ஒரு கனவு

புதுமைப்பித்தன்

க.நா.சுப்ரமணியம்

புதுமைப்பித்தன்

விஷ்ணுபுரம் விருதுவிழா ஓர் இலக்கிய கொண்டாட்டமாக இன்று மாறியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா முடிவுறுகையில் இனி என்ன என்னும் கேள்வியே மேலெழுகிறது. இது எளியமுறையில் ஒரு முன்னோடியைக் கௌரவித்து விருது அளிக்கும் நிகழ்வாக தொடங்கப்பட்டது. இயல்பாக முந்தையநாள் உரையாடல்கள் ஒருங்கமைந்தன. அவற்றை முறைப்படுத்தி ஒரு இலக்கியக் கருத்தரங்கு போல ஒருங்கிணைத்தோம்.

ஆனால் இந்நிகழ்ச்சியின் எல்லை இதுவே. இதில் இந்திய அளவில் எழுத்தாளர்களை அழைக்கிறோம். வேண்டுமென்றால் ஓர் எல்லையைக் கடந்துசென்று சர்வதேச அளவில் எழுத்தாளர்களை அழைக்கலாம். அவ்வளவுதான்.  அது விருது என்னும் எல்லையைக் கடக்க முடியாது. விருதுபெறுபவரை முன்னிறுத்தியே இதை இன்று ஒருங்கிணைக்கிறோம். அதுவே முக்கியமானது. விருந்தினர் அவரை கௌரவிக்கும்பொருட்டே வருகிறார்கள்.

க.நா.சுப்ரமணியம்

இன்று தமிழுக்கென ஒரு சர்வதேச – தேசிய இலக்கியவிழா இல்லை. தி ஹிண்டு லிட் ஃபெஸ்ட் பற்றிப் பேசும்போது அதுதான் தோன்றியது.அது ஒரு வகையான உயர்குடி விருந்து நிகழ்வு மட்டுமே. அதில் தமிழ் எவ்வகையிலும் முன்வைக்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல நுட்பமாக ஒதுக்கவும் படுகிறது. தமிழிலக்கிய அரங்குகள் கண்காணாமல் எங்கோ அடித்தளங்களில் இருபதுபேர் அமர நடந்துகொண்டிருக்கும்.எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் ஒப்புக்கு அழைக்கப்பட்டு தமிழில் தமிழ்மட்டும் தெரிந்தவர்களிடம் முனகிக்கொண்டிருப்பார்கள் மேலே  உண்மையான விழா நடந்துகொண்டிருக்கும். அந்தத் தமிழ் அரங்கு நிதிவழங்குவோரிடம் பசப்புவதற்காக மட்டுமே.

உலகமெங்குமிருந்து, இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து சென்னையில் தங்கும் ஒர் எழுத்தாளருக்கு தமிழில் நவீன இலக்கியம் இருப்பதே தெரியவராது. நாலைந்து முகங்கள் கூட அறிமுகமாகாது. அவர் இங்கே வந்து சென்னையின் ஆங்கிலம்பேசும் ஒரு சிறுகூட்டத்தை, இந்திய ஆங்கிலத்தில் எழுதும் சிலரை அறிமுகம் செய்துவிட்டு திரும்பிச்செல்வார். அந்த எழுத்தாளர் ஒரு கலைஞர் என்றால் அவர்கள் மேல் அவருக்கு எந்த மதிப்பும் உருவாகாது. இதை குறைந்தது நான்கு மலையாள, கன்னட, வங்க இலக்கியவாதிகள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

சி சு செல்லப்பா

இன்று இந்தியமொழிகளில் கன்னடம், மலையாளம்,இந்தி, வங்கம் , உருது, மராட்டி போன்ற மொழிகளுக்கு சர்வதேச இலக்கியவிழாக்கள் உள்ளன. அங்கே வரும் இலக்கியவாதிகளுக்கு அந்த மொழியின் இலக்கியம் அறிமுகமாகிறது. அவ்வாறுதான் அந்தமொழியின் இலக்கியவாதிகள் உலக இலக்கியச்சூழலில் அறிமுகமாகிறார்கள். கேரளத்தில் மூன்று சர்வதேச இலக்கியவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றன. மாத்ருபூமி லிட் ஃபெஸ்ட் ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நிகழ்கிறது. அது மலையாள இலக்கியத்திற்கான ஒரு மாபெரும் மேடை.

தமிழ் குறித்து இங்கே கூச்சல்கள் நிகழ்கின்றன. ஆனால் நமக்கென்று ஓர் இலக்கியவிழா இல்லை. பிறமொழிகளில் அங்குள்ள அரசுசார்பு நிறுவனங்கள், பெரும்பிரசுரங்கள் அதை நடத்துகின்றன. இங்குள்ள அரசியலியக்கங்களோ வெளியீட்டுநிறுவனங்களோ அவ்வாறு ஒரு விழாவை நடத்தமுடியாது. ஏனென்றால் அவர்களிடம் இலக்கிய மதிப்பீடு என ஏதும் இல்லை. அவர்கள் நல்ல இலக்கியவாதிகளை முன்னிறுத்த மாட்டார்கள், எவ்வகையிலும் தமிழுக்குப் பெருமைசேர்க்கமாட்டார்கள், சொல்லப்போனால் இழிவையே மேலும் தேடித்தருவார்கள் என்று நிரூபணமாகிவிட்டிருக்கிறது.

சுந்தர ராமசாமி

நமக்கு ஓர் தேசிய இலக்கிய விழா இருந்து ஓர் ஆண்டு அதில் கி.ராஜநாராயணன் மையமுகமாக முன்வைக்கப்பட்டிருந்தால் அவர் ஞானபீடம் நோக்கிச் செல்ல தடையே இருந்திருக்காது. அப்படி ஒருவிழா இன்று அவசியமானது. அதை எப்படி சிற்றிதழியக்கம் அரசு, பெருநிறுவன ஆதரவே இல்லாமல் நடந்ததோ அப்படித்தான் நடத்தவேண்டியிருக்கும். உண்மையில் நம் கல்லூரிகளில் பெருஞ்செலவில் இத்தகைய விழாக்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் நோக்கம் இல்லை, மதிப்பீடு இல்லை, ஆகவே அவை வெறும் ஒப்புக்கு நடந்து முடிகின்றன.

அத்தகைய ஒரு விழாவுக்குத் தேவையானது நிதி. பல இந்திய இலக்கியவிழாக்கள் நாலைந்துகோடி ரூபாய் செலவில் நிகழ்கின்றன. நாம் சிற்றிதழாளர்கள். விஷ்ணுபுரம் இருநாள் விழாவின் செலவே பத்துலட்சம்தான். ஒருகோடி ரூபாய் இருந்தால் ஒரு சர்வதேச இலக்கியவிழாவை மிகமிகச் சிறப்பாகச் செய்துவிடலாம். ஐம்பது லட்சம் இருந்தால் ஒரு தேசிய இலக்கியவிழாவை மிகப்பயனுள்ள முறையில் நடத்தலாம். புகழ்பெற்ற, முக்கியமான படைப்பாளிகளை அழைக்கவேண்டும். அவர்களுக்கான தங்குமிடம், பயணம் ஏற்பாடு செய்யவேண்டும். அரங்குகள் ஒருக்கவேண்டும். விளம்பரங்கள் செய்யவேண்டும்.அது செலவேறியது.

கி.ராஜநாராயணன்

என்னைச்சூழ்ந்து இன்று இலக்கிய ஆர்வமும் பணியாற்றும் பயிற்சியும் கொண்ட இளைஞர்களுக்கு பஞ்சமில்லை. நான் எதையுமே செய்யாமல் அனைத்தையுமே செய்யவைக்கமுடியும். நிதி ஒன்றே சிக்கல். அத்தனைபெரிய நிதியை தனிவாசகர்கள் அளிக்கமுடியாது. அது எவ்வகையிலோ கார்ப்பரேட் நிதியாகவே வந்துசேரவேண்டும். அதற்கு எவரேனும் உதவினால், உதவக்கூடியவர்களின் ஒரு குழு அமையுமென்றால் செய்யலாம்.

அத்தகைய விழா பற்றி சில திட்டங்கள் என்னிடம் உண்டு. இந்தியாவின் எல்லா மொழிகளில் இருந்தும் முக்கியமான இளைய, மூத்த எழுத்தாளர்கள் பங்குகொள்வதாக இருக்கவேண்டும். அதை என்னால் எளிதில் தெரிவுசெய்யமுடியும். சர்வதேச விழா என்றால் அது ஐரோப்பிய ஆசிய எழுத்தாளர்கள் கலந்துகொள்வதாக இருக்கவேண்டும். அந்த விழா ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாத தமிழர்கூட கலந்துகொண்டு புரிந்துகொள்ளும்படி நிகழவேண்டும். ஆங்கில அறியாத தமிழ்ப்படைப்பாளிகள் கலந்துகொண்டு பேசி விவாதிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அது இன்று மிக மிக எளிது, தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் ஏராளமாகவே கிடைப்பார்கள்.

அசோகமித்திரன்

அத்தகைய விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் முன்னிறுத்தப்படவேண்டும். தமிழிலக்கியத்தின் எல்லா முகங்களும் அங்கே முன்வைக்கப்படவேண்டும். நான் சொல்வது அரசியல், வணிக எழுத்தாளர்களை அல்ல. அது தமிழிலக்கியத்தின் பன்மைத்தன்மையை, சர்வதேச தரத்தில் இங்கே எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் நவீன இலக்கியத்தை இந்தியாவுக்கு, உலகுக்குக் காட்டுவதாக நிகழவேண்டும். புதுமைப்பித்தன் முதல் நாஞ்சில்நாடன் வரை நாம் முன்வைக்கும் சீரிய இலக்கியப்படைப்பாளிகளின் அணியை இந்திய அளவிலேயே எவருக்கும் தெரியாது. அந்த உலகை நாம் முன்வைக்கவேண்டும்h

இது ஒரு கனவு. இத்தகைய கனவுகளுக்கு தமிழில் எதிர்ப்பும் ஏளனமும்தான் முதலில் வரும். விஷ்ணுபுரம் விருதுவிழா 2009ல் திட்டமிடப்பட்டபோதும் இப்படித்தான் எதிர்ப்பும் ஏளனமும் பெருகின. நான் அத்தனை விளக்கங்கள் அளித்தேன். இன்று அந்தக்கும்பல் எல்லாம் எவர் என்பதே மறந்துவிட்டது. உண்மையான நோக்கமும் தொடர்ச்சியான செயலூக்கமும் இருந்தால் செய்துவிடலாம். இன்று தேவை அத்தகைய சிலர். ஒரு கனவு இது. எப்போதும் கனவுகளை முன்வைப்பது என் வழக்கம். செயல் அதை எப்படியும் பின்தொடரும் என்பது ஒரு நம்பிக்கை.

க.நா.சுப்ரமணியம்

புதுமைப்பித்தன்

முந்தைய கட்டுரைஅறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 30