«

»


Print this Post

ஒரு விடுதலைப்பாடல்.


 

1978ல் என நினைக்கிறேன். நான் அப்போது பத்தாம் வகுப்பு மாணவன். கன்யாகுமரிக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம்.  அங்கே ஒரு வட இந்தியக்கூட்டம் வந்திருந்தது. பத்துப்பதினைந்து இளம்பெண்கள். அதேயளவு இளைஞர்கள். வங்காளிகளாகக்கூட இருக்கலாம். பெண்கள் எல்லாரும் ஒரேநிறமான சுடிதார் அணிந்திருந்தார்கள். அந்த ஆடை அன்றெல்லாம் குமரிமாவட்டத்தில் காணக்கிடைக்காது. பெண்கள் குண்டாக,வெண்ணிறமாக இருந்தனர். இரட்டைச்சடை வேறு போட்டிருந்தனர். ஆகவே நாங்கள் நின்று வேடிக்கைபார்த்தோம்

அவர்கள் ஒரு பாட்டுபாடிக்கொண்டிருந்தனர். கைகளை தட்டியபடி. ஆண்களும் அதில் கலந்துகொண்டனர். பள்ளிக்கூட பாட்டு போலவும் இருந்தது. நல்ல தாளமும் கொஞ்சலும் இருந்தது. அந்த வரி ஞாபகத்தில் பதிந்துவிட்டது. லாரா லப்பா லாரா லப்பா. அது என்னவென்று மண்டையை குடைந்து சரி எதுவானால் என்ன என்று விட்டுவிட்டேன்.

நாற்பதாண்டுகளுக்கு பின் அந்தபாடலை கண்டுபிடித்தேன். மிகத்தற்செயலாக. சும்மா லாரா என்று அடித்ததுமே வந்துவிட்டது. 1949ல் வெளிவந்த ஏக் தி லட்கி என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது.இந்தப்பாடலின் வரிகளுக்கு பெரிய அர்த்தமெல்லாம் இல்லை. பஞ்சாபி மொழியில் உள்ள ஒரு நர்ஸரிரைம்தான் அதன் முதல் வரி. ‘நான்ஸென்ஸ் லிரிக்’ வகைதான்.

வினோத்

லதா மங்கேஷ்கரும் ஜி.எம்.துரானியும் பாடியிருக்கிறார்கள். அஸீஸ் காஷ்மீரி எழுதிய பாடல். வினோத் இசையமைப்பு. பாகிஸ்தானில் லாகூரில் பிறந்த வினோத் நாற்பதுகளின் இறுதியிலும் ஐம்பதுகளிலும் முப்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இதில் மீனா ஷோரே [Meena Shorey ]நடித்திருக்கிறார். உற்சாகமான குண்டுப்பெண்ணாக இயல்பாக பாடி நடித்திருக்கிறர். கிட்டத்தட்ட நாடகம்போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே சினிமாத்தனம் குறைவு. அவருடைய இயல்பான சிரிப்பும் பாவனைகளும் இன்றும் மனம்கவரும்படி உள்ளன

மீனா ஷோரே பற்றி இணையத்தில் வாசித்தேன். இங்கே அன்று புகழ்பெற்ற நடிகையாக இருந்திருக்கிறார். இந்தி சினிமா உருவாகி வந்த காலம். இயற்பெயர் குர்ஷித் ஜகான்.  1921ல் பிரிட்டிஷ் இந்தியாவில் ராவல்பிண்டியில் ஓர் இஸ்லாமியக்குடும்பத்தில் பிறந்தவர். வறுமை காரணமாக மும்பைக்கு தன் சகோதரியுடன் வந்தார்1941ல் தன் இருபதாம் வயதில் மீனா என்றபெயருடன் நடிகையானர்.

 

 

[லாரா லப்பா லாரா லப்பா 

 

மீனா ஷோரேயின் மிகப்பெரிய வெற்றிப்படம் ஏக் தி லட்கி தான்.ஏழாண்டுகள்தான் அவருடைய நட்சத்திரநிலை நீடித்தது. அன்று பாகிஸ்தானில் ஒரு சினிமா உலகம் இருந்தது. கராச்சியில் இயங்கிவந்த எவெரெடி பிக்சர்ஸ் என்னும் நிறுவனம் மிஸ்1956 என்றபேரில் ஒரு படத்தை தயாரித்தது. அன்றைய கராச்சியின் சினிமா தயாரிப்பாளர்கள் – இயக்குநர்கள் பொதுவாக இந்துக்கள். அந்த தொழிலே வெறும் பத்தாண்டுகளில் அங்கிருந்த மதவாதத்தால் முழுமையாக அழிந்தது.

மிஸ்1956 குருதத்தின் மிஸ்1955 என்ற படத்தின் அதிகாரபூர்வமற்ற நகல். அதில் நடிக்க அதன் இயக்குநரான ஜே.சி.ஆனந்த் அழைப்பின்பேரில் மீனா பாகிஸ்தான் சென்றார்..உடன் அவருடைய இரண்டாம் கணவரும் சினிமாநடிகருமான ரூப் கே ஷோரேயும் சென்றார். அந்தப்படம் பாகிஸ்தானில் வெற்றிபெற்றது.மீனா அங்கேயே தங்கமுடிவெடுத்தார். ரூப் ஷோரே இந்தியா திரும்பினார்

முஸ்லீமாக மீண்டும் மதம் மாறிய மீனா அங்கே மேலும் மூன்றுமுறை திருமணம் செய்துகொண்டார். சினிமாத்தொழில் அழியவே கணவரால் கைவிடப்பட்டு கடும் வறுமையில் வெவ்வேறு தொழில்கள் செய்து வாழ்ந்தார்.1989ல் தன் 68 ஆவது வயதில் அவர் மறைந்தபோது உள்ளூர் அனாதை இல்லம்தான் அவருடைய இறுதிச்சடங்குகளைச் செய்திருக்கிறது.

இன்று அந்தப்பாடலைப் பார்க்கையில் அந்த உற்சாகம் காலம் கடந்து நின்றிருப்பதாகத் தோன்றுகிறது. ஓர் அலுவலகத்தில் நிகழும் பாடல். அன்றுதான் பெண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர் – பெருநகர்களில் மட்டும். இந்த அலுவலகச்சூழல் இன்றைக்குக்கூட அலுவலகங்களில் கிடையாது. “எங்களாலும் நாற்காலியில் அமரமுடியும். உங்களைவிட வேலைசெய்ய முடியும்” என அறைகூவுகிறது இப்பாடல். அன்று அப்பாடல் ஒரு பெரிய சுதந்திரப்பிரகடனம். மீனாவின் உடல்மொழி துடுக்குத்தனம் கொண்டதாக இருக்கிறது.அந்தப்பாடல் ஏன் பெண்கள் நடுவே அத்தனை பிரபலமானது என்று புரிகிறது.

அந்தப்பாடலின் உணர்வுகளுக்கும் மீனாவின் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. அவர் வாழ்க்கை சுரண்டல், அடக்குமுறை என மாறி முற்றழிந்தது. அவருடைய இந்த படங்கள் அவர் இருந்த ஏழாண்டுக்கால கனவின் சான்றுகள். விடுதலை என்பது ஒரு கனவுதானா?

 

 

 

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/128706