொண்டார்

’அப்ப.. நீதான் அஞ்ஜன் கிட்ட சொல்லிருக்க..இல்லையா..’ என்றார் கோபமாக

’ஆமாம். நாந்தான் சொன்னேன்..’ என்றாள் அவள் மலர்ச்சியாக, ‘உங்களுக்கு வயசாயிடுச்சி.. கண்டதையும் போட்டுக் குழப்பிக்கிறீங்க… அதையெல்லாம் இன்னொருத்தர் கையில ஒப்படைச்சிருக்கனும்..’

’என்னைவிட, அஞ்ஜன் கையில் அவனை ஒப்படைச்சிருப்பதுதான் ரொம்ப சரியா இருக்கும்னுதான் நீயும் நினைக்கிற இல்ல? ‘ என்றார் விரக்தியாக

’நீங்க என்கிட்டயாவது சொல்லியிருந்திருக்கனும்..’ என்றாள் உமா

’எதுக்கு சொல்லனும்’

’நீங்க பண்றது சரியான்னு புரிஞ்சுக்கத்தான்…… என்கிட்ட சொல்லியிருந்தா அவனுக்கு நீங்க கொண்டுபோய் கொடுத்ததைவிட இன்னும் நல்ல சாப்பாடாவது கிடைச்சிருக்கும்..’

தீரன் மஜூம்தார் அவளைத் திரும்பிப் பார்த்தார். பின் சிரிக்கத் துவங்கினார். அவர் சிரித்த சிரிப்பில் அவர் தொந்தி பெரிதாகக் குலுங்கியது..

உமா எழுந்து உள்ளே சென்றாள். கதவருகே சென்றவள் திரும்பி அவரைப் பார்த்து, ’நீங்க செய்தது ரொம்ப நல்ல விஷயம்’ என்றாள் அமைதியாக

மறுநாள் விடியற்காலையில் தீரன் மஜூம்தார் எழுந்து வந்தபோது, பிரம்பு நாற்காலி மீது ஒரு பவழமல்லி மலர்கள் நிரம்பிய பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. அதைக் குழப்பத்துடன் பார்த்தவர் அவசர அவசரமாக மர வீட்டுக்குள் ஓடினார். மாடிக்குச் சென்று பார்த்த போது அது ஒழிந்திருந்தது. அந்தப் பையன் கிளம்பிச் சென்றிருந்தான்.

ஒரு மென்சோகம் தீரன் மஜூம்தாரைச் சூழ்ந்தது. மீண்டும் கீழே இறங்கி, வாசல் கதவு வரை வந்து பார்த்தார். வழக்கத்திற்கு மாறாக பியாரி லாய் இந்த நேரத்திலேயே தன் வேலையைத் துவங்கியிருந்தான். அங்கே பச்சை நிறத்தில் ஒன்று திடீரென அவர் கண்ணில் பட்டது. ஆத்திரத்துடன் கத்தியபடி கதவைத்திறந்து ஓடினார். பியாரிலாய் பயந்து போய் பார்க்க.. போன வேகத்திலேயே..’ டேய் தேவ்டியா மவனே.. இந்த சட்டை உனக்கு எங்கேந்துடா கிடைச்சது?’ என்றார். அவன் முகத்தில் உமிழ்ந்தார். ஆவேசத்துடன் அவர் விரல் சுட்டிய இடத்தில், அவன் கடை வாசலில் கிடந்த மற்றத் துணிக்குவியலுக்கு மேல் மனோஜுடைய உடைகள் கிடந்தன

’பாபு.. கொஞ்சம் பொறுமையா இருங்க பாபு.. நான் சொல்றதைக் கேளுங்க..’ என்றான் பியாரிலாய் அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்தபடியே..’ என்னால் அவனை அப்படியே அனுப்ப முடியலை.. அதனாலதான் கோஸ்வாமியின் பையனோட புது பேண்ட்டையும் சட்டையையும் அவனுக்குக் கொடுத்துட்டேன்’

தீரன் மஜூம்தார் சிரிக்கத் துவங்கினார்..’டேய் ராஸ்கல்…கிழட்டு ராஸ்கல்…’ என்றார் சிரிப்பினூடே..

’பாபு.. உங்ககிட்ட இன்னொரு விஷயமும் சொல்லனும்’ என்றான் அவன்.. ‘நான் அதைத்தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்..’

’ உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நான் அந்த மூங்கில் வேலிய வெட்டி ஒரு கதவு மாதிரி வச்சுத் தரவா? அப்புறம் நீங்களும் நிம்மதியா பூப்பறிக்கலாம்.. நானும் நிம்மதியா இருப்பேன்.. இந்த வயசுல நீங்க கீழ விழுந்துட்டீங்கன்னா…நல்லாவா இருக்கும்..?’

’நீ எதுக்கு கஷ்டப்படணும் பியாரி லாய்? ‘ என்று கேட்ட தீரன் மஜூம்தார், தொடர்ந்து, ’ஆனால்…உண்மையிலேயே.. நீ சொன்னது ரொம்ப அருமையான விஷயம்தான்..’ என்றார்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் – காளிப்பிரசாத்

***

 

அஸ்ஸாமிய மொழி சொற்களின் பொருள்

’கத்தா அல்லது கோத்தா – நில அளவீடு. ஒரு கத்தா என்பது கிட்டத்தட்ட மூவாயிரம் சதுரடி நிலம்.

‘ஹேரா’ à கணவனை அழைக்கும் சொல்

சிரா தொய் à சிரா என்பது அவுல்பொறி போன்ற உணவு. அரிசியால் ஆனது. தொய் என்பது தயிர். இரண்டும் கலந்து உண்பது அசாமிய காலை உணவு.

தேவுதா, பிதா à அப்பா அல்லது அய்யா என்றும் பயன்படுத்தப்படும்.

பைதியோ – வயது அதிகமான பெண்மனியை அழைக்க பயன்படுத்துவது.

மாய் – அம்மாவை அழைக்க பயன்படுத்தப்படும் சொல்.

நாம்கர் à பிரார்த்தனைக் கூடம்

தோல் கோவிந்தா à அஸ்ஸாமின் காம்ரூப் மாவட்டத்தில், கவுஹாத்தி நகருக்கு அருகில் உள்ள கோயில்.

மூகா மேஹலா à அஸ்ஸாமிய புடவை.. (தாவணி போன்ற ஒன்று.. திருமணமானவர்களும் அணிவது ). மூகா என்பது பட்டு நூலில் ஒருவகை.

பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா

***

முந்தைய கட்டுரைவீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 21