அன்புள்ள ஜெ,
கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என் பார்வைக்கு வந்தது. அவர் அளிக்கும் ஏராளமான cross references மிக முக்கியமானவை என நினைத்தேன். வரலாறு, சினிமா, அரசியல், சமகாலச் செய்திகள் எல்லாமே கவிதையில் பேசுபொருளாகின்றன.
அதாவது சமகாலச் செய்திகளைப் பார்த்து அவர் கவிதையில் தலையங்கம் எழுதவில்லை. மாறாக கவிதையின் போக்கில் இவையெல்லாம் பேசப்படுகின்றன. இவை வேர்கள் போல கேரளப் பண்பாட்டுடன் இக்கவிதையை பற்றி நிறுத்துகின்றன.
இந்த அம்சம் கவிதைக்கு அந்த படிமங்களாலும் வேறுவகையான கவித்துவமான உட்குறிப்புகளாலும் அளிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மேலதிகமாக ஒரு subtext ஐ அளிக்கிறது. அதைக்கொண்டு கவிதையை முற்றிலும் வேறொரு கோணத்தில் வாசிக்கமுடிகிறது.
தமிழ்க்கவிதையில் மிகவும் குறைந்துவிட்டிருப்பது இதுதான் என்று தோன்றுகிறது. தமிழ்க்கவிதை ஒரு வகையான தூய்மைநிலையில் இருந்து காமம் காமம் என்று பேசிக்கொண்டிருக்கிறது. அல்லது கூட்டத்தோடு சேர்ந்து கட்சியரசியல் பேசிக்கொண்டிருக்கிறது
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ,
கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகளின் பேசுபொருட்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அவை முழுக்க முழுக்க நவீனமாக உள்ளன. அவை பெரும்பாலும் அரசியல் கவிதைகள். ஆனால் அரசியலை உரத்துக்கூவாமல் நுட்பமாக முன்வைக்கின்றன. கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கையில் அவர் நம்முடன் புன்னகையுடன் பேசிக்கொண்டிருப்பதுபோல தோன்றுகிறது
செல்வராஜ் மாரிமுத்து