விழா -வாழ்த்துக்கள்

 

அன்புள்ள ஜெ,

 

நலம்தானே?

 

விஷ்ணுபுரம் விருதுவிழா வரவிருக்கிறது. பத்தாண்டுகளாக இந்த விருதுவிழாவை நான் உங்கள் தளம் வழியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் நேரில் வந்ததே இல்லை. நான் இந்தியாவுக்கு வெளியே வாழ்பவன். வெவ்வேறு நாடுகள். ஆனால் இலக்கியம் என்னை தமிழகத்துடன் இணைத்துக்கொண்டிருக்கிறது.

 

விஷ்ணுபுரம் விருதுவிழா இலக்கியத்தை ஓர் இயக்கம்போலவே முன்னெடுக்கிறது. முன்பு எழுதியிருந்தீர்கள். க.நா.சு சொன்னதுபோல இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் என்னும் எண்ணமே உங்களைச் செயல்படச் செய்தது என்று. அதேசமயம் அதை மலினப்படுத்தாமல் தீவிரமாகவே செய்துகொண்டிருக்கிறீர்கள்

 

நீங்கள் இந்த அமைப்பினூடாக முன்னிறுத்திய படைப்பாளிகள் எத்தனை வகையானவர்கள் என்று எண்ணிப்பார்க்கிறேன். ஆ.மாதவன், பூமணி போன்ற ஒரு இடைக்காலத்தில் மறக்கப்பட்ட முன்னோடிப் படைப்பாளிகள் இவ்விருதால் கவனத்திற்கு வந்தார்கள். சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளைப் பெற்றார்கள். சாதாரணமாக ஒரு வாசகனால் உள்வாங்கிக்கொள்ள முடியாத அபி.தேவதச்சன், தேவதேவன் போன்ற கவிஞர்கள் முன்னிறுத்தப்பட்டார்கள். கோட்பாட்டாளரான ராஜ்கௌதமனை இத்தகைய விருது பேசப்படவைத்தது.

 

தமிழிலக்கியம் என்பது உலகளாவியது என்னும் பார்வையை தெளிவத்தை ஜோசப், சீ முத்துசாமி ஆகியோருக்கான விருதுகள் உருவாக்கின. வழக்கமாக இந்தியாவில் கொண்டாடப்படுபவை அரசு விருதுகள். அவை இந்தியக்குடிமக்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். ஆகவே இலங்கை, மலேசியா போன்ற அயல்நாட்டு தமிழ்ப்படைப்பாளிகள் தமிழகத்தில் கொண்டாடப்படவே இல்லை. விஷ்ணுபுரம் விருதுதான் அந்த வழக்கத்தை உடைத்து தமிழிலக்கியத்தை உலகளாவப் பார்க்கும் பார்வையை உருவாக்கியது. அதன்பின் பல விருதுகள் ஈழப்படைப்பாளிகளுக்கும் அளிக்கப்பட்டன. அது ஒரு பெரிய தொடக்கம் என நினைக்கிறேன்.

 

இந்த விருதும் இதில் அரங்குகளில் பேசும் எழுத்தாளர்களின் நீண்ட பட்டியலும் தமிழிலக்கியத்தின் வெவ்வேறு முகங்களை முன்னிறுத்துகின்றன. இக்கொண்டாட்டத்தில் நானெல்லாம் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் எப்போதும் உடனிருக்கிறேன்

 

எம்.ஸ்ரீதர்

 

 

அன்புள்ள ஜெ,

 

விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வாழ்த்துக்கள். கடந்த பத்துப்பதினைந்து நாட்களாக வந்துகொண்டிருக்கும் பழைய பதிவுகள் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் மனநிலையையும் உணர்ச்சிகரத்தையும் காட்டுபவையாக இருந்தன. ஒரு சமகாலச் சரித்திரம் என்றுதான் நானும் உணர்ந்தேன். விழாவில் வெவ்வேறுவகையான படைப்பாளிகளும் வாசகர்களும் சந்தித்து பேசி கொண்டாடி மகிழ்வது ஒரு முக்கியமான சந்தர்ப்பம். பின்னர் நினைத்துப்பார்த்தால் தித்திப்பது. நான் 2015ல் விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன். நினைக்க நினைக்க நிறைவளிக்கும் ஒரு அனுபவம் அது. பங்கெடுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

ஜெயராமன்

விஷ்ணுபுரம் விழா- நிறைவும் கனவும்

விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…

விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்

விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்

விஷ்ணுபுரம் உரைகள் 2018

விஷ்ணுபுரம் விருதுவிழா 2017 உரைகள்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்

விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்

விஷ்ணுபுரம் விழா எதிர்பார்ப்புகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 29
அடுத்த கட்டுரைஅறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்