தொடர்ச்சி அம்மாவை நானே ஒருபோதும் துரத்திவிடக்கூடாது என்று நினைத்தேன். சென்றமுறை தப்பி ஓடியதுபோல இம்முறையும் சென்றுவிடுவாள் என்று காத்திருந்தேன். அப்படி அவள்சென்றால் என்னுடைய குற்றவுணர்ச்சி இல்லாமலாகும். சுவாமியின் வார்த்தையை நான் காப்பாற்றியவனாவேன். ஆனால் இம்முறை அம்மாவுக்கு அங்கே இருந்தாகவேண்டிய தூண்டுதலாக சுபா மேலுள்ள வெறுப்பு இருந்தது. சுற்றிச்சுற்றி வந்து சுபாவை வசைபாடினாள். வீட்டுக்கு வெளியே சாலையில் நின்றுகொண்டு ‘வெள்ளப்பன்னி, பாண்டன் நாயி..சுட்ட கெழங்குமாதிரி இருந்துட்டு எங்கிட்ட பேசுதியா? ஏட்டீ வெளிய வாடி நாயே’ என்று பெருங்குரலெடுத்து ஆரம்பித்தால் பலமணிநேரம் இடைவெளியே விடாமல் கத்திக்கொண்டிருப்பாள். அந்த கட்டற்ற உயிராற்றலே எனக்கு பிரமிப்பூட்டியது. நாய்கள் போன்றவை மணிக்கணக்காகக் கத்திக்கொண்டிருப்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்த இரு கிழவர்களுக்கும் காசுகொடுத்து அவர்களிடம் அம்மாவை கூட்டிச்செல்லும்படிச் சொன்னேன். அவர்கள் பணத்துடன் அன்றே காணாமலானார்கள். அம்மா இன்னும் ஆங்காரம் கொண்டவளாக ஆனாள். இரவில் அவளே கிளம்பி நகரை சுற்றிவிட்டு விடியற்காலையில் ஏதேதோ குப்பைகளை அள்ளிக்கொண்டு திரும்பிவந்தாள். வீசியெறியப்பட்ட அழுகல் உணவுகள். பழைய துணிகள். மின்னக்கூடிய அத்தனை பொருட்களையும் கொண்டு வந்தாள். அவற்றை கார்ஷெட்டில் ஓரமாக குவித்து வைத்தாள். அழுகிப்போன ஓர் உணவுப்பொட்டலத்தைப்பிரித்து அவள் வழித்து வழித்துச் சாப்பிடுவதை ஒருமுறை சன்னல்வழியாகக் கண்ட சுபா ஓடிப்போய் அப்படியே வாந்தி எடுத்தாள்.
ஒருநாள் ஒரு பெருச்சாளியை அம்மா காகிதங்களையும் பிளாஸ்டிக்கையும் கொளுத்தி தீமூட்டி வாட்டுவதைக் கண்டபோது நானே வெளியே சென்று அதை பிடுங்கி வெளியே வீசி அவளை அதட்டினேன். அவள் திருப்பி என்னை அடிக்க வந்தாள். நான் அவளை பிடித்து தள்ளியபோது மல்லாந்து விழுந்தாள். பாத்ரூம் டர்க்கி டவல் ஒன்றை எடுத்து கட்டியிருந்தாள். அது அவிழ்ந்து நிர்வாணமாகக் கிடந்தவள் நிர்வாணமாகவே எழுந்து ஒரு கல்லை எடுத்து என்னைத் தாக்கினாள்.
அவளைப் பலம் கொண்டமட்டும் தள்ளி கார்ஷெட் அருகே உள்ள அறைக்குள் தள்ளிக் கதவைச்சாத்தினேன். மூச்சுவாங்க சில நிமிடங்கள் நின்றேன். சன்னல்கள் எல்லாம் கண்களாக என்னைபார்க்கின்றன என்று தெரிந்தது. நேராகக் குளியலறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டு கதறி அழுதேன். நீர் கொட்டும் ஒலியில் என் அழுகை மறைந்தது. தலையிலும் முகத்திலும் அறைந்துகொண்டு தேம்பல்களும் விம்மல்களுமாக அழுது நானே ஓய்ந்தேன். பின்னர் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன்
சுபா மூச்சு வாங்க வெளியே நின்றிருந்தாள். ‘நான் போறேன்..என் பிள்ளையோட நான் எங்கையாவது போறேன்’ என்றாள். நான் பேசாமல் நடந்தேன். என் பின்னால் வந்தபடி ‘என்னால முடியாது…இனிமே இதப் பாத்திட்டிருக்க முடியாது. சிட்டியிலே இப்ப இதெல்லாம் தான் எல்லாருக்கும் பேச்சு. இனி நான் எங்க தல காட்டுவேன்? வேலைக்காரங்க பாத்து சிரிக்கிறாங்க…என்னால முடியல. நான் போறேன். ஒண்ணு நான் இல்லட்டி உங்க அம்மா’ என்றாள்.
நான் அவளிடம் ‘நான் எங்கம்மாவ விட்டுர முடியாது. அது என் குருவோட வார்த்தை. நீ போனா நான் வருத்தப்படுவேன். என்னால அதைத் தாங்க முடியாது. ஆனால் அம்மா அவளுக்கு என்ன புடிக்கிறதோ அதைத்தான் செய்வா’ என்றேன். தலைநடுங்க வீங்கிய கண்களுடன் ஈரக்கன்னங்களுடன் என்னை பார்த்து சில கணங்கள் நின்றுவிட்டு சடேலென்று மாறி மாறி தலையில் அறைந்துகொண்டு அபப்டியே தரையில் அமர்ந்து சுபா கதறி அழுதாள். நான் என் அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துப் பிடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டேன். எழுத்துக்களைப் பாராமல் அவள் அழுகையையே கேட்டுக்கொண்டிருந்தேன்.
இரவுவரை அம்மா உள்ளேதான் கிடந்தாள். நான் வெளியே சென்று எங்கெங்கோ அர்த்தமில்லாமல் அலைந்துவிட்டு நள்ளிரவில் திரும்பி வந்தேன். உடைமாற்றிக்கொண்டு கார்ஷெட் அறைக்குச் சென்று கதவை திறந்தேன். உள்ளே இருந்து சிறுநீரும் மலமும் கலந்த வாடை குப்பென்று தாக்கியது. அம்மா எழுந்து என்னை தாக்குவாள் என எதிர்பார்த்தேன். அவள் மூலையில் கைகளை தலைக்கு வைத்து குப்புற குனிந்து அமர்ந்திருந்தாள் ‘அம்மா சோறு வேணுமா?’ என்றேன். தலையசைத்தாள்.
அவளுக்கு நானே சோறு போட்டேன். ஆவேசமாக அள்ளி அள்ளி அவள் விழுங்குவதைப்பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு கணம் நெஞ்சடைத்தது . மறுகணம் இடிவிழுந்த பனைபோல என் உடல் தீப்பற்றி எரிந்தது. ஒருநாளாவது பசிக்குப்பதில் ருசியை உணர்ந்திருப்பாளா? அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது. சாப்பிட்டு நிறுத்த அவளுக்குத் தெரியாது. இலை காலியாக ஆவதையும் தாங்கிக்கொள்ள முடியாது. ‘போடு போடு’ என்று கையால் இலையை தட்டிக்கொண்டே இருந்தாள். இப்படித்தான் இருந்திருக்கிறேன் நானும். அந்த என் உடல் இந்த உடலுக்குள்தான் இருக்கிறது
சாப்பிட்டு முடித்து கையை உடலிலேயே தேய்த்தபின் அங்கேயே அவள் காலை நீட்டி படுத்துக்கொண்டாள். நான் உள்ளே சென்று கோப்பையில் அரைவாசி பிராந்தி எடுத்துவந்து கொடுத்தேன். வாங்கி அப்படியே மடமடவென்று உள்ளே கொட்டிக்கொண்டு பெரிய ஏப்பம் விட்டாள். வயிறு நிறைந்ததும் அதற்கு முந்தைய கணத்தை முற்றாக மறந்தவளாக ’என்னலே காப்பா?’ என்று என் கையை வருட ஆரம்பித்தாள். அவளிடம் என்னெனவோ சொல்லவும் கேட்கவும் நினைத்தேன். ஆனால் அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதே போதுமென்றிருந்தது.
‘லே மக்கா காப்பா, அந்த வெள்ளைப்பண்ணி பேயாக்கும்லே. அவ ஏன் அப்டி இருக்கா தெரியுமாலா? அவ உனக்க ரெத்தத்த உறிஞ்சி குடிக்கா பாத்துக்கோ… உனக்க குஞ்சாமணியிலே இருந்து..’ சட்டென்று என் ஆண்குறியை பிடித்து ‘லே..இதில அவ ரெத்தம் குடிக்காலே’ என்றாள். நான் விடுவித்துக்கொண்டேன். ‘மக்கா உனக்கு இந்த களசமும் சட்டெயும் வேண்டாம்லே.. நீ தம்றான்மாருக்க கசேரியிலே இருக்காதே…வேண்டாம். தம்றான்மார் உன்னைக் கொண்ணு போட்டிருவாங்கலே..நீ நாளைக்கு எங்கூட வந்திரு. நாம அங்க நம்ம ஊருக்கு போவலாம். நான் உன்னைய பொன்னு மாதிரி பாத்துக்கிடுவேன். வாறியா மக்கா? அம்மையில்லாலே விளிக்கேன்?’
கண் தளரும் வரை அதையே சொல்லிக்கொண்டிருந்தாள். திரும்பத்திரும்ப நாற்காலி வேண்டாம், தம்புரான்களின் நாற்காலியில் நீ அமர்ந்தால் உன்னை கொன்றுவிடுவார்கள், உன்னைக்கொல்லத்தான் இந்த வெள்ளைப்பேயை மந்திரித்து அனுப்பியிருக்கிறார்கள் என்றுதான் புலம்பினாள். நான் எழுந்து என் அறைக்குச் சென்று ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மோட்டுவளையையே பார்த்துக்கொண்டிருந்தேன். கிறுக்குத்தனமாகச் சொல்கிறாள் என்றாலும் அவள் சொல்வதிலும் உண்மை உண்டு என்று தோன்றியது. எஜமான்களின் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனா? அதற்காக என்னை கொன்றுகொண்டிருக்கிறார்களா? இவள் என் குருதியை உறிஞ்சிக்கொண்டிருக்கிறாளா? என்னுடைய மாயைகளுக்கு வெளியே நின்று, மனவசியங்களுக்கு அகப்படாத மிருகம்போல, அம்மா உண்மையை உணர்கிறாளா?
நான் திரும்ப என் அலுவலகத்திற்கு வந்தபோது நான்கரை மணி ஆகியிருந்தது. என் அறைக்குள் சென்று அமர்ந்து குஞ்சன்நாயரிடம் டிபன் வாங்கிவரச்சொன்னேன். என்னுடைய இயலாமைக்கு நான் காரணங்கள் தேடுகிறேனா? அப்படித்தான் சுபா சொல்வாள். என்னுடைய திறமையின்மைக்கு வெளியே காரணங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். நீ ஏன் செயல்படக்கூடாது? நீ உணரும் தடைகள் எல்லாமே உனது கற்பனைகள். நீ செய்யவேண்டியதென்ன என்று உண்மையில் நீ உணர்ந்தவற்றை ஏன் செய்யாமலிருக்கிறாய்?செய்துபார்…
செய்யவேண்டும் என்றால் ஒன்றுதான். நான் என்னைப்போன்றவர்களின் குரலாகவும் கையாகவும் இந்த அமைப்புக்குள் இருக்க வேண்டும். என்னைப்போன்றவர்கள் என்றால் தோட்டிகளால் அள்ளிவரப்பட்டு மானுடக்குப்பைகளாக கழுதைச்சந்தை ஆஸ்பத்திரியில் குவிக்கப்பட்டவர்கள். பொதுச்சுகாதாரத்திற்காகக் கோடிகளைச் செலவிடும் இந்த அரசு அந்த உயிர்களுக்காக ஏன் கொஞ்சம் செலவிடக்கூடாது? அந்த டாக்டர்கள் ஏன் அவர்களையும் மனிதர்களாக நினைக்கும்படிச் செய்யக்கூடாது? முடியாது என்பவர்களைத் தண்டியுங்கள். உங்களில் ஒருவன் அந்த ஆஸ்பத்திரியில் கவனிக்கப்படவில்லை என்றால் உங்கள் குரல் எழுகிறதே, நீதியுணர்ச்சி எரிய ஆரம்பிக்கிறதே…
நான் கைகள் நடுங்க எழுத ஆரம்பித்தேன். பின் எழுந்து என்னுடைய அறிக்கையை தட்டச்சிட்டேன். கழுதைச்சந்தை ஆஸ்பத்திரியில் நான் பார்த்தவற்றை விரிவாக எழுதி உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டிருந்தேன். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்றுநாட்களுக்குள் எனக்கு அறிக்கையிடவேண்டும். இல்லாவிட்டால் என் தனிப்பட்ட அதிகாரத்தால் தவறுகளுக்கு பொறுப்பானவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தேன். மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு நேரடி பிரதியும் மாநில சுகாதாரச் செயலருக்கு நகலும் போட்டேன். பிள்ளையை உள்ளே அழைத்து உடனே அவற்றை அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.
மாலையில் மீண்டும் ஒருமுறை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். டாக்டர் இந்திரா ‘எந்த டெவெலெப்மெண்டும் தெரியலை. வேணுமானா நாளைக்கு டயாலிஸிஸ் செஞ்சு பாக்கலாம்’ என்றார். அம்மா அதேபோல படுத்திருந்தாள். ஆஸ்பத்திரிக்குரிய பச்சை நிற உடை அணிவிக்கப்பட்டிருந்தது. கைகால்களில் வீக்கம் குறைந்து தோலில் நீர்வற்றிய சேறுபோல சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்ததுமே தூங்கிவிட்டேன். சுபா என்னிடம் அம்மாவைப்பற்றி விவாதிக்க விரும்பினாள். ஆனால் நான் அப்போது சொற்களை விரும்பவில்லை.
ஒருமணி நேரம் தூங்கியிருப்பேன், விழிப்பு வந்தது. சுபா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஏர்கண்டிஷனரும் கடிகாரமும் ராகமும் தாளமும் போல ஒலித்தன. வெளியே சென்று சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். சிகரெட் அதிகமானதனாலா தூக்கம் கெடுகிறது என்று எண்ணம் வந்தது. தூங்கும் முன்னால் கடைசி எண்ணமாக இருந்தது நாளை ஆபீஸ் போனதும் என் கடிதம் பற்றி டிஎம்ஓவிடம் நானே நேரில் பேசுவதைப்பற்றித்தான். என்ன செய்ய நினைக்கிறார் என்று கேட்கவேண்டும். முடிந்தால் ஊடகங்களுடன் ஒரு நேரடி விசிட் செய்து இவர்களை நாறடிக்கவும் தயங்கக்கூடாது.
என்ன சொல்வார்கள் என எனக்குத் தெரியும். இந்த ஒன்றரை வருடங்களில் நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். கௌரவம் அவமானம் என்ற சொற்களின் அர்த்தங்களையே என் மனம் இழந்துவிட்டது. அம்மா அவற்றின் கடைசித்தடயத்தையும் அழித்துவிட்டுத்தான் சென்றாள். மதுரையில் என்னுடன் இருந்தவள் ஒருநாள் காலையில் பிரேமை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள். சுபா மயக்கமாகி விழுந்துவிட்டாள். நான் எஸ்பியை கூப்பிட்டுச் சொன்னேன். நகரமெங்கும் போலீஸ் பாய்ந்தது. நாற்பத்தைந்து நிமிடங்களில் பிடித்துவிட்டார்கள். நகரின் முக்கியமான ஓட்டல் ஒன்றுக்குப் பின்னால் உள்ள எச்சில்குவியலில் மேய்ந்துகொண்டிருந்தாள். அகப்பட்ட எச்சிலையும் அழுகலையும் அவனுக்கும் ஊட்டிவிட்டிருந்தாள்.
சுபா உள்ளிருந்து குண்டுபட்ட மிருகம் போல வெளியே பாய்ந்து வந்து குழந்தையை எஸ்ஐ கையிலிருந்து பிடுங்கினாள். அதன் வாயும் மார்பும் எல்லாம் அழுகிய உணவு. அவள் அப்படியே அதை அணைத்து இறுக்கி முத்தமிட்டுக்கொண்டே தரையில் அமர்ந்துவிட்டாள். நான் செயலிழந்து நின்றேன். ஜீப்பிலிருந்து இறங்கி என்னைப்பார்த்து ‘ஏலே காப்பா’ என்றபடி வந்த அம்மாவை கண்டதும் என்னுள் இருந்து ஏதோ ஒன்று திமிறி வெளியே வந்தது. சட்டென்று கீழே குனிந்து அங்கே கிடந்த ஒரு ஹோஸ் பைப்பின் துண்டை எடுத்துக்கொண்டு ‘ஓடு ஓடுரீ…ஓடுரீ நாயே.. இனிமே இந்த வீட்டுக்குள்ள கால வைக்காதே ஓடு’ என்று ஓலமிட்டுக்கொண்டு அவளை மாறிமாறி அடித்தேன். அவள் அலறியபடி புழுதியில் விழுந்து கைகால்களை உதறித் துடித்தாள். அவளை எட்டி உதைத்தேன்.
என்னை எஸ்ஐ பிடித்துக்கொண்டார். அம்மா எழுந்து தெருவில் ஓடி நின்று ‘லே காப்பா…நீ நாசாமா போவே..சங்கடச்சு போவே…வெள்ளப்பண்ணி உனக்க ரெத்தத்த குடிப்பாலே…லே பாவி! நாயே, பாவி லே!’ என்று மார்பிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டு கூக்குரலிட்டு அழுதாள். இடுப்புத்துணியை அவிழ்த்து வீசி நிர்வாணமாக நடந்து காட்டி, கைகளை விரித்து விதவிதமான சைகைகளுடன் வசைபொழிந்தாள். ‘சார் நீங்க உள்ள போங்க’ என்றார் எஸ்.ஐ. நான் உள்ளே போய் என் அறைக்கதவை தாழிட்டுக்கொண்டதும் முதலில் நினைத்தது தூக்குமாட்டிக்கொள்வதைப்பற்றித்தான். என்னால் கொஞ்சம் தைரியம் கொள்ள முடிந்திருந்தால் இந்த அவஸ்தை அன்றே முடிந்திருக்கும்.
அன்று அம்மாவை எஸ்.ஐ பிடித்து ஜீப்பில் ஏற்றி நகரின் முக்கியமான கிறித்தவ நிறுவனத்தின் முதியோர் விடுதி ஒன்றில் கொண்டு சென்று சேர்த்து அவரே முன்பணமும் கட்டிவிட்டுச் சென்றார். நான் மறுநாள் பணம் கொடுத்தனுப்பினேன். மீண்டும் அம்மாவைப்பார்க்கும் துணிவே எனக்கு ஏற்படவில்லை. எனக்குள் ஒவ்வொரு கணமும் தீ எரிந்துகொண்டிருந்தது. என் உள்ளுறுப்புகள் எல்லாம் வெந்துருகி கொட்டி வயிற்றில் அமிலமாக கொப்பளித்தன. மறுநாள்முதல் பிரேமுக்கு ஆரம்பித்த வயிற்றுப்போக்கும் காய்ச்சலும் பல படிகளாக பன்னிரண்டு நாள் நீடித்தது. மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் பத்துநாள் இருந்தான். இருமுறை காய்ச்சல் உச்சத்துக்குச் சென்று அவன் உயிருக்குக் கூட ஆபத்திருப்பதாகச் சொன்னார்கள்.
சுபா அவனருகிலேயே இரவும் பகலும் தலைவிரிக்கோலமாகக் கிடந்தாள். அவளிடம் பேசவே நான் அஞ்சினேன். ஒரு சொல்லில் அவள் பாய்ந்து என் குரல்வளையை கடித்து துப்பிவிடுவாள் என்று அஞ்சினேன். பையனின் சிறிய குருத்துக்கால்களையும் காய்ச்சலில் சுண்டிய சிறு முகத்தையும் பார்த்துக்கொண்டு இரவெல்லாம் ஆஸ்பத்திரி வார்டில் இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கைகளை விரித்து மார்பு ஏறி இறங்க தூங்கிக்கொண்டிருந்தான். சருமம் வரண்டு உடம்பு சிவந்திருந்தது. விலா எலும்புகள் புடைத்து மார்புகூடு மேலே வந்து வேறேதோ குழந்தை போலிருந்தான். மரணம் அவனை நெருங்கி வந்து சென்றிருக்கிறது. அறைக்குள் அது ஏதோ உருவில் இருந்துகொண்டே இருக்கிறதா என்ன? கொஞ்சம் கண்ணசந்தால் கைநீட்டி அவனை எடுத்துக்கொண்டு செல்லுமா என்ன?
அவனைப்பார்க்கும்போது அடிவயிற்றில் கனமான உலோகத்தகடு ஒன்று வெட்டி இறங்கியது போல தோன்றியது. ஆனால் அந்த வலி வேண்டியுமிருந்தது. அதை நிசப்தமாக அனுபவித்தேன். தராசின் ஒரு தட்டு போல அது மனதின் மறுபக்கத்தை அழுத்திய துயரமொன்றைச் சமன் செய்தது. சிகரெட்டாகப் புகைத்து தள்ளினேன். சிகரெட் புகைத்து என் உதடுகள் எரிந்தன. என் நெஞ்சு புகைந்து இருமலில் வறட்டுச் சளி வெளிவந்தது. எந்த உணவும் உக்கிரமான பசியின்போதுகூட இரண்டாம் வாயில் குமட்டியது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒவ்வொரு மூச்சாக வெளியே விட்டு காலத்தை உந்தி நகர்த்தினேன்.
ஒருநாள் இரவில் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஓர் எண்ணம் வந்தது. இநத வயதில் நான் இதை தின்றுதானே வளர்ந்தேன். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். என்னோடொத்த பிள்ளைகள் பெரும்பாலும் மழைக்காலத்தில் செத்துப்போகும். என் அம்மா எபப்டியும் பத்து பிள்ளை பெற்றிருப்பாள். ஒன்பதும் செத்திருக்கின்றன. செத்த பிணங்களை காலில் பற்றி சுழற்றி தூக்கி பெருக்கெடுத்தோடும் கரமனை ஆற்றில் வீசுவார்கள். வீசப்படுவதற்காக கிடக்கும் என் தங்கையை நான் பார்த்திருக்கிறேன். சின்ன கரிய முகத்தில் அவள் கடைசியாக நினைத்தது இருந்தது ‘த்தின்ன.. த்தின்ன’ என்பாள். அந்த ஒரு சொல்லை மட்டும்தான் அவளால் பேசமுடியும். அந்தச் சொல் உதடுகளில் இருந்தது.
ஒருகணம் எழுந்த வன்மத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த வெள்ளைக்குழந்தை அந்த தீனியில் ஒருவாயை உண்டு சாவதென்றால் சாகட்டுமே. அங்கே மேலே பட்டினிகிடந்தும், கழிவுகளை தின்றும் செத்த குழந்தைகளுக்கான பிரம்மாண்டமான சொர்க்கத்தில் இதை எதிர்பார்த்து இதன் உறவினர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். மறுகணம் அந்தச் சிந்தனைக்காக என்னை நானே மண்டையில் அறைந்துகொண்டேன். கட்டிலில் அமர்ந்து என் கண்மணியின் கால்களை முத்தமிட்டு முத்தமிட்டு கண்ணீர்விட்டு அழுதேன்.
அம்மா விடுதியில் இருந்து சிலநாட்களிலேயே கிளம்பிச்சென்றாள் என்று தெரிந்தது. நான் கவலைப்படவில்லை. ஆனால் அன்றுமுதல் என் ஆளுமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நான் குரூரமானவனாக ஆனேன். மன்னிக்காதவனாக, எந்நேரமும் கோபம் கொண்டவனாக மாறினேன். தினமும் என் ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்களையும் தண்டனை அறிவிப்புகளையும் கொடுத்தேன். அவர்கள் அதை எனக்குமேலே சென்று எளிதில் ரத்து செய்துகொண்டார்கள். என் முன்னால் ஏளனம் நிறைந்த முகத்துடன் நின்று இடது கையால் அவற்றை வாங்கிக்கொண்டார்கள். வெளியே சென்று உரக்கக் கேலிபேசிச் சிரித்தார்கள்.
சிலநாட்களில் என் அலுவலகச்சுவர்களில் எனக்கெதிரான போஸ்டர்கள் தென்பட்டன. என் அம்மா அவற்றில் கையில் ஒரு பிளாஸ்டிக் கோப்பையுடன் பிச்சை கோரி அமர்ந்திருந்தாள். பெற்ற தாயை பிச்சை எடுக்க விட்டுவிட்டு அதிகார சுகம் அனுபவிக்கும் கயவனிடமா மாவட்டத்தின் பொறுப்பு? நான் அந்த போஸ்டரை அலுவலகத்திற்குள் நுழையும்போதுதான் கவனித்தேன். வரிசையாக நிறைய ஒட்டியிருந்தார்கள். பலவற்றை தாண்டி வந்து திரும்பும்போதுதான் ஒன்றை வாசித்தேன். என் கால்கள் தளர்ந்தன. பிரேக்கை மிதிக்கவே முடியவில்லை. காரை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட ஓடி என் அறைக்குள் சென்றேன். செல்லும் வழியெங்கும் கண்கள் என் மேல் மொய்த்தன. என் வாசல் மூடியதும் ஆபீஸ் முழுக்க எழுந்த மெல்லிய சிரிப்பு பெரிய இரைச்சலாக மாறி என்மேல் மோதியது.
இரண்டுநாட்கள் கழித்து அம்மாவை மதியம் யாரோ என் ஆபீஸுக்கே கூட்டி வந்துவிட்டார்கள். அம்மா என் ஆபீஸ் முற்றத்தின் கொன்றை மரத்தடியில் அமர்ந்துகொண்டு, என் அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டவர்கள் அளித்த மிச்சமீதிகளை ஒரு பாலிதீன் தாளில் குவித்து ஆனந்தமாக தின்றுகொண்டிருந்தாள். என் அறைச்சன்னல் வழியாக நான் பார்க்குமிடத்தில் அவளை அமரச்செய்திருந்தார்கள். சாப்பிட்டு கைகழுவ வாஷ் பேசினுக்குச் சென்ற நான் அதைப் பார்த்தேன். சில கணங்கள் நான் எங்கே நின்றேன் என்றே நான் அறியவில்லை. அங்கிருந்து இறங்கிக் காரைக்கூட எடுக்காமல் பைத்தியக்காரனைப்போல சாலைவழியாக ஓடினேன்.
காலையில் நான் அலுவலகம் சென்று தேங்கிய கோப்புகளை முழுக்க பார்த்துவிட்டு பத்தரை மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். நடுவே போன் செய்து கேட்டேன். அம்மாவின் நிலையில் மாற்றமில்லை என்றார்கள். நான் உள்ளே நுழையும்போது வராந்தாவில் டாக்டர் மாணிக்கம் நின்றிருந்தார். என்னுள் சட்டென்று உருவான அமைதியின்மை அவர் அருகே வந்து வணக்கம் சொன்னபோது அதிகரித்தது. ‘சொல்லுங்க மாணிக்கம்’ என்றேன். அவர் கண்ணீர் மல்கி மீண்டும் கும்பிட்டார். இங்கே நான் இன்னும் கடுமையானவனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்
‘சார் நான் சொன்னது ஒண்ணையும் நம்பலைண்ணு தெரியுது. நான் சாருக்கு செய்ததெல்லாம் சும்ம தப்பை மறைக்கிறதுக்காக செய்ததுண்ணு நினைக்கிறீங்க…அப்டி இல்ல சார். நான்’ அவர் குரல்வளை ஏறி இறங்கியது. ‘நான் எப்பவும் கடவுளுக்கு பயந்துதான் சார் எல்லாம் செய்திருக்கேன். அந்த எருக்குழியிலே என்னால முடிஞ்சவரைக்கும் பாடுபட்டிருக்கேன் சார். காலம்பற எட்டுமணிக்கு வந்தா சிலசமயம் வீடு போய்ச்சேர ராத்திரி ஒம்பது பத்து ஆயிடும்சார். மருந்து கெடையாது. மாத்திரை கெடையாது. புண்ணில வச்சு கெட்ட துணி கெடையாது. சார், சொன்னா நம்ப மாட்டீங்க, பக்கத்திலே வெட்னரி ஆஸ்பத்திரிக்கு போயி அங்க மிஞ்சிக் கெடக்குற ஆண்டிபயாட்டிக்குகள வாங்கிட்டு வந்து நான் இதுகளுக்குக் குடுக்கறேன். பக்கத்துவீடுகளுக்குப் பெண்டாட்டிய அனுப்பிக் கிளிஞ்ச சேலயும் துணியும் கலெக்ட் பண்ணிட்டு வந்து இதுகளுக்கு புண்ணு வச்சு கட்டிட்டு இருக்கேன்…ஒரு நாலஞ்சுநாள் மனசறிஞ்சு லீவு போட்டதில்லை’
நான் தணிவாக ‘நான் உங்களக் குறை சொல்லலை. நிலைமை எப்டி இருக்குன்னு அறிக்கை குடுத்தேன். அது என் கடமை தானே? அதை நான் செய்யலேண்ணா இப்டியே இருக்கட்டும்னு விட்டது மாதிரிதானே?’ என்றேன். ‘நீங்க நினைச்சது சரிதான் சார். நான் உங்களக் குறை சொல்லேல்ல. ஆனா- ‘ அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. ‘ஐயம் ஸாரி’ என்று அறைக்குள் செல்ல முயன்றேன். ‘நில்லுங்க சார். இதை மட்டும் கேளுங்க. கேட்டுட்டு போங்க. நீங்களும் என்னையமாதிரித்தானே. சார் எனக்கு ஏழு வருஷமா பிரமோஷன் டியூ. என்னென்னமோ குற்றமும் குறையுமாட்டு சொல்லி எக்ஸ்பிளனேஷன் மேலே எக்ஸ்பிளனேஷன் கேட்டு ஆறப்போட்டு ஊறப்போட்டு வச்சிருந்தாங்க. டிரிபூனல் வரைக்கும் போயி தீர்ப்பு வாங்கி தீர்ப்ப அப்ளை பண்றதுக்கு மறுபடியும் ஆடர் வாங்கி இப்பதான் காயிதம் வந்திருக்கு. நான் சீனியராக்கும் சார். இப்ப உங்க லெட்டரை காரணமாக் காட்டி என்னைச் சஸ்பெண்ட் பண்ணியாச்சு. இனி அந்த ஆர்டரை ரத்து பண்ணிட்டுதான் என்னை எடுப்பாங்க. மறுபடியும் பத்து வருஷம் ஆகுதோ அதுக்கு மேலே ஆகுதோ…வாறேன் சார்’
நான் ஏதும் சொல்வதற்குள் அவர் விடுவிடுவென சென்று விட்டார். நான் அவர் பின்னாலே நடந்தேன். அவர் வெளியே சென்று தன் பைக்கில் ஏறி சென்றுவிட்டார். சோர்ந்து போய் ஹாலில் அமர்ந்துகொண்டேன். இதுதான் நடக்கும், இது தவிர எது நடந்தாலும் ஆச்சரியம்தான். தெரிந்தும் ஏன் இதைச் செய்தேன்? எதை யாருக்கு நிரூபிப்பதற்காகச் செய்தேன்? எனக்கு கடந்த நாட்களில் வயிற்றில் ஏறிவிட்டிருந்த அமிலம் தொண்டையில் புளித்தது. வாந்தி எடுக்க வேண்டும் போலிருந்தது. தலையைக் கையால் தாங்கி அமர்ந்திருந்தேன்.
நர்ஸ் வந்து ‘சார் ‘என்றாள். நான் எழுந்தேன் ‘அவ்வோ கண்ணு முழுச்சாச்சு’ சிறு பரபரப்புடன் அம்மாவின் அறைக்குச் சென்றேன். அம்மா கண்ணை திறந்து எழுந்து அமர முயன்றாள். கையில் செருகப்பட்டிருந்த க்ளூகோஸ் குழாயை பிய்த்து எடுத்து போட்டிருந்தாள். செருகப்பட்ட ஊசி வழியாக குருதி வழிந்தது. நர்ஸ் ‘அய்யய்யோ…எடுக்கப்பிடாது…பாட்டி . படுத்துக்கிடுங்க’ என்று சொல்லிச் சென்று பிடித்தாள். அவளை அம்மா பிடித்து தள்ளினாள். அவள் கண்கள் பரவி அலைந்து என்னை பலமுறை தாண்டிச்சென்றன. ‘காப்பா லே காப்பா’ என்று அழைத்து எழப்போனாள்
நான் ‘அம்மா, நான்தான், அம்மா’ என்றேன். ‘காப்பா , லே, மக்கா..காப்பா…லே களசம் வேண்டாம்லே. தம்றான் கசேரிலே இரியாதலே மக்கா…காப்பா லே’ . அம்மாவின் கண்ணுக்கு நான் தென்படவே இல்லை. நர்ஸ் அவளை பிடித்து அழுத்தி படுக்கச் செய்தாள் அம்மா சட்டென்று வலிப்பு வந்து கைகால்களை இழுத்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள். வாய் ஒருபக்கமாக கோணிக்கொண்டு அதிர்ந்தது. நர்ஸ் ‘டாக்டரை விளிக்கேன்’ என்று வெளியே ஓடினாள். நான் அம்மாவைப் பிடித்து மெல்ல படுக்க வைத்தேன். கைகள் இறுக்கமாக இருந்தன. பின்னர் அவை மெல்லமெல்ல தொய்வடைய ஆரம்பித்தன. டாக்டர் வந்தபோது அம்மா மீண்டும் மயக்கமாகி விட்டிருந்தாள்.
நான் வெளியே நின்று காத்திருந்தேன். இந்திரா வெளியே வந்து ‘டயாலிஸிஸ் பண்ணினா நல்லது. ஷி இஸ் சிங்கிங்’ என்றார். ‘பண்ணுங்க’ என்றேன். ‘பண்ணினாலும் பெரிசா ஒண்ணும் நடக்காது. ஷி இஸ் அல்மோஸ்ட் இன் ஹர் ஃபைனல் மினிட்ஸ்’ நான் பெருமூச்சு விட்டேன். உள்ளே அவர்கள் கூடிக்கூடி பேசினார்கள். ஏதேதோ செய்தார்கள். நான் மீண்டும் கூடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டேன். தலையைக் கையால் அளைந்தேன். வாட்சை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டினேன்
சுபா போனில் அழைத்தாள். நான் ’ஹலோ’ என்றதும் ‘ஹவ் இஸ் ஷி?’ என்றார். ‘இன்னும் கொஞ்ச நேரத்திலேன்னு சொன்னாங்க’ அவள் ‘ஓ’ என்றாள்.’நான் இப்ப அங்க வரேன். ஒரு பத்து நிமிஷம் ஆகும்’ நான் போனை வைத்தேன். அந்த போன் கிளிக் என்று ஒலித்த கணம் ஒன்றை முடிவுசெய்தேன். ஆம், அதுதான். பிரஜானந்தர் சொன்னது அதைத்தான். அவரது சொற்கள் என் காதுகளுக்கு அருகே ஒலித்தன. ’அம்மாவுக்கு எல்லா பிராயச்சித்தமும் செய்…’ இதைத்தான் சொன்னாரா? இதை நான் செய்யமாட்டேன், எனக்கு அந்த துணிச்சலே வராது என்று நினைத்துத்தான் தைரியமாக இரு என்றாரா?
நான் எழுந்து சென்று அம்மாவை பார்த்தேன். உள்ளே ஒரு நர்ஸ் மட்டும் இருந்தாள். ’கண்ணமுழிச்சாங்களா?’ என்றேன். ‘இல்ல. டயாலிஸிஸ் பண்ணணும். இப்ப அங்க கொண்டு போயிருவோம்’ என்றாள். அம்மா கண்விழிக்கவேண்டும் என்று அக்கணம் என் முழு இருப்பாலும் ஆசைப்பட்டேன். பிரார்த்தனை செய்ய என் தலைக்குமேல் காதுகள் எதையும் உணர்ந்ததில்லை. அந்த தருணத்திடம், அந்த அறையில் நிறைந்த லோஷன் வாடைகொண்ட காற்றிடம், சாய்ந்து விழுந்த சன்னல் வெளிச்சத்திடம், அங்கே துளித்துளியாக கசிந்து சொட்டிய காலத்திடம் தீவிரமாக வேண்டிக்கொண்டேன்.அம்மா கண்விழிக்க வேண்டும். சில நிமிடங்கள் போதும்
அவளருகே அமர்ந்து அவள் கைகளை என் கைகளில் எடுத்துக்கொண்டு சொல்லவேண்டும். அவள் அத்தனை வருடம் ஆவேசமாக மன்றாடியதற்கு என் பதில். ’அம்மா நான் காப்பன். நான் களசத்தையும் சட்டையையும் கழற்றிவிடுகிறேன். தம்புரான்களின் நாற்காலியில் அமர மாட்டேன். எழுந்துவிடுகிறேன். நான் உன் காப்பன்’
ஆனால் அம்மாவின் முகம் மேலும் மேலும் மெழுகுத்தன்மை கொண்டபடியே செல்வதைத்தான் கண்டேன். இன்னொரு பெண் வந்து அம்மாவின் உடைகளை மாற்றினாள். அப்போது அம்மாவின் உடல் சடலம் போலவே ஆடியது. அவளும் ஒரு சடலத்தைப்போலவே அம்மாவை கையாண்டாள்.
நேரம் சென்றது. அரைமணிநேரம் தாண்டியும் சுபா வரவில்லை. ஆனால் ஒயர்கூடையுடன் குஞ்சன் நாயர் வெற்றிலைச்சிரிப்பை காட்டியபடி தோளைச்சரித்து நடந்து வந்தான். ‘நமஸ்காரம் சார். ஆபீஸிலே போனேன். மெட்ராஸ் போன் வந்திருக்கு. எல்லாத்தையும் ரமணி குறிச்சு கையிலே குடுத்தனுப்பினா’ என்று ஒரு காகிதத்தை தந்தான். நான் அதை வாங்கி வாசிக்காமலேயே பைக்குள் செருகிக்கொண்டேன். அவனை அனுப்ப நினைத்த கணம் உள்ளே அம்மா ‘காப்பா’ என்றாள்
நான் உள்ளே நுழைவதற்குள் குஞ்சன்நாயர் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டு அம்மா சட்டென்று அதிர்ந்து கல்லைக்கண்ட தெருநாய் போல மொத்த உடலும் குறுகி பின்னாலிழுத்துக்கொள்ள இருகைகளையும் கூப்பி ‘தம்றானே, கஞ்சி தா தம்றானே’ என்று கம்மிய குரலில் இரந்தாள். அவள் உடல் ஒருகணம் அதிர்ந்தது. வலது கால் சம்பந்தமில்லாமல் நீண்டு விரைத்து மெல்ல தளர்ந்தது. எச்சில் வழிந்த முகம் தலையணையில் அழுத்தமாக பதிந்தது. நர்ஸ் அவளைப் பிடித்துச் சரித்தபின் நாடியைப் பார்த்தாள். அதற்குள் எனக்குத் தெரிந்துவிட்டது.
ஆம், பிரஜானந்தர் சொன்னது இதைத்தான்.. அமர வேண்டும். இந்த பிச்சைக்காரக் கிழவியை புதைத்து இவளது இதயம் அதன் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாகவேண்டுமென்றால் எனக்கு இன்னும் நூறுநாற்காலிகள் வேண்டும்.