தொப்பிகள்
தலைசுற்றி விழும்
கிழட்டு இலை
எத்திசை என்றிலாத
பித்துப் பெருமூச்சு.
பல நோவுகள்
இறுகி அறுந்த கொந்தளிப்பு
சற்றே மிகையாகிவிடாதா
இதைப்போய்
சுழற் காற்று என வணங்குவது?
சுழற்காற்று வீசியநாள்
நாலைந்து ஓடுகள் பறந்தன
சில கிளைகள் உடைந்தன
சில தொப்பிகள் பறந்து சென்றன
பல கீற்று முடி காணமலாயிற்று
அதிகமாகிவிடாதா
இதைப்போய்
புரட்சி என்றெல்லாம்
நீட்டி பாடுவது?
சென்ற தொப்பிகள் எங்கே என தலைகளும்
இருந்த தலைகள் எங்கே என தொப்பிகளும்
தேடியலைகின்றன
பொருந்த முனைகின்றன புண்பிளவுகள்
குறைந்துபோய்விடாதா
எதிர்ப்புரட்சி என இதை வசைபாடுவது?
நிறைந்த விழி
முங்கித் தாழும் காட்சிகள்
கூடிப்போகாதா
பெருவெள்ளம் என இதை
புகழ்த்துவது?
கோடும் முக்கோணமும்
நானும் அவனும் மட்டும் இருக்கும்போது
எத்தனை நல்ல தோழன் அவன்!
பாடும் விழி
நட்பு அலையடிக்கும் வால்
செவி கடந்து விரியும் புன்னகை
சந்தைக்குப் போனதும்
வேட்டைக்குப் போனதும்
ஆறு நீந்திக்கடந்ததும்
திருடனை கடித்துபிடித்ததும்
உலகுக்குக் காவலிருந்ததும்
வசை பொறுத்ததும்
மூழ்கும் முனைபோல
வெள்ளப்பெருக்கில்
பொருமிக்கொண்டிருந்த தகழியைக் கண்டதும்.
உண்மை
அந்நேரங்களின் அழகு.
வேறு எவராவது உள்ளே வந்தால்
அவன் மற்றொருவன்
இலக்கிய கதைநாயகன் ஆனதும்
அநீதி கண்டு குரைத்ததும்
லில்லிப்புட் மக்களால்
குதிரையென கருதப்பட்டதும்
யுதிஷ்டிரரை தொடர்ந்து
சொற்கம் சென்றதும்
பாவிகள் நரகத்தில்
வெந்து உருகுவதைக் கண்டதும்
நடித்துக் காண்பிப்பான்
கோரைப்பல் நுனி தெரியலாகும்
நிற்கு நடப்பு இருப்பு குரைப்பு
ஊடக முறைப்படி உருமாறும்
மீண்டும் நானும் அவனும் மட்டும் எஞ்சும்போது
என்ன ஒரு அணுக்கம்! என்ன ஒரு நட்பு!
[தகழி சிவசங்கரப்பிள்ளை ஒரு நாய் பெருவெள்ளத்தில் கைவிடப்படுவதைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற சிறுகதை ‘வெள்ளப்பொக்கத்தில்’]
அதே வளைவு
கொரட்டிச்சந்தையில்
தண்டவாளத்தை ஒட்டியுள்ள
பழைய பாதையைப் போல ஒன்று
பாரிப்பள்ளி தேவாலயத்திலும் உண்டு
அதே வளைவு
ஒரே வழிவெட்டுபவனா
இரண்டையும் வெட்டினான்?
ஒரே வழி உருவாக்க காலத்தில்?
இருக்காது
திருவிதாங்கூரிலும் கொச்சியிலும்
வழிவெட்டுபவர்கள் வெவ்வேறு
நாட்டுமரபுகளும்
நாஞ்சில்நாட்டு நாயக்கர்களும் தெற்கே
நாட்டுநடப்புகளும்
பெருமாள்களும் பணிக்கர்களும் வடக்கே
பயத்தாலோ பக்தியாலோ
நயத்தாலோ பணிவாலோ
குன்றின் அமைப்பாலோ
வழி வளைய நேர்ந்தது?
வளைவா அன்றைய
முன்னேற்ற வழிமுறை?
யாரறிவார்?
தென்னையென்றால் வளைந்திருக்கும் என்று
பாரீஸ் விஸ்வநாதன் சொன்னார்
வழியென்றாலும் வளைவு இருக்கும்
ஆறு என்றாலும்
மொழி என்றாலும்
வளைவு இருக்கும்.
வளைவில்லாமல் என்ன விளைவு?
பூமி உருண்டது அல்லவா?
வளைவல்லவா நமது பிறவிமுத்திரை?
என்று தானே சொல்கிறார்கள்
அறிவியலாளர்கள்?
இளம்குளத்திடமோ எம்ஜியெஸ்ஸிடமோ
கேஎன் பணிக்கரிடமோ
கேளுங்கள் மேலதிக வரலாறு
சுருள்முடி வளைவுகளின்
காதலர்களாக இருந்தனர்
ஓட்டுநர்களும் மொழியறிஞர்களும்
கவிஞரும் கதைஞரும் இயக்குநரும்
வளைவுகளின்
மதர்த்த நுட்பங்களில்]
அவர்களின் நேரம் சென்று
தாழம்பூவழிகளில் மறைந்தது
துயரங்களிலூடாக வயதாகி
அவர்கள் பார்க்கையில்
வளைவுகள் தோறும் ஒளிந்து நிற்கின்றன
கனவு வஞ்சனை பௌர்ணமி
நோய் வறுமை தாலிபான்
நிமிராது போன
துப்பாக்கிக்குழலே நேர்வழி.
கீதையில் உளவியல்போல
மாபெரும் புதிர்கள்.
“வயசாகிவிட்டது பிள்ளைகளே
உங்களுக்குத் தெரியுதா
வளைவுக்கு அப்பாலே என்ன?”
அமைதியா கலகமா
வெளியா இடுங்கலா
எதிர்காலம் கண்டு மீள்பவர்
யாருமில்லை கேட்டறிய
ஏதேனும் ஒரு வளைவுவரைத்தான்
எந்த விழிக்கும் பார்வை
என்றாலும்
எப்படி இந்த
கொரட்டி வளைவில்
பாரிப்பள்ளி வளைவின்
அதே நாலுமணி தென்னையின் நிழல்?
மிதிப்பவரின் தலையில் விழுந்து
அடுத்த காலடியில் கீழே விழும்
அதே நிழல்?
அதே வளைவு?
[இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை, எம்.ஜி.எஸ்.நாராயணன், கே.என்.பணிக்கர் – கேரள வரலாற்றாசிரியர்கள்]